Monday 18 November 2013

அழகான கனவுகள்.....!


“ ஏங்க காலையில் என்ன அவளோட அரட்டை...? இந்த கீரையை கொஞ்சம் நறுக்கலாமில்ல... இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானேதான்....” என் கூப்பாடு எதுவும் அவர்களை சலனப்படுத்தவில்லை..

அவள் நேற்று கண்ட கனவின் பயங்கரத்தை சொல்லி கொண்டிருந்தாள்...” ப்பா... நேத்து ஒரு பயங்க்கர கனவுப்பா.... இப்படித்தான் தொடங்குவாள். எனக்கு தெரியும் என்னிடம் சொல்ல வரமாட்டாள். “ போடி காலையில் எத்தன வேலை இருக்கு... கனவாம்... கனவு அதெல்லாம் அப்பறம் கேட்கிறேன்... போய் ஸ்கூல் வொர்க் எல்லாம் முடி..” என்று விரட்டுவேன்.

“ ப்பா.... ரெண்டு கண்ணு மட்டும் வருதா... அது லோகியை துரத்திகிட்டே போகுது... அவ என்னை சத்தம் போட்டு கூப்பிடறா.... அச்சு...ப்ளீஸ் என்னை காப்பாத்துடின்னு கூப்பிட்டுக்கிட்டே ஓடறா.... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைப்பா... அப்ப திடீர்னு ‘ அங்கிள்’ வண்டியில் வந்து .......

அவள் கைகளை விரித்து ... தலையை ஆட்டி திகிலுடன் சொல்லி கொண்டிருப்பதை அவளின் அப்பா முதுகை வளைத்து அவள் முகத்தருகே கண்களில் திக்.. திக்.. காட்டி “ அப்புறம் என்னாச்சி...? சுவாரஸ்யமாய் கேட்பார்.

கடைசியில் கனவு முடிந்து இரண்டு பேரும் சிரிப்பார்கள். அவள் கேட்பாள் ‘ “ஏம்ப்பா.. கனவெல்லாம் வருது?”

“ நாம எதையாவது நினைச்சதோ.. பார்த்ததோ... இல்ல கேட்டதோ மனசுக்குள்ள பதிவாயி அது கனவா வரும்டா...கண்ணா”

“ ம்... ம்... வரும்...  க்ராபிக்ஸ் படம்லாம் பார்த்துட்டு இருந்தா... இப்படித்தான் வரும்... ரெண்டு பேரும் எழுந்து குளிக்கறிங்களா இல்லையா..?” தினமும் விரட்டுவதே வேலையாக இருக்கும்.

“ ப்பா... அந்த பீச்ல நாம மூணு பேரும் வேகமா போய்கிட்டே இருக்கோமா.. அப்ப திடீர்னு அம்மாவை காணலைப்பா...

“ ஹய்யா... கனவுலயாவது காணாம போனாளே... பிசாசு... அப்புறம் என்ன ஆச்சு....?”

என் பேர் அடிபடவே கிச்சனிலிருந்து ஹாலுக்கு வந்து நின்றதும்... அவள் கனவை பற்றி சொல்வதை நிறுத்தி விட்டாள்....” போம்மா... நீ எதுக்கு இங்க வந்தே? நீதான் கேட்க மாட்டேனுட்டே இல்ல.... அப்பறம் என்ன.... நீ வாப்பா....” அவள் அப்பாவின் காதை பிடித்து தன் முகத்தருகே கொண்டு வந்து கிசு கிசுப்பாய் சொல்லி கொண்டிருந்தாள்... ரெண்டு பேரும் அடுத்த வீட்டிற்கு கேட்குமளவு சிரித்து கொண்டிருந்தார்கள்...

ஒவ்வொரு நாளும் ஒரு கனவாய் சொல்லி கொண்டிருந்தாள்....

“ ப்பா... ரெண்டு அங்கிள் துப்பாக்கி வச்சிகிட்டு உன்ன துரத்திக்கிட்டே இருக்காங்கப்பா... எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சிப்பா... சாமி கிட்ட வேண்டறேன்... அப்ப வானத்துலர்ந்து பளிச்சின்னு ஒரு மின்னல் மாதிரி வந்துச்சா....

“பேசாம ராம நாரயணன் படங்களுக்கு இவ கதை சொல்லலாம்... நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கிங்க.. காலையில்  நான் மாத்திரம் இவ்வளவு வேலையா இருக்கறப்ப... உங்களை...” இந்த முறை அவள் அப்பாவின் தலையில் குட்டு விழுந்தது.

