Saturday, 18 January 2014

பொங்கல்....................



ஆடை குவியல்களிடையில்..
மனம் கசங்கி போய் கிடந்த
அங்காடி ஊழியர்கள்..

உறக்கம்  நுழையவிடாமல்
பாட்டொன்று கேட்டவாறு
பாதமாடிய... தையல்காரர்கள்...

திரு நாளும் வெறும் நாளாய் போய்விட்ட
அவர்கள்-
நினைவுக்கு வந்துதான் போனார்கள்..
பொங்கல் புதுத்துணியில்..!

-------------

பொங்கலுக்கு துணி எடுக்க சென்னை சில்க்ஸ் போயிருந்தோம்...  நான் செலக்ட் பண்ணிக்கொண்டிருக்கும் போது ஒரு பெண்  ஊழியர் பக்கத்திலிருந்த மற்றொரு ஊழியரிடம் வருத்தத்தோடு புலம்பி கொண்டிருந்தார்... “ எங்களுக்கும் குழந்தை குட்டிகளோட கொண்டாடனும்னு ஆசை இருக்காதா? அரை நாள் கூட லீவு இல்லைன்றாங்க..” 

கடையின் வெளியே ஷோவாக வைத்திருந்த பொங்கல் பானையும்... பொய்யாய் எரிந்த தீயில் வழிந்து கொண்டிருந்த நுரை போல்தான்  இவர்களின் கனவுகளும்!

இந்த சீசனில் பார்த்தால் மூலை முடுக்கில் இருக்கும் தையல் கடை கூட பிஸியாக இருக்கும்... இரவு முழுக்க கதவடைத்து பாட்டு போட்டு தைத்து கொண்டிருக்கும் தையல்காரர்கள்... 

பாதை ஓரத்தில் படுத்து கிடந்த அந்த முதியவர் பக்கத்திலிருந்த மாட்டுச்சாணம் நனைத்ததில் கோணிப்படுக்கையை சுருட்டி வேறிடம் தேடிக்கொண்டிருந்தார்... பேருந்து  நிலையம் ஒன்றில்.....

மருத்துவமனை ஊழியர்கள்....

இப்படி இன்னமும் நிறைய பேர்... திரு நாளும் வழக்கமான  நாளாய் ...! 

அதோடு இல்லாமல்....

 நாட்டைக்காக்க  எல்லையில்  இருக்கும் ராணுவ வீரர்கள்.....

இவர்கள் அனைவரும் என் நினைவிற்கு வந்துதான் போனார்கள்.... என் அன்பை உரித்தாக்கி கொண்டாடினேன் அவர்களனைவருடனும்...!