Showing posts with label விபத்து. Show all posts
Showing posts with label விபத்து. Show all posts

Thursday, 21 November 2013

இதற்கு பதில் சொல்லிட்டு போங்களேன்.....



சேலம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி வீடுகள் தரைமட்டமானதில் தாய், மகன் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 586 பேர்வரை பலியாகி உள்ள தேசிய குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலிண்டர் வெடித்து மரணம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் 10க்கும் மேற்பட்டோர் சிலிண்டர் வெடித்து பலியாகின்றனர் என்று அதிர்ச்சியளிக்கிறது அந்த புள்ளிவிபரம்.

இந்த விபத்துக்களுக்கு பயன் படுத்துபவர்களின் கவனமின்மை மட்டுமே காரணமா? நுகர்வோர் பாதுகாப்புக்காக எரிவாயு ஏஜென்சிகளும், அரசும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கிறது? உபயோகப்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும் போதுமானதல்ல. விபத்து ஏற்படாதவாறு தரம் மேம்படுத்த முடியாதா? எரிவாயு கசிவு ஏற்பட்டால் புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குள் ஐ.ஓ.சி. மெக்கானிக்குகள் அங்கு வருவார்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையம் தெரிவிக்கிறது.  நுகர்வோர் பாதுகாப்பில் பெரும்பாலும் அலட்சியம்தான் நடக்கிறது.    

நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் தனியாக புதிய இணைப்பு வாங்கினோம்... அப்போதிலிருந்து ஒவ்வொரு சிலிண்டர் அந்த ரெகுலேட்டரில் பொருந்தும்... ஒவ்வொன்று பொருந்தாமல் ரெகுலேட்டரை திருப்பும் போதே கேஸ் கசிவு லேசாக தெரியும். காலையில் புகார் தெரிவித்தால் அன்று மாலையில் எதோ ஒரு நேரத்தில்தான் வருவார்கள்... வால்வுதான் பிரச்சினை என்று வேறு வால்வு மாட்டி அந்த நேரத்திற்கு சரி செய்து விட்டு போய்விடுவார்கள். இப்படியே அவ்வப்போது பிரச்சினை... ரெகுலேட்டரை மாற்ற சொல்லி கேட்டாலும் ரெகுலேட்டர் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லி விட்டு போய்விடுவார்கள்.. இப்படியே நீண்ட நாட்கள். நான் எப்போதும் ஜன்னல்களை திறந்து வைத்துவிடுவேன்.. ஒவ்வொரு முறையும் அடுப்பை அணைக்கும் போது ரெகுலேட்டரையும் ஆப் செய்து விடுவேன். கடந்த ஒரு மாதமாக ரெகுலேட்டரை திருப்பும் போதெல்லாம் புஸ் என்ற சத்தத்துடன் க்யாஸ் வெளியாவது நன்றாகவே தெரிந்தது. உடனே ஆப் செய்து மறுபடியும் புகார் செய்தால் மெக்கானிக் வந்து பாடிய பல்லவியையே பாடி விட்டு அந்த சமயம் வால்வை மாற்றிவிட்டு போய்விடுவார்கள். கொஞ்ச நாட்கள் பிரச்சினை இல்லாமல் இருக்கும்... மறுபடியும் அதே பிரச்சினை... சமைக்கும் போது லேசா க்யாஸ் வாடை அடிக்கும். என் கணவரிடம் சொன்னால் அவருக்கு எந்த ஸ்மெல்லும் தெரியலைன்னு என்பார்.( மூக்கு இருந்தா மட்டும் போதாது... அது வேல செய்யனும்...) அப்புறம் நான் திட்டுவேன், “ இங்க பாருங்க இதே பிரச்சினை நீங்களும் எத்தன வாட்டி புகார் பண்ணுவீங்க... எனக்கு ரெகுலேட்டர்லதான் ப்ராப்ளம் இருக்குன்னு தோணுது... அதை மாத்த சொல்லுங்க.. புது ரெகுலேட்டர் தர்றதுக்கு அவங்க ஏன் சாவறாங்க? சும்மா இதெல்லாம் வேலைக்கு ஆகாது எத்தனை முறை சொல்றது? நீங்க போய் சத்தம் போட்டுட்டு வர்றிங்களா இல்லையா?ன்னு அவரை திட்டி கொண்டிருந்தேன். அவரோ, “ ஏய்  நானும் இரண்டுமுறையும் மெக்கானிக் வர்றப்ப வீட்ல ஆள் இருக்கனுமேன்னு லீவு போட்டுதானே பார்த்தேன்... அவனுங்க எந்த ப்ராப்ளமும் இல்லைன்னு சொல்றானுங்க. அங்க போய் சத்தம் போடறதெல்லாம் வேலைக்கு ஆவாது.. அந்த ஏஜென்ஸிக்காரங்க... ...... கட்சிக்காரங்க....ஒண்ணும் பண்ண முடியாது. நமக்குதான் வேலை காமிப்பானுங்க... வேணும்னா நீ போய் கத்திட்டு வா...” என்றார்.

