Friday 21 September 2012

ஏழைகளின் கல்வி கூடங்கள்:





இப்பொதெல்லாம் அரசு பள்ளிகள் ஏழைகளின் கல்வி கூடங்களாகி விட்டது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள் என்பது ஒரு வாதம்.முப்பது வருடங்களுக்கு முன் இத்தகைய பாகுபாடு இருந்ததில்லையே..? இப்போதுதானே தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. கவுரவ குறைச்சல் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. எளிய மக்கள் கவுரவ குறைச்சலாக ஏன் நினைக்க போகிறார்கள்..? தனியார் பள்ளிகளில் அரசு பள்ளியை விட கற்பித்தல் சிறப்பாக இருக்கிறது என்றுதானே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்  சேர்க்கிறார்கள்.  ஆட்டோ ஓட்டுபவரிலிருந்து, கூலி வேலை செய்பவர் வரை கடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளை நல்ல கற்பித்தல் உள்ள பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைத்து தங்கள் பிள்ளைகளாவது தங்களை போல் துன்ப படாமல் உயர வேண்டும் என்றுதானே நினைக்கிறார்கள்..? அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்க கிரானைட் பதித்த , குளீருட்டபட்ட வகுப்பறைகளா வேண்டும் என்று கவுரம் பார்க்கிறார்கள்..? அவர்களுக்கு தேவை தங்கள் பிள்ளைகள் உலக மொழியை தெரிந்து கொள்ள வேண்டும், நிறைய மதிப்பெண்களோடு  உயர் கல்வி கற்று நல்ல பணிக்கு செல்ல வேண்டும் என்பதுதானே எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதை நான் கண் கூடாக காண்கிறேன்..  எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் கடைகளுக்கு முறுக்கு, எல்லடை போட்டு பிழைக்கும் வறுமையான குடும்பம்.. உழைத்தால்தான் ஒவ்வொரு நாளுக்கான உணவு.. அவர்களுக்கு மணி மணியாய் இரண்டு பெண் குழந்தைகள். பெரிய பெண் குழந்தை அரசு பள்ளியில் படிக்கிறது. அந்த பெண் குழந்தை சொல்ல கேட்டிருக்கிறேன்.. “எங்க ஸ்கூல்ல சரியாவே சொல்லி தரமாட்டாங்க.. சில நேரங்கள்ல ஆசிரியர்கள் வகுப்பறைக்கே வருவதில்லை..” என்று சொல்லும். இரண்டாவது பெண் குழந்தை பிறக்கும் போதே   ஞான குழந்தை.. எதை சொன்னாலும் நன்றாக பிடித்து கொள்ளும். வெள்ளி சதங்கைகள் சிந்தியது போல் அழகாக பேசும். பள்ளிக்கு செல்லும் முன்னே அழகாய் படிக்க ஆரம்பித்த இந்த குழந்தையையாவது நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அவர்கள் கஷ்ட பட்டு தனியார் பள்ளி ஒன்றில் படிக்க வைக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கூட இப்போது சாதாரணம்.. டீலக்ஸ்,.. சூப்பர் டீலக்ஸ் போன்ற வகைகள் உள்ளதே..! சில தனியார் பள்ளிகள்  நடுத்தர மக்களுக்கான கட்டணத்துடன் இருக்கும். சில தனியார் பள்ளிகளின் காம்பவுண்டிற்குள் இலட்சங்களை வைத்து கொண்டுதான் எட்டி பார்க்க முடியும்.  நடுத்தர மக்கள் கட்டணத்துடன் இருக்கும் அந்த பள்ளிக்கே அவர்கள் சிரம பட்டு படிக்க வைக்கிறார்கள். அந்த குழந்தை நன்றாக படிக்கிறது.. நிறைய மதிப்பெண்களுடன் தான் வாங்கிய பரிசு சான்றிதழ்களை என்னிடம் காட்டி மகிழ்ந்தது. மூன்றாவது படிக்கும் அந்த பெண் குழந்தை சரியான கற்பித்தல் இருந்தால் நாளை ஒரு சரோஜினி நாயுடுவோ,  கல்பனா சாவ்லாவாகவோ உருவாகலாம். ஆனால் அந்த குழந்தையை தனியார் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்க முடியுமா என்பது அவர்களின் கேள்விக்குறியாக உள்ளது. அந்த சின்ன குழந்தை வறுமையிலும் நல்ல பழக்கம் நாம் எதாவது கொடுத்தாலும் வாங்காது. தனியார் பள்ளியை நாடுவது கவுரவத்திற்கு என்ற முத்திரையை உடைக்கவே இந்த சான்று. சூப்பர் டீலக்ஸ் முத்திரை உள்ள தனியார் பள்ளிகளில் படிக்க அனுப்பும் வசதியான பெற்றோர்களும் அங்கு கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளதால்தான் அனுப்புகிறாகள்.வெறுமனே ஹைடெக் வசதி மட்டும் இருந்து கற்பித்தல் தரம் குறைவாக இருந்தால் அனுப்பமாட்டார்கள். ஆக, எங்கும் எதிர் பார்க்க படுவது கற்பித்தல் தரம் மட்டுமே…!

