Tuesday 29 October 2013

ஜெயிக்க போவது யாரு...? தீபாவளி பலகார போட்டி...!



பிரமாதமாக சமையலில் அசத்தும் ஆண்கள், பெண்களே உங்கள் திறமையை (வேலூர்) கோட்டையில் கொடி கட்ட செய்யவே இந்த அரிய வாய்ப்பு...!

சமையல் மன்னர்கள், மன்னிகள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்...

போட்டி தேதி: 31-10-2013
போட்டிக்கான வகைகள்
கார வகைகள்
முறுக்கு

சீடை


மிக்ஸர்


இனிப்பு வகைகள்
அதிரசம்


லட்டு

பாதாம் கேக்


இந்த வகைகளை செய்முறை எழுதி ஒவ்வொரு ரெசிப்பிக்களிலும் 3 கிலோ வீதம் செய்து கொண்டு வர வேண்டும். உள்ளூர் வாசிகள் நேரிலும், வெளியூர், வெளி நாட்டு வாசிகள் கொரியர் மற்றும் விமான சேவையில் அனுப்பி வைக்கலாம்.
உள்ளூர் போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேண்டிய இடம்

இடம்: வேலூர் கோட்டை மைதானம் ,

தேதி: 31-10-2013                   நேரம்: காலை-10 மணி.

 நடுவர்கள் :

கார வகைகளுக்கு – செப் தாமு ( ஆனா அவர் பிஸியாயிட்டு வர முடியாம போனால் ... அவசர கால நடுவராக எங்க தாத்தா..!)

இனிப்பு வகைகளுக்கு- மல்லிகா பத்ரினாத்( இவரும் பிஸியாயிட்டு வர முடியாம போனால் .. அவசர கால நடுவராக எங்க பாட்டி..!)
..............................................

“  ப்பா... அம்மா ஏன் அரைமணி நேரமா வானத்தை வெறிச்சு பார்த்துக்கிட்டிருக்காங்க...?”

“ சிம்பாலிக்கா யோசிக்கிறேன்னு ஸீன் போடறாங்க...”

“ ம்மா... ப்பா சொல்றது நெஜமா? அப்படி என்ன யோசிக்கிறிங்க?”

“அடடா யோசிக்கவே விடமாட்டிங்களே ... உங்க தொல்லை தாங்க முடியலைன்னுதானே தனியா மொட்டை மாடியில வந்து உட்கார்ந்திட்டிருக்கேன்.. போச்சு... போச்சு  நல்ல ஐடியா கட்- ஆகி போச்சு....”

“  ...........”

“ என்னங்க.. போன வருஷம் தீபாவளி ஞாபகமிருக்கா...?

“ம்... அத மறக்க முடியுமா... அம்மாவும், பொண்ணும் கடை கடையா ஏறி இறங்கி டஜன் கணக்கா துணி எடுத்துக்கிட்டு கடைசில எனக்கு கர்ச்சீப் மட்டும் வாங்கி தந்தீங்களே அதுவா?”

“ம்... ம்... திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டிருப்பிங்களே...   நாங்க அழகா(?) இருந்தா உங்களுக்குக்குதானே பெருமை?  உங்களுக்கு(ஆண்களுக்கு) என்ன போட்டாலும் அப்படியேத்தான் (இ.து.கொ...மாதிரி) இருக்க போறிங்க...? அதுக்கெதுக்கு புதுத்துணியெல்லாம்? சரி அதை விடுங்க. போன தீபாவளியப்ப இங்க அக்கம், பக்கம், சொந்தக்காரங்கன்னு எல்லாரும் தீபாவளி பலகாரங்கள் கொடுத்தாங்க இல்ல...?

“ ஆமா.. எக்கச்சக்க கலெக்க்ஷன்.. நாம தின்னது போக  ஒரு வாரம் கழிச்சி எக்ஸிபிஷன்ல ஸ்டால் போட்டு வித்துட்டோமே அதை சொல்றியா..?

“ ச்சீ... சத்தம் போடாதீங்க யாருக்காவது கேட்டுர போவுது... ! நமக்கு பலகாரங்கள் தர்றவங்களுக்கு பதிலுக்கு நாம எதாவது தர வேணாமா...?”

“ அதுக்கென்ன பண்றது உனக்கு கொழம்பு, ரசமே ஒழுங்கா வைக்க தெரியாது...  கடையில் வாங்கி குடுத்திடலாமா?...”

