Wednesday 22 January 2014

மனம் கனத்த ஒரு வாசகரின் கடிதம்...........!

நேற்று அலுவலகம் விட்டு வந்து வீட்டு வேலைகளில் பரபரப்பாக இருந்த போது எனக்கு தபாலில் வந்த புத்தகங்களையும், போஸ்ட் கார்டு தபால் ஒன்றையும் என் மாமியார் கொடுத்தார். தபாலை மேலோட்டமாக படித்தேன்...

அன்புள்ளம் கொண்ட உஷா மேடம் அவர்களுக்கு, குளிக்கரை ____________ எழுதியது. தாங்கள் எழுதும் கதைகள் அனைத்தையுமே விரும்பி படிப்பவன் நான். தாங்கள் எழுதிய வாரமலர் இதழில் கதை படித்து மிகவும் களிப்புற்று உடனே தினமலர்-வாரமலர் ஆசிரியருக்கு நன்றி கடிதம் அனுப்பினேன். தாங்கள் என் போன்ற வாசகர்களுக்காக தொடர்ந்து பல கதைகளை எழுதி அதன் மூலம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
...............
            சரி யாரோ ஒரு வாசகர் எழுதியிருக்கிறார்... பிறகு படித்து பதில் அனுப்பலாம் என்று வைத்து விட்டேன். டிபன் செய்து கொண்டிருக்கும் போது யோசனை வந்தது... வழக்கமாக தினமலரில் என் முகவரி, தொலைபேசி யாருக்கும் கொடுக்க மாட்டார்களே... பெண் வாசகிகள் என்றால் மட்டும்  விசாரித்து விட்டு என் தொலைபேசி எண்ணை தருவார்கள். ஆனால் ஒரு வாசகரிடம் இருந்து கடிதம் நம் வீட்டு முகவரிக்கு எப்படி வந்தது? என்று யோசித்து மீண்டும் கடிதத்தை எடுத்து பின்பக்கம் அனுப்பியவர் முகவரியை பார்த்து ......... வியப்பு மேலிட்டது..



..................  B.A.,
S/o..............,
‘ 3’ Block,
Central Prison,
Trichy.




கடிதம் அனுப்பியவர்     திருச்சி மத்தியச்சிறையில் இருக்கும் ஒரு சிறைக்கைதி...! கடிதம் தணிக்கை செய்து அனுமதிக்கப்பட்டது என்ற திருச்சி மத்திய சிறைச்சாலை முத்திரையுடன் இருந்தது...!

என் முகவரியை பார்த்தேன்....  உஷா அன்பரசு( கதாசிரியர்), சத்துவாச்சாரி, வேலூர் என்று தெரு, வீட்டு எண் எதுவும் இல்லாமல்... கிடைத்து விடும் என்று நம்பிக்கையில் ஊர் பெயரை மட்டும் குறிப்பிட்டு அவர் அனுப்பியிருந்த கடிதம் எனக்கு கிடைத்து விட்டது.
கடிதத்தின் பின்பக்கம்...

இக்கடிதம்  கண்டு எனக்கு பதில் கடிதம் போட்டால் மிக உயர்ந்த சந்தோஷமடைவேன்..! என்று எழுதியிருந்தார். கொஞ்சம் படித்துள்ள இவர் என்ன தவறிழைத்திருப்பார்...? சமூக விழிப்புணர்வுக்காக சிந்தித்து அதை தெரிவிக்க முயற்சி எடுத்து கடிதம் அனுப்பியிருக்கும் இவர் என்ன குற்றம் செய்திருப்பார்?

மனம் என்னவோ போல் ஆகிவிட்டது...  கோபம், ஏமாற்றம், துரோகம் போன்ற எதோ ஒரு மன உணர்வின் தாக்குதலில்  ஒரு நிமிடத்தில் யோசிக்காமல் குற்றம் செய்துவிட்டு பிறகு அதற்கான தண்டனை அனுபவிப்பவர்கள் வலி எத்தனை கொடியது...  சூழ் நிலையால் குற்றம் செய்துவிட்டு பிறகு ஆயுள் முழுக்க வருந்துபவர்களைத்தான் இங்கு குறிப்பிட்டு சொல்கிறேன். குற்றமே தொழிலாக கொண்ட மனித மிருகங்களை பற்றி அல்ல!

வாய்க்கா வரப்பு தகறாரில் தந்தையை  தவறாக பேசியதால் பங்காளியை அடித்து போட்ட மகன்கள்.......

 பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான தங்கையின் கொடுமை சகியாமல்  அரிவாளை தூக்கிய அண்ணன்...       

வாழ்க்கை இணையின் துரோகங்கள்....

இப்படி எதேதோ சூழ் நிலையில் அகப்பட்டு       அவசரத்தில் தன் நிலை இழந்த அந்த குற்றவாளிகளின் நிலை என்ன? அவர்களுக்குள் மனிதம் விழிக்காதா? இந்த சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது?






ஒரு வகையில் அவர்கள் மீதும் மனிதாபிமானம் வைக்கவே தோன்றுகிறது. அன்பு ஒன்றே மனிதம் மீட்டு தரும்.... !

சூழ் நிலை கைதிகளை சந்தித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது..!

முடிந்தால் திருச்சி நண்பர்கள் யாரேனும் இந்த வாசகரை பார்த்து அவர் சூழ் நிலைக்கு அகப்பட்ட கதையை கேட்டு எனக்கு தெரிவிக்க முடியுமா?....  அப்படியே “அமைதியான எதிர் கால வாழ்விற்கான என் வாழ்த்துக்களையும்......  நான் சொன்னதாய் சொல்ல முடியுமா?

விரும்பினால் என் மெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்க...  பெயரை அனுப்பி வைக்கிறேன்.