Friday, 4 December 2015

இது ஒரு பாடம்............

இந்த இயற்கை சீற்றம் எப்படி இருக்க கூடாது என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறது.  நிவாரணப்பணிகளில் களத்தில் இறங்கும் போராடும் அனைத்து அன்பு உள்ளங்களும் மனித நேயத்தால் கண்கலங்க வைக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, நிவாரண பணிகளை பற்றி அரசியல் அரசுத்துறை சார்ந்தவர்கள் தங்களுக்கு சாதகமான கருத்துக்களை சொல்லி பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியை ஆக இருக்கும் தோழி ஒருவர் வாட்ஸ் ஆப் குரூப்பில் பின் வருமாறு கருத்தை கூறி இருந்தார்.....


" இந்த அரசு  ஊழியர்கள் ஒருத்தரும் வாங்குற 
சம்பளத்துக்கு வேலை செய்யறதில்லை.
 இதுல  சம்பளம்  பத்தாதுணு  ஸ்டிரைக் வேற ..!
யாருக்கும் பொறுப்பில்லை. 
எப்பவும் எதிலும் அலட்சியம். 
இவங்களிடம் இருப்பதை எல்லாம் பிடுங்கி, 
தனியார்கிட்ட கொடுத்துடணும் சார். 
அப்போதான் இந்த நாடு உருப்படும்...."

இந்த டயலாகை  அடிக்கடி  நீங்கள் மட்டுமல்ல 
பொது மக்கள்  அனைவரும் சொல்லக் கேட்டிருப்போம்.

இப்போது பெருமழை ஊழித் தாண்டவமாடுகிறது.
சொந்த வீடு பெருமை பேசியவர்கள் எல்லாம் 
வீதியில் நிற்கின்றனர்.

பள்ளிக்கூடங்கள் எல்லாம் அகதிகள் முகாமாக 
மாற்றப்பட்டுள்ளது.

அடுத்து என்ன...செய்வது ...? 
என்று மக்களுடன் அரசாங்கமும் திகைத்து நிற்கிறது.!

கருத்து சொன்ன கந்தசாமிகள் எல்லாம் பாதுகாப்பாக
 அவரவர் வீட்டில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள்  ......,

அவர்கள் பெரும் நம்பிக்கையைப் பெற்ற தனியார்  பண  முதலைகளான  டாடா, அம்பானி,
 அதானி எல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்க.....,

இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு, பொங்கி வரும்
 ஏரியில் குதித்து மதகுகளை சரி செய்யும் 
பொதுப்பணித்துறை ஊழியர்களும்...,

கொட்டும் மழையிலும், வெற்றுடம்புடன் 
சாக்கடையில் குதித்து, வெறுங்கையாலேயே அடைத்துக்கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளை 
வாரி வெளியே போடும் மாநகராட்சி ஊழியர்களும்....,

கீழே வெள்ளமும் மேலே மழையும் கொட்டிக் கொண்டு 
இருந்தும் எந்தப் பாதுகாப்புமின்றி துணிச்சலாக டிரான்ஸ்ஃபாரத்தில் ஏறி மின் தடங்களை சரி செய்து 
தரும் மின்வாரிய ஊழியர்களும்....,

தனியார்  பேருந்துகள்  எல்லாம்  நின்று விட ,
அரசு தந்த ஓட்டைப் பேருந்துகளின் உள்ளே,
 தன் தலைக்கு மேலே கொட்டும் நீரிலிருந்து தப்பிக்க 
தலையில் ப்ளாஸ்டிக் கவரை சுற்றிக் கொண்டு 
வெள்ளம் பாயும் ஓட்டைச் சாலைகளில் பேருந்துகளை 
இயக்கும் மாநகர போக்குவரத்து ஊழியர்களும்..,

எல்லாவற்றையும் அடித்துக் கொண்டுச் செல்லும் ஆற்று வெள்ளத்தில் துணிச்சலாக குதித்து, வீட்டில் வந்து சேரும் விஷப்பாம்புகளை வெறும்கையில் தூக்கி, ஆள் உயர தண்ணீரிலும் நீந்தி சென்று கடமையாற்றும் 
தீயணைப்புத்துறை வீரர்களும்... 
இன்ன பிற  அரசுத் துறை ஊழியர்களும் ..... இது எல்லாவற்றையும் விட கருணை கடவுளாக விளங்கும் 
காவல்  துறையினரும் ...... 