“  ஆமா கடையில் வாங்கி கொடுத்தா கட்டுபடியாகுமா? நமக்குதான் ஒரு கூட்டமே இருக்கே... அதான் ஒரு நல்ல ஐடியாவா பண்ணேன்... இந்த ப்ளாக்குல கவிதை போட்டின்னு, கதை போட்டின்னு யாராவது வைச்சுட்டாங்கன்னா...  எக்கச்சக்கமா எழுதி குவிச்சிடாறாங்க.. அது போல நாமளும் பலகார போட்டின்னு வச்சா என்னன்னு யோசிச்சிட்டிருந்தேன்... போட்டி பலகாரத்தை எல்லாம் நாம சுட்டுகிட்டு போய் நாம சுட்டதா சொல்லி அக்கம் பக்கம் குடுத்திரலாமான்னு யோசனை பண்ணிட்டிருந்தேன்... அதுக்குள்ள நீங்க வந்து ‘கட்’ பண்ணிட்டிங்க...”

“  சூப்பர் ஐடியா டியர்... அதுக்கென்ன மறுபடியும் ‘ஷாட்டுக்கு’.. போ...”

“அப்ப போட்டியில் கலந்துகிறவங்களுக்கு எதாவது பரிசு கொடுக்கனுமில்ல...”

“ மம்மி.. அதான் உங்க கல்யாணத்துக்கு கிப்ட்டா வந்ததுன்னு ஜூஸ் செட், காபி செட் ன்னு டப்பா டப்பாவா மூட்டை கட்டி அட்டத்து மேல போட்டு  வச்சிருக்கிங்களே...அதை ஜிகினா பேப்பர் ஒட்டி குடுத்திடலாமா..?”

“ ம்.. என் அறிவுக்கேத்த கொழுந்து... பின்னால என் பேரை காப்பாத்திடுவே செல்லம்...”
.....................

சரி... சரி மறக்காம எல்லோரும் 31-10-2013 அன்று மேற்கண்ட பலகாரங்களை ஒவ்வொரு வகையிலும் 3 கிலோ அனுப்பி வச்சிடுங்க...!

ஹா... ஹா..ஹாஹ்... ஹா...! ஜெயிக்க போவது யாரு...?

Tuesday 22 October 2013

மகிழ்ச்சியின் எல்லை என்ன...?




 வழக்கமாக பேசும் ஒரு தோழி என்னிடம் விரக்தியாக சொல்லி அங்கலாய்த்து கொண்டிருந்தார்.. “ என்ன ‘லைப்’ப்போ போ... அங்கங்க எப்படி சந்தோஷமா இருக்காங்க .. வித விதமா டிரஸ் பண்ணிகிட்டு ஜாலியா சுத்தறதும்  நினைச்சது வாங்கறதுமா.. என் பாடுதான் இப்படி வீட்டுக்குள்ளயே ஜெயிலாட்டாம் இருக்க வேண்டியதாயிருக்கு ..”



இத்தனைக்கும் அந்த தோழி  நல்ல வசதியான குடும்பம்தான். அவரின் ஒரே மகள் என் மகளுடன் தான் ஒன்றாக பள்ளியில் படிக்கிறாள். அந்த தோழியின் கணவர் நேரமின்மை காரணமாக தோழியை அடிக்கடி வெளியில் அழைத்து போவதில்லையே தவிர மனைவி, குழந்தையுடன் அன்பாக இருக்கிறார்.  அந்த தோழியை பொறுத்தவரை நினைத்த போது புடவை , நகை வாங்குவதும், ஹோட்டலுக்கும் செல்வதும்தான் மகிழ்ச்சி என்று நினைக்கிறார்.  நான் சமாதானப்படுத்தினாலும் அந்த தோழி திருப்தி அடைய மாட்டார்.


யோசித்து பார்க்கிறேன் மகிழ்ச்சி என்பதன் அளவீடு என்ன? என் தோழியின் மகளிடம் கேட்கிறேன் “ உனக்கு எதுடா சந்தோஷம் ...?” அதற்கு அவளின் பதில் “ எனக்கு பானி பூரி சாப்பிட்டா ஜாலி..” என்கிறாள்.

 என் மகளை கேட்கிறேன், “  நீ எங்கூட விளையாட வாம்மா .. அதான் எனக்கு ஜாலி என்கிறாள்.

