Saturday 31 August 2013

இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லால்லே- ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..









கணவர் வெளியூருக்கு சென்றிருந்தார். ஹர்ஷி குட்டியும் தூங்கி கொண்டிருந்தது.. தியா மெதுவாகத்தான் எழுந்தாள்.   டிபன் செய்ய சோம்பலாக இருந்தது. காபியை குடித்து விட்டு ஒரு வழியாக சமைக்கலாம்.  ப்ரிட்ஜிலிருந்து இரு நூறு பாலை எடுத்து குக்கரில் ஊற்றி கொதிக்க வைத்தாள் . காபி கோப்பையுடன் வந்தவள் நேற்று படித்து முடிக்காமல் வைத்த நாவலின் இரு நூறாவது பக்கத்தை புரட்டினாள். புத்தகம் முடிந்ததும் மதியம் சமையலுக்கு வெஜிடேபிள் ரைஸ் செய்து கொள்ளலாம் . . அதற்குள் ஹர்ஷியும் எழுந்து விடும்.. அவளுக்கு எதுவும் கலர்புல்லா இருந்தாத்தான் பிடிக்கும். இரு நூறு கிராம் கேரட், இரு நூறு கிராம் பீன்ஸ், இரு நூறு கிராம் பட்டாணி இன்னும் கொஞ்சம் காய்கறி கலவைகளை இரு நூறு கிராம் அளவுக்கு எடுத்து கொண்டு ரைஸூடன் தாளித்து குக்கரை மூடினாள்.


ஹாலில் உட்கார்ந்து டி.வி ரிமோட்டை எடுத்து இரு நூறாவது சேனலுக்கு மாற்றினாள். டிஸ்கவரி சேனலில் இரு நூறு வருஷங்களுக்கு முன்பிருந்த கடல் உயிரினங்களை ஒலிபரப்பி கொண்டிருந்தார்கள். அதற்குள் ஹர்ஷி எழுந்து விட்டாள். குளிக்க சொல்லி விட்டு விடுமுறைதானே என்று சிம்பிளாக இரு நூறு ரூபாய்க்கு எடுத்த காட்டன் ப்ராக்கை அவளுக்கு கொடுத்தாள். அவளுக்கு இரு நூறு கிராம் மாகி பேக்கை செய்து தந்து சாப்பிட்டு முடித்ததும், அரஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. “ தியா.. வர வர நீ ஹர்ஷி மேல் கவனம் வைக்கறதேயில்லை.. அவ ஹேண்ட்-ரைட்டிங் பாரு எப்படி இருக்கு.. நாளைக்கு அவளை நிறைய எழுத சொல்லு.. ‘ அவசரமாய் புக் ஷெல்பினுள் தேடி இரு நூறு பேஜ்  நோட்டை எடுத்து இன்னிக்கு இந்த வேர்டை டூ ஹண்ட்ரடு டைம்ஸ் எழுதறே...’  ஹர்ஷி தியாவை பார்த்து உதட்டை சுழித்து முணகி கொண்டது.


அரஸ் போன் பண்ணியிருந்தான்... கிச்சனலிருந்து தியா ஓடி வருவதற்குள் ரிங் முடிந்து விட்டது. அவளே மறுபடியும் கால் போட, ‘ பேலன்ஸ் இல்லையென்று பாழாய் போன ஒருத்தி’.. இரு நூறு தரம் சொல்லி கொண்டிருந்தாள். அடடா கவனிக்கவே இல்லையே அப்புறம் அவசரத்துக்கு கால் பண்ண கஷ்டமா இருக்கும் என்று பக்கத்து கடைக்கு ஓடினாள். இரு நுறூ ரூபாய்க்கு ரீசார்ஜ் கார்டு வாங்கி நம்பரை தேய்த்து அதில் இருந்த டூ ஹண்ட்ரடு.. டூ ஹண்ட்ரடு... டூ ஹண்ட்ரடு என்ற நம்பரை மொபைலில் ஏற்றினாள். ரீ சார்ஜ்- டன் டாக்-டைம் டூ ஹண்ட்ரடு.. ரூபிஸ் என்று மேசேஜ் வந்ததும் நிம்மதியானாள்.


