Wednesday 30 January 2013

ப்ளீஸ்.. படிக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே..!





இந்த புத்தகம்  கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல்.!  இப்போதுதான் என் தோழி மூலம் அறிந்து படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை எழுதியவர் இரா.நடராசன் என்ற ஆசிரியர்.
பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.

இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.
- கணையாழி வழி - ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.

- ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.

- நிகர் முதல் வாசல் வரை - 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.

- அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.

- அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.

- ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆசிரியர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இந்த புத்தகத்தை படித்து பாடம் பயில முடிந்தது. மேலும் ஆயிஷா கண்களில் ஒரு சொட்டு நீரையாவது வரவழைப்பாள்.

சபாஷ் சொல்ல வைத்த இந்த படைப்பை அவசியம் படிக்கலாம்.

இணைப்பு:-

ஆயிஷா
 


Monday 28 January 2013

பாதை மாறிய பயணம்...!





திண்ணையில் கேப்பைக்கூழை டம்ளரில் கலந்து வாகாக செல்விக்கு குடிப்பூட்டி கொண்டிருந்தாள் தாயம்மா.
“ ஆயா.. சில்லுன்னு இருக்கு சூடா சோறு தா…”  சிணுங்கினாள்.
“ ஆமா ஆத்தாக்காரி வந்து உனக்கு சூடா சோறு பொங்கி போடுவா.. கோபத்தில் தெறித்த வார்த்தைகளில் செல்வி கழுத்தை பின் பக்கம் இழுத்து கொண்டு பயத்துடன் பார்க்க, ஒரு  நொடியில் மனம் இளகிய கிழவி,
“ யம்மாடி அப்பத்தாவிற்கு வயசாயிடுச்சில்ல .. முடியல.. இன்னிக்கு இத குடிச்சிக்க.. நாளைக்கு எப்படியாவது உனக்கு வைணமா பொங்கி போடறேன்..”
கூரைக்குள்  நுழைந்த காற்று உள்ளே தூங்கி கொண்டிருந்த பாப்பாவை குளிர செய்ததோ என்னவோ கையை காலை முறுக்கி சிணுங்க ஆரம்பித்தாள்.  சின்ன வெளிச்சத்தில் படித்து கொண்டிருந்த ராசு புத்தகத்தை மூடிவிட்டு அலமாரியிலிருந்து அம்மாவின் சீலையை அவள் மேல் போர்த்தி தட்டி கொடுத்துவிட்டு வெளியில் வந்தான்.
“ அப்பத்தா அம்மா எங்க ரெண்டு நாளா காணோம்..? நான் வேற ஸ்கூலுக்கே போகலை .. எப்ப வரும்?”
தாயம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “ ஆத்தா.. புள்ளைங்களுக்கு எதுவும் புரியற வயசில்ல.. அதுங்க கிட்ட எதுவும் சொல்லிடாத.. ஒரு  நாலு நாளைக்கு அங்க வந்து இரு.. அப்புறமா பசங்களை பார்த்துக்க வேற எதாவது யோசிக்கிறேன்..” முருகு கண் கலங்கியதும்  தாயம்மா கிளம்பி வந்து விட்டாள். “ பாவி சிறுக்கி அவ பேச்சுக்கு மயங்கித்தானே ஆத்தாவ கூட விட்டுட்டு தனி குடித்தனம் போன..?” என்று வெடுக்கென்று கேட்க முடியாமல் தாய்ப்பாசம் தடுத்தது. “  இந்த கிழவிக்கு இருக்க தாய்ப்பாசம் இந்த மேனா மினிக்கிக்கு எங்க போச்சி தெரியலையே… இப்படி பச்ச புள்ளங்களை தவிக்க விட்டுட்டு.. இப்படியா புத்தி கெட்டு போவா.. இதுங்களுக்கு என்னத்த சொல்வேன்..?”  கண்களில் துளிர்த்த உப்பு நீரை சீலை தலைப்பில் துடைத்து கொண்டு,