 ‘ சரி...நான் லீவு போட்டு போய் சத்தம் போடறேன்... நீங்க தாராளமா காலேஜுக்கு போங்க.... புது ரெகுலேட்டர் வர்ற வரை நான் சமைக்க முடியாது” என்று சொன்னதும், மனுஷனுக்கு என்ன பண்றதுன்னு புரியலை... இவ என்னடான்னா ரெகுலேட்டர்ல் ப்ராப்ளம்ங்கிறா மெக்கானிக் என்னடான்னா ரெகுலேட்டர் நல்லாயிருக்குதுங்கிறான்னு ! அப்புறம் அடுப்பு + ரெகுலேட்டரோடு தெரிந்த ஸ்டவ்- பழுதுபார்க்கும் கடைக்கு போனார். கடைக்காரர் செக் பண்ணிட்டு அடுப்பில் எந்த ப்ராப்ளமும் இல்லை... ரெகுலேட்டர் ஸ்விட்ச்சில்தான் ப்ராப்ளம் இருக்கிறது. ரெகுலேட்டரைதான் மாத்தனும். அதை அவ்வளவு ஈசியா மாத்திக்கொடுக்க மாட்டானுங்க... வர்ற மெக்கானிக் கிட்ட ஒரு நூறு ரூபாயை தந்தாத்தான் அவன் ரெகுலேட்டர் ரிப்பேர்னு சொல்வான். அவன் சொன்னாத்தான் கம்பெனிக்கு அனுப்பி புது ரெகுலேட்டரை தருவாங்க என்று சொல்லியிருக்கிறார். இவரும் வேறு வழியில்லாமல் மெக்கானிக்கிற்கு ரூபாயை கொடுத்த பிறகுதான் ரிப்பேர் என்று சொல்லி எழுதி கொண்டு போனான். இவர் ரெகுலேட்டரை ஏஜென்ஸியில் கொடுத்து புதிது வாங்க விண்ணப்பம், பணம் கட்டிய பிறகு வர இரண்டு நாட்களாகும்... நேரில் வந்து கையெழுத்து போட்டு வாங்கி போகனும் என்று சொல்லியிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் அவர் அலைந்து பிறகு ஒரு வழியாக புது ரெகுலேட்டர் கிடைத்து பொருத்திய பின் எந்த பிரச்சினையும் இல்லை. 

படித்த எங்களாலேயே நுகர்வோர் பாதுகாப்புக்காக இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்றால் பாமர மக்களும், எளியவர்களும் என்ன செய்வார்கள் பாவம்? இன்று செய்தி தாளில் சேலம் எரிவாயு விபத்து பற்றி படித்ததும் மனசு கொதித்தது.. அதுசரி சிலிண்டர் விபத்தில் சாவறவன் எவனோ முனியம்மா பொன்னம்மா குடும்பம்தானே..? இவனுங்களுக்கு என்ன? அடுப்படியில நின்னு சமைக்க போறது பிரதம மந்திரியோ முதலமைச்சரோ, இல்ல அமைச்சருங்க இல்லை இல்ல..! பயன்படுத்துபவர்களின் கவனமின்மை மட்டும் காரணம் கிடையாது பாதுகாப்பான தரமும் இல்லாததுதான் என்று  நினைக்கிறேன். தவறுகளை தட்டனும்னு நாம் நினைச்சாலும் தப்பு செய்றவன்  நம்மை விட பூதாகாரமா விஸ்வரூபம் எடுத்துகிட்டு நம்மை நசுக்கி காணாம செய்துடறான்.

