Showing posts with label சிறு கதை. Show all posts
Showing posts with label சிறு கதை. Show all posts

Saturday, 22 March 2014

படையல்....

காலையில் ஆறுமணிக்கெல்லாம் போன் மணி அடித்தது.. இது போன்ற நேரங்களில் போன் வந்தாலே எதோ ஒரு கலக்கம்  வந்து ஒட்டிக்கொள்ளும்...  போனை எடுக்க பயந்து ‘ நீங்களே பேசுங்க “... கணவரிடம் தந்தேன்.

காதில் வைத்த அவர், “ ஓ.. சாரி.. அப்படிங்களா எப்ப என்ன ஆச்சு எத்தனை மணிக்குண்ணா..?” என்று கேட்கும் போதே எதோ ஒரு துக்க செய்திதான் என்று புரிந்து பதட்டமாகிவிட்டது.

“ சுஜி  உங்க சித்தப்பா போய்ட்டாராம்டி.... ஈவ்னிங் அஞ்சு மணிக்கு எடுப்பாங்களாம்.. நீ சீக்கிரம் கிளம்பிடு... நான் ஆபிஸ் போய்ட்டு கொஞ்சம் வொர்க் இருக்கு அது முடிச்சிட்டு ஒன் அவர்ல கிளம்பி வர்றேன்...”

சித்தப்பாவிற்கு ஏற்கனவே ஒரு முறை ஹார்ட்-அட்டாக் வந்திருக்கிறது.. இந்த முறை காப்பாற்ற முடியவில்லை... சித்தப்பா எப்படி போய்ட்டாருன்னு நம்ப முடியலை... சித்தப்பாவை மாதிரி சுறு சுறுப்பான ஆளை பார்க்கவே முடியாது... எல்லா விசேஷத்துக்கும் அவர்தான் முன்ன நிப்பார்... ஒரு குரல் கொடுத்தாரானால் எட்டூருக்கு கேக்கும்... கல்யாண விசேஷத்துல பொண்ணு ரூம்ல மேக்கப் பண்ணிக்கிட்டு லேசுல மேடைக்கு கிளம்பமாட்டாங்க... சித்தப்பா வந்தாருன்னா ஒரே கூச்சல்...” ஏம்மா எவ்வளவு நேரம் தான் மேக்கப் பண்ணுவீங்க... எல்லாம் நல்லாத்தான் இருக்கீங்க... சட்டு புட்டுன்னு புடவைய மாத்தி மேடைக்கு அழைச்சிட்டு வாங்க... முகூர்த்த நேரம் போய்க்கிட்டே இருக்கு... இப்ப வர்றீங்களா இல்லையா..?”  இரண்டு மூணு தரம் சத்தம் போடுவார்... அவ்வளவுதான் கல்யாண பொண்ணை சிங்காரிக்கிற கூட்டம் மாட்டை ஹோய்.. ஹோய்...னு ஓட்டினா வேகமா ஓடுமே அதுமாதிரி வேக வேகமா டிரஸ் பண்ணி விடுவாங்க...

        “ இப்படி ஒரு சித்தப்பா இல்லைன்னால இவளுங்க லேசுல நகர மாட்டாளுங்க...”  அத்தை முணுகுவாங்க.

தாலிகட்டி சாப்பாடு முடிந்து பொண்ணை பேக் பண்ற வரை சித்தப்பா பம்பரமா சாட்டை எடுத்து ஓட்டாத குறையா வேலை வாங்குவார்.. எல்லா விசேஷமும் அதது நேரத்துக்கு சரியா முடிஞ்சிடும். எல்லாரும் பெருமையா பேசுவாங்க சித்தப்பா இல்லைன்னா இவ்வளவு சரியா வேலை முடிஞ்சிருக்காது...

விசேஷம் மட்டுமில்லை இறப்பு வீடுகளுக்கு சென்றாலும் அங்கு சித்தப்பாதான் ‘ இதை செய்.. அதை செய்..’ என்று வழிமுறைகள் சொல்லிட்டிருபாரு.... “ தேவாரம் படிக்கிறச்சே யாரும் அழக்கூடாது... சித்த நேரம் அமைதியா இருங்கோ...” கூட்டம் அமைதியாகிவிடும்.

