கவிதை:
ஒவ்வொரு தீபாவளியும்
நினைவு படுத்துகிறது…
மத்தாப்பு மழலைகளின்
மரண ஓலங்களையும்
காகித சிதறல்களாய்
கருகிய உடல்களையும்...
அவர் வாழ்க்கையின் வாடிக்கை
கண்ணில் கனத்து போனதால்
வானத்தின் வேடிக்கை வெறுத்து போனது..
தேர்தல்… கிரிக்கெட்…
கல்யாண ஊர்வலம்…
வெற்றியின் வெடிச் சத்தத்தில்..
ஒளிந்து கொண்டிருக்கும்
ஒரு சாண் வயிறுக்காய்
தோற்றுப்போன வறுமையின்
விம்மல்…!
இறுதி யாத்திரைக்கும்..
இங்கே வெடிக்கும்-
அதுவே இறுதியாய் போன
அவர் யாத்திரைக்கு
அழுகையல்லவா வெடிக்கும்..
கந்தக புகை கண்ணீர் புகையாகி
மேகத்தில் கலந்து
கண்களில் அல்லவா கொட்டுகிறது
உழைத்து பிழைக்க
வழி எத்தனையோ..
பிழைத்து சாவதுதான்
சிவகாசி உயிரின் சாபமோ..?
ஒவ்வொரு தீபாவளியும்
நினைவு படுத்துகிறது..
அசுரன் அழிந்ததை அல்ல….
(பட்டாசு ஆலையில் பலியான அப்பாவி உயிர்களை நேற்று செய்தி தாளில் படித்து என் பேனா வடித்த கண்ணீர் மை..)