Monday, 19 August 2013

(தமிழ்) மணம் வீசும் மலர்வதியுடன் உரையாடல்...


மலர்வதி-  சமீப  நாட்களாய் பர பரப்பாய் பேசப்படுகிற சாகித்ய அகாடமி பெற்ற இளம் எழுத்தாளர். பொழுது போக்கு படைப்புகளுக்கிடையே, சமூக அவலங்களை அறைந்து சொல்லிக்கொண்டிருப்பவர். “தூப்புக்காரி “... நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை மற்றவர்கள் சொல்ல கேட்டு  எனக்கு அந்த நாவலை படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், அதோடு மலர்வதியை தொடர்பு கொண்டு பாராட்டியே ஆக வேண்டும் துடிப்பும் இருந்தது. 

நாவலை படித்து விட்டுத்தான் மலர்வதியுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தேன். வேலூரில் தூப்புக்காரி நாவல் கிடைக்காததால் தபாலில் பெற கேட்டுவிட்டு, மலர்வதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.  நாகர் கோவில் வட்டார தமிழில் அழகாக பேச தொடங்கினார். 

ஏறக்குறைய நாற்பது நிமிடம் பேசினோம். ஒரே வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் அழகு தமிழில் அவர் பேசிய போது அசந்துதான் போனேன். தமிழ் இத்தனை அழகா என்று ஆங்கிலம் கலக்காமல் பேசும்போதும், பேசுவதை கேட்கும் போது உணர முடிகிறது. எனக்கே கூட கொஞ்சம் வெட்கமாகி விட்டது. கலப்பிடமின்றி அழகு தமிழில் பேச நானும் முயற்சிக்க வேண்டும் என்றே நினைத்தேன்.

அவர் முதல் நூல் “ காத்திருந்த கருப்பாயி” என்று தெரிவித்தார். சமூகம் பெண்களை அழகு பொருளாகவே பார்க்கும் கண்ணோட்டத்தில்... பெண்ணின் நிறம், அழகு சார்ந்த தாக்கங்களை அந்த நாவலில் வெளிப்படுத்தி இருப்பதாக சொன்னார். அவருக்கு இயல்பாக இருப்பதே பிடிக்குமாம். பத்திரிக்கை புகைப்படத்திற்காக கொஞ்சம் அழகு படுத்தி கொள்ள சொன்னாலும் மாட்டாராம். எங்கு போனாலும் இயல்பாய்தான் செல்வாராம். அழகு படுத்திக் கொண்டால் அது கலைந்து விடுமோ என்று அது மேல்தான் கவனம் இருக்கும் ... பெண் இயல்பாய் இருந்தால் போதும் என்றார்.

 திருமணம் போன்ற விசேஷங்களுக்கு  பெரும்பாலும் ஆண்கள் இயல்பாய் போய்விடுகிறார்கள். பெண்கள்  நடமாடும் நகை கடையாகத்தான் செல்கிறார்கள் ... ஆபரணங்களை அணியும் போதுதான் பெண் அழகாகிறாள் என்ற நிலமை எல்லாம் மாறுமா? இதுதான் அழகு என்று அளவு கோல் வைத்தது யார்? பெண்கள் ‘அழகு’ பற்றிய சமூகத்தின் கண்ணோட்டத்தை முழுவதுமாக மாற்ற முடியுமா? என்றேன்.

உங்கள் குழந்தைகளை ஆபரணங்களை போட்டு அழகு என்று சொல்லாமல் இயல்பாக வளருங்கள். அப்போது அந்த பார்வை கொஞ்ச கொஞ்சமாக மாறும் . மீடியாவிற்கு வேண்டுமானால் அழகு தேவைப்படுவதாக இருந்துவிட்டு போகட்டும் நமக்கு அது தேவை இல்லையே...? தூப்புக்காரி நாவலில் கூட கதை நாயகியின் கண் இப்படி... மூக்கு இப்படி ...என்று எந்த வர்ணனையையும்  நான் வைக்கவில்லை என்றார்.

நானும் சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறேன் நாவல் முயற்சித்ததில்லை என்றேன்.

மலர்வதியும் கவிதைகள் எழுதுவாராம். வளர் இளம் பருவத்திலேயே எழுத தொடங்கி விட்டாராம்.  நாடகங்கள் அதிகமாய் எழுதுவாராம்.  வீதி நாடகங்கள், பள்ளி நாடகங்கள் என எழுத்தும், இயக்கமும் இருக்குமாம். குறிப்பிட்ட காலங்கள் எழுதி எழுதி பெட்டிக்குள்ளேயே வைத்திருந்தாராம்.  பொழுது போக்கு படைப்புகளில் அவருக்கு ஆர்வம் இல்லையாம். அவர் எழுத்தின் தாக்கம் சமூக மாற்றத்திற்கு ஒரு துளியேனும் வித்திட வேண்டும் என்றுதான் அவர் குறிக்கோளாம்.

தூப்புக்காரி நாவலை படித்து விட்டு துப்புறவு தொழிளாளரை நாங்கள் இப்போது மனிதராய் மதித்து நடக்கிறோம் என்று நிறைய பேர் சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறதாம். அடுத்த நாவலும் சமுதாய் சிந்தனைகளை ஒட்டி எழுதிகொண்டிருக்கிறாராம்.  சமுதாயத்தில் கவனிப்பாரற்ற மனிதர்கள்தான் என் படைப்புகளின் பேசு பொருளாக இருப்பார்கள் என்றார்.

பெண் என்ற விமர்சனங்களை தாண்டி திறமை இருந்தால் தானாக வெளி வர முடியும் என்றார்.  இவர் எழுத்துக்கள் செம்மை பட பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகிய எழுத்தாளர்கள் ஊக்குவிப்பதாக சொன்னார். சாகித்ய அகாடமி அவருக்கு நல்ல அங்கீகாரம் கொடுத்திருக்கிறது என்றார். இப்போது பல ஊர்களில் கல்லூரிகளில் பேச அழைக்கின்றனராம். பெண்ணியம் பற்றிய அழகான கருத்துக்களை சொல்லும் இவர் நல்ல எழுத்தாளர் மட்டுமில்லை... நல்ல பேச்சாளராகவும் இருக்கிறார்.

ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்ததாம். வாழ்க்கை இலக்கியத்தை வாசித்த இவருக்கு ஏட்டு படிப்பு பெரிய விஷயமில்லை என்றே உணர்ந்தேன். தமிழில் தட்டச்சு தெரியுமாம். இன்னும் இணைய பக்கம் வரவில்லை என்றார். முடிந்தவர்கள் யாரேனும் கணிணி ஒன்று அளித்து உதவினால் நன்றாக இருக்கும் தெரிவித்தார்.

அவர் கடைசியாக சொன்னது சுட்டது. பெண்களே பெண்களை ஏற்றுக்கொள்வதில்லை... நான் விருது பெற்றதும் எத்தனையெத்தனை ஆண்கள் முன் வந்து வாழ்த்துக்கிறார்கள்... சில பெண்களிடமிருந்தே எனக்கு வாழ்த்து கிடைத்தது. அந்த வகையில் உஷா என்னை பாராட்டியதற்கு மிக நன்றி ! அடுத்த மாதம் கோவையில் ஒரு கல்லூரியில் பேச போகிறேன்... நேரம் கிடைக்கும் போது மீண்டும் பேசுவோம் என்றார்.

பெண்களே சக தோழியை பாராட்டி வாழ்த்துங்கள்..!