இந்த எதிர்பார்ப்பு  ஏன் அரசு பள்ளிகளில் இல்லாமல் போய்விட்டது..? இன்று அரசு பள்ளிகளின் ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள்…? அரசு பள்ளியில் வேலை செய்து அதில் வரும் ஊதியத்தை மட்டும் பெருமையாக நினைக்கும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது கவுரம் பார்ப்பதாலா...?அல்லது அரசு பள்ளிகளில் சரியாக சொல்லி தருவதில்லை என்று நினைப்பதாலா..? இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லுங்களேன்..? ஒரு சில ஆசிரியர்கள் துவக்க பள்ளியில் சரியான வழிகாட்டல் கிடைப்பதில்லை அதனால்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம் என்று துவக்க பள்ளி ஆசிரியர்கள் மீது குறை சொல்கின்றனர். ஒரு சிலர் அப்போது தனியார் பள்ளிகள் நிறைய இல்லை அதனால் அரசு பள்ளியில் படிப்பதை தவிர வேறு வழியில்லாமல் இருந்தது என்கின்றனர்.  துவக்க பள்ளி ஆசிரியர்களை கேட்டால், ஆரம்ப பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒரு சின்ன வார்த்தையை கூட எழுத படிக்க வராத மக்கு பிள்ளைகளாகவே இருக்கின்றது. அதுவும் நாகரீகமே தெரியாத பிள்ளைகள். குளிப்பதில்லை… தலைசீவுவதில்லை அவர்களை மேய்ப்பதே பெரும்பாடாக உள்ளது எங்கின்றனர். ஆரம்ப பள்ளிகளின் கற்பித்தல் தரம் குறைந்த பின் ஏழை குழந்தைகள் மட்டுமே வரும் நிலையாகிவிட்டது. பின் எப்படி அவர்களிடம் புறத்தோற்ற அழகை எதிர்பார்க்க முடியும். நீங்கள் சொல்லி கொடுங்கள்.. சுகாதாரமாய்   நேர்த்தியாய் வர. அதற்கு சலிக்காத மனமும், அன்பும் உங்களுக்கு தேவை.    பிறக்கும் போதே எல்லா குழந்தைகளும் மக்கு பிள்ளைகளாகவா பிறக்கிறது..? சிறு குழந்தைகளுக்கு அடிப்படை அறிவை சொல்லி வருவதற்கு நிறைய முயற்சிதான் செய்ய வேண்டும். சிலர் துவக்க கல்வி முறை சரியில்லை என்றனர். அதற்காகதான் கல்வி முறையும் மாற்றி அமைக்கப்பட்டு, மாணவர்கள் தாமாகவே கற்றுக் கொள்ளும், செயல்வழிக் கற்றல் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டது ஆனால் எதை பதிலாக சொன்னாலும் ஆசிரியர் கற்பித்தல் முறைதான் முன் நிற்கிறது.
முன் காலங்களில் அரசு ஆசிரியர் பணிக்கு அத்தனை ஊதியம் கிடையாது.. ஆனாலும் அரசு பள்ளிகள்  பாகுபாடு இல்லாமல் அனைவர்க்கும் கல்வி கூடங்களாக இருந்தது. ஆசிரியர்கள் – மாணவர்கள் உறவில் பக்தி, மரியாதை இருந்தது. ஆசிரியர் பணி புனிதமான பணியாக இருந்தது.  இப்போது அரசு ஆசிரியர்களின் ஊதியம்தான் உயர்ந்திருக்கிறது… ஆனால் பள்ளிகள் உயரவில்லை. ஆசிரியர் பயிற்சி என்பது வேலை வாய்ப்பு அதிகம், நல்ல ஊதியம் என்றுதானே ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருக்கிறார்கள்.  நடந்து முடிந்த ஆசிரியர் பணிக்கான தேர்வின் ரிசல்ட்டை பார்த்தாலே தெரிகிறதே எத்தனை பேருக்கு கற்பித்தலுக்கான தகுதி இருக்கிறது என்று..! தங்கள் வாழ்க்கையில் வசதி வாய்ப்புக்களை பெருக்கி கொள்ளும் பணியாகவே ஆசிரியர் பணி இப்போது ஆகிவிட்டது. அரசு பள்ளிகளில் சம்பாதிப்பதோடு மட்டுமில்லாமல், காலை.. மாலை இருவேளையும்.. நான்கு பேட்ச்சாவது ட்யூஷன் வேறு நடத்தி வருமானம் பார்க்கின்றனர். இப்பொதெல்லாம் பைனான்ஸ், ரியல் எஸ்டேட் இந்த பிஸினெஸ்களில் வளைத்து போடுவது நிறைய ஆசிரியர்கள்தான்.

