Thursday 26 December 2013

ஹலோ....

அபார்ட்மெண்ட் வீடுகளில் வசிப்பவர்களின் உலகம், நட்பு பற்றி எல்லாம் எனக்கு பரிச்சயமில்லை. சில நாட்களுக்கு முன் இங்கிருக்கும் என் தோழி அவர் அபார்ட்மெண்ட்டில்  நடந்த ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார். என் மகளுடன் சென்றிருந்தேன்... குறைந்தது 300 வீடுகளாவது இருக்கும் என்று நினைக்கிறேன்.. மழலைப்பட்டாளங்கள் விழாவை உற்சாக ரகளைபடுத்திகொண்டிருந்தார்கள்.  அங்கிருந்த ஒவ்வொரு குடும்பங்களும் ஒற்றுமையாய், அன்பாய் விழாவை சிறப்பித்து கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை... மனசு முழுக்க மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. அங்கு இனம், மதம் கடந்த மனித அன்பை மட்டுமே பார்க்க முடிந்தது.  நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது அந்த அபார்ட்மெண்ட்டின் ஒரு வீட்டின் முன் ‘ டூ லெட்’ போர்டு மாட்டியிருந்தது.. அதை பார்த்து விட்டு என் மகள், “ மா.. நம்ம வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இங்க வந்துடலாமா?ன்னு கேட்டப்ப விளையாட்டை தொலைத்து வளரும் அவள் ஏக்கம் தெரிந்தது. அபார்ட்மெண்ட்டில் வசிப்பது மகிழ்ச்சியான வாழ்க்கைதான்! ( எல்லா அபார்மெண்ட்டும் இப்படி இருக்கான்னு மத்த அபார்ட்மெண்ட்வாசிகள்தான் சொல்லனும்.......)
         
 இங்கு நான் இருக்கும் பகுதி தனி வீடுகள்தான். பெரும்பாலான பெண்கள் வீட்டிலிருப்பவர்கள். என்னுடன் நட்பாக பேச சம வயது தோழியோ என் மகளுடன் விளையாட அவள் வயது சிறுமிகளோ யாருமில்லை...  வீடு, வேலை என்று நேரம் போய் கொண்டிருப்பதால் வெறுமை தெரிவதில்லை. அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அதிக நட்பு கொள்ளாமலும் ஒரேடியாக ஒதுங்கி போகாத அளவும்தான் இருப்பேன். இங்கிருக்கிற பெண்கள் அவங்க வீட்டு குப்பையை நைசா அடுத்த வீட்டுக்கு தள்ளுவாங்க.. சமைத்து முடிச்சதும் முடிஞ்சா சீரியல் பார்ப்பாங்க.. இல்லன்னா இவங்க சீரியல் ஓட்டுவாங்க... ரெண்டு மூணு பெண்கள் ஒண்ணா உட்கார்ந்துட்டு புறணி பேசி கொண்டிருப்பாங்க...  எப்பவும் அடுத்தவர்களை  நோட்டம் விடுவதும், அவர்களை பற்றி வம்பு பேசுவதும்தான் இவர்களுக்கு வேலை. இப்படி பட்டவர்களிடம்  நட்பாகவும் இருக்க முடியாது, அவர்களை திருத்தவும் முடியாது. அடுத்தவர்களை பற்றி பேசுவதால் என்ன லாபம் என்று தெரியவில்லை. உருப்படியான எந்த விஷயத்துக்கும் முன் வரமாட்டார்கள். முக்கால்வாசி பேருக்கு நான் எழுதுவதே தெரியாது. பக்கத்தில் இருக்கும் வட்டங்கள் இப்படி இருக்கிறது.

ஆனால்.. சற்று தொலைவிலும், வெகு தொலைவிலும் உள்ள நட்பு வட்டங்கள்  ரொம்ப நேசத்தோடு இருக்கிறது. எழுத்தின் மூலம் சம்பாதித்த உறவுகள் உன்னதமான அன்பை செலுத்துகிறார்கள்.  அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் என்று நிறைய உள்ளங்கள். திருச்சியிலிருந்து ஒரு அம்மா எனக்கு தீபாவளி ஸ்வீட் செஞ்சி கொரியரில் பாசத்தோடு அனுப்பியிருந்தாங்க...65 வயதில் முடியாமல் மெனக்கெட்டு செய்து அதை பத்திரமாக பேக் செய்து கொரியர் பண்ணி அனுப்பியிருந்ததை நினைச்சா.. ரொம்ப சந்தோஷமா இருந்தது...! பணத்தால சம்பாதிக்கிற சொத்தெல்லாம் என்னங்க பெரிய சொத்து... மனங்களால் சம்பாதிக்கிற உறவுகள்தாங்க மதிப்பிடமுடியா சொத்து!
         