“ வருவா.. வருவா.. நீ போய் உள்ள சொம்புல மிச்சமிருக்கிற கூழை குடிச்சிட்டு படு..”
மேகம் இருட்டி கொண்டு வந்தது.. கைப்பையில் பிடித்து கொண்டு வந்த பருப்பையும், காயையும் தாயம்மாவிடம் நீட்டிய முருகு, “ ஆத்தா புள்ளைங்க சரியா சாப்பிட்டு ரெண்டு நாளாவுது.. எப்படியாவது நாளைக்கு கொழம்பு  சோறு வச்சி போடேன்…” பாப்பாவின் பக்கத்தில் படுத்து கொண்டு அதன் முகத்தையே வெறித்து கொண்டிருந்தான்.
“ எப்பா.. இத பார்க்கத்தான் இவ்வளவு  நிமுந்து கல்யாணம் கட்டிவச்சேனாக்கும்.. மானம் கெட்டு போன அந்த கழுதைய தல முழுகிட்டு நடக்க வேண்டியத பாரு..”
முருகு பதில் பேசவில்லை.. பெத்தவளே நினைச்சி பார்க்கதப்ப.. இந்த மூணு குழந்தைங்க கதி என்னாவறது.. ஆத்தா சொல்ற மாதிரி இன்னொருத்தியை நினைச்சு கூட பார்க்க முடியவில்லை அவனால்.
வாசலை கூட்டி கோலமிட்ட கிழவி, கொல்லைப்புறம் போய் முகத்தை அலம்பிகொண்டு அடுப்பை பற்ற வைத்தாள். சுட சுட குழம்பு கொதிக்கும் வாசனையில் செல்வி எழுந்து பார்த்தது.
“ அப்பா இன்னிக்காச்சும் ஸ்கூலுக்கு போவட்டா..? புத்தகத்தை பையில் அடுக்கி ஆவலுடன் கேட்ட ராசுவை பார்க்க முடியாமல்,
“ தம்பி..  அப்புறம் போவலாம்ப்பா.. அப்பத்தாவால இரண்டு பேரையும் சமாளிக்க முடியாது.. ரெண்டு நாள் போவட்டும் அப்பறம் போவ…”
“ ரெண்டு நாள்ல அம்மா வந்திருமாப்பா…”
திரும்ப திரும்ப அம்மாவை கேட்பதிலேயே குறியாக இருந்த அவன் ஏக்கத்தை சகித்து கொள்ளாமல் கண்களில் குபுக்கென அழுகை வந்து விட்டது.
“ ஏம்ப்பா.. அம்மா சாமி கிட்ட போயிருச்சா.. எதுக்கு அழுவுற?
“ஒண்ணுமில்ல ராசா.. ஆத்தா.. அடுப்ப புகைய விடாதே கண்ணுல தண்ணி வருது.. “ என்று சொல்லிவிட்டு “  ராசு அம்மா ஊருக்கு போயிருக்கா.. கொஞ்ச நாள்ல வந்திடுவா.. அதுவரைக்கும் தங்கச்சி,பாப்பாவை நீதான் பத்திரமா பார்த்துக்கனும். அப்பறம் படிப்பியாம். அப்பா வேலைக்கு போனாதான நாம சாப்புட முடியும்..?”
இன்றும் ஸ்கூல் கட் ஆனதில் ராசுவிற்கு வருத்தம்.
“ ண்ணா.. அம்மா எங்க..”? செல்வி ராசுவை கேட்டு கொண்டே இருந்தாள்.
அப்பத்தா சுட சுட குழம்பு சோற்றை உருட்டி உருட்டி ரெண்டு பேருக்கும் கையில் கொடுத்து கொண்டிருந்தாள். பாப்பா அழுதது. கிழவி எழுந்து பாலை புட்டியில் ஊற்றி புகட்டினாள். பசிக்கு குடித்து விட்டாலும் அழுது கொண்டேயிருந்தது. ‘ ஆத்தா முகம் காணலையேன்னு கூட இருக்கும்..’ முணுமுணுத்து கொண்டு மடியில் போட்டு கொண்டாள். இன்னமும் வீறிட்டு கத்த ஆரம்பித்தது. வயிற்றை அழுத்தி பார்த்து அடுப்பு  நெருப்பில் சுடுவானை சுட்டு நீரில் குழைத்து வாயில் விட்டு வயிற்றிலும் தடவி பார்த்தாள். அப்படியும் அழுது கொண்டேயிருந்தது.
