Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Saturday, 1 June 2013

ஆன்மீகம் என்றால் என்ன...?





 இந்த கேள்வியை நம் பதிவர் தோழி அருணா செல்வம் கேட்டிருந்தாங்க.. அவங்க பதிவில் கருத்தாக போட நினைத்ததை இங்கு பதிவாக போட்டுவிட்டேன். இது எனக்கு தோன்றிய சிந்தனைகள்தான். இதுதான் சரி என்று சொல்லும் அளவிற்கு வயதோ, அனுபவமோ எனக்கு கிடையாது. குற்றமிருந்தால் பெரிது படுத்தாதீர்கள்.

ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும் வாழ்க்கையின் உயர்நிலையை 
 எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. உயர்நிலை என்பது வசதியானவாழ்க்கை..அதில் இன்பம் தருவனவாக நினைப்பது அனைத்தும் புறப்பொருட்கள்தான்!  (வீடு, வாகனம்..இன்னும்பிற)  இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை ஓடுகிறான்.எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத   நிலைக்கு கீழே விழும் போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான்.அந்த ஆன்மாவிற்கு இந்த புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே. அதுகாறூம் தான் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று பட்டியல் போடுகிறது. தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது.மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது. அவன் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் அவனுக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட அவனுடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது. இப்போது உணர்கிறான் தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல்  கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும், கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம்.ஒரு இடத்தை சென்றடைய பல்வேறுவழிகள் இருக்கும் உதாரணமாக சைக்கிள், இருசக்கரவாகனம், பேருந்து  விமானம் ஏன் நடைப்பயணமாக கூட இருக்கலாம். இவை போலதான் ஆன்மாவை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர்.அந்த ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும்,     தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது. ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாககொண்டனர். நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும்தன் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது. இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
     
   நிலையற்ற பொருட்களில் தன்னை தொலைக்காமல் ஆன்மாவை உணர்வதே ஆன்மீகம்.

ஆன்மிகம்னா எல்லாவற்றையும் துறந்துடறது இல்ல. நாம் போற பாதையில் ஒரு முள் இருந்தால் அதை எடுத்து யார் காலிலும் படாமல் எடுத்து ஓரமாக போடுவது கூட ஆன்மீகம்தான்! மற்றவர் துன்பம் அடையகூடாது என்று நினைக்கும் அந்த கருணை இறை நிலைதானே! இந்த இறை நிலையை ஒருமனிதன் தானாக உணர்ந்து செய்யும்போது அவனுக்கு ஆன்மீகம் தேவைப்படவில்லை.அவனை நாத்திகவாதி என்கிறோம்.போதனையால் உணர்ந்து செய்யும்போது ஆன்மீகம் தேவைப்படுகிறது.அவனை ஆத்திகவாதி என்கிறோம்.

 கலப்பட மனிதர்களால் நாத்திகமும் கூட ஆத்திகத்தை எதிர்த்து கொண்டிருப்பதுதான் அதன் வேலை என்ற நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

இதற்கு மாற்று கருத்துக்கள் கூட இருக்கலாம்.எனவே என் கருத்துக்களை சரி, தவறுகளுக்கு கொண்டு போகவில்லை.

( இவ்வளவும் பேசிவிட்டு உண்மைய சொல்லனும்னா இப்ப நிறைய சம்பாதிக்கனும்னா ஒண்ணு அரசியல், இல்ல சாமியார்(ஆன்மீகம்) அப்படின்னு இல்ல ஆயிடுச்சி.. இதெற்கெல்லாம் காரணம் ஆன்மாவை உணராத பேராசை பிடித்த மனிதர்களாகத்தானே இருக்கமுடியும்.. அப்ப உண்மையான ஆன்மீகம் எங்கே.. ? )