எறும்பு கற்று தந்த பாடம்
வீட்டை சுற்றி வெளியில் தூய்மை செய்து கொண்டிருந்தேன்.. சுவர் ஓரமாக எறும்புகள் வரிசையாக போய் கொண்டிருந்தது. கண்ணுக்கு புலப்படாத அளவு அதற்கு தேவையான தீனியை யானையை சுமப்பது போல பிரயத்தனப்பட்டு சென்று கொண்டிருந்தது. பார்ப்பதற்கு ஒரு தொழிற்சாலையில் பொருட்களை லோடு ஏற்ற பணியாளர்கள் வரிசையாக தலையில் சுமந்து செல்லுவதை போல இருந்தது. சுமையை கூட சுறு சுறுப்பாய் சுமந்து கொண்டிருந்த அந்த கூட்டத்தை கலைக்க மனமில்லாமல் பார்த்து கொண்டிருந்தேன்.. ஓரறிவு உள்ள உயிர்க்கு கூட எத்தனை விழிப்புணர்வு மழைக்கு முன் தன் உணவை சேகரித்து பாதுக்காப்பான வழி தேடுகிறதே..? ஆறறிவு உள்ள நாம் மழையை சேகரிக்க விழிப்பாய் இருக்கிறோமா என்று கேள்வி எழுந்தது.
அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஒவ்வொருவரும் கட்டாயமாக மழைநீர் சேமிப்புக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும். புது வீடுகள் கட்ட முனைவோர் அவர் செய்யப் போகும் மழை நீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை வரைபடத்தில் காட்டினால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அந்த உத்தரவுகள் வந்த உடன் அவசர அவசரமாக பொது மக்கள் மண்ணில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதற்குள் நான்கு கற்களைப் போட்டு வீட்டுக் கூரைகளிலிருந்து வரும் மழை நீர்க் குழாய்களை அதற்குள் விட்டு மூடிவிட்டார்கள். ஒரு நல்ல மழை பெய்த உடன் மூடியிருந்த பள்ளத்தைத் திறந்து கொண்டு மீண்டும் மழை நீர் சாக்கடைகளைத்தான் சென்றடைந்தது.
இப்போது மழை நீர் சேகரிப்பை எத்தனை சதவிகித மக்கள் ஒழுங்காகக் கடைபிடிக்கிறார்கள்? சட்டம் வரும்போது பரபரப்பாக சில நாட்கள் கடைபிடிக்கப் படுகிறது. நாளாக.. நாளாக மக்களும், அதிகாரிகளும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். ‘நீரின்றி அமையாது உலகு ‘ என்று தெரிந்து கொண்டும் தவறு செய்கிறோம். இல்லாத போது தண்ணீருக்காக போராட்டம் நடத்தும் மக்கள் மழை வரும்போது நீரை சேகரிக்க விழிப்பாக இருப்பதில்லையே..? ஏற்கனவே இருளில் மூழ்கி கொண்டிருக்கிறோம். நீரும் இல்லாமல் போனால் நாம் வசிக்கும் இடங்கள் பாலைவனமாக மாறிவிடும். இயற்கை அன்னை இன்னமும் கருணை காட்டுவதால்தான் பருவ மழை எட்டிப் பார்க்கிறது. நீரின் அவசியத்தை புரிந்து இனியாவது மழை நீர் சேகரிப்பை அவசியமாய் கடைபிடிப்போம்..!