எனக்கு
கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கு! நம் சக்திக்கும் அப்பாற்பட்ட அந்த இறையருளில் நம்பிக்கை
வைத்து நேர்மையான வழியில் செல்லும் போது மனதில்
ஒரு நிறைவை உணர முடிகிறது. ஆனால் சில மூட நம்பிக்கைகளில் எனக்கு
விருப்பமில்லை.. ஒரு செயலை செய்யும் போது அதில் வெற்றி, தோல்வி சகஜம் இதற்கு நேரம்
என்ன செய்யும்? நல்ல நேரம், கெட்ட நேரம் என்று
நேரத்தின் மீது குற்றம் சாட்டுவது ஏன்? நேரமோ, வசிக்கும் இருப்பிடமோ நம் வெற்றி,
தோல்விகளுக்கு எப்படி காரணமாகும்? வாஸ்து வாஸ்துங்கிறாங்களே அது படுத்தும் பாடு இருக்கே....
என்
தோழி ஒருவர் நல்ல மெயினான இடத்தில் பெரிய காம்ப்ளக்ஸ்
சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அதில் வீடு, அலுவலகம், 5 கடை என்று அடங்கும். என்
தோழியும் அவரது கணவரும் நின்றால், திரும்பினால் கூட வாஸ்த்தும், நேரமும் பார்ப்பவர்கள்.
நேரம் சரியில்லை என்று எப்போதும் புலம்புவார்கள். ஒவ்வொரு வாஸ்து நிபுணராக கூட்டி வந்து காண்பித்து பில்டிங் அமைப்பை
இப்படியும், அப்படியும் மாற்றினார்கள். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் மாற்றம் வராததால்
அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு சென்று விடலாம் என்று வேறு ஒரு வீடு வாங்குவது
என்று புதிய வீட்டை வாங்க தேடினார்கள். பார்க்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் இது சரியில்லை
அது சரியில்லை என்று நிராகரித்தார்கள். அவசரமாக இருக்கும் வீட்டை காலி செய்து வாடகை
வீட்டிற்காவது சென்று அங்கிருந்து ஒரு ஆறேழு மாதத்திற்குள்ளாவது நல்ல வீடு அமையுமா
என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
நான் என் தோழியிடம் சொன்னேன், சாண் இடம்
என்றாலும் சொந்த வீட்டில் இருக்கும் சுதந்திரம் வாடகை வீட்டில் கிடைக்காது... அவசரப்பட்டு
பிறகு வருத்த பட வேண்டாம், அதுவும் சொந்த வீட்டில் இருந்து பழகி விட்டு வாடகை வீட்டிற்கு
செல்லும் போது ஹவுஸ் ஓனர் எதாவது சொன்னால் உங்களால் பொறுத்து கொள்ள முடியாது என்றேன்.
அப்படியும் அவர்கள் கேட்கவில்லை. இருக்கும்
வீட்டை காலி பண்ணி வெளியில் வந்தால்தான் மாற்றம் வரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.
சரி நட்பிற்காக என் வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டை பார்த்து கொடுத்தேன். வாடகைக்கு
வந்தார்கள். அந்த வாடகை வீட்டிற்கும் வாஸ்த்து பார்த்து இரண்டு மூன்று ஜோதிடரை கேட்டுவிட்டுதான்
வந்தார்கள். பத்து நாட்களுக்குள்ளேயே பிரச்சினை ஆரம்பித்து விட்டது. ஹவுஸ் ஓனர் தண்ணீர்
விடுவதில் கண்டிப்பு காட்டினார். அவர்கள் தண்ணீர் நிறைய செலவழிப்பதாக புகார். வீட்டில்
சின்ன ஆணி அடித்தாலும் ரகளை. வீட்டை இப்படி வைத்திருக்கிறார்கள் அப்படி வைத்திருக்கிறார்கள்
என்று குறை. (ஹவுஸ் ஓனர் வெளியூரில் இருக்கும்படியான வாடகை வீட்டை பிடித்தால் பிரச்சினை
இல்லை) வெளியில் வந்து விட்டோம் ஒரு வருடமாவது
தாக்கு பிடிக்கலாம் என்று தோழி குடும்பத்தினர்
நினைத்தனர். ஆனாலும் பிரச்சினை ஏ.ஸி வடிவத்தில் வந்துவிட்டது. இங்கு வெயிலுக்கு ஏ.ஸி இல்லாமல் இருக்க முடியாது. இவர்களுக்கு சௌகர்யமான இடத்தில் ஏ.ஸி பொருத்தி கொள்ள
ஹவுஸ் ஓனர் மறுத்துவிட்டார். தோழி குடும்பத்தினரால் ஐந்து மாதம் கூட தாக்கு பிடிக்க
முடியவில்லை... மீண்டும் அவர்கள் சொந்த வீட்டிற்கே சென்று விட்டார்கள். இடையில் நான்
தான் மாட்டிக்கொண்டேன்... இப்படி ஒரு வீட்டை நீ காண்பித்தாயே என்று தோழியும், இப்படி
ஒரு ஆட்களை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து காண்பித்தீர்களே என்று ஹவுஸ் ஓனரும் ஆளாளுக்கு
திட்டி கொண்டிருந்தார்கள். நல்லது செய்ய போனா இதெல்லாம் சகஜம்தான்.. நாமதான் திட்டினாலும்
சரி பாரட்டினாலும் சரி பெரிசா எடுத்துக்காத ஆளாச்சே!
