மார்ச்
8 -ம் தேதி மகளிர் தினத்திற்காக பத்திரிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்
சிறப்பிதழ்கள் வெளி வருகிறது. பல்வேறு அமைப்புகளின் மகளிர் தின
கொண்டாட்டங்கள் நடக்கின்றது. அன்றைய தினம் சாதனை பெண்மணிகளை பெருமை பொங்க
பேசுகிறோம்.
மற்றொரு
பக்கம் பெண்கள் மீதான வன்முறை, பாதுகாப்பற்ற சூழலில் சுதந்திரமாய் செயல்
பட முடியாமல் மகளிர் தின கொண்டாம் தேவை இல்லை என்ற ஆதங்கங்கள். உழைக்கும்
மகளிரின் போராட்டத்தை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் மகளிர் தினம்
அன்றிலிருந்து இன்று வரை எதோ ஒன்றை முன் வைத்து போராடிக்
கொண்டிருக்கும்படியாகத்தான் இருக்கிறது. பெண்கள் சக உயிர்கள் என்று
மதிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பெண்கள்
தினம் என்ற அடையாள தினம் எதற்கு என்று கேட்டு ஆங்கில ஆசிரியை ஆக இருக்கும்
என் தோழி எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அவரின் கேள்விகளை
உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்...?
கடிதம்.....
பெண்கள்
தினம், அன்னையர் தினம் என்று எதற்கு இவைகள்? ஒரு அடையாளத்திற்காகவா அல்லது
பெண்கள் என்ற சில ஜீவன்களின் இருப்பை நினைவுப்படுத்திக்கொள்ளவா? பள்ளி
விட்டு அடுத்த நொடி பரபரப்புடன் வேகமாக தோழியருடன் ஓடி வருகிறாள் அந்த
சிறுமி. ஏதோ பாடத்தில் சந்தேகம் என்ற என் நினைப்பை அப்படியல்ல என்றது
பேயறைந்தாற் போல் இருந்த அவள் முகம். ஆம் பேயேதான் அறைந்திருந்தது. தம்பி
என்கிற பேய். பள்ளி மதிய உணவு இடைவேளையில் வங்கிக்கு சென்று வந்ததை
அறியாமல் எங்கோ ஊர் சுற்றினாள் என்று எண்ணி வகுப்பறையில் சக மாணவிகளின்
முன்னிலையிலேயே கன்னத்தில் பளார் என்று அறிந்திருக்கிறான் பத்தாம் வகுப்பு
படிக்கும் தன தமக்கையை எட்டாம் வகுப்பு படிக்கும் தம்பி. தன் தமக்கை தவறு
செய்ததாக எண்ணினால் அதை அவன் ஒரு செய்தியாக தன் பெற்றோருக்கு தெரிவிக்கலாமே
அன்றி அதை ஒரு குற்றச்சாட்டாக கூட வைக்க உரிமை இல்லை. ஆனால் அங்கே அவன்
ஒரு நீதிபதியாகவே மாறி தீர்ப்பு வழங்கியிருக்கிறான். எது அவனுக்கு அந்த
அதிகாரத்தைக் கொடுத்தது?
எது அவனுக்கு அந்த உரிமையை கொடுத்தது? சகோதரன் என்ற உரிமையா? இல்லை, ஆண் என்கின்ற நினைவு கொடுத்ததே அந்த அதிகாரம்.
விளையாட்டாக
வீட்டில் சண்டைப் போட்டுக்கொள்ள வேண்டிய வயதில் ஒரு சிறுவன் சந்தேகப்பட்டு
தன தமக்கையை பலர் முன்னிலையில் கன்னத்தில் அறையத் துணிகிறான். அதை
சொல்லும் போது அந்தச் சிறுமியின் முகத்தில் தெறித்ததே அந்த உணர்வு!
அப்பப்பா! ஒட்டு மொத்த பெண்களின் சிதைக்கப்பட்ட மரியாதை உணர்வை(wounded
pride) நம் முன் பரிமாறும் ஒரு துடிப்பு.
