Thursday 12 December 2013

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?



 நேற்று ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன்... மண்டபம் முழுதும் அதிக கூட்டம், இப்போதெல்லாம் திருமணத்திற்கு மண நாளன்று முகூர்த்தத்தை பொறுத்து காலையில் எழுந்து வரவேண்டுமே என்ற அவசரமும், அலுவலக விடுப்பு எடுக்கமுடியாத சூழலும் மண  நாளுக்கு முன்  நாள் திருமண வரவேற்புக்கே பெரும்பாலும் கலந்து கொள்கிறார்கள். கலந்து கொள்கிறார்கள் என்பதை விட வருகை பதிவேட்டில் ஆஜராக வேண்டும் என்ற மன நிலையில்தான் வந்து சேர்கிறார்கள். ஒரு பக்கம் இன்னிசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது.. அதை ரசிக்கும் மன நிலையில் யாருமில்லை... அதுதான் எந்த தொலைக்காட்சியை திருப்பினாலும் எதாவது ஒரு பாடல் போய் கொண்டிருக்கிறதே...! யாரும் பொருட்படுத்தா விட்டாலும் செல்வாக்கின் அளவீட்டை காண்பிப்பதற்காக இந்த கச்சேரி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். இங்கு வந்தவர்கள் தெரிந்தவர்கள்...என்று அவரவர் நிலையில் ஒரு  சின்ன விசாரிப்புகள்... அதுவும் கூட மணமக்கள் மேடைக்கு  எப்போது வருவார்கள் என்று எண்ணிகொண்டுதான்! மணமக்கள் வந்து நின்றதும்தான் தாமதம் ஓடிப்போய் பரிசை கொடுத்து விட்டு விருந்துக்கு ஓடும் ஒரு சாரர்.... பரிசு கொடுக்க மேடையில்  நிற்க காத்திருக்க நேரமாகும்.. அதற்குள் விருந்தை முடித்துவிடலாம் என்று பந்தியை  நோக்கி ஓடும் ஒரு சாரர்..! 

ஆண், பெண் இணைந்து வாழ்க்கை ஆரம்பிக்கும் இயல்பான நிகழ்வுக்கு நாம் ஏன் இத்தனை அமர்க்களப்படுத்துகிறோம் என்றே யோசித்தேன். இங்கு முதலில் ஆணையும், பெண்ணையும் இணைப்பது அவர்கள் மனங்களா என்ற கேள்விக்கு ஆம் என்று எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும்? திருமண சம்பிரதாயம் முதலில் ஜாதகத்தில் ஆரம்பிக்கிறது... மனப்பொருத்தத்தை  நிர்ணயிப்பது மணப்பொருத்தம் என்றளவில்தான் பெற்றோரால் யோசிக்கப்படுகிறது. கல்வி , வேலை என்று சுயமாக வாழ்க்கை நடத்த தயாராகிவிட்டாலும் அதெல்லாம் தகுதிகள் கிடையாது. முதலில் மணப்பொருத்தம் பார்ப்பார்கள். சிலருக்கு தடைகள் இல்லாமல் முடிந்து விடும் அவர்களை விடுங்கள். ஆனால் இது சரியில்லை அது சரியில்லை என்று ஜாதக பொருத்தங்கள் நிராகரிக்கப்படும் போது தகுதியான காலம் வந்தும் வாழ்க்கை அமையாமல் எத்தனை ஆண்களும், பெண்களும் திருமண வயதை கடக்கிறார்கள்? அந்த பெண் நல்ல அழகு.. படிப்பு வேலை.. செவ்வாய் தோஷமாம், வரும் வரன் எல்லாம் தட்டி போவதில் பெற்றோர்கள் நேரத்தின் மீது பழியை போடுகிறார்கள். ‘ இன்னும் நேரம் வரலை..’ என்று! அந்த நேரத்திற்கான பரிகாரங்கள், யாகங்கள் என்று அவர்கள் செலவழிக்கும் தொகை திருமண செலவில் பாதியை எட்டிவிடும். இப்படியே அந்த பெண் முப்பது வயதை கடந்து முதிர்கன்னியாகும் போது அந்த பெண் சமூகத்தில் சந்திக்கும் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல... கேவலமான பார்வைகளை தாண்டி உடன் பயணிக்கும் நட்புகளின் கேலிப்பேச்சுக்கள், ‘ இதற்குத்தான் சொன்னேன்...பேசாம நீயே எவனையாவது காதல் பண்ணி ஓடி போயிடு என்று’...! இந்த ஜாதக பொருத்தம் ஆண்களையும் விட்டு வைக்கவில்லை... அந்த மாப்பிள்ளைக்கு லக்கினத்துல சனியும், செவ்வாயும் ஒண்ணா இருக்காம் இந்த ஜாதகத்துக்கு பொண்ணே கொடுக்க கூடாது என்று..! இப்படியே நிராகரிக்கப்பட்ட ஜாதகத்துக்குரிய அந்த ஆண்  நாற்பது வரை திருமணம் அமையாமல் வந்து விடுகிறான். இப்போது சமூகம் இவனையும் விட்டு வைக்காது, ‘ இங்க போறான் பாருய்யா வழுக்கை மண்டையன்... இன்னமும் கல்யாணம் பண்ணிக்கிறான்..  நேரா அறுபதாம் கல்யாணம்தான் ஓய்..! 

