Saturday, 31 August 2013

இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லால்லே- ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..









கணவர் வெளியூருக்கு சென்றிருந்தார். ஹர்ஷி குட்டியும் தூங்கி கொண்டிருந்தது.. தியா மெதுவாகத்தான் எழுந்தாள்.   டிபன் செய்ய சோம்பலாக இருந்தது. காபியை குடித்து விட்டு ஒரு வழியாக சமைக்கலாம்.  ப்ரிட்ஜிலிருந்து இரு நூறு பாலை எடுத்து குக்கரில் ஊற்றி கொதிக்க வைத்தாள் . காபி கோப்பையுடன் வந்தவள் நேற்று படித்து முடிக்காமல் வைத்த நாவலின் இரு நூறாவது பக்கத்தை புரட்டினாள். புத்தகம் முடிந்ததும் மதியம் சமையலுக்கு வெஜிடேபிள் ரைஸ் செய்து கொள்ளலாம் . . அதற்குள் ஹர்ஷியும் எழுந்து விடும்.. அவளுக்கு எதுவும் கலர்புல்லா இருந்தாத்தான் பிடிக்கும். இரு நூறு கிராம் கேரட், இரு நூறு கிராம் பீன்ஸ், இரு நூறு கிராம் பட்டாணி இன்னும் கொஞ்சம் காய்கறி கலவைகளை இரு நூறு கிராம் அளவுக்கு எடுத்து கொண்டு ரைஸூடன் தாளித்து குக்கரை மூடினாள்.


ஹாலில் உட்கார்ந்து டி.வி ரிமோட்டை எடுத்து இரு நூறாவது சேனலுக்கு மாற்றினாள். டிஸ்கவரி சேனலில் இரு நூறு வருஷங்களுக்கு முன்பிருந்த கடல் உயிரினங்களை ஒலிபரப்பி கொண்டிருந்தார்கள். அதற்குள் ஹர்ஷி எழுந்து விட்டாள். குளிக்க சொல்லி விட்டு விடுமுறைதானே என்று சிம்பிளாக இரு நூறு ரூபாய்க்கு எடுத்த காட்டன் ப்ராக்கை அவளுக்கு கொடுத்தாள். அவளுக்கு இரு நூறு கிராம் மாகி பேக்கை செய்து தந்து சாப்பிட்டு முடித்ததும், அரஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. “ தியா.. வர வர நீ ஹர்ஷி மேல் கவனம் வைக்கறதேயில்லை.. அவ ஹேண்ட்-ரைட்டிங் பாரு எப்படி இருக்கு.. நாளைக்கு அவளை நிறைய எழுத சொல்லு.. ‘ அவசரமாய் புக் ஷெல்பினுள் தேடி இரு நூறு பேஜ்  நோட்டை எடுத்து இன்னிக்கு இந்த வேர்டை டூ ஹண்ட்ரடு டைம்ஸ் எழுதறே...’  ஹர்ஷி தியாவை பார்த்து உதட்டை சுழித்து முணகி கொண்டது.


அரஸ் போன் பண்ணியிருந்தான்... கிச்சனலிருந்து தியா ஓடி வருவதற்குள் ரிங் முடிந்து விட்டது. அவளே மறுபடியும் கால் போட, ‘ பேலன்ஸ் இல்லையென்று பாழாய் போன ஒருத்தி’.. இரு நூறு தரம் சொல்லி கொண்டிருந்தாள். அடடா கவனிக்கவே இல்லையே அப்புறம் அவசரத்துக்கு கால் பண்ண கஷ்டமா இருக்கும் என்று பக்கத்து கடைக்கு ஓடினாள். இரு நுறூ ரூபாய்க்கு ரீசார்ஜ் கார்டு வாங்கி நம்பரை தேய்த்து அதில் இருந்த டூ ஹண்ட்ரடு.. டூ ஹண்ட்ரடு... டூ ஹண்ட்ரடு என்ற நம்பரை மொபைலில் ஏற்றினாள். ரீ சார்ஜ்- டன் டாக்-டைம் டூ ஹண்ட்ரடு.. ரூபிஸ் என்று மேசேஜ் வந்ததும் நிம்மதியானாள்.


