Friday 31 August 2012

கவிதை
  ஞாபகங்கள்…!

மழை நாளில்தான்
 நம் முதல் சந்திப்பு
அதனால் தானோ
என்னவோ
ஈரம் காயாத நினைவுகள்..
மழை காலங்களில்
குடை போல்

கூடவே
பயணிக்கிறது..!
கவிதை
 

காதலுக்கு சம்மதமாய்
 தலையசைத்தது -
காற்றோடு
மொழி பேசிய பூக்கள்..!

 **********
வாடிப்போகும்
என்றுதான்

ஒப்பீடா-
காதலை மலரோடு..?
கவிதை


வெப்பத்தின்
முத்தங்களில்
வீழ்ந்து மடிந்தது
விளக்கொளியில்
விட்டில் பூச்சிகள்..
சிறுகதை
                                      “  அந்த நொடி….”


 கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு போர்த்தியிருந்தது.. இந்த நேரம் பார்த்து பவர் கட் வேறு.சுசித்ராவிற்கு நெஞ்சுக்குள் திக்.. திக் என்று இதயம்  அடித்து கொண்டிருந்தது. சில்லென்று தண்ணீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஹாலுக்கு சென்று ப்ரிட்ஜில் இருக்கும் தண்ணீரை எடுத்து வர பயமாக இருந்தது. பக்கத்தில்  கையோடு கொண்டு  வைத்திருந்த பாட்டில் நீரை ஒரு முழுங்கு குடித்து விட்டு பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த  ஹர்ஷிதா வை பார்த்தாள். மெல்லிய இதழ் புன்முறுவலோடு நிம்மதியாக  தூங்கிகொண்டிருந்தது. மூன்று வயது குழந்தைக்கு போய் என்ன பயம் தெரிய போகிறது? பேசாமல் வீட்டை பூட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய் விட்டிருக்கலாமோ என்று தோன்றியது. கதிர் கேட்கவில்லை,
 “ ஏய் எதுக்கு அவ்வளவு தூரம் போயிட்டு மறுபடியும் வரனும்.. ஜஸ்ட் ஒன் டே  தானே.? பக்கத்துல மாமில்லாம் இருக்காங்க எதாச்சும் அவசரம்னா கண்டிப்பா உதவுவாங்க.. கதவை உள் பக்கமா பூட்டிக்கிட்டு  படுத்து தூங்கு காலையில் நிதானமா ஏழு மணிக்கு எழுந்துக்கோ. .. வீணா பயப்படாதே..!” சொல்லிவிட்டு போனான்.
இதுவரை இப்படி தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வரவில்லை.  கதிர் திடீரென்று ஆபிஸ் வேலையாக ஹைதராபாத்துக்கு போக வேண்டிய கட்டாயம். எப்போதுதான் விடியுமோ  மணி பதினொன்று, பனிரெண்டு என தாண்டி கொண்டிருந்தது. “ இந்த பக்கம் திருடு பயம்லாம் இல்ல.. அப்படி எதாவது ஆபத்துன்னா நீ போன் கூட பண்ண வேணா, ரிங் கொடு நான் மாமாவையும், யுவனையும் அனுப்பி பார்க்க சொல்றேன்.. மாமி தைரியம் சொல்லி வைத்திருந்தாள்.
சரி ஒரு மணியாயிடுச்சி கண்ணை மூடி தூங்குவோம் என்று சுசித்ரா நினைத்த போது பக்கத்து ரூமில் காலொடி ஓசையும் இருட்டில் எதோ விழுந்த ஓசையும் தெளிவாக கேட்டது. மெல்ல எழுந்து சாவித்துவாரம் வழியாக பார்த்தாள். சந்தேகமில்லை பக்கத்து ரூம் கதவு திறந்திருந்து.. ஒரு கட்டையான  உருவம் டார்ச் ஒளியில் எதோ தேடிக் கொண்டிருந்தது. சுசியின் லப்-டப் கூடுதலாகி கை கால் நடுங்கியது.
அந்த கட்டையான உருவத்தை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது, ம் எதிரி பிளாட்டில் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது.  அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவன் தான். அவன் பார்வையே சரியில்லை, தீவிரமாதிரி மாதிரி தெரிந்தான். தினமும்  குடிக்க தண்ணீர் கேட்டு வருவான். ஒன்றிரண்டு முறை தந்துவிட்டு காதில் கேட்காதவள் போல் இருந்துவிடுவாள். கதிர்தான்  திட்டுவான். “ சுசி தண்ணிதானே கொடு, அவன் இந்திக்காரன்  தமிழ் பேச தெரியலை பாவம்.. நான் இங்க வீடு கட்டறப்ப மாமிதான் நமக்கு தண்ணி கொடுத்து உதவினா. நாமளும் ஒருத்தருக்கு உதவினாதானே..?”
பாவி தண்ணீர் கேட்கும் சாக்கில் வேவு பார்த்திருப்பான் போலும், பெட் ரூம் கதவை உடைத்து பீரோவிலிருக்கும் பணம் , நகைகளை கொள்ளையடிக்க வெகு நேரம் பிடிக்காது. பயத்தில் மயக்கமே வரும் போலிருந்தது. கழுத்தில் காதில் இருந்ததையெல்லாம் கழற்றி  அலமாரியில் வைத்தாள். “ கடவுளே அவன் என்னையும் , குழந்தையும் ஒன்றும் செய்யாமல் இருந்தால் போதும்.”
பாப்பாவிற்கு சளி என்று ஸிரப் ஊற்றி படுக்க  வைத்திருந்தாள். சத்தம் கேட்டாலும் எழுந்திருக்காது. மெல்ல ஹர்ஷிதாவை தூக்கி கட்டிலுக்கு அடியில் படுக்க வைத்தாள். இனி நான் மட்டும் தூங்குவது போல்   நடிக்க வேண்டியதுதான்.  அவன் பீரோவை உடைத்து எல்லாம் எடுத்து போகும் வரை தெரியாத மாதிரி இருந்து விட வேண்டியதுதான். அசைந்தால் கத்தியால் குத்திவிட்டு போய்விட்டால் என்ன செய்வது? எதற்கும் மாமிக்கு ஒரு ரிங் கொடுத்து விடலாம் என்று போர்வைக்குள்ளேயே மாமி நம்பரை தேடி நான்கைந்து மிஸ்டு கால் கொடுத்தாள்.
கர… கர… எதோ சத்தம் கேட்டது. மறுபடியும் காதை தீட்டினாள். கர.. கர.. பிரஷ் கொண்டு அழுத்தமாக பல் தேய்க்கும் ஓசை..  பாவி திருடனுங்க இப்பல்லாம் திருட வர்ற வீட்ல நிம்மதியா சாப்பிட்டுட்டே போறானுங்களாமே.. முந்தா  நாள் தான் பேப்பரில பார்த்தோம். ஒரு வீட்ல பிரிட்ஜில இருந்ததை எல்லாம் சாப்பிட்டு  சாவகாசமா தண்ணியடிச்சிட்டு பாட்டிலை எல்லாம் போட்டுட்டு போயிருந்ததா. நாம எப்படி தப்பிக்க போறோம்..வந்திருப்பவன் அந்த கட்டை ஆள் மட்டுமா கூட யாராவது கூட்டாளியும் இருக்குமோ…?  திரும்பவும் பிரஷ் பண்ணும் ஒசை மிக நெருக்கமாக கேட்டது, ஒரு கை போர்வை விலக்கியது, அம்மா… அலறியவாறே கைகளை இறுக்கி கொண்டாள்.
“ ஏய்.. சுசி.. என்னாச்சு உனக்கு?  வழக்கமா  அஞ்சு மணிக்கே எழுந்து ப்ரஷ்ஷாகிடுவே.. மணி எட்டாயிடுச்சு.. பாவம் உடம்பு சரியில்லையோ என்னவோன்னு கேட்கதான் எழுப்பினேன்..”
சுசியின் உடம்பு நடுங்கி கொண்டிருந்ததை பார்த்ததும், “ என்ன எதாவது கனவு கண்டியா? “
அப்ப கனவுதான் கண்டிருக்கோமா? மெல்ல தெளிந்தவள்   நீங்க ஹைதராபாத் போகலை என்று கேட்டாள்.
“ என்ன உளர்றே.. நான் அடுத்த வாரம்தானே போக போறேன். 
தான் நிஜம்  என்று நம்பிய கனவை பின்னனி இசை விடாமல் ஒப்பித்தாள்.
தனியா இருக்க போறதை நினைச்சிகிட்டே டி.வி சீரியல் பார்த்திருப்பே.. அதுவும் இப்பல்லாம் அழுவாச்சி சீரியல் போய்  ராஜேஷ் குமார் நாவல்லாம் எடுத்து திகில் தொடர் போடறான்.. பார்க்கும் போது இன்டரஸ்ட்டா பார்த்துட்டு இப்ப நீயே ஒரு எபிசோடு டைரக்ட் பண்ணியிருக்க… “  பரவாயில்லைடி… நீ கூட கதை எழுதலாம் போலிருக்கே… ஆஹ்ஹா வென்று சத்தம் போட்டு சிரித்தான்.
காலிங்க பெல் ஒலித்தது. கதவை திறந்தான், புன்னகையுடன்  எதிர் பிளாட் ஓனர். பின்னால் அந்த கட்டை மனிதன்.
“ ஸார்..  இவன்  அமர்..   ரொம்ப நல்லவன். இவனை மீறி ஒரு பொருள் வெளியே போவாது கட்டிடத்தை இவன் பொறுப்பில தான் விட்டிருக்கேன். தமிழ் தெரியாத இவனுக்கு ஸிஸ்டர்தான் கேட்கிறப்ப தண்ணி குடுக்கும்னு சொன்னான்.  இன்னிக்கு ரக் ஷா பந்தனாம். அதான் ராக்கி குடுக்கனும்னு சொன்னான்…”
சுசி முதன் முதலாய் அவனை  பார்த்து புன்னகைத்து வாங்க அண்ணா என்றாள்.

( பாக்யாவில் வெளிவந்தது)
எத்தனை காலம்தான்  ஏமாற்றுவார்   இந்த பூமியிலே…..?” .