ஊழல், லஞ்சத்துக்கு எதிராக ஒருத்தர், ரெண்டு பேர் குரல் கொடுத்து ஒண்ணும் பண்ண முடியாது. யோக்கியமான அரசியலமைப்பு வரனும்.. தப்பு நடந்தா சட்டம் தண்டிக்கும்னு பயம் வரனும்... அப்பத்தான் ப்யூன்லர்ந்து அதிகாரி வரை அவனவன் வேலைய ஒழுங்கா செய்வான். ஆனா யோக்கியமான அரசியல்னு ஒண்ணு நம்ம நாட்டுல வருமான்னுதான் சந்தேகமா இருக்கு... ஓட்டுபோடற மதிகெட்ட ஜனங்கதான் மாறனும்... ஊருக்கு ஒரு நல்லவனை நாமே அடையாளம் காண்பிச்சு பதவியில் உட்கார வைக்கனும். நல்ல  நோக்கமும், திறனும் உள்ள இளைஞர்கள், இளைஞ்சிகள் எனக்கு தெரியும்.. தேர்தல்ல எங்க தொகுதியில் அவங்களை நிற்க வச்சா எந்த விளம்பரமும் இல்லாம... வோட்டுக்கு காசு இல்லாம ஒரு பைசா செலவு பண்ணாம மக்கள் அவங்களை தேர்ந்தெடுப்பாங்களா? நான் தனி தனியாக தெரு தெருவாக  நாலு மணி நேரம் இதெல்லாம் சொன்னால் கூட எனக்கு வேற வேலை இல்லை என்று சொல்லிட்டு போவாங்க. இப்படியே போகாது நாளைய சமுதாயம் மாறும்னு நம்பிக்கை வைக்கிறேன்... !
       
   வெளி நாடுகள்ல எரிவாயு விபத்துக்கள் இருக்கிறதா? உங்க நாட்டில் இதில் அரசு என்ன பாதுகாப்பு கொடுக்கிறது என்பதை இந்தியா அல்லாம மற்ற நாட்டில் இருக்கிறவங்க சொல்லிட்டு போங்க.....

Wednesday, 25 September 2013

யாரிடம் சொல்வேன்...?



எனக்கு வேடிக்கை பார்ப்பதென்றால் ரொம்ப பிடிக்கும். அதை தவிர வேறு எனக்கு வேலையுமில்லை.. அப்போதெல்லாம் பரபரப்பான காட்சிகள் எதுவும் எனக்கு கிடைக்காது.. மாட்டு வண்டிகள், சைக்கிள்களுக்கு இடையில் வரும் நான்கு மோட்டார் வாகனங்களை அதிசயமாய் பார்ப்பேன். அதை விட அதிசயமாய் தெரியும் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை  வரும் டவுன் பஸ்ஸும் அதை பிடிக்க ஓடும் ஆட்களையும் .. இப்பொதெல்லாம் என் கண்களுக்கு ஓய்வே இல்லை இரவும் பகலும் இயங்கி கொண்டிருக்கும் உலகத்தை விட்டு தனியாய் என்னால் நின்றுவிட முடிவதில்லை.


 காலம் ரொம்ப மாறி விட்டிருக்கிறது.. எண்ண முடியாத அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் பறந்து கொண்டிருக்கிறது. சைக்கிளை எங்காவது அதிசயமாகத்தான் பார்க்கிறேன்.இந்த இயக்கமும் பரபரப்பும் என்னை சுறு சுறுப்பாக வைத்திருந்தாலும் அதையும் மீறி மனம் நெருடலாகத்தான் இருக்கிறது. கனவை சுமந்து பள்ளி செல்லும் குழந்தையிலிருந்து கண் தெரியாத வயோதிகர் வரை கிழித்து போடும் கொடுமைகளை தினம் தினம் பார்க்க சகிக்க முடியவில்லை. வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது ஒரு சம்பவம்... செய்திதாளில் படிப்பவர்களுக்கு அது ஒரு செய்தி.. எனக்கு? நித்தம் நித்தம் உள் வாங்கி ஜீரணிக்க முடியாமல் யாரிடம் போய் இதை சொல்வேன்..    ஒவ்வொரு நாளும் ரத்தமும், சதையுமாய்.. அழுகைகளும் பார்த்து பார்த்து மனம் இறுகி போய் கிடக்கிறது.


