இப்பொதெல்லாம் அரசு பள்ளிகள் ஏழைகளின் கல்வி கூடங்களாகி விட்டது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள் என்பது ஒரு வாதம்.முப்பது வருடங்களுக்கு முன் இத்தகைய பாகுபாடு இருந்ததில்லையே..? இப்போதுதானே தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. கவுரவ குறைச்சல் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. எளிய மக்கள் கவுரவ குறைச்சலாக ஏன் நினைக்க போகிறார்கள்..? தனியார் பள்ளிகளில் அரசு பள்ளியை விட கற்பித்தல் சிறப்பாக இருக்கிறது என்றுதானே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆட்டோ ஓட்டுபவரிலிருந்து, கூலி வேலை செய்பவர் வரை கடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளை நல்ல கற்பித்தல் உள்ள பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைத்து தங்கள் பிள்ளைகளாவது தங்களை போல் துன்ப படாமல் உயர வேண்டும் என்றுதானே நினைக்கிறார்கள்..? அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்க கிரானைட் பதித்த , குளீருட்டபட்ட வகுப்பறைகளா வேண்டும் என்று கவுரம் பார்க்கிறார்கள்..? அவர்களுக்கு தேவை தங்கள் பிள்ளைகள் உலக மொழியை தெரிந்து கொள்ள வேண்டும், நிறைய மதிப்பெண்களோடு உயர் கல்வி கற்று நல்ல பணிக்கு செல்ல வேண்டும் என்பதுதானே எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதை நான் கண் கூடாக காண்கிறேன்.. எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் கடைகளுக்கு முறுக்கு, எல்லடை போட்டு பிழைக்கும் வறுமையான குடும்பம்.. உழைத்தால்தான் ஒவ்வொரு நாளுக்கான உணவு.. அவர்களுக்கு மணி மணியாய் இரண்டு பெண் குழந்தைகள். பெரிய பெண் குழந்தை அரசு பள்ளியில் படிக்கிறது. அந்த பெண் குழந்தை சொல்ல கேட்டிருக்கிறேன்.. “எங்க ஸ்கூல்ல சரியாவே சொல்லி தரமாட்டாங்க.. சில நேரங்கள்ல ஆசிரியர்கள் வகுப்பறைக்கே வருவதில்லை..” என்று சொல்லும். இரண்டாவது பெண் குழந்தை பிறக்கும் போதே ஞான குழந்தை.. எதை சொன்னாலும் நன்றாக பிடித்து கொள்ளும். வெள்ளி சதங்கைகள் சிந்தியது போல் அழகாக பேசும். பள்ளிக்கு செல்லும் முன்னே அழகாய் படிக்க ஆரம்பித்த இந்த குழந்தையையாவது நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அவர்கள் கஷ்ட பட்டு தனியார் பள்ளி ஒன்றில் படிக்க வைக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கூட இப்போது சாதாரணம்.. டீலக்ஸ்,.. சூப்பர் டீலக்ஸ் போன்ற வகைகள் உள்ளதே..! சில தனியார் பள்ளிகள் நடுத்தர மக்களுக்கான கட்டணத்துடன் இருக்கும். சில தனியார் பள்ளிகளின் காம்பவுண்டிற்குள் இலட்சங்களை வைத்து கொண்டுதான் எட்டி பார்க்க முடியும். நடுத்தர மக்கள் கட்டணத்துடன் இருக்கும் அந்த பள்ளிக்கே அவர்கள் சிரம பட்டு படிக்க வைக்கிறார்கள். அந்த குழந்தை நன்றாக படிக்கிறது.. நிறைய மதிப்பெண்களுடன் தான் வாங்கிய பரிசு சான்றிதழ்களை என்னிடம் காட்டி மகிழ்ந்தது. மூன்றாவது படிக்கும் அந்த பெண் குழந்தை சரியான கற்பித்தல் இருந்தால் நாளை ஒரு சரோஜினி நாயுடுவோ, கல்பனா சாவ்லாவாகவோ உருவாகலாம். ஆனால் அந்த குழந்தையை தனியார் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்க முடியுமா என்பது அவர்களின் கேள்விக்குறியாக உள்ளது. அந்த சின்ன குழந்தை வறுமையிலும் நல்ல பழக்கம் நாம் எதாவது கொடுத்தாலும் வாங்காது. தனியார் பள்ளியை நாடுவது கவுரவத்திற்கு என்ற முத்திரையை உடைக்கவே இந்த சான்று. சூப்பர் டீலக்ஸ் முத்திரை உள்ள தனியார் பள்ளிகளில் படிக்க அனுப்பும் வசதியான பெற்றோர்களும் அங்கு கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளதால்தான் அனுப்புகிறாகள்.வெறுமனே ஹைடெக் வசதி மட்டும் இருந்து கற்பித்தல் தரம் குறைவாக இருந்தால் அனுப்பமாட்டார்கள். ஆக, எங்கும் எதிர் பார்க்க படுவது கற்பித்தல் தரம் மட்டுமே…!