மும்முரமாய் சமையலில் இறங்கி கொண்டிருந்தேன்... இன்று ஏனோ கனவின் சத்தம் கேட்கவில்லை... எட்டி பார்த்தேன்... அவள் அப்பா குளித்து முடித்து ரெடியாகியிருந்தார்...

“ என்ன இன்னிக்கு கத எதுவும் ஓடலையா...? இத்தனை அதிசயமா காலையில் குளியல்?

“ அச்சு... இன்னும் எந்திரிக்கலை...”

“ ஏன் என்ன குட்டிம்மா இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே...?” ஸ்டவ்வை அணைத்து பெட்-ரூமுக்குள் நுழைந்து அச்சுவை எழுப்ப கை தொட்டேன். அச்சுவின் உடல் அனல் போல் கொதித்து கொண்டிருந்தது..

“ என்னங்க... குட்டிம்மாவுக்கு காய்ச்சல் அடிக்குது...”

அடுத்த நிமிடத்தில் அவளின் அப்பாவும் பரபரப்பானார். அச்சுவை எழுப்பி மெல்ல பல் துலக்க வைத்து காபி போட்டு தந்து டாக்டரிம் போய் வீடு திரும்புவதற்குள் அரை நாள் ஓடி விட்டிருந்தது.

இரண்டு நாளும் அச்சுவிற்கு நல்ல காய்ச்சல்... “ உம்..” கொட்டி தூங்கி கொண்டே இருந்தாள்.

“கீதா... ரெண்டு நாள் நீ லீவு போட்டே இல்ல... நீ வேணா இன்னிக்கு ஆபிஸ் போயேன்... நான் ரெண்டு நாளைக்கு லீவு போடறேன்... அச்சு இந்த ஒரு வாரம் ஸ்கூலுக்கு போகவேண்டாம்...” அவளின் அப்பா... என்னிடம் சொல்ல..

“ ம் ஹூம் வேணாங்க... அங்க போனாலும் எனக்கு இவ மேலய கவனம் இருக்கும்.. வேலையும் ஓடாது... எனக்கு என் குட்டிம்மாதான் முக்கியம்...”  நானும் ஒரு வாரம் லீவு எடுத்திருந்தேன்.

இந்த ஒரு வாரமும் நான் சமைத்தேனா... சாப்பிட்டேனா என்பதையே மறந்திருந்தேன்.. அச்சுவின் பக்கத்திலயே ஒவ்வொரு நிமிடமும்...ஜூஸ் கொடுப்பதும், தைலம் தேய்த்து விடுவதுமாய்... அவள் தூங்கும் நேரத்தில் மட்டும் அவளின் அப்பாவிற்கு போன் செய்தேன், “ என்னங்க குட்டிம்மா ரொம்பவே சோர்ந்திட்டா... விட்டு விட்டு ஜூரம் வருது.. வேற டாக்டர் கிட்ட போவமா..?”

“ ஏய்... ஒண்ணும் பயப்படாத... எல்லா டெஸ்ட்டும்தான் பார்த்தாச்சு இல்ல... இது வைரல் பீவர்தான்... டாக்டரே என்ன சொன்னார்...ஒரு வாரமாவது இருக்கும்னுதானே? இன்னும் ரெண்டு நாள்ல நார்மலாயிடுவா...

ஒரு வாரமாய் குட்டிம்மாவின் கனவுகள் சொல்லாமல் வீடே நிசப்தமாயிருந்தது.. வாழ்க்கையில் எதுவுமே தேவை இல்லை போல் இருந்தது. அவளின் அப்பாவிற்கும் அந்த நிசப்தம் கொடுமையாக இருந்தாலும் ஆண் என்பதில் மனதை திடமாய் இருப்பது போல் பொய்யாய் போர்த்தி கொண்டிருந்தார்.

“ம்மா... பசிக்குது...” அச்சு மெல்ல கேட்டதும்... மணி இரவு பணிரெண்டாகியிருந்தது.

“ குட்டிம்மா... இப்ப ராத்திரி பண்ணெண்டு மணி இந்த நேரத்துக்கு என்ன சாப்பிடுவே... அப்பா பிஸ்கெட் தரட்டுமா...?”