 எழுத்தால் இணைந்த நல்ல மனங்களுடன் சேர்ந்து தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகையை  2 வருஷமா நற்பணியாக பண்ணிக்கிட்டு வர்றோம். இது தினமலர்- பெண்கள் மலர் தோழிகள் நிகழ்ச்சி.  இந்த முறையும் அதற்கான ஏற்பாட்டை செய்துகிட்டிருக்கேன்...  அதனால்  இங்க சின்ன பிரேக்...  !   எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!    நம்ம சந்தோஷத்தோடு அடுத்தவங்களும் மகிழ்ச்சியா இருக்க  நினைப்போம்!

Monday 16 December 2013

" பிரம்மாக்கள்..." ( தினமலர்- வாரமலரில் பரிசு பெற்ற கதை)


லேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன். அவசரம்  புரியாமல் செருப்பு வார் அறுந்து காலை இழுத்தது.இந்த ஊருக்கு ஆறு வருடம் கழித்து இப்போதுதான் வருகிறேன். சுற்றி முற்றி பார்க்கிறேன்... செருப்பு கடை எதுவும் கண்ணில் தென்படவில்லை. தூரத்தில் ரோட்டோரம் குடையை விரித்து கடை போட்டு அறுந்த செறுப்புகளை ஒருவன் தைத்துக்கொண்டிருந்தான்.

சமாளித்து நடந்து,

“ஏம்ப்பா... இந்த செருப்பை கொஞ்சம்  தைச்சிடுப்பா... ஸ்கூலுக்கு நேரமாகுது...” கால்களை விட்டு கழற்றினேன்.

 நிமிர்ந்து பார்த்தவன்,  சட்டென்று என் கால்களை தொட்டு வணங்கி எழுந்து நின்று, “ கண்ணன் சார்...என்னை தெரியலையா? நாந்தான் உங்க மாணவன் செங்கோடன்....”

“ அட செங்கோடனா? பார்த்து ரொம்ப நாளாச்சு இல்ல... அதான் அடையாளமே தெரியலை.. இங்க எப்படி? என்ன செய்யறே?  கேள்விகள்தான் என் உதட்டிலிருந்து புறப்பட்டது.
 நினைவு ஆறு  வருடங்களுக்கு முன் சென்றது....

என் அப்பாவும் ஆசிரியர்தான்.அவரிடம் படித்த மாணவர்கள் நிறைய பேர் நான் இன்னவாக இருக்கிறேன் என்று பெருமையாக சொல்லி இனிப்பு தந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள்.

அதை பார்க்கும் போதெல்லாம் ஆசிரியர் பணி மேல் ஒரு  மரியாதை. நானும்  ஆசிரியராக வேண்டுமென்றே ஆசிரிய பயிற்சி முடித்தேன். அப்போது புதுக்கோட்டை அரசு பள்ளியில்தான் முதல் பணியாக சேர்ந்தேன்.



டவுனை விட்டு ஒரு கிராமத்திலிருந்தது அந்த அரசு பள்ளிக்கூடம். அரசு பள்ளிக்கூடங்கள் என்றால் ஏழைப்பிள்ளைகள் மட்டும் படிக்கும் இடமாகிவிட்டது. அந்த ஊரில் தனியார் பள்ளிகளுக்கு  செல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் தொலைவு என்பதால் ஓரளவு வசதியுள்ள பிள்ளைகளும் அங்குதான் படித்து கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு வகுப்பிலும் ஏழை மாணவர்களை  தீண்டத்தகாதவர்களை போல் ஒதுக்கி வைத்திருந்தார்கள். அப்படித்தான் என் வகுப்பில் இந்த செங்கோடனிடம் யாரும் பேசுவதில்லை.

முதல் நாள் வகுப்பில்,  எல்லா மாணவர்களின் பெயரை கேட்டு, நட்பாக கை குலுக்கி வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டிருந்தேன். கடைசி பெஞ்சில் இருந்த அந்த மாணவன் மட்டும்  தயங்கி நின்று கொண்டிருந்தான். எண்ணெய் காணாமல், வறண்ட தலைமுடியுடன் அழுக்குச் சட்டையுடன் என்னிடம் வர தயங்கி கொண்டிருந்தான்.

“ வாப்பா... தம்பி உன் பேர் என்ன..?”

பக்கத்திலிருந்த சில மாணவர்கள்,” அய்யய்யே... சார்... அவனுக்கு கை கொடுக்காதீங்க அவன் குளிச்சே இருக்கமாட்டான்.....”

 நான் அதை காதில் வாங்காமல் அவனை பார்த்து புன்னகைத்து,  “ இங்க வாப்பா... உன் பேரை தயங்காம சொல்லு....”

“ செங்கோடன் சார்...”

அவன் கையை பிடித்து குலுக்கி, “ குட்... நல்லா படிக்கனும், பாடம் புரியலைன்னா எப்ப வேணா எங்கிட்ட சந்தேகம் கேட்கலாம். வகுப்பு முடிஞ்சதும் என்னை வந்து பாரு...”