இந்த எதிர்பார்ப்பு ஏன் அரசு பள்ளிகளில் இல்லாமல் போய்விட்டது..? இன்று அரசு பள்ளிகளின் ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள்…? அரசு பள்ளியில் வேலை செய்து அதில் வரும் ஊதியத்தை மட்டும் பெருமையாக நினைக்கும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது கவுரம் பார்ப்பதாலா...?அல்லது அரசு பள்ளிகளில் சரியாக சொல்லி தருவதில்லை என்று நினைப்பதாலா..? இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லுங்களேன்..? ஒரு சில ஆசிரியர்கள் துவக்க பள்ளியில் சரியான வழிகாட்டல் கிடைப்பதில்லை அதனால்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம் என்று துவக்க பள்ளி ஆசிரியர்கள் மீது குறை சொல்கின்றனர். ஒரு சிலர் அப்போது தனியார் பள்ளிகள் நிறைய இல்லை அதனால் அரசு பள்ளியில் படிப்பதை தவிர வேறு வழியில்லாமல் இருந்தது என்கின்றனர். துவக்க பள்ளி ஆசிரியர்களை கேட்டால், ஆரம்ப பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒரு சின்ன வார்த்தையை கூட எழுத படிக்க வராத மக்கு பிள்ளைகளாகவே இருக்கின்றது. அதுவும் நாகரீகமே தெரியாத பிள்ளைகள். குளிப்பதில்லை… தலைசீவுவதில்லை அவர்களை மேய்ப்பதே பெரும்பாடாக உள்ளது எங்கின்றனர். ஆரம்ப பள்ளிகளின் கற்பித்தல் தரம் குறைந்த பின் ஏழை குழந்தைகள் மட்டுமே வரும் நிலையாகிவிட்டது. பின் எப்படி அவர்களிடம் புறத்தோற்ற அழகை எதிர்பார்க்க முடியும். நீங்கள் சொல்லி கொடுங்கள்.. சுகாதாரமாய் நேர்த்தியாய் வர. அதற்கு சலிக்காத மனமும், அன்பும் உங்களுக்கு தேவை. பிறக்கும் போதே எல்லா குழந்தைகளும் மக்கு பிள்ளைகளாகவா பிறக்கிறது..? சிறு குழந்தைகளுக்கு அடிப்படை அறிவை சொல்லி வருவதற்கு நிறைய முயற்சிதான் செய்ய வேண்டும். சிலர் துவக்க கல்வி முறை சரியில்லை என்றனர். அதற்காகதான் கல்வி முறையும் மாற்றி அமைக்கப்பட்டு, மாணவர்கள் தாமாகவே கற்றுக் கொள்ளும், செயல்வழிக் கற்றல் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டது ஆனால் எதை பதிலாக சொன்னாலும் ஆசிரியர் கற்பித்தல் முறைதான் முன் நிற்கிறது.