மம்மி முடிச்சிட்டேன்... என்று ஹர்ஷி நீட்டிய நோட்டை வாங்கினாள். டூ ஹண்ட்ரடு டைம்ஸ் என்றதும் அவசரத்தில் ஜாங்கிரியை பிய்த்து போட்டது போல் கிறுக்கி இருந்தாள். ‘ உன்ன..  ஹேண்ட் ரைட்டிங் வரனும்தானே இப்படி டூ ஹண்ட்ரடு டைம்ஸ் பனிஷ் பண்ணேன்.. உனக்கு இப்படி எல்லாம் புத்தி வராது.. எந்திரிச்சி... டூ ஹண்ட்ரடு டைம்ஸ் தோப்புக்கரணம் போடு ...”


மறுபடியும் டி.வி ரிமோட்டை தட்ட பவர் ஸ்டார் பேட்டி. அவர் நடித்த  “பவரின்.. ஹவர்” படம் இரு நூறு  நாட்கள் ஓடியதை பல்லிளித்து சொல்லி அதை மாபெரும் விழாவாக லண்டனில் நடத்த போவதாக சொன்னார். அட பாவிங்களா அந்த மாதிரி ஒரு படம் வந்த மாதிரியே தெரியலையே என்று தியா நினைப்பதற்குள் கோபி நாத், ” இரு நூறு செகண்டு கூட பார்க்க முடியாத இந்த படத்தை எப்படி இரு நூறு நாள் ஓட்டினீங்க? “ என்று கேள்வி கேட்டு பவரை மடக்க, ‘ அதெல்லாம் நம்ம பவர்தான்.. தினம் இரு நூறு பேருக்கு இரு நூறு ரூபா கொடுத்து தியேட்டர்ல போய் தூங்க சொல்லி இரு நூறு நாளைக்கு தந்தேன்.. ஹா.. ஹா..’ என்று ஒளிவு மறைவு இல்லாமல் சொன்ன பவரின் பற்கள் இரு நூறு வாட்ஸ் பல்பாய் மின்னியது.


ம்.. ம்ஹூம் டி.வியில் ஒண்ணும் உருப்படியாய் இல்லை... சரி  நம்ம க்ளோஸ்(பண்ற) ப்ரெண்டுக்கு போனை போடுவோம் என்று ரிங் போட,


“ ஹலோ தியா..  என்ன பண்றே? எப்படி எப்படியோ எழுதி தேத்தி இன்னிக்கு இரு நூறாவது போஸ்டுக்கு கொண்டு வந்துட்டேண்டி...  நீ என்ன பண்றே..  வெவ்வெற ஐ.டி யிலிருந்து குறைஞ்சது இரு நூறு கமெண்ட்டாவது போடற... இல்ல உனக்கு இரு நூறு தரம் வயித்த கலக்கும் ஆமா.. சொல்லிட்டேன்...”


‘ச்சே வேலூர்லர்ந்து உயிரை வாங்கறதுக்குன்னே இதெல்லாம் ப்ரெண்டாச்சா..? கலகம் நடந்த ஊராச்சே வயித்தை வேற கலக்கும்னு சாபம் உட்டுட்டாளே.... என்ன பண்ணி தொலைய லேப்- டாப்பை ஓப்பன் பண்ணி கமெண்ட் கொடுக்க உட்கார்ந்தாள்.


இரு நூறு தரம் தோப்புக்கரணம் போட்டு முடித்த ஹர்ஷி தியாவை பார்த்து , ‘ என்னைய பழி வாங்கின இல்ல இப்ப என்ன பண்ணுவே...? இப்ப என்ன பண்ணுவே..? 





