“இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே... என் அப்பாவை
பத்தி ஒரு கதை எழுதேன்... ப்ளீஸ் பா....”
“ நீ நினைக்கறதை நீயே எழுதினா நல்லாருக்குமே சூர்யா...?”
“ இல்லப்பா... எனக்கு எழுதல்லாம் வராது.... என் எண்ணத்துக்கு
நீ உயிர் குடுத்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்...”
கடற்கரை மணலில் ‘அப்பா’..என்று எழுதி கொண்டே உற்று பார்த்து கொண்டிருந்த சூர்யாவை
வியப்புடன் பார்த்தவள், “ சூர்யா உனக்கு அப்பான்னா அவ்வளவு பிடிக்குமா?”
“ ஏன் இப்படி கேட்கிற ... அப்பா போய் பத்து வருஷம் ஆயிடுச்சி...
அப்பாவோட நினைவு அப்படியேதான் இருக்கு....”
அண்ணியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அப்பாவையும், அம்மாவையும்
தனியே விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போய்விட்ட அண்ணன் சுதர்ஸனை நினைத்து பார்த்து சிரித்து
கொண்ட இனியா, “ சரி.. சொல்லு சூர்யா...
“ எங்கம்மாவுக்கு கல்யாணமாகி எட்டு வருஷத்துக்கு குழந்தையே
பிறக்கலையாம் இனியா... வேண்டாத தெய்வமில்லை.. சுத்தாத கோவிலுமில்லையாம்... அதுக்கப்பறம்
அம்மா என்னை சுமந்திருக்காங்க... எங்கப்பாவுக்கு தலை கால் தெரியலை... அம்மா வயித்துக்குள்ள
இருக்கும் போதே என் கிட்ட பேச ஆரம்பிச்சாட்டாராம்... அப்ப எங்க நிலத்துல நல்ல விளைச்சல்
... அறுவடை முடிஞ்சு நெல்லெல்லாம் களத்து மேட்டுல
குவிச்சிட்டிருக்காங்களாம்... நான் பொறந்துட்டேன்ற சேதி அப்பா காதுக்கு எட்டியதும்..
‘ டேய்... யார் யார் எவ்வளவு வேணும்னாலும் அள்ளிக்கிட்டு போங்கடா புள்ள பொறந்திருக்கான்..னு...’
அப்படியே போட்டு விட்டு சந்தோஷமா ஓடிவந்தாராம்... அதுக்கப்புறம் ரெண்டு தம்பிங்கன்னு
எங்க குடும்பம் அழகா வளர்ந்துச்சி...
அவர் கூட சின்ன வயசுல விளையாடுனது எல்லாம் ஞாபகம் இருக்கு
இனியா.. தேங்காய் பிஞ்சை வச்சி குச்சி சொருகி அழகா தேர் செஞ்சி கொடுத்து கயிறு கட்டி
இழுத்தது இன்னும் மனசுல பசுமையா இருக்கு....
திருவிழா அப்ப சாமி தெரியலைன்னு அழுத என்னை இடுப்பில்
உட்கார்த்தி வச்சி ரெண்டு தம்பிகளையும் தோள் மேல் தூக்கி “ இப்ப தெரியுதாடா..?ன்னு
வாஞ்சை தீர கேட்பார்... கைவலிக்குதுன்னு இறக்கி விட்டதே இல்லை...அம்மாதான் சொல்வா,
“ பாவம்டா ராஜா.. அப்பாக்கு கைவலிக்கும் இறங்குகடான்னு...” இப்ப என் அப்பா தோள் மேல்
சாஞ்சி அழனும் போல் இருக்கு இனியா...என் வாழ்க்கையில் மறக்க முடியாத நண்பன் என் அப்பா...
அவர் என்னிக்குமே கடுமையா பேசி நான் பார்க்கலைப்பா... அப்பா படிக்காததால் என்னை நல்லா
படிக்கனும்னு சொல்வார்..” சூரி... நல்லா படிப்பா...
படிச்சி பெரிய உத்தியோகத்துக்கு போகனும்... அந்த நாளை நான் பார்த்துட்டா வேற எதுவும்
எனக்கு தேவையேயில்லைய்யா...” அருகில் இழுத்து
சட்டை காலரை நிமிர்த்தி சிரிப்பார்...
