Thursday 29 November 2012

எலி வளையானாலும் தனி வளை..!..




வருஷத்திற்கொருமுறை
பயணம்
வாடகை உயர்வு
தண்ணி கஷ்டம்
வெளிச்சம் இல்லை
காரணம்தான் நிறைய..!
பழைய கட்டில்.. பீரோ,
தட்டு முட்டு சாமான்
அலுத்து சொன்னது-
குடிசை கூட போதும்
சொந்தமா ..!

Wednesday 28 November 2012

புது சிலபஸ்


 நம்ம ஆளுங்க பாடத்தை படிக்கறவங்க இல்ல பாடத்தை வடிக்கிறவங்கன்னு எவ்வளவு தெளிவா சொல்றாங்க பாருங்க..!!

Tuesday 27 November 2012

இருட்டில் கிடைத்தது..!


மொட்டை மாடி
வாசப் பக்கம்
வட்ட மேசை மாநாடு
கொறிக்க முறுக்கு
கதைக்க தெனாலி ராமன்
பீர்பால்
நேரம் போனதே
தெரியாமல் அப்பா…
சயின்ஸ் டீச்சரிலிருந்து
பி.டி பீரியடு வரை
மொத்த கதையும்
புலன் விசாரித்த அம்மா..
எதிர்கால கனவா
எதேதோ சொல்லிக் கொண்ட
அண்ணா…
சில்லுனு பட்ட
வேப்ப மர காத்து..!
கரெண்ட் கட் ஆகறது கூட
நல்லாயிருக்குப்பா -
வீட்டின் கடைக்குட்டி
சொன்னது.
நெருஞ்சி முள்ளாய் குத்தியது..
வெளிச்சத்தில் காணாமல் போனது
இருட்டில் அல்லவா கிடைத்திருக்கிறது..?

(  மின் தடை சில சமயம் இப்படி பிரயோசனமாவும்தான் இருக்கு. இல்லைன்னா  அம்மா சீரியல்ல.. அப்பா பைல்ல.. அண்ணன் கம்ப்யூட்டர்ல இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு திசையா. யாரோட மனசும் யாருக்கும் பகிர முடியாத ஓட்டம். இந்த இரவு இருட்டு ஒரு சில மணி நேரம் பூமியை நிதானமா சுத்த வைக்குது. இப்படியாவது உணர்வு பரிமாற்றத்துக்கு நேரம் கிடைச்சதே!)

தலை நிமிர்ந்து நிற்போம்!



கல்லணை (திருச்சி)



பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக...
 கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதரண விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை!!!
 
தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம்.
 
 

Monday 26 November 2012

அப்துல் கலாமிடம் விருது வாங்கனுமா?

இது உங்க வீட்டு குட்டீஸ்க்கும், உங்களுக்கு தெரிந்த குட்டீஸ்க்கும்... சொல்ல வேண்டிய தகவல்.
பள்ளி குழந்தைகளுக்கான படைப்பாற்றல் மற்றும் தொழில் நுட்ப அறிவை ஊக்கப்படுத்த தேசீய  கண்டு பிடிப்பு அறக்கட்டளை  வருடா வருடம் போட்டி நடத்துகிறார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு  டாக்டர்.அப்துல் கலாம் விருது வழங்குகிறார்.  இதை எனக்கு சொன்னவர் எழுத்துக்களால்  நட்பான இனிய தோழி ஒருவர். சென்ற ஆண்டு நடந்த இக்னைட்-2012 இல் அந்த தோழியின் மகன் ஜீவன் சித்தார்த் dual purpose helmet – ஐ தன்  ஐடியாவாக சொல்லி தேர்வு பெற்றிருக்கிறான்.
கட்டிட வேலை செய்யும் சித்தாட்கள் செங்கல், மணலை சுமக்கும்போது தலையில் ஒரு சும்மாடு போல் கட்டி இருப்பார்கள். சித்தாட்களுக்கான இந்த  ஹெல்மெட் அவர்கள் பாரத்தை சரியாக பேலன்ஸ் செய்து பிடிக்கவும்  அவற்றில் உள்ள குஷன் போன்ற அமைப்பு அவர்களுக்கு மென்மையாக இருக்கும்படியும்  வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை அறிய –IGNITE-2012 NIF  அல்லது  nif.org.in/ignite/ingnite.announcement.php   தளத்தை சென்று பார்க்கவும்.
உங்க  வீட்டு குட்டீஸ், அக்கம் .. பக்கம் குட்டீஸ் களுக்கு  இதை சொல்லி ஊக்கப்படுத்துங்கள். அப்துல் கலாம் அவர்களிடம் விருது பெறும் அரிய வாய்ப்பை அவர்களுக்கு தெரிவிப்போம்.


4.JPG


வருங்கால சமுதாயத்தை வாழ்த்துவோமா!

Saturday 24 November 2012

வேஷம் போட்டால்தானே கலைக்க?


 உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
எப்போது குடிகொண்டோம்..
கேட்டுக் கொண்டதில்லை..

ஏதோ பேசிக்கொண்டே
சொன்னாய்..
இப்படியே போய்கொண்டிருந்தால்.
 நன்றாக இருக்கும்..
நடை வண்டி வேகத்தில்
நாம் ஒன்றாய் பயணித்த பேருந்து..!

அம்மாவிற்காய் அதிசயமாய்
வந்தேன்…
கோவிலில் உன் தரிசனம்
திரும்பி பார்த்தேன்..
தூணோரம் நான் வைத்த
மிச்ச குங்குமத்தை
நெற்றியில்  நீ இட்டு கொண்டிருந்தாய்..

இது போல் எத்தனையோ
சாட்சிகள் ..

உனக்குள்  நான் வந்ததை
சொல்லாமல் சொன்னது..

முதலாய் பார்த்த போதே
எனக்குள் நீ வந்தாய்..
நான்  மௌனம் திறந்த போது
வெடித்தாய்..
வீண் கற்பனை என்று..

தீயை மூட்டி விட்டு
குளிர் காயும் நீ
அறிவாயா..?
அமைதி இழந்த
என் இதயத்தின் அழுகையை..!

நீ வெறுத்து ஒதுங்கிய பின்னும்
மீதமிருக்கிறது உன் மீதான பிரியம்..
வேஷம் போட்டால்தானே கலைக்க?

Friday 23 November 2012

ஸ்ரீபுரம் பொற்கோவில் - a2zTamilNadu.com

ஸ்ரீபுரம் பொற்கோவில் - a2zTamilNadu.com


( ஸ்ரீபுரம் பொற்கோவில் பற்றி வேறு ஒரு பதிவிலிருந்து பகிர்ந்து கொள்கிறேன்)

வேலூருக்கு பெருமை சேர்த்த வெளி நாட்டு பெண்மணி!




ஐடா ஸ்கடர் என்ற பெண்ணின் பெற்றோர் மிஷனரிகளாக திண்டி வனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஐடா மட்டும் அமெரிக்காவில் படித்து கொண்டிருந்தார்.  ஐடாவிற்கு  20 வயது ஆகும்போது அவர் தாயார் சுகவீனம் அடைந்தார். அதை கேள்விப்பட்டு தன் தாயாரை காண 1890ம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி திண்டிவனத்திற்கு வந்தார். அமெரிக்காவின் சொகுசு வாழ்கை இந்தியாவில் ஐடா ஸ்கடருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் 1892ம் ஆண்டு வேலூருக்கு மாறுதலானார்கள்.

             அங்கு ஒரு இரவில், ஓர் இளம் மனிதன் இவர்களது வீட்டு கதவருகில் நின்று, பிரவசத்திற்காக துடித்து கொண்டிருக்கும் தனது 14 வயது மனைவிக்கு உதவுமாறு ஐடாவை கேட்டுகொண்டார். ஐடா, தன் தகப்பனாரான டாக்டர் ஜான் அவர்களை அழைத்து செல்லுமாறு தெரிவித்தாள். அவனோ ஒரு ஆண் டாக்டர் தன் மனைவிக்கு உதவி செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போய்விட்டான்.

           இதேபோல் வேறு இருவர் தம் மனைவியர் பிரசவத்துக்கு உதவுமாறு கேட்க, ஐடா தன் தந்தையை சிபாரிசு செய்ய அவர்கள் மறுத்து, மனகசப்புடன் போனார்கள். அக்காலங்களில் பெண்களுக்கு ஆண் மருத்துவர் பிரசவம் பார்க்க அனுமதிப்பதில்லையாம். அவர்கள் மூவரும் ஐடாவின் மனதைப் பெரிதும் பாதித்தனர். மறுநாள் வீட்டின் ஜன்னல் வழியே ஒரு இறுதி ஊர்வலம் போவதைப் பார்த்தாள். தன்னிடம் உதவி கேட்டவர்களின் மனைவியர் இறந்ததை கேள்விப்பட்டார். இந்த சம்பவம் ஐடாவின் மனதை பெருமளவு பாதித்தது.இந்தியாவில் ஒரு பெண் மருத்துவர் கூட இல்லையே  என  வேதனையுற்று , முகம் குப்புற கட்டிலில் விழுந்து அழுதார். பின்பு தன் பெற்றோரின் அனுமதியோடு அமெரிக்கா சென்று பிலடெல்பியாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்று ஒரு மருத்துவராக வேலூர் வந்தார்.