ஒரு வழியா புரிஞ்சிகிட்டிங்களா...? அதே அதே...!  இத படிக்கிறவங்க ஒழுங்கா கமெண்ட் போட்ருங்க... இல்லாட்டி ... இரு நூறு தரம்.... வேண்டாம் நாட்ல தண்ணி வேற கஷ்டம்...!  ஹா... ஹா... ஹா!  

Wednesday 28 August 2013

இந்த குற்றத்தை நீங்க செய்றிங்களா?




சிறுகதை : பசி....



  அப்படியே டிபன் பாக்ஸை கொண்டு வந்திருக்கா பாரு... தினம் வேஸ்ட் பண்றதே வேலையா போச்சு..”

வினிதா பாத்திரங்களை அலம்பும் சத்தங்களோடு கத்தி கொண்டிருந்தாள்.

“ அபி ... அம்மா திட்டிட்டிருக்கா பாரு.. ஸ்கூல்ல லஞ்ச் என்ன சாப்பிட்டே?”
“போங்கப்பா... அம்மா கொடுத்தனுப்புற லஞ்ச் ஒரே போர்... தெனம்.. பருப்பு , கீரைன்னு.. வெரைட்டி ரைஸ்ன்னா கூட பரவால்ல...”

   நூடுல்ஸ், பானி பூரின்னு மூணுவேளையும் வச்சாக்கூட தின்பா.. உடம்புக்கு நல்லதா காய்கறி, கீரை சாப்பிடனும்னா கஷ்டம்... தினம் நான் அரக்க பரக்க செஞ்சு அனுப்பறதெல்லாம் வேஸ்ட்டா போகுது. இரண்டு நாள் பட்டினி போட்டாதான் ஒழுங்கா சாப்பிடுவே..”

  ஸ்..  ஹையா... இரண்டு நாள் உன் சாப்பாட்டிலர்ந்து ப்ரீயா இருக்கலாம்.. “ அழகு காட்டி விட்டு ஓடினாள்.

“ இங்க பாருங்க அவ சரியா சாப்பிட மாட்டேங்கறா... நீங்க மிரட்டி உதை கொடுத்தாத்தான் வழிக்கு வருவா..”

  நீயே அதிகமா செல்லம் கொடுக்கிறே... அப்புறம் புலம்பற... விடு சின்ன பொண்ணுதானே.. சரியாய்டும்.. “

“ வினி... இன்னிக்கு  நானும் அபியும் கொஞ்சம் வெளியில் போய்ட்டு வர்றோம்...” என்ற படி அபியை அழைத்து கொண்டு கிளம்பினேன்.

“ என்னப்பா வண்டியை எடுக்காம நடத்தி வச்சி கூட்டிட்டு...எங்க போகப்போறோம்... ?”

“ இல்லடா எனக்கு கொஞ்ச தூரம் நடக்கனும்னு ரொம்ப நாள் ஆசை... அதான் நாம பேசிக்கிட்டே போவோம் சரியா...?”

ஐந்து நிமிடம் நடந்ததும் ஐஸ்கீரிம் பார்லர் முன் நின்றவள் “ பா.. ஐஸ்-கீரிம் சாப்பிட்டு போகலாம்...”

வழியெல்லாம் தேவை இல்லாமல் எதையாவது வாங்கி பாதி தின்பதும், மீதி கீழே போடுவதுமாக வந்தாள்.

“வீட்டுக்கு போகலாம்ப்பா...”

“ இன்னும் கொஞ்ச தூரம் அப்புறம் போய்டலாம்...”

 நகரை விட்டு கொஞ்ச தூரம் வந்து விட்டிருந்தோம். எதோ விளம்பர போஸ்டரை  நான்கைந்து கட்டைகளை கட்டி டெண்ட் போல் அமைத்து அதில் இரண்டு குழந்தைகள் உறங்கி கிடந்தது. ஒரு குழந்தை பக்கத்திலேயே வாளியில் முகம் கழுவி கொண்டிருந்தது.  அழுக்குச் சேலையில் இருந்த அவள் அடுப்பை சுள்ளிகளால் எரிய வைத்து எதையோ பொங்கி கிடந்தாள்..
 