இப்போது கதியற்று திகைத்து நிற்கும் சாமானிய
 மக்களுடன் துணை நிற்கின்றனர். உதவுகின்றனர் .

இரவு, பகல் இல்லை. வீடு, மனைவி கவலை
 இல்லை. பசி, தூக்கம்,ஓய்வு இல்லை.

குறைந்த பட்சம் அருகில் இருந்து தட்டிக் கொடுக்க
எந்த அதிகார வர்க்கங்களும்  கூட இல்லை.

இருந்தும், உயிர்  பயமற்று  மிகத் துணிச்சலாக
மக்கள் பணியில் கடமையாற்றும்
 இந்த மாமனிதர்களை 
பாராட்டுங்கள் ..
வாழ்த்துங்கள் 

அரசியல்வாதிகள் வெள்ள நிவாரணத்தை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இவர்கள் ஏன் இப்படி?

உதவி செய்வது யாராக இருந்தாலும்  நன்றி கூறுவது நல்லது.

இவர் சொன்ன  கடைமை ஆற்றும் இந்த ஊழியர்கள் எல்லாம் அந்த பணியை செய்வதற்காகத்தானே இருக்கிறார்கள்..? அதற்காக தான் அவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது.

இவர்கள் பணி இத்தனை கடுமையாக இருக்கிறது என்று நினைத்தால் அழுக்கு படாமல் பணி புரியும் உங்கள் ஊதிய அளவை இவர்களுக்கு வழங்கிவிட்டு அவர்கள் பெறும் ஊதிய அளவை நீங்கள் வாங்கிக்கொள்ள தயாரா தோழி?

என் வீட்டு பக்கத்தில் ஒரு தோழி தொலைக்காட்சியை பார்த்து வெள்ளப்பாதிப்பின் மக்கள் படும் துயரங்களை கண்டு என்னால் முடிந்த சிறு உதவியேனும் செய்யவேண்டுமே என்று வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தார்..இன்றைக்கு முழு மூச்சாக இறங்கி அவர் வீட்டிலேயே 75 பேர் சாப்பிடும் அளவு புளியோதரை, சப்பாத்தி, சைட் டிஷ் என செய்து அவர் கணவரிடம் வேனில் கொடுத்து அனுப்பியுள்ளார். இத்தனைக்கும் அவர் அரசாங்க வேலையிலோ, வசதிமிக்க குடும்பமோ இல்லை.. மிகவும் நடுத்தரமான குடும்பம்தான். இவர் போன்று மனிதாபிமானம் மிக்கவர்கள் தான் ஊர் ஊராக ஏன் அயல் நாடு வாழ் தமிழர்களும் மனித நேயத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் பொறுக்காமல் உதவிக்கொண்டிருக்கிறார்கள்....பேஸ்புக், டீவிட்டர், வாட்ஸ்-அப் குரூப் என உதவி புரிய குரல் கொடுத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.  சக மனிதனுக்கு உதவும் இந்த நல்ல எண்ணம்தான் நமக்கு தேவை. இதில் எந்த சாயமும் நாம் பூசிக்கொள்ள வேண்டாம்.


அரசுப்பள்ளிகளில் எத்தனை பேர் சின்ஸியரா பணி புரியறாங்கன்னு தெரியலை.  நேர்மையாக பணிபுரிவர்களை நான் குறை சொல்லவில்லை. அரசு பள்ளியில் கடமை தவறாமல் கல்விப்பணி ஆற்றும்  அவர்கள் குழந்தைகளை மட்டும் ஏன் அரசுப்பள்ளியில் சேர்ப்பதில்லை என்பதுதான் எனக்கு தெரியவில்லை...எத்தனை அரசு பள்ளி ஆசிரியர்கள்  தங்கள் பிள்ளைகளை அரசாங்க பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்? அரசுப்பணி என்று பெருமையாக பேசிக்கொள்ளும் அரசு ஊழியர்கள் உடல் நிலை சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனைகளுக்கு ஏன் போகிறார்கள்? அரசு மருத்துவமனைக்கு ஏன் செல்வதில்லை?