ஐடாவின் வாஞ்சையை அறி்ந்த மிஷன் இயக்கம் வேலூரில் அவளது தந்தை வேலை செய்த இடத்தில் ஒரு வைத்தியசாலையை அமைக்கும்படி ஆலோசனை சொன்னார்கள். 1884 இல் ஐடா உரிய பணத்தைத் திரட்டிக் கொண்டு வேலூர் நோக்கிப் புறப்பட்டாள். ஆரம்பத்தில் மக்கள் ஐடா மேல் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் நிலைமை மாறியது.

தனது வீட்டின் கிழ் தளத்தில் 10க்கு 12 அடி அறையை திறந்து கிளினிக் ஆரம்பித்தார். ஆரம்ப நாட்களில் பல பாடுகளை ஐடா ஏற்றுகொள்ள வேண்டிருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவளது சேவை வளர்ந்து பெருகியது. 1902 இல் வேலூர் மருத்துவமனையை ஆரம்பித்தார்.

முதல் வருடத்திலேயே 21 பெரிய அறுவை சிகிச்சைகளையும், 420 சிறிய அறுவை சிகிச்சைகளையும் செய்து, 12,359 நோயாளர்களுக்கு வைத்தியம் செய்தார்.

1924 இல் 200 ஏக்கர் நிலத்தில் தனது வைத்தியசாலையை பெரிது படுத்தியதுடன், மருத்துவதுறையில் மக்களுக்குப் பயிற்சியும் கொடுத்தார். இன்று வேலூர் மருத்துவமனை ஒரு பிரதான மருத்துவமனையாக திகழ்கின்றது.
 1968 மே மாதம் தன்  90ம் வயதில் ஐடா ஸ்கடர் அம்மையார் மக்களுக்கு சேவை செய்த திருப்தியில்  இறைவனிடம் சேர்ந்தார்.


இப்போது  வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கிறது. இங்கு பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற வருகிறார்கள்.

வெளி நாட்டிலிருந்து வந்து தன்னலமற்று இந்தியாவிற்காக  ஐடா செய்த தொண்டு மனதை நெகிழ செய்கிறது.

Thursday 22 November 2012

ஸ்டைலு ஸ்டைலுதான் ..!




வழக்கமா நம்ம பிரதமர் கோட்-சூட்டுக்கு காத்தடிச்சி அதுக்குள்ள இருப்பார். சமீபத்தில கம்போடியா போனப்ப அந்த நாட்டு பராம்பரிய உடையில் என்னமா கலக்குறார்    பாருங்க. ராமராஜன் காஸ்ட்யூம்லாம் அங்கேர்ந்துதான் வருதுன்னு  இப்பதான் தெரியுது.

 


 நம்ம பிரதமர் கம்போடியாவில் அவங்க உடையை போட்டுகிட்ட மாதிரி நம்ம ஹீரோக்கள் ஒபாமாவை
 சந்திக்க போனப்ப இப்படி போயிருக்காங்க..
  
   

நிறைய பேரு யார் பிரபலமா இருக்காங்களோ அவங்களை மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணிக்கிட்டு, உடை போட்டுகிட்டு திரிவாங்க..

ஆனா இந்த பிரபலம் இப்படி காப்பி அடிப்பாருன்னு ..?




Wednesday 21 November 2012

தேநீர் நேரம்



இந்தாங்க டீ எடுத்துக்கங்க.. அப்படியே நாட்டு நடப்பா உருப்படியா எதாவது பேசலாம்.

எழுத்துப் பிழை வார்த்தையின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.  சில சமயம் எதோ ஒரு எழுத்து விடுபட்டிருக்கும். விஷயத்தை என்று டைப் பண்ணும்போது ‘ ய’ வை மிஸ் பண்ணி... விஷயம் விஷமாகி விட்டிருக்கும்.!

எழுத்தை மிஸ் பண்ணும் போது மட்டுமில்ல, குறில், நெடில், புள்ளி ஒவ்வொன்றிலும் கவனமாக இருந்துதான் ஆக வேண்டியிருக்கு.  வருக என்பதில் ‘ வ ‘  விற்கு கால் போட்டுவிட்டால் அது யாரையாவது வார சொல்லி காலை வாரி விட்டிரும்.  ( தப்பு பண்ணிட்டு இதுல துணைப்பாடம் வேறவா..?)

இப்படி எழுத்து பிழை நகைச்சுவையாவும் இருக்கும். சில சமயம் அதுவே விவகாரமா மாறி பிரச்சினையா கூட ஆகிவிடும்.   


பேசுவதை விட எழுத்திற்கு ரொம்ப பவர்புல்… !பேசும் போது ஒரு நல்ல சிந்தனையை சொல்லனும்னா கூட பேச்சாளர் சுவாரஸ்யமா மக்களை தம் பக்கம் இழுத்தால் தான் அது மக்கள் கிட்ட போய் சேரும். இதை  இளைய ராஜா கூட அவருடைய அனுபவங்கள்ல சொல்லியிருக்காரு. ஒரு முறை அவர் அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு பதில் இளையராஜாவும், அவருடைய மற்றொரு அண்ணன் பாஸ்கர் அவர்களும் ஒரு மேடையில்  தேர்தல் பேச்சுக்காக பாடல் பாடி பேச  போயிருக்கிறார்கள். பாவலர் வணக்கம் என்று சொல்லும் போது கிடைக்கும் கை தட்டல் கூட  நிகழ்ச்சி முடிந்து கடைசி வரை  இவர்களுக்கு கிடைக்கவில்லையாம். ஆனா எழுத்து  நாம எப்படி எழுதுகிறோமோ அப்படி வசியம் பண்ணிடும். கோபம், வீரம், தத்துவம்.. அன்பு.. நம்பிக்கை … நகைச்சுவை  இப்படி பேனாவால எதை வடிச்சாலும் படிக்கறவங்களுக்கு அந்த உணர்வு வரும். அதனாலதான் எழுத்துக்கு ரொம்ப பவர்புல் !  

  நகைச் சுவையை விரும்பாதவங்க யாருமே இருக்கமாட்டாங்க. இந்த சுவை  இல்லாத வாழ்க்கை சப்னு சுவாரஸ்யம் இல்லாம இருக்கும். ஒரு    நாளைக்கு குறைந்த பட்சம் ரெண்டு முறையாவது  சிரிக்கனும். சிரிக்க வைக்கனும். அது கூட இல்லாத சீரியஸ் ஆள் .. ம்ஹும்.. ரொம்ப கஷ்டம் அந்த இடம் சிறை மாதிரிதான் இருக்கும்.



தென் கட்சி கோ.சுவாமி நாதன்  விஷயத்தை சொல்லிட்டு கடைசியில் சிரிக்கிற மாதிரி பண்ணிடுவாரு. அவர் சொன்னதில நான் ரசிச்ச ஓன்று:-

ஒரு எழுத்தாளர் தான்  எழுதி வச்சிட்டிருந்ததை எல்லாம் கொயர் கொயர் பேப்பரா அடுக்கி வச்சிகிட்டு கவலையா இருந்தாராம். அப்ப ஒரு ஆள்  சந்திக்க வந்திருக்கான். இவரை பார்த்து ஏன் இப்படி உம் முனு இருக்கிங்க? ன்னு கேட்டிருக்கான். அதுக்கு எழுத்தாளர் நான் எழுதரதை இந்த ஊடகங்கள் புரிஞ்சுக்கறதேயில்லை. இந்த பதிப்பாளர்களுக்கு   நல்ல எழுத்தை போட தெரியவில்லை.அப்படிதான் ஒரு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் வெறுத்து போய் தான் எழுதினதை எல்லாம் பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டு விட்டாராம். அதுல ஒரு பேப்பர் மளிகை கடையில  பொட்டலம் மடிக்கப்பட்டு  ஒரு ஆள் கையில் கிடைச்சிருக்கு.  அவர் அதுல இருந்த எழுத்தை படிச்சி.. இத்தனை அருமையா எழுதர யார் அவர்…? னு மளிகை கடைக்காரரை விசாரிக்க அவர் பழைய பேப்பர்க் காரரை கை காட்ட மேட்டர் முடிந்தது. மிச்சமிருந்த பேப்பரை எல்லாம் வாங்கி புத்தகம் போட்டாராம். அதற்கப்புறம் அந்த ஆங்கில எழுத்தாளர் ஒஹோன்னு போயிட்டாருங்க என்றார். உடனே சந்திக்க வந்த ஆள் ,  “ கவலைப் படாதீங்க நீங்களும் ஓஹோன்னு ஆயிடுவிங்க அதுக்குதான் நான் இப்ப வந்திருக்கேன் என்றாராம். உடனே எழுத்தாளர் முகம் மலர்த்து , “ அப்படியா நீங்க எந்த பதிப்பகத்துலர்ந்து வந்திருக்கிங்க? “ என்றார். அதற்கு வந்தவர், “  நான் பதிப்பகத்திலர்ந்து வரலை… பழைய பேப்பர் கடையிலிருந்து வந்திருக்கேன்..!”  என்றார்.


