Saturday, 8 June 2013

இனி எல்லாம் சுகமே..!








ஜெய்எனக்குதலை வலிக்கிற மாதிரி இருந்தது.. பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்.நீங்க பிக்-அப் பண்ண வர வேண்டாம்…”  

சுஜிபோனில்சொல்லவும் , “ சரி நான் நேரா வீட்டுக்கே வந்துடறேன்…”  போனை வைத்தான்.

அவனுக்கு தெரியும் தலைவலி எல்லாம் இருக்காது   

அவன் தம்பி மனைவிக்கு வளைகாப்பு வைத்திருப்பதாக அம்மா அழைத்திருந்தாள். நெருங்கிய சொந்தங்களுக்கு போகாமல் இருக்கவும் முடியவில்லை..போனாலும் அவள் மனம் சங்கடம்படும்படி எதாவது நடந்துவிடும்.

போனமுறை அப்படிதான் வீட்டிற்கு போயிருந்தபோது அவன் தங்கை குழந்தையை ஆசையாய் வாங்கி சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தாள் 

.அம்மாதங்கையைபின்பக்கம்அழைத்து, “    விமலா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா…? அவகிட்ட போய் குழந்தைக்கு ஊட்ட தந்திருக்கியே..கண் திருஷ்டி பொல்லாதது தெரியுமா…”

மா.. நம்ம அண்ணிதானே..!”

ஆமா என்ன இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறடி.. நாலு வருஷம் ஆகியும் அவளுக்கு இன்னும் ஒண்ணும் இல்லை.   உனக்கு ஒரு வருஷத்திலயே பொம்மையாட்டம் அழகா குழந்தை பிறந்திடுச்சேன்னு பொறாமையா இருக்கும்….”

குழந்தைக்கு வாய்துடைக்க பின்பக்கம் வந்த சுஜிக்கு மாமியார் சொன்னது கேட்டதும் கண் கலங்கியது. கேட்காதது போல், “ விமலா இந்தாம்மா தூக்கம் போல..தொட்டில்ல போட்டுடு…”  

குழந்தையை கொடுத்துவிட்டு அறைக்குள் போய் மௌனமாய் கலங்கி கொண்டிருந்தாள்.

என்ன யாராவது எதாவது சொன்னாங்களா..?”

அதுக்குத்தான் நான்எங்கயும் வரலைன்னேன்.. இப்படி எல்லார் வாயிலயும் நிற்கறதைவிட நான் தனியா போயிடறேன்.. நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கங்க…”

கோபத்தில்அவள்கன்னத்தில்பளீரென்றுவைத்தவன்…” இதையே  திருப்பி திருப்பி சொல்லாதன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.

முகத்தைகைகளால்மூடிவிசும்பிகொண்டிருந்தாள்.

ஏய்..  சுஜி ஸாரிடா.. நான் மனுஷனா இருக்கனும்னு நினைக்கிறேன்..நீ திரும்ப திரும்ப கோபபடுத்தினா.. அம்மா படிக்காதவ எப்படியாவது சொல்லிட்டு போறா.. டாக்டரே சொல்லி ஆச்சிரெண்டு பேருக்கும் எந்த குறையுமில்லைன்னு எப்ப வேணா பொறந்துட்டு போகட்டுமேன்னு நம்பிக்கையாஇரும்மா..  அப்படியே இல்லைன்னாலும் எனக்கு கவலை இல்லை..போய் வேலையை பாரு..”

ஒவ்வொரு  முறையும் சமாதானம் படுத்துவதற்குள் போதும் போதும் என்றுஆகிவிடும்.

"என்னங்க வீட்ல நம்ம ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டு எத்தனை நாளைக்கு இப்படியேஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாமா…?”

சமயம் வரும் போது யோசிக்கலாம்.. இப்ப இந்த பேச்சை விட்டுடேன்…”

வீட்டில் சின்ன பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் மாமி வீட்டுக்கு போயிருப்பாள்.அந்த வீட்டிற்கு ஐந்து மாதம் முன்தான் புதிதாய் வந்திருந்தார்கள் வயதானதம்பதிகளான அவர்கள். அவர் பாக்கியம் ராமசாமி கதையில் வரும் அப்புசாமி தாத்தா போலிருப்பார்.. இருந்தாலும்பேண்ட்சட்டை போட்டுக் கொண்டு மாமியுடன்தான் எங்குபோனாலும் வலம் வருவார்.அவர்கள் அன்னின்யோனத்தை சிலர் பரிகாசமாகவும், சிலர் இருந்தால் இப்படி ஒற்றுமையா இருக்கனும் என்றும் சொல்வார்கள்.

