சென்ற வாரம் பெண்கள் மலர் நிகழ்ச்சி ஒன்றிர்க்காக அந்த
கல்லூரிக்கு சென்றிருந்தேன்... நிகழ்ச்சி முடியும் வரை அதில் கவனம் செலுத்திவிட்டு
எல்லோரும் கிளம்பிய பின்.... என்னுடன் வந்த சகோதரியுடன் அந்த கல்லூரி அசெம்பிளி ஹாலில் இருந்த
படிகட்டில் உட்கார்ந்து சில நிமிடங்கள் மௌனமாய் இருந்தேன்... கொஞ்சம் கண் கலங்கவும்
செய்தது... ! ஆமாங்க.. ஆமாம்.. நான் அந்த காலேஜ்லதான் படிச்சேன்.... கவலையில்லாமல் சுற்றி திரிந்த அந்த நாட்களும் கல்யாணத்துக்கு
பிறகு பொறுப்பா போய்கிட்டிருக்க இந்த நாட்களும்....எது பெஸ்ட்டுன்னு
ரெண்டும் பேசிக்கிடுச்சுங்க.... ! அது பாட்டுக்கு
பேசிக்கிட்டு போகட்டும்..!
உங்கள்ல எத்தனை பேரு
கல்லூரி முடித்தும் நட்பை தொடர்ந்துகிட்டு இருக்கிங்கன்னு தெரியலை... ! திருமணத்திற்கு
பிறகு குறிப்பா பெண்கள் மட்டும் அவரவர் குடும்பம்னு தனி உலகத்துக்கு போக வேண்டிய சூழல்லதான்
இருக்காங்க.. இதில் நட்புகளோடு தொடர்பு கொள்ளவும்... நினைத்து பார்க்கவும் கூட நேரமில்லாமல்
போய்விடுகிறது. என்னோடு குழந்தை பருவத்துலர்ந்து நெருக்கமா பழகின தோழியும் இருக்காங்க...
“ கல்யாணம் கூட நம்மை பிரிச்சிடக்கூடாது நாம ரெண்டு பேரும் ஒரே ஆளை கல்யாணம் பண்ணிக்கலாமாப்பா?”
என்று விவரம் தெரியாத வயதில் பேசி வைத்திருக்கிறோம். அந்தளவு நெருக்கமான தோழி இப்ப
இருபது நிமிட பயண தூரத்தில்தான் இருக்கிறாங்க.. ஆனா சந்திச்சுகறதுமில்ல... போனில் கூட
அவ்வளவா பேசிக்கறதில்ல...! ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு நட்புகள் வலுவாக இருக்கிறது.
ஆனாலும் மனதில் எங்கோ ஒரு இடத்தில் பசுமையை
சுமந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்வின் ஒவ்வொரு நட்புகளும்!
காலேஜ்ல உட்கார்ந்திட்டிருந்த அந்த நேரத்துல எனக்கு தோன்றிய கவிதைதான் இது- ( அதுக்குன்னு
ப்ளாக்- ஒயிட் காலத்துக்கு நான் போயிட்டதா நினைச்சீங்க... அவ்வளவுதான் தீர்ந்தீங்க...
!)
அன்று ..அந்த மரத்திடம்
பேசிக்கொண்டிருந்தோம்....
மறந்திடாதே மரமே...
எங்கள் இளைப்பாறலை....
இவள் சுகா
அது வசந்தி...
அங்கே நிற்பவள் மாலதி...
எங்கள் குறும்பு.. கேலி..
ரகசியம்
மறந்து விடாதே...!
என்றாவது வருவோம்...
அப்போது இளைப்பாறவிடு
அந்த நினைவுகளை சொல்லி...!
அந்த மைதானத்தின் மணல்வெளிக்கும்
சொல்லிவைத்தோம்...
காலச்சுவடுகளில்
கலைத்து விடாதே-
எங்கள் பாதச் சுவடுகளை!
இன்று...
இதோ வந்திருக்கிறேன்...
மணல் வெளியெங்கும்-
திரிந்து பார்க்கிறேன்...
இங்கும் அங்குமாய்... ...!
மறந்திருக்க மாட்டாய் மரமே..
நான்... வந்திருக்கிறேன்..
கண்களை மூடி காதை திறக்கிறேன்..
கதை சொல்...
ஒன்று விடாமல் சொல்...!
....................
...................
நன்றி மரமே-
உன் இளைப்பாறல் சுகமாய்த்தான்
இருக்கிறது...
எல்லாம் சொல்லிவிட்டாய்..
இப்படியே இருந்துவிடலாமா?
அப்படியே இருந்திருக்க கூடாதா..?
மனம் சண்டையிட்டு கிடக்கிறது...!
அது கிடக்கட்டும்!
நீ சுகமாயிரு....
என்னை போல் எத்தனை
பேருக்கு சொல்ல வேண்டும்
கதைகளை..!
நீ சுகமாயிரு...
இப்போது தண்ணீரோடு
என் கண்ணீரையும் விட்டு செல்கிறேன்...
விடை பெறுகிறேன்
சுகாவோ, மாலுவோ
வந்தால் சொல்லி வை...
நான் கேட்டதாய்...!
-------------------