ஒரு விஷயத்திற்கு வருவோம்  நிறைய பேர் கிட்ட திறமை இருக்கும், ஆனா சில பேர் உயரத்துக்கு போறாங்க… சில பேர் நின்ன இடத்துலயே இருப்பாங்க. இதுல யாரை யார் இடம் மாற வைக்குதுன்னு பார்த்தாக்கா “ உழைப்புதான்..!”  தோல்வியே வந்தாலும், மனசு உடையாத உழைப்பு இருக்க வேண்டும். உலகத்தில சிறந்த நறுமணம் வியர்வையின் வாசம் னு சொல்வாங்க. கஷ்டபட்டு உயரத்துக்கு போனவங்களை பார்த்தா அவங்க அனுபவங்கள்  பிரமிப்பா இருக்கும். ஏன்னா அந்த வலிகள் நமக்கு தெரியாதது. ஒரு வேளை உணவிற்கு கூட தவித்து, வானமே கூரையாக வாழ்ந்து வானத்தை எட்டி பிடிக்கும்    அளவு   உயர்ந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்படி   ஒரு அனுபங்கள் நமக்கு கிடைக்கவில்லையே என்று கூட ஏக்கப்பட்டிருக்கிறேன். கஷ்டபட்டு முன்னுக்கு வந்தவர்கள் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.   பேராசைக்கும், வெற்றிக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெற்றி நாம் ஒன்றின் மேல் ஆசைப் பட்டு அதற்காக உழைத்ததால் கிடைத்த பரிசு! பேராசை குறுகிய காலத்தில் தகுதி இல்லாமலே  தேடிக் கொள்ளும் பொருள்.

Tuesday 20 November 2012

அந்த மூன்று சொற்களை நீங்க சொல்வீங்களா..?


அந்த மூன்று சொற்களை பற்றி எனக்கு ஒரு தோழி சொன்னாங்க.. அதை அப்படியே நானும் உங்களுக்கு சொல்றேன்...





 ‘நன்றி’, ‘மன்னிக்கவும்’, ‘தயவுடன்’ என்பனவே அந்தச் சொற்கள். ஆனால், இவற்றைப் பயன்படுத்தினாலே, நமது சுயமரியாதைக்கு இழுக்கு வருவதாக நாம் எண்ணிக் கொள்கிறோம்.
மனிதர்கள், தனித்தனியே பிரிந்து கிடக்கும் தீவுக்கூட்டம் அல்ல. அடுத்த மனிதர்களைச் சார்ந்தே நாம் வாழ்கிறோம். நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகப் பலர் நமது செயல்களுக்குத் துணை நிற்கிறார்கள்.
உணவகத்தில் நமது அவசரத்தைப் புரிந்து கொண்டு, நாம் கேட்கும் உணவுகளை உடனுக்குடன் கொண்டுவந்து தந்து, சாப்பிட்ட உணவுக்காகக் கொடுத்த பணத்தின் மீதத்தையும் உடனே கொண்டு வந்து தரும் பணியாளிடம், ‘அதை நீயே வைத்துக்கொள்’ என்று வெறுமனே சொல்லிவிட்டுக் கிளம்பாமல், அத்துடன் ‘நன்றி’ என்று சிரித்த முகத்துடன் சொல்லும்போது, அவர் அடையும் மகிழ்ச்சி அதிகம்.
நமக்காக ஒரு வேலை செய்யும் எவருக்கும் நன்றி சொல்லலாம். ‘அவர் பணம் வாங்கிக் கொண்டுதானே செய்கிறார்… நன்றி எதற்கு சொல்ல வேண்டும்’ என்று தோன்றினால், நமது மனம் இன்னும் மலரவில்லை, கூம்பித்தான் கிடக்கிறது என்று பொருள்.
எந்த மனித உறவையும் அல்லது வேலையையும் பணத்தினால் மட்டுமே அளந்து விட முடியாது. ‘சந்திக்கும் எவரிடமும் அன்பாக இருங்கள்… கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்… ஏனெனில், எவருமே ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு போராடுபவர்களாகவே இருக்கிறார்கள்…’ என்கிறார் கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோ. அவரது காலத்திலேயே அப்படி என்றால், ‘ஓடிக்கொண்டே இருந்தால் தான் நின்ற இடத்திலேயே இருக்க முடிகிறது…’ என்னும் சூழலில் வாழும் நமது மனிதர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆனால் புன்னகைக்கக்கூட நேரம் இல்லாதது போலவே நாம் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். பெற்றோரும் நண்பர்களும்கூட நமக்கு உதவி செய்வதற்கென்றே பிறந்தவர்கள் போலவும், ஆனால் நமக்கு அடுத்த வேலைகள் ஆயிரம் இருப்பது போலவும் நடந்து கொள்கிறோம்.
நன்றாகச் சமைத்து வைத்திருக்கும் மனைவிக்கோ அல்லது அம்மாவிற்கோகூட நன்றி சொல்ல நமக்குத் தெரிவதில்லை. சிரமப் பட்டாவது நம்மைப் படிக்க வைக்கும் அப்பாவுக்கோ அல்லது நமக்குப் பிடித்த வண்ணத்தைத் தேடிப்பிடித்து தீபாவளிக்குப் புடவை வாங்கித்தரும் கணவனுக்கோ நன்றி சொல்லத் தோன்றுவதில்லை. ‘அவர் அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்’ என்று பதில் சொல்லத் தெரியுமே தவிர, சொன்னால் எவ்வளவு மகிழ்வார்கள் என்று எண்ணிப் பார்ப்பதில்லை.
வேலை செய்யுமிடத்தில், நம்மைவிடக் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் நாம் சொல்லும் நன்றி, அவர்களை ஈடுபாட்டுடன் வேலை செய்ய வைக்கிறது. அவர்களிடம் இருக்கும் திறமையை மேலும் வெளிக்கொணர்கிறது.
அதேபோன்று மற்றொரு முக்கியமான சொல், ‘மன்னிக்கவும்’ என்பது. தவறு செய்வது மனித இயல்பு. எந்தச் செயலிலும் தவறு நிகழலாம். ‘மனிதத் தவறு’ என்றே அது குறிக்கப்படுகிறது. எனவே, தவறி தவறு செய்வது மிகப்பெரிய பிழையன்று. ஆனால், நிகழ்ந்துவிட்ட தவற்றுக்கு, வருத்தம் தெரிவிக்கி றோமா என்பதில்தான் சிக்கல் எழுகிறது.
‘நான் செய்வதில் தவறே நிகழாது’ என்கிற எண்ணமோ; அல்லது, இதில் மன்னிப்புக் கேட்க என்ன இருக்கிறது…’ என்கிற எண்ணமோ; ஏதோ ஒன்று நம்மைத் தடுத்துவிடுகிறது. மன்னிப்புக் கேட்பது மனிதப்பண்பு என்பது இருக்கட்டும்; தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களே, தாங்கள் செய்துவிட்ட தவற்றிற்கு மன்னிப்புக் கேட்கிறார்கள் என்னும் உண்மையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று, தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களே, அறியாமல் பிறர் செய்துவிட்ட தவற்றினையும் மன்னிக்கிறார்கள்.
‘பலவீனங்கள் பிறரை மன்னிப்பதேயில்லை. ஏனெனில், அது வீரர்களின் குணம்’ என்கிறார் காந்தியடிகள்.
ஞானி ஒருவரைக் காண மிக வேகமாக வந்தார் ஒருவர். ஓர் அறையில், பலர் சூழ்ந்திருக்க அமர்ந்திருந்தார் ஞானி. உடனே அவரைக் கண்டு அளவளாவும் ஆவலில், தனது இரு காலணி களையும் கால்களிலிருந்து உதறியெறிந்துவிட்டு உள்ளே ஓடினார் வந்தவர். வந்தவரையே பார்த்துக் கொண்டிருந்தார் ஞானி.
‘ஐயா… உங்களிடம் ஞானம் பெறவே நான் ஓடி வந்தேன்.. எனக்கு உபதேசம் வழங்குங்கள்…’ என்றார் அவர். சலனமற்ற முகத்துடன் ஞானி சொன்னார்: ‘நீ உதறி கழற்றியெறிந்துவிட்டு வந்தாயே! உன் கால் செருப்புக்கள் இரண்டு… முதலில் அவற்றிடம் போய் மன்னிப்புக் கேட்டு விட்டு வா’ என்றார் ஞானி. தவறு செய்துவிட்டு, அதற்கு மன்னிப்பு கேட்கத் தகுதி பார்க்க வேண்டியதில்லை.
மற்றொரு முக்கியமான சொல், ‘தயவுடன்’. அடுத்தவர் செய்யும் தவற்றினைச் சுட்டிக் காட்டும் போதோ அல்லது நமது சொற்களைத் தலை மேலேற்றிச் செயலாற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்களிடம் ஒரு வேலையைச் செய்யச் சொல்லும்போதோ, ‘தயவுடன்’ என்னும் சொல்லைச் சேர்த்து சொல்வது, ஓர் உயரிய குணம்.
நாம் போக முடியாதவாறு வழியை அடைத்துக் கொண்டிருப்பவரிடமோ அல்லது வண்டியை நிறுத்தி வைத்திருப்பவரிடமோ, இந்தச் சொல்லையும் சேர்த்து கோரிக்கை வைத்துப் பாருங்கள்; உரிய பலன் உடனே கிடைக்கும்.
அப்படி இல்லாமல், சற்றுக் கோபத்தையும் சேர்த்து சொல்லப்பட்ட சொற்கள், கிரிமினல் வழக்கு வரை கொண்டுவந்துவிட்ட நிகழ்வுகள் இங்கு நிறையவே உண்டு.
நாம் ஆணையிட்டால் செயலைச் செய்து முடிக்க வேண்டியவரிடம், ‘தயவுடன் இதைச் செய்ய முடியுமா?’ என்று கேட்டால், அவர்களின் உள்ளம் மட்டுமல்ல, உச்சியும் குளிரும். அந்தக் குளிர்ச்சி அவர்களின் செயல்களில் வெளிப்படும்.
எவ்வளவு கடினமான சூழலையும், இந்த மூன்று சொற்கள், இளக்கமடையச் செய்கின்றன. எவ்விதக் கசப்பான மனநிலையையும் மாற்ற வல்லவையாக இவை இருப்பதன் காரணம், இந்தச் சொற்கள் தேனில் மிதந்து கொண்டிருப்பவை. எடுத்துப் பரிமாறினால், இனிக்காமல் என்ன செய்யும்?


