Monday 29 July 2013

என் பார்வையில் காதல்...!



சகோதரர் சீனு அவங்க காதல் கடிதம் போட்டி வச்சதும் குவிந்துதான் போனது காதல் கடிதங்கள்.. !நானும் எல்லா கடிதங்களையும் எட்டி பார்த்தேன். ஒவ்வொருவரும் அழகாய், ஆழமாய், நகைச்சுவையாய்  ஒவ்வொரு விதமாய் காதலை சொல்லியிருந்ததை மிகவும்  ரசித்தேன்!

 பாமரனாயிருந்தாலும் குமார் என்ற பாத்திரம் மூலம் உண்மையான காதலை சொல்லியிருந்தார் சகோதரர் முரளி அவர்கள். பாராட்டுதலுக்கும், பரிசுக்கும் உரியது -

ரைட்.. இப்ப நானும் என் பார்வையை பதிக்கிறேன்.
  
காதல் எதுவாக இருக்க முடியும்? காதல் எப்படி பயணிக்கிறது..?

ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் எதோ ஈர்ப்பில் வருகிறதை காதல் என்று எடுத்து கொள்ள முடியுமா? அப்படி வரும் காதல் எவ்வளவு தூரம் பயணிக்கிறது..?

ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடிக்கிறது... காதலிக்கிறான்... அந்த பெண் விரும்பாத போது அந்த காதலை விட்டு இன்னொருத்தியை நேசிக்க முயல்வதற்கும் இங்கு காதல் என்றுதானே சொல்லி கொண்டிருக்கிறார்கள்...? (இந்த எடுத்து காட்டு பெண்ணிற்கும்தான்...)

இருவருமே நேசித்து சூழலால் பிரியும் போது மனதுக்குள் புதைத்து வைத்துள்ள நினைவுகளுக்கும்” காதல் “என்று பெயரிட்டு தோல்வியிலும் காதலை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்...! எவ்வளவு காலங்களுக்கு அந்த தோல்வி கொண்டாடப்படும்?

காதல் தற்கொலைகள்  நிதானத்தில், புரிதலில் எடுக்கப்படுவதில்லை. அது ஒரு சம்பவமாக முடிந்து விடும். அதனால் இவற்றையும் நான் எடுத்து கொள்ளவில்லை.

இருவருமே காதலிப்பார்கள்.. ஆனால் சந்தர்ப்பத்தில் வேறு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுவிடுவார்கள்.. சில காலங்களுக்கு பிறகு அந்த இருவரின் மனதிலுமே அவரவர் இருக்கமாட்டார்கள்... அங்கே திருமண உறவுதான் நிலைத்து கொண்டிருக்கும்... இங்கு எது காதல்?

அப்ப உண்மையான காதல் எங்கு நிலைக்கிறது...?

என்னை பொறுத்தவரை நிச்சயம் கணவன்- மனைவி என்ற உறவுக்குள்ளத்தான் உண்மையான காதல் இருக்கு! அது காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களா இருக்கட்டும்... அல்லது  நிச்சயிக்கப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களா இருக்கட்டும்... உயிரின் கடைசி வரை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான  நேசம் கணவன்-மனைவி உறவுக்குள்ள மட்டும்தான்  நிலைக்குது.

இரண்டு விதமான திருமணங்கள்லயும் திருமணத்திற்கு பிறகு விரிசல் உண்டாகி பிரியறவங்களும் இருக்காங்க... இதில் அவங்க கிட்ட  பரஸ்பரம் உண்மையான நேசம் இல்லை... அது காதலாகாது.

யார் வேணும்னாலும் அவங்க மனசை தொட்டு சொல்லுங்க... உங்களுக்கு சுமாரான அழகுடைய மனைவியாகவோ, கணவனாகவோ கூட இருக்கட்டும் ... உங்க வாழ்க்கையின் வெகு மதிப்பிலும், அன்பிலும் அவர்களுக்குத்தானே  முதலிடம்?