எங்க நெலத்துல வேலை செஞ்சவங்களை கூட கூலிக்காரங்களா எங்கப்பா
பார்த்ததே இல்லை... அங்கயே முப்பது பேருக்கானாலும் சாப்பாடு தயாராவும்... அவங்க கூடவே
அப்பா சந்தோஷமா சாப்புடுவார்... எந்த பருவத்துல விதைக்கனும்.. எப்ப அறுவடை செய்யனும்
எல்லாம் அத்துபடி...
ஸ்கூல் முடிஞ்சா என் அப்பாவை தேடிக்கிட்டு நெலத்துப்பக்கம்
ஓடுவேன்... தூரத்துல பார்க்கும் போது அப்பா முதுகு தெரியும்... யார் கூடயோ பேசிட்டிருக்க
மாதிரி குரல் கேட்கும்.... கிட்டத்துல போய் பார்த்தா அப்பா தனியாத்தான் இருப்பார்...
“ ஏன்ப்பா பேசின மாதிரி கேட்டுச்சு யார் கூட பேசிட்டிருந்திங்க?
ம்பேன்...
“ இல்ல சூரி இவங்களோடத்தான் பேசிக்கிட்டிருந்தேன்....’
இப்படியும் அப்படியும் தலையாட்டிக்கிட்டிருக்கும் நெல்லுக்கதிருங்களை காமிப்பார்..
“ ஐய்... என்னப்பா இது இந்த செடிக்கு காது கேட்குமா? இதோடயா
பேசிக்கிட்டிருந்தீங்க?
“ ஆமாண்டா கண்ணா... இதுவும் நம்மை மாதிரி ஒரு உசிருதான..?
நாம பேசறதை எல்லாம் கேட்கும்...பாத்தியா வறண்டு போவாம தண்ணி பாய்ச்சினவுடனே அழகா சிரிச்சி
நிக்கிறத...
அதெல்லாம் ஒரு காலம் இனியா... பொய்க்காம மழை பெய்ஞ்சதும்...
விளைஞ்சதும்.. யாரும் இல்லன்னு கேட்க கூடாது... கையில எதா இருந்தாலும் தூக்கி கொடுத்துருவார்...
வாரி வாரி கொடுத்திட்டிருந்த கைக்கு சோதனையா ஒரு காலம் வந்துச்சி....
ஊருக்குள்ள நெலம் வச்சிருந்தவனை எல்லாம் தோல் கம்பெனிக்காரன்
மடக்கி போட்டுட்டான்... அத்தனை பேரும் நெலத்தை கொடுத்துட்டு அங்கிட்டு வேலைக்கு சேர்ந்துட்டாங்க....
அப்பா மட்டும் மண்ணை கொல்ல மாட்டேன்னு புடிவாதமா நெலத்தை வச்சிக்கிட்டார்....
அப்பறம் நெலத்து வேலைக்கு ஒரு பயலும் வரலை....... மண்ணை
கொன்னதாலவோ என்னவோ மழைக்கூட பொய்ச்சு போச்சு... கெணத்துல சுத்தமா தண்ணி வத்தி போச்சு...
தெனம் முப்பது பேருக்கு சாப்பாடு போட்ட எங்க அப்பா எங்க மூணுபேத்துக்கும்... ஒரு வேளை
சாப்பாடு போடவே கஷ்டப்பட்ட அந்த கொடுமைய நினைச்சா.. இன்னிக்கும் அழுகையா வருது....இனியா..
படி படியா அளந்த குடும்பம் கிலோவுல வாங்க கூச்சப்பட்டு
யார் யார்கிட்டயோ பை குடுத்து அரிசியை கடையில் வாங்கிட்டு வரசொல்வார்... எவ்வளவு பிரச்சினையிலும்
அப்பா மனம் ஒடைஞ்சதே இல்லை... அப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தோம்...
‘ சூரி நீ ஆளாயிட்டா மத்த ரெண்டு பேரையும் நீ பாத்துக்குவே...
எதையும் மனசுல வச்சிக்காம படி..ப்பா..’ ம்பார்.
நான் நல்ல வேலைக்கு
போவனும் அப்பாவை பெருமைப்படுத்தனும்னு ரொம்ப கனவு கண்டேன் இனியா... அதெல்லாம் சுக்கு
நூறா போயிடுச்சி... அப்ப ப்ளஸ் டூ படிக்கிறேன்...
ப்ரெண்ட்ஸ்களோட சினிமா போறேன்பான்னேன்...’ அப்பா டக்குன்னு பாக்கெட்டிலிருந்த
நோட்டை எடுத்து கொடுத்து... வரும்போது அப்படியே ஹோட்டல்லயும் எதாச்சும் சாப்பிடுங்கன்னு...