திரைக்கதை, வசனம் நானில்லை...





கிராமத்தில் சொந்தமாக செக்கு ஓட்டு தொழில் செய்து வருபவன் அய்யாவு. அம்சாயா என்ற தன் தங்கையைத் தவிர அவனுக்கு வேறு சொந்தபந்தம் இல்லை. கொஞ்சம் போல் பழகும் விசுவாசமான பணியாள் சன்னாசி மட்டும் உண்டு.

தன் தங்கை அம்சாயாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கும் வேளை, அய்யாவின் கிராமத்திற்கு அஞ்சலை என்ற ஒரு இளம் வயதுப் பெண் பெட்டிக்கடை குருவம்மா வீட்டிற்கு உறவுக்காரியாக வருகிறாள். முதலில் அஞ்சலையுடன் சின்னச் சின்ன சண்டைகள் பிடிக்கும் அய்யாவு, பின்னாளில் அஞ்சலை தாய்தந்தையற்ற அனாதை... வேறு போக்கிடம் இன்றி பெட்டிக்கடைக்காரியிடம் தஞ்சம் புகுந்ததை அறிந்து அவள்பால் அனுதாபம் கொண்டு அது காதலாக மலர, அதை தங்கை அம்சாயா கவனித்து விடுகிறாள். அவளுக்கும் அஞ்சலையின் குணா பாவங்கள் பிடித்துப் போகவே அவளே தன் அண்ணியாக வர ஆசைப்படுகிறாள்.

அஞ்சலை சீடை முறுக்கு போன்ற கைப்பதாங்கள் போடுவதில் கைதேர்ந்தவள் என்பதை புரிந்து கொண்ட அய்யாவு அவள் தொழிலுக்கு ஆரம்ப உதவிகள் செய்ய தொழில் நல்லபடி வளர அஞ்சலை அய்யாவை நன்றியுடன் பார்க்கிறாள்.

இடையிடையே தன் தங்கைக்கு பல மாப்பிள்ளைகளை நேரடியாக பார்த்து யாரும் சரியில்லாததால் அதிர்ச்சியுறும் அய்யாவை சன்னாசி சமாதானப்படுத்துகிறான்.

பெட்டிக்கடை குருவம்மாவிடம் இருக்கும் அஞ்சலை மேல் அந்த ஊர் பெரிய தனத்தின் பார்வை விழுகிறது. அஞ்சலை அதை நாசூக்காக தவிர்த்து வரும் வேளை திடீரென குருவம்மா இறந்துவிட, வயதுப் பெண் அஞ்சலை அந்த வீட்டில் தனிமையில் இருக்க நேரிடுகிறது. அதை சாதகமாக நினைத்து பெரியதனம் இரவு வேளை அஞ்சலையைத் தூக்கிவர ஆள் அனுப்ப அய்யாவு அதை தடுத்து சண்டையிட அதன் காரணமாய் பஞ்சாயத்து கூடுகிறது. பஞ்சாயத்தில் அஞ்சலைக்கும் அய்யாவுக்கும் தொடர்பு உண்டென பெரியதனம் பழிசுமத்த, தங்கை அம்சாயா, ‘‘ஆம் உண்மைதான்! அஞ்சலையே எனக்கு அண்ணியா வரப்போறவள். இப்போதே வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்’’ என்று கூட்டிச் செல்ல, அனைவரும் திகைப்பு. அஞ்சலை அம்சாயாவிடம் தனக்கும் அய்யாவு மேல் விருப்பம் இருப்பதை ஒப்புக் கொண்டு வீட்டோடு இருக்கிறாள்.
இந்நிலையில் பக்கத்து டவுன் கடை வீதியில் வைத்து ஒரு நல்ல மாப்பிள்ளையை அய்யாவு தானே பார்த்து தேர்வு செய்ய புரோக்கரை அணுகினான். புரோக்கர் அய்யாவிடம் அவளது தங்கையின் போட்டோ கேட்க, அய்யாவு அப்போது தன் கைவசம் தானும் தன் தங்கையும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவைத் தந்து அனுப்புகிறான். 30 சவரன் வரை அய்யாவு சீர் செய்வதாக வாக்களித்து நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம் நெருங்கும் வேளை.

தங்கைக்கு நகை செய்ய அய்யாவு தான் பணம் டெபாசிட் செய்து வைத்திருந்த நிதி நிறுவனத்தைத் தேடிப் போக அது மூடப்பட்டது கண்டு அதிர்கிறான். திருமணம் நெருங்கிய நிலையில் பரிதவித்து நிற்க விஷயமறிந்த அஞ்சலை தான் சிறுவயது முதல் சேர்த்து வைத்த பணம், நகைகள் தனது அம்மாவின் பூர்வீக நகைகள் என இருந்த மொத்தத்தையும் அய்யாவுவின் கையில் கொடுத்து சந்தோஷமாக திருமணத்தை நடத்தும்படி கூறுகிறான். அய்யாவும் நன்றியுடன் கண்கலங்க... திருமணம் நடக்கிறது.

திருமணம் முடிந்து அய்யாவு புறப்படும் வேளை. சம்பந்தி வீட்டினர் ஒருநாள்  இருந்து போகலாம் என்று கூற அஞ்சலை சன்னாசி புறப்பட அய்யாவு மட்டும் அங்கு தங்குகிறான். அன்று இரவு தங்கைக்கு சாந்தி முகூர்த்தம் நடக்கிறது. மறுநாள் காலை அய்யாவு குளித்து புறப்படும் வேளை. சம்பந்தி வீட்டினர் அய்யாவை வீட்டின் ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்ல அங்கே பரிசத் தட்டுகள் இரண்டு வைக்கப்பட்டுள்ளன.

