Friday 27 September 2013

நட்சத்திர பிம்பங்கள்....


இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை என்றாலும் மகள் பிடிவாதம் பிடித்ததால் சம்மதித்து விட்டார்.

மனதுக்கு பிடித்தமானவருடன் வாழ்வது எவ்வளவு இனிமையானது. இளந்தமிழ் எவ்வளவு பெரிய எழுத்தாளர்… தான் அவரின் வாழ்க்கையில் இருப்பது எவ்வளவு அதிர்ஷ்டம் என நினைத்தாள்.  கல்லூரி இலக்கிய விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த போதுதான் இளந்தமிழை சந்திக்க முடிந்தது. கவிதை போட்டியில் பரிசு பெற்றிருந்த காவ்யாவை வெகுவாக பாராட்டினான். அடிக்கடி பேசிக்கொண்டார்கள். நட்பு காதலாகி இன்று அவள் கண்ட கனவு பலிக்க போகிறது.

ஒரே மகள் என்பதால் வெகு விமரிசையாகத்தான் திருமண ஏற்பாடு செய்திருந்தார் காவ்யாவின் தந்தை பத்ரினாத். பிரபலங்கள் பலரும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தினார்கள். “ ஹேய்.. நீ ரொம்ப கொடுத்து வச்சவடி… “ தோழிகளின் பேச்சில் கொஞ்சம் பொறாமையும் கலந்திருந்தது.

ஊட்டிக்கு ஹனிமூன்சென்றிருந்தார்கள்.“ இந்த பிங்க்  நிற பூக்கள் கொள்ளை அழகு இல்ல..?”

“ ம்ஹூம்.. இந்த பூக்கள் எல்லாம் சோகமா தெரியற மாதிரி இருக்கு  காவ்யா…

“ ம்.. ஏனாம்..?

“ மொழி பேசும் இந்த பூவை பார்த்த பொறாமையிலதான்…” அவள் கன்னங்களை கிள்ளினான். “ காவ்யா இந்த வெளிர் நீல புடவையில  தேவதை மாதிரி இருக்க…”

“ ஆமா அதென்ன தேவதை… தேவதையை பார்த்திருக்கிங்களா…?”

“ தேவதை எப்படி இருக்கும்னு ஒரு பெண்ணை பார்த்து தோணும் போது அதுதான் தேவதையா இருக்கமுடியும்…காவ்யா”

“ அது சரி தமிழ்..   வார்த்தைகளை வச்சி விளையாட  உங்களுக்கு சொல்லியா தரனும்.. அதான் என்னையும் சேர்த்து  நிறைய வாசகர்களை கட்டிப்போட்டுட்டிங்களே...?”

“ வார்த்தைகள், நிகழ்வுகள் இந்த பிரபஞ்சத்துக்குள்ள அடங்கறதுதானே.. காவ்யா..நான் இந்த உலகத்தின் ஒவ்வொரு அசைவையும் வாசிச்சிட்டிருக்கேன்.. அப்படியே ரசனை கலந்து கற்பனையா எழுதும் போது வெற்றி கிடைச்சிருது…”

“ அதுக்காக “ சொல்லாததும் காதல்”.. தொடர்ல நாம காதலிச்ச விஷயங்களை அப்படியே எழுதிடறதா அது நமக்கு மட்டுமான ரசனையா நான் நினைக்கிறேன்…”

“ கற்பனையை விட நிஜத்தில் காதல் எவ்வளவு அழகானதுன்னு உணர்ந்து எழுதும் போது ஜீவனோடு ரொம்ப  ஹிட்டாயிடுச்சி காவ்யா…டைரக்டர் சோலைராஜா படத்திற்கு கதை எழுதவும் வாய்ப்பு கிடைச்சிருக்கு… “

“ தமிழ் என்னால் முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு ஸப்போர்ட்டா இருப்பேன்…”

“ அது போதும் காவ்யா..”  அணைத்து மென்மையாக இதழ்களை பதித்தான்.  நான்கு நாட்களும் உலகமே தன் காலடியில் இருப்பது போல்தான் சந்தோஷத்தில் மிதந்தாள் காவ்யா.