நான் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை குறை கூறும் நோக்கத்தோடு இந்த கட்டுரையை எழுதவில்லை. விதிவிலக்காக  நல்ல கற்பித்தல் அக்கறையோடு செயல் படும் அரசு ஆசிரியர்களும்,  அரசு பள்ளிகளும் இருப்பதை நான் மறுக்கவில்லை. நாம் எடுத்து கொள்வது பெரும்பான்மையான பள்ளிகளை.  ஏன் மற்ற துறைகளில் அக்கறையில்லாத ஊழியர்கள் நிறைய இல்லையா எங்களை மட்டும் ஏன் சொல்கிறீர்கள் என்று கோபப்படலாம். ஆனால் ஆசிரியர் பணி புனிதமான பணி..   உங்களிடம் ஒப்படைப்பது ஒவ்வொரு மாணவனின் எதிர்காலம். பணியை பொருளாதாரமாக பார்ப்பவர்கள் வேறு பணியை எடுத்துக்கொள்ளலாமே. என் அப்பா அரசு பள்ளி ஆசிரியராக பணி ஆற்றி ஓய்வு பெற்றவர். அப்போது அரசு ஆசிரியர்களுக்கு   நிறைய ஊதியம் கிடையாது. இப்போது அவர் வாங்கும் பென்ஷன் கூட  கை நிறைய கிடைக்கிறது.. பணி செய்யும் போது  கிடைத்ததை விட..! பணியில் அவர் சம்பாதித்தது நல்ல மாணாக்கர்களைதான். எங்களையும் அரசு பள்ளிகளில் தான் படிக்க வைத்தார்.  ஆனால் என் பெண்ணை என்னால் அரசு பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை.. இதற்கு காரணம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் முறையில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்று குறைபாட்டினால்தான்.  எங்கள் பள்ளியில் எல்லா பாடங்களுமே சரியான கற்பித்தல் அக்கறையோடு
 ஆசிரியர்கள் செயல் படுகிறார்கள் என்று எல்லா அரசு பள்ளிகளுமே செயல் பட வேண்டும். கல்வி முறை, கற்பித்தல் அக்கறை, பள்ளியின் தூய்மையான சூழ் நிலை இவையெல்லாம் இருந்தால்தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  உயரும். தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் குறையும். கல்வி வியாபாரமாவதை தடுக்க முடியும். அது வரை இலவசங்களுக்காக மட்டுமே வரும் ஏழைகளின் கூடங்களாக மட்டுமே அரசு பள்ளிகள் இருக்கும்.
   