மம்மி முடிச்சிட்டேன்... என்று ஹர்ஷி நீட்டிய நோட்டை வாங்கினாள். டூ ஹண்ட்ரடு டைம்ஸ் என்றதும் அவசரத்தில் ஜாங்கிரியை பிய்த்து போட்டது போல் கிறுக்கி இருந்தாள். ‘ உன்ன..  ஹேண்ட் ரைட்டிங் வரனும்தானே இப்படி டூ ஹண்ட்ரடு டைம்ஸ் பனிஷ் பண்ணேன்.. உனக்கு இப்படி எல்லாம் புத்தி வராது.. எந்திரிச்சி... டூ ஹண்ட்ரடு டைம்ஸ் தோப்புக்கரணம் போடு ...”


மறுபடியும் டி.வி ரிமோட்டை தட்ட பவர் ஸ்டார் பேட்டி. அவர் நடித்த  “பவரின்.. ஹவர்” படம் இரு நூறு  நாட்கள் ஓடியதை பல்லிளித்து சொல்லி அதை மாபெரும் விழாவாக லண்டனில் நடத்த போவதாக சொன்னார். அட பாவிங்களா அந்த மாதிரி ஒரு படம் வந்த மாதிரியே தெரியலையே என்று தியா நினைப்பதற்குள் கோபி நாத், ” இரு நூறு செகண்டு கூட பார்க்க முடியாத இந்த படத்தை எப்படி இரு நூறு நாள் ஓட்டினீங்க? “ என்று கேள்வி கேட்டு பவரை மடக்க, ‘ அதெல்லாம் நம்ம பவர்தான்.. தினம் இரு நூறு பேருக்கு இரு நூறு ரூபா கொடுத்து தியேட்டர்ல போய் தூங்க சொல்லி இரு நூறு நாளைக்கு தந்தேன்.. ஹா.. ஹா..’ என்று ஒளிவு மறைவு இல்லாமல் சொன்ன பவரின் பற்கள் இரு நூறு வாட்ஸ் பல்பாய் மின்னியது.


ம்.. ம்ஹூம் டி.வியில் ஒண்ணும் உருப்படியாய் இல்லை... சரி  நம்ம க்ளோஸ்(பண்ற) ப்ரெண்டுக்கு போனை போடுவோம் என்று ரிங் போட,


“ ஹலோ தியா..  என்ன பண்றே? எப்படி எப்படியோ எழுதி தேத்தி இன்னிக்கு இரு நூறாவது போஸ்டுக்கு கொண்டு வந்துட்டேண்டி...  நீ என்ன பண்றே..  வெவ்வெற ஐ.டி யிலிருந்து குறைஞ்சது இரு நூறு கமெண்ட்டாவது போடற... இல்ல உனக்கு இரு நூறு தரம் வயித்த கலக்கும் ஆமா.. சொல்லிட்டேன்...”


‘ச்சே வேலூர்லர்ந்து உயிரை வாங்கறதுக்குன்னே இதெல்லாம் ப்ரெண்டாச்சா..? கலகம் நடந்த ஊராச்சே வயித்தை வேற கலக்கும்னு சாபம் உட்டுட்டாளே.... என்ன பண்ணி தொலைய லேப்- டாப்பை ஓப்பன் பண்ணி கமெண்ட் கொடுக்க உட்கார்ந்தாள்.


இரு நூறு தரம் தோப்புக்கரணம் போட்டு முடித்த ஹர்ஷி தியாவை பார்த்து , ‘ என்னைய பழி வாங்கின இல்ல இப்ப என்ன பண்ணுவே...? இப்ப என்ன பண்ணுவே..? 





ஒரு வழியா புரிஞ்சிகிட்டிங்களா...? அதே அதே...!  இத படிக்கிறவங்க ஒழுங்கா கமெண்ட் போட்ருங்க... இல்லாட்டி ... இரு நூறு தரம்.... வேண்டாம் நாட்ல தண்ணி வேற கஷ்டம்...!  ஹா... ஹா... ஹா!