இந்தியா வம்சாவளி விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் இந்த 57 வயசுல விண்வெளிக்கு இரண்டாவது முறை போயிருக்காங்க.. அவங்க தைரியம்… சாதனையை  நினைச்சா பிரமிப்பா இருக்கு. இப்படி  விஞ்ஞானம்  அசுர வேகத்துல வளர்ந்துகிட்டிருந்தாலும்… மறுபக்கம்  மூட நம்பிக்கைகள்  ஏமாற்று வழியில்   நுழைஞ்சிடுது.  என் பேஸ்புக்ல இருந்த ஒரு நண்பரின் பக்கங்களை பார்த்து கொண்டிருந்த போது.. “ பாஸ்ட் பர்த் அனலைசர்.. “ அதாவது நம் முன் ஜென்மம் பற்றிய விவரங்களை சொல்லும் ஸாப்ட்வேர் இருந்தது. அதில் அந்த நண்பரின் முன் ஜென்மம் குறிப்பு இப்படி இருந்தது.
பிறப்பு :  சவுதி அரேபியா
வருடம் : 1662
இறப்பு : போரில் கொல்லப்பட்டு
மறுபிறப்பு: 16-07-1987
மற்றும் முன் ஜென்மத்தின் அவருடைய குணாதிசயங்கள்….  செய்த பணி பற்றி குறிப்பிட்டு இருந்தது.  மறு பிறப்பில் குறிப்பிட்டு வந்த அந்த தேதி  நண்பரின்  உண்மையான தேதிதான். இதை வேறு ஒரு தோழியிடம் காண்பித்த போது  ‘திக்’ என்று ஆகிவிட்டார். இது ஏமாற்று வேலை என்று எனக்கு தெரியும். அதை அவருக்கு விளக்கும் முன் வேறு சிலரின் குறிப்புகளையும் என்னதான் என்று பார்ப்போமே என்று அந்த அப்ளிகேஷனில்  நுழைந்தேன்.  என்  கணவர் முற்பிறப்பு ஆஸ்திரிலேயா என்றும் காதல்  தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர் என்றும் இருக்க.. பாவம் இவரா காதலிச்சிருப்பாருன்னு … என ஜோக் அடித்துவிட்டு என் மகள் ஐடி க்கு அந்த அப்ளிகேஷனில் போக  முற்பிறப்பு பிலிப்பைன்ஸ் என்றும் ஆணாக பிறந்த அவர் யானை மிதித்து கொல்லப்பட்டவர் என்றும் மறுபிறப்பில் என் மகள் பிறந்த நாள் சரியாக இருந்தது. எப்படி இந்த பிறவி தேதி அத்தனை சரியாக இருக்கிறது என்று தோழி வியந்தார்.  நாம் மெயில், பேஸ்புக் அக்கௌண்ட் உருவாக்கும் போது   நம்முடைய புரோபைலில் என்ன தேதி குறிப்பிடுகிறோமோ  அதுதான்  அந்த அப்ளிகேஷனில் நுழைந்து மறுபிறப்பு தேதியாக காட்டுகிறது என்பதை விளக்கினேன். நாம் சரியான தேதியை குறிப்பிட்டு இருந்தால் அதுதானே அதில் காண்பிக்கும். அது ஏமாற்று வேலை என்பதை உணர்த்த புரபைலில் பிறந்த தேதியை மாற்றி  அந்த அப்ளிகேஷனில்  சென்று பார்த்தால்  நாம் மாற்றிய தவறான தேதியையே மறுபிறப்பு தேதியாக  அது காட்டும். இந்த மாதிரி விஷயங்களை இணையத்தில் விடுவது அப்பாவி மக்களை முட்டாளாக்கவா… அல்லது திரில்லான ஒரு பொழுது போக்குக்காகவா…?    அதை பரீட்சித்து  பார்க்கும் மன தைரியம் இல்லாத  சிறுபிள்ளைகள்  ஏதேதோ கற்பனை செய்து கொண்டு மன  அழுத்தத்திற்கு  ஆளாகலாம்      இல்லையா…?
புதுசு புதுசா மோசடிகள் பெருகி கொண்டேதான் வருகிறது. ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு அதை ஒரு பதினான்கு பேருக்கு அனுப்பினால் பத்து நிமிடங்களுக்குள் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று இருக்கும். படித்தவர்கள்  கூட இதை நம்பி பார்வேர்டு செய்கின்றனர்…  ஆனால் பாவம் பத்து    நாள்  ஆனாலும் எந்த அதிசயமும் நடப்பதில்லை….!  இணைய தளங்களிலும்.. மொபைல் போன்களிலும்  மூட நம்பிக்கைகளை விதைத்து வரும் விஷயங்களை வேரோடு அழிக்க சம்பந்த பட்டவர்கள்  முன் வர வேண்டும்.
 கவிதை



எங்கோ ஒரு
மூலையில்
புதைந்த காதல் பக்கங்கள்
மௌன வரலாறாய்
மனதுக்குள்
தொலைந்து போயிருக்கும்..
தேவைப்படவில்லை…

எனக்கு பிடித்ததெல்லாம்
உனக்கும் பிடித்து போனது
பிறிதொரு நாளில்  யாவும்
பிடிக்காமல் போன போது
கை கோர்த்த நாட்கள்
கண்ணாடி பிம்பங்களாய்..
எடுத்து பார்க்கவும்
உடைத்து போடவும் முடியாமல்..!
கவிதை



காத்திருக்கிறேன்..
‘ஞாயிறு’… வந்தாலும்
விடியாத பொழுதாய்
போர்வைக்குள்
சுருண்டு கொள்ளும் ஞாயிறை
சந்திக்க..!
கவிதை



பேசுகிறேன்
பேசுகிறேன்
உன்னுடன்
பேசாமல் போன
கணங்களை
புலம்பி
மனதுக்குள்
உன்னோடு..!
கவிதை



மரத்தடியில்
உதிரும் பூக்களின்
நறுமணமாய்
விட்டு சென்ற
நினைவுகளின்
வாசம்..!
சிறுகதை
     


 பள்ளிக்கூடம்

                                                                                                
“ மேகா.. எழந்திரு டியர்.. இன்னியிலர்ந்துதான் நீ க்ளாஸ் ஜாய்ன் பண்ணப்போற.. தூங்கிட்டே இருந்தா எப்படி?
சந்துரு நான் போய்த்தான் ஆகனுமா? சிணுங்கினாள்.
“எவ்வளவோ படிச்சிட்ட..  இது பத்து நாள் கோர்ஸ்தானே.. உனக்காகவும் நம்ம எதிர்காலத்துக்குகாகவும்தான்மா…
“ க்கும்.. சலித்து கொண்டே ரெடியாகி கிளம்பும் போது அம்மாவின் போன், “ மேகி ம்மா.. நேத்து மாப்பிள்ளை விஷயத்தை சொன்னார்..  நானும் அப்பாவும் சிரிச்சுண்டோம்.. தானா தெரிஞ்சிக்க வேண்டியதை க்ளாஸ் போய் கத்துக்க போறத நினைச்சி. எனி வே ஆல் தி பெஸ்ட்,,! “
மேகா இருபத்திரெண்டு வயது அழகுப் பதுமை. எம்.சி.ஏ முடித்து பிரபல ஸாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. அம்மா வீட்டிலிருந்த போது வீட்டு வேலைகளில் எதையும் தொட்டு கூட பார்க்க மாட்டாள். மஞ்சள் தூளுக்கும், மிளகாய் தூளுக்கும் கூட வித்தியாசம் தெரியாது.
 அம்மா தலைப்பாடாய் அடித்து கொள்வாள்,  “  எனக்கு செய்யலைன்னா பரவாயில்லை.. நாளைக்கு உனக்கு வர்ற புருஷன், குழந்தைகளுக்காவது சமைச்சி போட தெரியனுமில்ல..”
“ போம்மா..  உப்பு, புளின்னு அடுப்பங்கரையிலேயே அடைஞ்சி கிடக்க நான் என்ன பத்தாங்க்ளாஸா? கை நிறைய சம்பாதிக்கிறேன்… வேலைக்காரி வெச்சுப்பேன். “

“ ஆமாமா.. வேலைக்காரி  இருபத்தி  நாலு மணி  நேரமும் கூடவே இருப்பா வா…”  வீட்டு வேலைக்குதான்  ஆள் வருவா…  நம்ம வீட்டு கிச்சனை   நாமதானே பார்க்கனும்”
மாப்பிள்ளை சந்துருவும் ஸாப்ட்வேர் எஞ்சினியர், பெண் பார்க்க வந்த போதே சொல்லிவிட்டாள் அவளுக்கு சமைக்க தெரியாது என்பதை. ஹோட்டலில் சாப்பிட்டே பழகிவிட்ட அவன்  அது பற்றி கவலை படவில்லை. கவலை இப்போது மேகாவிற்குதான். வாய்க்கு ருசியாய்.. சத்தாய் அம்மாவின் வீட்டு சாப்பாடே சாப்பிட்டு பழகியவளுக்கு இப்போது திருமணமாகி  தனியாக போய் இரண்டு மாதமாய் கேண்டினில் சாப்பிட்டது வயிறு பிரச்சினை. டாக்டர் இனி வெளியில் எங்கும் சாப்பிடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டு விடவும்  சமைக்க  கற்றுக் கொள்ள ‘ கேட்டரிங்’ க்ளாஸ்  போகிறாள்.
சிறுகதை:
                         “ ஐய்.. என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா….! “
    