தலையாட்டினான்.வகுப்பு முடிந்ததும் ஓய்வு அறையில் இருந்த என்னிடம் வந்தான்.

“செங்கோடா பள்ளிக்கு வரும்போது தினமும் குளிக்கனும். குளிச்சாதான் சுகாதாரமா இருக்க முடியும் என்ன...?”

“சார் குளிச்சிட்டுதான் வர்றேன்.சோப்பு போட்டு குளிக்காததால் அப்படி தெரியுது. அம்மா கிட்ட கேட்டா இப்ப வாங்கித் தர்றேன்... அப்ப வாங்கித் தர்றேன்னு திட்டுவாங்க...”

“உங்க அப்பா என்ன வேலை செய்யுறார்?”

“ சார்,  அப்பா ரோட்டோரமா அறுந்த செருப்பெல்லாம் தைப்பார். லீவு நாள்ல நானும் செய்வேன். அம்மாவுக்கு காலையில் தோட்டத்துல பூ பறிக்கிற வேலை. என்னையும் தம்பியையும் கூடவே அழைச்சிகிட்டு போவாங்க, நாங்க பறிச்சாதான் அம்மா இட்லி, தோசைன்னு ஆயா கடையில் வாங்கி தந்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க....”

“சரி, சரி, இனிமே நல்லா படிக்கனும், நல்ல மார்க் வாங்கி உத்தியோகத்துக்கு போய் அப்பா, அம்மா கஷ்டத்தை போக்கனும் , என்ன...?”

“ சார் நல்லாத்தான் படிக்கிறேன்... அம்மா காலையில் தோட்டத்துக்கு கூட்டிக்கிட்டு போகாம இருந்தா இன்னும் படிச்சி முதல் ரேங்க்  வாங்குவேன் சார்....”

செங்கோடன் ரேங்க் கார்டை எடுத்து பார்த்தேன். எல்லா தேர்வுகளிலும் முதல் ஐந்து ரேங்குக்குள் பெற்று இருந்தான்.

மறு நாள் இரண்டு குளியல், துணி சோப்புகளையும், எண்ணை, பவுடர் வாங்கி வைத்து செங்கோடனை அழைத்து தந்தேன்.” இனிமே துணியெல்லாம் அழுக்கு போக துவைச்சி போட்டுட்டு வரனும்.   நாளைக்கு உங்க அம்மாகிட்ட பேசி உனக்கு படிக்க தடையில்லாம செய்யுறேன்... சரியா?”  என்றேன்.

வாங்க கூட்டப்பட்டவனை வற்புறுத்தி திணித்தேன். கண்கள் கலங்கி , “ ரொம்ப தேங்க்ஸ் சார் “ என்றான்.

சக ஆசிரியரான விஸ்வம், “ என்ன சார் இதுங்க கிட்ட எல்லாம் வெச்சிகிட்டு... ஒண்ணுத்துக்கும் படிப்பு ஏறாது. யூஸ்லெஸ் பசங்க. கிளாஸ்ல பேனும் இல்ல, இவனுங்க குளிக்காம வர்ற ஸ்மெல்... இது எல்லாம் சகிச்சிக்கிட்டு இந்த வில்லேஜ்ல வேலை பார்க்கிறதே பெரிய விஷயம்.  நானே எப்படியாவது ட்ரான்ஸ்பருக்கு ட்ரை பண்ணிட்டிருக்கேன். இதை எல்லாம் கண்டுக்காதீங்க...”

எனக்கு அவர்மேல் கோபம் வந்தது. என்னமோ தர்மத்துக்கு வேலை செய்வது போல் நினைக்கிறாரே, பெற்றோர்கள் எதுவும் கேட்க போவதில்லை என்பதால், பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பில் ஒன்றுமே நடத்தாமல் காலத்தை போக்கி கொண்டிருந்தார்கள். இவர்கள் கடமையை செய்யாமல் மாணவர்களை குறை கூறுகிறார்கள். இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் பேசி அவர் தனிப்பட்ட முறையில் அறிவுரை சொல்ல வைத்ததால் , என் மீது மற்ற ஆசிரியர்களுக்கு கோபம்.

வகுப்பில் ஒரு உண்டியல் வைத்தேன்.

“இருக்கிறவங்க முடிஞ்சதை இந்த உண்டியல்ல போடுங்க. ஒரு மாதம் சேர்ந்ததும் அதில் இருக்கிற காசுக்கு எண்ணை, பவுடர் வாங்கி ஷெல்பில் வச்சுடனும். என்ன சரியா...?”

“ சரி சார்...”

குழந்தைகளுக்கு வழி நடத்த ஆள் இருந்தால் போதும், இந்த சமுதாயத்தையே புரட்டி போடுவார்கள். மாதம் தோறும் வகுப்பில் எண்ணை, பவுடர் , ரொட்டி என்று வாங்கி வைத்தார்கள். ஏழை மாணவர்கள் சுத்தமாக தலை வாரி, பசிக்கும் போது பிஸ்கெட்டை எடுத்து கொண்டார்கள். காலையில் வந்தவுடன் ஒவ்வொரு நாள் ஒருவர் வகுப்பை தூய்மை செய்து , நாள் தோறும் ஒரு குறளை போர்டில் எழுதி வைத்தார்கள்.