எனக்கு தெரிந்த ஒரு அண்ணா எந்த வேலைக்கு போனாலும் அங்கு எதாவது சரியில்லைன்னு வேறு இடம் போய்டுவார், சமீபத்தில் அவர் வேலைக்கு போன இடம் வேலூர் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் அங்க ட்ராபிக்கை அடைத்து கார்கள் வரிசைகட்டி நிற்கும். வாடிக்கையாளர்கள் ஜே ஜேன்னு கூட்டமாக இருக்கும். அங்கேயும் ஒரு மாசத்துலயே நின்னுட்டார். ஏனென்று விசாரிச்சா சொல்றார்,
"என்னமோ போங்க வெளியில்தான்  பார்க்க அத்தனை பந்தா உள்ளே சமைக்கிற இடத்துல ஒரு பக்கம் எலி செத்துக்கிடக்கு அதை அப்படியே காலால் தள்ளிட்டு சுத்தம் பண்ணாம அங்கயே காய் கறி நறுக்கறாங்க, அங்க இருக்கற பிரிட்ஜ் சுத்தம் பண்ணி பல வருஷமா ஆகியிருக்கும். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் சுகாதாரக்கேடா செஞ்சிட்டு இருக்காங்க, உணவுத்துறை அதிகாரிங்க பேருக்கு வந்துட்டு கவர் வாங்கிட்டு போய்டறாங்க, முதலாளியிடம் இந்த அசுத்தம் பற்றி சொன்னால் உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு இல்லாட்டி போய்ட்டே இருன்னு சொல்றார்...என் மனசாட்சிக்கு புடிக்கலை அதான்  நின்னுட்டேன் என்றார். மனசாட்சியோட எந்த வேலையும் சரியா செய்யனும்னு  நினைக்கற பள்ளியிறுதி மட்டுமே படித்த அவருக்கு எங்கே வேலைக்கிடைக்கும்?

மக்களோட ஆரோக்கிய விஷயத்துல கண்டிப்பா இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் பேருக்கு ஒன்றிரண்டு பேரை பிடித்து கணக்கில் காட்டிவிட்டு மற்றவர்களிடம் கவர் வாங்கிக்கொண்டு வளரவிடுவதால் தானே அம்பானிகளும் அதானிகளும் உருவாகிறார்கள்....?

ஒரு தோழி ஒருத்தி சிறு சேமிப்பு முகவராக இருக்கிறார் அதற்கு ஊக்கத்தொகையாக அரசாங்கத்திடமிருந்து வரும் செக்கை வாங்க கலெக்டர் அலுவலகம் சென்றார், அப்போது வேறு வேலையாக நானும் அவருடன் சென்றிருந்தேன். அந்த செக்கை வாங்கிக்கொள்ள அங்குள்ள அலுவலரிடம் இரு நூறு ரூபாயை தந்தாள். உடனே லெட்ஜர்ல கையெழுத்து உடனே செக், வெட்கமே இல்லாத அவர்கள் அந்த இரு நூறு ரூபாயை அங்கிருந்த மூன்று பேரும் பங்கிட்டு கொண்டார்கள். தோழி வாங்கியது வெறும் இரண்டாயிரம் ரூபாய் செக் அதற்காக அவர் எத்தனை உழைத்திருப்பார், இவர்கள் இங்கு அரசாங்க ஊதியமே குறைந்த பட்சம் சௌகரியமாக வாழ கிடைக்கும் போது ஆடம்பரமாக வாழ எதற்கு குறுக்கு வழியை கையாள்கிறார்கள்? நான் தோழியை திட்டினேன் எதற்கு நீ காசு கொடுத்த அவங்க வேலையதானே செய்றாங்க என்றேன். அதற்கு அவ கொஞ்ச நேரம் இங்க வேடிக்கை பாரு அதோ உட்கார்ந்துட்டு லெட்ஜரை தேடிட்டு இருக்காரே அந்த முகவர் பைசா தரமாட்டார் அதனால் இன்னிக்கு மதியம் ஆனா கூட இவங்க அப்படி ஒரு ஆள் உட்கார்ந்து இருக்கிற மாதிரியே கண்டுக்க மாட்டாங்க... பாவம் அவர் வந்து எவ்வளவு நேரமா காத்திருக்காரோ , நான் வழக்கமா கொடுக்கறதால் அஞ்சு நிமிஷத்துல முடிச்சிட்டாங்க, இல்லாட்டி நானும் மணிக்கணக்கா காத்திருக்கனும், செக் வந்திருந்தால் கூட கையெழுத்து போடாம இன்னொரு நாள் வாங்க அவர் ஊர்ல இல்ல இவர் ஊர்ல இல்லைன்னு அலைக்கழிப்பாங்க, இவனுங்களோட அலைய முடியாது அதான் ஒழிஞ்சி போகட்டும்னு தந்து வெளிய வந்துடறேன், என்றார். நாங்கள் வெளிய வரும் போது புதிதாய் வந்த நகை பற்றி பெண்  அலுவலர் சொல்லிக்கொண்டிருக்க மற்ற இரண்டு ஆண்  அலுவலர்களும் கேட்டுக்கொண்டு சின்சியராக வீட்டுக்கதை பேசிக்கொண்டு இருந்தார்கள்....


