Thursday, 16 August 2012

“ஆதலினால்  ஊடல்  கொள்வீர்….! “

“ எனக்கும் என் மனைவிக்கும் சின்ன சண்டை கூட வந்ததில்லைங்க..” 
“என் காதலி எந்த சமயத்திலுமே கோவப் படமாட்டா…”
இப்படி யாராவது சொன்னா உடனே நாம பெருமையா அவங்களை கொடுத்து வச்சவங்க, இருந்தா அந்த மாதிரி வாழ்க்கை இருக்கனும்னு புலம்புவோம். பெற்றோர் பார்த்து வைத்த வாழ்க்கையிலோ அல்லது காதல் வாழ்க்கையிலோ  சரி … சின்ன சின்ன ஊடல் இருந்தால்தாங்க சந்தோஷமே..! ஊடல்தாங்க நம்ம வாழ்க்கையில் ஒருவருக்கொருவரிடத்திலுள்ள உரிமையை காண்பிக்கும் வாய்ப்பாக அமையும்.  ஊடலே இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும். நிலத்தில் நீர் இணைந்து கலப்பது போல அன்பு காட்டுபவர்களிடம் ஊடல் கொள்வதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்? ‘ காமத்தால் கூடி மகிழ்வதை விட ஊடுதல் இனியது’ ‘ ஊடலுக்கு இன்பம் ஊடுதல் தணிந்த கூடுதல்  ‘என்று திருவள்ளுவரே சொல்லியிருக்காரு. ஊடலின் சிறப்பை உணர்ந்தே இலக்கியங்களில் கூட அதற்கு தனி இடம் கொடுத்திருக்காங்க. சின்ன சின்ன தவறுகள் செய்யும் போதும் தவறே இல்லாத போதும் மெல்லிய ஊடல் கொள்வது வாழ்க்கையில் உரிமையை    நிலை நிறுத்தும்.  காதலியின் தோழியிடம் சின்ன ஸ்மைல் பண்ணிட்டா போதுமே … அப்ப உங்க காதலி முகம் ‘ உர்..ருனு’  போகும் பாருங்க அது உங்க மேல வச்சிருக்கிற   அன்போட  உரிமைதான்.  “ ஏய் ப்ளீஸ் இங்க பாரேன் எதுக்கு    நீ சும்மாவே தப்பா எடுத்துக்கிறே.. என் மனசுல  உன்ன தவிர யாருமில்ல.. இப்படி கோவப்படறதை விட ரெண்டு அடி  அடிச்சுடேன்..” - இப்படி நீங்க சமாதனப் படுத்தும் போது உங்க காதலி ஒரவிழி பார்வையை வீசி சின்னதா சிணுங்கும் போது அங்கே காதலின் உரிமை வெளிப்படும்.
“இன்னிக்கு ஈவ்னிங் ரெடியா இரு… நான் ஆபிஸ்லர்ந்து சீக்கிரமே வந்துடறேன் நாம சினிமா போலாம் ன்னு  மனைவி கிட்ட சொல்லிட்டு, வேலை பளுவில மறந்தே போயிடறீங்க.. வழக்கம்போல கிளம்பும் போதுதான் உங்களுக்கு ஞாபகமே வருது.  மொபைல்ல பார்த்தா ரெண்டு மிஸ் கால் இருக்கும்.. வீட்டுக்கு போனா  DTH  எபக்ட் இருக்கும்னு,போகும் போதே மனைவிக்கு பிடிச்சதா எதாவது வாங்கிட்டு போயிடறீங்க. வீட்டில் மனைவி பேசாம முகத்தை

திருப்பி வச்சிருக்கா “ அட நிம்மதியா இருக்கு.. இப்பவாவது வாயை மூடி இருக்காளேன்னு நீங்க மனசுக்குள்ள   நினைச்சாலும், மனைவி கன்னத்தை கிள்ளி, “ ஸாரிடா .. இன்னிக்கு ரொம்ப வேலை.. உங்களுக்காகதானே இவ்வளவு கஷ்டப் படறேன்..   நாளைக்கு நிச்சயமா போலாம்.. இது பாரு உனக்கு பிடிச்ச ஸ்வீட் என்று ஊட்டி விட போகும் போது. போங்க நான் எவ்வளவு ஆசை ஆசையா ரெடியா இருந்தேன் தெரியுமா என்று மனைவி சொல்லும் போது ஒரு சின்ன கோபம் வெளிப்படுமே அங்கேயும் ஒரு உரிமை வெளிப்படும். ஊடலில் பெண்கள் சின்னதா ஒரு முத்தத்தை தந்தே போர்க் கொடியை கீழே போட்டுட  வைக்கிறாங்க.
முதல்ல சொன்னவங்களை விட தினம் சின்ன சின்ன சண்டை  போட்டுக்கறவங்கதான் ரொம்ப கொடுத்து வச்சவங்க. அவங்க கிட்டதான் உரிமையும், அன்னியோன்யமும் இருக்கும். என்ன இனி ஒரு கை பார்த்துடலாம்னு.. ரொம்ப ஓவராவும் ஊடலை பில்டப் பண்ணிக்காதீங்க. ஊடல் உணவில் இருக்கும் உப்பு மாதிரி சரியான அளவுல இருந்தா சுவையா இருக்கும்.
( எப்படியோ பத்த வச்சிட்டோம்… நாங்க சண்டையே போட்டுக்கறதில்லைன்னு சொன்னவங்க எல்லாம்.. உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கெல்லாம் இனி டிஷ்யூம்.. டிஷ்யூம்தான்..   நம்ம வேலை வேடிக்கை பார்க்கறதுதானே..?)