‘‘உட்காருங்க சம்பந்தி தட்டு மாத்திக்குவோம்’’ என்று மாப்பிள்ளை வீட்டார் கூற, அய்யாவு, ‘‘எதுக்கு?’’ என்று குழம்ப, ‘‘பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கறதுதானே நம்ம பேச்சு. உங்க தங்கச்சிய எங்க பையன் கட்டிட்டான். அடுத்தது எங்க வீட்டுப் பொண்ணை அதாவது மாப்பிள்ளை தங்கச்சியை நீங்க கட்டிக்கோங்க’’ என்று கூற, அய்யாவு அதிர்ந்து, தான் அப்படிப் பேசவில்லை என்கிறான்.

‘‘நீங்க பொண்ணோட இருக்கற போட்டோவும் சேர்த்து அனுப்பிட்டு இப்ப இப்படி அடம்பிடிச்சா எப்படி?’’ என்று சண்டையிட, அய்யாவு தான் ஏற்கனவே ஊரில் அஞ்சலைக்கு வாக்குத் தந்த விதம் கூற, ‘‘அவ முக்கியமா? உங்க தங்கை முக்கியமா? ம்.. இப்ப தட்டு மாத்தலேன்னா சாந்தி முகூர்த்தம் முடிஞ்ச உங்க பொண்ணோட நீங்க ஊர் போகலாம்’’ என்று உறுதியுடன் மிரட்ட, அய்யாவு தங்கை வாழ்க்கை பறிபோய்விடும் என்ற பயத்தில் தட்டு மாற்றப் போக, அதைத் தட்டிவிட்டு தங்கை அம்சாயா, ‘‘எனக்கு அண்ணி அஞ்சலைதான். எனக்கு சாந்தி முகூர்த்தம் நடத்தி நயவஞ்சகமாக இப்படி நாடகமாடுவதை நான் எந்தக் காரணம் கொண்டும் ஏற்கமாட்டேன். நான் தேவையென்றால் என் கணவன் என்னை வந்து கூப்பிட்டுக் கொள்ளட்டும். நான் அண்ணனுடன் ஊர் போகிறேன்’’ என்று புறப்பட, மாப்பிள்ளை வீட்டார், ‘‘நீ மறுபடி உள்ளே வர முடியாது’’ என்று கூற, அய்யாவு, ‘‘அவசரப்படாதே’’ என்று கூறியும் தங்கை அம்சாயா அண்ணனுடன் வண்டி ஏறி ஊருக்கு புறப்பட்டு விட, மாப்பிள்ளை வீட்டார் வன்மத்துடன் முறைத்து நோக்குகின்றனர்.

தங்கையுடன் ஊர் திரும்பிய அய்யாவைக் கண்டு அதிர்ச்சியுற்ற அஞ்சலை நடந்தவைகளைக் கேள்விப்ட்டு தான் இடையூறாக இருக்க விரும்பவில்லை என்று வீட்டை விட்டு வெளியேற அம்சாயா தடுத்து விடுகிறாள்.
‘‘ஆயிரம் இருந்தாலும் நீ உன் கணவன் வீட்டில் இல்லாத நேரம் நடந்த சண்டையில் வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாது’’ என்று அஞ்சலை அம்சாயாவிடம் கூற, அம்சாயா, ‘‘அவர் அந்த நேரத்தில் இல்லாதது எனக்கு அவர் மீதும் சந்தேகத்தை உண்டு பண்ணியது’’ என்று கூறுகிறாள். உடனே அஞ்சலை அய்யாவிடம், ‘‘இவள் விபரம் புரியாது பேசுகிறாள். நீங்கள் தயவு செய்து மீண்டும் சென்று உங்கள் தங்கை கணவனை சந்தித்துப் பேசிவாருங்கள்’’ என்று அனுப்பி வைக்கிறாள்.

அய்யாவு மாப்பிள்ளையை சந்தித்து பேச மாப்பிள்ளை அய்யாவை வீட்டிற்கு அழைத்து காப்பி கொடுத்து, ‘‘என் வீட்டார் என்னிடமே பொய் சொல்லி விட்டனர். ஏற்கனவே என் தங்கை திருமண மேடை வரை வந்து மாப்பிள்ளை மாரடைப்பால் இறந்ததால் திருமணம் தடைபட்டு விட்டது. அன்றிலிருந்து இதுவரை திருமணம் நடக்கவில்லை. எனவே நான் என் தங்கைக்காக எந்த வரதட்சணையுமின்றி நான் பெண் எடுத்து பெண் கொடுக்கும் எண்ணத்தில் இருந்தேன்.

நான் பெண் எடுத்து பெண் கொடுக்கும் எண்ணத்தில் இருந்தேன். உங்கள் தங்கை போட்டோவுடன் உங்கள் போட்டோவும் இணைத்து நீங்கள் தந்ததால் நீங்கள் சம்மதித்ததாய் நினைத்தேன். இரண்டு திருமணங்களையும் ஒன்றாக நடத்த நான் முடிவெடுத்தபோது, ‘‘உங்கள் வீட்டில் உங்களைத் தவிர பெரியவர்கள் யாரும் இல்லாததால் இரண்டு திருமண வேலைகளை ஒரே நேரத்தில் தங்களால் கவனிக்க முடியாதென்றும் முதலில் உங்கள் தங்கை திருமணத்தை முடித்து பின் உங்களது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கேட்டுக் கொண்டதாய் என்னிடம் கூறினார்கள். நான் அதை நம்பினேன். ஆனால் இப்போதுதான் எனக்கே தெரிய வருகிறது. என் தங்கைக்கு நீண்ட காலமாக வரன் அமையாததால் உங்களை மட்டுமல்ல என்னையும் சேர்த்து எங்கள் தாய் தந்தையர் ஏமாற்றி விட்டனர் என்று’’ என்று உருக்கமாகக் கூறி நிறுத்த அய்யாவுக்கு மாப்பிள்ளை நல்லவராக இருக்கிறார் என்று சின்ன நிம்மதி வந்தது.

தொடர்ந்து மாப்பிள்ளை, ‘‘சரிங்க! என்னைப் பெத்தவங்க தப்பு பண்ணிட்டாங்க. அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இப்ப உங்ககிட்ட நான் பிச்சையா கேட்கறேன். என் தங்கைக்கு நீங்க ஏன் வாழ்வு தரக் கூடாது?’’என்று இடியை இறக்க ஆடிப்போன அய்யாவு அஞ்சலை பற்றிக் கூறுகிறான்.

அதற்கு மாப்பிள்ளை, ‘‘நாம ஒன்னுக்குள்ள ஒண்ணு. அது மூனாம் மனுஷி. இருந்தாலும் நீங்க வார்த்தை கொடுத்ததாலே என் சித்தப்பா பையனுக்கு எல்லா செலவும் பண்ணி நானை அந்தப் பொண்ணு கல்யாணத்தை நடத்தறேன். நீங்க என் தங்கைக்கு வாழ்வு கொடுங்க’’ என்கிறான்.

‘‘அந்தப் பொண்ணு என்னை ரொம்ப நம்பிட்டிருக்கா மச்சான்’’
‘‘உங்க தங்கச்சி கூட காலம் பூராம் வாழப்போற என்னைவிட உங்களுக்கு அந்தப் பொண்ணுதான் உசத்தியா?’’
‘‘அப்படியி¢ல்லீங்க’’

‘‘மச்சான். என் தங்கச்சி மணமேடை வரைக்கும் வந்து அது நின்னு போனதாலே அவ ராசியில்லாதவன்னு எவனுமே சீந்த மாட்டேங்கறான்.  அப்படி ஒரு அவஸ்தையும் பிரச்சனையும் இந்த வீட்டோட நிம¢மதியையே கெடுத்துட்டிருக்கு மச்சான்’’

‘‘புரியுது மச்சான். நான் இல்லேங்கலை. அதுக்காக உங்க வீட்டுப் பிரச்சனைய மூனாம் மனுஷந் தலையில உங்கப்பா அம்மா ஏத்த நினைக்கறது நியாயமில்லே’’

‘‘மூனாம் மனுஷனா?’’ டக்கென எழுந்த மாப்பிள்ளை, ‘‘தப்புதாய்யா கட்னதாலே உங்கிட்ட மூனாம் மனுஷன் உங்கிட்ட பிச்சை கேட்டது என் தப்புதான். புறப்படு...’’என்று கத்த, அய்யாவு அதிர்ச்சியுடன் ‘மச்சான்‘ என்று எழ, ‘‘யோவ்! உன் தங்கச்சி எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம சாந்தி முகூர்த்தம் முடிஞ்ச மறுநாளே உங்கூட புறப்பட்டுப் போயிட்டாளே. ஊர்காரர் எல்லாம் என்னை முன்னால விட்டு பின்னால என்ன பேசனாங்க தெரியுமா? இவன் சரியான ஆம்பளை இல்லை போல இருக்கு. மறுநாளே இவன் சம்சாரம் சொல்லாம கொள்ளாம போயிட்டான்னு காரித்துப்பனாங்க. எனக்கு நாண்டுக்கிட்டு சாகற மாதிரி  இருந்துச்சு. இதுவரைக்கும் அதைப்பத்தி உங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டனா? இல்லை... ஆனா நீ எவ்வளவு ஈஸியா உன்னை மூனாம் மனுஷன்டே? போ வெளியே போ’’ ‘‘மச்சான்’’ ‘‘பேசாதே! போயிடு ஆனா ஒன்னு நீ என் தங்கச்சிய கட்டுலேங்கறதுக்காக ஒரு ராத்திரி எங்கூட குடுத்தனம் பண்ண உன் தங்கச்சிய வேண்டான்னு ஒதுக்க மாட்டேன். என்னைக்கும் அவதான் என் பொண்டாட்டி....புறப்படு’’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட அய்யாவு செய்வதறியாது ஊர் திரும்புகிறான்.