விடுமுறைநாட்களில் அரைப்பொழுது இவர்களுக்கு அவர்கள் வீட்டில் கழியும்.மாமி சுறு சுறுப்பாய் மணக்க மணக்க வத்தகுழம்பு வைத்து சாப்பிடசொல்வாள்.

காலிங்பெல்அடித்ததும், “ அச்சச்சோ நேரம் போனதே தெரியலை அவர் வந்துட்டார் நான் வர்றேன் மாமி…” வந்தாள்.

என்னங்க  இன்னிக்கு மாமாவுக்கு அறுபத்தி ஐந்தாவது பிறந்த நாளாம்அவங்க பிள்ளைங்க மூணு பேரும் மாத்தி மாத்தி போன் பண்ணி விஷ் பண்ணாங்களாம்.. “ மாமா முகத்தில எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?”
மாமாவிற்கு பிள்ளைகள் மீது ரொம்பப்ரியம். அவர்கள் செய்த சின்ன வயசு சேட்டைகளை சொல்லி சொல்லி சிரிப்பார்.

  தயா இருக்கனே அவன் ரொம்ப குறும்புக்காரன்.. ஒருமுறை என்சட்டை பாக்கெட்ல ரப்பர்பல்லியை வச்சுட்டான்.. நானும் பார்க்காம ஆபிஸ் போய்..டைப்பிஸ்ட் பேனா கேட்டாள்னு பாக்கெட்லருந்து எடுக்க பேனாவோட பல்லியும் அவ மேல விழ அலறி அடிச்சிட்டு டேபிளை சுத்தி   ஓடினா..
  விச்சு இருக்கானே எது திங்க கொடுத்தாலும் அவனுக்கு மட்டும் அதிகமா கொடுக்கனும்னு நினைப்பான்.. வாழைப்பழம் கொடுத்தா கூட ஸ்கேல் வச்சுஅளந்து பார்ப்பான்னா பாரேன்…”

 பொழுதுபோவதேதெரியாது.

அன்று ஞாயிற்றுக் கிழமை காலை டிபனை முடித்து விட்டு பக்கத்து வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.
  
இப்பத்தான் நினைச்சுட்டே இருந்தேன்சுடசுட காபியை தந்தாள் மாமி.

ஏனோ நேத்திலர்ந்து மாமாவிற்கு ஜூரமாயிருக்குமாத்திரை கொடுத்தேன்.. கொஞ்சங்கூட குறையல.. கொஞ்சம் ஆட்டோக்காரருக்கு போன் பண்ணிடறியாப்பா.. ஆஸ்பிட்டலுக்கு போய் வந்துடறோம்..”

என்ன  மாமி இந்த ஒத்தாசைகூட நான் செய்யமாட்டேனா? காலையிலயே என்னை கூப்பிட்டிருக்கலாமில்ல… “ மெல்ல அனத்தி கொண்டிருந்த மாமாவிடம் சென்றான்.. தொட்டு பார்த்ததில் ஜுரம் அதிகமாகவே தெரிந்தது.

சுஜி  நீ மாமிக்கு துணையா இங்கயே பேசிட்டிரு.. நான் மாமாவை
ஆட்டோவில் கூட்டிட்டு போய் வந்துடறேன்..”

மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏத்த சொல்லிவிட்டார்கள்.ஹாஸ்பிட்டல் விட்டு திரும்ப வர இரவு எட்டாகிவிட்டது.

வீட்டிற்கு வந்ததும் சுஜி சுக்குகஷாயம் கொடுத்து மாத்திரைகளை தந்தாள்.மாமி எதுவும்சாப்பிட தோன்றாமல் சோகமாய் உட்கார்ந்திருந்தாள். இந்தஐந்து மாதத்தில் அவர்களை சோர்வாய் பார்ப்பது இதுதான் முதல் முறை.