இப்போது சித்தப்பா அவசரமில்லாமல் கண்ணாடிபெட்டிக்குள் உறங்கி கொண்டிருந்தார்.  “ வாடிக்கண்ணு.... சித்தப்பா போய்ட்டாரும்மா... “ சித்தி கையை பிடித்து கொண்டு அழுதாள்.
 நான் சிறிது நேரம் சித்தப்பாவையே பார்த்து கொண்டிருந்தேன்.. “ யாருப்பா எங்களையெல்லாம் இனி வழி நடத்துறது?”  எனக்கு  அழுகையை வெளிப்படுத்த தெரியாது... மனதுக்குள் உணர்வுகளை தேக்கி கொண்டு அமைதியாக உட்கார்ந்து விட்டேன்.. யார் யாரோ வந்து திடீர் திடீரென்று பாட்டு பாடி சித்தியை கட்டிக்கொண்டு அவரின் அழுகையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.. அப்படி அழ வைத்து விட்டு புடவை தலைப்பால் கண்ணையும், மூக்கையும் துடைத்து கொண்டு பின் பக்கம் உட்கார்ந்து , “ ஏண்டி மல்லிகா அவங்க பேத்தி, பொண்ணுங்கன்னு ஒண்ணாவது வாயை திறந்து அழுவுதா பாருடி... எல்லாம் அப்படியே குதிர் கணக்கா உட்கார்ந்து இருக்காளுங்க...” என்று வம்பளந்து கொண்டிருந்தார்கள்... எதற்கோ பின் பக்கம் வந்த என்னை பார்த்த அவர்கள், “ ஏண்டி சித்தப்பான்னு வாய் வரலையே ஒனக்கு?”
 துக்கத்தை அழுகையாய் வெளிப்படுத்தினால் மட்டும்தான் உலகம் நம்பும் போலும்.
ஆயிற்று சித்தப்பாவை வழியனுப்ப குளிப்பாட்டி கொண்டிருந்தார்கள், யாரோ தேவாரம் பாடிகொண்டிருந்தார்கள்.
“ தேவாரம் பாடும் போது யாரும் அழக்கூடாது..” சித்தப்பா சொல்வது போல் இருந்தது..
“ நல்ல மனுஷன்யா... எல்லாருக்கும் முன்ன நிப்பார்..” யார் யாரோ சித்தப்பாவை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இருக்கும் போது யாரும் பெருமை பேசுவதில்லை...சித்தப்பா இந்த முறை அமைதியா போய்க்கிட்டிருந்தார்..
ஆயிற்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பமாய் சித்தப்பாவிற்கு படையலாம்...

நேத்து சென்னையில் இருக்கிற அக்கா புளிசாதம், எலுமிச்சை மாங்கா சாதம்னும்... முறுக்கு , எல்லடை பழம் என்று வகை வகையாய் பரப்பி வைத்திருந்தார்கள்...  சித்தப்பா புகைப்படத்தில் அமைதியாய் பார்த்து கொண்டிருந்தார்..

“ சுஜி எல்லா வீட்டு பங்காளிகளும் படைச்சாயிடுச்சுடி இனி நம்ம வீடுதான் பாக்கி... இன்னிக்கு காலையில் பெரியம்மா ஒத்தாசைக்கு வர்றேன்னிருக்காங்க... கொஞ்சம் வடைக்கு உளுந்தும், கடலையும் ஊற போட்டுடறேன்...” உள்ளூரில் இருக்கும் அக்கா சொன்னாள்.

மறுபடியும் இலை நிறைய பண்டங்கள்... சித்தப்பா அமைதியாய் புகைப்படத்தில்... ஊதுவத்தி புகை...  “ பரவாயில்லை தேனு சித்தப்பாவுக்காக காலையிலையே இத்தனையும் செஞ்சிருக்கா...”   நாலாவது வீட்டு பாலாம்மா அக்காவை பெருமையா சொல்லிக்கிட்டிருந்தாங்க..

“ சித்தப்பா நம்ம எல்லாருக்கும் எவ்வளவு செஞ்சிருக்காரு?” அக்கா மூக்கை உறிஞ்சினாள்.. ஊது வத்தி புகைந்தது... எனக்குள்ளும் எதோ... அக்கா இதே ஊர்ல இருக்கா... சித்தப்பான்னு இத்தனை நாளா எதாவது இப்படி வீட்ல சுட்டா கொடுத்திருப்பாளா?  ஊருக்கு போகும்போது சித்தப்பாவுக்கு எதாவது பிஸ்கெட் வாங்கிட்டு போனா அம்மா சொல்வா,” ஏண்டி உன் அக்காவை பாரு பக்கத்திலயே இருந்தாலும் எங்களுக்கே எதுவும் தர்றதில்ல... நீ ஊருக்குன்னு வந்தியனா நோட்டை இழுத்துட்டு போயிடற.. பிழைக்க தெரியாதவ...”
       
