Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Tuesday, 25 February 2014

நினைவெல்லாம் நீயே ஆனாய்...............











“இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே... என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்... ப்ளீஸ் பா....”

“ நீ நினைக்கறதை நீயே எழுதினா நல்லாருக்குமே சூர்யா...?”

“ இல்லப்பா... எனக்கு எழுதல்லாம் வராது.... என் எண்ணத்துக்கு  நீ உயிர் குடுத்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்...”
கடற்கரை மணலில் ‘அப்பா’..என்று  எழுதி கொண்டே உற்று பார்த்து கொண்டிருந்த சூர்யாவை வியப்புடன் பார்த்தவள், “ சூர்யா உனக்கு அப்பான்னா அவ்வளவு பிடிக்குமா?”

“ ஏன் இப்படி கேட்கிற ... அப்பா போய் பத்து வருஷம் ஆயிடுச்சி... அப்பாவோட நினைவு அப்படியேதான் இருக்கு....”

அண்ணியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அப்பாவையும், அம்மாவையும் தனியே விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போய்விட்ட அண்ணன் சுதர்ஸனை நினைத்து பார்த்து சிரித்து கொண்ட இனியா, “ சரி.. சொல்லு சூர்யா...

“ எங்கம்மாவுக்கு கல்யாணமாகி எட்டு வருஷத்துக்கு குழந்தையே பிறக்கலையாம் இனியா... வேண்டாத தெய்வமில்லை.. சுத்தாத கோவிலுமில்லையாம்... அதுக்கப்பறம் அம்மா என்னை சுமந்திருக்காங்க... எங்கப்பாவுக்கு தலை கால் தெரியலை... அம்மா வயித்துக்குள்ள இருக்கும் போதே என் கிட்ட பேச ஆரம்பிச்சாட்டாராம்... அப்ப எங்க நிலத்துல நல்ல விளைச்சல் ... அறுவடை முடிஞ்சு  நெல்லெல்லாம் களத்து மேட்டுல குவிச்சிட்டிருக்காங்களாம்... நான் பொறந்துட்டேன்ற சேதி அப்பா காதுக்கு எட்டியதும்.. ‘ டேய்... யார் யார் எவ்வளவு வேணும்னாலும் அள்ளிக்கிட்டு போங்கடா புள்ள பொறந்திருக்கான்..னு...’ அப்படியே போட்டு விட்டு சந்தோஷமா ஓடிவந்தாராம்... அதுக்கப்புறம் ரெண்டு தம்பிங்கன்னு எங்க குடும்பம் அழகா வளர்ந்துச்சி...

அவர் கூட சின்ன வயசுல விளையாடுனது எல்லாம் ஞாபகம் இருக்கு இனியா.. தேங்காய் பிஞ்சை வச்சி குச்சி சொருகி அழகா தேர் செஞ்சி கொடுத்து கயிறு கட்டி இழுத்தது இன்னும் மனசுல பசுமையா இருக்கு....

திருவிழா அப்ப சாமி தெரியலைன்னு அழுத என்னை இடுப்பில் உட்கார்த்தி வச்சி ரெண்டு தம்பிகளையும் தோள் மேல் தூக்கி “ இப்ப தெரியுதாடா..?ன்னு வாஞ்சை தீர கேட்பார்... கைவலிக்குதுன்னு இறக்கி விட்டதே இல்லை...அம்மாதான் சொல்வா, “ பாவம்டா ராஜா.. அப்பாக்கு கைவலிக்கும் இறங்குகடான்னு...” இப்ப என் அப்பா தோள் மேல் சாஞ்சி அழனும் போல் இருக்கு இனியா...என் வாழ்க்கையில் மறக்க முடியாத நண்பன் என் அப்பா... அவர் என்னிக்குமே கடுமையா பேசி நான் பார்க்கலைப்பா... அப்பா படிக்காததால் என்னை நல்லா படிக்கனும்னு சொல்வார்..” சூரி...  நல்லா படிப்பா... படிச்சி பெரிய உத்தியோகத்துக்கு போகனும்... அந்த நாளை நான் பார்த்துட்டா வேற எதுவும் எனக்கு தேவையேயில்லைய்யா...”  அருகில் இழுத்து சட்டை காலரை நிமிர்த்தி சிரிப்பார்...

எங்க நெலத்துல வேலை செஞ்சவங்களை கூட கூலிக்காரங்களா எங்கப்பா பார்த்ததே இல்லை... அங்கயே முப்பது பேருக்கானாலும் சாப்பாடு தயாராவும்... அவங்க கூடவே அப்பா சந்தோஷமா சாப்புடுவார்... எந்த பருவத்துல விதைக்கனும்.. எப்ப அறுவடை செய்யனும் எல்லாம் அத்துபடி...

ஸ்கூல் முடிஞ்சா என் அப்பாவை தேடிக்கிட்டு நெலத்துப்பக்கம் ஓடுவேன்... தூரத்துல பார்க்கும் போது அப்பா முதுகு தெரியும்... யார் கூடயோ பேசிட்டிருக்க மாதிரி குரல் கேட்கும்.... கிட்டத்துல போய் பார்த்தா அப்பா தனியாத்தான் இருப்பார்...

“ ஏன்ப்பா பேசின மாதிரி கேட்டுச்சு யார் கூட பேசிட்டிருந்திங்க? ம்பேன்...
“ இல்ல சூரி இவங்களோடத்தான் பேசிக்கிட்டிருந்தேன்....’ இப்படியும் அப்படியும் தலையாட்டிக்கிட்டிருக்கும் நெல்லுக்கதிருங்களை காமிப்பார்..

“ ஐய்... என்னப்பா இது இந்த செடிக்கு காது கேட்குமா? இதோடயா பேசிக்கிட்டிருந்தீங்க?