எதிர் வீட்டு பெண்மணியை கேட்கிறேன் , “ என் மகன் டாக்டருக்கு படிக்கனும் அதான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சி ... என்றார்.



இப்படியே இன்னும் சில பேரிடம் ....,



தெருவில் கீரை விற்கும் பாட்டி...” இந்த கீரை மொத்தம் வித்தாத்தான் எனக்கு சந்தோஷம்...”



ப்ளஸ் டூ  பையன்...” எனக்கு ஸ்போர்ட்ஸ் பைக்...”


ப்ளஸ் டூ மாணவி...” நான் எல்லா சப்ஜெக்ட்லயும் நிறைய மார்க் எடுக்கனும்...”


காலேஜ் பையன்... பக்கத்து வீட்டு ஸ்ருதி பிக்-அப் ஆச்சுன்னா....


என் அம்மா...” நீங்க எல்லாம் சந்தோஷமா இருந்தாலே அது எனக்கு மகிழ்ச்சி...”


இப்படியே ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று... மொபைல் போனிலிருந்து , எல்.இ.டி... கார் வரை சொல்லிட்டே இருந்தாங்க...!


என் கணவரையும் கேட்டேன்...” இருக்கிற ஒவ்வொரு நிமிஷத்தையும் நாமதான் சந்தோஷமா வச்சிக்கனும்... சந்தோஷம்ங்கிறது நம்ம மனசுலதான் இருக்கு... சந்தோஷப்படறதுக்கு காரணம் தேவையில்லை.. என்ன ஒண்ணு நம்ம சந்தோஷம் அடுத்தவங்களுக்கு துன்பம் தராம பார்த்துக்கனும்...” -  அட என் வீட்டுக்காரர் என்னை மாதிரியே  யோசிக்கிறாரேன்னு.. ஒரு வெரி குட் சொன்னேன்.



யெஸ்...  சந்தோஷத்துக்கான அளவீட்டை ஆராய்ஞ்சிகிட்டிருந்தா அது அடையும் வரை நமக்கு வருத்தம்தான் மிஞ்சும்.  என் தோழி ஹோட்டலுக்கு போற வரை அதை நினைச்சி வருந்திகிட்டிருப்பா... கீரை பாட்டி வியாபாரம் முடியும் வரை கவலைப்பட்டுட்டே இருப்பாங்க.. ப்ளஸ் டூ மாணவி தேர்வு முடிவு வரும் வரை.... காலேஜ் பையன்  காதல் ஓ.கே ஆகும் வரை..


இப்படியே... போய்கொண்டிருக்கும் !


இதுதான் சந்தோஷம் என்று அளவீடு வைத்து கொண்டு அது கிடைக்கும் வரை கவலைப்படலாமா..? அப்படி பார்த்தால் இலக்குகள் மாறி கொண்டே போகும்.. இன்று பைக்.. நாளை... கார்... பிறகு அதற்கும் மேல்... என்று இப்படியே போய் இன்றைய ஒவ்வொரு நிமிஷத்தையும் அல்லவா தொலைத்து கொண்டிருப்போம்? ஸோ.. நம்ம மனசை ஒவ்வொரு நிமிஷமும் மகிழ்ச்சியா நினைக்கலாமில்லையா...  காலையில் பாட்டு பாடிக்கிட்டே பல் துலக்க ஆரம்பிக்கிறதிலிருந்து.... சாப்பிடறது.... வேலைக்கு போறது... தூங்கறது வரை நம்ம மனசை சந்தோஷமா வச்சிக்கறதுல என்ன தப்பு...?    நாம அடைய வேண்டிய இலக்குகள் வேண்டாம்னு நாம் சொல்லலை....   இலக்கை அடையறதுக்காக உழைப்பும், முயற்சியும் இருக்கட்டும்... ஆனா அது மட்டும்தான் சந்தோஷம்னு இந்த நிமிடங்களை தொலைக்க வேண்டாமே..!


யோசிச்சி பார்த்து நம்மையே ஒரு கேள்வி கேட்டுக்கலாம்... நேற்று பொழுதில் நம் முகம் இறுக்கமாக எத்தனை மணி நேரம் இருந்தது... சிரிப்பாக எத்தனை மணி நேரம் இருந்தது  என்று..! எல்லோருமே இரண்டு மூணு முறைக்கு மேல சிரிச்சிருக்க மாட்டோம்ல....?