முன் காலங்களில் அரசு ஆசிரியர் பணிக்கு அத்தனை ஊதியம் கிடையாது.. ஆனாலும் அரசு பள்ளிகள் பாகுபாடு இல்லாமல் அனைவர்க்கும் கல்வி கூடங்களாக இருந்தது. ஆசிரியர்கள் – மாணவர்கள் உறவில் பக்தி, மரியாதை இருந்தது. ஆசிரியர் பணி புனிதமான பணியாக இருந்தது. இப்போது அரசு ஆசிரியர்களின் ஊதியம்தான் உயர்ந்திருக்கிறது… ஆனால் பள்ளிகள் உயரவில்லை. ஆசிரியர் பயிற்சி என்பது வேலை வாய்ப்பு அதிகம், நல்ல ஊதியம் என்றுதானே ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருக்கிறார்கள். நடந்து முடிந்த ஆசிரியர் பணிக்கான தேர்வின் ரிசல்ட்டை பார்த்தாலே தெரிகிறதே எத்தனை பேருக்கு கற்பித்தலுக்கான தகுதி இருக்கிறது என்று..! தங்கள் வாழ்க்கையில் வசதி வாய்ப்புக்களை பெருக்கி கொள்ளும் பணியாகவே ஆசிரியர் பணி இப்போது ஆகிவிட்டது. அரசு பள்ளிகளில் சம்பாதிப்பதோடு மட்டுமில்லாமல், காலை.. மாலை இருவேளையும்.. நான்கு பேட்ச்சாவது ட்யூஷன் வேறு நடத்தி வருமானம் பார்க்கின்றனர். இப்பொதெல்லாம் பைனான்ஸ், ரியல் எஸ்டேட் இந்த பிஸினெஸ்களில் வளைத்து போடுவது நிறைய ஆசிரியர்கள்தான்.
நான் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை குறை கூறும் நோக்கத்தோடு இந்த கட்டுரையை எழுதவில்லை. விதிவிலக்காக நல்ல கற்பித்தல் அக்கறையோடு செயல் படும் அரசு ஆசிரியர்களும், அரசு பள்ளிகளும் இருப்பதை நான் மறுக்கவில்லை. நாம் எடுத்து கொள்வது பெரும்பான்மையான பள்ளிகளை. ஏன் மற்ற துறைகளில் அக்கறையில்லாத ஊழியர்கள் நிறைய இல்லையா எங்களை மட்டும் ஏன் சொல்கிறீர்கள் என்று கோபப்படலாம். ஆனால் ஆசிரியர் பணி புனிதமான பணி.. உங்களிடம் ஒப்படைப்பது ஒவ்வொரு மாணவனின் எதிர்காலம். பணியை பொருளாதாரமாக பார்ப்பவர்கள் வேறு பணியை எடுத்துக்கொள்ளலாமே. என் அப்பா அரசு பள்ளி ஆசிரியராக பணி ஆற்றி ஓய்வு பெற்றவர். அப்போது அரசு ஆசிரியர்களுக்கு நிறைய ஊதியம் கிடையாது. இப்போது அவர் வாங்கும் பென்ஷன் கூட கை நிறைய கிடைக்கிறது.. பணி செய்யும் போது கிடைத்ததை விட..! பணியில் அவர் சம்பாதித்தது நல்ல மாணாக்கர்களைதான். எங்களையும் அரசு பள்ளிகளில் தான் படிக்க வைத்தார். ஆனால் என் பெண்ணை என்னால் அரசு பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை.. இதற்கு காரணம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் முறையில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்று குறைபாட்டினால்தான். எங்கள் பள்ளியில் எல்லா பாடங்களுமே சரியான கற்பித்தல் அக்கறையோடு
ஆசிரியர்கள் செயல் படுகிறார்கள் என்று எல்லா அரசு பள்ளிகளுமே செயல் பட வேண்டும். கல்வி முறை, கற்பித்தல் அக்கறை, பள்ளியின் தூய்மையான சூழ் நிலை இவையெல்லாம் இருந்தால்தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரும். தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் குறையும். கல்வி வியாபாரமாவதை தடுக்க முடியும். அது வரை இலவசங்களுக்காக மட்டுமே வரும் ஏழைகளின் கூடங்களாக மட்டுமே அரசு பள்ளிகள் இருக்கும்.