இங்கு தனியார் நிறுவன கணக்கை சரி பார்க்க ஆடிட் வரும் அரசு ஆடிட்டர்களில் எத்தனை பேர்  நூறு சதவீத உண்மையாக இருக்கிறார்கள்?

சேல்ஸ் டாக்ஸ் , இன் கம் டாக்ஸ் என்று பேருக்கு வந்து ஓசியில் மதிய உணவை செமையாக கட்டு கட்டிவிட்டு ஒரு கவரோடு வெளிய போறவங்கதான் நிறைய பேர் என்பதை மறுக்க முடியுமா?

கடை நிலை அலுவலரிலிருந்து உயர் அதிகாரி வரை உள்ள அரசு அதிகாரிகள்  நூறு சதவீதம் பேரும் யாருக்கும் அடிபணிய மாட்டேன் என் பணியில் நூறு சதவீதம் உண்மையா நேர்மையா இருப்பேன்னு சபதம் எடுத்து செயலாற்றினா  நாட்டை கொள்ளை அடிக்கற இந்த அரசியல்வாதிங்க காணாம போய்டுவாங்க.. தனியார் நிறுவன கொள்ளைகளும் குறையும்.

இங்க நாட்டை காலி பண்றது    நேர்மையற்ற அரசியல்வாதிங்களும், அரசு துறையினரும்தான்...

ஒரு சிலர் நேர்மையாக இருந்தாலும் ஒரு டம்ளர் பாலில் கலந்த ஒரு துளி விஷம் மாதிரிதான்  பயனில்லாமல் போகின்றது.


தேர்தல் சமயத்தில் ஆயிரம் இரண்டாயிரம் வாங்கிக்கொண்டு இலவசங்களை வாங்கி கொண்டு பிரச்சினை வரும் போது மட்டும் குரல் கொடுக்கும் பாமர மக்கள் ஒரு நேர்மையான அதிகாரி போராடும் போது அவருக்கு சப்போர்ட் செய்தால்தானே மாற்றம் வரும்?

இனி ஒட்டுமொத்த பொதுமக்களாக நின்று தவறுகளை எதிர்த்தால் மட்டுமே எதிர்காலம் மிஞ்சும்.....!

இப்போதுள்ள துடிப்பான இளைஞர்கள் சமுதாய நோக்கோட இருக்காங்க இனி அடுத்த பத்து வருஷத்துல மாற்றம் வந்துடும்ல என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே," க்கும்....அந்த பையன் ப்ரெஷ்ஷா வேலைக்கு சேர்ந்தவன் தான் அவன் ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போக ஒன்றரை லட்சம் லஞ்சம் கொடுத்துதான் இருக்கான், அவன் என்ன பண்ணுவான் செலவு பண்ணதை வாங்கதானே ட்ரை பண்ணுவான்னு குருப் ல ஒருத்தர் கேள்வி கேட்க  யோசனையாத்தான் இருந்தது.. அது மெய்யாகவே நடந்தால் கொடுத்ததை வாங்க... போட்டதை எடுக்கன்னு இந்த கதை  இப்படியேதான் போய்ட்டே இருக்குமா?  இன்னும் கொஞ்ச நாள்ல நாள்லன்னு காத்திருக்க வேண்டியதுதானா?

