சிறுகதை : பசி....
“ அப்படியே டிபன் பாக்ஸை கொண்டு வந்திருக்கா பாரு...
தினம் வேஸ்ட் பண்றதே வேலையா போச்சு..”
வினிதா
பாத்திரங்களை அலம்பும் சத்தங்களோடு கத்தி கொண்டிருந்தாள்.
“
அபி ... அம்மா திட்டிட்டிருக்கா பாரு.. ஸ்கூல்ல லஞ்ச் என்ன சாப்பிட்டே?”
“போங்கப்பா...
அம்மா கொடுத்தனுப்புற லஞ்ச் ஒரே போர்... தெனம்.. பருப்பு , கீரைன்னு.. வெரைட்டி ரைஸ்ன்னா
கூட பரவால்ல...”
“ நூடுல்ஸ், பானி பூரின்னு மூணுவேளையும் வச்சாக்கூட
தின்பா.. உடம்புக்கு நல்லதா காய்கறி, கீரை சாப்பிடனும்னா கஷ்டம்... தினம் நான் அரக்க
பரக்க செஞ்சு அனுப்பறதெல்லாம் வேஸ்ட்டா போகுது. இரண்டு நாள் பட்டினி போட்டாதான் ஒழுங்கா
சாப்பிடுவே..”
“ ஸ்.. ஹையா...
இரண்டு நாள் உன் சாப்பாட்டிலர்ந்து ப்ரீயா இருக்கலாம்.. “ அழகு காட்டி விட்டு ஓடினாள்.
“
இங்க பாருங்க அவ சரியா சாப்பிட மாட்டேங்கறா... நீங்க மிரட்டி உதை கொடுத்தாத்தான் வழிக்கு
வருவா..”
“ நீயே அதிகமா செல்லம் கொடுக்கிறே... அப்புறம் புலம்பற...
விடு சின்ன பொண்ணுதானே.. சரியாய்டும்.. “
“
வினி... இன்னிக்கு நானும் அபியும் கொஞ்சம்
வெளியில் போய்ட்டு வர்றோம்...” என்ற படி அபியை அழைத்து கொண்டு கிளம்பினேன்.
“
என்னப்பா வண்டியை எடுக்காம நடத்தி வச்சி கூட்டிட்டு...எங்க போகப்போறோம்... ?”
“
இல்லடா எனக்கு கொஞ்ச தூரம் நடக்கனும்னு ரொம்ப நாள் ஆசை... அதான் நாம பேசிக்கிட்டே போவோம்
சரியா...?”
ஐந்து
நிமிடம் நடந்ததும் ஐஸ்கீரிம் பார்லர் முன் நின்றவள் “ பா.. ஐஸ்-கீரிம் சாப்பிட்டு போகலாம்...”
வழியெல்லாம்
தேவை இல்லாமல் எதையாவது வாங்கி பாதி தின்பதும், மீதி கீழே போடுவதுமாக வந்தாள்.
“வீட்டுக்கு
போகலாம்ப்பா...”
“
இன்னும் கொஞ்ச தூரம் அப்புறம் போய்டலாம்...”
நகரை விட்டு கொஞ்ச தூரம் வந்து விட்டிருந்தோம். எதோ
விளம்பர போஸ்டரை நான்கைந்து கட்டைகளை கட்டி
டெண்ட் போல் அமைத்து அதில் இரண்டு குழந்தைகள் உறங்கி கிடந்தது. ஒரு குழந்தை பக்கத்திலேயே
வாளியில் முகம் கழுவி கொண்டிருந்தது. அழுக்குச்
சேலையில் இருந்த அவள் அடுப்பை சுள்ளிகளால் எரிய வைத்து எதையோ பொங்கி கிடந்தாள்..
“
ப்பா... இவங்கெல்லாம் ஏன் வீதியிலயே சமைக்கிறாங்க...”
“
அவங்களுக்கு அதான்மா வீடு..”
ஒரு
குழந்தை தன் கையில் எதையோ வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது.. கை தவறி போட்டுவிடவும்
அதன் அம்மா அதை நீரில் அலம்பி கொடுத்ததும் மீண்டும் சாப்பிட துவங்கியது.
வேடிக்கை
பார்த்து கொண்டே வந்தாள். இதெல்லாம் அவளுக்கு புதிதாய் தெரிந்தது. ரோட்டோரத்தில் செருப்பு
தைத்து கொண்டிருந்தவன், வடை சுட்டு கொண்டிருந்த
பாட்டி, அழுக்காய் வீதியில் கையேந்தி அவசரமாய் விழுங்கி கொண்டிருந்தவர்கள்..
"சரிடா
அபி நாம வீட்டுக்கு போகலாம்.." திரும்பும் போது வழியில் ஒரு கல்யாண வீட்டு வாசலில் எறியப்பட்ட
இலைகளையும் ஒருவன் தேடி அதிலிருந்த பாதி ஜாங்கிரியை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.
“
ஏம்ப்பா இவங்க எல்லாம் இப்படி இருக்காங்க?”
“
பசிம்மா.. வாழனும்ல.. சாப்பாட்டை தவிர வேற பெரிய விஷயம் அவங்களுக்கு இல்லடா...இன்னிக்கு
பேப்பர்ல போட்டிருந்தாங்க இந்தியாவுல இருபத்தஞ்சு கோடி பேர் தெனம் பசியோடு தூங்கறாங்களாம்”
அபி
வீட்டிற்கு வந்தும் எதையோ யோசித்து கொண்டிருந்தாள்.
“
என்னங்க கொஞ்ச நாளா அபி ஸ்கூலுக்கு கொண்டு போறதை ஒழுங்கா சாப்பிட்டுடறா.. இப்பல்லாம்
சாப்பாட்டை வேஸ்ட் பண்றதே இல்ல... நீங்க என்ன
சொன்னிங்க?”
“
வினி... நீ பசிக்கு சாப்பிடனும்னு அவளை கடுத்துக்கிட்டே
இருந்தே... நான் ‘ பசி’ ன்னா என்னன்னு புரிய வச்சேன்.. !”
---
( இது கதை மட்டும் இல்ல.. நாம் வீணாக்கிற ஒவ்வொரு உணவும்
நாலு பேரின் பசி உணர்வை கொலை செய்கிற விஷயம்தான். ஒரு பக்கம் ஹோட்டல், திருமண விருந்து, டைனிங் வரை
தினம் தினம் உணவுக்கொலைகள் நடந்துகிட்டிருக்கு.. இன்னொரு பக்கம் பசி என்ற தண்டனையால்
தினம் தினம் செத்துகொண்டிருக்கும் கூட்டம்...! உணவில் , அதை விளைவித்தவனின் உழைப்பு
மட்டுமல்ல... எங்கோ வாடும் ஒருவனின் பசியும் இருக்கிறது... உணவை வீணாக்க
வேண்டாம்.. மிச்சமாகும் உணவை ஏதோ ஒரு உயிரின்
வயிற்றையாவது நிரப்பலாம். அக்டோபர்-16 உலக உணவு தினம். என்றைக்கு உலகில் பசியால் வாடுபவர்
இல்லாமல் இருக்கிறார்களோ அன்றுதான் உலகம் வலிமை பெறும்.
"Hunger
is not an issue of charity. It is an issue of justice. )