“ ப்பா... இவங்கெல்லாம் ஏன் வீதியிலயே சமைக்கிறாங்க...”

“ அவங்களுக்கு அதான்மா வீடு..”

ஒரு குழந்தை தன் கையில் எதையோ வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது.. கை தவறி போட்டுவிடவும் அதன் அம்மா அதை நீரில் அலம்பி கொடுத்ததும் மீண்டும் சாப்பிட துவங்கியது.

வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள். இதெல்லாம் அவளுக்கு புதிதாய் தெரிந்தது. ரோட்டோரத்தில் செருப்பு தைத்து கொண்டிருந்தவன்,  வடை சுட்டு கொண்டிருந்த பாட்டி, அழுக்காய் வீதியில் கையேந்தி அவசரமாய் விழுங்கி கொண்டிருந்தவர்கள்..

"சரிடா அபி நாம வீட்டுக்கு போகலாம்.." திரும்பும் போது வழியில் ஒரு கல்யாண வீட்டு வாசலில் எறியப்பட்ட இலைகளையும் ஒருவன் தேடி அதிலிருந்த பாதி ஜாங்கிரியை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

“ ஏம்ப்பா இவங்க எல்லாம் இப்படி இருக்காங்க?”

“ பசிம்மா.. வாழனும்ல.. சாப்பாட்டை தவிர வேற பெரிய விஷயம் அவங்களுக்கு இல்லடா...இன்னிக்கு பேப்பர்ல போட்டிருந்தாங்க இந்தியாவுல இருபத்தஞ்சு கோடி பேர் தெனம் பசியோடு தூங்கறாங்களாம்”

அபி வீட்டிற்கு வந்தும் எதையோ யோசித்து கொண்டிருந்தாள்.

“ என்னங்க கொஞ்ச நாளா அபி ஸ்கூலுக்கு கொண்டு போறதை ஒழுங்கா சாப்பிட்டுடறா.. இப்பல்லாம் சாப்பாட்டை வேஸ்ட் பண்றதே இல்ல...  நீங்க என்ன சொன்னிங்க?”

 வினி... நீ பசிக்கு சாப்பிடனும்னு அவளை கடுத்துக்கிட்டே இருந்தே... நான் ‘ பசி’ ன்னா என்னன்னு புரிய வச்சேன்.. !”

                                                         ---







( இது கதை மட்டும் இல்ல.. நாம் வீணாக்கிற ஒவ்வொரு உணவும் நாலு பேரின் பசி உணர்வை கொலை செய்கிற விஷயம்தான்.  ஒரு பக்கம் ஹோட்டல், திருமண விருந்து, டைனிங் வரை தினம் தினம் உணவுக்கொலைகள் நடந்துகிட்டிருக்கு.. இன்னொரு பக்கம் பசி என்ற தண்டனையால் தினம் தினம் செத்துகொண்டிருக்கும் கூட்டம்...! உணவில் , அதை விளைவித்தவனின் உழைப்பு மட்டுமல்ல... எங்கோ வாடும் ஒருவனின் பசியும் இருக்கிறது... உணவை வீணாக்க வேண்டாம்..  மிச்சமாகும் உணவை ஏதோ ஒரு உயிரின் வயிற்றையாவது நிரப்பலாம். அக்டோபர்-16 உலக உணவு தினம். என்றைக்கு உலகில் பசியால் வாடுபவர் இல்லாமல் இருக்கிறார்களோ அன்றுதான் உலகம் வலிமை பெறும்.  
"Hunger is not an issue of charity. It is an issue of justice. )

Monday 26 August 2013

ஒப்பந்தம்...