மதனுக்கு நாளைய பொழுதை நினைக்கும் போதே சிலிர்த்தது. மனசுக்குள் குதூகலம் எட்டிபார்த்தது, ‘ம்..எத்தனை நாள் இதற்காக காத்திருந்தேன்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது மிஸ் பண்ணாம அனுபவிக்கனும்’  இதோடு விட்டுட்டா எப்ப கிடைக்குமோ?
திருமணத்திற்கு முன் எவ்வளவு ஜாலியாக இருந்தேன், இந்த கல்யாணத்துக்கப்புறம் எல்லாம் போச்சி. எமகாதகி விட மாட்டா. காட்டு கத்தலா கத்தி என் மானத்தை வாங்கிடுவா. பிள்ளைங்க ரெண்டு பெத்தாச்சு அதுங்க உங்களை பார்த்து கெட்டழியனுமான்னு.. ரகளை பண்ணிடுவா.
            பாரதியாம்.. பாரதி மீசை வைக்காத பாரதின்னு நினைப்பு. என்னா ரூல்ஸ் பேசுவா. அவ அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். நான் மட்டும் பசங்களோடு போய் பார்த்துட்டு வந்துடறேன்னு ஒரு வழியா கிளம்பினா. நல்ல வேளை என்னை கம்பெல் பண்ணி கூப்பிடலை ஒருவேளை அழகான ஷாலு கூட காரணமாயிருக்கலாம். அதான் என் மச்சினி .   நிம்மதியா போச்சு.. நான் எதிர் பார்த்த சந்தர்ப்பத்தை அவளே ஏற்படுத்தி கொடுத்துட்டா.
யாரும் வந்து காரியத்தை கெடுத்து விடக் கூடாதுன்னு மனசுக்குள்ள பிளான் போட்டேன்.    பேப்பர்காரனுக்கு, பால்காரனுக்கு போன் பண்ணி நாளை வர வேண்டாம் என்றேன்.  நாளை விடியும் போது நான் மட்டும் இருப்பது தெரிந்து பக்கத்து வீட்டு ரிடையர்டு கேஸ்.. ராகவன் ஸார் வந்து தொலைத்தால்.. லொட லொடன்னு பேசிகிட்டு   நான் ஏங்கிகிட்டிருக்க விஷயம் அதோ கதிதான். வெளி பக்கமாக யாருமில்லாதது மாதிரி பூட்டு போட்டேன்.  கேட் வழியே பார்த்தால் என் செருப்பு காட்டி கொடுத்து விடுமோ என்று சாமர்த்தியமாக  ஒரு ஓரமாய் பதுக்கினேன். எல்லா ஜன்னலையும் சாத்திவிட்டு ஸ்கீரின் போட்டேன். வெளிச்சம் வேண்டாம்னுதான். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன் ‘அப்பாடா இப்பதான் நிம்மதியா ஆச்சு  நாளை ஒரு ஞாயித்துக்கிழமையாவது காலையில பதினொரு மணி வரைக்கும் தூங்க போகிறேன்’.பாரதி இருந்தா விடமாட்டா.. படிக்கிற பிள்ளைங்க உங்களை பார்த்து கத்துக்காதான்னு  கத்தி அலாரத்தை விட ஆறு மடங்கா அலறுவா.  “ நாளைக்கு எப்ப வேணா எழுந்திருப்பேன் எப்ப வேணா சாப்பிடுவேன்டி பாரதி..” ஆஹ்..ஆஹ்ஹா வென்று ஒரு நாள் பேச்சுலரா மனசுக்குள் கொக்கரித்தேன்.
“  நாட்டு நடப்போய்….”


“ நம்ம ராமசாமி பெரிய இடத்திலதான்பா பெண் எடுத்திருக்கான்… கல்யாண பந்தியில இலையில் எல்லாருக்கும் ஒரு வாழைப் பழம் வச்சிருந்தாங்கப்பா..”
“மாமி கிராண்டா இல்ல கொலு வச்சிருக்கா.. வர்றவாளுக்கு  வெத்தலை பாக்கு தாம்பூலத்துல ஜதை வாழைப்பழமில்ல சேர்த்து தர்றா…”
“சீனு அம்மாம் பணத்தை வச்சிட்டு ரொம்ப கஞ்ச பிசினாறிப்பா… பத்திரிக்கை வைக்கிறப்ப வெத்திலைப் பாக்கோட  ரெண்டு சாத்துக்கொடில்ல எடுத்துட்டு வந்தான்..?”
வாழைப்பழத்துக்கு வந்த வாழ்வு பாருங்கள். பங்க் கடை , பிளாட்பாரம்.. பெரிய கடைகள்னு சீப்பு சீப்பா கடை பரப்பிகிட்ட இருந்த வாழைப்பழம் இப்ப சீப் இல்ல…’ chief ‘ ஆ  இல்ல ஆயிடுச்சு.  வேலையில்லாம உட்கார்ந்திருக்கவனிலிருந்து  சாப்பிட நேரமில்லாம சுத்திக்கிட்டிருக்கவன் வரை பசிக்கிற வயத்துக்கு சமாதானம் சொல்லிகிட்டிருந்தது ரெண்டோ  நாலோ வாழைப்பழத்தை புட்டு போட்டு சிங்கிள் டீயை ஊத்திகிட்டுதான்.!   இப்ப   அதவிட ‘சரவண பவன்’ ல ரெண்டு இட்லி சாப்பிடலாம்னு புறப்பட்டுட்டாங்க. பின்ன.. ஒரு பழமே அஞ்சு ரூபா இல்ல ஆயிடுச்சி? 

அது சரி உற்பத்தி குறைஞ்சதால இந்த கிடு கிடு விலைங்கிறாங்க.  

மஞ்ச பையோடு வாழப்பழ தார் எடுத்துகிட்டு கிராமத்திலருந்து   நம்ம பார்க்க வர்ற பட்டிக்காட்டு  சித்தப்பு, பெரியப்பு எல்லாம் இப்ப ஹீரோ கணக்கா ஆயிட்டாங்க. ஒஸ்தின்னு வாலாட்டிகிட்டிருந்த ஆப்பிள் பக்கத்தில இப்ப‘நாங்களூந்தேன்’ னு வாழை பழமும் உட்கார்ந்துக்கிட்டதால   அவுகளுக்கு  இந்த பில்- டப்பு..!
 
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா காலையில சிக்கல் இல்லன்னு மருத்துவம் சொல்லுது. அதெல்லாம் வாணாம் தினம் ஒரு வாழை பழ விலையை கேட்டாவே போதும்..  சிக்கல் இல்லாம கலக்கிடும்னு பொருளாதாரம் சொல்லுதுங்க. 

Saturday 25 August 2012

 

நினைத்ததை பரிமாறிக் கொள்வோம்


எழுத்துப் பிழை வார்த்தையின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.  டைப் பண்ணும் போது. சில சமயம் எதோ ஒரு எழுத்து மிஸ் ஆகிவிடும். மெயில் அனுப்பிவிட்ட பிறகுதான் என் கண்ணில் படும். நான் இதற்கு முன் ஒரு  மெயிலில் விஷயத்தை என்று டைப் பண்ணும்போது ‘ ’ வை மிஸ் பண்ணிட்டிருக்கேன். விஷயம் விஷமாகி விட்டது. எதிர் வீடு என்பதற்கு எதிரி வீடு என்றும் ஒரு சமயம். அப்பப்பா அர்த்தம் ஏனப்பா இப்படி மாறுகிறது.எழுத்தை மிஸ் பண்ணும் போதுதான் வார்த்தை, அர்த்தம் மாறிவிடுவதில்லை. குறில்,   நெடில், புள்ளி ஒவ்வொன்றிலும் கவனமாக இருந்துதான் ஆக வேண்டியிருக்கு.  வருக என்பதில் ‘ வ ‘  விற்கு கால் போட்டுவிட்டால் அது யாரையாவது வார சொல்லி காலை வாரி விட்டிரும்.  ( தப்பு பண்ணிட்டு இதுல துணைப்பாடம் வேறவா..என்று என் மனசு முணு முணுக்கிறது)
பேசுவதை விட எழுத்திற்கு ரொம்ப பவர்புல்ங்க… பேசும் போது ஒரு நல்ல சிந்தனையை சொல்லனும்னா கூட பேச்சாளர் சுவாரஸ்யமா மக்களை தம் பக்கம் இழுத்தால் தான் அது மக்கள் கிட்ட போய் சேரும். இதை  இளைய ராஜா கூட அவருடைய அனுபவங்கள்ல சொல்லியிருக்காரு. ஒரு முறை அவர் அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு பதில் இளையராஜாவும், அவருடைய மற்றொரு அண்ணன் பாஸ்கர் அவர்களும் ஒரு மேடையில்  தேர்தல் பேச்சுக்காக பாடல் பாடி பேச  போயிருக்கிறார்கள். பாவலர் வணக்கம் என்று சொல்லும் போது கிடைக்கும் கை தட்டல் கூட  நிகழ்ச்சி முடிந்து கடைசி வரை  இவர்களுக்கு கிடைக்கவில்லையாம். ஆனா எழுத்து  நாம எப்படி எழுதுகிறோமோ அப்படி வசியம் பண்ணிடுங்க. கோபம், வீரம், தத்துவம்.. அன்பு.. நம்பிக்கை … நகைச்சுவை  இப்படி பேனாவால எதை வடிச்சாலும் படிக்கறவங்களுக்கு அந்த உணர்வு வருங்க. அதனாலதான் எழுத்துக்கு ரொம்ப பவர்புல் !  நகைச் சுவையை விரும்பாதவங்க யாருமே இருக்கமாட்டாங்க. இந்த சுவை  இல்லாத வாழ்க்கை சப்னு சுவாரஸ்யம் இல்லாம இருக்கும். ஒரு    நாளைக்கு குறைந்த பட்சம் ரெண்டு முறையாவது  சிரிக்கனும். சிரிக்க வைக்கனும். அது கூட இல்லாத சீரியஸ் ஆள் .. ம்ஹும்.. ரொம்ப கஷ்டம் அந்த இடம் சிறை மாதிரிதான் இருக்கும்.
தென் கட்சி கோ.சுவாமி நாதன்  விஷயத்தை சொல்லிட்டு கடைசியில் சிரிக்கிற மாதிரி பண்ணிடுவாரு. அவர் சொன்னதில நான் ரசிச்ச ஓன்று:-
ஒரு எழுத்தாளர் தான்  எழுதி வச்சிட்டிருந்ததை எல்லாம் கொயர் கொயர் பேப்பரா அடுக்கி வச்சிகிட்டு கவலையா இருந்தாராம். அப்ப ஒரு ஆள்  சந்திக்க வந்திருக்கான். இவரை பார்த்து ஏன் இப்படி உம் முனு இருக்கிங்க? ன்னு கேட்டிருக்கான். அதுக்கு எழுத்தாளர் நான் எழுதரதை இந்த ஊடகங்கள் புரிஞ்சுக்கறதேயில்லை. இந்த பதிப்பாளர்களுக்கு   நல்ல எழுத்தை போட தெரியவில்லை.அப்படிதான் ஒரு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் வெறுத்து போய் தான் எழுதினதை எல்லாம் பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டு விட்டாராம். அதுல ஒரு பேப்பர் மளிகை கடையில  பொட்டலம் மடிக்கப்பட்டு  ஒரு ஆள் கையில் கிடைச்சிருக்கு.  அவர் அதுல இருந்த எழுத்தை படிச்சி.. இத்தனை அருமையா எழுதர யார் அவர்…? னு மளிகை கடைக்காரரை விசாரிக்க அவர் பழைய பேப்பர்க் காரரை கை காட்ட மேட்டர் முடிந்தது. மிச்சமிருந்த பேப்பரை எல்லாம் வாங்கி புத்தகம் போட்டாராம். அதற்கப்புறம் அந்த ஆங்கில எழுத்தாளர் ஒஹோன்னு போயிட்டாருங்க என்றார். உடனே சந்திக்க வந்த ஆள் ,  “ கவலைப் படாதீங்க நீங்களும் ஓஹோன்னு ஆயிடுவிங்க அதுக்குதான் நான் இப்ப வந்திருக்கேன் என்றாராம். உடனே எழுத்தாளர் முகம் மலர்த்து , “ அப்படியா நீங்க எந்த பதிப்பகத்துலர்ந்து வந்திருக்கிங்க? “ என்றார். அதற்கு வந்தவர், “  நான் பதிப்பகத்திலர்ந்து வரலை… பழைய பேப்பர் கடையிலிருந்து வந்திருக்கேன்..!”  என்றார்.
அப்படித்தான் ஒரு நாள் கீரை கிள்ளிகிட்டிருந்தேன்,  நேரமாயிச்சுன்னு என் மகளை கூப்பிட்டு கொஞ்சம் கிள்ளிறியாம்மா என்றேன்… அதற்கு அவள் கொஞ்சம் என்ன நிறையவே கிள்றேனே என்று ‘ சுருக் ‘ கென்று  என் கையை கிள்ளிட்டு ஓடிட்டா.   பசங்க விவரமானவங்க   நாமும் முதல்லயே விவரமா சொல்லிட்டாதான் நல்லது.