மாற்றம் ஒன்றே மாறாதது... ஊழலை மாற்ற முடியாத மாற்றத்தையா? 


( நீ எப்படி இருக்கேன்னு யாராச்சும் என்னை கேட்டா 99% நேர்மையாத்தான் இருக்கேன்னு சொல்ல முடியும்...டவுன் பஸ்ல கண்டக்டர்  நான் இருக்க பக்கம் வராம போய் ஸ்டாப்பிங் வந்து இறங்கிட்டா கூட கண்டக்டர்  இருக்க பக்கமா போய் அந்த மூன்று ரூபாயை கொடுத்துட்டு அப்பாடான்னு மூச்சு விடற நேர்மை....)

சற்று முன் செய்தியாக தனியார் மருத்துவமனையில் மின்தடையால் சிலர் இறந்தது துன்பமான செய்தி . மிச்சமுள்ளவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

தனியார் மயம் எப்போதும் சுயநலம் சார்ந்த வணிகம் சார்ந்த பணம் கொட்டும் தொழில்தான். அவர்களை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளின் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஒரு வாரம் முன்பிருந்தே பேரிடர்ப்பாடாக இருக்கும் போது தற்காப்பு நடவடைக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி நெறிப்படுத்தி இருந்தால் நிறைய இழப்புகளை தவிர்த்து இருக்கலாம்.

அரசும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் விழிப்பாக உண்மையாக இருந்தால் மட்டுமே இந்த சுய நல போக்குகள் விடைபெறும்.