 சார்  இந்தாங்க சாவி ... வீட்டை ஒரு தரம் பார்த்துக்கங்க... “ முகத்தில் கடுகளவும் இனிமை காட்டாமல் சாவியை கொடுத்து விட்டு போனான் சுரேஷ்.
          அவர்கள் மேல் போர்ஷனுக்கு வந்து ஐந்து மாதம்தான் ஆகியிருக்கும்.. அதற்குள் காலி செய்து விட்டார்கள்.. இந்த ஒரு வருடத்தில் மூன்று பேர் மாறிவிட்டார்கள். வாடகைக்கு குடி வருபவர்களிடம் எல்லாம் அம்மா காரணமே இல்லாமல் சண்டை பிடிக்கிறாள்...

... சார் காலையில் ஆபிஸ் கிளம்பும் போதும், வீட்டுக்கு வந்தவுடனயும் எங்க மிசஸ்கிட்ட உங்கம்மா கடு கடுன்னு மூஞ்சை காண்பிக்கறாங்க.. வாசலை சரியா கூட்டலை, மாடிப்படியை அலம்பலைன்னு..

இப்படியே வாரத்துக்கு நாலு நாள் புகார்கள். இருக்கும் வேலையில் அவனுக்கு இது வேறு தலைவலியாய் இருந்தது... என்ன செய்வதென்றே புரியவில்லை திவாகருக்கு.

அப்பா இருக்கும் போதெல்லாம் அம்மா அப்படி இல்லை. அப்பா போனபிறகு இந்த ஒரு வருடமாய்த்தான் அம்மா ரொம்ப மாறிவிட்டாள். எப்போதும் கடுகடுப்பாய்  பேசி குடி இருப்பவர்களிடம் வம்பு இழுப்பதும். தண்ணீர் மோட்டார் ஸ்வீட்ச்சை ஆப் செய்து தண்ணீர் விடாமல் இருப்பதும்,  வண்டி விட முடியாமல் சீக்கிரமே வராண்டாவை பூட்டிக்கொள்வதுமாய் குடித்தனக்காரர்களை படாத பாடு படுத்தி கொண்டிருந்தாள்.
 “ என்னங்க ‘டூ லெட் ‘ போட்டு இருபது நாளாச்சி ரெண்டு போர்ஷனுக்கும் யாரும் வந்து கேட்கலை...மாசம் சுளையா பத்தாயிரம் நஷ்டம்... உங்கம்மாவால இந்த வீட்டுக்கு யாரும் வரமாட்டேங்கறாங்க... அவங்களை கண்டிக்கவும் மாட்டீங்க..  வயசான காலத்துல இம்சை பண்ணிக்கிட்டிருக்கு...”

அம்மாவிடம் மென்மையாக ஒரீரு தடவை சொல்லிப்பார்த்தான். “ ஆமாடா எனக்கே புத்தி சொல்ல வர்றியா..? உங்கப்பா வச்சுட்டு போன வீட்லதான் நானிருக்கேன்.. உங்க கூட நான் இருக்கறது புடிக்கலைன்னா சொல்லிடுடா.. பென்ஷன் இருக்கு நான் தனியா சாப்பிட்டுக்கறேன்.. “

அதற்கு மேலும் அம்மாவிற்கு சொல்ல முடியாது. எதை சொன்னாலும் தப்பாகவே எடுத்துகொள்கிறாள். அவனை விட்டால் அம்மாவிற்கு யாரும் கிடையாது. அம்மாவை விடமுடியாது... என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான்.

மறு நாள் வீட்டு தரகரிடம்,  “ வாடகை ஐனூறு ரூபாய் குறைச்சு கேட்டாலும் பரவாயில்ல.. நல்ல குடும்பமா வயசான பெத்தவங்களை வச்சிருக்கவங்க பேமிலியா பார்த்து விடுங்க....”