ஒரு விஷயத்திற்கு வருவோம்  நிறைய பேர் கிட்ட திறமை இருக்கும், ஆனா சில பேர் உயரத்துக்கு போறாங்க… சில பேர் நின்ன இடத்துலயே இருப்பாங்க. இதுல யாரை யார் இடம் மாற வைக்குதுன்னு பார்த்தாக்கா “ உழைப்புதான்..!”  தோல்வியே வந்தாலும், மனசு உடையாத உழைப்பு இருக்க வேண்டும். உலகத்தில சிறந்த நறுமணம் வியர்வையின் வாசம் னு சொல்வாங்க. கஷ்டபட்டு உயரத்துக்கு போனவங்களை பார்த்தா அவங்க அனுபவங்கள்  பிரமிப்பா இருக்கும். ஏன்னா அந்த வலிகள் நமக்கு தெரியாதது. ஒரு வேளை உணவிற்கு கூட தவித்து, வானமே கூரையாக வாழ்ந்து வானத்தை எட்டி பிடிக்கும்    அளவு   உயர்ந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்படி   ஒரு அனுபங்கள் நமக்கு கிடைக்கவில்லையே என்று கூட ஏக்கப்பட்டிருக்கிறேன். கஷ்டபட்டு முன்னுக்கு வந்தவர்கள் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.  பசி இருந்தால்தான்  தெரியும் ருசி.   நாம் கடவுளிடம் வேண்டுவது,’ உழைக்க தெம்பு’… என்பதாக இருக்கட்டும்.
பேராசைக்கும், வெற்றிக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெற்றி நாம் ஒன்றின் மேல் ஆசைப் பட்டு அதற்காக உழைத்ததால் கிடைத்த பரிசு! பேராசை குறுகிய காலத்தில் தகுதி இல்லாமலே  தேடிக் கொள்ளும் பொருள். ஸோ.. ஆசைப்படுவோம். ஏணியில் ஏறுவதற்கு முன் நடை வண்டி தள்ளி பழகுவதையும் குறைவாக  நினைக்காமல்.

Saturday 18 August 2012

கவிதை ( அனாதையான முதியவர்கள் )



"  அனுபவ பொக்கிஷம் "

கடந்து வந்த
பாதைகளின்
' முக'வரிகள்...
பிரயாணித்த
தடங்களின்
அனுபவங்கள்..
ஓடியாடி உழைத்த
நாட்களை
தளர்ந்த நடையிலும்
தளராமல் அசை போடும்
முதுமை..!
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
ஜட பொருள்களுக்குதானே...?
அனுபவ பெட்டகமான
முதியோர்களை
போற்றி பாதுகாப்பது விட்டு
வீதியில் ஏன் தொலைத்துவிடுகிறீர்..?

காதல் தத்துவமுங்கோ

ஒரு மனிதனுக்குள் புது உணர்வா காதல் நுழைஞ்சதாம். மனுஷனுக்குள்ள இருக்கிற உணர்வுகளோட ஒன்றிப்போகலாம்னு சந்தோஷத்துகிட்ட போய் கை கொடுத்துச்சாம், ஆனா சந்தோஷமோ “வேண்டாம் உன் உறவு நான் மகிழ்ச்சியா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா.. உன்னை ஏத்துகிட்டா என் சந்தோஷமே போயிடும் ஆளைவிடு” ன்னு வேகமா நழுவிக்குச்சாம். சரின்னுட்டு வீரத்துகிட்ட போய் கை கொடுத்துச்சாம், வீரமோ “போ.. போ நான் உங்கிட்ட தோத்து போய் கோழையாக முடியாது “என்று விரட்டியது. இப்படியே ஒவ்வொரு உணர்வுகளும் அதை விரட்டியடிக்கவும் காதல்  சோகமா, சோகத்துகிட்டவாவது சேர்ந்துக்கலாம்னு விண்ணப்பிக்க சோகமோ, “சரியா போச்சு போ நானே சோகமா இருக்கேன்..  இதுல நீ வேறயா? “ ன்னு திட்டி கழுத்தை புடிச்சி தள்ளிச்சாம்.  மனுஷனை விட்டு வெளியில வந்த காதல் யாருமே என்னை ஏத்துக்க மாட்டேங்கிறாங்க எதுக்கு நான் இருக்கனும் னு புலம்ப..  ஒரு குரல் “ வருத்தப்படாதே.. நான் இருக்கேன்னு… “ஆதரவா தோள் தட்டி கை கொடுத்துச்சாம். ஆமா    நீ யாரு?ன்னு காதல் கேட்டுச்சாம். அதுக்கு அந்த குரல், நான் தான் "காலம்.." சமயம் பார்த்து உன்னை எல்லாரோடும் சேர்த்து வைக்கிறன்னு சொல்லுச்சாம்.
( காதல் வந்து சந்தோஷமா இருக்கிறதும், சோகமாவுறதும் , கோழை ஆகி தற்கொலை பண்ணிக்கிறதும்  இந்த காலம் பண்ற வேலைதானுங்களா…? எல்லாம்   நேரம்ங்க…!)
சுவர்க்கம் எங்களுக்கு ரொம்ப கிட்ட..!



ஒரு யாத்திரிகர் எல்லா நாட்டுக்கும் பயணம் கிளம்பினார். கனடாவுல ஒரு ஆலயத்துக்கு  போறார் அங்க  சொர்க்கத்துக்கு போன் போட்டு பேசுனும்னா 10000 டாலர் என்று இருந்தது , சரின்னுட்டு ஜப்பான் போறார் அங்கேயும் ஒரு ஆலயத்தில் சொர்க்கத்துக்கு பேச 20000 டாலர் என்று இருந்தது. இப்படியே ஒவ்வொரு நாடா போறார் எல்லா நாட்டு ஆலயத்திலும் 30000 , 40000  என்று இருந்தது. கடைசியா இந்தியா வர்றார் . இந்தியாவில் இருக்கிற ஒரு ஆலயத்திற்கு   போறார். அங்க சொர்கத்துக்கு பேச ஒரு ரூபாய் என்று இருந்தது. ரொம்ப ஆச்சரியமான யாத்திரிகர்  ஆலயத்தில் இருந்த சாமியாரை கேட்கிறார். எல்லா நாட்டிலயும் சொர்கத்துக்கு பேச ரொம்ப காஸ்ட்லியா இருக்கு உங்க நாட்டில மட்டும் எப்படி ஒரே ஒரு ரூபா என்று கேட்டார். அதற்கு சாமியார்  சொன்னார் சொர்க்கம் எங்களுக்கு லோக்கல் கால் என்று.
(சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா..ன்னு ராமராஜன் மாதிரி பெருமையா பாட ஆரம்பிச்சிட்டிங்க போலிருக்கு..  யப்பா ... எப்படியோ தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்தவங்க வரலாற்றுல என் பேரும் வந்துடுச்சி.. ! )
கவிதை

 

காதலுக்கு சம்மதமாய்
 தலையசைத்தது -
காற்றோடு
மொழி பேசிய பூக்கள்..!