பெண்கள் ஆகாய விமானங்கள் ஓட்டுவதாலோ ஆட்டோ ஓட்டுவதாலோ ஐடி
துறையில் பரிமளிப்பதாலோ மட்டும் முன்னேற்றம் கண்டு விட்டதாக எண்ணிக்
கொள்ளலாகுமா? எங்கோ கிராமத்தில் மாமியாரிடமோ அல்லது கணவனிடமோ "தண்டச்சோறு"
என்று இதயத்தில் அறை வாங்கும் பெண்களும், ஏய் நான் ஆம்பளைடி என்ற
அதிகாரக்குரலுக்கு அடி பணியும் பெண்களும் விடியல் முதல் இரவு வரை அயராது
உழைத்தாலும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்படும்
பெண்களும் இன்னும் இருக்கின்றனர் என்பதை யாரும் மறுக்கவியலுமா?
அம்மா பெண் என்ற காரணத்தாலேயே அவளை மதிக்காமல் அன்னையையே
அடிக்க கரம் உயர்த்தும் பிள்ளைகளும் உண்டு இச்சமூகத்தில். அதுமட்டுமா? பெண்
ஆசிரியைகள் வளர்ந்த மாணவர்களிடம் படும் அவஸ்தைகளை வெளியில் சொல்வதில்லை.
அவர்களின் தாய்மையுணர்வே பல மாணவர்களின் வக்கிர உணர்வுகளை வெளிக்கொணராது
காப்பாற்றுகிறது என்பதை யாரும் மறுக்க வியலாது.
வகுப்பறையில் ஒன்றாகவே பயிலும் மாணவமாணவியரிடமும்
ஒருவருக்கொருவர் இயல்பாக இருக்க வேண்டிய அன்பு துளியும் இல்லை.
மாணவிகளுக்கு அவர்கள் ஆண்கள் என்ற எண்ணமும் மாணவர்களுக்கு இவர்கள் பெண்கள்
என்ற எண்ணமும் தலைத்தூக்கி இருபாலருக்கும் இடையே இருக்க வேண்டிய இயல்பான
நட்பை சிதைக்கிறது. இது இவர்களின் தவறா? இல்லை, இச்சமூகம் இப்படித்தான்
இவர்களை வடிவமைக்கிறது. இங்கே ஆண்கள் ஆண்களாகவும் பெண்கள் பெண்களாகவும்
உருவாக்கப்படுகின்றனர். ஆண் சக்திவாய்ந்த பிம்பம் போலவும், பெண்
ஏதோ பூட்டி பாதுகாப்பதற்கு உரிய பொக்கிஷம் போலவும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அந்த மாய உலகில் இருவருமே தங்கள் இயல்புகளை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நாம் அனைவரும் ஒன்றை இதயப்பூர்வமாக எண்ணிப்பார்க்க முயல
வேண்டும். தங்கையரை தோளில் சுமந்து தாலாட்டும் அண்ணன்களை விட தன்
தம்பிகளை அன்போடு இடுப்பில் வைத்து விளையாட்டுக் காண்பிக்கும் தமக்கையர்
அதிகம். அவர்களின் அன்பு எனும் ஊற்றில்தான் இச்சமூக கட்டமைப்பு
செழிக்கிறது; அவர்களின் பாச வெள்ளத்தில்தான் ஆண்களின் பாவங்கள்
அடித்துச்செல்லப்படுகின்றன. பெண்களின் கடமை உணர்வும்அரவணைக்கும் பண்புமே
இப்பூவுலகை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி. மெல்லியலாரின் மலரினும் மெல்லிய காதலே
ஆணின் வல்லிய உருவத்தை தாங்கி நிற்கும் தூண். ஆகவே மானிட இனம் ஒன்றை
நினைவில் வைத்துக்கொளல் நலம். பெண்கள் இல்லாத பூமியின் அடுத்த ஒரு கணத்தை
சற்றே நினைத்துப்பார்ப்போம். பெண்களை ஒரு இரண்டாம் பட்ச உயிரி
என்ற நினைப்பை மாற்றுவோம்.
-விஜயலட்சுமி
********************** | |||