Thursday 20 September 2012


Friday 14 September 2012

கரடி விட்டா நம்பாதிங்க..
உடன் கட்டையை அடியோடு ஒழித்த ராஜாராம் மோகன்ராய் ஒரு நாள் தன் நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் கரடியை சங்கிலியால் பிடித்து கொண்டு இதோ பாருங்கள் கரடியின் முடி இதை கையில் கட்டி கொண்டாலோ அல்லது மோதிரமாக போட்டு கொண்டாலோ லட்சாதிபதி ஆகி விடுவீர்கள் என்றான்.நானும் ஒரு முடி வாங்குகிறேன் என்று நண்பர் கிளம்பினார்.எத்தனை முடி வாங்கினால் நீங்க லட்சாதிபதி ஆவிர்கள் என்று கேட்டார் ராஜாராம் மோகன் ராய். ஒரு முடி வாங்கினால் போதும் என்றார் நண்பர். ராஜாராம் அதற்கு கூறினார் நண்பரே யோசித்து பாருங்கள் உங்களிடம் ஒரு முடி இருந்தாலே நீங்கள் பல லட்சங்களுக்கு அதிபதியாக முடியும் என்றால் அந்த கரடிக்கு சொந்தக்காரனிடம் எத்தனை ஆயிரம் முடிகள். அவற்றை எல்லாம் அவனே வைத்துக்கொண்டு ஏன் அவன் கோடீஸ்வரனாக கூடாது?  ஏன் தெரு தெருவாய் பிச்சைக்காரனை போல் கூவி கொண்டிருக்கிறான்  என்று கேட்டு நண்பரை யோசிக்க வைத்தார்.நம்பிக்கை வைத்தால் உயரலாம். மூட நம்பிக்கை வைத்தால் முன்னேறவே முடியாது.

“ வசந்த விழா…!”