“ ஆமாண்டா கண்ணா... இதுவும் நம்மை மாதிரி ஒரு உசிருதான..? நாம பேசறதை எல்லாம் கேட்கும்...பாத்தியா வறண்டு போவாம தண்ணி பாய்ச்சினவுடனே அழகா சிரிச்சி நிக்கிறத...

அதெல்லாம் ஒரு காலம் இனியா... பொய்க்காம மழை பெய்ஞ்சதும்... விளைஞ்சதும்.. யாரும் இல்லன்னு கேட்க கூடாது... கையில எதா இருந்தாலும் தூக்கி கொடுத்துருவார்... வாரி வாரி கொடுத்திட்டிருந்த கைக்கு சோதனையா ஒரு காலம் வந்துச்சி....

ஊருக்குள்ள நெலம் வச்சிருந்தவனை எல்லாம் தோல் கம்பெனிக்காரன் மடக்கி போட்டுட்டான்... அத்தனை பேரும் நெலத்தை கொடுத்துட்டு அங்கிட்டு வேலைக்கு சேர்ந்துட்டாங்க.... அப்பா மட்டும் மண்ணை கொல்ல மாட்டேன்னு புடிவாதமா நெலத்தை வச்சிக்கிட்டார்....

அப்பறம் நெலத்து வேலைக்கு ஒரு பயலும் வரலை....... மண்ணை கொன்னதாலவோ என்னவோ மழைக்கூட பொய்ச்சு போச்சு... கெணத்துல சுத்தமா தண்ணி வத்தி போச்சு... தெனம் முப்பது பேருக்கு சாப்பாடு போட்ட எங்க அப்பா எங்க மூணுபேத்துக்கும்... ஒரு வேளை சாப்பாடு போடவே கஷ்டப்பட்ட அந்த கொடுமைய நினைச்சா.. இன்னிக்கும் அழுகையா வருது....இனியா..

படி படியா அளந்த குடும்பம் கிலோவுல வாங்க கூச்சப்பட்டு யார் யார்கிட்டயோ பை குடுத்து அரிசியை கடையில் வாங்கிட்டு வரசொல்வார்... எவ்வளவு பிரச்சினையிலும் அப்பா மனம் ஒடைஞ்சதே இல்லை... அப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தோம்...

‘ சூரி நீ ஆளாயிட்டா மத்த ரெண்டு பேரையும் நீ பாத்துக்குவே... எதையும் மனசுல வச்சிக்காம படி..ப்பா..’ ம்பார்.

 நான் நல்ல வேலைக்கு போவனும் அப்பாவை பெருமைப்படுத்தனும்னு ரொம்ப கனவு கண்டேன் இனியா... அதெல்லாம் சுக்கு நூறா போயிடுச்சி... அப்ப ப்ளஸ் டூ படிக்கிறேன்...  ப்ரெண்ட்ஸ்களோட சினிமா போறேன்பான்னேன்...’ அப்பா டக்குன்னு பாக்கெட்டிலிருந்த நோட்டை எடுத்து கொடுத்து... வரும்போது அப்படியே ஹோட்டல்லயும் எதாச்சும் சாப்பிடுங்கன்னு... சிரிச்சார்...

அந்த சிரிப்பைத்தான் நான் கடேசியாக பாப்பேன்னு  நெனைச்சுக்கூட பார்க்கலை....
சூர்யா கண்கள் கலங்க... மௌனமாகிவிட, “ ஹேய்... ரிலாக்ஸ் பா... போதும்...  நாளைக்கு பேசிக்கலாமா?” கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் .

வாங்கி கொஞ்சம் விழுங்கியவன்...” இல்ல இனியா.. நான் மொத்தத்தையும் கொட்டிடனும்....
சினிமா முடிஞ்சு வீட்டுக்குள்ளார நுழையறப்பதான் எங்க பாட்டி ஓன்னு கத்திக்கிட்டே என்னை புடிச்சிக்கிச்சி...’ சூரி... அப்பா நெஞ்சு வலிக்குதுன்னு விழுந்துட்டார்டா.. சித்தப்பா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்கடா என்னைய கூட்டிட்டு போடா...

இரண்டு  நாளைக்கப்பறம்தான் அப்பா கண்ணு தொறந்து பார்த்தார்.... பேசமுடியலை.. மூச்சுதிணறல் ரொம்ப இருக்கு... பொழைக்கறது கஷ்டம் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்ங்கிறாங்க... அப்படியே  நெல குலைஞ்சி போயிட்டோம்... அப்பா எங்கிட்ட எதோ சொல்ல வர்றாரு... ஆனா முடியலை.. அவரை டாக்ஸியில படுக்க வச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு வர்ரோம்... வழியில எங்க நெலத்துக்கிட்ட வரும்போது... என் சட்டையை புடிச்சி நிறுத்துங்கிறாரு.... டாக்ஸியை நிறுத்தினா...  நெலத்துல வாடி வதங்கியிருக்க பயிரை கண்ணுல கண்ணீர் வழிய பார்க்கிறார்... உயிரா நினைச்ச பயிரும்... பயிறுக்கு உயிரா இருந்த எங்கப்பாவும் ஒரு சமயத்துல போயிட்டாங்க... இனியா....”