“ எலே ராசு நான் ரோட்டு பக்கம் போயி ஓம தண்ணி எதுனாச்சிம் வாங்கியாறேன்.. பாப்பாவை தூக்கி வச்சிக்கோ”
பாப்பாவை இடுப்பில் தூக்கி வைத்து கொண்ட ராசு வெளியில் வந்து..” இந்த்தா.. இதப் பாரு கோயி…” வேடிக்கை காட்டி கொண்டிருந்தான்
“ ண்ணா.. அம்மா எங்க..?” செல்வி அழுதது.
அவளையும் கை பிடித்து தெரு முனை வரை போய் கொண்டிருந்தான்.  எதிர்ப்பட்ட பூவாயிடம்,
“ பெரிம்மா… பாப்பா அழுதுகிட்டேயிருக்கா.. அம்மா எங்க போயிருக்குது..?
“ க்கும் உங்கம்மா.. ஓடுகாலி கழுத எங்க போனாளோ..?” அவள் வெறுப்பில் ஒன்றும் புரியாத அவன் பக்கத்தில் இருந்த அம்முவிடம் கேட்டான்,
“ க்கா.. நீயாவது சொல்லு அம்மா எங்க?”
“ ராசு உங்கம்மா கோவாலு மாமா கூட ஓடி போயிட்டதா பேசிக்கிறாங்கடா”
வீட்டிற்கு வந்தவன் வெகு நேரம் யோசித்து கொண்டிருந்தான்.  ஓடிப்போறதுன்னு என்ன.. அம்மா காணாமத்தான் போயிருக்காங்களோ.. போன கட்டுரை க்ளாசில் காணாமல் போன பொருளை தேடி கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்துக்கு கடிதம் எழுத டீச்சர் சொல்லி தந்தது நியாபகம் வந்தது. மட மடவென்று கட்டுரை  நோட்டில் ஒரு பக்கத்தை கிழித்து  எழுதினான்.
பேப்பரை மடித்து கையில் எடுத்து கொண்டு பாப்பாவை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு செல்வியை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
சிவப்பு கலரில் இருந்த அந்த பில்டிங் போலிஸ் ஸ்டேஷனாகத்தானிருக்கும் என நினைத்து தயங்கி தயங்கி நின்றான். வெளியில் வந்த அந்த கான்ஸ்டபிள், “ என்னலே.. குழந்தைய வச்சிகிட்டு பிச்சையா எடுத்துகிட்டிருக்க..”?
“ இல்லிங்க ஐயா.. இந்த லட்டர குடுக்கலாம்னுதான் வந்தன்…” மெல்ல பேப்பரை நீட்டினான்.
பேப்பரை பிரித்தார்,
விடுநர்.. பெறுநர் எல்லாம் எழுதி மதிப்பிற்குரிய ஐயா,
என் பெயர் ராசு.. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. அப்பா கூலி வேலை பாக்கிறாங்க. அம்மா ரெண்டு நாளா வீட்டுக்கே  வரலை. தங்கச்சி அம்மா எங்கன்னு கேட்டுகிட்டே இருக்கா. பாப்பா அழுதுகிட்டே இருக்கு. அப்பா ரெண்டு நாளா சாப்பிடவேயில்ல. அப்பத்தாதான் ரெண்டு நாளா வந்திருக்கு. அதால முடியலைன்னு  நான் வேற ஸ்கூல் போகலை. நான் வேற நல்லா படிப்பேனா எங்க தமிழ் வாத்தியாரு என்னைய தேடுவாரு. எங்க அம்மான்னு எங்கன்னு தெரியலை. அப்பாட்ட கேட்டா சும்மா அழுவராரு. அம்மு அக்காதான் சொல்லிச்சி உங்கம்மா கோவாலு மாமா கூட ஓடி போயிடுச்சுன்னு.. நீங்கதான் அம்மாவை தேடி கண்டுபுடிச்சி தரனும்.
இப்படிக்கு தாழ்மையுடன்,
ராசு.