விநாயகர்  சதுர்த்தி விழா.. வசந்தம் நகரில் இளைஞர் குழு சுறு சுறுப்பாக செயல் பட்டு கொண்டிருந்தது. ஏரியா முழுக்கும் வசூல் வேட்டை நடத்தியவர்கள்  இனியவன் வீடு வந்ததும் தயங்கி    நின்றார்கள். இனியவன் தீவிர நாத்திகவாதி.. கோயில் குளம் என்று வந்தால் விரட்டாத குறையாக பேசி அனுப்புவார். அவர் மனைவி அப்படி இல்லை, ஆன்மிக ஈடுபாடு அதிகம். அதனால் இனியவன்  இல்லாத   நேரமாக டொனேஷன் கேட்டு போவார்கள். அவர் இல்லை என்று நினைத்துதான் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்கள்,
இனியவன்  தான் திறந்தார். “வாங்க ஸார்வாங்கஎன்ன விஷயம் எல்லாரும் கும்பலா வந்திருக்கிங்க..?”
ஸார் விநாயகர் சதுர்த்தி வருதில்ல அதான்.. வந்தோம்…” தயங்கினார்கள்.
அதுக்கு நான் என்ன பண்ணனும்..?”
வருஷா வருஷம் விழா  நடத்துகிறோம்…   நம்ம ஏரியா ஒவ்வொரு வீட்லயும் ஆயிரம் ரூபா போடறோம்..   நீங்களும் மறுக்காம தரனும்..!”
அது சரி .. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் கரெக்டா பதில் சொல்லிட்டீங்கன்னா.. இரண்டாயிரம் ரூபாயே தர்றேன்..  இது எத்தனையாவது பிறந்த  நாள்…? சொல்லிட்டு வாங்கிட்டு போங்க…”
வந்தவர்கள் நெளிந்தார்கள்..இனியவன் மனைவி நளினி அவர்களிடம் கண்களாலேயே ஸாரி சொன்னாள். “ சரிங்க ஸார் நீங்க கொடுக்காட்டியும் பரவாயில்ல.. இப்படி நக்கல் பண்ணி மத்தவங்க மனசை புண்படுத்தாதிங்க…” கிளம்பினார்கள்.
வெளியில் போனவர்கள் , “ ஏம்ப்பா இதுக்குதான் இந்த ஆள் வீட்டுக்கு போக வேண்டாம்னு முன்னேயே சொன்னேன்இவரு இப்படி பேசிகிட்டிருக்கிறதாலதான்  அந்தம்மா வயித்துல புழு பூச்சி இல்லாம  ஊரான் குழந்தையை எல்லாம் ஏக்கமா பார்த்துகிட்டிருக்கு… “
நளினியின் காதில் லேசாக விழுந்தது.. கண் கலங்கியது, “ என்னங்க உங்களுக்கு புடிக்கலைன்னா விட்டுடங்க.. எதுக்கு வர்றவங்க கிட்ட எல்லாம் உங்க புத்திசாலித்தனத்தை எல்லாம் காட்டறிங்க…”
“  ஆமா பாரு நானா போய் அவங்ககிட்ட என் பிரசங்கத்தை வச்சிகிட்டேன்.. எங்கிட்ட கேட்டா இப்படிதான் சொல்வேன்..   நீ வேணா போய் கொடுத்துக்கோ நான் என்ன உன்ன தடுக்கறேனா…?
நீங்க இப்படி பேசறதாலதான் நமக்கு குழந்தையே இல்ல…”
“  நான் பேசறதுக்கு  நீ எப்படி பொறுப்பாவே…?  நீ நல்லாத்தானே பக்தியா இருக்கே.. உன் மேல ஏன் கருணை வரலை..?
போங்க.. எவ்வளவோ சம்பாதிக்கிறோம் நாலு பேரோடு நீங்களும் கொடுத்துட்டு போக வேண்டியதுதானே.. பேர்லதான் இனிமை.. பேசறதெல்லாம் கசப்பா…”
“  நளினிஉண்மையை சொன்னா யாருக்கும் கசப்பாதான் தெரியும்.. நாலு பேரோடு நானும் ஒண்ணா கொடுத்துட்டு போகிறேன்ஆனா   நான் சொல்ற விஷயத்துக்கு அந்த நாலு பேரும் முன்ன வருவாங்களா..?  இங்க பக்கத்துல இருக்கிற ஸ்கூலை பாரு வெளிச்சம் கூட இல்லாம குழந்தைங்க அவஸ்தை படுதுலைட்டே இல்ல.. அதுல ஃபேன் வேற எங்க  இருக்கும்.. பக்கத்துலயே கழிவு நீர் கால்வாய் .. பகல்லயும் கொசுத்தொல்லை அதிகமா இருக்கும். இந்த ஸ்கூலுக்கு வெள்ளை அடிச்சி, ட்யூப் லைட், ஃபேன் போட இருபதாயிரம் வேணும்.. யாராவது கேட்டா தருவாங்களா… “
ம். அது கவர்மெண்ட் ஸ்கூலுதானே.. நாம ஏன் போடனும்..?”
அரசாங்கம் வசதி பண்ணமுடியலைன்னாவருமானம் வராத எடத்துல செலவு பண்ணலை ..நாம ஏன் அரசியல் வாதியை நம்பனும்..?  அதுல படிக்கிறது வசதி கொறஞ்ச பசங்கதான்..  நாமளே ஓண்ணாயிருந்து இந்த மாதிரி   நல்ல விஷயங்களை பண்ணா என்ன..?”
என்ன வேணா பண்ணுங்க..  கடவுளை மட்டும் பழிக்காதிங்க.. “
காலையில் நான்கு மணிக்கே ஸ்பீக்கரில் பாட்டு ஒலித்தது தெருவெங்கும் மாவிலை தோரணங்கள்.. வெளியில் வந்த நளினி தெருக் கோடியில்  பெரிய சிலை வைத்து கோலகலாமாயிருந்த விழாவை கண் குளிர பார்த்தவள், ‘ பகவானே அவர் எது சொன்னாலும் எனக்காக மன்னிச்சிடுப்பா.. அவர் மனசை நீதான் மாத்தனும்..” கன்னத்தில் போட்டுக் கொண்டாள்
நளினி அந்த பக்கமே பார்த்துகிட்டிருக்கியேகொஞ்சம் திரும்பி அந்த ஸ்கூலை பாரேன்.. “
திரும்பியவள்  ஆச்சரியப்பட்டு போனாள், ஸ்கூல் முழுதும் பளிச்சென வெள்ளை அடித்து ட்யுப் லைட் அங்கங்கே பிரகாசித்து கொண்டிருந்ததுமெரூன் கலரில் ஃபேன் கள்  ஒவ்வொரு வகுப்பறையிலும்  தொங்கி கொண்டிருந்தது ஜன்னல் வழியாக தெரிந்தது.
நீ எனக்கு தெரியாம கோவிலுக்கு பண்றே.. நானும் உனக்கு  சொல்லாம இந்த விஷயத்தை பண்ணிட்டேன்  நம்ம  காசுல.. என்ன செலவு கொஞ்சம்  ஜாஸ்திதான்.. இருந்தாலும்  நமக்கு குழந்தை பொறந்திருந்தா அத படிக்க வைக்க வருஷத்துக்கு லட்ச கணக்கா செலவு பண்ணியிருப்போம்லமத்த குழந்தைகளுக்காக இருபதினாயிரம் தர்மமா பண்ணதில ஒண்ணும் தப்பில்ல…”
அய்யா ..  உங்களுக்கு பெரிய மனசுங்கநீங்க  நல்லாயிருக்கனும்..! என் புள்ளைங்க நாலும் அங்கதான் படிக்குது…”  தெருவில் காய் விற்று கொண்டு போகும் குப்பம்மா கை கூப்பி சொல்லிவிட்டு போனாள்.
 நளினி, தன்  கணவனையே பார்த்து கொண்டிருந்தாள்.. “ ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்…”  வீட்டில் முகப்பில் அவர் ஒட்டி வைத்திருந்த வாசகத்தை  கண்களால் காட்டினார். அதன் அர்த்தம்  இப்போது புரிந்தவளாய் அவளும் மெல்ல தலையசைத்தாள்