எல்லாம் வேடிக்கையாக இருந்தது...
ஒன்பது நாளும் அமர்க்களப்பட்ட சித்தப்பா வீடு இன்று காரியம் முடிந்து அவரவர் கிளம்பிவிட்டார்கள்.. சித்தியின் தனிமை என்னவோ செய்தது... பி.பி சுகர் என்று ஏற்கனவே ஓடிந்து போயிருக்கும் சித்தியை இனி யார் கவனிப்பார்கள்...

மறு முறை ஊருக்கு சென்றிருந்தேன்... இந்த முறை சித்திக்கு தேவையான பழம், பல்லுக்கு இதமான பிஸ்கெட் என்று வாங்கி வைத்திருந்தேன்... கையிலிருந்த பையை பார்த்து தேனு, “ ஏண்டி அவங்க மருமகளுகளே ஒண்ணும் கவனிக்கிறதில்ல... நீ எதுக்குடி இதெல்லாம் செலவு பண்ணிக்கிட்டு வாங்கிட்டு போய் கொடுக்கிற?”

“ க்கா... செத்தப்பறம் போட்டோவுக்கு படைக்கிறதை விட இருக்குறப்ப கொடுக்கிறது எனக்கு புடிச்சிருக்குக்கா... மிஞ்சி போனா நூறு ரூபாய் ஆகுமா... அன்புக்கு விலை போடமுடியுமாக்கா ?”

சித்தி பையை வாங்கி கொண்டு பாசத்தோடு பார்த்தாள்.. திரும்பும் போது பக்கத்திலிருந்த அண்ணி, பெரியம்மா... அத்தை அக்கா என.. எல்லோரும் சித்தியின் போட்டோவிற்கு படைக்க இருக்கும் அன்ன பூரணியாய் தெரிந்தார்கள்.


Friday, 18 October 2013

பணம் காய்ச்சி மரம்...

அப்பா போய் பத்து நாட்களாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு அப்பா என்பதை விட நண்பனாகத்தான் நிறைய தெரியும். சரவணனுக்கு அப்படி இல்லை....

 அப்பா வாத்தியாராய் இருந்த பள்ளியிலே நாங்கள் இருவரும் படித்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அப்பாவிடம் சொல்வார்கள்” சார் உங்க சின்ன பிள்ளை சிவா பரவாயில்லை... படிப்பில கெட்டி ஆனா பெரியவன் சரவணன் ஏன் இப்படி இருக்கான்? “  கேட்கும் போது அப்பா பதில் சொல்ல முடியாமல் உடைந்து போய் விடுவார்.

சரவணனுக்கு எத்தனையோ நல்லவிதமாய் சொல்லி தந்தும் அவனுக்கு படிப்பின் மேல் ஆர்வம் வரவேயில்லை. அப்பா அவசரமாய் நூறு ரூபாய் கேட்டதாக சொல்லி பக்கத்து தெரு வாத்தியாரிடம் கடன் வாங்கி அடுத்த ஊர் சினிமாவிற்கு போய்விட்டதிலிருந்து அவனுக்கு ஒழுக்கமும் வரவில்லை என்பது வெளிச்சமாகியது. சரவணனுக்கு அத்தனை சரளமாய் பொய் வந்தது.

அம்மாவின் அழுகை, அப்பாவின் அறிவுரை எதுவுமே அவனை அசைக்கவில்லை. பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பதால் அதுவரை வந்து விட்டிருந்தான்.  பொது தேர்வில் எப்படியாவது சராசரி மதிப்பெண்ணிலாவது அவன் தேறிவிட வேண்டும் என்று அம்மா சரஸ்வதி பூஜை பண்ணி கொண்டிருந்தாள்,

“ அடி அசடு அவன் பேப்பரில் ஒண்ணுமே இல்லாமல் மார்க் மட்டும் எப்படி வந்துடும்..? அவனுக்கு படிப்பு வரல்ல... ஒண்ணும் பண்ண முடியாது வேற வழிதான் செய்யனும்...”
படிப்பு வரவில்லை என்றால் அடுத்தது கைத்தொழிலைத்தான் தெரியும்.. அப்பா அவருக்கு தெரிந்த தையல் கடையில் தையல் கற்று கொள்ள சேர்த்து விட்டார். அங்கும் அவன் ஒழுங்காய் இருக்கவில்லை... மதியம் சாப்பிட போகிறேன் என்று சொல்லிவிட்டு சினிமா  சென்று விடுவான்.  நண்பர்களோடு சிகரெட் பிடித்து கொண்டிருப்பதாக யாரோ வந்து சொன்ன போது அம்மா ஆக்ரோஷமாய் வயிற்றில் அடித்து கொண்டாள்,

“ டேய்.. இவனை பெத்த வயித்தலதாண்டா உன்னையும் சுமந்தேன்.. நீ மட்டும் ஏன் இப்படி இருக்க...? “

ம்ஹூம். அம்மாவின் அழுகைக்கெல்லாம் அசைந்து கொடுப்பவனில்லை... அடுப்பங்கறையில் நுழைந்து இருப்பதை தட்டில் போட்டு கொண்டு டி.வி பார்த்து கொண்டு உட்கார்ந்து விடுவான்.