நடந்தவைகளை அறிந்த அஞ்சலை அம்சாயாவைத்திட்டு முதலில உன் கணவனைப் பார்த்து மன்னிப்பு கேட்டு நீ அவருடன் வீட்டோடு தங்கி, உன் அண்ணன் விவகாரம் பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி வைக்கிறாள். அதன்படியே அம்சயா ஊரில் நுழைய வழியிலேயே தன் கணவனை சந்திக்க நேருகிறது. கண்கலங்கி தான் சொல்லாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறாள். கணவன் ‘‘ பரவாயில்லை நீ வீட்டில் போய் இரு. நான் சாயந்திரம் வருகிறேன்’’ என்று கூறிபோக அம்சயா புருஷன் வீட்டை அடைகிறாள்.
அங்கே வாசலிலேயே அவளை மடக்கிய மாமியார் மாமனார் மற்றும் மாமன் கூட்டம் வாய்க்கு வந்தபடி ஏசி ‘மறுபடி ஏன் திரும்பி வந்தே’ என்று கேட்க ஒரு உறவினர் ஆள், ‘‘¢அட! பூனை ஒருநாள் ரூசி கண்டிருச்சி திரும்பி வராம என்ன பண்ணும்?’’ என்று கொச்சையாகப் பேச இன்னொருவன் ‘‘அந்த ரூசிக்கு அவங்க ஊர்லயே யாரையாவது பார்க்கச் சொல்லு’’ என்றதும் பொறுக்க முடியாத அம்சாயா மாமியாரைப் பார்த்து த்தூ! உன் புள்ளை தாலிகட்ன ஒரு பொண்ணை வாசல்ல வச்சி எவ எவனோ பொறம்போக்குக பச்சை பச்சையா பேசறாங்க. அதை கேட்டு ரசிக்கறயே நீயெல்லாம் ஒரு பொம்பளை? இனி நான் இந்த வீட்டு வாசல் மிதிக்கமாட்டேன். என் கூட ஒருநாள் குடித்தனம் பண்ணபின் நான் வேண்னா என்னைக் கூட்டிவந்து தனிக் குடித்தனம் வைக்கட்டும் நான் போறேன்’’ என்று வெளியேறி விடுகிறாள்.

இதற்கிடையே அஞ்சலை தன்னால் தானே பிரச்சனை என்று ஊரைவிட்டு வெளியேற அவளை மடக்கிய அம்சாயா ‘‘சத்தியம் செய். இன்னொரு முறை நீ புறப்பட்டால் நான் தற்கொலை செய்வேன்’’ என்று தடுத்து விடுகிறாள்.

சில நாட்களில் அம்சாயா வாந்தி எடுத்து கர்ப்பமானது தெரிகிறது. நல்ல செய்தியை சொல்ல அய்யாவு மாப்பிள்ளை வீட்டுக்கு வர மாப்பிள்ளை அங்கு இல்லை. ஆனால் சந்தோஷமாக விஷயத்தை சொன்னதும் சில உறவினர்கள், ‘‘ யாருக்கு உண்டாச்சு?’’ என்று கேட்க அய்யாவு அனைவரையும் அடித்து உதைத்து வந்து விடுகிறான்.

மறுநாள் மாப்பிள்ளை அய்யாவு ஊருக்கு வர தன் கணவனை வரவேற்க அம்சாயா வாசலுக்கு ஓட அய்யாவு வாங்க மாப்பிள்ளை என்று அழைக்க, வந்த மாப்பிள்ளை வாசலிலேயே நின்று ‘‘என் சொந்தபந்தம் உங்கண்ணகிட்ட தப்பா பேசிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். என்னை மன்னிச்சிடு. ஊர் உலகம் ஆயிரம் சொன்னாலும் உன் வயித்துல வளர்றது என் குழந்தைங்கறது எனக்கு சாமி சத்தியமாத் தெரியும். கர்ப்பமா இருக்கற நீ மனக்கஷ்டத்தோட இருந்தா உனக்கும் குழந்தைக்கு ரெண்டு பேருக்கும் நல்லதில்லை. அதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்’’ என்கிறான். அனைவரும் மகிழ்ந்து வீட்டினுள் அழைக்க ‘‘இல்லை! மூனாம் மனுஷன் வீட்டுக்குள்ளே நான் வரலை. என் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. அதை முடிச்சுட்டு வேறே வீடு பார்த்துட்டு உன்னை வந்து கூட்டுப் போறேன்’’ என்று சென்றுவிட அனைவரும் மனம் வருந்துகின்றனர்’’ எப்படியோ அவரது தங்கை திருமணம் முடிந்ததும் தனக்கும் வாழ்க்கை கிடைக்கும் அண்ணன் அஞ்சலைக்கும் திருமணம் நடக்குமென அம்சாயா சற்று நிம்மதியடைகிறாள்.
சில நாட்கள் கழித்து மாப்பிள்ளையிடமிருந்து அய்யாவுக்கு திருமணப் பத்திரிக்கை வருகிறது. திருமணம் நடக்கும் ஒரு நாள் முன்பு,  முன்பொருநாள் அஞ்சலையின் மீது கை வைத்து அய்யாவால் அடிபட்ட, பெரியதளம் திடீரென ஆள் விட்டு அய்யாவை அழைக்கிறான்.

அய்யாவு பெரியதளத்தை சந்தித்தபோது பெரியதளம், ‘‘உன் மச்சானின் தங்கைக்கு நிச்சயமான மாப்பிள்ளை என் ஆள்தான் ஏற்பாடும் என்னோடத்தான். இந்தக் கல்யாணம் நல்லா நடக்கணும்னா அஞ்சலைய நீ இப்பவே எங்கிட்ட அனுப்பு. இல்லே கல்யாண மாப்பிள்ளைய நான் ஊரை விட்டே அனுப்பிடுவேன். ரெண்டாவதாவும் கல்யாணம் தடைப்பட்டா அதுக்கப்புறம் ஆயுசுக்கும் கல்யாணம் நடக்காது என்ன சொல்றே?’’ என்று மிரட்ட அய்யாவு, ‘‘ ஒரு பொண்ணை உங்கிட்ட அனுப்பி அவ மானத்தை உங்கிட்ட அடகு வைக்கறதை விட உன் கையக்காலை ஒடிச்சு அவ மானத்தைக் காப்பாத்திட்டு கல்யாணப் பொண்ணுக்கு நான் தாலியக்கட்றேன்’’ என்று கூறி பெரியதளத்தையும் ஆட்களையும் பந்தாடிவிட்டு மாப்பிள்ளையிடம் விபரம் கூற அவரது ஊர் நோக்கிச் செல்கிறான். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. விசாரித்தபோது ‘‘மாப்பிள்ளை போன் செய்து திருமணத்தில் உடன்பாடில்லை என்று கூறியதால் மணப்பெண் தற்கொலைக்கு விஷம் அருந்தி விட்டாள். அனைவரும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர் என்று கூற எல்லோரும் அலறியடித்து ஆஸ்பத்திரிக்குச் செல்ல அவள் உயிர் பிழைத்தாளா? அஞ்சலை என்ன ஆனாள்? என்பது இறுதி முடிவு?

இது ஒரு படத்தோட திரைக்கதை. (கொஞ்சம் பழசான படம்) என்ன படம்னு கண்டுபிடிச்சிட்டிங்களா?

க்ளூ: அய்யாவு நாக்கை துருத்தற கதா நாயகன்.