இன்று அண்ணா பிறந்த நாள்... இன்று மகாத்மா பிறந்த நாள்... என்று ஒவ்வொரு தலைவர்களின் பெயரையும் சொல்லி , அன்று ஒரு மரக்கன்றை நட செய்து, அந்த மரத்திற்கு அருகில் பெயிண்டில் தலைவர்கள் பெயரையும் மாணவர்களை கொண்டு எழுதினேன். ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு குரூப்  நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்.
கிட்டத்தட்ட ஆறுமாதத்திற்குள்ளயே அந்த பள்ளி நந்தவனமானது.செங்கோடன் முதல் மதிப்பெண் பெற்று நன்றாக படித்துக்கொண்டிருந்தான். சக மாணவர்களும் வேற்றுமை மறந்து அவனுடன் நட்பு பாராட்டியும், சந்தேகங்களை அவனிடம் கேட்டும் படித்து கொண்டிருந்தனர்.மாணவர்களின் தேர்ச்சி நூறுசதவீதமாய் ஆனதில் தலைமை ஆசிரியர் பெரிதும் மகிழ்ந்தார்.


அன்று எனக்கு பிறந்த நாள் தலைமை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்ட மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து வகுப்பு அருகே ஒரு வேப்பங்கன்றை நட்டு , “ கண்ணன் சார் பல்லாண்டு வாழ்க என்று எழுதி வைத்தார்கள்.

அன்று மதியம் செங்கோடன் என் ஓய்வு அறைக்குள் வந்து, தயங்கியபடி ஒரு பார்சலை நீட்டினான், “சார் தப்பா நினைச்சிக்காதீங்க...என்னால் முடிஞ்சது....”

குழப்பத்துடன் வாங்கி  பிரித்துப் பார்த்தேன், புத்தம் புதிய செருப்பு ஒரு ஜோடி!

“ சார் அப்பா தைச்சதுதான்..”

அவனை கட்டியணைத்து பரிவாக, “ செங்கோடா.. நான் இதை மறுக்கிறேன்னு வருத்தப்படக்கூடாது.இதை அப்பா வித்தா நூறு ரூபாயவது கிடைக்குமில்லையா? இதை அப்பாவிடமே தந்து விடு... நீ படித்து வேலைக்கு போன பின்னாடி, உன் உழைப்பில் எது வாங்கிதந்தாலும் வாங்கிக்கிறேன்... சரியா?”

முகம் கொஞ்சம் ஏமாற்றமடைந்தாலும், “ சரி சார், நான் நல்லா படிச்சி டாக்டராகி, நீங்க எங்க இருந்தாலும் தேடி வந்து பார்ப்பேன்....” கண்களில் உறுதியோடு சொன்னவனை சாதனைச்சுடராய் பார்த்தேன்.

மாணவர்களை புத்தகம் படிக்கும் எந்திரங்களாக மட்டும் ஆக்காமல், நல்ல மனித சமுதாயமாக வளர என் வகுப்பை பயன் படுத்தி கொண்டேன்.

“ இந்த வகுப்பில் யாரெல்லாம் பொய் சொல்றவங்க... கையை உயர்த்துங்க.....?”

செங்கோடன் மட்டும் கையை உயர்த்தினான்.

“வெரிகுட் ! என்ன எல்லோரும் பார்க்கிறீங்க? பொய் சொல்றதுக்காக நான் அவனை பாரட்டலை.அதை உண்மையாக ஒத்து கொண்டானே அதுக்காகத்தான். ரைட்...  நீ என்ன பொய் பேசுவ செங்கோடா?”

“ நான் எழுதும் போதே அம்மா கடைக்கு அனுப்பும். நான் கால் வலிக்குதுன்னு பொய் சொல்லி உட்கார்ந்துடுவேன்.”

“ம்... எழுதற வேலை கெட்டுடாக்கூடாதேன்னு சின்ன பொய் சொல்லியிருக்கான்...இதைப் போலத்தான் சின்ன சின்ன விஷயங்களுக்கு நீங்களும் பொய் சொல்லியிருப்பீங்க. ஆனா, அந்த பழக்கம் பிற்காலத்துல ஒரு தீய செயலுக்கும் சொல்ல வைக்கும். மாணவர்களே, முதல்ல நம்மை உண்மையா வெச்சிக்கணும் சரியா? ஒரு நோட்டை எடுத்து நம்ம கிட்ட மத்தவங்களுக்கு நன்மை தர்ற குணம் என்னென்ன.... தீமை தர்ற குணம் என்னென்ன இருக்குன்னு ஒரு லிஸ்ட் போட்டுக்கங்க. இப்ப தீமை தர்ற குணங்களை சரி பண்ணிடலாம்.”