        அப்பா இல்லைங்கிறத ஏத்துக்க முடியாமயே வருஷம் ஒடிப்போயிடுச்சி... நானும் படிச்சி வேலைக்கு வந்துட்டேன்... என் தம்பிகளையும் படிக்க வச்சி..கல்யாணம் குடும்பம்னு ஒரு நிலையாயிட்டோம்.... இத பார்க்க அப்பா இல்லை... இந்த ஜென்மத்துல அவர் பிரிவை என்னால தடுக்க முடியலை... அடுத்த ஜென்மத்துலயாவது எங்கப்பா என்னோட வெற்றியை பாத்து சிரிக்கனும் இனியா.... எங்கப்பாவுக்கு மகனா அடுத்த ஜென்மத்துலயும் பொறக்கனும்.... அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருக்கா இனியா....?”

இனியாவின் கைகளை கோர்த்து தன் முகத்தில் பொத்திக்கொண்டு அழுதவனை என்ன சொல்லி தேற்றுவதென்று தெரியவில்லை.....

“ சூரி... இத என்னால கதையா எழுதி மறந்துட முடியுதுடா... வாழ்ற வரை கூடவே வரும் ஞாபகங்கள்ப்பா... உன்னை என் நண்பனா நெனைக்கறதுக்கு பெருமையா இருக்குடா... உங்கப்பா உங்கூடவேத்தான் இருக்கார்.... யாழினி யாரு உங்கப்பாதாண்டா... உனக்கு குழந்தையா பொறந்திருக்கார்...சொல்லு அவகிட்ட சொல்லு தாத்தான்னு சொல்லி சொல்லி வளர்த்து விடு... இங்க பாரு யாழினி சிரிக்கிறா....”

        யாழினியை தோள் மீது தூக்கிகொண்டவன்... கை அசைத்துவிட்டு போய்கொண்டிருந்தான்.... அவன் அப்பாவை சுமந்து செல்வது போல இருந்தது... தூரத்தில் ஒரு புள்ளியாய்.... மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தாள்...கற்பனைகளோடு தோற்றுப்போய் வாழ்வியல் சொன்ன அவனை.....!

( இப்படைப்பு என் நண்பர் ‘ சூர்யா’ அவர்களுக்கு....)
       



Monday, 18 November 2013

அழகான கனவுகள்.....!


“ ஏங்க காலையில் என்ன அவளோட அரட்டை...? இந்த கீரையை கொஞ்சம் நறுக்கலாமில்ல... இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானேதான்....” என் கூப்பாடு எதுவும் அவர்களை சலனப்படுத்தவில்லை..

அவள் நேற்று கண்ட கனவின் பயங்கரத்தை சொல்லி கொண்டிருந்தாள்...” ப்பா... நேத்து ஒரு பயங்க்கர கனவுப்பா.... இப்படித்தான் தொடங்குவாள். எனக்கு தெரியும் என்னிடம் சொல்ல வரமாட்டாள். “ போடி காலையில் எத்தன வேலை இருக்கு... கனவாம்... கனவு அதெல்லாம் அப்பறம் கேட்கிறேன்... போய் ஸ்கூல் வொர்க் எல்லாம் முடி..” என்று விரட்டுவேன்.

“ ப்பா.... ரெண்டு கண்ணு மட்டும் வருதா... அது லோகியை துரத்திகிட்டே போகுது... அவ என்னை சத்தம் போட்டு கூப்பிடறா.... அச்சு...ப்ளீஸ் என்னை காப்பாத்துடின்னு கூப்பிட்டுக்கிட்டே ஓடறா.... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைப்பா... அப்ப திடீர்னு ‘ அங்கிள்’ வண்டியில் வந்து .......

அவள் கைகளை விரித்து ... தலையை ஆட்டி திகிலுடன் சொல்லி கொண்டிருப்பதை அவளின் அப்பா முதுகை வளைத்து அவள் முகத்தருகே கண்களில் திக்.. திக்.. காட்டி “ அப்புறம் என்னாச்சி...? சுவாரஸ்யமாய் கேட்பார்.

கடைசியில் கனவு முடிந்து இரண்டு பேரும் சிரிப்பார்கள். அவள் கேட்பாள் ‘ “ஏம்ப்பா.. கனவெல்லாம் வருது?”

“ நாம எதையாவது நினைச்சதோ.. பார்த்ததோ... இல்ல கேட்டதோ மனசுக்குள்ள பதிவாயி அது கனவா வரும்டா...கண்ணா”

“ ம்... ம்... வரும்...  க்ராபிக்ஸ் படம்லாம் பார்த்துட்டு இருந்தா... இப்படித்தான் வரும்... ரெண்டு பேரும் எழுந்து குளிக்கறிங்களா இல்லையா..?” தினமும் விரட்டுவதே வேலையாக இருக்கும்.

“ ப்பா... அந்த பீச்ல நாம மூணு பேரும் வேகமா போய்கிட்டே இருக்கோமா.. அப்ப திடீர்னு அம்மாவை காணலைப்பா...

“ ஹய்யா... கனவுலயாவது காணாம போனாளே... பிசாசு... அப்புறம் என்ன ஆச்சு....?”

என் பேர் அடிபடவே கிச்சனிலிருந்து ஹாலுக்கு வந்து நின்றதும்... அவள் கனவை பற்றி சொல்வதை நிறுத்தி விட்டாள்....” போம்மா... நீ எதுக்கு இங்க வந்தே? நீதான் கேட்க மாட்டேனுட்டே இல்ல.... அப்பறம் என்ன.... நீ வாப்பா....” அவள் அப்பாவின் காதை பிடித்து தன் முகத்தருகே கொண்டு வந்து கிசு கிசுப்பாய் சொல்லி கொண்டிருந்தாள்... ரெண்டு பேரும் அடுத்த வீட்டிற்கு கேட்குமளவு சிரித்து கொண்டிருந்தார்கள்...

ஒவ்வொரு நாளும் ஒரு கனவாய் சொல்லி கொண்டிருந்தாள்....