கான்ஸ்டபிள் காபி வரவழைத்து அவர்களுக்கு கொடுத்து, “ தம்பி., பத்திரமா வீட்டுக்கு போ அம்மாவை நாங்க கண்டு பிடிச்சி தர்றோம்…” அனுப்பி வைத்தார்.
“ எப்பா.. சூடா கொழம்பு வச்சிருக்கேன்.. சாப்பிடு ராசா.. இப்படி பட்டினி கிடந்தா இன்னும் ரெண்டு நாள் போனா உன்னால எந்திரிச்சி நடக்கவே முடியாது. .”
“ எறங்கலை ஆத்தா.. மானம் மரியாத அதுக்காவ வேண்டிதானே வாழறம்… இப்படி கூட இருந்தே குழி தோண்டி பாப்பாங்கன்னு நினைச்சி பார்க்கலையே ஆத்தா…”
“ அந்த கோவாலு சகவாசம் வேண்டாமின்னு அப்பவே தலப்பாடா அடிச்சிகிட்டேன்.. இவ சீவி சிங்காரிச்சிகிட்டு இருக்கறதுக்கும் அவன் மைனர் கணக்கா திரிஞ்சி குடிய கெடுத்துப்பிட்டான். போன கழுதய நினைச்சிகிட்டு இருக்காம.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்க பார்ப்பா.. எத்தன நாளைக்கு நான் துணையா இருக்க முடியும்?  இந்த புள்ளைங்க கதி என்னாவறது?
“ கண்ணுக்கு கண்ணா இருக்கற இந்த புள்ளைங்களை இன்னொருத்தி வந்து கொடுமை பண்ணா என்னால தாங்கிக்க முடியாது ஆத்தா..  தல எழுத்து பிரகாரம் நடக்கட்டும்…”
தாயம்மா கிழவி அசந்து தூங்கிவிட்டாள்.
பாத்திரம் உருண்ட சத்தத்தில் எழுந்த ராசு, “ அப்பா.. இன்னும் நீ தூங்கலையா? நான் ஸ்டேஷன் போய் எழுதி குடுத்துட்டு வந்தேன்பா.. அவங்க அம்மாவை கண்டுபுடிச்சிடுவாங்க… அழுவாம தூங்குப்பா..
“ சரிப்பா..  ரெண்டு பேரும் இந்த பாலை குடிச்சிடுங்க.. செல்வியையும் எழுப்பி கொடுத்தவன்.. பாப்பாவுக்கும் புட்டியில் புகட்டினான்.
“ எப்பா..  அடுப்பு பத்த வெக்க சுள்ளி பொறுக்கியாரேன்.. மெதுவா எந்திரிங்க.. தனக்குள்ளே சொல்லி கொண்டு கதவை வெறுமனே சாத்தி கொண்டு தோப்பு பக்கம் போனாள் கிழவி.
கான்ஸ்டபிள் சுந்தரத்திற்கு அந்த பையன் கடிதமே நினைவில் ஆடியது. மேஜரில்லாத சிறுவனின் கடிதத்தை கம்ப்ளெய்ண்ட்டாக எடுக்கலாமா யோசித்தவர், உதவும் உள்ளங்கள் ராஜசேகரனை தொடர்பு கொண்டு அவர்களை விசாரிக்க சொல்லி நடவடிக்கை எடுத்தார்.
தன்னார்வ தொண்டர்களுடன் கடிதத்தில் குறிப்பிட்ட வீட்டை அடைந்த கான்ஸ்டபிள் சுந்தரம் கதவை தட்டினார். எந்த பதிலும் வராமல் போகவே கதவை தள்ள.. அங்கே
கலைந்த கோணத்தில் அப்பனும் மூன்று குழந்தையுமாய் பிணங்கள்.
சுள்ளிக்கட்டோடு வந்த தாயம்மா..” சாமி.. இந்த கொடுமைய எங்க சொல்வேன்.. இதுக்காகவா நான் உசிரோடு இருக்கேன்…? தலையில் அடித்து கொண்டே விழுந்தாள்.
ம்.. சின்ன குழந்தைக்கு இருக்கும் தைரியம் கூட அவன் அப்பாவிற்கு இல்லாமல் போய்விட்டதே சிறுவன் எழுதி தந்த கடிதத்தை இன்னொரு முறை பார்த்த கான்ஸ்டபிள் சுந்தரத்தின் மனம் கனத்து போனது.
 ( சில மாதங்களுக்கு முன் தென் தமிழகத்தில் களவு காதலால் பிள்ளைகளோடு தற்கொலை செய்து கொண்ட ஒரு உண்மை செய்தியை கற்பனை கதையாக சமூக சீரழிவின் வலிகளை சொல்லியிருக்கிறேன்)