“ சார் எங்களுக்கே தெரியாம இத்தனை விரும்பத்தகாத குணங்கள் இருந்திருக்கு...இனி மாற்றிக்கொள்வோம்.!” ஒவ்வொருவராய் நோட்டை நீட்டி உறுதி மொழி எடுத்து கொண்டார்கள்.

மாணவர்களிடத்தில் உண்மையும்,  நேர்மையும் விதைக்கப்பட்டுவிட்டது.இது போன்ற மாணவர்களால் இந்தியாவை வல்லராசாக்க  முடியும் என்ற நம்பிக்கையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கனவுகளை உருவாக்கினேன்.

“ நீங்க எதிர்காலத்துல சமுதாயத்திற்கு என்ன செய்ய போறீங்க?”

“ சார் நான் நவீன விஞ்ஞானம் படிச்சு விவசாயத்தில் சிறந்த நாடா நம்ம நாட்டை கொண்டு வருவேன்...”

“ நான் அரசியல் படித்து நேர்மையான அரசியல் செய்யப்போறேன்...”

“ கலெக்டராகி மக்கள் துயரை துடைப்பேன்....”

“ சார் , நான் மருத்துவராகி, என்னை மாதிரி ஏழை மக்களுக்கு இலவசமா புனித பணியா செய்வேன்....” செங்கோடன் குரலில் உறுதி தெரிந்தது.

அந்த பள்ளியிலிருந்து மூன்று வருடங்களுக்கு பிறகு, பணி உயர்வில் என்னை வேறு ஊருக்கு மாற்றி விட்டார்கள். செங்கோடன் ஒன்பதாம் வகுப்பு வந்துவிட்டிருந்தான். அன்று கடைசி வகுப்பில் பிரிய மனமில்லாமல் கலங்கி அழுதான். எல்லா மாணவர்களுக்கும் நல்ல நம்பிக்கையை விதைத்து விட்டு கிளம்பினேன்.

ஆறு வருடங்களுக்கு பிறகு , இதே ஊருக்கு மாறுதல்.....

“ ஐயா....  நான் டாக்டராகி, உங்களை எங்கிருந்தாலும் பார்ப்பேன்னு சொன்னேன்.. திடீர்னு அப்பா செத்துப் போயிட்டார்யா... எனக்கு வேற வழி தெரியலை. அம்மாவையும், தம்பியையும் நாந்தான் பார்த்துக்கிறேன்.  தம்பியை மட்டும் ஸ்கூலை விட்டு நிறுத்தாம படிக்க வெச்சிட்டிருக்கேன். எப்பாடு பட்டாவது அவனை நல்லா கொண்டு வந்துருவேன்யா....”

மரமாகி விழுது பரப்பும் என்று நினைத்திருந்த சில கன்றுகள், முளையிலே சிதைந்து போன காலத்தின் கொடுமைகளை நினைத்து  என் கண்கள் கலங்கியது.

என் கண்ணீரைப் பார்த்தவன்,” எனக்கு இது கூட பிடிச்சுத்தான் இருக்கு ஐயா... தம்பி படிச்சிட்டான்னா, ஒரு கடை திறந்திடுவேன்....” கண்களில் தேக்க முயன்று தோற்று போய் வழிந்த நீரை துடைத்து கொண்டான்.



வறுமை வளைத்து, மீண்டும் அப்பாவின் தொழிலுக்கே வந்துவிட்ட அவனுக்கு என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை. “ உழைத்து பிழைக்கும் எந்த வேலையும் குறைவு இல்லப்பா.. உன் தம்பி நிச்சயம் உன் கனவுகளை நிறைவேத்துவான்....”  நூறு ரூபாயை நீட்டினேன்.

“ சார் பதினைந்து ரூபாதான் ஆச்சு...” மிச்சம் தந்தான்.மிச்சம் வாங்க மனசில்லை.அவன் தன்மானத்திற்கு பங்கம் வரக்கூடாதென்று வாங்கிக்கொண்டேன்.

“சார் ஒரு நிமிஷம்....”

திரும்பினேன். புத்தம் புதிய ஒரு ஜோடி செருப்பை ஒரு கவரில் போட்டு, “ இது என் உழைப்பில் கொடுக்கிறதுதான் சார்... ஆசையா கொடுக்கிறேன்... எனக்காக இதை வாங்கிக்கணும்...”

இந்த முறை என்னால மறுக்க முடியவில்லை. வாங்கிக்கொண்டு கிளம்பினேன். இரண்டடி நடந்ததும் மீண்டும் திரும்பி பார்த்தேன். என்னையே பார்த்து கொண்டிருந்தவன் கையெடுத்து கும்பிட்டு தலையாட்டினான்.

மீண்டும் பள்ளிக்குள் நுழைகிறேன். மகாத்மா, அண்ணா, காமராஜர் என்று நெடிதாக வளர்ந்திருந்தன மரங்கள்.