இதோ ஒரு மணி நேரத்துக்கு முன் தான் அந்த காட்சியை பார்த்தேன்... அந்த மனிதன் முகம் பொறுமையாகத்தான் தெரிந்தது.. பின்னால் முதுகை கட்டி கொண்டு அந்த பூங்குவியல்.. அப்பா.. மகளாய் இருக்க வேண்டும்.  பிஞ்சு உதடுகள் எதையோ சொல்லி கொண்டு வந்தது. அப்பாவின் ஹெல்மெட்டுக்குள் அவை விழுகின்றனவோ என்னவோ திரும்பாமல் மெல்லிதாய் ஒரு தலையசைப்புடன் லாவகமாய் பத்திரமாய்த்தான் அந்த இரு சக்கர வாகனத்தை திருப்புகிறார்.. கண நேரத்தில் கும்மாளமிட்டு வந்த கார் நொடியில் வேகமாய் மோதிவிட்டு செல்கிறது. எனக்கு இது போல் காட்சிகள் தினம் வாடிக்கையான விஷயம் என்றாலும் ஒவ்வொரு முறையும் துடித்துதான் போகிறேன். யாராவது உதவிக்கு வாருங்களேன்... என் குரல் எழும்பும் சத்தம் யார் காதையும் எட்டும்முன்..

 இதோ நொடியில் வேடிக்கை பார்க்க கூடி விட்டது கூட்டம்...  அந்த பிஞ்சு குழந்தை பொம்மையை பிய்த்து போட்டது போல்  கை வேறு உடல் வேறாய் சிதறி கிடந்தது. குழந்தையின் அப்பா ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் அடி படாமல் கால் துண்டித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். யாரோ ஒரு இளைஞன் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தான். அங்கு சிதறி கிடந்த டைரி, செல்போன் என்று துழாவி அவரை சேர்ந்த யாருக்கோ போன் செய்தார்கள்.


போலீஸ் விசாரணை, கேமரா கோணங்கள்.. இதற்குள் அடித்து பிடித்து வந்த அந்த குடும்பம் கதறி துடித்தது.. அந்த இளம்பெண் அவர் மனைவியாயிருக்கும்.. எத்தனை கனவுகளை வைத்திருந்தாளோ? அழுது அரற்றி மயக்கமடைந்தாள். பக்கத்திலிருந்த அந்த சிறுவன்  நடந்த கொடுமை தெரியாமல் , “ மாமா.. அம்மா எதுக்கு அழறாங்க...?”


“  நம்ம  நிம்மி பாப்பா சாமி கிட்ட போய்ட்டா டா..”


“ இல்ல நீ பொய் சொல்ற... தாத்தா சாமிகிட்ட போகும் போது தூங்கிட்டுதானே இருந்தாரு..  நிம்மி பாப்பா கை எல்லாம் ஏன் தனியா கிடக்குது.. தலை எல்லாம் ரத்தம்..?

....


“ மாமா.. எனக்கு தெரியும் என்னை விட்டு நிம்மி பாப்பா எங்கயும் போகமாட்டா சாமி கூப்பிட்டப்ப வரமாட்டேனுருப்பா.. அதான் சாமி அவளை அடிச்சி கூட்டிட்டு போயிருச்சா ...?”


அந்த பாலகனின் கேள்வியில் அதிர்ந்துதான் போனேன்.


“சாமி.. இந்த பொம்மை எங்கிட்டே நிம்மி பாப்பா கேட்டுட்டே இருந்தா.. நாந்தான் தரலை இப்ப அவ யாருகூட விளையாடுவா? இதையாவது பிச்சி போடாம எடுத்துட்டு போய் நிம்மி கிட்ட குடுத்துரு...” கையிலிருந்த பொம்மையை எடுத்து  நடு ரோட்டில் வீசினான்.


ஆயிற்று அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு எதுவுமே நடந்திருக்காதது போல் எல்லா சுவடுகளும் கலைந்து போயிற்று. வேகமாய்  உருமி கொண்டு இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி கொண்டு... சற்று முன் வேடிக்கை பார்த்தவர்களுக்கு இது ஒரு சம்பவம் சில மணிகளில் மறந்து போய் விடுவார்கள்... அந்த குடும்பத்தாருக்கு வலி இன்னமும் மிச்சமிருக்கும். ஆனால் எனக்கு ? நித்தம் நித்தம் ஜீரணிக்க முடியவில்லை... திரும்பவும் மண்சாலையாய் என் மீது மாட்டு வண்டிகளும்,  நீங்களும் பயணித்த அந்த அமைதியான காலத்திற்கே போவேனா என்று விரும்புகிறேன் மனிதர்களே...! என் பசி உங்கள் இரத்தமும், சதையும் இல்லை.. உங்கள் அழகான பயணங்களும் சிரிப்போசைகளும்தான்!

