Monday, 14 March 2016

கதைக்கு பின்னால் நிஜம்............ ப்ளீஸ் உங்கள் ஓட்டு...???

கதை....


 “வித்யா ..நீயே போய்ட்டு வந்துடேன்...”   லேப்-டாப்பில் இருந்து திரும்பாமல் பாஸ்கர்..

“  நடந்துதானா.. நீயே போய்ட்டு வந்துடேன் மா.. வரும்போது பிரசாதம்  நியாபகமா வாங்கிட்டு வந்துடு... நீ போடற டிபனை சாப்பிட்டு தொலைக்கறத விட அத சாப்பிட்டு வயித்த நிரப்பிக்கலாம் ”..  தியா கிண்டல் அடிக்க,
சிவராத்திரி அன்னிக்கு சிவன் கோயில்ல போய் ஒரு முறையாவது தரிசனம் பண்ணினாத்தான் புண்ணியம்.. யாரும் வராட்டி போங்க.. வெளியில் கிளம்பி செருப்பை போடும் போதுதான் பர்ஸில் சில்லறைகளை எடுக்க வைக்க நியாபகம் வந்து பத்து ரூபாய் நோட்டுகளும், கொஞ்சம் சில்லறைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அம்மா கோவிலுக்கு கிளம்பினால் பூக்கூடை ஒன்றை எடுத்துக்கொள்வாள், அதில் வெற்றிலைப்பாக்கு, பழம், விளக்கேற்ற சின்ன பாட்டிலில் எண்ணெய், பூ என்று  நிரப்பி கையில் எடுத்துக்கொள்வாள். கிளம்பும் போதே வழியில் சித்தி, “ என்ன ஜானு குட்டியோட  கோயிலுக்கு கிளம்பிட்டியாக்கும்? என கேட்டுவைப்பாள்.

           நாமெல்லாம் எங்கே பர்ஸை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறோம்... கோவில் வந்து விட்டது.  நல்ல கூட்டம். வெளியில் அங்கங்கே சிறு சிறு பொம்மைக்கடைகள், பலூன் கடைகள் என விசேஷ நாட்களின் களையாக காட்சிப்படுத்திக்கொண்டிருந்தது. செருப்பு விடும் தேடினேன், காலணி பாதுகாக்கும் இடமோ கடையோ தென்படவில்லை, எல்லோரும் வெளியியிலேயே கும்பலாக விட்டிருந்தார்கள்.  அங்கு கழட்டி விட்டால் மறுபடியும் தேட சிரமமாக இருக்கும்.. இன்னொன்று புதியதாய் நன்றாக இருந்தால் யாரேனும் புண்ணியவதி ஒருத்தி போட்டுக்கொண்டு போய்விடுவாள், இதற்கு முன் அடிக்கடி இப்படி நேர்ந்த அனுபவம்.. அதனால் சுற்றி பார்க்கும்போது ஒரு ஓரமாக சைக்கிளில் பலூன்களை கட்டி விற்றுக்கொண்டிருந்த அந்த ஆள் பக்கமாக சென்று சைக்கிளுக்கு பக்கத்தில் விட்டுவிட்டு பாத்துக்கொள்வார் என்று பிரகாரத்திற்குள் சென்றேன். உள்ளே நிறைய கூட்டம்.. வரிசையில் நிற்பது நம்மவர்களுக்கு ஆகாத காரியம், முட்டி மோதிக்கொண்டு கலைந்த திரளில் பொறுமையாய் வரிசையில் நின்று தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தேன். பலூன் கடைக்காரர் பக்கத்தில் பத்திரமாக இருந்த  செருப்பை போட்டுக்கொண்டு சும்மா எப்படி செல்வது பார்த்துக்கொண்டதற்கு என்று இருக்கட்டுமே என பர்ஸை திறந்து மூன்று ரூபாய் சில்லறையாக அவரிடம் நீட்ட,
         
“ எனக்கு வேண்டாங்க.. இந்த வழியில் வந்தா போதும்னு திரும்பி பார்க்காமல் பலூனை கட்டி குழந்தைகளிடம் கொடுக்க,,

          ச்சே எவ்வளவு மட்டமா நினைச்சிட்டோம்.. ஒருத்தனோட தன்மானத்தை ஏழைன்னு எடைபோட்டுவிட்டுட்டோமேன்னு  என்ற மனசு ஒரு நொடி திட்ட, “ ஸாரி.. ஸாரி.. ஒரு பலூன் ஒண்ணுக்கொடுங்க... பத்து ரூபாயை நீட்டி தேவைப்படாமல் இருந்தாலும் அவரின் நேர்மையான உழைப்புக்கு உதவியாக வாங்கிகொண்டேன்.