“ ப்பா... ரெண்டு அங்கிள் துப்பாக்கி வச்சிகிட்டு உன்ன துரத்திக்கிட்டே இருக்காங்கப்பா... எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சிப்பா... சாமி கிட்ட வேண்டறேன்... அப்ப வானத்துலர்ந்து பளிச்சின்னு ஒரு மின்னல் மாதிரி வந்துச்சா....

“பேசாம ராம நாரயணன் படங்களுக்கு இவ கதை சொல்லலாம்... நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கிங்க.. காலையில்  நான் மாத்திரம் இவ்வளவு வேலையா இருக்கறப்ப... உங்களை...” இந்த முறை அவள் அப்பாவின் தலையில் குட்டு விழுந்தது.

மும்முரமாய் சமையலில் இறங்கி கொண்டிருந்தேன்... இன்று ஏனோ கனவின் சத்தம் கேட்கவில்லை... எட்டி பார்த்தேன்... அவள் அப்பா குளித்து முடித்து ரெடியாகியிருந்தார்...

“ என்ன இன்னிக்கு கத எதுவும் ஓடலையா...? இத்தனை அதிசயமா காலையில் குளியல்?

“ அச்சு... இன்னும் எந்திரிக்கலை...”

“ ஏன் என்ன குட்டிம்மா இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே...?” ஸ்டவ்வை அணைத்து பெட்-ரூமுக்குள் நுழைந்து அச்சுவை எழுப்ப கை தொட்டேன். அச்சுவின் உடல் அனல் போல் கொதித்து கொண்டிருந்தது..

“ என்னங்க... குட்டிம்மாவுக்கு காய்ச்சல் அடிக்குது...”

அடுத்த நிமிடத்தில் அவளின் அப்பாவும் பரபரப்பானார். அச்சுவை எழுப்பி மெல்ல பல் துலக்க வைத்து காபி போட்டு தந்து டாக்டரிம் போய் வீடு திரும்புவதற்குள் அரை நாள் ஓடி விட்டிருந்தது.

இரண்டு நாளும் அச்சுவிற்கு நல்ல காய்ச்சல்... “ உம்..” கொட்டி தூங்கி கொண்டே இருந்தாள்.

“கீதா... ரெண்டு நாள் நீ லீவு போட்டே இல்ல... நீ வேணா இன்னிக்கு ஆபிஸ் போயேன்... நான் ரெண்டு நாளைக்கு லீவு போடறேன்... அச்சு இந்த ஒரு வாரம் ஸ்கூலுக்கு போகவேண்டாம்...” அவளின் அப்பா... என்னிடம் சொல்ல..

“ ம் ஹூம் வேணாங்க... அங்க போனாலும் எனக்கு இவ மேலய கவனம் இருக்கும்.. வேலையும் ஓடாது... எனக்கு என் குட்டிம்மாதான் முக்கியம்...”  நானும் ஒரு வாரம் லீவு எடுத்திருந்தேன்.

இந்த ஒரு வாரமும் நான் சமைத்தேனா... சாப்பிட்டேனா என்பதையே மறந்திருந்தேன்.. அச்சுவின் பக்கத்திலயே ஒவ்வொரு நிமிடமும்...ஜூஸ் கொடுப்பதும், தைலம் தேய்த்து விடுவதுமாய்... அவள் தூங்கும் நேரத்தில் மட்டும் அவளின் அப்பாவிற்கு போன் செய்தேன், “ என்னங்க குட்டிம்மா ரொம்பவே சோர்ந்திட்டா... விட்டு விட்டு ஜூரம் வருது.. வேற டாக்டர் கிட்ட போவமா..?”

“ ஏய்... ஒண்ணும் பயப்படாத... எல்லா டெஸ்ட்டும்தான் பார்த்தாச்சு இல்ல... இது வைரல் பீவர்தான்... டாக்டரே என்ன சொன்னார்...ஒரு வாரமாவது இருக்கும்னுதானே? இன்னும் ரெண்டு நாள்ல நார்மலாயிடுவா...

ஒரு வாரமாய் குட்டிம்மாவின் கனவுகள் சொல்லாமல் வீடே நிசப்தமாயிருந்தது.. வாழ்க்கையில் எதுவுமே தேவை இல்லை போல் இருந்தது. அவளின் அப்பாவிற்கும் அந்த நிசப்தம் கொடுமையாக இருந்தாலும் ஆண் என்பதில் மனதை திடமாய் இருப்பது போல் பொய்யாய் போர்த்தி கொண்டிருந்தார்.

“ம்மா... பசிக்குது...” அச்சு மெல்ல கேட்டதும்... மணி இரவு பணிரெண்டாகியிருந்தது.

“ குட்டிம்மா... இப்ப ராத்திரி பண்ணெண்டு மணி இந்த நேரத்துக்கு என்ன சாப்பிடுவே... அப்பா பிஸ்கெட் தரட்டுமா...?”

“இருங்க... இப்பதான் பசிக்குதுன்னு கேட்கிறா எத்தனை மணி ஆனா என்ன... நீ என்ன சாப்பிடறயோ சொல்டா அம்மா செஞ்சி தர்றேன்...”

  ரொம்ப பசிக்குது... பிஸ்கெட்டெல்லாம் வேணாம் இட்லி வேணும்மா...”

அடுத்த நிமிடமே பலத்தை கூட்டி கிச்சனுக்குள் நுழைந்து இட்லி ஊற்றி தட்டில் போட்டு வந்து சின்ன சின்னதாய் பிட்டு அவளுக்கு ஊட்டியதும் கொஞ்ச நேரம் கழித்து தூங்கிவிட்டாள்.