“ அதுதான் ஞாபகம் இருக்கிறது…! “



 நம் கடைசி சந்திப்பு
இன்னும் காட்சியாய்..
மௌனத்தை கிழித்தெரிந்த
உன் வார்த்தைகள்
வரி வரியாய் மனதில்..
நேசிப்பை சொல்ல
ஒரு வார்த்தை போதுமானதாயிருந்தது..
பிரிவுக்கு மட்டும்
பல வார்த்தைகள் தேடி கொண்டிருந்தாய்..
எல்லாம் சொல்லி விட்டு
கடைசியாய் சொன்னாய்-
மறந்து விடு..
அதைத்தான் நினைத்து
கொண்டிருக்கிறேன்  இன்னமும்…!

இதெல்லாம் நடந்தது...






இதெல்லாம் நடந்தது…!
  நிலவை பார்க்க கூட
வானம் பார்த்ததில்லை
அண்ணாந்து பார்க்கிறேன்
வெயில் என்றும் பாராமல்…

ஓயாமல் அங்குமிங்கும்
பயணிக்கும் என் கண்கள்
விட்டத்தில்
இறங்கி  அசையாமல் நிற்கிறது…

தேடி வந்த நண்பர்களை
விட்டு
ஓடிப் போகிறேன்
தனிமை தேவை என்று..
மணிக்கொரு முறை
தேநீர் கேட்கும்
தொண்டை கூட
தேவை மறந்தது..

என்ன நடந்தது கேட்பவர்களிடம்
எப்படி சொல்வேன்..
உன்னை முதன் முதலாய்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் நடக்கிறது என்று…!

Friday 16 November 2012

இறக்கை கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்!







எங்கே போனது சைக்கிள்...?

“ அப்பா எனக்கு டான்ஸ் க்ளாஸ் டைமாயிடுச்சி கொஞ்சம் கூட்டிட்டு போய் விடனும்..வண்டியை கீழ இறக்குங்க…” - என் மகள்.
“ கொஞ்ச தூரத்துலதானே க்ளாஸ் அதுக்கு வண்டியை எடுக்கனுமா? நான் வேணா சைக்கிள்ல கொண்டு போய் விடறேன் வா..”- என் கணவர்.
“ என்ன்னது… சைக்கிளா?  அதுக்கு நான் நடந்தே  போறேன்..” என்று சொல்லிவிட்டு என் குட்டீஸ் வேகமாய் போய்விட்டது.
சைக்கிள்ல போறது கேவலம்னு சின்ன பசங்களே நினைக்க ஆரம்பிக்கிறாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல சைக்கிளை  மியுஸியத்துலதான் பார்க்க முடியும். இப்ப சைக்கிள் பயன்பாடு  நிறையவே குறைஞ்சி போச்சு. நடுத்தரப் பிரிவினர்கள்கூட கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றம் வளர்ச்சியும்  ஏற்பட்ட பிறகு சைக்கிள் துரு பிடித்துதான் போயிருக்கு. விலையில்லா சைக்கிள்னு அரசு மாணவர்களுக்கு கொடுத்துகிட்டிருந்தாலும் பயன் படுத்தவறங்க குறைச்சலாதான் இருக்கு.. ஆரம்பத்தில் ட்யூஷன் செல்ல,  பக்கத்து கடைகளுக்கு செல்ல என்று மாணவர்கள் சைக்கிளை எடுத்து போனாலும் இரண்டொரு மாதங்களுக்கு பிறகு  அதை சீண்டுவதில்லை. அது வீட்டின் எங்காவது மூலையில் கேட்பாரற்று கிடந்து பேரிச்சம் பழத்திற்காவது போட்டு விடேன் என்று கெஞ்சும். மாணவர்களுக்கும்- சைக்கிளுக்கும் இருக்கிற உறவு ரொம்ப நாள் நீடிக்கறதில்ல. லைசென்ஸ் வாங்கற வயசு வந்தவுடனே  டூ-வீலர்ல பறக்க ஆரம்பிச்சிடுவாங்க.
கார்-பைக் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து திண்டாடி கொண்டிருப்பதை கண்கூடா பார்க்கிறோம். வாகனங்கள் பொது இடங்களில் ஆக்கிரமிச்சி  சாலை நெரிசல் உண்டாகிறது. டிராபிக்கிலும், சிக்னலுக்காகவும் வாகனங்கள் காத்திருக்கிற நேரத்தில  ஒராண்டுக்கு எத்தனை லிட்டர் பெட்ரோல் வேஸ்ட் ஆகுதுன்னு கணக்கு போட்டு பாருங்க.
எரிபொருள் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, அதிகமான விபத்து, போக்குவரத்து நெரிசல் இதெல்லாம் இந்த மாதிரி வாகன பெருக்கத்தாலதான். சீனாவில் சைக்கிள் போக்குவரத்துக்கு முன்னுரிமை தர்றாங்களாம். சீனாவின் ஷாங்காய் நகரத்தில் சைக்கிளை  நிறுத்த பூமிக்கு அடியில் பல இடங்களில் ஸ்டாண்டுகளை ஏற்படுத்தியிருக்காங்களாம்.  ஐரோப்பிய நாடுகள்ல சைக்கிள் ஓட்டறதை  கௌரவ குறைச்சலா நினைக்கறதில்லை.  நாமதான் சைக்கிள்ல வந்தா குறைவா பார்க்கிறோம்.
சைக்கிள் ஓட்டறதால  சாலைகளில் நெரிசல் குறையும்.. வாகன புகை மாசு கட்டு படுத்தப்படும் அப்புறம் உடம்புக்கும் ஆரோக்கியம்.
சைக்கிளை மறக்காதீங்க. கொஞ்சம் நினைவு படுத்தி பாருங்க.. முதன் முதலா நீங்க எப்படி சைக்கிள் கத்துக்கிட்டிங்கன்னு அந்த சுவாரஸ்யமான நினைவுகளை. ஒரு மணி நேரம் குட்டி சைக்கிளை கடையில வாடகை எடுத்து  அப்பாவோ, நண்பனோ பிடித்து கொள்ள பெடலை மிதிச்சி கை நடுங்க.. இடுப்பு நிக்காம  சைக்கிளோட கீழ விழுந்து.. சின்னதா அடிபட்டு.. நீங்க ஓட்ட ஓட்ட  கூடவே டிரெய்னர்  கொஞ்ச தூரம் ஓடி வந்து.. ஒரு வழியா கத்துகிட்டிருப்பிங்க. நீங்க மிதிக்க மிதிக்க உங்களை முன்னேத்தின அந்த சைக்கிளை எந்த மூலையில போட்டு வச்சிருக்கிங்க?
எதுக்கு இந்த சைக்கிள் புராணம்..?  லொங்கு லொங்குன்னு சைக்கிளை மிதிச்சிகிட்டு வேலூர்லர்ந்து  சென்னை வரை வர முடியுமா?  சைக்கிள்ல ஆபிசுக்கு போனா  ஆப்-டே லீவு எழுதிட்டு மத்தியானம் போய் சேர்ந்துதான் அட்டெண்ட்ஸ் போட முடியும். எவ்வளவோ முன்னேறியிருக்கோம்.. இப்ப போய் சைக்கிளை உபயோகிக்க முடியுமான்னு கேக்காதீங்க. நான் சைக்கிளைதான் பயன்படுத்தனும்னு சொல்லலியே. அருகிலுள்ள இடங்களுக்கு போகும் போது சைக்கிளை பயன் படுத்தலாமே என்கிறேன்.  பக்கத்து தெருவுக்கு கூட வண்டியில போற பந்தாவை விடலாமே.  சைக்கிள் மிதிக்கிறது கஷ்டம் ஆனா ட்ரெட் மில், உடற்பயிற்சி மிஷின்ல மட்டும் கையையும், காலையும் காசு கொடுத்து மிதிச்சிகிட்டு இருக்கிறது மட்டும் வேடிக்கையா இருக்கு.
என் கணவர் அருகிலுள்ள இடங்களுக்கு வண்டியை எடுக்க மாட்டார். சைக்கிளில்தான்  போவார். அதற்கு இரண்டு விதமான விமர்சனம் கிடைக்கும்.   “இந்த காலத்துல சைக்கிள்லாம் யார் ஓட்டறாங்க.. இவர் ரொம்ப நல்ல மனுஷன்.. எரி பொருள் சிக்கனம், உடற்பயிற்சின்னு   நல்ல விஷயமா செய்றார் …!” என்று ஒரு சிலர்.. “  அவங்க ரொம்ப கஞ்ச பிசினாறிப்பா மனுஷன் பெட்ரோல் ஆயிட போகுதுன்னு சைக்கிள்ல சுத்தறார் பாரு…” என்று ஒரு சிலர்  கமெண்ட் இருக்கும். உங்க பார்வை எந்த ரகம்னு தெரியலை…!
சைக்கிள் பயணம் மாசு கட்டுபாடுக்கும், உங்க உடல் நலத்துக்கும் நல்லதுன்னு நினைச்சிங்கன்னா  உங்க வீட்ல மூலையில் இருக்கிற (இருக்கா?) சைக்கிளை  தூசி தட்டி  ஹேண்ட் பாருக்கு ஒரு கை கொடுத்து பெருமையா ஏறி உட்காருங்க .. இறக்கை கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்னு…..!