மாமி சொல்றேன்னு  தப்பா நினைச்சுக்காதீங்க.. இன்னிக்கு லீவு நாளாயிருக்கவே இவர் இருந்தார்..இந்த வயசானகாலத்துல நீங்க தனியா இருக்கறதைவிட உங்க பிள்ளைங்க யார் கிட்டயாவது இருக்கலாமில்லையா..”
சில வினாடி அமைதியாக இருந்த மாமி, சுஜியின் கைகளை பிடித்து கொண்டு,” குழந்தே..இத்தன பாசமா இருக்கிற உங்ககிட்ட இனிமேயும் விளையாட்டா கூட பொய் சொல்ல தோணலை..எங்களுக்கு பிள்ளைங்கன்னு யாருமில்ல…”

திடுக்கிட்டஜெய்யும், சுஜியும் மாமாவை பார்த்தார்கள் நிஜமா என்று கேட்பது போல

ஆமாப்பா..மாமி சொல்றது நிஜம்தான்தயா..விச்சு எல்லாம் என் கற்பனை குழந்தைகள்இதோ இருக்காளே இவளை நான் காதலிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு அவளும் அவளுக்கு நானும் குழந்தையா இருக்கனும்னு ஆண்டவன் நினைச்சானோ என்னவோ எங்களுக்கு அந்த பாக்கியம் அமையலை .ஆனா அது குறையா நினைக்காம நாங்க சந்தோஷமாத்தான் வாழ்ந்தோம். இவளை அப்பவே மேற்கொண்டு படிக்க வச்சேன். டீச்சரா வேலை செஞ்சி அம்பது குழந்தைகளுக்கு தாயா..குருவா..முப்பது வருஷம் சர்வீஸ் பண்ணினா. இத்தனை நாளா எங்களை ஒதுக்கியே வச்சிருந்த சொந்தம்லாம்.. பணம் சேர்ந்ததும் எங்க கூட ஒட்ட பார்த்தாங்கஇப்ப வயசாயிட்டது இல்ல..போயிட்டா சொத்தெல்லாம் அனுபவிக்கலாம்னு எல்லாரும் அவங்க கிட்டவந்து இருக்க சொல்லி கூப்பிட்டாங்க.. நாந்தான் அவங்க முகத்தில விழிக்ககூடாதுன்னு வீடு நிலம்னு எல்லாத்தையும் வித்துட்டு ஒரு எழுபது லட்சம்வரைபேங்கில் போட்டுட்டு.. இப்படி புதுசா ஒரு இடத்துக்குவந்துட்டோம்..

இன்னிக்கு  கொஞ்சம் படுத்த பிறகுதான் லேசா மனசில கலக்கமா இருக்கு..எங்களால் முடியாதப்ப..எங்களை ஒருஹோம்ல சேர்த்து விட்டுட்டா போதும்..என் பணமெல்லாம் எங்களுக்கு பிறகு அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கிறதா ஏற்கனவே ஏற்பாடு பண்ணிட்டிருக்கேன்…”   தழு தழுத்து சொல்லிகொண்டிருந்தார்மாமா.

என்ன சொல்வது இந்த ஆதர்ச தம்பதிகளை?“ மாமா.. மனசை போட்டு வருத்திக்காம..இத்தனா நாளா இருந்த மாதிரியே இருங்க. நாங்க இருக்கோம்ல..நல்லா ரெஸ்ட் எடுங்க..மாமி மாமாவுக்கு நல்லாகறவரை நீங்க கிட்டருந்துகவனிச்சுக்கங்கரெண்டு நாளைக்கு சுஜியேசாப்பாடு தந்துடுவா…”கிளம்பினார்கள். 

இரவு வெகு நேரம் இருவருக்கும் தூக்கம் வரவில்லை.“ என்னங்க.. நாளைக்கு நமக்கும் வயசாயிட்டா யாருமில்லாம தவிப்போமா..”?

அசடு சும்மாகற்பனை பண்ணிக்காத.. ரொம்ப நாளா நீ கேட்டிட்டிருந்த இல்லதத்து எடுக்கலாம்னு.. இப்ப நான் முடிவு பண்ணிட்டேன்.. ஆனா உனக்கு சம்மதமான்னு சொல்லுஎன்று விஷயத்தை சொன்னான்.

மறுநாள் அலுவலகம் முடிந்ததும் மாமி வீட்டிற்கு சென்றவர்கள்.. “ மாமா நாங்க தத்து எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. ஆனா குழந்தையை இல்லகுழந்த மனசா இருக்கிற உங்க ரெண்டு பேரையும்..உங்க சொத்தெல்லாம் உங்க விருப்படியே ஆசிரமத்துக்கு தந்துட்டு எங்க வீட்டுக்கு வந்துடுங்க..நாங்க வர்றவரைக்கும் இருண்டு கிடக்கிற வீட்டை விளக்கேத்திவச்சி எங்களுக்காக காத்திருந்தா போதும்.

மற்றவர்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லை என்று மறுத்தவர்களை அன்பால் கட்டிப் போட்டுஅழைத்து வந்துவிட்டார்கள்.

