Saturday 30 May 2015

கல்வி என்ற காலன்..


( 30-5-15 தினமலர்- பெண்கள் மலரில்..)

தோழி ஒருவரின் மகள் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெறவே வாழ்த்து சொல்ல போன் செய்த போது, அவரோ “ என்ன சொல்வது வெறும் எழுநூறு மார்க்தான் வாங்கியிருக்கா.. பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் வாங்கியிருந்தாங்கன்னு இதுல நம்பிக்கையா இருந்தேன்.. இப்படி  நான் ஏமாறுவேன்னு நினைக்கலை..  நல்லா ஹார்டு வொர்க் பண்ணியிருந்தாத்தானே?  நாந்தான் படிக்கலை இவங்களாவது நல்லாயிருக்கனும்னுதானே இவ்வளவு சொன்னேன் என்று கோபமாக திட்டிக்கொண்டே இருந்தார்.  மதிப்பெண் வந்த பிறகு இனி இதைப்பற்றி பேசி பெண்ணின் மனதை நோகடிக்க வேண்டாம், அழப்போகிறார்கள் என்று சொன்னேன். தோழியோ, “ அழட்டும்.. இதுதான் நேரம்னு வெளுத்து வாங்கிட்டேன்.. அழுதுட்டு சாப்பிடாமதான் இருக்கா.. இருக்கட்டும் எத்தனை நாளைக்கு இருப்பா?” என்றார் சர்வசாதாரணமாக. எல்லோருக்கும் ஏற்ற கல்வியும், வாழ்க்கைக்கான வழியும் இருக்கிறது அவர்களுக்கு எந்த பாடத்தில் ஆர்வம் உள்ளதோ அதை கொடுத்து தொடர்புடைய பணிக்கு அனுப்பலாமே என்று அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வியை எப்பாடு பட்டாவது கொடுத்து விட வேண்டும். அது முடித்து அதற்கு சம்மந்தமில்லாத எந்த வேலைக்கேனும் சென்று அதிக ஊதியத்தில் பணியில் அமர வேண்டும் என்ற கட்டாயத்தில்தான் இருக்கின்றனர்.
பொறியியல் படித்து ஸாப்ட்வேர் துறையில் ஆர்வமில்லை என்று தொழிற்சார்ந்த வேலைகளுக்காக அல்லாடி காத்திருக்கும் பிள்ளைகளை, “கிடைத்த வேலைக்கு போகவில்லை என்றும் தண்டச்சோறு தின்று ஊரை சுற்றி வருகிறது..!” என்று சாடும் பெற்றோர்களையும்... “ சரி வேலைக்குதான் போகலை அந்த டப்பா இஞ்சினியரிங் காலேஜ் ல டீச்சிங் பண்ண கூப்பிடாறாங்க ஆறாயிரம் ஏழாயிரம் சம்பளம் என்றாலும் போய் தொலையமாட்டேங்குது..!” என்று வசைபாடும் பெற்றோர்களையும்தான் அதிகமாக பார்க்க முடிகிறது. அந்த பிள்ளைகளின் மன நிலையை நினைத்து பாருங்கள், எல்லோருமே பொறியியல் என்றால் வேலைக்கு எங்கே போவது? லட்சக்கணக்கில் செலவழித்து படித்துவிட்டு இன்று ஆறாயிரம், ஏழாயிரம் ஊதியத்திற்கே செல்ல வேண்டிய நிலையாக இருக்கிறது. இதை யோசிக்கும் ஒரு சில பெற்றோர்கள் மீண்டும் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் யுஜி கோர்ஸ் சேர்த்து ஆசிரியர் பயிற்சி கொடுத்துவிட்டால் பிற்காலத்தில் ஆசிரியப்பணியாவது கிடைக்கும் என்று மீண்டும் இளங்கலை வகுப்புகளில் சேர்ப்பிக்க திரும்புகிறார்கள்.