Sunday 11 November 2012

சந்தோஷமா கொண்டாடுங்க..!

அனைவர்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்…!

                     தீபாவளிக்கு இவர் விடற அறிக்கையும் கேட்டுக்கங்க



முடிஞ்சா இவர் தேடற பட்டாசை வாங்கி கொடுங்க..!






பொண்ணு எப்படி இருக்கனும்...?



கல்யாண மாலை:

அந்த காலத்துல( நம்ம தாத்தா பாட்டி காலத்துல) எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறது எல்லாம் பெரிய விஷயமில்லைங்க. பொண்ணு குணமா இருந்தா போதும்னு பெத்தவங்க முடிவு பண்ணிட்டு தாலியை கட்டுடான்னு சொல்லிடுவாங்க. சம்பிரதாயத்துக்கு பொண்ணு பார்க்க மாப்பிள்ளைய அழைச்சிட்டு போவாங்க. இப்ப மாதிரி பொண்ணு வீட்ல நேர் காணலோ இல்ல.. காபி உபசாரமோ கெடையாது.. . மின்னல் மாதிரி சட்னு பொண்ணு இந்த பக்கமிருந்து அந்த பக்கம் போகும். அந்த கேப்பிலயே மாப்பிள்ளை பார்த்தாலும் சரி பார்க்கலைன்னாலும் சரி விதி அவ்வளவுதான். பொண்ணு பக்கம் சொல்லவே வாணாம். கல்யாணமாகி மூணு மாசம் கழிச்சிதான் புருஷன் முகம் இப்படிதானிருக்குமான்னு தெரிஞ்சுக்கும்.

இந்த காலத்துல இப்படி எல்லாம் நடக்க விட்டுருவாங்களா..?
மாப்பிள்ளை இரண்டு கண்டிஷன் போட்டா மாமியார் ஒரு லிஸ்ட்டே வச்சிருப்பாங்க. பொண்ணு மட்டும் சும்மாவா மாப்பிள்ளையை தனியா கூட்டிட்டு போய் வைவா  நடத்திடும். தினசரி பேப்பர்ல விளம்பரம் ஆரம்பிச்சி, இண்டெர் நெட், டி.வி வரை மணமக்கள் தேடல். அதுவுமில்லாம நவீன சுயம்வரம் வேற . ( சுயம்வரம்னா ராமர் வில்லை ஒடிச்சது மாதிரி இல்லைங்க. எவ்வளவு செலவானாலும் பில்லை கட்டுகிற மாப்பிள்ளையா இருந்தா போதும்  நீங்க செலக்ட்). ஒரு ஹோட்டல்லயோ, கல்யாண மண்டபத்துலயோ கல்யாண அமைப்பாளர் கட்சி கூட்டம் மாதிரி கும்பலை சேர்த்துடுவாரு.. அங்க பேசி யார் யாருக்கு செட் ஆகுமோ அவங்க பேசி ஜோடியா ஆயிடுவாங்க.

இங்க ஒரு கல்யாணமாலையில ஒரு மாமியாராக போறவங்களும், மருமகளாக போறவங்களும்  அவங்க எதிர்பார்ப்பா  என்ன சொல்றாங்க பாருங்க.....?!


மாமியாரின் ஆசை...

பொண்ணு அழகா இருக்கணும்.
நிறைய படிச்சிருக்கணும்.
நல்லா சம்பாதிக்கனும்
குறைவா பேசணும்.
வீட்டு வேலை எல்லாமும் செய்யணும்.
பெரியவங்களோடு அனுசரிச்சி போகனும்.
தனிக் குடித்தனம் பற்றி யோசிக்க கூடாது.
எல்லா விஷயத்தையும் என்னை கேட்டு கேட்டு செய்யனும்
மருமகளின் ஆசை....
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரொம்ப அதிகமில்லை..
சிம்பிளா மாமியார் படம்
இப்படி போட்டோவுல இருக்கணும்.

  ( மாமியர்கள் மன்னிக்கவும்... நீங்களும் ஒருகாலத்துல மருமகளா இருந்த போது அப்படிதானே நினைச்சிருப்பிங்க..
மருமகள்களே  நீங்களும் இந்த மாதிரி எல்லாம் நினைக்காதீங்க..  ஒரு நாளைக்கு நீங்களும் மாமியாராக வேண்டி வரும்.)
மொத்தத்தில யாரும் இப்படி நினைக்காதீங்க. 

பெண்ணை மட்டும் வச்சிருக்கவங்க சந்தோஷ பட்டுக்கலாம். ஏன்னா மாமியார்- மருமகன் வம்பு நடக்கிறதா சரித்திரமே இல்லை! ( மாமியா வீட்ல வக்கனையா சாப்பிட்டு மாமி மாமின்னு சுத்தி வர்ற மாப்பிளைங்கதான் உங்களுக்குதான்..!) கொடுத்து வச்சவங்க.  நீங்க!

கொசுறு டிப்ஸ்: ( பெண் பார்க்கிற படலத்தை மொட்டை மாடி வெளிச்சத்துல வைங்க.. வீட்டுக்குள்ள. பெண் பார்க்க போய் உட்கார்ந்தவுடனேயே ஈ.பி காரங்க சொல்லி வச்ச மாதிரி கட் பண்ணிடுவாங்க.. ஏதோ மணிரத்னம் படத்தில வர்ற மாதிரி ஒரு வெளிச்சத்தில  நீங்களோ அவங்களோ ஏமாந்துட போறீங்க...?!)





Saturday 10 November 2012

பழகி போன ஓண்ணுதான்.. ஆனாலும் பாருங்க...

  நேற்று விடியற்காலை மூன்று மணிக்கு மேல்இருக்கும். கொசுக்கள் 
ஹம்மிங் பாடி எழுப்பியது.. பார்த்தால் ஒரே இருட்டு..லைட், ஃபேன்  எல்லாம் ஆப் ஆகியிருந்தது. என்னடா இது ..நாமதான்  இன்வெர்ட்டர் புண்ணியத்தில் காலத்தை ஓட்டிட்டிருக்கமே.. அதுக்கும் என்ன ஆப்பு என்று எழுந்து வெளியில் பார்த்தேன்.  விசாரித்ததில் தெரிந்தது..  நேற்று இரவு முழுசுமே கரண்ட் இல்லையாம். இன்வெர்ட்டரும்தான் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும்? அட கொடுமையே.. எதுக்கு தொடர்ந்து பல மணி நேரமா பவர் கட்டுன்னு கேட்டால் டிரான்ஸ்பார்மர் சரி செய்யறாங்களாம். கரண்ட்டே இல்லாத டிரான்ஸ்பார்மருக்கு பழுது பார்க்க என்ன வேண்டி கிடக்கு?
இரவு முழுக்க இருட்டில ஃபேன் காற்று கூட கிடைக்காம தூக்கமில்லாம எத்தனை பேரு அவஸ்தை படறாங்க. குறைஞ்சது ஒரே ஒரு நாள் இந்த அவஸ்தையை பதவியில இருக்கிறவங்க அனுபவிச்சு பார்த்தா தெரியும்..  எளிய மக்களோட பிரச்சினை. பல பகுதிகளில் நேரம் காலமே அறிவிப்பதில்லை எப்ப வரும் போகும்னே சொல்ல முடியாது.
காலையில்  வாட்டர் டேங்க் காலியா இருக்கும் போது கரண்ட்டும் காலியா இருக்கும். தண்ணீ இல்லாம  காலையிலே எந்த வேலையும் முடியாது.
வீட்டு வேலைகளுக்கு மட்டும் தடையா இல்ல.. அதோட அலுவலகம் முடிஞ்சி வீட்டுக்கு திரும்பற லேடிஸ் இருட்டுல பாதுகாப்பா போக முடியுமா?  நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் நகை பறிக்கும் திருடங்களுக்கு கரண்ட் கட் வசதியா இல்ல இருக்கு..?

எத்தனையோ ஏழை மாணவர்கள் தங்கள் எதிர்காலம் ஓளிமயமாக பாடு பட்டு படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் எரியும் ஒற்றை(நம்பிக்கையாய்) விளக்கும் கூட அணைவது வேதனையாக இருக்கிறது. 









கரண்ட்டோ அல்லது இன்வெர்ட்டரோ இருந்தா படிச்சு பாருங்க. இதெல்லாம் நமக்கு பழகிப் போன சமாச்சாரம்தானுங்க..!