“ என்னங்க.. எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாதுன்னு கணவன், மனைவி வேலைக்கு போற ரெண்டு பேரா பார்த்துதானே வீட்டை விடுவோம்.. இப்ப ஏன் நிறைய பேர் இருக்கற மாதிரி பார்க்க சொல்றிங்க.. அப்புறம் வீடு பாழாகியிடும்...”

“ மாலதி... வீடு பாழாவறதை பத்தி விடு.. பெயிண்ட் அடிச்சி மாத்திக்கிடலாம்... நம்ம நிம்மதி பாழானா சந்தோஷமா இருக்க முடியுமா? ஒண்ணை கவனிச்சியா... அம்மா இதுக்கு முன்னாடி எல்லாம் யார் வம்புக்கும் போகமாட்டா... அப்பா போன பிறகு தான் இப்படி. நீயும் நானும் வேலைக்கு போயிடறோம். நம்ம குழந்தையும் ஸ்கூலுக்கு போயிடறா. குடித்தனக்காரங்களும் காலையில் போனா  இராத்திரி எட்டு மணி போல வர்றாங்க. யாரும் முகம் கொடுத்து பேசறதில்ல...அம்மா எவ்வளவு நேரம்தான் டி.வி பார்ப்பா? பொழுதுக்கும் தனிமையா இருக்கிற வருத்தம் கூட கோபமா மாறி யார்கிட்டயோ பாயறாங்க. வயசான ஆளுங்க வீட்ல இருந்தா.. பொழுது போக அம்மாவும் அவங்களோடு பேசிக்கிட்டிருப்பாங்க .. அவங்களுக்கும் ஒரு துணையா இருக்கும்.. அதான் நம்ம கண்டிஷனை மாத்திக்கிட்டேன்..”


Friday 23 August 2013

சொன்னது என்னாச்சு?

பிரவீணா வருவதை எதிர்பார்த்து கொண்டிருந்த மல்லிகா, “  உன்னை இன்னிக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டுதான வரச்சொன்னேன்... அவங்க வர்ற நேரமாச்சு...  நேத்தெல்லாம் படிச்சி படிச்சி சொல்லியும் இன்னிக்கு வேணும்னு உன் இஷ்டப்படிதான் வர்றே...?” 

“ அம்மா நீயா நினைச்சிகிட்டா எப்படி? உனக்காக நான் சீக்கிரமாத்தான் கிளம்பினேன்.. நடுவுல எதோ கட்சி ஊர்வலம்... ட்ராபிக் ஜாம் அப்படி இப்படின்னு பஸ் நகர்ந்து வர்றதுக்குள்ள வழக்கமான டைமாயிடுச்சி...”

“ நேரமாச்சின்னா ஆபிசில சொல்ற காரணத்தையே எங்கிட்டயும் சொல்றியா? போய் முகம் அலம்பி சீக்கிரமா ரெடியாகு... அப்படியே இந்த பூவையும் வச்சிக்க..” அம்மா ரெண்டு முழம் பூவை வைத்து விட்டு போனாள்.

எவ்வளவுதான் பெண்கள் படித்து உத்தியோகம் என்று போனாலும் இந்த பெண் பார்க்கும் சம்பிரதாயம் மட்டும் மாறவில்லை. அலங்காரமாய் நின்று வருபவர்களுக்கு காபி, பலகாரம் தரவேண்டும். இன்னைக்கு மட்டும் நான் அழகா தெரியனுமா? என் இயல்பான முகத்தை பார்த்துட்டு போகட்டுமே.. ப்ரவீணாவிற்கு கோபமாய் வந்தது. அம்மா எடுத்து வைத்திருந்த சேலை , நகைகளை அணியாவிட்டால் அம்மா வழக்கம் போல் புலம்ப ஆரம்பித்துவிடுவாள். சலித்து கொண்டே அலங்கரித்து கொண்டாள்.

