Thursday, 24 March 2016

“ ஞாயிறும்... நயந்தாராவும்...!”

            திங்கள் முதல் சனிவரை.. எப்படா ஞாயிறு வரும்னு இருக்கும்.. ஞாயிறு காலை ‘ ஹப்பா’..ன்னு லேட்டா எழுந்து  “ இன்னிக்கு ஒரு நாள் காலையில் டிபன் எல்லாம் வீட்ல செய்ய முடியாது.. ஹோட்டல்ல பார்சல் வாங்கிட்டு வந்துடுங்களேன்…!” னு ஹவுஸ்பாஸை விரட்டிவிட்டு பேப்பரை மேய்ந்து..  நிதானமாய் குளித்து டிபனை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு லஞ்ச்சை வேகமாய் செய்து வேலை முடிஞ்சது இனிமே என்னை யாரும் கண்டுக்கபடாது.. பசியெடுத்தா சாப்பிட்டுக்கங்கன்னு ஹவுஸ் பாஸூக்கும் நம்மை திரட்டல் வாங்கும் வாரிசுக்கும் ஆணையிட்டு மதியம் முழுக்க தூங்கும் சுகமே அலாதி!  தூங்கி எழுந்த பிறகுதான் இருக்கிறது வில்லங்கமே...! தினமும் நேரமில்லாமல் எந்திரத்தனமாய் ஓடும் நமக்கு ஒரு நாள் விடுமுறையே ஒரு வேளைக்கு பிறகு போரடித்துவிடும், மாலை ஐந்து மணிக்கு மேல் பிடித்துவிடும் ராகு காலம் எங்காவது போய் பரிகாரம் செய்துவிட்டு வந்தால்தான் அன்றைய  நாள் நல்ல நாளாக  முடியும்....

            ஒரு வாரம் ஜவுளிக்கடை.. இன்னொரு வாரம்.. ஹோட்டல்....  இல்லை கோவில் என்று ஹவுஸ் பாஸுடன்  நகர்வலம் நடக்கும்!  இந்த வாரமும் அப்படித்தான்.. ஞாயிறு ஐந்து அடித்ததும்...
            “ என்னங்க என் மூஞ்சை பார்த்து பார்த்து எனக்கே போரடிச்சிடுச்சி.. கொஞ்சம் ஸ்டைல்லா ஹேர்- கட் பண்ணா  நயன் தாரா.. மாதிரி தெரிய மாட்டேன்...?”

            “ தெரியமாட்ட..”

“என்னடா சொன்ன...   நாளையிலர்ந்து சாப்பாட்டுக்கு லாட்டரிதான் அடிக்கனும்... ஆமா லாட்டரில்லாம் இப்ப அடிக்கறதில்ல இல்ல..? வந்து..து.. நாளையில் இருந்து சாப்பாட்டுக்கு ஹோட்டல் ஹோட்டலா அலையனும்.. உனக்கு பச்ச தண்ணிகூட தரமாட்டேன்.....  துவைக்காத ..... யையே ஒரு வாரமானாலும் போட்டுக்கனும்...

            “ இருடி... இரு... ஆரம்பிக்கும் போது மரியாதையா ஆரம்பிச்சு கூப்பிடற அப்புறம் சொர்ணக்கா மாதிரி அடா புடாங்கிற... நயந்தாரா மாதிரி தெரியமாட்ட.. அவளை விட இன்னும் அழகா தெரிவன்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள.... சரி இப்ப நான் வண்டியை வெளிய எடுக்கனும் அவ்வளவுதானே... கிளம்பு.....”

            “ இந்த அபிராமி ப்யூட்டி பார்லர் லாம் வேணாங்க... பெரிசா நேச்சுரல்ஸ் கூட்டிட்டு போங்க...”

            “ ஏய் அங்கல்லாம் சும்மாவே தீட்டிடுவாங்க ...”

“ இருக்கட்டுமே.. ஒரு முறை போய்தான் பாக்கிறேனே லைப்ல எல்லாத்தையும் பாக்கனும்..”

வந்து தொலை!...லிப்ட்டில் ஏறி மூன்றாவது மாடியில்  நேச்சுரல்ஸ் கதவை திறந்ததும்... “ ஹப்பா... எவ்வளவு பெரிய பார்லர்... ஆண்களுக்கு தனி செக்ஷன்.. அங்க ஒரு ஆள் காலை நீட்டி பெடிக்யூர் பண்ணிக்கொண்டு இருந்தான்... அடப்பாவிகளா நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா...?