சிரிச்சார்...
அந்த சிரிப்பைத்தான் நான் கடேசியாக பாப்பேன்னு நெனைச்சுக்கூட பார்க்கலை....
சூர்யா கண்கள் கலங்க... மௌனமாகிவிட, “ ஹேய்... ரிலாக்ஸ்
பா... போதும்... நாளைக்கு பேசிக்கலாமா?” கைப்பையிலிருந்த
தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் .
வாங்கி கொஞ்சம் விழுங்கியவன்...” இல்ல இனியா.. நான் மொத்தத்தையும்
கொட்டிடனும்....
சினிமா முடிஞ்சு வீட்டுக்குள்ளார நுழையறப்பதான் எங்க பாட்டி
ஓன்னு கத்திக்கிட்டே என்னை புடிச்சிக்கிச்சி...’ சூரி... அப்பா நெஞ்சு வலிக்குதுன்னு
விழுந்துட்டார்டா.. சித்தப்பா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்கடா என்னைய கூட்டிட்டு
போடா...
இரண்டு நாளைக்கப்பறம்தான்
அப்பா கண்ணு தொறந்து பார்த்தார்.... பேசமுடியலை.. மூச்சுதிணறல் ரொம்ப இருக்கு... பொழைக்கறது
கஷ்டம் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்ங்கிறாங்க... அப்படியே நெல குலைஞ்சி போயிட்டோம்... அப்பா எங்கிட்ட எதோ
சொல்ல வர்றாரு... ஆனா முடியலை.. அவரை டாக்ஸியில படுக்க வச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு
வர்ரோம்... வழியில எங்க நெலத்துக்கிட்ட வரும்போது... என் சட்டையை புடிச்சி நிறுத்துங்கிறாரு....
டாக்ஸியை நிறுத்தினா... நெலத்துல வாடி வதங்கியிருக்க
பயிரை கண்ணுல கண்ணீர் வழிய பார்க்கிறார்... உயிரா நினைச்ச பயிரும்... பயிறுக்கு உயிரா
இருந்த எங்கப்பாவும் ஒரு சமயத்துல போயிட்டாங்க... இனியா....”
அப்பா இல்லைங்கிறத
ஏத்துக்க முடியாமயே வருஷம் ஒடிப்போயிடுச்சி... நானும் படிச்சி வேலைக்கு வந்துட்டேன்...
என் தம்பிகளையும் படிக்க வச்சி..கல்யாணம் குடும்பம்னு ஒரு நிலையாயிட்டோம்.... இத பார்க்க
அப்பா இல்லை... இந்த ஜென்மத்துல அவர் பிரிவை என்னால தடுக்க முடியலை... அடுத்த ஜென்மத்துலயாவது
எங்கப்பா என்னோட வெற்றியை பாத்து சிரிக்கனும் இனியா.... எங்கப்பாவுக்கு மகனா அடுத்த
ஜென்மத்துலயும் பொறக்கனும்.... அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருக்கா இனியா....?”
இனியாவின் கைகளை கோர்த்து தன் முகத்தில் பொத்திக்கொண்டு
அழுதவனை என்ன சொல்லி தேற்றுவதென்று தெரியவில்லை.....
“ சூரி... இத என்னால கதையா எழுதி மறந்துட முடியுதுடா...
வாழ்ற வரை கூடவே வரும் ஞாபகங்கள்ப்பா... உன்னை என் நண்பனா நெனைக்கறதுக்கு பெருமையா
இருக்குடா... உங்கப்பா உங்கூடவேத்தான் இருக்கார்.... யாழினி யாரு உங்கப்பாதாண்டா...
உனக்கு குழந்தையா பொறந்திருக்கார்...சொல்லு அவகிட்ட சொல்லு தாத்தான்னு சொல்லி சொல்லி
வளர்த்து விடு... இங்க பாரு யாழினி சிரிக்கிறா....”
யாழினியை
தோள் மீது தூக்கிகொண்டவன்... கை அசைத்துவிட்டு போய்கொண்டிருந்தான்.... அவன் அப்பாவை
சுமந்து செல்வது போல இருந்தது... தூரத்தில் ஒரு புள்ளியாய்.... மறையும் வரை பார்த்துக்கொண்டே
இருந்தாள்...கற்பனைகளோடு தோற்றுப்போய் வாழ்வியல் சொன்ன அவனை.....!
( இப்படைப்பு என் நண்பர் ‘ சூர்யா’ அவர்களுக்கு....)