“இருங்க... இப்பதான் பசிக்குதுன்னு கேட்கிறா எத்தனை மணி ஆனா என்ன... நீ என்ன சாப்பிடறயோ சொல்டா அம்மா செஞ்சி தர்றேன்...”

  ரொம்ப பசிக்குது... பிஸ்கெட்டெல்லாம் வேணாம் இட்லி வேணும்மா...”

அடுத்த நிமிடமே பலத்தை கூட்டி கிச்சனுக்குள் நுழைந்து இட்லி ஊற்றி தட்டில் போட்டு வந்து சின்ன சின்னதாய் பிட்டு அவளுக்கு ஊட்டியதும் கொஞ்ச நேரம் கழித்து தூங்கிவிட்டாள்.

“ கீதா ... அவளை விட இப்ப நீ படுத்துருவ போல இருக்கே.... ஒழுங்கா சாப்பிடுடி..  எவ்வளவு பேசுவ... நீ போய் இப்படி இருக்கலமா...?

“ எவ்வளவு பேசினாலும் நான் அம்மாங்க.... இந்த ஸ்தானத்துல எனக்கு அவதான் பெரிசு..  இந்த உலகத்துல வேற எதுவும் எனக்கு பெரிசா தெரியலை... நான் நேசிக்கிற இலக்கியம் கூட இப்ப போடா போன்னு இருக்கு.... என் குட்டிம்மா பழைய படி எழுந்து வீடு பூரா ரகளை பண்ணனும்... எனக்கு அவ வேணும்... நீங்க வேணும்...” அவள் அப்பாவின் தோள்களில் சாய்ந்து விம்மி கொண்டிருந்தேன்.

காய்ச்சல் படுத்தியதில் ரொம்பவே சோர்வாகியிருந்தாள்.... கடவுளே... என் குட்டிம்மாவுக்கு எந்த கஷ்டத்தையும் குடுக்காதே... வேணும்னா அவ அம்மாவுக்கு குடு...”  என் வேண்டுதலை கேட்டவள்... லேசாக வாய் திறந்து, “ ம்மா.. உனக்கு என் மேல் அவ்வளவு ப்ரியமா...?”

“ ஏண்டா... அப்படி கேட்கிற?  நீதாண்டா என் கனவே...!”

“ ஆனாலும் அப்பா மாதிரி என் கனவை எல்லாம் நீ கேட்கறதே இல்ல... சொல்ல வந்தா திட்டற இல்ல... “

“ அதுக்காக அம்மாவுக்கு உன் மேல் ப்ரியம் இல்லைன்னு நினைச்சுகிட்டயா... ? அம்மா வீட்டையும் பார்க்கனும், ஆபிசுக்கும் போகனும் இல்லையா... அந்த டென்ஷன்ல எதாவது சொல்வேனே தவிர நீதாண்டா என் உயிரு... உனக்காகத்தாண்டா நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்...”

“ ம்மா... எனக்கும் உன்ன ரொம்ப புடிக்கும்...லீவ்ல பாட்டி வீட்டுக்கு போனா கூட நீயில்லைன்னா என்னால இருக்கமுடியலைன்னுதான்மா ஓடி வந்துடறேன்...!” அன்பாய் என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ சரி குட்டிம்மா.. நான் நேத்து ஒரு சூப்பர் கனவு கண்டேண்டா... நீ... நான் அப்பா எல்லாம் ஜாலியா டூர் போறோம்... அங்க ஒரு அழகான வீடு... வீட்டுக்கு பக்கத்துல சல சலன்னு சின்னதா ஒரு ஓடை போயிட்டிருக்கு.... பக்கத்துல பெரிய ரோஜா தோட்டம்.......”  காணாத கனவை பொய்யாய் சொல்லி கொண்டிருந்தேன்... ஆர்வமாய் எழுந்து உட்கார்ந்து கேட்க ஆரம்பித்தாள்.

இரண்டு நாட்களில் அச்சு பழையபடி திரும்பியிருந்தாள்.

“ ம்மா....  நேத்து ஒரு பயங்க்கர கனவும்மா....” தலையை ஆட்டி கண்ணை உருட்டி சொல்ல வந்த அவளிடம், “ ம் அதுசரி உனக்கு எப்ப பார்த்தாலும் பயங்க்கர கனவுதான் வருமா?  ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தேன்...

அவள் கனவை கேட்க தினமும் ஒரு மணி நேரம் முன்பாக வேலை முடித்துவிட தீர்மானித்திருந்தேன்.