பெண்கள் செக்ஷனுக்கு நுழைய.. இருபத்திரெண்டுக்குள் லாக் ஆன பத்து பதினைந்து பெண்குட்டிகள் ஜீன்ஸ் டாப்பில் ஐ.டி இஞ்சினியர்கள் மாதிரி டாக்.. டாக் என்று சுற்றிக்கொண்டு இருக்க பப்ளியாய் இருந்த ஒரு பெண்குட்டி “ சொல்லுங்கோ என்ன செய்யனும்...”

“ ஹேர் கட் பண்ணனும் எனக்கு சூட்டபிள் ஆகற ஸ்டைல்ல..”

அவ்வளவுதான்... “ மேம் உங்களுக்கு பார்த்தீங்கன்னா ஸ்டெர்யிட் ஹேர்தான்... கொஞ்சம் ரப்பா இருக்கு... பெதர் கட் பண்ணிங்கன்னா செம க்யூட் ஆக இருக்கும்.. எப்போ தலை குளிச்சிங்க... என்ன ஷாம்பு போட்டீங்க... ஏன் இவ்வளவு ட்ரையா விட்டு இருக்கீங்க...  “ என கட கடவென்று தலைமுடியின் தன்மை.. பன்மை பற்றி எல்லாம் விலாவரியாக பாடம் எடுத்தது...

            “ ஹோ... ஹோ.. எப்படியோ நல்லா இருக்கற மாதிரி பண்ணுங்க அதுக்குன்னு ரொம்ப ஷார்ட் பண்ணக்கூடாது ஓ.கே?”

            “ யெஸ்.. உங்களுக்கு லென்த்தியாவே பண்றேன்.. உங்களுக்கு “ கோல்டு” புடிக்குமா?”

            “ ம்.. எனக்கு “கோல்டு” ரொம்ப புடிக்கும்... பவுன் விலை குறையறச்சே விதவிதமா ஹியரிங்ஸ் வாங்குவேன்..”

            “ ஐய்யோ அதில்ல மேம்... “ கோல்டு... சளி புடிக்குமா?... ஏன்னா கண்டிஷனர் போட்டு  ஹேர் வாஷ் பண்ணி மஜாஜ் பண்ணாதான்  ஹேர் ஸாப்ட் ஆகும் ..”

            ( அதயேண்டி சளி புடிச்ச வாய்ஸ்ல ப்ரனவுன்ஸ் பண்ற? கோல்டுக்கும் 'கோல்டு'க்கும் வித்யாசம் தெரியாம !!?? ) “ சளிக்கு என்னை புடிக்காது.. எனக்கும் சளியை புடிக்காது நீங்க தாரளமா வாஷ் பண்ணலாம்...”

            அவ்வளவுதான் பிணைக்கைதியை போல் எனக்கு ஒரு வாட்டர் ப்ரூப் கோட்டை மாட்டிவிட்டு போல்டிங் குஷன் சேரில் சாயவைத்து தலையை மட்டும் ஒரு வாஷ் பேஸினுக்குள் விட்டாள்... அடடா என்ன கண்டிஷனரோ தெரியலை...வாசம் தூக்கியது.. ஹேர் மசாஜ் பண்ணி சில்லு சில்லுன்னு தலையை இல்லை தலைமுடியை வாஷ் செய்யும் போது தூக்கமாய் வந்தது.. ஆட்டை தட்டி அழைத்து போவது போல் எழுப்பி  பலிகடாவாக இன்னொரு குஷன் சேரில் உட்காரவைத்தாள்... ஜீன்ஸ் பாக்கெட்டில் சொருகி இருந்த துணி மாட்டும் “ க்ளிப்” ஒவ்வொன்றாய் எடுத்து தலை முடியை பத்து செக்ஷனாய் பிரித்து மாட்டிவிட்டாள்... இடை இடையே' இடை'யில் செருகி இருந்த கோம்ப்பை எடுத்து கோம்ப்பினாள்..அதற்கு மேல் அசால்ட்டாய் கத்தரி எடுத்து கதகளி ஆடி முடித்துவிட்டு.. ட்ரையரை வைத்து அயர்ன் செய்து  “ மேம்.... இப்ப பாருங்க.. செம க்யூட்டா ஆயிட்டிங்க...” கண்ணாடியை பார்த்தேன்... “ டார்லிங்” படத்தில் வரும் பேய் மாதிரி தெரிந்தாலும் க்யூட்டாகதான் இருந்தது...