மாணவர் கற்றல் திறனுக்கேற்ற கல்வி, அதன் அறிவை சார்ந்த பணி என்ற காலம் எல்லாம் போய் பணம், கல்வி, பெருமை என்ற நிலையே நிலவி வருகிறது. உறவினர் ஒருவர் அவருடைய மகள் மதிப்பெண் குறைவாக இருப்பதால் அறுபது லட்சம் கொடுத்து மருத்துவ கல்வி சேர்த்திருப்பதாக சொன்னார்கள். மருத்துவம் என்பது மனித உயிர் சம்மந்தப்பட்ட கல்வி.. இதை விலை கொடுத்து வாங்கி கற்றல் திறன் குறைவாக உள்ளவர்களால் அந்த கல்வியை புரிந்து அவர்கள் எப்படி திறமையாக மருத்துவப் பணியை செய்ய முடியும்? அத்தனை செல்வாக்கு உடையவர்கள் அந்த பணத்தை வங்கியில் முதலீடு செய்து அதை வைத்து அவர்கள் எதிர்காலத்தை பார்த்துக்கொள்ள வழி செய்ய முடியும்தானே? அந்த இடத்தை திறமையாக உள்ள யாரோ ஒரு ஏழை மாணாக்கருக்கு  வாய்ப்பு கொடுக்கலாம் இல்லையா? இப்போதுள்ள நிலையில மருத்துவப்படிப்பு வசதிப்படைத்தவர்களுக்கானதாக மட்டும் மாறிவிட்டதால் அங்கு அதிக மதிப்பெண் பெற்று உள்ளே நுழையும்  ஏழை மாணாக்கர்கள் அவர்கள் வாழ்க்கை முறையில் அன்னியப்பட்டு போகும் மன அழுத்த சூழலான நிலையும் நிலவுகிறது. விலை உயர்ந்த கார்களில் ஆயிரக்கணக்கில் அன்றாட கைச்செலவு செய்யும் மாணாக்கரிடையே விலை நிலம் விற்றோ கடன் வாங்கியோ படிக்க வைக்கும் குழந்தைகள் மன நிலையில் தாழ்வு மனப்பான்மையும், அவர்கள் போன்று இருக்க முடியவில்லை என்று குற்றவுணர்ச்சியும் நெருக்கி  தவறான முடிவுகளை எடுக்கும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.
  நன்கொடை கொடுத்து பொறியியல் படித்துவிட்டு நல்ல வேலைக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பணியில் அமரும் பிள்ளைகள் யோசிப்பது முதலில் போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்றுதான்..! அலுவலகங்களில் ஊழியர்களிடையேயும் அதிகாரிகளிடையேயும் லஞ்சம் தலைகாட்ட துவங்குவதே சமூகமும், பெற்றோர்களும் உருவாக்கிவிட்ட இந்த சூழ் நிலையும் ஒரு காரணம் என்பதை யோசித்துதான் பார்க்கவேண்டும்.
நல்ல மனிதராக வாழ்வதைவிட பேராசையுடன் வாழ்வதையே கற்றுத்தந்து கொண்டிருக்கும் இந்த கொலைகார கல்விமுறையை மாற்றியமைக்காவிட்டால் வாழ்க்கை என்பது வெறும் பணமாக மட்டும் மாறி சமூக குற்றங்களும், ஒழுங்கற்ற வாழ்க்கையும்தான் உருவாகும் என்பதில் சந்தேகமேயில்லை.
 எல்லா பெற்றோர்களும் சிந்திப்பது நாம்தான் நன்றாக இல்லை நம்பிள்ளைகளாவது நன்றாக இருக்க வேண்டும். அப்படி நினைக்கும் எந்த பெற்றோர்களும் அவர்கள் எந்தவிதத்தில் வாழாமல் போய்விட்டார்கள் என்று யோசித்துப்பார்ப்பதில்லை.  உண்ண உணவும் உறைவிடமும் , மனித நேயமும் தாண்டி பேராசையை நோக்கி ஓடுவதில்தான் நல்ல வாழ்க்கை இருக்கிறது என்ற மன நிலைக்கு வந்துவிட்ட பின் கல்வி என்பது வழிகாட்டி இல்லை காலனாகவே மாறித்தான் போய்கொண்டிருக்கிறது. அதனால்தான் வருடந்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது மாணவ தற்கொலைகள்..!