இல்ல நான் நேத்து முழுக்க முழுக்க முக மலர்ச்சியாவே இருந்தேன்னு யாராவது சொன்னிங்கன்னா.... கை கொடுங்க... நீங்கதான் இந்த கட்டுரையின் ஹீரோ... ஹீரோயின்...!

                                     ---


 எனக்கும் இப்ப மகிழ்ச்சியா இருக்கனும்னு தோணுச்சு... என் பெரியப்பா உறவு அக்காவிற்கு போனை போட்டேன்...


ஹூம்... ரிங் போகலை... அடிக்கடி ஸ்கீம் என்று சொல்லி போன் நெம்பர் மாத்துகிற அக்கா அவங்க..


சரி மாமாவுக்கு போன் போட்டு விசாரிப்பம்னு... “ மாமா அக்கா நெம்பரை மாத்திட்டாளா?  சொல்லுங்க...”


இரு மொபைலை பார்த்து சொல்றேன்...


“ம்... நோட் பண்ணிக்கோ ... “  அவர் சொல்வதற்குள் ஒரு கால் காஸ்ட் காலி...


“ இரு மாமா..பெண்டாட்டி நெம்பரை கேட்டா டக்குன்னு சொல்லுவிங்களா... உங்களை அக்காட்ட மாட்டி விடாம போறதில்ல..”


“ பார்த்தும்மா தாயி... ஏற்கனவே என் தலை மொத்தம் காலி... அடி வாங்கி வைக்கிறதுக்குன்னே மச்சினின்னு வருவீங்களோ?”


பலமா சிரிச்சி பயமுறுத்திட்டு அக்காவுக்கு போனை போட்டேன்,...” ஹேய்.. மாமாவை நீ ஒண்ணுமே கேட்டுக்கறதில்லையா...? உன் நெம்பரை கேட்டா.. “ஹன்சிகா, தன்சிகா நெம்பரை கேட்டா டக்குன்னு சொல்லிடுவேன்... உங்கக்கா நெம்பரை கேட்டா... பார்த்துதான் சொல்லோனும்னு..   அஞ்சு நிமிசம் போன்ல தேடி சொன்னாருக்கா.. நீ என்ன பண்ற  ஈவினிங் அவர் வந்ததும் மண்டையில் கொடுக்கிற அடியில அவரு அலர்ற அலறல் என் போன்ல கேக்கனும்...”


“சொல்லிட்டே இல்ல கவலையை விடு....”



லெட் ஸ் ஸ்டார்ட் தி மியூஸிக்...  ஹா... ஹா... !



Friday 18 October 2013

பணம் காய்ச்சி மரம்...

அப்பா போய் பத்து நாட்களாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு அப்பா என்பதை விட நண்பனாகத்தான் நிறைய தெரியும். சரவணனுக்கு அப்படி இல்லை....

 அப்பா வாத்தியாராய் இருந்த பள்ளியிலே நாங்கள் இருவரும் படித்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அப்பாவிடம் சொல்வார்கள்” சார் உங்க சின்ன பிள்ளை சிவா பரவாயில்லை... படிப்பில கெட்டி ஆனா பெரியவன் சரவணன் ஏன் இப்படி இருக்கான்? “  கேட்கும் போது அப்பா பதில் சொல்ல முடியாமல் உடைந்து போய் விடுவார்.

சரவணனுக்கு எத்தனையோ நல்லவிதமாய் சொல்லி தந்தும் அவனுக்கு படிப்பின் மேல் ஆர்வம் வரவேயில்லை. அப்பா அவசரமாய் நூறு ரூபாய் கேட்டதாக சொல்லி பக்கத்து தெரு வாத்தியாரிடம் கடன் வாங்கி அடுத்த ஊர் சினிமாவிற்கு போய்விட்டதிலிருந்து அவனுக்கு ஒழுக்கமும் வரவில்லை என்பது வெளிச்சமாகியது. சரவணனுக்கு அத்தனை சரளமாய் பொய் வந்தது.