            “ பில்....”
“ ரிசப்ஷன்ல...”

            “ பெதர் கட்...  இவ்வளவு சார்ஜ்.. டேக்ஸோட...  720 ரூபிஸ் மேம்.. ஒரு பைவ் ஹன்டரண்டு தனியா கட்டி கஸ்டமர் கார்டு வாங்கிட்டா இனிமே வரும் போதெல்லாம் உங்களுக்கு டென் பர்சென்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.. அதில்லாம டேக்ஸும் கிடையாது...”

            “ ( இனிமே வந்தாதானேம்மா?..”)  இல்ல நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம் இப்ப பில் மட்டும் எடுத்துக்கங்க... பர்ஸுலிருந்து ஆயிரம் ரூபாயை  நீட்ட பில்லை கிழித்து மிச்ச சில்லறையை கையில் வைத்தாள்...

            ரிவியூ தெரிஞ்சிக்க கமெண்ட்ட வாய்ல வாங்க வேண்டி, “ மேம் யூ ஆர் ஹாப்பி...”? எனி சேஞ்சஸ்...?

“ யெஸ்.. ஹேப்பி... மோர் சேஞ்சஸ்...” ன்னு கையில் இருந்த சில்லறையை பார்த்துசொன்னேன்...”

            வெளியில் ஒரு மணி நேரமாய் ஹெட் செட்டில் பாட்டு கேட்டு கொண்டு வண்டிமேல் 'செட்டிலாகி' இருந்த ஹவுஸ் பாஸுடம் “ என்னங்க ஒரு மோர் பாக்கெட்டை வாங்குங்க.... ?”

“ ஏண்டி... மிக்ஸடு ப்ரூட் சாப்பிடலாம்னு சொன்னியே?”

            கையில் இருந்த ‘மோர்’ சேஞ்சசை பார்த்து இதுக்கு ‘மோர் பாக்கெட்டே “ போதுங்க என்று வாங்கி குடித்து வயிதெரிச்சலை தணித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தால், என் வாரிசு...  “ எங்கே இப்படி திரும்பு.. அப்படி திரும்பு...” என வீடு வாங்கும் பார்ட்டியை போல் நாலா பக்கமும் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு சிரித்தாள்.. ம்...ம் நல்லாதான் இருக்கு..

            ஆஹா அப்ப நல்லாத்தான் இருக்கா... என்னங்க டிபனுக்கு ஒரு ஐஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க.. ஆண்ட் ராய்டை எடுத்து “ தலையை சாய்த்து  கோணலாக சிரித்து செல்பி எடுத்து “ எப்பூடின்னு கேட்டு என் தோழிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டு டிபன் முடித்து தூக்கம்...”

மறு நாள் குளித்து லேசாய் எண்ணெய் பூசி  ஹேர் பேண்ட்டை போட்டால் கஞ்சி போன காட்டன் மாதிரி சுருங்கி எலி வாலாய் தொங்கியது.... ஐயய்யோ...700 ரூபாயும் போச்சு.. என் ஹேரும்  போச்ச்சே.... ஒப்பாரிக்கொண்டே இருக்கிறேன்.

            இனிமே  நாயித்திக்கிழமை  ப்யூட்டி பார்லர் பக்கம் போனேன்னா கேளுங்க...? ஆங்....!

Monday, 14 March 2016

கதைக்கு பின்னால் நிஜம்............ ப்ளீஸ் உங்கள் ஓட்டு...???

கதை....


 “வித்யா ..நீயே போய்ட்டு வந்துடேன்...”   லேப்-டாப்பில் இருந்து திரும்பாமல் பாஸ்கர்..