 **********
வாடிப்போகும்
என்றுதான்
ஒப்பீடா-
காதலை மலரோடு..?
சிறுகதை:                   
“காலம் மாறும்…! “


“ பாஸ்கர் நான் ஊர் பக்கம் போயிருந்தேன்  உங்க அம்மாவால முன்ன மாதிரி வேலை செய்ய முடியல நீதான் இங்க வசதியா இருக்கியே அழைச்சிட்டு வந்திடாலாமில்ல?
சரவணன் கேட்டதும் சுருக்கென்று வந்தது, “ நானென்ன அம்மாவை பார்த்துக்க மாட்டேன்னா சொன்னேன்.. அவங்க வீம்பா கிராமத்த விட்டு வரமாட்டேன்னு சொன்னாங்கன்னா நான் என்ன பண்ண முடியும்..? “
“என்னவோ போப்பா உன்னை கஷ்ட பட்டு படிக்க வச்சிட்டு இப்பவும் அங்க திண்ணை பள்ளிக்கூடம் நடத்திகிட்டு யாராச்சும் குடுக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு இருக்கா உசிரோட இருக்கிறப்ப கவனிக்காம அப்புறம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்..? “
அம்மா மேல் கோபமாக வந்தது எவனாவது ஊர்க் காரன் கண்ணில் பட்டால் போதும் இதே கேள்வி  நானென்ன அத்தனை கல் நெஞ்சக்காரனா? என்னை படிக்க வைப்பதற்காக அவள் பட்ட சிரமம் கொஞ்ச நஞ்சமில்லை.. மருத்துவ படிப்பு முடித்து இங்கு பிராக்டிஸ் ஆரம்பித்த போதே அம்மாவை  இங்கேயே வந்துவிடும்படி அழைத்தால் பிடிவாதம் பிடித்து என்னையும்  கிராமத்திலேயே ஆஸ்பத்திரி வைக்க சொன்னாள். இத்தனை கஷ்டப் பட்டு படித்து விட்டு அந்த ஊரில் வைத்தால் என் பிழைப்பு என்னாவது? இங்கே  கிளினிக்கில்  நல்ல வருமானம். உடன் படித்த   அர்ச்சனாவுடன் காதல் கல்யாணம்.. வாழ்க்கை சொகுசுக்கு குறைவில்லை . அம்மாவை  நினைத்தால்தான் மனம் சஞ்சலமாகிவிடும், மாதம் பணம் அனுப்புவதை கூட ஏற்க மறுத்துவிட்டாள்.
இந்த முறை அவனே நேரில் சென்று அம்மாவை வலுக்கட்டாயமாய் அழைத்து வந்து விட வேண்டும் என்று கிளம்பினான். புழுதி படர்ந்த அந்த மண் சாலையை கிழித்துக் கொண்டு கார் அந்த ஊருக்குள்   நுழைய.. ஏதோ உலகை அதிசயத்தை பார்த்த மாதிரி “ காரு வருதுடா டோய்..” கிழிந்த ட்ரவுஸர்களுடன்  ஏழெட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். பிசாசுகள் குளித்து எத்தனை நாளாயிற்றோ இந்த கிராமம் நூறு வருஷம் ஆனாலும் மாறப் போறதில்லை.  அவன் வளர்ந்த தெரு அப்படியேதான் இருந்தது கை பம்பு பக்கத்தில் சாக்கடை ஓடிக்கொண்டு, ஓலை குடிசைகளும் அவரை பந்தல் போன்ற ஓட்டு வீடுகளும். அவன் வீட்டு முன் காரை    நிறுத்தினான்.
நைந்த உடையில் சின்ன சின்ன பிள்ளைகள் அம்மாவை சுற்றிலும் உட்கார்ந்து படித்து கொண்டிருந்தன. “ ஊக்கமது கைவிடேல்” எங்கே சொல்லுங்க என்றதும் கோரஸாக கத்தின.அம்மாவின்  அப்பா அந்த காலத்தில்  ட்ரெயின்ங்   எடுக்காமல் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தவர். அம்மாவை நாலெழுத்து படிக்க வைத்து மிலிட்டிரிக்கார  மாப்பிள்ளைக்கு கட்டி தந்தாராம்.  பாஸ்கர்  இரண்டு வயதாக இருந்த போது எல்லை பாதுகாப்பில் இருந்த அப்பா அங்கு  நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டார் என்று அம்மா சொல்லித்தான் அவனுக்கு தெரிந்தது. எப்படியாவது இவனை நன்றாக படிக்க வைத்து இந்த ஊருக்கு நல்லது செய்ய வேண்டும்  என்று பாடுபட்டாள்.
“ அம்மா “ என்றதும், தலை நிமிர்ந்தவள்  “அடடே  பாஸ்கர் என்னப்பா திடீர்னு வா உட்காரு” துரு பிடித்த அந்த இரும்பு சேரை இழுத்து போட்டாள். பாஸ்கருக்கு எங்கே தன் உடைகள் அழுக்காகி விடுமோ என்று யோசித்து கர்ச்சீப்பால் துடைத்து விட்டு உட்கார்ந்தான். அதற்குள் அக்கம் பக்கத்திலிருந்து சூழ்ந்து கொண்டனர், “ தம்பி எப்படிப்பா இருக்கே? பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் சௌக்யமா? ஏ செல்வி டாக்டரு தம்பிக்கு போய் காபி போட்டு கொண்டா கருப்பட்டி கலக்காத சர்க்கரை போட்டு திக்கா எடுத்துனு வா. அம்மா பானையிலிருந்த தண்ணியை மொண்டு கொடுத்தாள். “ இருக்கட்டும்மா  நீ உட்காரு என்று கையில் வைத்திருந்த மினரல் வாட்டரை இரண்டு மடக்கு குடித்தான்.
“லச்சுமி உன் மகன் பட்டணதுக்கு போய் இன்னும் சிவந்து இல்ல போயிருக்கான்..” ஆளாளுக்கு அவன் தோற்றத்தை வியப்பாக பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களின் வியர்வை அவனுக்கு அருவெறுப்பாக இருந்தது.
“ அம்மா உனக்கென்ன தலையெழுத்தா ? நான் இவ்வளவு தூரம் வளர்ந்தும் இங்க இருந்து ஏன் கஷ்டப்பட்டுட்டு இருக்கே..? அங்க வந்திடு ராணி மாதிரி இருக்கலாம். வசதி இருக்கும் போது அனுபவிக்கனும் . இந்த ஓட்டை ஒடைசல் சாமான்களை  இங்கேயே போட்டுடு.. இப்படியே புறப்பட்டு வா.. போறச்சே நல்லதா துணிங்க வாங்கிக்கலாம். இந்த மூணு மணி நேரத்தில நான் அங்க இருந்திருந்தா  எவ்வளவு சம்பாதிச்சிருப்பேன் தெரியுமா? டைம் வேஸ்ட் பண்ணாம புறப்படு..”
“ என்னப்பா சொன்ன   இங்கேயே பொறந்து இந்த ஊரே பிடிக்காம போன மாதிரி  இந்த அம்மாவும் ஒரு நாள் உனக்கு பிடிக்காம போகும். இந்த பட்டிக்காட்டு பொம்பளைய ஏந்தான் அழைச்சிட்டு வந்தாய்னு உன் பொண்டாட்டி முகம் சுளிப்பா.  மறுபடியும்  என்னை  எங்க  அனுப்புறதுன்னு தவிப்பே.. அந்த சிரமத்தை உனக்கு நான்  தர விரும்பலை.. இதோ இந்த குட்டி பசங்கள்ல    எதாவது ஒண்ணு படிச்சி வரும்.  அது உன்ன மாதிரி நிழல்ல இளைப்பாறிட்டு மரத்தை வெட்ற புள்ளையா இருக்காது.. நிழலை தந்து கிளைகளை பரப்பும்..  நீ போய் வசதியா இரு.. இந்த அரை மணி நேரத்துல அஞ்சு குறள் சொல்லி தந்திருப்பேன்..  “
அம்மாவின்  வார்த்தைகளிலிருந்த உறுதி அவனை வெட்க பட செய்தது. மௌனமாய் கிளம்பினான்.  “ நன்றி மறப்பது நன்றன்று…”  என்ற குறளுக்கு விளக்கம் சொல்லி கொண்டிருந்தாள் அம்மா.
                                                            *******
புரியாத புதிர்…!

உன்னிடம் பேசும் முன்
காதல் இத்தனை
அழகாய் தெரிந்ததில்லை ..!
உன் நினைவுகள் ஆக்கிரமிக்கு முன்
மனம் இத்தனை
ஒப்பனை கொண்டதுமில்லை..!
*****************************
இதெல்லாம் நடந்தது…!
  நிலவை பார்க்க கூட
வானம் பார்த்ததில்லை
அண்ணாந்து பார்க்கிறேன்
வெயில் என்றும் பாராமல்…

ஓயாமல் அங்குமிங்கும்
பயணிக்கும் என் கண்கள்
விட்டத்தில்
இறங்கி  அசையாமல் நிற்கிறது…

தேடி வந்த நண்பர்களை
விட்டு
ஓடிப் போகிறேன்
தனிமை தேவை என்று..
மணிக்கொரு முறை
தேநீர் கேட்கும்
தொண்டை கூட
தேவை மறந்தது..

என்ன நடந்தது கேட்பவர்களிடம்
எப்படி சொல்வேன்..
உன்னை முதன் முதலாய்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் நடக்கிறது என்று…!

 *****************************
*********
“ மறக்காமல் நினைத்து…! “
 நம் கடைசி சந்திப்பு
இன்னும் காட்சியாய்..
மௌனத்தை கிழித்தெரிந்த
உன் வார்த்தைகள்
வரி வரியாய் மனதில்..
நேசிப்பை சொல்ல
ஒரு வார்த்தை போதுமானதாயிருந்தது..
பிரிவுக்கு மட்டும்
பல வார்த்தைகள் தேடி கொண்டிருந்தாய்..
எல்லாம் சொல்லி விட்டு
கடைசியாய் சொன்னாய்-
மறந்து விடு..
அதைத்தான் நினைத்து
கொண்டிருக்கிறேன்  இன்னமும்…!
******************************
*********
காதலே.. போ…!
கை கோர்த்து நடந்தோம்
கால்கள்  கெஞ்சும் வரை…!
சாலையோர இளைப்பாறலில்.. 
  நீ குடித்து மிச்சம் தந்ததால்
இள நீர் இன்னும் சுவைத்தது..!
ஆளில்லா அரங்கில்
என் காதல் பார்வைக்கு
சிணுங்கி சிரித்தாய்..!
இரவுகள் உறங்காமல் போனது..
முகத்தில் உன் உதடுகள்
பதித்த ஈரம் காயாமல்..
இப்படித்தான் இன்புற்றிருந்தேன்..
உன் மறுப்பை சொல்லும் வரை…!



தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்....
இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும்,
ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிட பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது.

பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.

" தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த உள்ள வேற இடம் இல்லை" என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை.

கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.

அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின்.

இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவனின் போராட்டம். இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கையளித்தது.

அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது. அதற்கு தலைவனாக அந்த மன்னனை அமர்த்தியது துணைக்கு தன் பெரும் இராணுவத்தை அனுப்பியது. குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் கெரில்லா போராளிகளாக மாறினர்.

பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமேரிக்க இராணுவத்தோடு போரிட்டால். உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர்.

[போரின் போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகம்.

அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது ]

அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன் தான் யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட அமெரிகக படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது. வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது.

தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "சைகான்" அந்த சிறுவனின் பெயரை எடுத்துக்கொண்டது வரைபடத்தில் "ஹோ சி மின்" நகரம் ஆனது. —





அது ஒரு கனா காலம்

3 Aug





                                                                                                                             
" அம்மா... இந்த ஜாதகம் நம்ம ராஜேஷுக்கு பொருத்தமா இருக்கு.. என் நாத்தனாருக்கு தெரிஞ்ச
இடம்... ஏம்.பி.ஏ படிச்சிருக்கா.. போட்டோவை பாரு பிடிச்சிருக்கா..." சௌம்யா அம்மாவிடம் தர,

" ம்.. பொண்ணு நல்லா லட்சணமாதான் இருக்கா...! போட்டோ அனுப்பி வைப்போம்.. அவன்
என்ன சொல்றான்னு பார்க்கலாம். பகவான்தான் அவனுக்கு புத்தியை கொடுத்து சம்மதிக்க
வைக்கனும்.எதாவது ஒரு குறை சொல்லிகிட்டு வேணாம்னு சொல்லிகிட்டே இருக்கான்..."

" என்னோமோப்பா.. இவனுக்கு ஒரு நல்லதை பண்ணிட்டா நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ்
ஆயிடுவோம்.. சொந்தக்காரா எல்லாம் பையன் வெளி நாட்டுல நல்லா சம்பாதிக்கிறான்..

இன்னும் என்ன கொறைச்சல்.. காலா காலத்துல கல்யாணம் பண்ணிட வேண்டியதுதானேன்னு ....கேட்டுக்கிட்டே இருக்கா..." மாப்பிள்ளை கிரிதரிடம் அப்பா சொல்லி கொண்டிருந்த போதே .. போன் ஒலித்தது. ...' ராஜேஷ் தான் பண்ணுவான் ' என்று சொல்லிக்கொண்டே எடுத்தார்.

" ஹாய் டாடி ஹவ் ஆர் யு அண்ட் மம்மி.. பை தி பை... இந்த முறை கொஞ்சம் அதிகமா பணம்
போட்டிருக்கேன்.. மொத்த கடனையும் கிளியர் பண்ணிடுங்க.. நான் மம்மி கிட்ட அப்புறமா  பேசறேன்... வைச்சிடட்டா...

" இரு ராஜேஷ்.. நம்ம சௌமியும் இங்கதான் வந்திருக்கா.. ஏதோ பேசனும்னா..." சௌம்யாவிடம்
தந்தார்.

" ராஜி.. எப்படிடா இருக்கே... இத்தனை நாளா ரிஜக்ட் பண்ண மாதிரி இந்த முறை உன்னால நோ சொல்ல முடியாது.. பி காஸ் மை செலக்க்ஷன் டா.. பொண்ணு ரஞ்சனி ஏம்.பி.ஏ படிச்சிருக்கா.. அசல் நம்ம ஊர் சினேகா மாதிரியே இருக்கா....."

" ஏய் சௌமி .. உன்ன என்ன பொண்ணு பார்க்க சொன்னேனா...? எப்ப பாரு கல்யாணம்..கல்யாணம்னு..."

" வயசான காலத்துல அப்பா, அம்மாவோட விருப்பம் வேற என்னவாயிருக்கும்... உனக்கு ஒரு நல்லவாழ்க்கை அமைச்சு தர்றதுதானே இருக்கும்...?

" சௌம்யா... எப்ப இருந்தாலும் தெரிய போற மேட்டர்தான்.. நானே எப்படி சொல்றதுன்னு இருந்தேன்.. அப்பாகிட்ட நீயே ஒபன் பண்ணி கன்வினியன்ஸ் பண்ணிடு.. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசமாயிடுச்சி.. என் கூட புராஜக்ட் பண்றா.. பேரு ப்ரூலீ. ."

சௌம்யா பதட்டத்தை காட்டி... " ஏய்.. ராஜி.. என்னோமோ ப்ரூ காபி குடிச்சேன்ற மாதிரி.. சாதாரணமா இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றே...? காமெடி தானே பண்றே..."

" இதுல காமெடி பண்ண என்ன இருக்கு.. அவளுக்கும் நிறைய சம்பளம்.. என் லைப் நல்லாருக்கும்.. அவ சைனாக்காரி...அப்பா கிட்ட சொன்னா சம்மதிக்கமாட்டார்.. நாங்க ரெண்டு பேரும் காதலிச்சி
ரெஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம்...." ...நானே நாளைக்கு போன் பண்றேன்..." பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.
சௌம்யா விவரம் சொன்னதும் அம்மா தளர்ந்து கீழே விழ போனவளை...கிரி தாங்கி பிடித்து தண்ணீர் கொடுத்தான். அப்பா அதிர்ச்சியாய் உட்கார்ந்திருந்தார்.

மௌனத்தை கிரிதான் கலைத்தான்..." மாமா.. நாளைக்கு என்னன்னு விசாரிச்சு பார்க்கலாம்...

எதுக்கும் கவலை படாதீங்க.. எப்படியாவது ஸால்வ் பண்ணிடலாம்..."

அம்மா இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்... " ஈ கடிக்காம...எறும்பு கடிக்காம பார்த்து பார்த்து வளர்த்தேனே ... இதுக்கா படிக்க வைச்சி அனுப்புனேன்... உன் கல்யாணத்தை எப்படி எல்லாம் பண்ணனும்னு கனவு கண்டுட்டு இருந்தேன்..? விசேஷ நாள்லமருமக வாசல்ல கலர் கோலம் போடற அழகும் ... பட்சணம் செய்து பேரப்பசங்களோடு சந்தோஷமா
சாப்பிடற குடுப்பினையும் இதெல்லாம் கனவா போச்சே...."

" ஆமாம்மா இப்ப புலம்பி என்ன...? என்னை மட்டும் பொண்ணுன்னா இப்படி இருக்க கூடாதுன்னுஎல்லாத்துக்கும் ரூல்ஸ் போட்டே.. அவனை இஷ்டத்துக்கும் விட்டுட்டே...."

"ஏய்.. சௌமி ... எந்த நேரத்தில் எப்படி பேசனும்னு உனக்கு விவஸ்தை இல்ல... " கிரி திட்டியதும் அமைதியானாள்.

பெண்கள் கவலையோ.. கோபமோ கொட்டி விடுவார்கள். அப்பா அமைதியாய் ஈஸிசேரில்படுத்திருந்தார்... அவர் மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது ராஜேஷ் பற்றி... தனியார் கம்பெனியில் கிளார்க்காக சொற்ப வருமானத்தில்.. பிள்ளைகளை வளர்த்து.. சௌம்யாவிற்கு கல்யாணம் செய்தது.. ராஜேஷை இன்ஜினியரிங் படிக்க வைத்தது எல்லாமே கடன் பட்டுதான்.
படிப்பை முடித்தவன் வெளி நாட்டு வேலைக்கு செல்வதாக ராஜேஷ் சொன்னதும் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை.

"ராஜி.. அம்மாவால உன்னை பார்க்காம வருஷக்கணக்குல இருக்க முடியாது.. உன் திறமையை இங்கியே காட்டு.. உன் அறிவை எங்கோ விற்க நான் சம்மதிக்க மாட்டேன்..."

" டாடி நீங்க ஏன் அப்படி நினைக்கிறிங்க... நம்ம அறிவை எல்லா தேசத்திலும் நிரூபிச்சு காட்டறது நமக்கு பெருமைதானே.. சரி .. நான் என்ன அங்கேயேவா செட்டில் ஆயிட போறேன்... ஜஸ்ட்.. ஒரு
அஞ்சு வருஷம் சம்பாதிச்சிட்டு வந்துடறேன்.. நம்ம கடனை எல்லாம் அடைச்சிட்டு லைப்பை கொஞ்சம்
வசதி படுத்திக்கலாமே...." அம்மாவை கெஞ்சி சம்மதிக்க வைத்தான். அம்மா

தன் வளையலை விற்று வெளி நாடு போகும் செலவிற்கு தந்தாள்.
"அப்பா நாம செட்டில் ஆகிட்ட பிறகு நீங்க வேலைக்கு போக வேண்டாம்.. அம்மா உனக்கு வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் வச்சிடுவேன்.. நீ ராணி மாதிரி உட்கார்ந்துகிட்டு அதிகாரம் பண்ணனும் என்ன..." கிளம்புவதற்கு முன் ஒரு பௌர்ணமி வெளிச்சத்தில் அம்மாவின் கையில் உருண்டை சாதம் வாங்கி சாப்பிட்டு கொண்டே சொன்னான். "

அம்மா உன் கையால வெறுமனே மிளகா கிள்ளி தாளிச்சா கூட நல்லா இருக்கு.. அப்படி ஒரு ராசி ..."சின்ன வயதிலேயே ராஜேஷ் சுட்டியா இருப்பான். அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு கேரியரை
பையில் போட்டதும்.. ஓடிப்போய் செருப்பை எடுத்து தந்து டாட்டா காண்பிப்பான்.அப்பாவின்சுண்டு விரலை பிடித்து கொண்டுதான் எங்கும்.

பக்கத்து வீட்டு மாமா கேட்பார்.." அடேய் தம்பி ...
ஒரு சாக்லேட் தாரேன்.. உங்கப்பாவை எனக்கு குடுத்திடறியா..."

" ம்.. ஆசை.. தோசை... எது குடுத்தாலும் எங்கப்பாவை தரமாட்டேன்..."
இப்படி பட்டவனா என்னை விட்டு வெகு தூரம் போய்விட்டான்..? லட்சங்கள் லட்சியங்களை புதைப்பதில் என்ன ஆச்சரியம். வளரும் வரை பிள்ளைகளோடு இருப்பது எல்லாம் வளர்ந்த பின் கனா காலங்கள் ஆகிவிடுகிறது .

