Friday, 31 August 2012

எத்தனை காலம்தான்  ஏமாற்றுவார்   இந்த பூமியிலே…..?” .

இந்தியா வம்சாவளி விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் இந்த 57 வயசுல விண்வெளிக்கு இரண்டாவது முறை போயிருக்காங்க.. அவங்க தைரியம்… சாதனையை  நினைச்சா பிரமிப்பா இருக்கு. இப்படி  விஞ்ஞானம்  அசுர வேகத்துல வளர்ந்துகிட்டிருந்தாலும்… மறுபக்கம்  மூட நம்பிக்கைகள்  ஏமாற்று வழியில்   நுழைஞ்சிடுது.  என் பேஸ்புக்ல இருந்த ஒரு நண்பரின் பக்கங்களை பார்த்து கொண்டிருந்த போது.. “ பாஸ்ட் பர்த் அனலைசர்.. “ அதாவது நம் முன் ஜென்மம் பற்றிய விவரங்களை சொல்லும் ஸாப்ட்வேர் இருந்தது. அதில் அந்த நண்பரின் முன் ஜென்மம் குறிப்பு இப்படி இருந்தது.
பிறப்பு :  சவுதி அரேபியா
வருடம் : 1662
இறப்பு : போரில் கொல்லப்பட்டு
மறுபிறப்பு: 16-07-1987
மற்றும் முன் ஜென்மத்தின் அவருடைய குணாதிசயங்கள்….  செய்த பணி பற்றி குறிப்பிட்டு இருந்தது.  மறு பிறப்பில் குறிப்பிட்டு வந்த அந்த தேதி  நண்பரின்  உண்மையான தேதிதான். இதை வேறு ஒரு தோழியிடம் காண்பித்த போது  ‘திக்’ என்று ஆகிவிட்டார். இது ஏமாற்று வேலை என்று எனக்கு தெரியும். அதை அவருக்கு விளக்கும் முன் வேறு சிலரின் குறிப்புகளையும் என்னதான் என்று பார்ப்போமே என்று அந்த அப்ளிகேஷனில்  நுழைந்தேன்.  என்  கணவர் முற்பிறப்பு ஆஸ்திரிலேயா என்றும் காதல்  தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர் என்றும் இருக்க.. பாவம் இவரா காதலிச்சிருப்பாருன்னு … என ஜோக் அடித்துவிட்டு என் மகள் ஐடி க்கு அந்த அப்ளிகேஷனில் போக  முற்பிறப்பு பிலிப்பைன்ஸ் என்றும் ஆணாக பிறந்த அவர் யானை மிதித்து கொல்லப்பட்டவர் என்றும் மறுபிறப்பில் என் மகள் பிறந்த நாள் சரியாக இருந்தது. எப்படி இந்த பிறவி தேதி அத்தனை சரியாக இருக்கிறது என்று தோழி வியந்தார்.  நாம் மெயில், பேஸ்புக் அக்கௌண்ட் உருவாக்கும் போது   நம்முடைய புரோபைலில் என்ன தேதி குறிப்பிடுகிறோமோ  அதுதான்  அந்த அப்ளிகேஷனில் நுழைந்து மறுபிறப்பு தேதியாக காட்டுகிறது என்பதை விளக்கினேன். நாம் சரியான தேதியை குறிப்பிட்டு இருந்தால் அதுதானே அதில் காண்பிக்கும். அது ஏமாற்று வேலை என்பதை உணர்த்த புரபைலில் பிறந்த தேதியை மாற்றி  அந்த அப்ளிகேஷனில்  சென்று பார்த்தால்  நாம் மாற்றிய தவறான தேதியையே மறுபிறப்பு தேதியாக  அது காட்டும். இந்த மாதிரி விஷயங்களை இணையத்தில் விடுவது அப்பாவி மக்களை முட்டாளாக்கவா… அல்லது திரில்லான ஒரு பொழுது போக்குக்காகவா…?    அதை பரீட்சித்து  பார்க்கும் மன தைரியம் இல்லாத  சிறுபிள்ளைகள்  ஏதேதோ கற்பனை செய்து கொண்டு மன  அழுத்தத்திற்கு  ஆளாகலாம்      இல்லையா…?
புதுசு புதுசா மோசடிகள் பெருகி கொண்டேதான் வருகிறது. ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு அதை ஒரு பதினான்கு பேருக்கு அனுப்பினால் பத்து நிமிடங்களுக்குள் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று இருக்கும். படித்தவர்கள்  கூட இதை நம்பி பார்வேர்டு செய்கின்றனர்…  ஆனால் பாவம் பத்து    நாள்  ஆனாலும் எந்த அதிசயமும் நடப்பதில்லை….!  இணைய தளங்களிலும்.. மொபைல் போன்களிலும்  மூட நம்பிக்கைகளை விதைத்து வரும் விஷயங்களை வேரோடு அழிக்க சம்பந்த பட்டவர்கள்  முன் வர வேண்டும்.