அம்மாவின் அழுகை, அப்பாவின் அறிவுரை எதுவுமே அவனை அசைக்கவில்லை. பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பதால் அதுவரை வந்து விட்டிருந்தான்.  பொது தேர்வில் எப்படியாவது சராசரி மதிப்பெண்ணிலாவது அவன் தேறிவிட வேண்டும் என்று அம்மா சரஸ்வதி பூஜை பண்ணி கொண்டிருந்தாள்,

“ அடி அசடு அவன் பேப்பரில் ஒண்ணுமே இல்லாமல் மார்க் மட்டும் எப்படி வந்துடும்..? அவனுக்கு படிப்பு வரல்ல... ஒண்ணும் பண்ண முடியாது வேற வழிதான் செய்யனும்...”
படிப்பு வரவில்லை என்றால் அடுத்தது கைத்தொழிலைத்தான் தெரியும்.. அப்பா அவருக்கு தெரிந்த தையல் கடையில் தையல் கற்று கொள்ள சேர்த்து விட்டார். அங்கும் அவன் ஒழுங்காய் இருக்கவில்லை... மதியம் சாப்பிட போகிறேன் என்று சொல்லிவிட்டு சினிமா  சென்று விடுவான்.  நண்பர்களோடு சிகரெட் பிடித்து கொண்டிருப்பதாக யாரோ வந்து சொன்ன போது அம்மா ஆக்ரோஷமாய் வயிற்றில் அடித்து கொண்டாள்,

“ டேய்.. இவனை பெத்த வயித்தலதாண்டா உன்னையும் சுமந்தேன்.. நீ மட்டும் ஏன் இப்படி இருக்க...? “

ம்ஹூம். அம்மாவின் அழுகைக்கெல்லாம் அசைந்து கொடுப்பவனில்லை... அடுப்பங்கறையில் நுழைந்து இருப்பதை தட்டில் போட்டு கொண்டு டி.வி பார்த்து கொண்டு உட்கார்ந்து விடுவான்.

“டேய்...  நீ என்னதாண்டா மனசுல நினைச்சிருக்க... தினம் நல்லா ட்ரஸ் பண்ணிக்கிறது, சாப்பிடறது டி.வி பார்த்துக்கிட்டு பொழுது போக்க வேண்டியது.... உங்கப்பாவிற்கு உன்ன நினைச்சி நினைச்சி டென்ஷனாகுதுடா.. அந்த மனுஷனுக்கு எதாவது ஆகிட்டா நம்ம கதி என்ன...”

தையல் கடைக்கு போவதையும் நிறுத்திவிட்டான். அப்புறம்  அப்பா தீக்குச்சி கம்பெனி, பால் பண்ணை என்று எங்கெங்கோ வேலைக்கு சேர்த்து விட்டார்... ஒவ்வொரு காரணம் சொல்லி இரண்டு மாசம் போய்விட்டு நின்று விடுவான்.  நான்  நிறைய மார்க் எடுத்து இஞ்சினியரிங் சேர்ந்தேன். சரவணன் இப்படியே இருப்பது அப்பாவிற்கு கவலையாக இருந்தது.. அவனுக்கே ஒரு பொறுப்பை கொடுத்தால் என்ன என்று யோசித்தார்.

 அப்பா ஆசையாய் பைக் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடாய் போட்டு ஒரு சின்ன மளிகை கடையை ஆரம்பித்தார். இப்போது கிடைப்பது போல் அப்போதெல்லாம் அப்பாவிற்கு அவ்வளவு சம்பளம் கிடையாது.  

“ சரவணா எவ்வளவோ தூரம் சொன்னேன்... நீ உன் எதிர்காலத்தை பத்தி யோசிக்கவே இல்ல.. கஷ்டப்பட்டு இவ்வளவு நாளா சேமிச்ச பணம்... உழைச்சாவது பிழைக்க கத்துக்க.. இந்த ஊர்ல அவசரத்துக்கு பொருள் வாங்கனும்னா கூட டவுனுக்குதான் போறாங்க... இங்க கடை நல்லா வியாபாரம் ஆகும் .. இதிலயாவது சாமர்த்தியமா இருந்து உன் வாழ்க்கையை பார்த்துக்க...”

அவர் எதிர்பார்த்த மாதிரி அவன் பொறுப்பாய் இருப்பான் என்ற நம்பிக்கையிலும் மண் விழுந்தது. பெரும்பாலான நேரங்களில் கடையை பூட்டி விட்டு வழக்கம் போலவே சிகரெட், சினிமா என்று சுற்றி கொண்டும், நண்பர்களுக்கு கடன் கொடுத்தும்  கடையையும் நட்டமாக்கிவிட்டு உட்கார்ந்து விட்டான்.