“ கீதா ... அவளை விட இப்ப நீ படுத்துருவ போல இருக்கே.... ஒழுங்கா சாப்பிடுடி..  எவ்வளவு பேசுவ... நீ போய் இப்படி இருக்கலமா...?

“ எவ்வளவு பேசினாலும் நான் அம்மாங்க.... இந்த ஸ்தானத்துல எனக்கு அவதான் பெரிசு..  இந்த உலகத்துல வேற எதுவும் எனக்கு பெரிசா தெரியலை... நான் நேசிக்கிற இலக்கியம் கூட இப்ப போடா போன்னு இருக்கு.... என் குட்டிம்மா பழைய படி எழுந்து வீடு பூரா ரகளை பண்ணனும்... எனக்கு அவ வேணும்... நீங்க வேணும்...” அவள் அப்பாவின் தோள்களில் சாய்ந்து விம்மி கொண்டிருந்தேன்.

காய்ச்சல் படுத்தியதில் ரொம்பவே சோர்வாகியிருந்தாள்.... கடவுளே... என் குட்டிம்மாவுக்கு எந்த கஷ்டத்தையும் குடுக்காதே... வேணும்னா அவ அம்மாவுக்கு குடு...”  என் வேண்டுதலை கேட்டவள்... லேசாக வாய் திறந்து, “ ம்மா.. உனக்கு என் மேல் அவ்வளவு ப்ரியமா...?”

“ ஏண்டா... அப்படி கேட்கிற?  நீதாண்டா என் கனவே...!”

“ ஆனாலும் அப்பா மாதிரி என் கனவை எல்லாம் நீ கேட்கறதே இல்ல... சொல்ல வந்தா திட்டற இல்ல... “

“ அதுக்காக அம்மாவுக்கு உன் மேல் ப்ரியம் இல்லைன்னு நினைச்சுகிட்டயா... ? அம்மா வீட்டையும் பார்க்கனும், ஆபிசுக்கும் போகனும் இல்லையா... அந்த டென்ஷன்ல எதாவது சொல்வேனே தவிர நீதாண்டா என் உயிரு... உனக்காகத்தாண்டா நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்...”

“ ம்மா... எனக்கும் உன்ன ரொம்ப புடிக்கும்...லீவ்ல பாட்டி வீட்டுக்கு போனா கூட நீயில்லைன்னா என்னால இருக்கமுடியலைன்னுதான்மா ஓடி வந்துடறேன்...!” அன்பாய் என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ சரி குட்டிம்மா.. நான் நேத்து ஒரு சூப்பர் கனவு கண்டேண்டா... நீ... நான் அப்பா எல்லாம் ஜாலியா டூர் போறோம்... அங்க ஒரு அழகான வீடு... வீட்டுக்கு பக்கத்துல சல சலன்னு சின்னதா ஒரு ஓடை போயிட்டிருக்கு.... பக்கத்துல பெரிய ரோஜா தோட்டம்.......”  காணாத கனவை பொய்யாய் சொல்லி கொண்டிருந்தேன்... ஆர்வமாய் எழுந்து உட்கார்ந்து கேட்க ஆரம்பித்தாள்.

இரண்டு நாட்களில் அச்சு பழையபடி திரும்பியிருந்தாள்.

“ ம்மா....  நேத்து ஒரு பயங்க்கர கனவும்மா....” தலையை ஆட்டி கண்ணை உருட்டி சொல்ல வந்த அவளிடம், “ ம் அதுசரி உனக்கு எப்ப பார்த்தாலும் பயங்க்கர கனவுதான் வருமா?  ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தேன்...

அவள் கனவை கேட்க தினமும் ஒரு மணி நேரம் முன்பாக வேலை முடித்துவிட தீர்மானித்திருந்தேன்.

Friday, 18 October 2013

பணம் காய்ச்சி மரம்...

அப்பா போய் பத்து நாட்களாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு அப்பா என்பதை விட நண்பனாகத்தான் நிறைய தெரியும். சரவணனுக்கு அப்படி இல்லை....

 அப்பா வாத்தியாராய் இருந்த பள்ளியிலே நாங்கள் இருவரும் படித்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அப்பாவிடம் சொல்வார்கள்” சார் உங்க சின்ன பிள்ளை சிவா பரவாயில்லை... படிப்பில கெட்டி ஆனா பெரியவன் சரவணன் ஏன் இப்படி இருக்கான்? “  கேட்கும் போது அப்பா பதில் சொல்ல முடியாமல் உடைந்து போய் விடுவார்.

சரவணனுக்கு எத்தனையோ நல்லவிதமாய் சொல்லி தந்தும் அவனுக்கு படிப்பின் மேல் ஆர்வம் வரவேயில்லை. அப்பா அவசரமாய் நூறு ரூபாய் கேட்டதாக சொல்லி பக்கத்து தெரு வாத்தியாரிடம் கடன் வாங்கி அடுத்த ஊர் சினிமாவிற்கு போய்விட்டதிலிருந்து அவனுக்கு ஒழுக்கமும் வரவில்லை என்பது வெளிச்சமாகியது. சரவணனுக்கு அத்தனை சரளமாய் பொய் வந்தது.