“டேய்...  நீ என்னதாண்டா மனசுல நினைச்சிருக்க... தினம் நல்லா ட்ரஸ் பண்ணிக்கிறது, சாப்பிடறது டி.வி பார்த்துக்கிட்டு பொழுது போக்க வேண்டியது.... உங்கப்பாவிற்கு உன்ன நினைச்சி நினைச்சி டென்ஷனாகுதுடா.. அந்த மனுஷனுக்கு எதாவது ஆகிட்டா நம்ம கதி என்ன...”

தையல் கடைக்கு போவதையும் நிறுத்திவிட்டான். அப்புறம்  அப்பா தீக்குச்சி கம்பெனி, பால் பண்ணை என்று எங்கெங்கோ வேலைக்கு சேர்த்து விட்டார்... ஒவ்வொரு காரணம் சொல்லி இரண்டு மாசம் போய்விட்டு நின்று விடுவான்.  நான்  நிறைய மார்க் எடுத்து இஞ்சினியரிங் சேர்ந்தேன். சரவணன் இப்படியே இருப்பது அப்பாவிற்கு கவலையாக இருந்தது.. அவனுக்கே ஒரு பொறுப்பை கொடுத்தால் என்ன என்று யோசித்தார்.

 அப்பா ஆசையாய் பைக் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடாய் போட்டு ஒரு சின்ன மளிகை கடையை ஆரம்பித்தார். இப்போது கிடைப்பது போல் அப்போதெல்லாம் அப்பாவிற்கு அவ்வளவு சம்பளம் கிடையாது.  

“ சரவணா எவ்வளவோ தூரம் சொன்னேன்... நீ உன் எதிர்காலத்தை பத்தி யோசிக்கவே இல்ல.. கஷ்டப்பட்டு இவ்வளவு நாளா சேமிச்ச பணம்... உழைச்சாவது பிழைக்க கத்துக்க.. இந்த ஊர்ல அவசரத்துக்கு பொருள் வாங்கனும்னா கூட டவுனுக்குதான் போறாங்க... இங்க கடை நல்லா வியாபாரம் ஆகும் .. இதிலயாவது சாமர்த்தியமா இருந்து உன் வாழ்க்கையை பார்த்துக்க...”

அவர் எதிர்பார்த்த மாதிரி அவன் பொறுப்பாய் இருப்பான் என்ற நம்பிக்கையிலும் மண் விழுந்தது. பெரும்பாலான நேரங்களில் கடையை பூட்டி விட்டு வழக்கம் போலவே சிகரெட், சினிமா என்று சுற்றி கொண்டும், நண்பர்களுக்கு கடன் கொடுத்தும்  கடையையும் நட்டமாக்கிவிட்டு உட்கார்ந்து விட்டான்.

அப்போதுதான் பெரிய மாமா வந்திருந்தார், “ மல்லிகா இவனை இப்படியே விட்டா வழிக்கு கொண்டு வர முடியாது. இவன் இங்கிருக்கவே வேணாம்... என்னோட மில் வந்து பார்த்துக்கிடட்டும்... “ என்று சொல்லி திருப்பூருக்கு அழைத்து சென்று விட்டார்.

அவன் மாமாவிடம் இருந்து மாறிவிடுவான் என்ற  நம்பிக்கையில் அம்மா கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். எனக்கு படிப்பு முடிந்து  நல்ல வேலை கிடைத்த சமயம்...அப்பாவிற்கும் சம்பள உயர்வு கிடைத்திருந்தது.

அப்பா ஆசைப்படி இருக்கும் ஓட்டு வீட்டை இடித்து பெரிய மாடி வீடு கட்ட அடித்தளம் போட்டோம்.  நான் அப்போது வேலை விஷயமாய் அஸ்ஸாமிலிருந்தேன்... இரண்டு மூன்று நாட்களாவது ட்ரெயினில் பிரயாணம் செய்து மாதத்திற்கொரு முறை வீட்டு வேலை பார்க்க வந்துவிடுவேன். வேலைக்கு சென்ற கொஞ்ச காலத்திலேயே அப்பாவிடம் ஒன்றறை லட்ச ரூபாய் தந்ததும்,  அப்பா தழு தழுத்து போனார், 

“ சிவா எனக்கு தெரியும்டா ஒரு டீ, காபின்னு கூட செலவு பண்ணாமத்தான் இதை சேர்த்திருப்ப... இதை நல்ல விதமா செலவு பண்ணிடலாம்... இந்த காசை வச்சி மேல ஒரு  போர்ஷனும் கட்டிடலாம் நமக்கு வாடகையும் வரும்..”