சரி விஷயத்திற்கு வருகிறேன்.. அவர்கள்
மாற்றம் வீட்டினால்தான் வரும் என்று நினைத்ததால் இந்த ஐந்து மாதத்தில் ஏற்பட்டது நஷ்டங்கள்தான்.
பொருளை மாற்றி வந்து போனதில் ஐம்பதாயிரம் ரூபாய்தான் செலவழிந்தது. மேலும் ஏகப்பட்ட
மன உளைச்சல்...! இப்போது அவர்கள் வீட்டிற்கே
சென்று போதும்டா என்று இருக்கிறார்கள். ஆனாலும்
திருப்தி இல்லை.. இன்னும் வேறு புதிய வீடு வாங்க பார்த்து கொண்டே இருக்கிறார்கள்.
இருக்கும் இன்னொரு காலி மனையில் வீடு கட்டவும் வாஸ்து எதோ இடிக்கிறதாம். இப்படி நம்பிக்கைகளில்(?) புலம்பி புலம்பி உருப்படியாய்
எதுவும் செய்வதில்லை.
காற்றோட்டம்,
வெளிச்சமும் உள்ளவாறு வீடு இருப்பது நல்லது. மற்றபடி வீடு மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றுமா? நூறு சதவீதம் வாஸ்த்து படி ஒரு வீட்டை அமைத்து அதில்
பேசாமல் உட்கார்ந்து கொண்டால் வருமானம் தானாக வந்து விடுமா?
‘மைக்’க
புடிங்க.. நீங்க நினைக்கிறதை சொல்லுங்க...
இருங்க...
என் கணவர் எதோ புலம்பி கொண்டிருக்கிறார் என்னன்னு கேட்டுட்டு வர்றேன்...
“
என்ன(டா) தனியா புலம்பிட்டிருக்கே...?” ( என்
கணவன் என் தோழன் பா..!)
“இல்ல..
உங்க சித்தப்பன் வீட்டு கல்யாணத்துல கொடுத்தாங்களே ஒரு’ வீணா போன’ சட்டை அதை ‘போனா
போவுது’ன்னு லீவு நாள்லயாவது போட்டு தொலைக்கலாம்னு டெய்லர் கிட்ட தைக்க தந்தேனா......
“
போதும் நிறுத்துங்க.. உங்க மாமா வீட்டு கல்யாணத்துல
மட்டும் என்ன காஞ்சி பட்டா கொடுத்துட்டாங்க..?
கஞ்ச பரம்பரைங்க... அந்த பொடவை ஒரே தண்ணியில பொசுக்குன்னு கர்ச்சீப் மாதிரி
சுருங்கி போச்சி... “
“
ம்.. எங்க ஸைடு எவ்வளவு சொந்தம் இருக்கு... ஒரு ஊருக்கே எடுக்கிறா மாதிரி இல்ல எடுத்தாரு
மாமா... அத்தனைக்கும் காஞ்சி பட்டா எடுக்க முடியும்? அப்புறம் ‘அம்பானியா ‘இருந்தாலும்
‘அன்ன காவடியா’.. ஆவ வேண்டியதுதான்...”
..............
சரி சரி அதை விடு அந்த சட்டையை போன தீபாவளியப்ப டைலர் கிட்ட தந்திருந்தேன். இந்த வருஷம் தீபாவளியே வந்துடும் போலிருக்கு
... இன்னும் தைக்கிறான். தைக்கலைன்னாலும் பரவாயில்ல சட்டைத்துணியாவது கொடுத்திருடான்னு
திட்டினப்பறம் இன்னிக்குதான் தைச்சி தந்தான்.
இத பாரு...
“
என்னங்க இது ஷர்ட் பாக்கெட் முன்பக்கம் இல்லாம முதுகு பக்கம் வச்சிட்டிருக்கான்..?”
“
அவசரத்துல அப்படி தைச்சிட்டிருக்கான்... கேட்டா “ வாஸ்து படி பாக்கெட் முதுகு பக்கம்தான்
வைக்கனும்கிறான்...!!
-----------------------------------
பி.கு:
(அட மவுஸ்ல கூட இவ்வளவு அழகா ஓவியம் வரைவியா உஷா... குட்... குட்...! .. இப்படி எல்லாம் பாராட்டாதீங்க ப்ளீஸ்..!)