Friday 25 January 2013

ஆலமரத்துக்கும், ஆண் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?


 

இது என்ன குருட்டுத்தனமான கேள்வி. சம்பந்தா சம்பந்தம் இல்லாத கேள்வி என்று எடுத்த எடுப்பிலேயே கேட்க தோன்றும்.

ஆனால் சம்பந்தம் இருக்கிறது என்று கூறி அந்த ஒரு பெரிய ஆலமரத்தையே வெட்டி இருக்கிறார்கள் என்றால் யாரும் எளிதில் நம்ப  மாட்டார்கள்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே தானத்தம்பாளையத்தில் தான் இந்த அநியாயம்  நடந்திருக்கிறது.
இந்த ஊரில் 35 குடும்பங்கள் உள்ளன; ஆனால் ஆண் வாரிசு கிடையாதாம். 50 ஆண்டுகளுக்கு முன் சின்னப்பன் கவுண்டர் என்பவருக்குத் திருமணம் நடந் தது. ஆண் வாரிசு இல்லை; இரண்டாவது கல்யாணமும் செய்தார்; அதிலும் பலன் கிட்ட வில்லை.

அவ்வளவுதான் யாரோ ஒரு கிறுக்கன் சொன்னானாம்; ஊருக்குள் ஆலமரம்  வைத்தால் ஆண் வாரிசு பாக்கியம் கிட்டும் என்று சொல்ல, சின்னப்பக் கவுண்டர் ஆலங்கன்று வைத்து மரத்தை உண்டாக்கினார். மூன்றாவது கல்யாணம் செய்தார் ஆண் குழந்தை பிறந்ததாம். பிறகு  யாருக்கும் ஆண் குழந்தையே இல்லையாம். ஊருக்குள் இன் னொரு ஜோசியக்காரன்  ஒன்றைக் கொளுத்திப் போட்டானாம்.

ஆல் தழைத்தால் ஆண் வாரிசு தரிக்காது என்றானாம் - அந்த (ஆல)மர மடையன்!
உடனே ஊர்கூடி ஆல மரத்தை மொட்டையடித்தனர் - வேரில் ஆசிடும் ஊற்றினர்.
விடயம் வட்டாட்சியருக்குத் தெரியவே. பறந்து வந்தார் அந்தவூருக்கு. ஆலமரத்தை வெட்டியது சட்ட விரோதம் என்றுகூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சோதிடன் ஆண் வாரிசுக்கு ஆலமரம் வேண்டும் என்றான். இன்னொரு சோதிடனோ ஆல் தழைத்தால் ஆண் வாரிசு தழைக்காது என்கிறான்.
யார் சொல்லுவது உண்மை? அப்பனும்  -பிள்ளையும், கழுதையைச் சந்தைக்குக் கொண்டு சென்ற கதையாக அல்லவா இருக்கிறது.
ஆல மரத்தை வெட்டினால் அரசு அதிகாரிகள் வருவார்கள் என்று  எந்த சோதிடனும் சொல்லவில்லையே!