Saturday, 17 October 2015

ச்ச்சும்மா............சீரியஸாவே இருந்தா எப்படி?
நேற்று...........
அச்சு ஸ்கூல் கிளம்பும் நேரம், அவசரமாக வந்து...
“ மாம்..இதுல ஒரு கையெழுத்த போடேன்” பிளைன் பேப்பரை நீட்டினாள்.
“ என்னடி இது வெத்து காகிதம்.. என்ன விஷயம்னு சொல்லு.. அப்பதான் போடுவேன்...”
“ ஆமா நான் இன்னும் மேஜரே ஆகல.. உன் சொத்தையா எழுதி வாங்கிக்க போறேன்... போடும்மா மேட்டரை நான் எழுதிக்கறேன் எனக்கு டைம் ஆகுது....”
“ என்ன மேட்டர் சொன்னாதான்...”
“ அதெல்லாம் நானே எழுதிப்பேன் சொன்னா உனக்கு புரியாது...”
“ ஹோய்.. யார பார்த்து என்ன சொல்ற... ஊரே நம்ம பாத்து புத்திசாலின்னு சொல்லுது...( அடிப்பாவி யாரும் அப்படி சொல்லலையே?... ச்சீ மைண்ட் வாய்ஸ் தொல்லை பெரிசா இருக்கு....) சரி சரி  நீயே எழுதிக்க..ஆனா விஷயத்த மட்டும் சொல்லு..”
“ இல்லம்மா.. நேத்து வொய்ட் ஷூ போட்டுட்டே போகலையா? பி.டி மாஸ்டர் கிட்ட மாட்டிக்கிட்டேன்... ‘ ஏன் போடலைன்னு ‘ கேட்டதுக்கு ‘ ‘எனக்கு ஷூ போட்டா அலர்ஜியா வருது அதனால மாம் வேணாம்னுட்டாங்கன்னு’.. சொல்லி தப்பிச்சிட்டேன்மா, அதுக்கு அந்த மாஸ்டர், “ சரி சரி நீ இனிமே ஷூ போடாம இருக்க இது போல் எனக்கு ஸ்கின் அலர்ஜி இருக்குன்னு... ‘ அம்மா ‘ கிட்ட லெட்டர் வாங்கிட்டு வா....ன்னு சொன்னார். ‘ சார் இதுக்கெல்லாம் போய் முதலமைச்சர் கிட்ட லெட்டர் வாங்கிட்டு வரனுமான்னு’ அப்பாவியா கேட்டுட்டேன்... ஸார் ஸ்கேலை எடுத்து அடிக்கிற மாதிரி பூச்சாண்டி காட்டிட்டு, ‘ வர வர இந்த பசங்களுக்கு வாத்தியாரை ஓட்டறதே வேலையா இருக்கு... நாளைக்கு வர்றப்ப வீட்ல உங்க மம்மி ஸைன் போட்டு லெட்டர் வாங்கிட்டு வந்தாதான் அலோவ் பண்ணுவேன்...’  நுட்டார்மா... ஸோ நீ  ஸைன போடு மேட்டர நான் பில் பண்ணிக்கறேன்.
“ ஆமா நீ ஏன் நேத்து  ஷூ போடாம போன..?”
“ வொய்ட்  ஷூ ப்ளாக் ஷூ மாதிரி டர்ட்டியா இருந்துச்சி அதவேற துடைச்சி பாலிஷ் போட்டுட்டு அதான் செப்பல் போட்டுட்டு ஓடிட்டேன்...”
“ சோம்பேறி உன்னால் ஷூக்கு கூட பாலிஷ் போட முடியலையா? ஷூ போட்டாதான் ஒரு ‘நீட்டா’ இருக்கும்?”
“ அட போம்மா நம்மூரு வெய்யிலுக்கு கால் எல்லாம் கச கசன்னு இருக்கு... ப்ளீஸ் எனக்கு ஷூ போட புடிக்கல... ஒரே ஒரு ஸைன போடும்மா..”
போய்த்தொலை....
இன்று...
தலை குளித்த ஈரம் காயமல் இருக்கவே லூஸ் ஹேர் விட்டு ஆபிஸில் வந்து உட்கார்ந்தாயிற்று...
சில்லுன்னு மைண்ட் ப்ரெஷ்ஷா இருக்கவே இன்னிக்கு என்ன செய்யலாம்னு மனசு எஸ்டிமேட் போட்டுச்சு...
மூளை அரை மணி நேரமா ஊர் உலகம் எல்லாம் சுத்திக்கிட்டு திங்க் பண்ணிக்கிட்டு இருக்கப்ப...
“ படக்” ன்னு சத்தம்... பவர் கட்.
பல்பு, ஏஸி எல்லாம் வாயை மூடிக்கொண்டது. கொஞ்ச நேரத்துலயே சாம்பிராணி கரண்டியில கொட்டி வச்ச நெருப்பு மாதிரி தகிக்க ஆரம்பிச்சிடுச்சி...
சரி சரி ஜெனரேட்டரை போட்டுருவாங்கன்னு மனசை சமாதானம் பண்ணிக்கிட்டு காத்திருக்கேன்...
5.... 10....20...30....
அரைமணி  நேரமாகியும் எந்த எபக்ட்டும் காணோம்.... ஆபிஸ் பையன் வந்து, “ மேம்...  நேத்து இன்னொரு ஏஸீயோட கம்ப்ரஸர் எரிஞ்சுடுச்சி இல்ல அதான் வொயர் எல்லாம் சேஞ்ச் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அதனால் எல்லா லைனும் கட் பண்ணி இருக்காங்க... சரியாக இன்னும் ஆப் அன் அவர் ஆகும்.....” ன்னு எரியறதுல இன்னமும் தூபம் போட்டு போனான்.
லூஸ் ஹேர் எரிச்சல் ஹேர் ஆகி பின் கழுத்தெல்லாம் நச நசக்கவே, தாள முடியாமல் ஹேண்ட்- பேக்கில் இருந்த ஹேர்- பேண்டை எடுத்து  டைட்டா போனிடெய்ல் போட்டுவிட்டு பக்கத்திலிருந்த மவுஸ்- பேடை எடுத்து விசிறிக்கொண்டே.,
“ அட போங்கப்பா... நம்மூரு வெயிலுக்கு எல்லாம் கிரண்பேடி கட்டிங்கோ , இல்ல முனியம்மா கொண்டையோதான் லாயக்கு....அக்டோபர் ல கூட இந்த ஆத்து ஆத்துதே ?!”
“ஆங்... உனக்கு வந்தா ரத்தம்... எனக்கு வந்தா தக்காளி சட்னியா? “ ‘நீட்’ டாம்ல நீட்டு... ? அச்சுவின் சவுண்ட் வாய்ஸ் காத்துல வந்து காதை ‘ கொய்ங்’ ன்னு ஆக்கிடுச்சு!
(  தனக்கு வந்தாதான் தலைவலி தெரியுமாம்... ஸ் அப்பாடா உலகத்துக்கு ஒரு பெரிய நீதிய சொல்லியாச்சி...! )

Saturday, 30 May 2015

கல்வி என்ற காலன்..


