Friday, 21 June 2013

இது நட்பாய் மலர்ந்த ஒரு அம்மாவின் கடிதம்..!தினமலர்-பெண்கள் மலரில் என் எழுத்துக்கள் இடம் பிடித்த போது பெண்கள் மலர் வாசக தோழிகள் நிறைய பேர் என்னிடம் நட்பானார்கள்என்னூரை தவிர வெற்றோரு ஊர்களிலும் சொந்தங்கள் கிடைத்தது. மிகவும் இனிமையான சொந்தங்கள் அவை! இங்கு அருகிலிருக்கும் தோழிகள் மட்டும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒரு நற்செயலை செய்வது என முடிவெடுத்து இரண்டு வருடங்களாக செய்து வருகிறோம்.

அம்மா, அப்பா, தோழி என உறவான நட்புகள். எல்லோரும் அடிக்கடி பேசுவார்கள். நேர  நெருக்கடி, மற்றும் மொபைல் பேச்சை தவிர்க்க எண்ணி அவசியமான நேரம் தவிர மற்ற நேரங்களில் மெசேஜ் பரிமாற்றத்தில்அவர்களிடம் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு மூத்த தோழி ஒருவர், அவருக்கும் எழுதுவதில் ஆர்வம் இருந்தது. ஆனால் எட்டாவதுதான் படித்திருக்கிறேன், கையெழுத்து நன்றாக வராது என்று சொன்னார். சரியோ தவறோ எழுத நினைப்பதை தொடர்ந்து எழுதிக் கொண்டு வாருங்கள்.. நாளாக ஆக.. உங்களுக்கு ஒரு தனி வடிவம் கிடைத்துவிடும் என்று உற்சாகப்படுத்தினேன். பிறகு அவர் அசத்தலான ஒரு கவிதை எழுதி அனுப்பி அது பெண்கள் மலரிலும் வெளியானது. ரொம்ப நாளாக நீங்க எப்ப ப்ரீ உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். எழுத்தோ, நட்போ என் குடும்பத்திற்கான நேரத்தை பாதிக்காதவாறுதான்  நான் கவனமாக இருக்கிறேன். மிகுந்த அன்பால் ஒரு வழியாக சென்ற வாரம் அவரை வீட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஒரு டைரி நிறைய கவிதை எழுதியிருந்தார். ஒரு மாணவியை போல் உற்சாக துள்ளலுடன் படித்து காண்பித்தார்எதோ ஒரு திறமை எல்லோரிடமும் ஒளிந்து கொண்டிருக்கிறது. சிலரிடம் அவர்களை விட்டு வெளியில் வராமல் இருக்கிறது. அவரின் இளமை வயதிலேயே யாராவது தூண்டுதல் கொடுத்திருந்தால் இத்தனை வருடம் நிறைய எழுதி இருக்கலாம் என்று தோன்றியது.

என்னால் முடிந்தளவு மற்றவர்களின் திறமையை உற்சாகப்படுத்தி வெளி உலகம் அழைத்து வருகிறேன். இப்போது அவர் இன்னும் சில பத்திரிக்கைகளில் எழுத தொடங்கிவிட்டார்.

அந்த தோழி என் மீதுள்ள பாசத்தினால் என்னை பற்றி ஒரு கவிதை எழுதி வாசித்து காண்பித்தார். அவரின் அன்பு என்னை மகிழ செய்தது. ஆனாலும் கொஞ்சம் கடிந்து கொண்டேன், என்னை பற்றி சொல்ல ஒன்றுமில்லை.. நான் சாதாரணமானவள். இது புகழ்ச்சி மாதிரி ஆகி விடக்கூடாது என்றேன். அவருக்கும் வந்ததே செல்லமாய் கோபம், “ உன்னிடம் புகழ்ந்து எனக்கு ஆகப்போவதென்ன.. உள்ளதை சொல்லி இருக்கிறேன் என்றார். அவர் என் ப்ளாக்கை பார்த்ததால், இதை நீ ப்ளாக்கில் போட வேண்டும் என்று வேறு சொல்லிவிட்டார்  . “ இது எனக்கே வேண்டாம் எங்கிறேன்.. நீங்க மற்றவர்களுக்கும் சொன்னால் இது சுயதம்பட்டமாகி விடும் என்றால் கேட்கவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் அவரே ப்ளாக் ஆரம்பித்து போட்டுவிட்டிருப்பாராம்.


எனக்கு  நிறையவே சங்கடமா இருக்கு.. இருந்தாலும், என்னை மகளாய் நினைக்கும் அவரின் ஆசைக்காக அவர் எழுதிய கவிதையை இங்கு வைக்கிறேன்


ரேணும்மா இப்ப திருப்தியா? (ரேணும்மா)

அன்பரசுவை ஆளும் உஷாவுக்கு
அன்பாய் அழகாய் ஒரு கவிதை...
அஸ்வினிக்கு ஆனந்தமான ஒரு அம்மா..!
அழகாய் அமைந்த ரேணுவின் தோழி..!
அனாதை இல்லத்தை அறிமுகப்படுத்தி
அனைவரையும் ஒன்றாக கூட்டி சென்று
அங்கிருக்கும் குழந்தைகளை
ஆனந்தி படுத்தி - அப்படித்தான்
அந்த பொங்கல் போயிற்று...
அடுத்த பொங்கல் அம்மாக்கள் இருப்பிடம்..
அவர்கள் குறை கேட்டு அன்பாய் பேசி வந்தோம்..!
அனைவ்ரது நட்பையும் அழகாய் ஆட்கொண்டு
ஆயிரம் திறமைகள் உனக்குள் இருந்தாலும்-
அடக்கத்தின் மறு உருவமாய் நீ..!
சூரியன் மனைவி பெயரை உனக்கு
வைத்ததனால்-
சூரியன் போல் பிரகாசமாய் உன் சிரிப்பும்
சூரிய ஒளி போல் கள்ளம், கபடம் இல்லா
உள்ளமும்..!
பணமே பெரிதென்று வாழ்கின்ற உலகத்தில்
பண்பையும், பாசத்தையும்
உன்னிடம் காண்கின்றேன்..!
அடக்கம் என்ற அணிகலனை
அணிந்தவளே என் தோழி..!
தோழியா, மகளா என்ற
எண்ணம் வரும் போது
மகளாக என் மனதில்
நிலைக்கின்ற என் தோழி..!

- ரேணுகா தேவி