“காவ்யா..  இன்னும் ஒரு வாரம் இங்கயே இருந்து ஊருக்கு போகலாம்..” என்றான். மறு நாள் அவள் எழுந்த போது.. குளித்து வெளியில் கிளம்பி விட்டிருந்தான். ஒரு காகிதத்தில், “ நல்லா ரெஸ்ட் எடு  நான் வர நேரமாகும்.. காத்திருக்காமல் சாப்பிடு “என்று எழுதி வைத்திருந்தான்.

அப்படி என்ன எழுப்பி சொல்லாமல் கூட எங்கே கிளம்பிவிட்டான்… கோபம் வந்தது..மொபைலை எடுத்து அழுத்தினாள், “ ஏன் சொல்லாம கூட.. அப்படி என்ன வேலை…?”

“ காவ்யா அதான் எழுதி வைத்திருந்தேனே… நான் எழுத போற சப்ஜெக்ட் ..மலை ஜாதி பெண்ணோட காதல் அதுக்காக, ஸ்டடி பண்ண மலை ஜாதி மக்கள் இருக்கிற பகுதியில இருக்கேன்..  இப்ப நல்ல மூடில் இருக்கிறேன்.. இரண்டு பத்தி எழுதினதுக்குள்ள நீ என்னை டிஸ்ட்டர்ப் பண்ணிட்டே…  சரி நீ சாப்பிட்டு தூங்கு எதாவது எமர்ஜென்ஸின்னா மட்டும் மெசேஜ் பண்ணு …”  அவசரமாய் கட் பண்ணினான்.

ஊர் திரும்பியதும் அவன் கவனம் முழுக்க எழுதுவதிலும்,  அலுவலக அறையில் உட்கார்ந்து போன் பேசுவதிலுமே இருந்தது. எட்டு படங்களுக்கு மேல் கதை, வசனம் வாய்ப்பு கிடைத்திருந்தது.

ஒரே வீட்டில் இருந்தாலும் அவள் என்னவோ தனி தீவில் இருப்பது போல் உணர்ந்தாள். அவன் தனி அறையில் இரவு இரண்டு மணி வரை எழுதிகொண்டே இருப்பான். எப்போது தூங்க வருவான் என்பதே தெரியாது. மணி இரவு பதினொன்று கடிகாரம் ஆக்ரோஷமாய் சத்தம் போட்டது. 

“காவ்யா” மெதுவாக காதில் கிசு கிசுத்தான்.
  
 “ ம்.. என்ன.. ?”

“ தூங்கிட்டியா..? மெல்ல அவளை அணைத்தான். அரை மணி நேரம் கழித்து அணைப்பிலிருந்து விலகி அவசரமாய் எழுந்தான். “ எங்க போறீங்க...?”

“ இல்ல காவ்யா எழுதிகிட்டே இருந்தேன்.. நடுவில் மூடு-அவுட். அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சிடனும்.. “ எதிர் அறையில் முதுகு காட்டி உட்கார்ந்து கொண்டு பேப்பர்களில் மூழ்கி போனான். ஈருயிர் ஓருயிராய் இணையும் தாம்பத்யம் இவனுக்கு ரிலாக்ஸா..? காவ்யாவிற்கு அழுகையாக வந்தது.
இரண்டு மாதம் ஓடிவிட்டிருந்தது,

“ தமிழ்… குட் நியூஸ்… மார்னிங் டாக்டரை பார்த்திட்டு .. அப்படியே எங்க வீட்டுக்கு போய் நீங்க அப்பா ஆகப்போற விஷயத்தை சொல்லிட்டு வந்திடலாம்….?” தமிழின் தோள்களில் பரிவாய் சாய்ந்தவளை நிறுத்தி,

“ ஏய்..  நிஜமாவா… கொஞ்சம் தள்ளி போட்டிருக்கலாமோ.. சரி.. நீயே போய்ட்டு வந்துடேன்..”

“ ம்ஹூம்..  நாம சேர்ந்துதான் போகனும்..”

டாக்டரை பார்த்து விட்டு காவ்யா வீட்டிற்கு சென்றிருந்தார்கள். அம்மா ஓடி ஓடி காவ்யாவிற்கு பிடித்ததெல்லாம் செய்தாள். தழிழ் எதிலும் ஆர்வமில்லாதது போல் எதோ யோசனையில் இருந்தான்.