பணம் வேணும் பொருள் வேணும்னு வாழ்க்கையில் ஓடிட்டிருந்தாலும், கணவனுக்கோ, மனைவிக்கோ  கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிட்டா கூட என்ன நினைக்கிறோம்..? கடவுளே எதுவும் வேண்டாம் ‘அவ இருந்தா எனக்கு போதும்’.. என்று கணவனும், ‘அவர் இருந்தா எனக்கு அது போதும்னு’... என்று மனைவியும் நினைக்கிறாங்களே  நம்ம இந்திய குடும்பங்கள்ல! இந்த நேசித்தலைத்தான் உண்மையான காதல் என்று சொல்வேன்!

அழகோ, அந்தஸ்தோ கடைசி வரை பயணிப்பதில்லை...  அன்பான புரிதல் மட்டுமே உண்மையே காதல்.. அந்த காதல் கணவன், மனைவிக்குள்ள மட்டும்தான் கடைசி வரை பயணிக்கும்.  இது பாமரனிலிருந்து படித்தவர் வரை உணர்கிறார்கள்தானே!

இந்த உணர்வுகளில் நீந்தும் ஒவ்வொரு கணவன், மனைவியும் சரித்திரம் சொல்லாத காதலர்தான்!

இப்படி காதலோடு வாழும் ஒரு கணவன் தன் 80 வயதுக்கு மேல் கடைசி தருணங்களில் தன் மனைவிக்கு எழுதின ஒரு காதல் கடிதத்தை  கற்பனையா சொல்லியிருக்கிறேன்...

( எனக்கு இன்றுதான் நேரம் கிடைத்ததால் இது போட்டிக்கு என்று இல்லைன்னாலும்.... பார்வைக்கு..! )

என் ஆருயிர் கண்ணம்மா,

என் மனசு ஒரு மூலையில் உட்கார்ந்திட்டு ஓ..ன்னு அழுகுது... நான் நினைக்கறதை எல்லாம் உங்கிட்ட வாய் திறந்து சொல்ல முடியல... மனசுக்குள்ள கடிதமாத்தான் எழுதிகிட்டிருக்கேன்... 

ஒரு கடிதம் கூட எழுதாமதான் நம்ம காதல் தொடங்குச்சி...

நான் உன்ன முதன் முதல்ல பார்த்தது, பேசினது இன்னிக்கும் ஞாபகம் இருக்கு... “ என்னை பிடிச்சிருக்கா?” நான் கேட்ட முதல் வார்த்தையே அதான்...  நான் இப்படி நேரிடையா கேட்டவுடனே திணறிப்போனே... வாய் திறந்து சொல்லாம உன் தலையசைப்புலதான் சம்மதம் சொன்ன... !

எத்தன வருஷ காதல் இது...    நம்ம அன்புக்கு சாட்சியா  நீ வயித்துல சுமந்துகிட்டு இருக்கறப்ப என்னை பார்த்து கேட்ட... என்ன குழந்தை வேணும்னு...? நான் பையன் வேணுமின்னு.... சொன்னேன்.  நீயோ பொண்ணுதான்னு சொன்ன...! மத்தவங்க ஏன்னு காரணம் கேட்டப்ப...  நான் சொன்னேன்... “பையனுங்கதான் அம்மா மேல ப்ரியமா இருக்கும் எம் மேல ப்ரியமா இருக்கிற பொண்ணை விட என் கண்ணம்மா மேல் ப்ரியமா இருக்கிற பையன்தான் வேணும்னேன்”...

நீயோ ,  “இல்ல.. இல்ல.. உங்க மேல ப்ரியமா இருக்கிற பொண்ணுதான் வேணும்னு..”! பிடிவாதம் பிடிச்ச...

 நம்ம ரெண்டு பேரு பிடிவாதமும் கடவுளுக்கு பிடிச்சிடுச்சோ என்னவோ...  ரெண்டையும் சுமக்க வச்சிட்டான்.  ரெட்டை புள்ளைய சொமந்து நீ பெத்தெடுக்கிற வரை நீ பட்ட அவஸ்தையை  நான் சுமக்காமலே பட்டேன்மா..

தேவைக்கு சம்பாதிச்சோம்... ஆனா தேவைதான் பெரிசுன்னு நீயோ நானோ ஓடியதில்லை.. நீ.. நான் ... நம்ம குழந்தைகள் – ன்னு ஒரு நந்தவனமா இருந்துச்சி நம்ம வீடு!  காலண்டர் கிழிச்சி காலம் ஓடுனதில... நம்ம பசங்களுக்கும் கல்யாணமாகி பேரன் பேத்தின்னு இங்க உட்காந்திட்டிருக்கறதை பார்க்கும் போது நம்ம காதலுக்கு இத்தனை வயசான்னு பிரமிப்பா இருக்கு...!