“  நடந்துதானா.. நீயே போய்ட்டு வந்துடேன் மா.. வரும்போது பிரசாதம்  நியாபகமா வாங்கிட்டு வந்துடு... நீ போடற டிபனை சாப்பிட்டு தொலைக்கறத விட அத சாப்பிட்டு வயித்த நிரப்பிக்கலாம் ”..  தியா கிண்டல் அடிக்க,
சிவராத்திரி அன்னிக்கு சிவன் கோயில்ல போய் ஒரு முறையாவது தரிசனம் பண்ணினாத்தான் புண்ணியம்.. யாரும் வராட்டி போங்க.. வெளியில் கிளம்பி செருப்பை போடும் போதுதான் பர்ஸில் சில்லறைகளை எடுக்க வைக்க நியாபகம் வந்து பத்து ரூபாய் நோட்டுகளும், கொஞ்சம் சில்லறைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அம்மா கோவிலுக்கு கிளம்பினால் பூக்கூடை ஒன்றை எடுத்துக்கொள்வாள், அதில் வெற்றிலைப்பாக்கு, பழம், விளக்கேற்ற சின்ன பாட்டிலில் எண்ணெய், பூ என்று  நிரப்பி கையில் எடுத்துக்கொள்வாள். கிளம்பும் போதே வழியில் சித்தி, “ என்ன ஜானு குட்டியோட  கோயிலுக்கு கிளம்பிட்டியாக்கும்? என கேட்டுவைப்பாள்.

           நாமெல்லாம் எங்கே பர்ஸை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறோம்... கோவில் வந்து விட்டது.  நல்ல கூட்டம். வெளியில் அங்கங்கே சிறு சிறு பொம்மைக்கடைகள், பலூன் கடைகள் என விசேஷ நாட்களின் களையாக காட்சிப்படுத்திக்கொண்டிருந்தது. செருப்பு விடும் தேடினேன், காலணி பாதுகாக்கும் இடமோ கடையோ தென்படவில்லை, எல்லோரும் வெளியியிலேயே கும்பலாக விட்டிருந்தார்கள்.  அங்கு கழட்டி விட்டால் மறுபடியும் தேட சிரமமாக இருக்கும்.. இன்னொன்று புதியதாய் நன்றாக இருந்தால் யாரேனும் புண்ணியவதி ஒருத்தி போட்டுக்கொண்டு போய்விடுவாள், இதற்கு முன் அடிக்கடி இப்படி நேர்ந்த அனுபவம்.. அதனால் சுற்றி பார்க்கும்போது ஒரு ஓரமாக சைக்கிளில் பலூன்களை கட்டி விற்றுக்கொண்டிருந்த அந்த ஆள் பக்கமாக சென்று சைக்கிளுக்கு பக்கத்தில் விட்டுவிட்டு பாத்துக்கொள்வார் என்று பிரகாரத்திற்குள் சென்றேன். உள்ளே நிறைய கூட்டம்.. வரிசையில் நிற்பது நம்மவர்களுக்கு ஆகாத காரியம், முட்டி மோதிக்கொண்டு கலைந்த திரளில் பொறுமையாய் வரிசையில் நின்று தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தேன். பலூன் கடைக்காரர் பக்கத்தில் பத்திரமாக இருந்த  செருப்பை போட்டுக்கொண்டு சும்மா எப்படி செல்வது பார்த்துக்கொண்டதற்கு என்று இருக்கட்டுமே என பர்ஸை திறந்து மூன்று ரூபாய் சில்லறையாக அவரிடம் நீட்ட,
         
“ எனக்கு வேண்டாங்க.. இந்த வழியில் வந்தா போதும்னு திரும்பி பார்க்காமல் பலூனை கட்டி குழந்தைகளிடம் கொடுக்க,,

          ச்சே எவ்வளவு மட்டமா நினைச்சிட்டோம்.. ஒருத்தனோட தன்மானத்தை ஏழைன்னு எடைபோட்டுவிட்டுட்டோமேன்னு  என்ற மனசு ஒரு நொடி திட்ட, “ ஸாரி.. ஸாரி.. ஒரு பலூன் ஒண்ணுக்கொடுங்க... பத்து ரூபாயை நீட்டி தேவைப்படாமல் இருந்தாலும் அவரின் நேர்மையான உழைப்புக்கு உதவியாக வாங்கிகொண்டேன்.

          பலூனுடன் நடந்து வரும் போது மனசு லேசாக இருந்தது, தியாவிடம் கொடுத்தாலும் சந்தோஷப்படுவாள் ஆனால் வீடுவரை பலூனை தூக்கிக்கொண்டா போவது?...