அம்மாவின் அழுகை, அப்பாவின் அறிவுரை எதுவுமே அவனை அசைக்கவில்லை. பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பதால் அதுவரை வந்து விட்டிருந்தான்.  பொது தேர்வில் எப்படியாவது சராசரி மதிப்பெண்ணிலாவது அவன் தேறிவிட வேண்டும் என்று அம்மா சரஸ்வதி பூஜை பண்ணி கொண்டிருந்தாள்,

“ அடி அசடு அவன் பேப்பரில் ஒண்ணுமே இல்லாமல் மார்க் மட்டும் எப்படி வந்துடும்..? அவனுக்கு படிப்பு வரல்ல... ஒண்ணும் பண்ண முடியாது வேற வழிதான் செய்யனும்...”
படிப்பு வரவில்லை என்றால் அடுத்தது கைத்தொழிலைத்தான் தெரியும்.. அப்பா அவருக்கு தெரிந்த தையல் கடையில் தையல் கற்று கொள்ள சேர்த்து விட்டார். அங்கும் அவன் ஒழுங்காய் இருக்கவில்லை... மதியம் சாப்பிட போகிறேன் என்று சொல்லிவிட்டு சினிமா  சென்று விடுவான்.  நண்பர்களோடு சிகரெட் பிடித்து கொண்டிருப்பதாக யாரோ வந்து சொன்ன போது அம்மா ஆக்ரோஷமாய் வயிற்றில் அடித்து கொண்டாள்,

“ டேய்.. இவனை பெத்த வயித்தலதாண்டா உன்னையும் சுமந்தேன்.. நீ மட்டும் ஏன் இப்படி இருக்க...? “

ம்ஹூம். அம்மாவின் அழுகைக்கெல்லாம் அசைந்து கொடுப்பவனில்லை... அடுப்பங்கறையில் நுழைந்து இருப்பதை தட்டில் போட்டு கொண்டு டி.வி பார்த்து கொண்டு உட்கார்ந்து விடுவான்.

“டேய்...  நீ என்னதாண்டா மனசுல நினைச்சிருக்க... தினம் நல்லா ட்ரஸ் பண்ணிக்கிறது, சாப்பிடறது டி.வி பார்த்துக்கிட்டு பொழுது போக்க வேண்டியது.... உங்கப்பாவிற்கு உன்ன நினைச்சி நினைச்சி டென்ஷனாகுதுடா.. அந்த மனுஷனுக்கு எதாவது ஆகிட்டா நம்ம கதி என்ன...”

தையல் கடைக்கு போவதையும் நிறுத்திவிட்டான். அப்புறம்  அப்பா தீக்குச்சி கம்பெனி, பால் பண்ணை என்று எங்கெங்கோ வேலைக்கு சேர்த்து விட்டார்... ஒவ்வொரு காரணம் சொல்லி இரண்டு மாசம் போய்விட்டு நின்று விடுவான்.  நான்  நிறைய மார்க் எடுத்து இஞ்சினியரிங் சேர்ந்தேன். சரவணன் இப்படியே இருப்பது அப்பாவிற்கு கவலையாக இருந்தது.. அவனுக்கே ஒரு பொறுப்பை கொடுத்தால் என்ன என்று யோசித்தார்.

 அப்பா ஆசையாய் பைக் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடாய் போட்டு ஒரு சின்ன மளிகை கடையை ஆரம்பித்தார். இப்போது கிடைப்பது போல் அப்போதெல்லாம் அப்பாவிற்கு அவ்வளவு சம்பளம் கிடையாது.  

“ சரவணா எவ்வளவோ தூரம் சொன்னேன்... நீ உன் எதிர்காலத்தை பத்தி யோசிக்கவே இல்ல.. கஷ்டப்பட்டு இவ்வளவு நாளா சேமிச்ச பணம்... உழைச்சாவது பிழைக்க கத்துக்க.. இந்த ஊர்ல அவசரத்துக்கு பொருள் வாங்கனும்னா கூட டவுனுக்குதான் போறாங்க... இங்க கடை நல்லா வியாபாரம் ஆகும் .. இதிலயாவது சாமர்த்தியமா இருந்து உன் வாழ்க்கையை பார்த்துக்க...”

அவர் எதிர்பார்த்த மாதிரி அவன் பொறுப்பாய் இருப்பான் என்ற நம்பிக்கையிலும் மண் விழுந்தது. பெரும்பாலான நேரங்களில் கடையை பூட்டி விட்டு வழக்கம் போலவே சிகரெட், சினிமா என்று சுற்றி கொண்டும், நண்பர்களுக்கு கடன் கொடுத்தும்  கடையையும் நட்டமாக்கிவிட்டு உட்கார்ந்து விட்டான்.

அப்போதுதான் பெரிய மாமா வந்திருந்தார், “ மல்லிகா இவனை இப்படியே விட்டா வழிக்கு கொண்டு வர முடியாது. இவன் இங்கிருக்கவே வேணாம்... என்னோட மில் வந்து பார்த்துக்கிடட்டும்... “ என்று சொல்லி திருப்பூருக்கு அழைத்து சென்று விட்டார்.

அவன் மாமாவிடம் இருந்து மாறிவிடுவான் என்ற  நம்பிக்கையில் அம்மா கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். எனக்கு படிப்பு முடிந்து  நல்ல வேலை கிடைத்த சமயம்...அப்பாவிற்கும் சம்பள உயர்வு கிடைத்திருந்தது.

அப்பா ஆசைப்படி இருக்கும் ஓட்டு வீட்டை இடித்து பெரிய மாடி வீடு கட்ட அடித்தளம் போட்டோம்.  நான் அப்போது வேலை விஷயமாய் அஸ்ஸாமிலிருந்தேன்... இரண்டு மூன்று நாட்களாவது ட்ரெயினில் பிரயாணம் செய்து மாதத்திற்கொரு முறை வீட்டு வேலை பார்க்க வந்துவிடுவேன். வேலைக்கு சென்ற கொஞ்ச காலத்திலேயே அப்பாவிடம் ஒன்றறை லட்ச ரூபாய் தந்ததும்,  அப்பா தழு தழுத்து போனார், 

“ சிவா எனக்கு தெரியும்டா ஒரு டீ, காபின்னு கூட செலவு பண்ணாமத்தான் இதை சேர்த்திருப்ப... இதை நல்ல விதமா செலவு பண்ணிடலாம்... இந்த காசை வச்சி மேல ஒரு  போர்ஷனும் கட்டிடலாம் நமக்கு வாடகையும் வரும்..”