மறு நாள் அவனே போன் செய்தான், அம்மாதான் முதலில் பேசினாள்..." ராஜி.. நடந்தது எல்லாம் கெட்ட கனவா நினைச்சிகிட்டு அவளை அங்கேயே விட்டுட்டு இங்கேயே வந்துடுடா..பேசிக்கொண்டிருந்தவளை.. " ஸ்ரீமதி நீ என்ன பேச்சு பேசறே..? எந்த நாடா இருந்தா என்ன ஒரு

பொண்ணு வாழ்க்கையை கெடுக்கிறது நம்ம பண்பாடு இல்ல..". குடு நான் பேசிக்கறேன்... அப்பா
பிடுங்கியதும்,

"அப்பா.. சௌமி சொல்லியிருப்பா.. ஸாரிப்பா நீங்க சொன்னா ஒத்துக்க போறதில்லைனுதான் நானே பண்ணிகிட்டேன்.. " எனக்கு இந்த ஹைடெக் லைப் பழகிப்போச்சுப்பா.. ப்ரூலியோடு
இங்கயே செட்டில் ஆயிடலாம்தான்னு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்... மறுபடியும் அங்க வந்து முட்டு சந்து.. கும்பல் வாழ்க்கை இதெல்லாம் .. நினைச்சு பார்க்கவே முடியலை.. நான் மாசா மாசம் பணம்
அனுப்பிடறேன்.. நல்ல வீடா கட்டிட்டு சௌகர்யமா இருங்க.. என் வொய்ப்பை நீங்க பார்க்கனும் இல்லையா... அடுத்த மாசம் அவளை கூட்டிகிட்டு இண்டியா வர்றன்பா..."

ராஜேஷ் வந்ததும் உறவுகளுக்கு சொல்லி ஒரு ரிசப்ஷன் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் ராமனுஜம்.

" இந்த அசிங்கத்தை ஊரை கூட்டி வேற சொல்லனுமாக்கும்.. " அம்மா கேட்டதும்,

" நம்ம பையனுக்கு கல்யாணம் ஆனதை எல்லாருக்கும் தெரிவிக்கனும் இல்லையா,,,?

ராஜேஷ் வருவதற்காக வீட்டை ஓடி ஓடி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.. ஸ்ரீமதி. ' என்ன இருந்தாலும் வெளி நாட்டுல இருந்து வர்றான் இல்ல... என்றாள். ராஜேஷ் வரும் அன்றே ரிசப்ஷன் ஏற்பாடு ஆயிருந்தது. நீள முகத்துடன் கூந்தலை விரித்து கொண்டு முக்கால் பேண்ட்டுடன் அவன்
கையை கோர்த்து கொண்டு வந்த அவளை பார்க்கவே பிடிக்கவில்லை சௌம்யாவிற்கு.

 யாரும் எதுவும் விமர்சனம் செய்ய கூடாது என்று அப்பா அடக்கி வைத்திருந்தார்.

அம்மாவின் ஆசைக்காக காஞ்சி பட்டு சேலையை அவளுக்கு சுற்றி மேக்கப் செய்து ரிசப்ஷனில் நிற்கவைத்தார்கள். ராஜேஷ் மட்டும் அவளுக்கு தஸ்.. புஸ் என்று இங்கிலிஷ் பேசி அறிமுகபடுத்திகொண்டிருந்தான்.

ஆண்கள் பட்டாளம் அவளையே அதிசயமாய் பார்த்து கொண்டு.. வெளி நாட்டுக்காரிக்கு கை கொடுத்தால் கூச்சபட மாட்டாள் என்று சாக்காக க்யூவில் நின்று கை தந்து கொண்டிருந்தார்கள்.

" மாமி.. இவ இட்லி, தோசை எல்லாம் திம்பாளா.. வீட்டுக்கு போனா ஸ்ரீமதி என்னத்தை ஆக்கி போடுவா...? சிலர் வம்பு பேசிக்கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தவர்கள் பேருக்கு ஒரு ஜூசை குடித்துவிட்டு,..." டாடி இந்த அட்மாஸ்பியர் இவளுக்கு சரிபடாது.. பைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டிருக்கேன். "கிளம்பினார்கள்.

லீவு முடிந்து கிளம்பும் போது சொல்லி விட்டு போக வந்தார்கள். இது வரை மௌனம் காத்தஅப்பா," ராஜி.. இதுல நீ இது வரை அனுப்பின பணம் அப்படியே இருக்கு... ரிசப்ஷன் செலவு என் கடைசி கடனாயிருக்கட்டும்.. நீ எவளையோ இழுத்துண்டு வந்தது கூட பரவாயில்லைடா... ஆனா.. முட்டு
சந்து.. கும்பல் வாழ்க்கைன்னு.. கேலியா பேசி உன்னை வளர்த்து விட்ட தாயையும் தாய் நாட்டையும் பழிச்ச பாரு.. இங்க வலிக்குதுடா.. " நெஞ்சை தொட்டவர்,
"ராஜி .. அன்பும் பாசமும் தாண்டா நம்ம வாழ்க்கை .. பகட்டுதான் வாழ்க்கைன்னு வாழற உன் பணம் எனக்கு வேணாம். நான் உன்னை
வளர்த்ததுக்கு கூலி மாதிரி கொடுக்கிற எதுவும் வேண்டாம். சந்தோஷமா போ ஆனா.. உன் கடமைன்னு சொல்லிகிட்டு கடைசியா கூட வரவேணாம்.

" டாடி .. டோண்ட் செண்டிமேட்.. டைம் வில் சேஞ்சஸ் யு ....ஓ.கே ப்ரூ ஸே பை தெம்..."

அவள் சிரித்த படி கை அசைத்தாள். ஸ்ரீமதி கண்ணீர் விட அங்கே சிரிப்புக்கும் அழுகைக்கும் மொழி தேவைப்படவில்லை.




********************

(பாக்யாவில் வெளி வந்த கதை )

மரங்களை வெட்டுங்கள்!!

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்:
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்:
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை:
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு:
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்:
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்
 இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

                                    "  நிழல்..... "
                                                            
     
                                                                                                                                                                                                             கேஷ் கவுண்ட்டரில் பில்லை செலுத்திவிட்டு  ஷாப்பிங் பேக் எடுக்கையில் கொஞ்சம் கனமாக தோன்றியது.. .  பார்க்கிங்கில் இருந்த தன் ஸ்கூட்டியை   நோக்கி  வித்யா  வந்த போது தன் எதிரே வந்த அவனை பார்த்து  ‘திடுக்’ கிட்டு ஒரு  கணம் நெஞ்சுக்கூடு படக்.. படக்கென்று அடித்துக்கொண்டது. “ கடவுளே அவன் என்னை பார்க்காமலே கடந்துவிட்டால் நன்றாக  இருக்குமே.” வியர்த்து கொட்டியது.
அதற்குள் அருகில் வந்துவிட்ட அவன் வித்யாவை பார்த்ததும், ஒரு கணம் திகைத்து.. “ வித்யா என்ன ஒரு ஆச்சர்யம்…?  தேன்ங்க் காட் உன்னை இத்தனை வருஷத்துக்கப்புறம் இங்க பார்ப்பேன்னு நினைச்சிக் கூட பார்க்கலை  நீ இந்த ஊர்லயா இருக்கே… நான் ட்ரான்ஸ்பர்ல இங்க வந்து ஒரு மாசம்தான் ஆகியிருக்கும்,  எப்படி இருக்கே…?

   மெல்ல கண் கலங்கியது,,, “ ம்..    நல்லாயிருக்கேன்..  நீ தினா…?

“எதோ இருக்கேன் …இதோ பக்கத்துலதான் நான் தங்கியிருக்கிற ரூம் இருக்கு  ஒரு பத்து நிமிஷம் பேசலாமா…? “

வித்யா யோசித்ததும்… புரிந்து கொண்டவனாய்…"  கீழே  ஹவுஸ் ஓனர் பேமிலி இருக்கு தயங்காதே…   நடு ரோட்டில் நின்று எங்கே பேசுவது…. வா..!”

எதுவும் பேசாமல் அவன் பின்னாலேயே சென்றாள். “ என்ன சாப்பிடறே… டீ.. காபி… ஓ..நீ அதெல்லாம் குடிக்க மாட்டே இல்லை… ஒன்லி… ப்ரெஷ் ஜுஸ்... ஒன் செகண்ட் .. ப்ரிட்ஜை திறக்க.. “

“ வேண்டாம் … தினா.. எனக்கு டீயே கொடு…”

எதுவும் சொல்லாமல் அடுப்பை பற்றவைத்து டீயை தயார் செய்து..  இரண்டு கப்களில் ஊற்றிக்கொண்டு வந்து எதிரில் உட்கார்ந்தான். இந்த எட்டு வருஷத்தில உனக்கு பிடிக்காததெல்லாம் பிடிக்க பழகி கொண்டாயா வித்தி….?.”
  
     அவன் கேள்வியில் ஏதோ சுடுவது போல் உணர்ந்தாள். புருவத்தை கேள்விக்குறியாய் வளைத்து என்ன கேட்கிறாய் என்பது போல் பார்த்தாள்.

       “….. இல்ல  நாம ஹோட்டலுக்கு போறப்ப எல்லாம் டீ வேண்டாம் எனக்கு பிடிக்காது என்று மறுப்பாயே … அதைத்தான் கேட்டேன்…  நீ வேறு அர்த்தம் எடுத்துக் கொள்ளாதே….”

என்ன இவன்  திருமணத்திற்கு முன் என்னுடன் சுற்றினாயே என்று சொல்லி காட்டுகிறானா…?  வெறுப்பாய் வந்தது “  என் ஹஸ்பண்ட்க்கு டீ ரொம்ப பிடிக்கும்….” ஒற்றை வரியில் முடித்தாள்.

  “ ரைட்..  குட்.. உன்னை மாத்திகிட்டதுக்கு.. பார்க்க இன்னமும் நீ அப்படியே இருக்கே வித்தி..உன் வாழ்க்கையில சந்தோஷமா இருக்கியா…?


“  என்னை பத்தியே கேட்கிறயே தினா … நீ எப்படி இருக்கே…?  உனக்கு எத்தனை குழந்தைங்க … உங்க பேமிலியை கூட்டிகிட்டு வரலையா…?

 “ ப்ச்… பேமிலியே இல்லை … நான் அப்படியேதான் இருக்கேன்.. என் மனசுக்குள்ள இருந்து   நீ போகலை வித்தி…”

 என்ன சொல்வதென்று புரியாமல்..  மௌனமாய் அறை முழுக்க   நோட்டம் விட்டாள்.. ஷோ கேஸினுள்  அவள் போட்டோ அழகு காட்டி கொண்டிருந்தது… ஒருமுறை மாமல்லபுரம் போனபோது எடுத்தது…”  வித்தி… இந்த டிரஸ்ல ரொம்ப அழகாயிருக்க.. அப்படியே ஸ்மைல் பண்ணு ஒரு ஸ்நாப் எடுத்துக்கிறேனே….அவன் காமிராவை கிளிக்கும்போது வாயை கோணி  கண்ணை உருட்டினாள்…

“ என்ன தினா இதை போய் வைத்திருக்கே…

“ உன் ஞாபகமா இந்த ஒரு போட்டோதான் எங்கிட்ட விட்டு போன..  அதுக்கப்பறம் நடந்தது எல்லாம் என் நெஞ்சை விட்டு  நீங்கலே…”

கல்லூரி காலங்கள் அவர்களுக்கு வசந்தமாகத்தான் இருந்தது. கலை, இலக்கியம் என்று ரசனைகள் பரிமாறிக்கொண்டு நட்பில் விழுந்தவர்களை அடுத்த கட்டமாய் காதல் இழுத்துக் கொண்டது.. 