அப்போதுதான் பெரிய மாமா வந்திருந்தார், “ மல்லிகா இவனை இப்படியே விட்டா வழிக்கு கொண்டு வர முடியாது. இவன் இங்கிருக்கவே வேணாம்... என்னோட மில் வந்து பார்த்துக்கிடட்டும்... “ என்று சொல்லி திருப்பூருக்கு அழைத்து சென்று விட்டார்.

அவன் மாமாவிடம் இருந்து மாறிவிடுவான் என்ற  நம்பிக்கையில் அம்மா கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். எனக்கு படிப்பு முடிந்து  நல்ல வேலை கிடைத்த சமயம்...அப்பாவிற்கும் சம்பள உயர்வு கிடைத்திருந்தது.

அப்பா ஆசைப்படி இருக்கும் ஓட்டு வீட்டை இடித்து பெரிய மாடி வீடு கட்ட அடித்தளம் போட்டோம்.  நான் அப்போது வேலை விஷயமாய் அஸ்ஸாமிலிருந்தேன்... இரண்டு மூன்று நாட்களாவது ட்ரெயினில் பிரயாணம் செய்து மாதத்திற்கொரு முறை வீட்டு வேலை பார்க்க வந்துவிடுவேன். வேலைக்கு சென்ற கொஞ்ச காலத்திலேயே அப்பாவிடம் ஒன்றறை லட்ச ரூபாய் தந்ததும்,  அப்பா தழு தழுத்து போனார், 

“ சிவா எனக்கு தெரியும்டா ஒரு டீ, காபின்னு கூட செலவு பண்ணாமத்தான் இதை சேர்த்திருப்ப... இதை நல்ல விதமா செலவு பண்ணிடலாம்... இந்த காசை வச்சி மேல ஒரு  போர்ஷனும் கட்டிடலாம் நமக்கு வாடகையும் வரும்..”

மட மடவென்று இரண்டு மாடிகள் உயர்ந்து தெருவே வியந்து பார்க்கும் அளவு கட்டிடம் எழும்பி கொண்டிருந்த போதுதான் இடியாய் அந்த செய்தி வந்தது...

“ மல்லிகா உன் பெரிய புள்ள... மில்லில வேலை செய்ற ஒரு பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடிட்டான்.. அதுவும் அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை ஏமாத்தினவ...”

ஒவ்வொரு செங்கல்லும் பார்த்து பார்த்து கட்டி கொண்டிருந்த அப்பாவிற்கு சரவணனை மட்டும் பார்த்து வளர்க்கவில்லையோ அழுத்திய கவலையில், “ டேய் சிவா இனிமே அவனை நம்பி பிரயோஜமில்லைடா  நான் இல்லாட்டியும் அம்மாவை நீ பார்த்துப்பேன்னு நான் தைரியமா இருக்கேண்டா...” விம்மினார்.

அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் என் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று  நல்ல குடும்பமாய் பார்த்து கீதாவை எனக்கு கல்யாணம் செய்து வைத்தார். பேர குழந்தையும் பிறந்ததில் அப்பா கொஞ்சம் கவலை மறந்து போய் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அப்பா இருண்ட முகத்துடன் யோசனையுடன் உட்கார்ந்திருந்தார், நான் பக்கத்தில் உட்கார்ந்ததும், “ டேய் சிவா... அவனை பார்த்தேண்டா ரொம்ப இளைச்சி எலும்பும் தோலுமாய் அப்பா பசிக்குதுப்பா சாப்பிட்டு ரெண்டு நாளுச்சின்னு அழுதான்.. எனக்கு மனசு கேட்கலைடா மெல்ல ஹோட்டலுக்கு அழைச்சிகிட்டு போய் சாப்பாடு வாங்கி குடுத்து விசாரிச்சேன்...

அவன் கட்டிக்கிட்டவ ரொம்ப மோசமானவடா பணம் பணம்னு இவனை உலுக்கியிருக்கா... கட்டிட வேலை.. மெக்கானிக் வேலைன்னு எவ்வளவோ பார்த்திருக்கான்... இப்ப  செங்கல் லாரி லோடு ஓட்டறானாம்... அங்க ஸ்கூல் பக்கத்து கட்டிடத்தில் லாரி நின்னப்பத்தான் என்னை வந்து பார்த்தான்.