மட மடவென்று இரண்டு மாடிகள் உயர்ந்து தெருவே வியந்து பார்க்கும் அளவு கட்டிடம் எழும்பி கொண்டிருந்த போதுதான் இடியாய் அந்த செய்தி வந்தது...

“ மல்லிகா உன் பெரிய புள்ள... மில்லில வேலை செய்ற ஒரு பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடிட்டான்.. அதுவும் அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை ஏமாத்தினவ...”

ஒவ்வொரு செங்கல்லும் பார்த்து பார்த்து கட்டி கொண்டிருந்த அப்பாவிற்கு சரவணனை மட்டும் பார்த்து வளர்க்கவில்லையோ அழுத்திய கவலையில், “ டேய் சிவா இனிமே அவனை நம்பி பிரயோஜமில்லைடா  நான் இல்லாட்டியும் அம்மாவை நீ பார்த்துப்பேன்னு நான் தைரியமா இருக்கேண்டா...” விம்மினார்.

அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் என் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று  நல்ல குடும்பமாய் பார்த்து கீதாவை எனக்கு கல்யாணம் செய்து வைத்தார். பேர குழந்தையும் பிறந்ததில் அப்பா கொஞ்சம் கவலை மறந்து போய் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அப்பா இருண்ட முகத்துடன் யோசனையுடன் உட்கார்ந்திருந்தார், நான் பக்கத்தில் உட்கார்ந்ததும், “ டேய் சிவா... அவனை பார்த்தேண்டா ரொம்ப இளைச்சி எலும்பும் தோலுமாய் அப்பா பசிக்குதுப்பா சாப்பிட்டு ரெண்டு நாளுச்சின்னு அழுதான்.. எனக்கு மனசு கேட்கலைடா மெல்ல ஹோட்டலுக்கு அழைச்சிகிட்டு போய் சாப்பாடு வாங்கி குடுத்து விசாரிச்சேன்...

அவன் கட்டிக்கிட்டவ ரொம்ப மோசமானவடா பணம் பணம்னு இவனை உலுக்கியிருக்கா... கட்டிட வேலை.. மெக்கானிக் வேலைன்னு எவ்வளவோ பார்த்திருக்கான்... இப்ப  செங்கல் லாரி லோடு ஓட்டறானாம்... அங்க ஸ்கூல் பக்கத்து கட்டிடத்தில் லாரி நின்னப்பத்தான் என்னை வந்து பார்த்தான்.

அதற்கு பிறகு அவன் அப்பாவை அடிக்கடி ஸ்கூலில் சென்று பார்ப்பதும்.. கண்ணீர் வடித்து ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கி கொண்டு போவதாய் அம்மா சொன்னாள். பெத்த மனம் பித்து... உடன் பிறந்தவன் தானே.. நானும் அப்பாவிடம் எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

என்னையும் வழியில் பார்த்து அவன் கதையெல்லாம் சொன்னான்.. அவன் மகளுக்கு பிறந்த  நாளுக்கு புது துணி வாங்க கூட காசில்லை... மனைவிக்கு உடம்பு சரியில்லை.. என்று அடிக்கடி ஏதாவது சொல்லி வாங்கி கொண்டு போனான். அவன் சொல்வது பொய்தான் என்று தெரிந்தாலும் பெரியவனாக பிறந்து விட்டான் என்று மன்னித்து கொண்டிருந்தேன்.

அப்பா ரிடையர்டு ஆனவுடன், “ சிவா என்ன இருந்தாலும் அவனும் எனக்கு மகன் தாண்டா.. இந்த பணத்தை வச்சி சின்னதா ஒரு வீட்டை கட்டி அவனை தனியா வச்சிடலாம்.. இங்கேயே ஒரு வேலை பார்க்கட்டும். அவன் எங்கோ கஷ்டப்படறதை பார்க்க சகிக்கலைடா...”

மட மடவென்று வீடு தயாராகி மனைவி, மகளுடன் வந்து விட்டான். அப்பா சேர்த்து கொண்ட தைரியத்தில் அடிக்கடி வேலைக்கு போகாமல் அப்பாவிடமே காசு கேட்டுக்கொண்டிருந்தான்.

“ மல்லிகா எனக்கு சிவாவை பத்தி கவலை இல்ல... படிச்சி அவன் கால்ல நின்னுட்டான்..  என் காலத்துக்கு அப்புறம் இந்த சரவணன் என்ன பண்ண போறான்.. நாளைக்கு சாப்பாட்டுக்கே திண்டாடுவானே?..”

சரவணனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் இரவு, பகல் பார்க்காமல் உழைக்க ஆரம்பித்தார்.  காலை , மாலை என்று ஓயாமல் ட்யூஷன் எடுத்தார். அதோடு பென்ஷன் பணம் என்று சேமித்து சரவணனுக்கு இன்னும் இரண்டு வீடுகளை கட்டி அவனுக்கு வாடகை வரும் படி செய்ததும்தான் கொஞ்சம் நிம்மதியானார்.

“ மல்லிகா இந்த பய நாளைக்கு வேலைக்கு போகாட்டி கூட எதோ பசியை ஆத்திக்கற மாதிரி ஒரு வழி பண்ணிட்டேன்... இன்னும் ஒரே வேலை பாக்கி இருக்கு... என்ன பாவமோ அவன் ஒரு பெண்ணை வேற பெத்து வச்சிருக்கான்... அது கல்யாணத்துக்கு கொஞ்சம் சேமிச்சி வச்சிட்டா நான் வீட்லயே உட்கார்ந்துடுவேன்...”