இரவு பத்து மணிக்கு வந்தார்கள். களைப்பாக இருந்ததால் காவ்யா தூங்கிவிட்டாள். மறு நாள் காலையில்,

“ தமிழ் நேத்து ஏன் அப்படி எதிலும் ஒட்டாம அப்படி உம்முனு இருந்தீங்க.. அப்பாவுக்கு கஷ்டமாயிடுச்சி தெரியுமா?  நீ சந்தோஷமா இருக்கியாம்மான்னு கேட்டார்”

  எல்லாம் உன்னால்தான் காவ்யா.. இமயவரம்பன் நேத்திக்கு போன் பண்ணி வரச்சொல்லியிருந்தார். நீ  பிடிவாதம் பிடிச்சு கூப்பிடவே அவருக்கு நாளைக்கு வர்றதா சொல்லியிருந்தேன். அத தப்பா எடுத்துகிட்டு கொஞ்ச படம் கையில் கிடைச்சவுடன் கர்வம் வந்துடுச்சின்னு.. அவனை வர வேணான்னு சொல்லுன்னு சொல்லியிருக்கார்.. ஒரு படம் கையை விட்டு போயிடுச்சி..  நல்ல அமௌண்ட் கிடைக்காம போயிருச்சு...” வார்த்தைகளில் வெறுப்பு தட்டியது தெரிந்தது.

தமிழ் விரைவிலேயே உச்சத்தை தொட்டு கொண்டிருந்தான். வீட்டில் இருப்பதே அரிதாகி விட்டது. வீட்டில் இருந்தாலும் தனி அறையில் கதை டிஸ்கஷனிலேயே இருந்தான். அவன் வைத்திருக்கும் கதைகளை படித்து விட்டு இவள் இப்படி மாற்றினால் நல்லாயிருக்கும் என்று ஆலோசனைகள் சொன்னால் எரிந்து விழுந்தான்..” இதப்பாரு காவ்யா.. எனக்கே  யோசனை சொல்ற அளவுக்கு உன்னை புத்திசாலியா நினைச்சிக்காத..  அடுப்படியோட நிறுத்திக்க.. போரடிச்சா காரை எடுத்துகிட்டு ஷாப்பிங் போ...”

ஒரு வருடம் எப்படியோ ஓடிவிட்டது.. அன்றைக்கு திருமண நாள் என்பதை கூட மறந்து விட்டிருந்தான். இவள் நினைவு படுத்தியவுடன் ஷோரூமுக்கு போன் செய்து புடவையும், நகையும் ஆர்டர் செய்தான். காவ்யா நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்தாள் அடுத்த  வாரத்தில் குழந்தை பிறக்கும் என தேதி கொடுத்திருந்தார்கள்.. “ இங்க பாரு காவ்யா பிரசவம்னு நீ அம்மா வீட்டுக்கு போறதெல்லாம் எனக்கு பிடிக்கலை.. இங்க கூப்பிட்ட குரலுக்கு நாலு வேலைக்காரங்க நிப்பாங்க.. வேணும்னா உங்க அம்மா இங்க வந்து பார்த்துட்டு போகட்டும்..”

“என்னங்க கோயிலுக்கு போய்ட்டு வரலாங்க... இன்னிக்கு மட்டுமாவது  நாம சேர்ந்து வெளியில் போக கூடாதா?”
“ காவ்யா எனக்கு எவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருக்குன்னு உனக்கு தெரியாதா... ஏன் சாதாரண ஜனங்களை மாதிரியே யோசிக்கிற.. கல்யாண நாளுக்கு ஒண்ணா கோயிலுக்கு போய்ட்டு வந்தாத்தான் சந்தோஷம்னு ஏன் நினைக்கிற? உம் புருஷன் என்ன எட்டு மணி நேரம் ஆபிசில் உட்கார்ந்துட்டு அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்துடற ஆபிஸ் கிளார்க்குன்னா நினைச்சிகிட்ட.. என்னை சுத்தி எத்தன பேரு.. ஒவ்வொரு நாளும் லட்சத்துல கொண்டாடற இடம்.. எனக்கு டயத்தை வேஸ்ட் பண்றதே பிடிக்காது. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னை தொந்தரவு பண்ணாதே...”