அதற்கு பிறகு அவன் அப்பாவை அடிக்கடி ஸ்கூலில் சென்று பார்ப்பதும்.. கண்ணீர் வடித்து ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கி கொண்டு போவதாய் அம்மா சொன்னாள். பெத்த மனம் பித்து... உடன் பிறந்தவன் தானே.. நானும் அப்பாவிடம் எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

என்னையும் வழியில் பார்த்து அவன் கதையெல்லாம் சொன்னான்.. அவன் மகளுக்கு பிறந்த  நாளுக்கு புது துணி வாங்க கூட காசில்லை... மனைவிக்கு உடம்பு சரியில்லை.. என்று அடிக்கடி ஏதாவது சொல்லி வாங்கி கொண்டு போனான். அவன் சொல்வது பொய்தான் என்று தெரிந்தாலும் பெரியவனாக பிறந்து விட்டான் என்று மன்னித்து கொண்டிருந்தேன்.

அப்பா ரிடையர்டு ஆனவுடன், “ சிவா என்ன இருந்தாலும் அவனும் எனக்கு மகன் தாண்டா.. இந்த பணத்தை வச்சி சின்னதா ஒரு வீட்டை கட்டி அவனை தனியா வச்சிடலாம்.. இங்கேயே ஒரு வேலை பார்க்கட்டும். அவன் எங்கோ கஷ்டப்படறதை பார்க்க சகிக்கலைடா...”

மட மடவென்று வீடு தயாராகி மனைவி, மகளுடன் வந்து விட்டான். அப்பா சேர்த்து கொண்ட தைரியத்தில் அடிக்கடி வேலைக்கு போகாமல் அப்பாவிடமே காசு கேட்டுக்கொண்டிருந்தான்.

“ மல்லிகா எனக்கு சிவாவை பத்தி கவலை இல்ல... படிச்சி அவன் கால்ல நின்னுட்டான்..  என் காலத்துக்கு அப்புறம் இந்த சரவணன் என்ன பண்ண போறான்.. நாளைக்கு சாப்பாட்டுக்கே திண்டாடுவானே?..”

சரவணனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் இரவு, பகல் பார்க்காமல் உழைக்க ஆரம்பித்தார்.  காலை , மாலை என்று ஓயாமல் ட்யூஷன் எடுத்தார். அதோடு பென்ஷன் பணம் என்று சேமித்து சரவணனுக்கு இன்னும் இரண்டு வீடுகளை கட்டி அவனுக்கு வாடகை வரும் படி செய்ததும்தான் கொஞ்சம் நிம்மதியானார்.

“ மல்லிகா இந்த பய நாளைக்கு வேலைக்கு போகாட்டி கூட எதோ பசியை ஆத்திக்கற மாதிரி ஒரு வழி பண்ணிட்டேன்... இன்னும் ஒரே வேலை பாக்கி இருக்கு... என்ன பாவமோ அவன் ஒரு பெண்ணை வேற பெத்து வச்சிருக்கான்... அது கல்யாணத்துக்கு கொஞ்சம் சேமிச்சி வச்சிட்டா நான் வீட்லயே உட்கார்ந்துடுவேன்...”

அப்பா ஓய்வு பெற்றும் ஓயாமல் ஓடி கொண்டிருந்தது எனக்கு வருத்தமாயிருந்தது. அவர் உடல் நிலையில் அக்கறை காட்டி கொள்ளாமல் போய் கொண்டிருந்ததால் வர வர ஓடாய் தேய்ந்து மூச்சிறைத்து கொண்டிருந்தார்.

“ அப்பா...  நீங்க இப்படி உடம்ப கவனிக்காம ஓடிட்டிருக்கிறது கவலையா இருக்கு... எனக்கு நீங்க வேணும்பா... இப்பல்லாம் அதிகமா மூச்சிறைக்குது உங்களுக்கு... ஆஸ்பிட்டலுக்கு போய் பார்த்துக்கலாம்பா...”

“ சிவா.. அதெல்லாம் கவலைப்படாத.. வயசானா அப்படித்தான்... இன்னும் என்னால அஞ்சு வருஷத்துக்கு உழைக்க முடியும்... அதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் என்னால என்னன்ன பண்ணமுடியுமோ அத பண்ணிடறேன்... 