( 30-5-15 தினமலர்- பெண்கள் மலரில்..)

தோழி ஒருவரின் மகள் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெறவே வாழ்த்து சொல்ல போன் செய்த போது, அவரோ “ என்ன சொல்வது வெறும் எழுநூறு மார்க்தான் வாங்கியிருக்கா.. பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் வாங்கியிருந்தாங்கன்னு இதுல நம்பிக்கையா இருந்தேன்.. இப்படி  நான் ஏமாறுவேன்னு நினைக்கலை..  நல்லா ஹார்டு வொர்க் பண்ணியிருந்தாத்தானே?  நாந்தான் படிக்கலை இவங்களாவது நல்லாயிருக்கனும்னுதானே இவ்வளவு சொன்னேன் என்று கோபமாக திட்டிக்கொண்டே இருந்தார்.  மதிப்பெண் வந்த பிறகு இனி இதைப்பற்றி பேசி பெண்ணின் மனதை நோகடிக்க வேண்டாம், அழப்போகிறார்கள் என்று சொன்னேன். தோழியோ, “ அழட்டும்.. இதுதான் நேரம்னு வெளுத்து வாங்கிட்டேன்.. அழுதுட்டு சாப்பிடாமதான் இருக்கா.. இருக்கட்டும் எத்தனை நாளைக்கு இருப்பா?” என்றார் சர்வசாதாரணமாக. எல்லோருக்கும் ஏற்ற கல்வியும், வாழ்க்கைக்கான வழியும் இருக்கிறது அவர்களுக்கு எந்த பாடத்தில் ஆர்வம் உள்ளதோ அதை கொடுத்து தொடர்புடைய பணிக்கு அனுப்பலாமே என்று அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வியை எப்பாடு பட்டாவது கொடுத்து விட வேண்டும். அது முடித்து அதற்கு சம்மந்தமில்லாத எந்த வேலைக்கேனும் சென்று அதிக ஊதியத்தில் பணியில் அமர வேண்டும் என்ற கட்டாயத்தில்தான் இருக்கின்றனர்.
பொறியியல் படித்து ஸாப்ட்வேர் துறையில் ஆர்வமில்லை என்று தொழிற்சார்ந்த வேலைகளுக்காக அல்லாடி காத்திருக்கும் பிள்ளைகளை, “கிடைத்த வேலைக்கு போகவில்லை என்றும் தண்டச்சோறு தின்று ஊரை சுற்றி வருகிறது..!” என்று சாடும் பெற்றோர்களையும்... “ சரி வேலைக்குதான் போகலை அந்த டப்பா இஞ்சினியரிங் காலேஜ் ல டீச்சிங் பண்ண கூப்பிடாறாங்க ஆறாயிரம் ஏழாயிரம் சம்பளம் என்றாலும் போய் தொலையமாட்டேங்குது..!” என்று வசைபாடும் பெற்றோர்களையும்தான் அதிகமாக பார்க்க முடிகிறது. அந்த பிள்ளைகளின் மன நிலையை நினைத்து பாருங்கள், எல்லோருமே பொறியியல் என்றால் வேலைக்கு எங்கே போவது? லட்சக்கணக்கில் செலவழித்து படித்துவிட்டு இன்று ஆறாயிரம், ஏழாயிரம் ஊதியத்திற்கே செல்ல வேண்டிய நிலையாக இருக்கிறது. இதை யோசிக்கும் ஒரு சில பெற்றோர்கள் மீண்டும் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் யுஜி கோர்ஸ் சேர்த்து ஆசிரியர் பயிற்சி கொடுத்துவிட்டால் பிற்காலத்தில் ஆசிரியப்பணியாவது கிடைக்கும் என்று மீண்டும் இளங்கலை வகுப்புகளில் சேர்ப்பிக்க திரும்புகிறார்கள்.