பிரசவ தேதி  நெருங்க.. நெருங்க களைப்பு அதிகமாக இருந்தது. இடுப்பு வலியில் காலை நீட்டி படுத்து கொண்டிருந்தாள். “ என்ன காவிம்மா... ரொம்ப வலிக்குதா? சேலையை விலக்கி அவள் வயிற்றில் மெல்ல தடவி என்ன சொல்றான் நம்ம பையன்..?” காதை வைத்து கேட்டு சிரித்தான்.
 இந்த சமயத்தில் கணவனின் அன்பும்,ஆதரவும் பெண்களை எத்தனை சந்தோஷத்தில் தூக்கி வைக்கிறது.. களைப்பை மறந்து அவள் முகம் பிரகாசமாய் ஒளிர்ந்து ,” வெளியில் வந்து உங்களை பார்க்கனும்னு உதைச்சிட்டே இருக்கு...” அவன் கைகளை இறுக்கி பிடித்து முத்தமிட்டாள். 

கொஞ்ச நேரம் அவள் முகத்தின் மாறுதல்களையும், செயல்களையும் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன்...” என் கதா நாயகிக்கு பிரசவ நேரம்.. அவளோட ரியாக்ஷன் எப்படி எழுதனும்னு நினைச்சேன்.. எக்ஸலண்ட் காவ்யா. ஒரே நிமிஷத்தில் இருண்ட வானம் வெளுத்து கதிரவன் பிரகாசமா ஒளி தர்ற மாதிரி நான் பரிவா பேசினதும் உன் முகம் அப்படி மாறுச்சு...”  அறைக்குள் எழுத போய்விட்டான்.

வலி எடுத்து அவளே அம்மாவிற்கு போன் செய்து ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருந்தாள். குழந்தை பிறந்த செய்தி கேட்டுதான் வந்து பார்த்தான். ஆண் குழந்தை பிறந்ததில் சந்தோஷம் என்றான். அவன் வட்டங்களுக்கு இனிப்பு தந்து ஆரவாரமாய் கொண்டாடினான்.

அத்தி பூத்தாற் போல் எப்போதாவது குழந்தையை தூக்குவான். அது பழக்கமில்லாத முகத்தினை பார்த்து அழ ஆரம்பித்துவிடும். குழந்தைக்கு எல்லாமாய் அவளே இருந்தாள். பிரபலத்தின் மனைவி என்ற அடையாளத்திற்கு தான் இழந்திருந்த ஆசைகள் மனதுக்குள் வருத்தி கொண்டுதானிருந்தது.

எதிர்பாராமல் அவள் அப்பா இறந்து விட்ட செய்தி வந்ததும் துடித்துதான் போனாள். குழந்தையை அழைத்து கொண்டு புறப்பட்டாள். தமிழுக்கு இரண்டு மூன்று முறை போன் செய்தும் எடுக்கவில்லை.. எங்காவது டிஸ்கஷனில் இருப்பான்.

மாலை வரை காத்திருந்தார்கள். மெசேஜ் அனுப்பியதும் போன் செய்தான்,
“ காவ்யா.. எனக்காக வெய்ட் பண்ண வேண்டாம் ஆகற காரியத்தை பாருங்க..நான் வந்தா மட்டுமென்ன உயிரோடவா வந்துட போறார்?  நான் வேலை முடிச்சிட்டு வர்றேன்.. “

ஒரே பெண் என்று அப்பா அவள் சந்தோஷத்திற்கு குறுக்கே நிற்காமல் அவள் திருமணத்தை தன் சக்திக்கு மீறிதான் அதிகமாக செலவு செய்தார். அவள் முகத்தில் சின்ன வாட்டத்தை கூட தாங்காதவர். “ அப்பா.. நான் இன்னிக்கு வாழ்க்கையில தோத்துட்ட மாதிரி இருக்குப்பா.. “ காவ்யாவிற்கு கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

எல்லாம் முடிந்து மூன்று நாள் கழித்து வந்தான். காவ்யாவை வீட்டிற்கு வரும்படி அழைத்தான். பதிலேதும் பேசாமல் வந்தாள்.