“வித்தி நேத்து என் கனவில் எப்படி தெரியுமா வந்தே..  மழையில் சொட்ட சொட்ட   நனைஞ்சி… அப்ப உன்ன பார்க்க செதுக்கி வைத்த சிற்பம் மாதிரி  இருந்தே…    நான் மெல்ல கிட்ட வந்து…”

“ போதும்.. நிறுத்து… தினா.. சினிமாவில் வர்ற மாதிரி கதையடிக்காத….”

“வெயிட்… வெயிட்.. கேளு..  ஏன் இப்படி மழையில நனைஞ்சி வந்திருக்க உடம்புக்கு ஏதாவது ஆகிட்டா  என்ன பண்றது…? போ.. உள்ளே போய் ட்ரஸ் மாத்திகிட்டு வா… நான் வெளியில நிற்கிறேன்னு.. வந்துட்டேன்…. “

“ ம்.. அவ்வளவுதானா..?”

“ பின்னே.. கனவுல கூட காதலி கிட்ட எவ்வளவு கண்ணியமா நடந்துகிட்டேன் பாரு…”

“ ரொம்ப நல்லவன்னு பில்டப்பா…  கனவுல மூழ்கிடாதே நாம வாழ்க்கையில இன்னும் எதுவுமே சாதிக்கலை…  செமஸ்டர்ல கொஞ்சம் அக்கறை வை.. “

படிப்பும் , காதலும்  மூன்று வருடங்கள் போனதே தெரியவில்லை..தேர்வு முடிந்து கடைசி நாளான்று ப்ரென்ட்ஸுடன் சேர்ந்து மகாபலிபுரம் சென்றார்கள்.

பிரியும்  அந்த தருணத்தில்தான் அப்படி ஒரு குண்டை தூக்கி போட்டாள் வித்யா,” தினா.. நான் சொல்றத  நீ எப்படி எடுத்துக்க  போறியோ தெரியலை.. நான் ரொம்ப யோசிச்சி பார்த்துட்டேன்..  இதுதான் நல்ல முடிவாயிருக்கும்  நம்ம ரெண்டு பேருக்குமே… இது   நம்ம கடைசி சந்திப்பாயிருக்கட்டும் தினா…  நாம    நேசிச்சது உண்மை..   நம்ம  காதல்  நிஜமானா அதைவிட  சந்தோஷம் இந்த உலகத்தில் எதுவும் இருக்காது… ஆனா யதார்த்தமா யோசிச்சிப் பாரு… என்னை மேற்கொண்டு படிக்கவைக்கிற ஐடியா அப்பாவுக்கு இல்ல…  நீ எம்பிஏ.. முடிச்சி அதற்கப்புறம் வேலை தேடி செட்டிலாக இன்னும் குறைஞ்சது அஞ்சு வருஷமாவது ஆகும்…  அதுவரை எங்க வீட்டில  எனக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருப்பாங்களா….?  எனக்கு பின்னால ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க… ஒருத்தரை ஒருத்தர்  காயப்படுத்திக்காம  இப்படியே  விலகி போய்டலாம் ..”

நினைவுகள்  கலைந்த வித்யா “ தினா  உன்னோட இந்த நிலமைக்கு நாந்தான் காரணம்னு என்னை குற்றவாளி கூண்டில ஏத்திடாதே …? ….  நான்  கிளம்பட்டுமா… வீட்டில வேலைக்காரியை  விட்டுட்டு வந்திருக்கேன்…”

“  நேரம் கிடைக்கும் போது  எங்க வீட்டிற்கு வா…” என்றவள் முகவரியை  தந்து விட்டு போனாள்.

தினா அடுத்த மூன்றாம் நாளே அவள் வீட்டின் முன்  அழைப்பு மணியை அடிக்க கதவை திறந்த வித்யா ஒரு கணம் தயங்கி ..” உள்ள வா… என்றாள்.

“ அவர் பிஸினஸ் விஷயமா வெளியூர் போயிருக்கார்…” உட்கார ஸோபாவை காட்டினாள்.

“  அக்கா வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சி…  நான் கிளம்பவா.. ?”  வேலைக்கார பெண் எட்டிபார்க்க ,  “  செல்வி..  மாவு அரைக்க போட்டு தர்றேன்.. பத்து நிமிஷம் இருக்கியா…”
அவள் வேலைக்காரியிடம் சொன்னது தினாவை பத்து நிமிஷத்திற்குள் கிளம்ப வேண்டும் என்று மறைமுகமாக சொன்னது போல் பட்டது.

காபி போட்டு எடுத்து வந்து தந்தாள்.  “  தினா.. இது எங்க மேரேஜ் ஆல்பம்,… இது  போன வருஷம் நாங்க கோவா போனப்ப எடுத்தது… என்ன பேசுவது என்று தெரியாமல்  போட்டோக்களையும் …   நாளிதழ்களையும்  டீப்பாய் மீது பரப்பினாள். 

“ தினா    நான் சொல்றேன்னு தப்பா  நினைச்சுக்காத..  வாழ்க்கையில்   நிகழ்கிற எல்லா விஷயத்தையும்  எதிர் கொண்டுதான்  போகனும். முதல் பக்கத்திலயா முடிவு இருக்கு…? நீ கல்யாணம் செய்து கொள்….”

அவள் சொன்னதிற்கு பதில் சொல்லாமல் ஹாலில் ப்ளோ- அப்பில் சிரித்து கொண்டிருந்தவனை காட்டி“ யாரு இந்த குட்டி பையன்.. அழகா…?
“ எங்க பையன் தான்..  தினா செகண்ட் படிக்கிறான்…”

அதற்குள் மொபைல் ஒலிக்கவும் கையில் எடுத்தவள்,  “  என்னங்க நீங்க போய்  ஏழு மணி   நேரம் ஆச்சு போன் வராம பதறி போயிருக்கேன் தெரியுமா…?  ம்.. ம்.. சரி.. சரி..  சின்ன குழந்தையாட்டம் உங்களை கவனிச்சிட்டேயிருக்கனும்.. சம்பாதிக்கிறது இருக்கட்டும்.. கரெக்ட் டயத்துக்கு சாப்பிடுங்க….  விக்கி ஹோம் வொர்க் பண்ணிட்டுருக்கான்…  சரி.. வேற ஒண்ணுமில்லை ..  சீக்கிரம் வந்துடுங்க…”

உள்ளே எழுதிக்கொண்டிருந்த அந்த குட்டிப்பையன் ஹாலுக்கு வந்து…  “ ம்… மம்மி  இந்த அங்கிள் யாரு…? என்றது.   “ அவர் மம்மியோட ப்ரெண்ட்…. கண்ணா…”

“ மம்மி… எனக்கு தூக்கம் வருது… எனக்கு நீ வந்து கதை சொல்லிட்டு தூங்க வச்சிட்டு போ..” சிணுங்கியது.

“ தினா இந்த புக்ஸையெல்லாம் படிச்சிட்டிரு…  நான் இவனை தூங்க வச்சிட்டு வர்றேனே…?”

“ ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்… அவர் பேரு  …….  வித்யாவின் குரல் மென்மையாய்.. காற்றில் கலந்து வந்தது… விக்கி கண்களை மூடியதும்… தலையணையை சரி செய்து விட்டு ஹாலுக்கு வந்தாள். ஸோபா வெறுமையாயிருந்தது. சொல்லாமல் போய்விட்டிருக்கிறான். ஒரு மணி நேரம் கழித்து போன் வந்தது,…” வித்யா … தினாதான் பேசறேன்.. உங்கிட்ட சொல்லிக்காம வந்ததுட்டேன்… அதான் சரி..  நீ எத்தனை அருமையானவ…..  கணவன், குழந்தை என்று அன்பை அர்ப்பணிக்கிறாய்… நாந்தான் சுய நலக்காரன் …  என்னை பார்த்த போது நீ சிந்திய கண்ணீரை எனக்கு சாதகமா எடுத்துக்கிட்டேன்… ..  உன் வீட்டிற்கு வந்ததும் .. தினா எனக்கு இந்த வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை..  உன்னை பிரிஞ்சது என் துரதிர்ஷ்டம்தான் என்று ஃபீல் பண்ணி சொல்வேன்னு நினைச்சேன்… என்ன ஒரு கேவலம்… உன் துன்பத்தையா ரசிக்க இருந்தேன்…?  தெய்வீகமா இருக்கிற உன் குடும்ப வாழ்க்கையில் உன்னை நான் இன்னமும் என்  காதலியா நினைச்சிட்டிருந்தேன்னா  அது உன்னை களங்கபடுத்தற மாதிரி இருக்கும். வேண்டாம்… அழகான தூய்மையான குளத்தில கல்லெறியர  பாவத்தை செய்ற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல..  அடுத்த முறை   நீ என்னை எங்காவது பார்க்க நேரிடறப்ப.. என் பெண்டாட்டியோடதான் பார்ப்பே….! “
கொரியரில் வித்யாவின் போட்டோ வந்தது. “  ஆஹா… இதென்ன வித்தியாசமா அழுவாச்சி காட்டிக்கிட்டு ஒரு போஸ்…?”

“அது என் பழைய போட்டோ..  ப்ரெண்டு ஒருத்தி அனுப்பியிருக்கா.. நல்லாவே இல்லை ஷோ கேஸ்ல வைக்காதிங்க… ப்ளீஸ்…”

“ ஏய்…  ஜஸ்ட்  ஆல்பத்திலயாவது செருகி வை…நிழல் படம்தானே அது என்ன பண்ண போகுது ...  இருந்திட்டு போகட்டுமே…”  என்றான்.