Saturday 23 February 2013

விருந்து என்றால் உங்கள் நினைவுக்கு முதலில் வருவது?



வெளிநாட்டில் ஒரு விருந்துக்கு அறிஞர் அண்ணா சென்றார்.

அந்த விருந்தை அளித்த பணக்காரரின் உணவு மேஜையில் பலவித தட்டுகள்... தங்கம், வெள்ளி, பீங்கான் என வகைவகையாக இருந்தன.

"நான் தினம் ஒரு தட்டு வீதம் 30 நாளைக்கு 30 தட்டில் சாப்பிடுவேன்' என்றார் அந்தப் பணக்காரர்.

"எங்கள் நாட்டில் சிறு கிராமத்தில் இருக்கும் ஏழை கூட ஒரு வேளை சாப்பிட்ட தட்டில் மறுமுறை சாப்பிட மாட்டான்' என்றார் அண்ணா.

பணக்காரர் உட்பட அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியமாக, "எப்படி?' என்று கேட்டனர்.

"அது வாழை இலை' என்றாராம்


வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும்.வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்ணும் போது  நறுமணத்துடன் விருந்தும் சுவைக்கும்..

வாழை இலை உண்டபின் எளிதாக எறிந்து விடலாம். சுற்றுப்புற சூழலுக்கும் தீமை இல்லை. ஆனால் இதற்கான செலவை விட பீங்கான், பிளாஸ்டிக் தட்டுகளை வாங்கி போட்டால் மிச்சமாகுமே என்று இப்போதெல்லாம் ஹோட்டல்களில் வாழை இலையை பார்க்க முடிவதில்லை. சரவண பவன் போன்ற சில ஹோட்டல்களில் மட்டும் வாழை இலை வைக்கிறார்கள். அதற்காகவே வெளியில் சென்றால் வாழை இலை பரிமாறும் ஹோட்டல்களுக்கு மட்டும் செல்வதுண்டு. 

என்னதான் சொல்லுங்க.. விருந்து என்று சொன்னாலே முதலில் வாழை இலைதான்..!

ஜூஸிலிருந்து கொதிக்கும் சாம்பார் வரை  பிளாஸ்டிக் பார்சல்தான். அதன் தீங்கை பற்றி ஒரு புறம் பேசி கொண்டிருந்தாலும் நடைமுறையில் தவிர்ப்பதில்லை. பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை,  உபயோகித்தால் அபராதம் என்று ஊர் ஊருக்கு அறிவிப்பு வந்தாலும்... அதுவும் பொது இடங்களில் புகைப்பிடித்தல், ஹெல்மெட் கட்டாயம் போன்று காற்றில் கரைந்து கொண்டுதான் இருக்கிறது.....  !

 மாற்றத்தை நம்மகிட்டயிருந்து ஆரம்பிக்கனும். பார்சல் வாங்க போகும் போது மறக்காம கேரியரை எடுத்துட்டு போங்க.