மாமா காலையில் செய்தி தாளை படித்து விட்டு காரசாரமாய் விவாதம் செய்வதும், மாமி சுஜிக்கு சமையலில் ஒத்தாசை செய்வதும்..அந்த வீட்டில்இன்னும் இருவரின் பேச்சு சத்தம் கூடியதில் கல கலப்பாக இருந்தது.
           
 ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மாலை சுஜி போன் செய்தாள், “ என்னங்க நான் பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்..  எனக்காக வரவேண்டாம்..”என்றாள்.

மறுபடியும் இவளுக்கு மனவருத்தம் வந்து விட்டிருக்கிறது.. அதுதான் வீட்டுக்கு போய்விட்டிருப்பாள் என்று மாலை அலுவலகம்  முடிந்து வீட்டிற்கு வந்ததும்,

சுஜி எங்க.. எதுக்கு முன்னாடியே வந்துட்டா..?

நாங்க ஆஸ்பிட்டலுக்கு போயிருந்தோம் அதனாலதான்…” என்றாள் மாமி.

காலையில நல்லாத்தானே இருந்தா.. பதட்ட பட்டவனை
இரு.. முதல்ல இதை சாப்பிட்டு அப்புறம் பேசுநாங்க தாத்தா, பாட்டியாகிற பாக்கியம் கிடைச்சிருக்கு…”  மாமி கேசரியைநீட்டினாள்.

உங்களுக்கு ஸர்ப்பரைசா இருக்கட்டுமேன்னுதான் முன்னாடியே கூப்பிடலை…” சுஜி முகம் சிவந்தாள்.

***********************

Wednesday, 5 June 2013

நீங்க வயிறு முட்ட தின்பவர்களா? அப்ப...?

 குட்டிக்கதை :   பரிசு

அம்மா  ரெடி  மிக்ஸ்  சமையல்  போட்டி  ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  நிறைய ஊர்களில் பரிசுக்குரிய போட்டியாளரை தேர்ந்தெடுப்பது கஷ்டமாகவே இல்லை.  ஆனால்  கும்பகோணத்தில் மட்டும் ஐந்து பேர்  நல்ல சுவையுடன் தயாரித்திருந்தார்கள். அவர்களில் ஒருவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது குழம்பித்தான் போனாள்.  ஐந்து பேரில் நான்கு இளம் பெண்கள், ஒருவர் வயதான பெண்மணி.

அவருடன் வந்திருந்த கணவர்இதற்கு போய் என்ன குழப்பம் ஐந்து பேரிடமும் தனித்தனியாக இந்த கேள்வியை கேட்டுப்பார்…” என்று ஒரு யோசனையை சொன்னார்.

ஐந்து பேரையும் வரவழைத்து" சமையல் சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?"என்று கேட்டாள்.

"அம்மா ரெடி மிக்ஸில் சமைத்து அதை அழ அழகாக டெகரேஷன் செய்தால் கண்ணை கவரும் ருசி கிடைக்கும் ..."என்று ஒவ்வொரு மாதிரியாக நான்கு இளம்பெண்களும் சொன்னார்கள்.

வயதான பெண்மணி மட்டும், "அம்மா ரெடி  மிக்ஸில் சமைத்து அதை அம்மாவின் அக்கறையோடு பரிமாறும் போது சுவையோ சுவை ..."என்றாள்.
என்னதான் சுவையாக சமைத்திருந்தாலும் அதை அன்போடு பரிமாறினால்தான் சாப்பிட முடியும் என்று சொன்ன வயதான பெண்மணிக்கே பரிசு கிடைத்தது.
                                                               ****

நீங்க வயிறு முட்ட தின்பவர்களா? அப்ப ... உங்க வீட்ல அன்போடு பரிமாறுகிறார்கள். ஸோ அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் பரிசு எல்லாம் கொடுக்க வேண்டாம் பாராட்டவாவது செய்யுங்களேன்....
( ஆஹா டைட்டில் வந்திடுச்சி...!)

இங்க ஒரு வீட்டு கிச்சன், டைனிங் ...

" என்னங்க சும்மாதானே இருக்கிங்க... இந்த கீரையை கொஞ்சம் கிள்ளுங்களேன்.....
" என்னங்க சும்மாதானே இருக்கிங்க... இந்த தேங்காயை கொஞ்சம் துருவி தாங்க..."
" என்னங்க சும்மாதானே இருக்கிங்க... இந்த காயை கொஞ்சம் பொடியா கட் பண்ணுங்க...."
" என்னங்க..சும்மாதானே இருக்கிங்க.  குக்கர் மூணு விசில் வந்ததும் கொஞ்சம் ஆப் பண்ணிடுங்களேன்..."