‘கண்ணன் சார்’ பெயர் தாங்கிய அந்த மரம் பெரிய கிளைகளை பரப்பி அந்த இடம் முழுதும் நிழலை பரப்பி இருந்தது.

இன்னொரு செங்கோடனின் கனவுகள் இந்த பூமியில் சிதையக்கூடாது இறைவா..... பிரார்த்தனையுடன் நுழைகிறேன்.


*****************************************************************************



Thursday 12 December 2013

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?



 நேற்று ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன்... மண்டபம் முழுதும் அதிக கூட்டம், இப்போதெல்லாம் திருமணத்திற்கு மண நாளன்று முகூர்த்தத்தை பொறுத்து காலையில் எழுந்து வரவேண்டுமே என்ற அவசரமும், அலுவலக விடுப்பு எடுக்கமுடியாத சூழலும் மண  நாளுக்கு முன்  நாள் திருமண வரவேற்புக்கே பெரும்பாலும் கலந்து கொள்கிறார்கள். கலந்து கொள்கிறார்கள் என்பதை விட வருகை பதிவேட்டில் ஆஜராக வேண்டும் என்ற மன நிலையில்தான் வந்து சேர்கிறார்கள். ஒரு பக்கம் இன்னிசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது.. அதை ரசிக்கும் மன நிலையில் யாருமில்லை... அதுதான் எந்த தொலைக்காட்சியை திருப்பினாலும் எதாவது ஒரு பாடல் போய் கொண்டிருக்கிறதே...! யாரும் பொருட்படுத்தா விட்டாலும் செல்வாக்கின் அளவீட்டை காண்பிப்பதற்காக இந்த கச்சேரி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். இங்கு வந்தவர்கள் தெரிந்தவர்கள்...என்று அவரவர் நிலையில் ஒரு  சின்ன விசாரிப்புகள்... அதுவும் கூட மணமக்கள் மேடைக்கு  எப்போது வருவார்கள் என்று எண்ணிகொண்டுதான்! மணமக்கள் வந்து நின்றதும்தான் தாமதம் ஓடிப்போய் பரிசை கொடுத்து விட்டு விருந்துக்கு ஓடும் ஒரு சாரர்.... பரிசு கொடுக்க மேடையில்  நிற்க காத்திருக்க நேரமாகும்.. அதற்குள் விருந்தை முடித்துவிடலாம் என்று பந்தியை  நோக்கி ஓடும் ஒரு சாரர்..! 

ஆண், பெண் இணைந்து வாழ்க்கை ஆரம்பிக்கும் இயல்பான நிகழ்வுக்கு நாம் ஏன் இத்தனை அமர்க்களப்படுத்துகிறோம் என்றே யோசித்தேன். இங்கு முதலில் ஆணையும், பெண்ணையும் இணைப்பது அவர்கள் மனங்களா என்ற கேள்விக்கு ஆம் என்று எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும்? திருமண சம்பிரதாயம் முதலில் ஜாதகத்தில் ஆரம்பிக்கிறது... மனப்பொருத்தத்தை  நிர்ணயிப்பது மணப்பொருத்தம் என்றளவில்தான் பெற்றோரால் யோசிக்கப்படுகிறது. கல்வி , வேலை என்று சுயமாக வாழ்க்கை நடத்த தயாராகிவிட்டாலும் அதெல்லாம் தகுதிகள் கிடையாது. முதலில் மணப்பொருத்தம் பார்ப்பார்கள். சிலருக்கு தடைகள் இல்லாமல் முடிந்து விடும் அவர்களை விடுங்கள். ஆனால் இது சரியில்லை அது சரியில்லை என்று ஜாதக பொருத்தங்கள் நிராகரிக்கப்படும் போது தகுதியான காலம் வந்தும் வாழ்க்கை அமையாமல் எத்தனை ஆண்களும், பெண்களும் திருமண வயதை கடக்கிறார்கள்? அந்த பெண் நல்ல அழகு.. படிப்பு வேலை.. செவ்வாய் தோஷமாம், வரும் வரன் எல்லாம் தட்டி போவதில் பெற்றோர்கள் நேரத்தின் மீது பழியை போடுகிறார்கள். ‘ இன்னும் நேரம் வரலை..’ என்று! அந்த நேரத்திற்கான பரிகாரங்கள், யாகங்கள் என்று அவர்கள் செலவழிக்கும் தொகை திருமண செலவில் பாதியை எட்டிவிடும். இப்படியே அந்த பெண் முப்பது வயதை கடந்து முதிர்கன்னியாகும் போது அந்த பெண் சமூகத்தில் சந்திக்கும் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல... கேவலமான பார்வைகளை தாண்டி உடன் பயணிக்கும் நட்புகளின் கேலிப்பேச்சுக்கள், ‘ இதற்குத்தான் சொன்னேன்...பேசாம நீயே எவனையாவது காதல் பண்ணி ஓடி போயிடு என்று’...! இந்த ஜாதக பொருத்தம் ஆண்களையும் விட்டு வைக்கவில்லை... அந்த மாப்பிள்ளைக்கு லக்கினத்துல சனியும், செவ்வாயும் ஒண்ணா இருக்காம் இந்த ஜாதகத்துக்கு பொண்ணே கொடுக்க கூடாது என்று..! இப்படியே நிராகரிக்கப்பட்ட ஜாதகத்துக்குரிய அந்த ஆண்  நாற்பது வரை திருமணம் அமையாமல் வந்து விடுகிறான். இப்போது சமூகம் இவனையும் விட்டு வைக்காது, ‘ இங்க போறான் பாருய்யா வழுக்கை மண்டையன்... இன்னமும் கல்யாணம் பண்ணிக்கிறான்..  நேரா அறுபதாம் கல்யாணம்தான் ஓய்..! 