மட மடவென்று இரண்டு மாடிகள் உயர்ந்து தெருவே வியந்து பார்க்கும் அளவு கட்டிடம் எழும்பி கொண்டிருந்த போதுதான் இடியாய் அந்த செய்தி வந்தது...

“ மல்லிகா உன் பெரிய புள்ள... மில்லில வேலை செய்ற ஒரு பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடிட்டான்.. அதுவும் அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை ஏமாத்தினவ...”

ஒவ்வொரு செங்கல்லும் பார்த்து பார்த்து கட்டி கொண்டிருந்த அப்பாவிற்கு சரவணனை மட்டும் பார்த்து வளர்க்கவில்லையோ அழுத்திய கவலையில், “ டேய் சிவா இனிமே அவனை நம்பி பிரயோஜமில்லைடா  நான் இல்லாட்டியும் அம்மாவை நீ பார்த்துப்பேன்னு நான் தைரியமா இருக்கேண்டா...” விம்மினார்.

அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் என் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று  நல்ல குடும்பமாய் பார்த்து கீதாவை எனக்கு கல்யாணம் செய்து வைத்தார். பேர குழந்தையும் பிறந்ததில் அப்பா கொஞ்சம் கவலை மறந்து போய் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அப்பா இருண்ட முகத்துடன் யோசனையுடன் உட்கார்ந்திருந்தார், நான் பக்கத்தில் உட்கார்ந்ததும், “ டேய் சிவா... அவனை பார்த்தேண்டா ரொம்ப இளைச்சி எலும்பும் தோலுமாய் அப்பா பசிக்குதுப்பா சாப்பிட்டு ரெண்டு நாளுச்சின்னு அழுதான்.. எனக்கு மனசு கேட்கலைடா மெல்ல ஹோட்டலுக்கு அழைச்சிகிட்டு போய் சாப்பாடு வாங்கி குடுத்து விசாரிச்சேன்...

அவன் கட்டிக்கிட்டவ ரொம்ப மோசமானவடா பணம் பணம்னு இவனை உலுக்கியிருக்கா... கட்டிட வேலை.. மெக்கானிக் வேலைன்னு எவ்வளவோ பார்த்திருக்கான்... இப்ப  செங்கல் லாரி லோடு ஓட்டறானாம்... அங்க ஸ்கூல் பக்கத்து கட்டிடத்தில் லாரி நின்னப்பத்தான் என்னை வந்து பார்த்தான்.

அதற்கு பிறகு அவன் அப்பாவை அடிக்கடி ஸ்கூலில் சென்று பார்ப்பதும்.. கண்ணீர் வடித்து ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கி கொண்டு போவதாய் அம்மா சொன்னாள். பெத்த மனம் பித்து... உடன் பிறந்தவன் தானே.. நானும் அப்பாவிடம் எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

என்னையும் வழியில் பார்த்து அவன் கதையெல்லாம் சொன்னான்.. அவன் மகளுக்கு பிறந்த  நாளுக்கு புது துணி வாங்க கூட காசில்லை... மனைவிக்கு உடம்பு சரியில்லை.. என்று அடிக்கடி ஏதாவது சொல்லி வாங்கி கொண்டு போனான். அவன் சொல்வது பொய்தான் என்று தெரிந்தாலும் பெரியவனாக பிறந்து விட்டான் என்று மன்னித்து கொண்டிருந்தேன்.

அப்பா ரிடையர்டு ஆனவுடன், “ சிவா என்ன இருந்தாலும் அவனும் எனக்கு மகன் தாண்டா.. இந்த பணத்தை வச்சி சின்னதா ஒரு வீட்டை கட்டி அவனை தனியா வச்சிடலாம்.. இங்கேயே ஒரு வேலை பார்க்கட்டும். அவன் எங்கோ கஷ்டப்படறதை பார்க்க சகிக்கலைடா...”

மட மடவென்று வீடு தயாராகி மனைவி, மகளுடன் வந்து விட்டான். அப்பா சேர்த்து கொண்ட தைரியத்தில் அடிக்கடி வேலைக்கு போகாமல் அப்பாவிடமே காசு கேட்டுக்கொண்டிருந்தான்.

“ மல்லிகா எனக்கு சிவாவை பத்தி கவலை இல்ல... படிச்சி அவன் கால்ல நின்னுட்டான்..  என் காலத்துக்கு அப்புறம் இந்த சரவணன் என்ன பண்ண போறான்.. நாளைக்கு சாப்பாட்டுக்கே திண்டாடுவானே?..”

சரவணனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் இரவு, பகல் பார்க்காமல் உழைக்க ஆரம்பித்தார்.  காலை , மாலை என்று ஓயாமல் ட்யூஷன் எடுத்தார். அதோடு பென்ஷன் பணம் என்று சேமித்து சரவணனுக்கு இன்னும் இரண்டு வீடுகளை கட்டி அவனுக்கு வாடகை வரும் படி செய்ததும்தான் கொஞ்சம் நிம்மதியானார்.

“ மல்லிகா இந்த பய நாளைக்கு வேலைக்கு போகாட்டி கூட எதோ பசியை ஆத்திக்கற மாதிரி ஒரு வழி பண்ணிட்டேன்... இன்னும் ஒரே வேலை பாக்கி இருக்கு... என்ன பாவமோ அவன் ஒரு பெண்ணை வேற பெத்து வச்சிருக்கான்... அது கல்யாணத்துக்கு கொஞ்சம் சேமிச்சி வச்சிட்டா நான் வீட்லயே உட்கார்ந்துடுவேன்...”

அப்பா ஓய்வு பெற்றும் ஓயாமல் ஓடி கொண்டிருந்தது எனக்கு வருத்தமாயிருந்தது. அவர் உடல் நிலையில் அக்கறை காட்டி கொள்ளாமல் போய் கொண்டிருந்ததால் வர வர ஓடாய் தேய்ந்து மூச்சிறைத்து கொண்டிருந்தார்.

“ அப்பா...  நீங்க இப்படி உடம்ப கவனிக்காம ஓடிட்டிருக்கிறது கவலையா இருக்கு... எனக்கு நீங்க வேணும்பா... இப்பல்லாம் அதிகமா மூச்சிறைக்குது உங்களுக்கு... ஆஸ்பிட்டலுக்கு போய் பார்த்துக்கலாம்பா...”

“ சிவா.. அதெல்லாம் கவலைப்படாத.. வயசானா அப்படித்தான்... இன்னும் என்னால அஞ்சு வருஷத்துக்கு உழைக்க முடியும்... அதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் என்னால என்னன்ன பண்ணமுடியுமோ அத பண்ணிடறேன்... 

அப்பாவின் இரத்தமும், வியர்வையும்... செங்கல்லும், சிமெண்ட்டுமாய் கட்டிடமாகியது. காலம் என்ன நினைத்ததோ அவருக்கு நிரந்தர ஒய்வை கொடுத்து எங்களை கண்ணீரில் ஆழ்த்தியது.  நெஞ்சு வலி என்றவர் ஆஸ்பிட்டலுக்கு சென்றும் பலனில்லாமல் போய்விட்டார்.

ஒரு சமயம் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது, “ சிவா வயசாயிட்டா.. என்னால் நடமாடமுடியாத பட்சம் இருந்து என்ன பிரயோசனம்? ஒரு சமயம் என் நினைவு தப்பி எதாவது ஆகிடுச்சுன்னா கூட ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போய் லட்சக்கணக்குல செலவு பண்ணி வீண் பண்ணிடாதே... “

இறப்பிலும் கூட தன் பிள்ளைகளுக்கு சேமிக்க வேண்டும் என்று நினைக்கும் இப்படி ஒரு அப்பாவா...?

ஆயிற்று அம்மாவை கண் கொண்டு பார்க்க முடியவில்லை...” டேய்... அப்பா உங்களுக்காகவே வாழ்ந்தார்டா... எனக்கு துணையா இருக்கனும்னு நினைச்சு பார்க்கலையே...?”

அப்பா வளைய வளைய வந்த வீடு வெறிச்சோடி இருந்தது. ஆயிற்று பதினொராம் நாள் காரியங்கள் முடிந்ததும் காத்திருந்தவன் போல் சரவணன் பேச ஆரம்பித்தது நெருப்பை அள்ளி கொட்டியது போலிருந்தது..

“ மாமா... இந்த வீட்டுக்கு இப்ப நீங்கதான் பெரியவங்க.. அப்பா போயாச்சி.. இருக்கிற சொத்தை எனக்கு பிரிச்சி கொடுத்திட்டா நான் போயிட்டே இருப்பேன்...”

“டேய்... என்னடாது இது... அப்பா போய் பத்து நாளாச்சு அதுக்குள்ள சொத்து பத்தி பேசறே... பாவி பயலே.. உன்னை பத்தி கவலைப்பட்டே அவர் செத்து போனார்... என்னிக்காச்சும் அப்பான்னு அவருக்கு எந்த கடமையாவது செஞ்சிருக்கியா...?” மல்லிகா அரற்றி அழுது கொண்டிருந்தாள்.