டைனிங் :
"ஸ்... ப்பப்பா... ஒரு சீரியல் பார்க்க முடியுதா.. நானே எல்லாத்தையும் செய்ய வேண்டியதாயிருக்கு...வந்து கொட்டிக்கங்க..."
ஹா...ஹா.... 

இதெல்லாம் எங்க வீட்ல நடக்கறதில்லை நம்புங்க.. ஏன்னா நான் எதை போட்டாலும்  ...(வாயை திறக்காம) சாப்பிடறாங்களே அதுவே  பெரிய ஒத்தாசை.... ஹி..ஹி...!




Saturday, 1 June 2013

ஆன்மீகம் என்றால் என்ன...?





 இந்த கேள்வியை நம் பதிவர் தோழி அருணா செல்வம் கேட்டிருந்தாங்க.. அவங்க பதிவில் கருத்தாக போட நினைத்ததை இங்கு பதிவாக போட்டுவிட்டேன். இது எனக்கு தோன்றிய சிந்தனைகள்தான். இதுதான் சரி என்று சொல்லும் அளவிற்கு வயதோ, அனுபவமோ எனக்கு கிடையாது. குற்றமிருந்தால் பெரிது படுத்தாதீர்கள்.

ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும் வாழ்க்கையின் உயர்நிலையை 
 எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. உயர்நிலை என்பது வசதியானவாழ்க்கை..அதில் இன்பம் தருவனவாக நினைப்பது அனைத்தும் புறப்பொருட்கள்தான்!  (வீடு, வாகனம்..இன்னும்பிற)  இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை ஓடுகிறான்.எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத   நிலைக்கு கீழே விழும் போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான்.அந்த ஆன்மாவிற்கு இந்த புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே. அதுகாறூம் தான் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று பட்டியல் போடுகிறது. தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது.மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது. அவன் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் அவனுக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட அவனுடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது. இப்போது உணர்கிறான் தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல்  கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும், கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம்.ஒரு இடத்தை சென்றடைய பல்வேறுவழிகள் இருக்கும் உதாரணமாக சைக்கிள், இருசக்கரவாகனம், பேருந்து  விமானம் ஏன் நடைப்பயணமாக கூட இருக்கலாம். இவை போலதான் ஆன்மாவை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர்.அந்த ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும்,     தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது. ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாககொண்டனர். நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும்தன் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது. இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
     
   நிலையற்ற பொருட்களில் தன்னை தொலைக்காமல் ஆன்மாவை உணர்வதே ஆன்மீகம்.

ஆன்மிகம்னா எல்லாவற்றையும் துறந்துடறது இல்ல. நாம் போற பாதையில் ஒரு முள் இருந்தால் அதை எடுத்து யார் காலிலும் படாமல் எடுத்து ஓரமாக போடுவது கூட ஆன்மீகம்தான்! மற்றவர் துன்பம் அடையகூடாது என்று நினைக்கும் அந்த கருணை இறை நிலைதானே! இந்த இறை நிலையை ஒருமனிதன் தானாக உணர்ந்து செய்யும்போது அவனுக்கு ஆன்மீகம் தேவைப்படவில்லை.அவனை நாத்திகவாதி என்கிறோம்.போதனையால் உணர்ந்து செய்யும்போது ஆன்மீகம் தேவைப்படுகிறது.அவனை ஆத்திகவாதி என்கிறோம்.

 கலப்பட மனிதர்களால் நாத்திகமும் கூட ஆத்திகத்தை எதிர்த்து கொண்டிருப்பதுதான் அதன் வேலை என்ற நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

இதற்கு மாற்று கருத்துக்கள் கூட இருக்கலாம்.எனவே என் கருத்துக்களை சரி, தவறுகளுக்கு கொண்டு போகவில்லை.

( இவ்வளவும் பேசிவிட்டு உண்மைய சொல்லனும்னா இப்ப நிறைய சம்பாதிக்கனும்னா ஒண்ணு அரசியல், இல்ல சாமியார்(ஆன்மீகம்) அப்படின்னு இல்ல ஆயிடுச்சி.. இதெற்கெல்லாம் காரணம் ஆன்மாவை உணராத பேராசை பிடித்த மனிதர்களாகத்தானே இருக்கமுடியும்.. அப்ப உண்மையான ஆன்மீகம் எங்கே.. ? )