ஒரு வழியாக மணப்பொருத்தம் முடிந்தால் அடுத்து பார்க்கப்படுவது அந்தஸ்த்து..!  இவை இரண்டும் ஒத்து வந்தால்தான் வாழ்க்கைக்கான நிச்சயம்.  நிச்சயம் முடிந்து மண நாள் குறித்துவிட்டால் ஆரம்பித்து விடுகிறது பெண் வீட்டாருக்கு தலைவலி...! பெண் சுயமாக சம்பாதிக்கும் நிலையிலும் இன்னமும் வரதட்சணை முடிந்து போகவில்லை. தங்கள் பெண் நன்றாக இருக்க வேண்டுமே என்று கடனை வாங்கி தன் தகுதிக்கு மேல் நகை, வரதட்சணை கொடுக்கும் பெற்றோர்கள்தான் அதிகம்.
           
 சரி திருமணம் குறித்தாயிற்று... பத்திரிக்கையில் ஆரம்பிக்கிறது...விஷயம். இன்ன தேதியில் இன்னார் வாழ்க்கையில் இணைகிறார்கள் அதை சொல்ல ஒரு ஆடம்பமில்லாத ‘தாள்’ போதாதா? படித்துவிட்டு குப்பையில் போடும் அழைப்பிதழுக்கு இங்கு எத்தனை செலவழிக்க வேண்டிதாய் இருக்கிறது? அதிலும் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் அது போதாது மணமக்கள் வேறு தனி தனியே இத்தனை அழைப்புகள் தேவையா? அழைப்பு என்றால் அழைப்புதானே அது ஒன்று போதாதா? 

திருமணம் முடியும் வரை பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வழியாக ஆகிவிடுகிறார்கள். என்னவோ பெண் போகும் இடத்தில் எந்த கடையும் இல்லாதது மாதிரி, காலில் போடும் செருப்பிலிருந்து, துணிமணிகள் வரை பார்த்து பார்த்து வாங்க வேண்டும். தேவைகள் மொத்தத்தையும் திரட்டி கொண்டு அலங்கரித்த  நகை அடுக்காய் பெண் தயாராகிறாள்.

பெண் வீட்டார் வாயிலில் வைத்துள்ள பேனரிலிருந்து வந்து போகும் மாப்பிள்ளை வீட்டார் வரை உபசரிப்பில் குறை வைக்க கூடாது. திருமணம் என்பது திணிக்கப்பட்ட விழாவாக  நடத்தப்படுகிறது. இந்த இரு வீட்டாரோடு மட்டுமா இந்த அவஸ்தை முடிகிறது? புதிய வாழ்க்கை தொடங்குபவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை சொல்ல யாருக்கும் அவகாசமில்லை. முதல் பத்தியில் சொன்னது போல் வருகை பதிவேடு ஆஜர்தான். விருந்தும் கூட மருந்தாய்த்தான் கசக்க செய்கிறது இந்த அவசர உலகில். ஒரு பந்தி உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே... அடுத்த கூட்டம் தயாராய் அவர்கள் முதுகுக்கு பின்னே நின்று கொண்டிருக்கிறது...அவர்கள் எழுந்ததும் இடத்தை பிடிக்க.

இத்தனை களேபரங்களும் பெண்ணுக்கும், ஆணுக்கும் விருப்பமான, பொருத்தமான வாழ்க்கையை இணைக்கிறதா என்பது யோசிக்கத்தான் வேண்டும்! மணப்பொருத்தம் திணிக்கும் மனப்பொருத்தங்களில் சிலர் பொருந்தியும் போகிறார்கள்... பொருந்தாமலும் போகிறார்கள். 
                             ------------

முடிந்தால் இதையும் வாசிக்கலாமே....
என் பார்வையில்....


Tuesday 10 December 2013

என் பார்வையில்............!

நேற்று...இன்று... நாளை...! - கல்லூரி வாசல்..................