“ மாமா அவன் கேட்கறதை கொடுத்திருங்க.. இனி யார்கிட்ட கையேந்த போறான்... அவனை பொறுத்த வரை அப்பா பணம் காய்ச்சி மரமாத்தான் இருக்கார்.. சரவணா... அந்த மரம் மண்ணுக்குள்ள போய்ட்ட பிறகும்  திருந்தலைன்னா... நீ மனுஷனே இல்லடா...”

சரவணன் சொத்து மதிப்பை கணக்கு போட்டு போட்டுக்கொண்டிருந்தான்... எனக்கு அப்பா கைபிடித்து முதலில் சிலேட்டில் ஒன்று... இரண்டு எழுத சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.. அப்பா... அப்பா... நீ சுகமா இருந்ததையே நான் பார்க்கலையேப்பா... ?

அப்பா புகைப்படத்தில் பணம் காய்க்கும் மரமாய் சிரித்து கொண்டே பார்த்து கொண்டிருந்தார்.
*****************


(   இது வெறும் கதை மட்டுமல்ல... பல குடும்பங்களில் காண நேரிடுகின்ற நிகழ்வுகள்... !  )
நான் அலுவலகம் செல்லும் போது தினமும் பள்ளிக்கு போகும் அந்த இரண்டு சிறுவர்களை பார்க்கிறேன்...  பெரியவன் எட்டாவது படிக்கலாம்... அவன் தம்பி ஐந்தாம் வகுப்பு இருக்கலாம்...! பெரியவன் முதுகில் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு  ஊனமுற்ற அவன் தம்பியை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து தள்ளிக்கொண்டு தினமும் பள்ளிக்கு அழைத்து போகிறான்.  இந்த காட்சி என்னை மனம் நெகிழ வைக்கும்... வளரும் வரை சகோதர பாசங்களில் பணம் குறுக்கீடு செய்வதில்லை. வளர்ந்த பிறகுதான்  எனக்கு, உனக்கு என்று பணம் அவர்களை பிரித்து பார்க்கிறது.




Wednesday, 28 August 2013

இந்த குற்றத்தை நீங்க செய்றிங்களா?




சிறுகதை : பசி....



  அப்படியே டிபன் பாக்ஸை கொண்டு வந்திருக்கா பாரு... தினம் வேஸ்ட் பண்றதே வேலையா போச்சு..”

வினிதா பாத்திரங்களை அலம்பும் சத்தங்களோடு கத்தி கொண்டிருந்தாள்.

“ அபி ... அம்மா திட்டிட்டிருக்கா பாரு.. ஸ்கூல்ல லஞ்ச் என்ன சாப்பிட்டே?”
“போங்கப்பா... அம்மா கொடுத்தனுப்புற லஞ்ச் ஒரே போர்... தெனம்.. பருப்பு , கீரைன்னு.. வெரைட்டி ரைஸ்ன்னா கூட பரவால்ல...”

   நூடுல்ஸ், பானி பூரின்னு மூணுவேளையும் வச்சாக்கூட தின்பா.. உடம்புக்கு நல்லதா காய்கறி, கீரை சாப்பிடனும்னா கஷ்டம்... தினம் நான் அரக்க பரக்க செஞ்சு அனுப்பறதெல்லாம் வேஸ்ட்டா போகுது. இரண்டு நாள் பட்டினி போட்டாதான் ஒழுங்கா சாப்பிடுவே..”

  ஸ்..  ஹையா... இரண்டு நாள் உன் சாப்பாட்டிலர்ந்து ப்ரீயா இருக்கலாம்.. “ அழகு காட்டி விட்டு ஓடினாள்.

“ இங்க பாருங்க அவ சரியா சாப்பிட மாட்டேங்கறா... நீங்க மிரட்டி உதை கொடுத்தாத்தான் வழிக்கு வருவா..”

  நீயே அதிகமா செல்லம் கொடுக்கிறே... அப்புறம் புலம்பற... விடு சின்ன பொண்ணுதானே.. சரியாய்டும்.. “

“ வினி... இன்னிக்கு  நானும் அபியும் கொஞ்சம் வெளியில் போய்ட்டு வர்றோம்...” என்ற படி அபியை அழைத்து கொண்டு கிளம்பினேன்.

“ என்னப்பா வண்டியை எடுக்காம நடத்தி வச்சி கூட்டிட்டு...எங்க போகப்போறோம்... ?”

“ இல்லடா எனக்கு கொஞ்ச தூரம் நடக்கனும்னு ரொம்ப நாள் ஆசை... அதான் நாம பேசிக்கிட்டே போவோம் சரியா...?”