அன்று இரவு முழுதும் காவ்யாவிற்கு தூக்கமே வரவில்லை. சேர்த்து வைத்திருந்த அத்தனை ஆதங்கங்களையும் கண்ணீராக்கி தீர்த்தாள். எதோ தெளிவு வந்தது போலிருந்தது. மறு நாள் அவன் வெளியில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் அறை காலியாக இருந்தது. காவ்யாவின் டைரியை விரித்து அதன் மேல் வெய்ட் வைத்திருந்தாள்.

பிரபல கதாசிரியருக்கு,
மன்னிக்கவும். இந்த கடிதத்தை படிக்கும் நேரம் கூட உங்களுக்கு வேஸ்ட்டுனு தோணலாம். அந்தளவு உங்களுக்கு நேரம் முக்கியமானது... உங்களை சுற்றி நூற்றுகணக்கானோர் இருப்பார்கள். மனைவி, குழந்தையுடன் உறவாடும் நேரத்தில் லட்சகணக்கில் சம்பாதிக்கலாம் என்று நினைக்கும் உன்னதமானவர்.!
எனக்கும் இருந்த இலக்கிய ரசனைகளால்தான் உங்களை விரும்பினேன். அப்போது நீங்கள் சமூகத்தை தூக்கி நிறுத்தும் வலிமையோடுதான் பேனாவை எடுத்துகொண்டிருந்தீர்கள்... ஆனால் கல்யாணத்திற்கு பிறகுதான் தெரிந்து கொண்டேன் நீங்கள் எழுத்து வியாபாரியாக இருக்க விரும்புகிறீர்கள் என்று!
எனக்கான அடையாளம்தான் என்ன? எதோ ஒரு சேனலில் ‘என் வெற்றிக்கு காரணம் என் மனைவியின் ஒத்துழைப்பு..!’ என்று வெற்று வார்த்தைக்கு ஜிகினா பூசுவாய்.. அப்படி என்ன ஒத்துழைப்பு? விலை கொடுத்து வாங்கியவளை விட கேவலமாக நினைக்கும் உறவாக அல்லவா மனைவியை வைத்திருக்கிறீர்கள்? . உங்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் ஜடப்பொருளாகவும், சமூதாயத்தில் ஒரு குடும்ப அடையாளத்திற்காகவும் மட்டும் நான் இருக்கிறேன். இந்த உண்மையை நான் பொய்யாக ஏற்று ஏன் நடித்து கொண்டிருக்க வேண்டும்?
வெறும் அடையாளத்தை மட்டும் வைத்து கொண்டு  சுயத்தை இழந்து வாழ்வதில் என்ன பிரயோஜனம்?  போகட்டும்... ஒரு எழுத்தாளனுக்காக தியாகம் செய்வோம் என்று நினைத்தாலும் என் மனம் ஒப்பவில்லை...  எப்போது உங்கள் எழுத்து வியாபாரமாகிவிட்டதோ அப்போதிலிருந்து அது குப்பையாகிவிட்டது. சமூதாயத்திற்கு உங்கள் எழுத்துக்களினால் எந்த பிரயோஜனமுமில்லை.. சமுதாயத்திற்கும் உதவாத உங்களுக்காக நான் ஏன் என் உணர்வுகளை , ஆசைகளை தியாகம் செய்யவேண்டும்?
நான் போகிறேன். நிச்சயமாக கோழைத்தனமான முடிவை நோக்கி அல்ல.என் அப்பா கொடுத்த கல்வி இன்னமும் மிச்சமிருக்கிறது. என் அம்மாவை பார்த்து கொள்ளும் கடமை இருக்கிறது. என் குழந்தையோடு என் வாழ்க்கையை நானாக வாழப்போகிறேன்.
இந்த கடிதம் உங்களை பெரிதாக பாதிக்க போவதில்லை. இதையே திரித்து கதையாக்கி போய் கொண்டிருப்பீர்கள்.. ஏனென்றால் இழவு வீட்டில் கூட ‘ உணர்வை’ பார்க்காமல் ‘கதையை’ தேடி காசாக்கும் ஆள்தானே நீங்கள்..

*********************