          பலூனுடன் நடந்து வரும் போது மனசு லேசாக இருந்தது, தியாவிடம் கொடுத்தாலும் சந்தோஷப்படுவாள் ஆனால் வீடுவரை பலூனை தூக்கிக்கொண்டா போவது?...

பலூன் வாங்க முடியாத ஏக்கத்துடன் அழுகையுடன் அம்மா தோளில் இருந்த அந்த நடைபாதை குழந்தையின் கையில் கொடுத்ததும் வாங்கிக்கொண்டு சிரித்து ஓடியது. எதோ ஒரு சந்தோஷம் அந்த நொடி உலகமே அழகாக தெரிந்தது.. !

ஆமாம் ஒரு வேளை சோற்றுக்கே ஐந்துக்கும், பத்துக்கும் பாடுபடற அந்த பலூன் காரன் உழைக்காம வர்ற காசு எனக்கு வேணாம்னு கெத்தா சொல்றப்ப, இந்த அரசியல்வாதிகளையும் , அதிகாரிகளையும் நினைச்சா..... ? ‘கேப்டன்’ பாணியில் ஒரு பெரிய தூவலை தூவிவிட்டு வீட்டிற்கு  நடையை கட்டினேன்.
-       -   -


நிஜம்....

தேர்தல்ல இலவசம், வாக்குக்கு பணம் இதெல்லாம் நம்ம அரசியவாதிங்களை விட்டு ஒழிய இன்னும் பல வருஷம் ஆகும். தேர்தல் வர்றப்ப எல்லாம் ஒவ்வொரு வீட்டிற்கும்  நபருக்கு இவ்வளவு என போட்டா போட்டிக்கொண்டு ஒவ்வொரு கட்சியும் காசு கொடுக்கிறார்கள். இதை படித்தவர்களும், படிக்காதவர்களும், ஏழை, பணக்காரன் என்று வித்தியாசமில்லாமல் வாங்கி போட்டுக்கொள்கிறார்கள்.

“ ம்... பத்து நாளைக்கு புல் அடிக்க உதவுமே...”  என்று  நினைக்கும் பொறுப்பான குடிமகன்கள்.

“ ஆமா தர்றதை ஏன் வேணாம்னு சொல்லனும்? நம்மகிட்ட அடிக்கறதுதானே..? வாங்கி எதாச்சும் ஒரு பொருளையாவது வாங்கி போடலாம்னு நினைக்கற குடும்பதலைவிகள்...

“ நியாயமா வேணாம்னு சொல்லிட்டு போனாலும் இவனுங்க கட்சி மேலிடத்துல நமக்கு கொடுத்துட்ட மாதிரி கணக்கு சொல்லிட்டு இவனுங்க அடிச்சிக்குவாங்க.. அதுக்கு நாம வாங்கிக்கறதே பெட்டர்... என்று நினைக்கும் நியாயவாதிகள்........


          உங்க எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் இந்த தேர்தல்ல  உங்களுக்குள்ள ஒரு ரகசிய கூட்டம் போட்டுக்கங்க, தெருமொத்தம்..  வாக்கு விற்பனைக்கு வர்ற எல்லோருக்கும் ஒகேன்னு சொல்லி காசை வாங்கி பையில் போட்டுக்கங்க, ஓட்டை மட்டும் உண்மையா மக்கள் நலனை சிந்திக்கிற ஒருத்தருக்கு போடுங்க. கலெக்ட் ஆன காசுல பத்து பைசா உங்க உபயோகத்துக்கு எடுத்துக்காம மொத்த தெருப்பணமும் ஊர்ப்பணமா சேகரிங்க.. இப்ப கணிசமா ஒரு தொகை சேர்ந்திருக்கும், அந்த தொகையை உங்க ஊருக்கு தேவைப்படற ஒரு நல்ல விஷயத்தை நீங்களே செஞ்சி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்க...    நாற்காலியை பிடிக்க நமக்கு வலைவீசற ஒரு சின்ன சில்லறை தொகைக்கே இவ்வளவு நம்மால் பண்ண முடியும்னா நேர்மையான ஆட்சியால் இந்த நாட்டுக்கு எவ்வளவு பண்ண முடியும்னு ஒரு கேள்வியை கேட்டு போர்டு வைங்க...!  உங்கள் துணிச்சலும் ஒத்துழைப்பும் நேர்மையற்றவர்களை அறைந்தாற் போல் இருக்க வேண்டும்.. பிறகாவது ஒழியட்டும் இலவசங்களும், வாக்கு விற்பனையும்..!