அப்பா ஓய்வு பெற்றும் ஓயாமல் ஓடி கொண்டிருந்தது எனக்கு வருத்தமாயிருந்தது. அவர் உடல் நிலையில் அக்கறை காட்டி கொள்ளாமல் போய் கொண்டிருந்ததால் வர வர ஓடாய் தேய்ந்து மூச்சிறைத்து கொண்டிருந்தார்.

“ அப்பா...  நீங்க இப்படி உடம்ப கவனிக்காம ஓடிட்டிருக்கிறது கவலையா இருக்கு... எனக்கு நீங்க வேணும்பா... இப்பல்லாம் அதிகமா மூச்சிறைக்குது உங்களுக்கு... ஆஸ்பிட்டலுக்கு போய் பார்த்துக்கலாம்பா...”

“ சிவா.. அதெல்லாம் கவலைப்படாத.. வயசானா அப்படித்தான்... இன்னும் என்னால அஞ்சு வருஷத்துக்கு உழைக்க முடியும்... அதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் என்னால என்னன்ன பண்ணமுடியுமோ அத பண்ணிடறேன்... 

அப்பாவின் இரத்தமும், வியர்வையும்... செங்கல்லும், சிமெண்ட்டுமாய் கட்டிடமாகியது. காலம் என்ன நினைத்ததோ அவருக்கு நிரந்தர ஒய்வை கொடுத்து எங்களை கண்ணீரில் ஆழ்த்தியது.  நெஞ்சு வலி என்றவர் ஆஸ்பிட்டலுக்கு சென்றும் பலனில்லாமல் போய்விட்டார்.

ஒரு சமயம் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது, “ சிவா வயசாயிட்டா.. என்னால் நடமாடமுடியாத பட்சம் இருந்து என்ன பிரயோசனம்? ஒரு சமயம் என் நினைவு தப்பி எதாவது ஆகிடுச்சுன்னா கூட ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போய் லட்சக்கணக்குல செலவு பண்ணி வீண் பண்ணிடாதே... “

இறப்பிலும் கூட தன் பிள்ளைகளுக்கு சேமிக்க வேண்டும் என்று நினைக்கும் இப்படி ஒரு அப்பாவா...?

ஆயிற்று அம்மாவை கண் கொண்டு பார்க்க முடியவில்லை...” டேய்... அப்பா உங்களுக்காகவே வாழ்ந்தார்டா... எனக்கு துணையா இருக்கனும்னு நினைச்சு பார்க்கலையே...?”

அப்பா வளைய வளைய வந்த வீடு வெறிச்சோடி இருந்தது. ஆயிற்று பதினொராம் நாள் காரியங்கள் முடிந்ததும் காத்திருந்தவன் போல் சரவணன் பேச ஆரம்பித்தது நெருப்பை அள்ளி கொட்டியது போலிருந்தது..

“ மாமா... இந்த வீட்டுக்கு இப்ப நீங்கதான் பெரியவங்க.. அப்பா போயாச்சி.. இருக்கிற சொத்தை எனக்கு பிரிச்சி கொடுத்திட்டா நான் போயிட்டே இருப்பேன்...”

“டேய்... என்னடாது இது... அப்பா போய் பத்து நாளாச்சு அதுக்குள்ள சொத்து பத்தி பேசறே... பாவி பயலே.. உன்னை பத்தி கவலைப்பட்டே அவர் செத்து போனார்... என்னிக்காச்சும் அப்பான்னு அவருக்கு எந்த கடமையாவது செஞ்சிருக்கியா...?” மல்லிகா அரற்றி அழுது கொண்டிருந்தாள்.

“ மாமா அவன் கேட்கறதை கொடுத்திருங்க.. இனி யார்கிட்ட கையேந்த போறான்... அவனை பொறுத்த வரை அப்பா பணம் காய்ச்சி மரமாத்தான் இருக்கார்.. சரவணா... அந்த மரம் மண்ணுக்குள்ள போய்ட்ட பிறகும்  திருந்தலைன்னா... நீ மனுஷனே இல்லடா...”

சரவணன் சொத்து மதிப்பை கணக்கு போட்டு போட்டுக்கொண்டிருந்தான்... எனக்கு அப்பா கைபிடித்து முதலில் சிலேட்டில் ஒன்று... இரண்டு எழுத சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.. அப்பா... அப்பா... நீ சுகமா இருந்ததையே நான் பார்க்கலையேப்பா... ?

அப்பா புகைப்படத்தில் பணம் காய்க்கும் மரமாய் சிரித்து கொண்டே பார்த்து கொண்டிருந்தார்.
*****************


(   இது வெறும் கதை மட்டுமல்ல... பல குடும்பங்களில் காண நேரிடுகின்ற நிகழ்வுகள்... !  )
நான் அலுவலகம் செல்லும் போது தினமும் பள்ளிக்கு போகும் அந்த இரண்டு சிறுவர்களை பார்க்கிறேன்...  பெரியவன் எட்டாவது படிக்கலாம்... அவன் தம்பி ஐந்தாம் வகுப்பு இருக்கலாம்...! பெரியவன் முதுகில் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு  ஊனமுற்ற அவன் தம்பியை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து தள்ளிக்கொண்டு தினமும் பள்ளிக்கு அழைத்து போகிறான்.  இந்த காட்சி என்னை மனம் நெகிழ வைக்கும்... வளரும் வரை சகோதர பாசங்களில் பணம் குறுக்கீடு செய்வதில்லை. வளர்ந்த பிறகுதான்  எனக்கு, உனக்கு என்று பணம் அவர்களை பிரித்து பார்க்கிறது.