மாணவர் கற்றல் திறனுக்கேற்ற கல்வி, அதன் அறிவை சார்ந்த பணி என்ற காலம் எல்லாம் போய் பணம், கல்வி, பெருமை என்ற நிலையே நிலவி வருகிறது. உறவினர் ஒருவர் அவருடைய மகள் மதிப்பெண் குறைவாக இருப்பதால் அறுபது லட்சம் கொடுத்து மருத்துவ கல்வி சேர்த்திருப்பதாக சொன்னார்கள். மருத்துவம் என்பது மனித உயிர் சம்மந்தப்பட்ட கல்வி.. இதை விலை கொடுத்து வாங்கி கற்றல் திறன் குறைவாக உள்ளவர்களால் அந்த கல்வியை புரிந்து அவர்கள் எப்படி திறமையாக மருத்துவப் பணியை செய்ய முடியும்? அத்தனை செல்வாக்கு உடையவர்கள் அந்த பணத்தை வங்கியில் முதலீடு செய்து அதை வைத்து அவர்கள் எதிர்காலத்தை பார்த்துக்கொள்ள வழி செய்ய முடியும்தானே? அந்த இடத்தை திறமையாக உள்ள யாரோ ஒரு ஏழை மாணாக்கருக்கு  வாய்ப்பு கொடுக்கலாம் இல்லையா? இப்போதுள்ள நிலையில மருத்துவப்படிப்பு வசதிப்படைத்தவர்களுக்கானதாக மட்டும் மாறிவிட்டதால் அங்கு அதிக மதிப்பெண் பெற்று உள்ளே நுழையும்  ஏழை மாணாக்கர்கள் அவர்கள் வாழ்க்கை முறையில் அன்னியப்பட்டு போகும் மன அழுத்த சூழலான நிலையும் நிலவுகிறது. விலை உயர்ந்த கார்களில் ஆயிரக்கணக்கில் அன்றாட கைச்செலவு செய்யும் மாணாக்கரிடையே விலை நிலம் விற்றோ கடன் வாங்கியோ படிக்க வைக்கும் குழந்தைகள் மன நிலையில் தாழ்வு மனப்பான்மையும், அவர்கள் போன்று இருக்க முடியவில்லை என்று குற்றவுணர்ச்சியும் நெருக்கி  தவறான முடிவுகளை எடுக்கும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.
  நன்கொடை கொடுத்து பொறியியல் படித்துவிட்டு நல்ல வேலைக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பணியில் அமரும் பிள்ளைகள் யோசிப்பது முதலில் போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்றுதான்..! அலுவலகங்களில் ஊழியர்களிடையேயும் அதிகாரிகளிடையேயும் லஞ்சம் தலைகாட்ட துவங்குவதே சமூகமும், பெற்றோர்களும் உருவாக்கிவிட்ட இந்த சூழ் நிலையும் ஒரு காரணம் என்பதை யோசித்துதான் பார்க்கவேண்டும்.
நல்ல மனிதராக வாழ்வதைவிட பேராசையுடன் வாழ்வதையே கற்றுத்தந்து கொண்டிருக்கும் இந்த கொலைகார கல்விமுறையை மாற்றியமைக்காவிட்டால் வாழ்க்கை என்பது வெறும் பணமாக மட்டும் மாறி சமூக குற்றங்களும், ஒழுங்கற்ற வாழ்க்கையும்தான் உருவாகும் என்பதில் சந்தேகமேயில்லை.
 எல்லா பெற்றோர்களும் சிந்திப்பது நாம்தான் நன்றாக இல்லை நம்பிள்ளைகளாவது நன்றாக இருக்க வேண்டும். அப்படி நினைக்கும் எந்த பெற்றோர்களும் அவர்கள் எந்தவிதத்தில் வாழாமல் போய்விட்டார்கள் என்று யோசித்துப்பார்ப்பதில்லை.  உண்ண உணவும் உறைவிடமும் , மனித நேயமும் தாண்டி பேராசையை நோக்கி ஓடுவதில்தான் நல்ல வாழ்க்கை இருக்கிறது என்ற மன நிலைக்கு வந்துவிட்ட பின் கல்வி என்பது வழிகாட்டி இல்லை காலனாகவே மாறித்தான் போய்கொண்டிருக்கிறது. அதனால்தான் வருடந்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது மாணவ தற்கொலைகள்..!