அப்பாவின் இரத்தமும், வியர்வையும்... செங்கல்லும், சிமெண்ட்டுமாய் கட்டிடமாகியது. காலம் என்ன நினைத்ததோ அவருக்கு நிரந்தர ஒய்வை கொடுத்து எங்களை கண்ணீரில் ஆழ்த்தியது.  நெஞ்சு வலி என்றவர் ஆஸ்பிட்டலுக்கு சென்றும் பலனில்லாமல் போய்விட்டார்.

ஒரு சமயம் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது, “ சிவா வயசாயிட்டா.. என்னால் நடமாடமுடியாத பட்சம் இருந்து என்ன பிரயோசனம்? ஒரு சமயம் என் நினைவு தப்பி எதாவது ஆகிடுச்சுன்னா கூட ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போய் லட்சக்கணக்குல செலவு பண்ணி வீண் பண்ணிடாதே... “

இறப்பிலும் கூட தன் பிள்ளைகளுக்கு சேமிக்க வேண்டும் என்று நினைக்கும் இப்படி ஒரு அப்பாவா...?

ஆயிற்று அம்மாவை கண் கொண்டு பார்க்க முடியவில்லை...” டேய்... அப்பா உங்களுக்காகவே வாழ்ந்தார்டா... எனக்கு துணையா இருக்கனும்னு நினைச்சு பார்க்கலையே...?”

அப்பா வளைய வளைய வந்த வீடு வெறிச்சோடி இருந்தது. ஆயிற்று பதினொராம் நாள் காரியங்கள் முடிந்ததும் காத்திருந்தவன் போல் சரவணன் பேச ஆரம்பித்தது நெருப்பை அள்ளி கொட்டியது போலிருந்தது..

“ மாமா... இந்த வீட்டுக்கு இப்ப நீங்கதான் பெரியவங்க.. அப்பா போயாச்சி.. இருக்கிற சொத்தை எனக்கு பிரிச்சி கொடுத்திட்டா நான் போயிட்டே இருப்பேன்...”

“டேய்... என்னடாது இது... அப்பா போய் பத்து நாளாச்சு அதுக்குள்ள சொத்து பத்தி பேசறே... பாவி பயலே.. உன்னை பத்தி கவலைப்பட்டே அவர் செத்து போனார்... என்னிக்காச்சும் அப்பான்னு அவருக்கு எந்த கடமையாவது செஞ்சிருக்கியா...?” மல்லிகா அரற்றி அழுது கொண்டிருந்தாள்.

“ மாமா அவன் கேட்கறதை கொடுத்திருங்க.. இனி யார்கிட்ட கையேந்த போறான்... அவனை பொறுத்த வரை அப்பா பணம் காய்ச்சி மரமாத்தான் இருக்கார்.. சரவணா... அந்த மரம் மண்ணுக்குள்ள போய்ட்ட பிறகும்  திருந்தலைன்னா... நீ மனுஷனே இல்லடா...”

சரவணன் சொத்து மதிப்பை கணக்கு போட்டு போட்டுக்கொண்டிருந்தான்... எனக்கு அப்பா கைபிடித்து முதலில் சிலேட்டில் ஒன்று... இரண்டு எழுத சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.. அப்பா... அப்பா... நீ சுகமா இருந்ததையே நான் பார்க்கலையேப்பா... ?

அப்பா புகைப்படத்தில் பணம் காய்க்கும் மரமாய் சிரித்து கொண்டே பார்த்து கொண்டிருந்தார்.
*****************


(   இது வெறும் கதை மட்டுமல்ல... பல குடும்பங்களில் காண நேரிடுகின்ற நிகழ்வுகள்... !  )
நான் அலுவலகம் செல்லும் போது தினமும் பள்ளிக்கு போகும் அந்த இரண்டு சிறுவர்களை பார்க்கிறேன்...  பெரியவன் எட்டாவது படிக்கலாம்... அவன் தம்பி ஐந்தாம் வகுப்பு இருக்கலாம்...! பெரியவன் முதுகில் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு  ஊனமுற்ற அவன் தம்பியை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து தள்ளிக்கொண்டு தினமும் பள்ளிக்கு அழைத்து போகிறான்.  இந்த காட்சி என்னை மனம் நெகிழ வைக்கும்... வளரும் வரை சகோதர பாசங்களில் பணம் குறுக்கீடு செய்வதில்லை. வளர்ந்த பிறகுதான்  எனக்கு, உனக்கு என்று பணம் அவர்களை பிரித்து பார்க்கிறது.