குழந்தை பிறப்பு ஆண் - பெண் பிறப்பு என்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் உண்டே! இந்த மரம் வளர்த்து-வெட்டிய  மூடத் தனத்தை
 
எந்த ஒரு நடுநிலை பத்திரிக்கைகளும் வெளியிடவில்லை.


(  இந்த  செய்தி  எனக்கு வந்த மெயிலில் படித்தது  )
 




Tuesday 22 January 2013

இனிய தருணங்கள்.... !



பெண்கள் மலர் தோழிகள்  கொண்டாடிய பாசப் பொங்கல்



விழுதுகளற்ற ஆலமரங்கள்  அவர்கள். தனிமை என்பது பலருக்கும் வரமாக இருக்க, இவர்களுக்கு மட்டும் அது சாபமாக இருக்கிறது. ஏதேதோ காரணங்களால் புறக்கணிப்பு தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டவர்கள். உறவுகள் இருந்தும் ஒதுக்கப்பட்டவர்கள்.

வாஞ்சையாய் சில வார்த்தைகள்... கனிவுடன் சில கவனிப்புக்கள்.. இவைகளே அவர்கள் முகத்தில் புன்னகை பூக்கச் செய்துவிடுகிறது. பண்டிகைகள் என்பது இவர்களுக்கு மற்றொரு நாளே, வேதனையுடன் வேடிக்கை பார்க்க மட்டுமேயான இன்னொரு தினம். கூடி களித்திருப்பதும் உறவுகளுடன் திளைத்திருப்பதுமான பண்டிகை அனுபவத்தை இவர்களுக்கு அளித்தால் எப்படியிருக்கும்... அந்த பண்டிகை பூரணத்துவம் பெற்றுவிடாதா..? இப்படித்தான் அர்த்தமுள்ள கொண்டாட்டமாக்கினோம் பெண்கள் மலர் தோழிகளாகிய நாங்கள்.

நட்பே உறவான தோழிகளாகிய நாங்கள் வேலூர் பொற்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஓ.ஆர்.டி அமைப்பின் தஞ்சம் என்ற முதியோர் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினோம். அங்கே தஞ்சமடைந்திருந்த முப்பதிற்கும் அதிகமான பெண்களுடன் நடந்த பாச பகிர்தல்களில் பொங்கி வழிந்து பிரவாகமெடுத்தது சந்தோஷம்.


(ஜாதி, மத பேதமின்றி   இணைந்த உறவுகளின் இல்லம்)


தொடக்கமாக, உறவுகளுக்கு ஏங்கும் அந்த நெஞ்சங்களுக்காக தான் எழுதி கொண்டு வந்திருந்த கவிதையை பாடி வரவேற்றார்  திருப்பத்தூர் ரேணுகா 

................
முதிர்ந்த இந்த மங்கையரின் கதையே கேளீர்
இந்த மங்கைகள்  போல் பாரினில் வாழ்ந்தவர் யாரோ..
இவர் உழைப்பு காத்த அந்த குடும்பமல்லவா
இப்போது தனியாக தவிக்கவிட்ட மக்களல்லவா
அன்பு, பாசம் செலுத்தி நம்மை வளர்த்தவள் அல்லவா
அவரை அரவணைத்து காப்பது நம் கடமையல்லவா...
அன்புக்காக ஏங்கும் அவரை விரட்டிடலாமா
அவர் நினைவுகளின் நிழல்களை நாம் அழித்திடலாமா?
ஜாதிமதம் ஏதுமின்றி சேர்ந்து அனைவரும்
இங்கு உறவினர் போல் ஒரே தட்டில் உணவு அல்லவா..!
ஏற்றம் தாழ்வு ஏதுமின்றி இணைந்த கைகளால்
ஒருங்கிணைந்த உறவுகளின் இல்லமல்லவா..!