 நான் வேலையிலர்ந்து ரிடையர்டு ஆயிட்ட பிறகும் நம்ம வாழ்க்கை இரண்டாவது இன்னிங்ஸா இல்ல இருந்துச்சி...! பிள்ளைங்க வேற வேற ஊர்ல.. நாம ரெண்டு பேர் மட்டும்தான் இங்க.. ஒவ்வொரு வேளையும் சேர்ந்தேதான் சாப்பிட்டோம், சேர்ந்தேதான் வெளியில் போனோம்.. வந்தோம். மணிக்கணக்கா கதை அளந்தோம்.. ! வாழ்க்கையில் இன்பம், துன்பம் எவ்வளவோ வந்தது... எல்லாம் கடந்தும் மிச்சம்  நமக்கே நமக்காய் இன்று வரை பெரிதாய் இருப்பது நமக்குள் இருக்கும் பரஸ்பர காதல்தானே! உனக்கு நான்.. எனக்கு நீன்னு ஒவ்வொரு நாளும் காதலை சுமந்து..வலியை பகிர்ந்து.....

ஏனோ ஒரு மாதமாய் நான் விழுந்து கிடக்கிறேன். என்னால் அதிகமாய் பேச முடியவில்லை.  என்னை பார்த்து பார்த்து நீ தோய்ந்து கிடக்கிறாய்..   ஒரு வாய் சோறும் கூட இறங்காமல் துவண்டு கிடக்கிறாய் ...!  யார் யாரோ வருகிறார்கள் உனக்கு ஆறுதல் கூறுகிறார்கள் வயசானா இப்படித்தான்... நீயும் சாப்பிடாம இருந்து உடம்பை கெடுத்துக்காத.. போய் சாப்பிடு அம்மா... என்கிறார்கள்.

வயசானால் என்ன என் கணவன் எனக்கு வேணும்... கடவுளே என்னிடமிருந்து பிரிச்சிடாதே..எனக்கு தெரியாமல் அழுகின்றாய்..  நடு நிசியெல்லாம் எழுந்து என்னை அசைத்து பார்க்கிறாய்...  !

 உன் மனசெல்லாம்.. எங்கிட்டயும்... என் மனசெல்லாம் உங்கிட்டயும்தானிருக்கு.. !எனக்கு தெரியும் கண்ணம்மா...  நான் இல்லாத ஒரு நாளை கூட  உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது...! உன்னை பரிதவிக்க விடக்கூடாதுன்னுதான் என் மனசும் அழுதுகிட்டிருக்கு.... சொந்தக்காரங்க.... பசங்க.. பேரப்பசங்க எல்லாம் இப்ப சுத்தி இருக்காங்க... நான் இல்லைங்கிற வருத்தம் சொந்தக்காரங்களுக்கு ஒரு நாளும்... நம்ம பசங்களுக்கு பத்து நாளும் இருக்கும்.. ஆனா உனக்கு உசிரு இருக்கறவரைக்கும்.. என்ன பண்ணுவேன்? காலம் எல்லாத்துக்கும்தான் விடை கொடுக்குதே தாயி..நிறைஞ்ச மனசா வழியனுப்பும்மா..  நான் மனசால உங்கூடவேத்தான் இருப்பேன்.. எப்பவும் கேட்பியே ஒரு வாட்டி’ டி ‘போடமாட்டியா...ன்னு கடைசியா அதையும் நிறைவேத்திடறேன். !  நீ நாம காதலிச்ச நாட்களின் நினைவுகளோட எப்பவும் சந்தோஷமா தைரியமா உன் மிச்ச நாட்களையும் கழிப்பேன்னு ஒரு வாக்கு கொடுடி.. என் கண்ணம்மா..! கிடந்து துடிக்கிற உசிரு நிம்மதியா போவுமடி..!

என்றும் உன் பாரதி..!
*****************************
உறவுகளை தருவது காதல்..! உணர்வுகளை தருவது காதல்..!!  காதல் என்றும் வாழும்...!