Thursday 13 November 2014

பாதைகள்..........!


சீனு பரபரப்பாய் அலுவலக வேலையில் மூழ்கியிருந்த போது செல்போன் சிணுங்கியது.. டிஸ்ப்ளேயில் பிரதாப்..

“ ஹலோ  சீனு ... என்ன பிஸியா? நம்ம சூரி செத்துப்போயிட்டான்பா.. வினோத் இப்பத்தான் போன் பண்ணான்.. ஒரே ஊர்ல இருக்கோம்.. கேள்விப்பட்டுட்டு எப்படி.. போகலாமா?

ஒரு நிமிடம் அதிர்வை சுமந்து, “ என்ன ஆச்சி திடிர்னு.. சரி நான்  ஜீவாவுக்கும் போன் பண்ணிடறேன்  ஒன் அவர் கழிச்சி கிளம்பலாம்..”

“ அதான் அவனைப்பத்தி தெரியுமே குடிச்சி குடிச்சி உடம்பு மொத்தம் ஸ்பாயில் ஆயிடுச்சு….. பாவம் அவன் பொண்டாட்டி இரண்டு பசங்க வேற…”

இந்த முப்பத்தெட்டு வயதில் என்ன மரணம் வந்து விட்டது.. சூரியை நினைக்கும் போது அவன் ஏன் இப்படியே வாழ்ந்துட்டு போய்விட்டானென்று வருத்தமாகவும் கோபமாகவும் வந்தது... சிலர் திருந்தும் போது வாழ்க்கை ஓடிவிட்டிருக்கும்... ஆனா சூரி திருந்தாமலே வாழ்க்கையை முடித்துவிட்டான்  என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

ப்ளஸ் டூ முடித்த பிறகு இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்த போதுதான் ஹாஸ்டலில் நான், சூரி, வினோ, ஜீவா  நாலு பேரும் ரூம் மேட்ஸாக இருந்தோம். சூரியைத்தவிர நாங்க மூணு பேரும் வீட்டு கஷ்டம் தெரிந்து  படிப்பே கதி என்று இருப்போம்..  சூரியும் அப்படி ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை... அவன் பிறந்த போதே அப்பா இறந்து விட்டாராம்.. அவனுக்கு முன்னாடி ஒரு அண்ணன், அக்கா.. எல்லோரையும் அவன் அம்மாதான் கஷ்டப்பட்டு வேலைக்கு போய் படிக்க வைத்தாள்..  ஹாஸ்டலுக்கு வரும்போதெல்லாம் எங்களிடம் 
சொல்லிவிட்டு போவாள்,

“ தம்பி...  நீங்களும் என் புள்ளைங்க மாதிரிதான்... எப்படியோ அவங்க இரண்டு பேரும் ஒழுங்கா ஆளாயிட்டாங்க...இவன் சின்னப்புள்ளைலர்ந்து சகவாசம் சரியில்லை... எவ்வளவோ புத்திமதி சொல்லியும் ஒழுங்கா படிக்கலை... இந்த சீட் வாங்கவே யார் யாரோ காலிலோ விழுந்து சேர்த்திருக்கேன்... கிட்டருந்து கொஞ்சம் பார்த்துக்கங்கப்பா.. படிச்சி பாசாயி ஒரு வேலைக்கு போயி அவன் வாழ்க்கைய பார்த்துக்கிட்டான்னா அதுக்கப்பறம் என் உசிரைப்பத்தி கவலை இல்ல...”

அந்த தாயின் கண்களில் இருந்த சோகம் சாப்பிடும் போது தொண்டைக்குள் சிக்கும். ஆனால் சூரி உணர்வதாக இல்லை...அடிக்கடி வகுப்பை கட் அடித்து விட்டு சினிமா சுற்றுவதும் 

 நண்பர்களுடன் தண்ணியடிப்பதுமாக இருந்தான்.

“ மச்சி... நீ ரொம்ப தப்பு பண்றே.. ஒழுங்கா க்ளாசுக்கு வா.. உங்கம்மா எவ்வளவு கஷ்டபடறாங்க ஏண்டா நீ இப்படி இருக்கே..?” நாங்கள் திட்டுவது அவன் காதில் விழாது...