---------------

(பி.கு  -  இங்கு வரும் கருத்துக்களை பார்த்து இந்த குறிப்பு எழுத வேண்டியதாயிற்று... பொறுக்கவும்...

இங்கு வேலூரில் எங்கள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள்... மனித உயிர்களுக்கே மதிப்பில்லாதது போல் நடு ரோட்டில் அடித்து போட்டு விட்டு வாகனங்கள் போய்கொண்டே இருக்கிறது. அது முக்கியமான வழி.. இந்த பக்கமும், அந்த பக்கமும் பள்ளிகள் ,வணிக வளாகங்கள், ஆர்.டி.ஒ அலுவலகம் என்று..  அங்கு நெடுஞ்சாலையை கடந்துதான் ஆக வேண்டும். பொது மக்களுக்கு வசதியாக சப்-வே ஒன்றோ மேம்பாலம் ஒன்றோ வேண்டுமென்று எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்து இன்னும் இதுவரையில் எந்த பலனும் இல்லை. பொதுமக்களும் இன்னும் என்னதான் செய்வார்கள். ஒவ்வொரு நாளும் இந்த பக்கமும், அந்த பக்கமும் உயிரை கையில் பிடித்து கொண்டு பள்ளி குழந்தைகளும், முதியவர்களும் ஓடுகிறார்கள். 

சாலையில் எப்போதும் படு வேகமாக வாகனங்கள்... நிதானித்து கொஞ்சம் தூரத்தில் வருகிறதே என்று கிராஸ் செய்தால் எங்கிருந்துதான் அத்தனை வேகத்தில் வருவார்களோ... அதுவும் கார்கள் வேகம்தான் எதோ பிளைட் பறப்பது மாதிரி இருக்கும்.(  நான்  சென்றால் முதியோர் யாராவது இருப்பின் அவர்களை பத்திரமாக அழைத்து கிராஸ் செய்து விடுவேன் என்னால் செய்ய முடிந்தது அதுதான்..!)  

நம் நாட்டில் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலாவது வாகனம் ஓட்டுபவர்கள் வேகம் குறைக்கலாம்.  இந்த பகுதியில் மாதந்தோறும் நிறைய உயிர்பலிகள்... இதே ஒரு அரசியல் வாதியோ, பிரபலமோ என்றால் உயிரை காப்பாற்ற கோடிகளை செலவழித்து வெளி நாடு வரை செல்கிறார்கள். சாதாரண மனிதன் உயிர் மட்டும் அத்தனை மலிவானதா என்ன?  நாட்டின் போக்கு வரத்து கட்டமைப்பு வசதியில் மெத்தனம் காட்டி கொண்டிருக்கும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும்  நினைத்தால் கோபம்தான் வருகிறது. இங்கு நான் கோபபட்டு என்ன பிரயோசனம்? ஒவ்வொரு தனிமனிதனும் இவர்களுக்கு பாடம் கற்பிக்க முனைந்தால் ஒழிய மாற்றம் வரப்போவதில்லை. 

விபத்தின் வலிகளை பற்றி சொல்லவே இச்சிறுகதை.  இதில்  சாலை தனக்குள் பேசிக்கொள்வது போல்
கொஞ்சம் கற்பனை கலந்துதான் சொல்லியிருக்கிறேன். 

சிறு கதை முடிவில்...
... என் பசி உங்கள் இரத்தமும், சதையும் இல்லை.. உங்கள் அழகான பயணங்களும் சிரிப்போசைகளும்தான்!- என்று சாலை சொல்வது போல் எழுதியிருப்பேன். 

இது கதையாக இருந்தாலும் விபத்தால் பாதிக்கப்படும் உறவுகளின் உணர்வுகள்... வலியை நாம் உணர வேண்டாமா?)
 இது ஒரு சாலையின் புலம்பல்.....!