அபார்ட்மெண்ட் வீடுகளில் வசிப்பவர்களின் உலகம், நட்பு
பற்றி எல்லாம் எனக்கு பரிச்சயமில்லை. சில நாட்களுக்கு முன் இங்கிருக்கும் என் தோழி
அவர் அபார்ட்மெண்ட்டில் நடந்த ஒரு விழாவிற்கு
அழைத்திருந்தார். என் மகளுடன் சென்றிருந்தேன்... குறைந்தது 300 வீடுகளாவது இருக்கும்
என்று நினைக்கிறேன்.. மழலைப்பட்டாளங்கள் விழாவை உற்சாக ரகளைபடுத்திகொண்டிருந்தார்கள்.
அங்கிருந்த ஒவ்வொரு குடும்பங்களும் ஒற்றுமையாய்,
அன்பாய் விழாவை சிறப்பித்து கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை... மனசு முழுக்க
மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. அங்கு இனம், மதம் கடந்த மனித அன்பை மட்டுமே பார்க்க
முடிந்தது. நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது
அந்த அபார்ட்மெண்ட்டின் ஒரு வீட்டின் முன் ‘ டூ லெட்’ போர்டு மாட்டியிருந்தது.. அதை
பார்த்து விட்டு என் மகள், “ மா.. நம்ம வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இங்க வந்துடலாமா?ன்னு
கேட்டப்ப விளையாட்டை தொலைத்து வளரும் அவள் ஏக்கம் தெரிந்தது. அபார்ட்மெண்ட்டில் வசிப்பது
மகிழ்ச்சியான வாழ்க்கைதான்! ( எல்லா அபார்மெண்ட்டும் இப்படி இருக்கான்னு மத்த அபார்ட்மெண்ட்வாசிகள்தான்
சொல்லனும்.......)
இங்கு
நான் இருக்கும் பகுதி தனி வீடுகள்தான். பெரும்பாலான பெண்கள் வீட்டிலிருப்பவர்கள். என்னுடன்
நட்பாக பேச சம வயது தோழியோ என் மகளுடன் விளையாட அவள் வயது சிறுமிகளோ யாருமில்லை... வீடு, வேலை என்று நேரம் போய் கொண்டிருப்பதால் வெறுமை
தெரிவதில்லை. அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அதிக நட்பு கொள்ளாமலும் ஒரேடியாக ஒதுங்கி
போகாத அளவும்தான் இருப்பேன். இங்கிருக்கிற பெண்கள் அவங்க வீட்டு குப்பையை நைசா அடுத்த
வீட்டுக்கு தள்ளுவாங்க.. சமைத்து முடிச்சதும் முடிஞ்சா சீரியல் பார்ப்பாங்க.. இல்லன்னா
இவங்க சீரியல் ஓட்டுவாங்க... ரெண்டு மூணு பெண்கள் ஒண்ணா உட்கார்ந்துட்டு புறணி பேசி
கொண்டிருப்பாங்க... எப்பவும் அடுத்தவர்களை நோட்டம் விடுவதும், அவர்களை பற்றி வம்பு பேசுவதும்தான்
இவர்களுக்கு வேலை. இப்படி பட்டவர்களிடம் நட்பாகவும்
இருக்க முடியாது, அவர்களை திருத்தவும் முடியாது. அடுத்தவர்களை பற்றி பேசுவதால் என்ன
லாபம் என்று தெரியவில்லை. உருப்படியான எந்த விஷயத்துக்கும் முன் வரமாட்டார்கள். முக்கால்வாசி
பேருக்கு நான் எழுதுவதே தெரியாது. பக்கத்தில் இருக்கும் வட்டங்கள் இப்படி இருக்கிறது.
ஆனால்.. சற்று தொலைவிலும்,
வெகு தொலைவிலும் உள்ள நட்பு வட்டங்கள் ரொம்ப
நேசத்தோடு இருக்கிறது. எழுத்தின் மூலம் சம்பாதித்த உறவுகள் உன்னதமான அன்பை செலுத்துகிறார்கள். அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் என்று நிறைய உள்ளங்கள்.
திருச்சியிலிருந்து ஒரு அம்மா எனக்கு தீபாவளி ஸ்வீட் செஞ்சி கொரியரில் பாசத்தோடு அனுப்பியிருந்தாங்க...65
வயதில் முடியாமல் மெனக்கெட்டு செய்து அதை பத்திரமாக பேக் செய்து கொரியர் பண்ணி அனுப்பியிருந்ததை
நினைச்சா.. ரொம்ப சந்தோஷமா இருந்தது...! பணத்தால சம்பாதிக்கிற சொத்தெல்லாம் என்னங்க
பெரிய சொத்து... மனங்களால் சம்பாதிக்கிற உறவுகள்தாங்க மதிப்பிடமுடியா சொத்து!
எழுத்தால்
இணைந்த நல்ல மனங்களுடன் சேர்ந்து தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகையை 2 வருஷமா நற்பணியாக பண்ணிக்கிட்டு வர்றோம். இது
தினமலர்- பெண்கள் மலர் தோழிகள் நிகழ்ச்சி.
இந்த முறையும் அதற்கான ஏற்பாட்டை செய்துகிட்டிருக்கேன்... அதனால் இங்க
சின்ன பிரேக்... ! எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...! நம்ம சந்தோஷத்தோடு
அடுத்தவங்களும் மகிழ்ச்சியா இருக்க நினைப்போம்!