“ விட்றா.. நான் பொறந்தப்பவே எங்கப்பனை முழுங்கிட்டேன்.. படிச்சி என்னத்தை பண்ணப்போறேன்...”  அலட்சியம் கலந்து வெறுப்போடு சொல்லிவிட்டு வெளியில் போய்விடுவான்... தண்ணியடித்துவிட்டு வாசனை தெரியாமல் இருக்க பாக்கை போட்டுக்கொண்டு ஒன்றும் தெரியாதவனாக வருவான். அவன் பேச்சில் மட்டும் பெரிய யோக்கியத்தனம் காட்டிக்கொள்வான்..

“ மச்சி... இத முடிச்சிட்டு.... அந்த கோர்ஸை முடிச்சோம்னு வச்சிக்க டக்குன்னு பாரின் போயிடலாம் அப்புறம் ஆறே மாசத்துல பெரிய பணக்காரனாயிடலாம்டா...”

“ பெரிய இவனாட்டாம்... வாயில வண்டி ஓட்டிட்டிருக்காத.. ஒழுங்கா அரியர் இல்லாம் பாஸ் பண்ற வழியை பாருடான்னா...பாரின் போறதை பத்தி சொல்லிட்டிருக்கான்...” வினோ கத்துவான்.

மூன்று  வருடங்களில் பத்து அரியர்ஸ் வைத்திருந்தான்... நாங்களும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் திருந்துவதாக இல்லை.. இதில் யாரோ ஒரு பெண்ணை காதலித்து சுற்றிக்கொண்டிருந்தான்.. இவனைப்பற்றி தெரிந்ததும் அவள் காதலை முறித்துக்கொண்டாள் என்று வெறித்தனமாய் கத்தினான்..

“ சீனு நான் அவளை சும்மா விடப்போறதில்லைடா... பிடிக்கலைன்னா முதல்லயே சொல்ல வேண்டியதுதானேடா... பிடிச்சிருக்குன்னு இத்தனை நாளா பேசிட்டு இப்ப போனைகூட எடுக்க மாட்டேன்றா... அவ இருக்க ஹாஸ்டல் பூரா போஸ்டர் அடிச்சு அவ மானத்தை வாங்கினாத்தான் அவ இன்னொருத்தன் கூட சுத்தமாட்டா...”

எங்களுக்கு அந்தப்பெண்ணை நினைக்கும்போது பாவமாகத்தான் இருந்தது... ஆரம்பத்தில் இவன் ஆளையும் பேச்சையும் பார்த்துதான் அவன் வசப்பட்டுவிட்டிருக்கிறாள்... போக போக அவன் போக்கை தெரிந்து கொள்ளவும்தான் மனசொடிந்து போய் விலகியிருக்கிறாள்... நாங்கள் எப்படியோ அவனை சமாதானப்படுத்தி அந்தப்பெண்ணை காப்பாற்றினோம்.

கல்லூரி முடிந்து கேம்பஸில் நாங்க மூணுபேருமே செலக்ட் ஆகி நல்ல வேலைக்கு போய்விட்டோம்.. சூரி மட்டும் அரியர் முடிக்காமல் காலேஜை விட்டுப் போனான்.

அதற்கு பிறகு எப்போதாவது அவன் வீட்டுக்கு போன் பண்ணி பேசும் போதெல்லாம் அவன் அம்மாதான் பேசுவாள்... சூரி முன்னைக்கு இப்ப இன்னமும் கெட்டு போயிருக்கானென்று... எப்போதும் நாலைந்து பேரோடு ஊர் சுத்திக்கொண்டும் குடியுமாக இருக்கிறானென்றும் கொஞ்சம் அறிவுரை சொல்லி அரியரை முடிக்க சொல்லி சொல்வாள்.

“ சூரி உங்க அக்காவையும் அண்ணனையும் பாருடா லைப்ல செட்டிலாயிட்டாங்க... நீதான் வேஸ்ட் இன்னமும் இப்படி இருந்தா எதிர்காலம் என்னாகறது எப்படியாவது அரியரை முடிச்சி வேலைக்கு போயிடுடா...”