அப்பா  இவள் என்ன சொல்ல போகிறாளோ என்று தவித்து கொண்டிருந்தார். தன் வாழ்க்கையை பற்றி நினைத்த கனவுகளை அப்பாவிடம் சொல்லிய போது, “  நீ எனக்கு ஒரே பொண்ணு  நீ சந்தோஷமா வாழனும்னு எங்களுக்கும் கனவு இருக்கும். உன் இஷ்டப்படிதான் நடப்பேன்னா... எங்களுக்கு விஷத்தை வாங்கி குடுத்துட்டு நடந்துக்கோ..
                
    பாசத்திற்காக கட்டுபடுவதை தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.  இன்றைக்கு பெண் பார்க்க வருவதெல்லாம் சம்பிரதாயத்திற்காகத்தான்... மாப்பிள்ளை வீட்டார் கேட்ட 50 பவுன் நகையும் வண்டியும் வாங்கி தருவதாக ஒப்பு கொண்டுள்ளார்.

ஹாலில் பேச்சு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக மாப்பிள்ளையை பார்த்தவளுக்கு ஆச்சரியும், அதிர்ச்சியுமாய் இருந்தது...

ப்ரவீணாவிடம் காபியை வாங்கியவன் ஆச்சரியப்பட்டாள் இவளா பெண்?

அவர்கள் திருமண தேதி பற்றி பேசிக்கொண்டிருக்க ப்ரவீணாவிடம் தனியாக பேச வந்தான்.

“ ஏய் என்ன ஆச்சரியமா இருக்கு இல்ல..  எங்க வீட்ல உன்னைத்தான் பார்த்திருக்காங்கன்னதும் ஷாக் ஆயிடுச்சி..”

“ ம்.. எனக்கும்தான் ஷாக் ஆயிடுச்சி தினேஷ்... காலேஜ் பேச்சு போட்டியில் எல்லாம் வரதட்சணைக்கு எதிரா பேசி பரிசு வாங்கினதும், வரதட்சிணை வாங்காமத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இலட்சியம் வச்சிருக்கறதாவும் பில்-டப் பண்ணிட்டிருந்த நீங்க, உங்க வீட்ல ஐம்பது பவுன் போட்டுகிட்டு பெண் வரனும்னு சொல்றதை கேட்டுக்கிட்டு அமைதியா உட்கார்ந்திருக்கிறதை பார்த்து ஷாக் ஆகாம என்ன செய்யும்?”

“ ஹா.. ஹா... சிரித்தவன்,  காலேஜ்ல ஒண்ணா படிச்சப்ப நான் சொன்னதை ஞாபகம் வச்சிகிட்டு சொல்றியா? அதெல்லாம் பிராக்டிகல் லைப்புக்கு ஒத்து வருமா ப்ரவீண்..? இன்னிக்கு நான் ஒரு கௌரவமான பிஸினஸ் மேனா இருக்கேன். இதுவே என் தகுதிக்கு கம்மி.. என்னை மாதிரியே தோஷம் இருக்கிற பெண்ணு வேணும்னுதான் தரகர் மூலமா உன் ஜாதகம் வந்ததும் அம்மா சம்மதிச்சாங்க.. நீ மட்டும் என்னவாம்? ஊனமுற்ற ஒருவருக்குத்தான் வாழ்க்கை குடுப்பேன்னு மேடையில பேசிக்கிட்டிருந்தே...?

“ தினேஷ் நான் அதுல உறுதியாத்தான் இருந்தேன்.... பெத்தவங்க உயிரை வச்சி ப்ளாக்மெயில் பண்ணிடறாங்க... எனிவே... என் அப்பா அவருக்கே தெரியாம என் குறிக்கோள் படித்தான் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்.

“ என்ன சொல்ற?”

“ கொள்கை படி  நடக்காத நீங்க உள்ளத்தால ஊனமானவர்தான்... !”

ப்ரவீணாவின் பதில் அவன் மனதை நொறுக்கி கொண்டிருந்தது.