ஐந்து நிமிடம் நடந்ததும் ஐஸ்கீரிம் பார்லர் முன் நின்றவள் “ பா.. ஐஸ்-கீரிம் சாப்பிட்டு போகலாம்...”

வழியெல்லாம் தேவை இல்லாமல் எதையாவது வாங்கி பாதி தின்பதும், மீதி கீழே போடுவதுமாக வந்தாள்.

“வீட்டுக்கு போகலாம்ப்பா...”

“ இன்னும் கொஞ்ச தூரம் அப்புறம் போய்டலாம்...”

 நகரை விட்டு கொஞ்ச தூரம் வந்து விட்டிருந்தோம். எதோ விளம்பர போஸ்டரை  நான்கைந்து கட்டைகளை கட்டி டெண்ட் போல் அமைத்து அதில் இரண்டு குழந்தைகள் உறங்கி கிடந்தது. ஒரு குழந்தை பக்கத்திலேயே வாளியில் முகம் கழுவி கொண்டிருந்தது.  அழுக்குச் சேலையில் இருந்த அவள் அடுப்பை சுள்ளிகளால் எரிய வைத்து எதையோ பொங்கி கிடந்தாள்..
 
“ ப்பா... இவங்கெல்லாம் ஏன் வீதியிலயே சமைக்கிறாங்க...”

“ அவங்களுக்கு அதான்மா வீடு..”

ஒரு குழந்தை தன் கையில் எதையோ வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது.. கை தவறி போட்டுவிடவும் அதன் அம்மா அதை நீரில் அலம்பி கொடுத்ததும் மீண்டும் சாப்பிட துவங்கியது.

வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள். இதெல்லாம் அவளுக்கு புதிதாய் தெரிந்தது. ரோட்டோரத்தில் செருப்பு தைத்து கொண்டிருந்தவன்,  வடை சுட்டு கொண்டிருந்த பாட்டி, அழுக்காய் வீதியில் கையேந்தி அவசரமாய் விழுங்கி கொண்டிருந்தவர்கள்..

"சரிடா அபி நாம வீட்டுக்கு போகலாம்.." திரும்பும் போது வழியில் ஒரு கல்யாண வீட்டு வாசலில் எறியப்பட்ட இலைகளையும் ஒருவன் தேடி அதிலிருந்த பாதி ஜாங்கிரியை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

“ ஏம்ப்பா இவங்க எல்லாம் இப்படி இருக்காங்க?”

“ பசிம்மா.. வாழனும்ல.. சாப்பாட்டை தவிர வேற பெரிய விஷயம் அவங்களுக்கு இல்லடா...இன்னிக்கு பேப்பர்ல போட்டிருந்தாங்க இந்தியாவுல இருபத்தஞ்சு கோடி பேர் தெனம் பசியோடு தூங்கறாங்களாம்”

அபி வீட்டிற்கு வந்தும் எதையோ யோசித்து கொண்டிருந்தாள்.

“ என்னங்க கொஞ்ச நாளா அபி ஸ்கூலுக்கு கொண்டு போறதை ஒழுங்கா சாப்பிட்டுடறா.. இப்பல்லாம் சாப்பாட்டை வேஸ்ட் பண்றதே இல்ல...  நீங்க என்ன சொன்னிங்க?”

 வினி... நீ பசிக்கு சாப்பிடனும்னு அவளை கடுத்துக்கிட்டே இருந்தே... நான் ‘ பசி’ ன்னா என்னன்னு புரிய வச்சேன்.. !”

                                                         ---







( இது கதை மட்டும் இல்ல.. நாம் வீணாக்கிற ஒவ்வொரு உணவும் நாலு பேரின் பசி உணர்வை கொலை செய்கிற விஷயம்தான்.  ஒரு பக்கம் ஹோட்டல், திருமண விருந்து, டைனிங் வரை தினம் தினம் உணவுக்கொலைகள் நடந்துகிட்டிருக்கு.. இன்னொரு பக்கம் பசி என்ற தண்டனையால் தினம் தினம் செத்துகொண்டிருக்கும் கூட்டம்...! உணவில் , அதை விளைவித்தவனின் உழைப்பு மட்டுமல்ல... எங்கோ வாடும் ஒருவனின் பசியும் இருக்கிறது... உணவை வீணாக்க வேண்டாம்..  மிச்சமாகும் உணவை ஏதோ ஒரு உயிரின் வயிற்றையாவது நிரப்பலாம். அக்டோபர்-16 உலக உணவு தினம். என்றைக்கு உலகில் பசியால் வாடுபவர் இல்லாமல் இருக்கிறார்களோ அன்றுதான் உலகம் வலிமை பெறும்.  
"Hunger is not an issue of charity. It is an issue of justice. )