அப்போதைக்கு கேட்பவன் போல் தலையாட்டி அரியரை எழுதாமலே விட்டான். அவனுக்கு கடை வைத்து கொடுத்து கல்யாணத்துக்கு பிறகாவது திருந்துவானா என்று அவன் அம்மா பெண் பார்த்தாள்... அவன் திருமணத்துக்கு போயிருந்ததோடு சரி. அடுத்து  நாங்க மூணு பேருமே வேலை, கல்யாணம் என்று முடிந்து சென்னையில் செட்டில் ஆகி காலம் ஓடிட்டிருந்தப்ப, சூரியும் இங்கதான் இருப்பதாய் போன மாதம் வினோ போன் செய்திருந்தான்,

“ மாம்ஸ்.. சூரி இங்கதாண்டா இருக்கான்... ஒரு நாள் வண்டலூர் போறப்ப பார்த்தேன்.... அடையாளமே தெரியலை... பக்கத்துலதான் வீடுன்னு கூட்டிட்டு போனான்.. அவன் அம்மா செத்து போயிட்ட பிறகு இவனுக்கு வருமானமே இல்லை... ஒழுங்கா வேலைக்கும் போறதில்ல போலிருக்கு... எதோ ஒரு ஒண்டு குடித்தனத்துல அவன் பொண்டாட்டி கார்மெண்ட் கம்பெனிக்கு வேலை போறாங்க.. பெரிய பையனுக்கு பதினொரு வயசாவுது...  நாலு வயசு பொண்ணு வேற இருக்கு..”

அதற்கு பிறகு வினோவை அடிக்கடி சந்தித்து பெண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை, பிள்ளைக்கு அடி பட்டிருக்கு என்று ஆயிரம் ஐனூறு என்று கடன் கேட்டிருக்கிறான்.

“சீனு தப்பித்தவறி அவனை பார்த்தாக்கூட உன் நெம்பரையும் அட்ரசையும் சொல்லிடாத... பொய் சொல்லி எங்க எல்லார்ட்டயும் கடன் வாங்கி குடிச்சிட்டிருக்கான்.. “ என்று ஜீவா சொன்ன போது  நான் சூரியை சந்தித்து விடக்கூடாதென்றே நினைத்துக்கொண்டேன்.

இப்போது கடைசியாக அவனை பார்க்கும் படி போய்விட்டது. “ ஜீவா ..சூரி செத்து போயிட்டானாம் நாம எல்லாம் அவங்க வீட்டுக்கு போய் வொய்ப்புக்கு ஆறுதல் சொல்லிட்டு வருவோமாப்பா...?”

 மூணு பேரும் கிளம்பினோம்...

“இவனுக்கெல்லாம் கல்யாணம் பண்ணியே இருக்க கூடாதுடா.. பாவம் அந்த பொண்ணு இரண்டு பசங்களை வச்சிக்கிட்டு காலம் பூரா கஷ்டப்படனும்...” ஜீவா புலம்பிக்கொண்டே வந்தான்.

****
சூரி மனைவியின் ஒன்றிரண்டு சொந்தங்களை தவிர அங்கே உதவிக்கு கூட ஆள் இல்லை... குடித்து அக்கம் பக்கமெல்லாம் தகறாறு செய்கிறானென்று யாரும் அவன் குடும்பத்தை அண்டி பழகக்காணோம்.

வைதேகி எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்... பாவம் இத்தனை நாள் இவனுடன் எவ்வளவு பட்டிருப்பாளோ?

அந்த சின்னப்பெண் நடந்தது தெரியாமல் சொப்பு வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். பையன் மட்டும் வந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“ அங்கிள் எங்கப்பா எங்களை எப்ப பாரு காசு கேட்டு அடிச்சிட்டிருப்பாரு...  நான் பேப்பர் போட்டு வாங்கிட்டு வர்ற காசைக்கூட பிடுங்கி குடிக்க போயிடுவாரு... ஒவ்வொரு நாளைக்கு என்னையே வாங்கிட்டு வர சொல்லி அனுப்புவாரு...  நான் போகலைன்னா வீட்ல இருக்க சாப்பாடை எடுத்துட்டு போய் சாக்கடையில் கொட்டிடுவாரு.. ஸ்கூல்ல எல்லாரும் குடிகாரன் பையன்னு என்னைய கேலி பண்ணும் போது அழுகையா வரும்.. அப்பா வேணாம் அங்கிள்.. நானே நல்லா படிச்சி எங்கம்மாவையும் தங்கச்சியையும் காப்பாத்துவேன்...”

ஆயிற்று... சூரி மண்ணுக்குள் புதைந்து போனான்... எல்லாம் முடிந்து திரும்பும் போது அவன் பையன் கேட்டான்..

“ அங்கிள்.. அப்பா எந்திரிச்சி வந்துரமாட்டாரே..? 
                           

                                         ***


( இந்த சிறுகதைக்கு கரு எழில் அவர்களிடம் பேசும் போது கிடைத்தது...  எழில் அவர்களுக்கு நன்றி!)