பலூன் வாங்க முடியாத ஏக்கத்துடன் அழுகையுடன் அம்மா தோளில் இருந்த அந்த நடைபாதை குழந்தையின் கையில் கொடுத்ததும் வாங்கிக்கொண்டு சிரித்து ஓடியது. எதோ ஒரு சந்தோஷம் அந்த நொடி உலகமே அழகாக தெரிந்தது.. !

ஆமாம் ஒரு வேளை சோற்றுக்கே ஐந்துக்கும், பத்துக்கும் பாடுபடற அந்த பலூன் காரன் உழைக்காம வர்ற காசு எனக்கு வேணாம்னு கெத்தா சொல்றப்ப, இந்த அரசியல்வாதிகளையும் , அதிகாரிகளையும் நினைச்சா..... ? ‘கேப்டன்’ பாணியில் ஒரு பெரிய தூவலை தூவிவிட்டு வீட்டிற்கு  நடையை கட்டினேன்.
-       -   -


நிஜம்....

தேர்தல்ல இலவசம், வாக்குக்கு பணம் இதெல்லாம் நம்ம அரசியவாதிங்களை விட்டு ஒழிய இன்னும் பல வருஷம் ஆகும். தேர்தல் வர்றப்ப எல்லாம் ஒவ்வொரு வீட்டிற்கும்  நபருக்கு இவ்வளவு என போட்டா போட்டிக்கொண்டு ஒவ்வொரு கட்சியும் காசு கொடுக்கிறார்கள். இதை படித்தவர்களும், படிக்காதவர்களும், ஏழை, பணக்காரன் என்று வித்தியாசமில்லாமல் வாங்கி போட்டுக்கொள்கிறார்கள்.

“ ம்... பத்து நாளைக்கு புல் அடிக்க உதவுமே...”  என்று  நினைக்கும் பொறுப்பான குடிமகன்கள்.

“ ஆமா தர்றதை ஏன் வேணாம்னு சொல்லனும்? நம்மகிட்ட அடிக்கறதுதானே..? வாங்கி எதாச்சும் ஒரு பொருளையாவது வாங்கி போடலாம்னு நினைக்கற குடும்பதலைவிகள்...

“ நியாயமா வேணாம்னு சொல்லிட்டு போனாலும் இவனுங்க கட்சி மேலிடத்துல நமக்கு கொடுத்துட்ட மாதிரி கணக்கு சொல்லிட்டு இவனுங்க அடிச்சிக்குவாங்க.. அதுக்கு நாம வாங்கிக்கறதே பெட்டர்... என்று நினைக்கும் நியாயவாதிகள்........


          உங்க எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் இந்த தேர்தல்ல  உங்களுக்குள்ள ஒரு ரகசிய கூட்டம் போட்டுக்கங்க, தெருமொத்தம்..  வாக்கு விற்பனைக்கு வர்ற எல்லோருக்கும் ஒகேன்னு சொல்லி காசை வாங்கி பையில் போட்டுக்கங்க, ஓட்டை மட்டும் உண்மையா மக்கள் நலனை சிந்திக்கிற ஒருத்தருக்கு போடுங்க. கலெக்ட் ஆன காசுல பத்து பைசா உங்க உபயோகத்துக்கு எடுத்துக்காம மொத்த தெருப்பணமும் ஊர்ப்பணமா சேகரிங்க.. இப்ப கணிசமா ஒரு தொகை சேர்ந்திருக்கும், அந்த தொகையை உங்க ஊருக்கு தேவைப்படற ஒரு நல்ல விஷயத்தை நீங்களே செஞ்சி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்க...    நாற்காலியை பிடிக்க நமக்கு வலைவீசற ஒரு சின்ன சில்லறை தொகைக்கே இவ்வளவு நம்மால் பண்ண முடியும்னா நேர்மையான ஆட்சியால் இந்த நாட்டுக்கு எவ்வளவு பண்ண முடியும்னு ஒரு கேள்வியை கேட்டு போர்டு வைங்க...!  உங்கள் துணிச்சலும் ஒத்துழைப்பும் நேர்மையற்றவர்களை அறைந்தாற் போல் இருக்க வேண்டும்.. பிறகாவது ஒழியட்டும் இலவசங்களும், வாக்கு விற்பனையும்..!