ஒரு வழியாக மணப்பொருத்தம் முடிந்தால் அடுத்து பார்க்கப்படுவது அந்தஸ்த்து..!  இவை இரண்டும் ஒத்து வந்தால்தான் வாழ்க்கைக்கான நிச்சயம்.  நிச்சயம் முடிந்து மண நாள் குறித்துவிட்டால் ஆரம்பித்து விடுகிறது பெண் வீட்டாருக்கு தலைவலி...! பெண் சுயமாக சம்பாதிக்கும் நிலையிலும் இன்னமும் வரதட்சணை முடிந்து போகவில்லை. தங்கள் பெண் நன்றாக இருக்க வேண்டுமே என்று கடனை வாங்கி தன் தகுதிக்கு மேல் நகை, வரதட்சணை கொடுக்கும் பெற்றோர்கள்தான் அதிகம்.
           
 சரி திருமணம் குறித்தாயிற்று... பத்திரிக்கையில் ஆரம்பிக்கிறது...விஷயம். இன்ன தேதியில் இன்னார் வாழ்க்கையில் இணைகிறார்கள் அதை சொல்ல ஒரு ஆடம்பமில்லாத ‘தாள்’ போதாதா? படித்துவிட்டு குப்பையில் போடும் அழைப்பிதழுக்கு இங்கு எத்தனை செலவழிக்க வேண்டிதாய் இருக்கிறது? அதிலும் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் அது போதாது மணமக்கள் வேறு தனி தனியே இத்தனை அழைப்புகள் தேவையா? அழைப்பு என்றால் அழைப்புதானே அது ஒன்று போதாதா? 

திருமணம் முடியும் வரை பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வழியாக ஆகிவிடுகிறார்கள். என்னவோ பெண் போகும் இடத்தில் எந்த கடையும் இல்லாதது மாதிரி, காலில் போடும் செருப்பிலிருந்து, துணிமணிகள் வரை பார்த்து பார்த்து வாங்க வேண்டும். தேவைகள் மொத்தத்தையும் திரட்டி கொண்டு அலங்கரித்த  நகை அடுக்காய் பெண் தயாராகிறாள்.

பெண் வீட்டார் வாயிலில் வைத்துள்ள பேனரிலிருந்து வந்து போகும் மாப்பிள்ளை வீட்டார் வரை உபசரிப்பில் குறை வைக்க கூடாது. திருமணம் என்பது திணிக்கப்பட்ட விழாவாக  நடத்தப்படுகிறது. இந்த இரு வீட்டாரோடு மட்டுமா இந்த அவஸ்தை முடிகிறது? புதிய வாழ்க்கை தொடங்குபவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை சொல்ல யாருக்கும் அவகாசமில்லை. முதல் பத்தியில் சொன்னது போல் வருகை பதிவேடு ஆஜர்தான். விருந்தும் கூட மருந்தாய்த்தான் கசக்க செய்கிறது இந்த அவசர உலகில். ஒரு பந்தி உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே... அடுத்த கூட்டம் தயாராய் அவர்கள் முதுகுக்கு பின்னே நின்று கொண்டிருக்கிறது...அவர்கள் எழுந்ததும் இடத்தை பிடிக்க.

இத்தனை களேபரங்களும் பெண்ணுக்கும், ஆணுக்கும் விருப்பமான, பொருத்தமான வாழ்க்கையை இணைக்கிறதா என்பது யோசிக்கத்தான் வேண்டும்! மணப்பொருத்தம் திணிக்கும் மனப்பொருத்தங்களில் சிலர் பொருந்தியும் போகிறார்கள்... பொருந்தாமலும் போகிறார்கள். 
                             ------------

முடிந்தால் இதையும் வாசிக்கலாமே....
என் பார்வையில்....