அவர் பாடி முடித்த போது அத்தனை பேரும் சில நிமிடங்கள் நெகிழ்ந்து கலங்கி நின்றனர்.

நெகிழ்ந்தது போதும், அவர்களை இன்முகமாக்குவோம் என்று களமிறங்கினர் தோழிகள். தளர்ந்திருந்த அந்த நெஞ்சங்களுக்கு களிப்பூட்ட தொடங்கியது போட்டிகள்.

(பாட்டி  நீங்க ஒர் பாட்டு பாட முடியுமா...?)

முதலில் பாட்டு போட்டி சுசிலாவும் ஜானகியுமாய் மாறி குரல் மாற்றம் கொண்டு அசத்தினார்கள் ராஜாத்தியும், சேதுலட்சுமி பாட்டியும். கடவுள் பாடல்களும், மெலடிகளுமாய் அங்கே தவழ்ந்து கொண்டிருந்த இசை, சட்டென்று குதிரை ஏறி நாலுகால் பாய்ச்சல் காட்டியது. " நெஞ்சமுண்டு  நேர்மையுண்டு ஓடு ராஜா" என்று இசைக்குதிரையை தட்டிவிட்டார் ஒருவர் . உற்சாகம் வேகமெடுத்தது.

(நெஞ்சமுண்டு நேர்மையுண்டு... ஓடு ராஜா..ஹேய்...)


பாட்டு முடிந்தது. அடுத்து என்ன..  காமெடிதானே, சேலையுடுத்திய வடிவேலுவாக மாறி அங்கிருந்தவர்கள் ரகளையில் இறங்க, சிரிப்பலைகளால் சிதறிப்போனது அத்தனை காலமும் அவர்களை போர்த்தியிருந்த தனிமை. அதுவும் குழாயடி சண்டையை நடத்திக் காட்ட வேண்டும் என்று சொன்னதுதான் தாமதம்,    நிஜ குடங்களை தூக்கி கொண்டு வந்து, அக்மார்க் குழாயடி சண்டையை அரங்கேற்றினர்.

அடுத்து சூழ் நிலையைச் சொல்லி அதற்கேற்ப நடப்பது எப்படி என்ற போட்டி. மொழி தெரியாத ஊரில் மாட்டிக் கொண்டீர்கள். வெற்றிலை பாக்கு வேண்டும் எப்படி கேட்பீர்கள் என்றதும், சுண்ணாம்பு தடவுவது போல் செய்து வாயில் போட்டு காட்டினார் ஒருவர் . " என்ன ஜாம் தடவி பிரட் வேணுமா என அவரை கலாய்க்கவும், இன்னொருவர் எழுந்தார். அதே போல் செய்து உதடுகள் சிவக்கும் என்பதை உதட்டை பூசிக்காட்டினார்.. "லிப்ஸ்டிக் வேணும் போல என்று கலாட்ட செய்ய அமர்ந்து கொண்டார் அவர். கடைசியாக வந்தவர் பாக்கை நன்றாக இடித்து வாயிலிட்டு குதப்புவது போல் செய்து காட்ட, அவருக்கே கிடைத்தது வெற்றிலை பாக்கு. திருடன் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு முடிக்கும் முன்னரே இறுக கட்டிப்பிடித்து கொண்டுவிட்டார்கள்.. இப்படி புடிச்சி கட்டி போட்டுருவோம்ல என்று  கெத்தாக சொன்னார்கள் உஷார் பாட்டிகள்.
ஆட்டம் இல்லாமல் கொண்டாட்டம் முழுமையடையுமா.. கும்மியடிப்பதில் தொடங்கி குத்து பாட்டுக்கு குத்தியெடுப்பது  வரை ரகளையான ஆட்டம் போட்டு அசத்தினார்கள் பாட்டிகள்.அதிலும் " வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா " என்ற பாட்டுக்கு டம்ளர்களை தலையில் வைத்தபடி இரண்டு பாட்டிகள் ஆட, கைதட்டல்களால் அதிர்ந்தது அந்த இல்லம். தோழிகளும் அபிநயம் பிடித்து ஆட கும்மாளமும், குஷியும் கைக்கோர்த்து கொண்டது.

( வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா.. )



( கை தட்டும் போது கூட பையை கீழே வைக்காத .. உஷார் பாட்டி...!)


கொண்டாட்டத்தின் நினைவாக அங்கிருந்தவர்களுக்கு போர்வை தந்து உதவினார் திருப்பத்தூர் ரேணுகா. செண்பகம் என்ற தோழி அனைவர்க்கும் துண்டுகள் வழங்கினார். மற்ற தோழிகள் தங்களால் இயன்ற இனிப்பு , பிஸ்கட், பழங்கள் என வழங்கினார்.மனம் நிரம்பி வழிவதுபோலவே வயிறும் நிறைய வேண்டுமே. அவர்களுக்கு அன்புடன் பொங்கலை பரிமாறினர் தோழிகள், பாசத்தை கலந்து , நிறைவுடன் சாப்பிட்டு முடித்த அந்த மூத்தோர் மனமார வாழ்த்தினர்.

" வாழ்வதற்கு பொருள் வேண்டும்... வாழ்வதிலும் பொருள் வேண்டும்.. இதை உணர்த்திவரும் பெண்கள் மலருக்கு எங்கள் நன்றி என்று விடை பெற்றனர் தோழிகள்.

நன்றி: தினமலர்- பெண்கள் மலர்.
( ஜனவரி 19,2013 தினமலர் நாளிதழ் இணைப்பு பெண்கள் மலரில் வந்துள்ளது)

இன்றைய பொழுதின் ஒரு  நாலு மணி நேர சந்தோஷத்தை காப்பாற்றிக்கொள்ளும் போது அடுத்த இருபது மணி நேரத்தை அந்த சந்தோஷமே பார்த்துக் கொள்ளும்.அப்படி ஒரு சந்தோஷத்தை மற்றவர்களுக்கு தரும்போது நம் மனம்  இரட்டிப்பாக மகிழ்ச்சி பெறுமல்லவா? 






Thursday 10 January 2013

வளர்ந்து விட்ட பிள்ளைகள்- வளராத உறவுகள்..!


ஒட்டடை தட்டி
வெள்ளை அடித்து
மாவிலை தோரணம்
கட்டி
வாசலில் கோலமிட்டு
கரும்பு, மஞ்சளை
சார்த்தி வைத்து
நல்ல நேரம் பார்த்து
பொங்க பானை
வைப்பதற்குள்
முதுகு நிமிரும்
கிழக்கு பார்த்து
பொங்கியதும்..
பொங்கலோ பொங்கல்
ஒன்று கூடி உரத்து
சொன்னதில்
படுத்தி எடுத்த வேலைகள்தான்
பஞ்சாய் பறக்கும்..
நெஞ்சமெல்லாம் தித்திப்பாய்..
வரிசையாய் வாழையிலை
உறவுகளோடு உண்டு மகிழ்ந்த
காலம் நினைத்து…
கண்ணோரம் நீர் கசிய
கிழவனும், கிழவியுமாய்
தட்டு மாறி
ஒற்றை இலையில்
பொங்கல் படையல்
 ஆறிப்போய்..!

******************


( பண்டிகைகள் என்றாலே உறவுகள் கூடி கொண்டாடி மகிழ்வதுதான்...  ஆனால்....
பெற்ற பிள்ளைகள் கூட அவரவர் குடும்பம் என்று பண்டிகை நாட்களிலும் சுருங்கி போய் விட வயதான அம்மா, அப்பாவின் உணர்வற்ற பொங்கல் இது.)