சென்ற வாரம் பெண்கள் மலர் நிகழ்ச்சி ஒன்றிர்க்காக அந்த கல்லூரிக்கு சென்றிருந்தேன்... நிகழ்ச்சி முடியும் வரை அதில் கவனம் செலுத்திவிட்டு எல்லோரும் கிளம்பிய பின்.... என்னுடன் வந்த  சகோதரியுடன் அந்த கல்லூரி அசெம்பிளி ஹாலில் இருந்த படிகட்டில் உட்கார்ந்து சில நிமிடங்கள் மௌனமாய் இருந்தேன்... கொஞ்சம் கண் கலங்கவும் செய்தது... ! ஆமாங்க.. ஆமாம்.. நான் அந்த காலேஜ்லதான் படிச்சேன்....  கவலையில்லாமல் சுற்றி திரிந்த அந்த நாட்களும் கல்யாணத்துக்கு பிறகு பொறுப்பா போய்கிட்டிருக்க  இந்த நாட்களும்....எது பெஸ்ட்டுன்னு ரெண்டும் பேசிக்கிடுச்சுங்க.... !  அது பாட்டுக்கு பேசிக்கிட்டு போகட்டும்..!

உங்கள்ல எத்தனை பேரு  கல்லூரி முடித்தும் நட்பை தொடர்ந்துகிட்டு இருக்கிங்கன்னு தெரியலை... ! திருமணத்திற்கு பிறகு குறிப்பா பெண்கள் மட்டும் அவரவர் குடும்பம்னு தனி உலகத்துக்கு போக வேண்டிய சூழல்லதான் இருக்காங்க.. இதில் நட்புகளோடு தொடர்பு கொள்ளவும்... நினைத்து பார்க்கவும் கூட நேரமில்லாமல் போய்விடுகிறது. என்னோடு குழந்தை பருவத்துலர்ந்து நெருக்கமா பழகின தோழியும் இருக்காங்க... “ கல்யாணம் கூட நம்மை பிரிச்சிடக்கூடாது நாம ரெண்டு பேரும் ஒரே ஆளை கல்யாணம் பண்ணிக்கலாமாப்பா?” என்று விவரம் தெரியாத வயதில் பேசி வைத்திருக்கிறோம். அந்தளவு நெருக்கமான தோழி இப்ப இருபது நிமிட பயண தூரத்தில்தான் இருக்கிறாங்க.. ஆனா சந்திச்சுகறதுமில்ல... போனில் கூட அவ்வளவா பேசிக்கறதில்ல...! ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு நட்புகள் வலுவாக இருக்கிறது.  ஆனாலும் மனதில் எங்கோ ஒரு இடத்தில் பசுமையை சுமந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்வின் ஒவ்வொரு நட்புகளும்!

காலேஜ்ல உட்கார்ந்திட்டிருந்த அந்த  நேரத்துல எனக்கு தோன்றிய கவிதைதான் இது- ( அதுக்குன்னு ப்ளாக்- ஒயிட் காலத்துக்கு நான் போயிட்டதா நினைச்சீங்க... அவ்வளவுதான் தீர்ந்தீங்க... !)
அன்று ..அந்த மரத்திடம்
பேசிக்கொண்டிருந்தோம்....
மறந்திடாதே மரமே...
எங்கள் இளைப்பாறலை....
இவள் சுகா
அது வசந்தி...
அங்கே நிற்பவள் மாலதி...
எங்கள் குறும்பு.. கேலி..
ரகசியம்
மறந்து விடாதே...!
என்றாவது வருவோம்...
அப்போது இளைப்பாறவிடு
அந்த நினைவுகளை சொல்லி...!

அந்த மைதானத்தின் மணல்வெளிக்கும்
சொல்லிவைத்தோம்...
காலச்சுவடுகளில்
கலைத்து விடாதே-
எங்கள் பாதச் சுவடுகளை!


இன்று...
இதோ வந்திருக்கிறேன்...
மணல் வெளியெங்கும்-
திரிந்து பார்க்கிறேன்...
இங்கும் அங்குமாய்... ...!
மறந்திருக்க மாட்டாய் மரமே..
 நான்... வந்திருக்கிறேன்..
கண்களை மூடி காதை திறக்கிறேன்..
கதை சொல்...
ஒன்று விடாமல் சொல்...!

....................
...................
நன்றி மரமே-
உன் இளைப்பாறல் சுகமாய்த்தான்
இருக்கிறது...
எல்லாம் சொல்லிவிட்டாய்..
இப்படியே இருந்துவிடலாமா?
அப்படியே இருந்திருக்க கூடாதா..?
மனம் சண்டையிட்டு கிடக்கிறது...!
அது கிடக்கட்டும்!
 நீ சுகமாயிரு....
 என்னை போல் எத்தனை
பேருக்கு சொல்ல வேண்டும்
கதைகளை..!

நீ சுகமாயிரு...
இப்போது தண்ணீரோடு
என் கண்ணீரையும் விட்டு செல்கிறேன்...

விடை பெறுகிறேன்
சுகாவோ, மாலுவோ
வந்தால் சொல்லி வை...
நான் கேட்டதாய்...!
-------------------