Tuesday 25 June 2013

அதிகரித்து வரும் மன அழுத்தங்களும், தற்கொலைகளும்..





  நேற்று டூ வீலரில் வந்து கொண்டிருந்த போது அந்த சுவரொட்டி கண்ணில் பட்டது, 30 வயதிற்குள்தான் இருக்கும் அழகான இளம்பெண், கல்லூரியில் அஸிஸ்டெண்ட் புரபஸரான அவரின் மறைவை அறிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இவ்வளவு இளம் வயதில் எப்படி இறந்திருப்பார் என்று யோசித்து கொண்டே திரும்பினேன்.

  மறு நாள் செய்தித்தாள் மூலம் அந்த செய்தியை அறிந்து கொள்ள முடிந்தது. அந்த இளம் புரபஸருக்கு ஆறு வயது குழந்தை இருக்கிறது. அன்று கணவர், குழந்தையுடன் காரில் வந்து கொண்டிருந்த போது கணவன், மனைவிக்குள் நடந்த மனஸ்தாபத்தில் கணவர் எதோ சொல்லியிருக்கிறார், உடனே அந்த பெண் கார் டோரை திறந்து கீழே குதித்து விட்டிருக்கிறார். முன் சீட்டில் கணவரும், குழந்தையும்.  பின் சீட்டிலிருந்து இவர் குதிப்பார் என்று கணவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.. ஹைவேஸில் படு வேகமாக வரும் காரிலிருந்து குதித்தால் என்ன ஆவது? சம்பவ இடத்திலேயே அவர் வாழ்க்கை முடிந்து விட்டிருக்கிறது.

அந்த போஸ்டரை பார்த்த ஒரு ஆட்டோ ஓட்டுனர், அந்த பெண் இரண்டொரு முறை அவர் ஆட்டோவில் கூட பயணித்ததை சொன்னார். கொஞ்ச தொலைவிற்கே  வழக்கமான கட்டணத்தை விட மிக அதிகமாக கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். ரொம்ப அமைதியான பெண்ணாதான் தெரிஞ்சது. கணவன், மனைவி பிரச்சினை வந்துட்டா படிச்சவங்களும் ஒண்ணுதான்னு புரியுது..என்று புலம்பி கொண்டிருந்தார்.

மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஒரு ஆசிரியரிடத்திலேயே மனபலம் குறைந்ததற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? அவரை படிக்க வைத்து திருமணம் செய்து தந்த பெற்றோர்களுக்கு இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றுதானே..  விவரம் தெரிவதற்குள் அம்மாவின் பாசத்தை இழந்த அந்த சின்ன குழந்தைக்கு என்ன சொல்ல முடியும்?


வருடா வருடம் பத்தாவது, பனிரெண்டாவது தேர்வு முடிவுகள் வரும்போதெல்லாம், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகின்றது. மாணவர்களுக்கு வழிகாட்டி மனபலத்தையும், தன்னம்பிக்கையும் அறிவுறுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது.

சிறு சிறு தோல்வியை கூட தாங்கி கொள்ள இயலாமல் இப்போது தற்கொலைகள் அதிகரித்து வருவதை காண முடிகிறது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரும்போது, கோபம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை தள்ளி வைத்து விட்டு, ஒரு நிமிடம் அவரை நேசிப்பவர்களுக்கு அவர்கள் இழப்பின் வலி எப்படி இருக்கும் நினைத்து பார்த்தால் அப்படி செய்து கொள்ளும் எண்ணம் வருமா? அவர்கள் வலியாவது கொஞ்ச நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால் அவரை சார்ந்தவர்களும், அவர் மீது அன்பு வைத்திருப்பவர்களுமல்லவா தினம் தினம் வேதனை சுமந்து தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

முறையற்ற மருத்துவ சிகிச்சைகள்,  நாள் தோறும் நடக்கும் சாலை விபத்துக்கள் என்று மனித உயிரை மலிவாக்கி கொண்டிருக்கையில்  நினைத்த மாத்திரத்தில் நடந்து விடுகின்ற தற்கொலைகளும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

மனித வாழ்க்கை ஓடி கொண்டேயிருக்கிறது... எதற்காக ஓடுகின்றோம் என்றுதான் யாருக்கும் புரியவில்லை.... நம் முன் தலைமுறையில் இருந்த அமைதியும், மகிழ்ச்சியும் நம்மிடம் இருக்கிறதா என்று யோசித்து பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

குடும்பத்தில் எதாவது பிரச்சினை என்றால் முன்பெல்லாம் நம் தாத்தாவோ பாட்டியோ ஆதரவு சொல்லி தீர்த்து வைத்திருப்பார்கள். இன்று தெருவுக்கு தெரு கவுன்சிலிங் செண்டர் ஆரம்பித்து வருகிறார்கள். அவர்களும் பிரச்சினையின் வேகம் பொறுத்து ஒரு ஸிட்டிங்... மூன்று ஸிட்டிங் என்று மூன்று மாதத்திற்கு மேல் கல்லா கட்டி வருகிறார்கள்.  பிரச்சினை தீர்ந்ததா என்றால் அதையும் சொல்ல முடியவில்லை...

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம். கணவன், மனைவி இருவரும் நல்ல  வருமானம். ஒரே பையன் என்று அவனுக்கு அதிக செல்லம் கொடுத்து பணத்தின் அருமை புரியாமல் கேட்பதெல்லாம் வாங்கி கொடுத்து இப்போது வளர்ந்து கல்லூரி படிக்கும் நிலையில் அவனுக்கு ஜாலியாக செலவு செய்வதை தவிர படிப்பின் மேல் ஆர்வமில்லை. அவர்கள் புலம்பி இப்போது கவுன்சிலிங் அழைத்து செல்கிறார்கள்..  இதை சரி செய்ய நாளாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். நான்கு மாதமாக அழைத்து கொண்டுதான் போகிறார்கள். எப்படி இருக்கிறது என்று  பையனை கேட்டதற்கு"கவுன்சிலிங் என்று உட்கார வைத்து அறுக்கிறான்..ங்க"என்று சொல்கிறான். ம்.. என்ன சொல்வது?

பணமும், ஆடம்பர வாழ்க்கையும்தான் உறவுகளுக்குள் ரோடு போட்டு கொண்டிருக்கிறது... !