இரும்பு, பிளாஸ்டிக்…. எது வேணும்..?
 




      நமக்கு முன்னோர்கள் உரல்ல மாவரைச்சி , கிணத்தில தண்ணி இறைச்சி துணி துவைச்சி..  விறகடுப்புல சமைச்சி மாங்கு மாங்குன்னு வீட்டு வேலை செஞ்சு இருக்காங்க…  இப்ப நம்மால எல்லாத்துக்கும் மிஷின் என்றாலும் வேலை செய்ய முடியாம சலிச்சுக்கிறோம். இதற்கு நாம ஒரு சாக்கு வேற சொல்லிக்கிறோம்அந்த காலத்து உடம்பு நல்லா ஸ்டார்ங்..ப்பா .. அவங்க சாப்பிட்டா மாதிரியா நாம சாப்பிடறோம்… ? அவங்களுக்கு வேற வேலை இல்லஇப்ப மிஷின் லைப் பில் நாம எவ்வளவு விஷயம் கவனிக்க வேண்டியிருக்கு..? சரிதான்.. விஞ்ஞான வளர்ச்சியில்   நமது நேரத்தை மிச்சப்படுத்த கூடிய விஷங்களை பயன் படுத்தி கொள்வது புத்திசாலித்தனம் தான். அவங்க மாட்டு வண்டியில போனாங்கஇப்ப மாட்டு வண்டியில போனா ஆபிசில் இன்னிக்கு போட வேண்டிய அட்டெணன்ட்ஸை மறு  நாள்தான் போடமுடியும். ஆனா ஆரோக்கியம்…? அறுபது வயசுக்கு மேல கடைபிடிக்க வேண்டிய டயட்டை இப்ப இருபது வயசுக்கு மேலயே கடைபிடிக்க வேண்டியதாயிருக்கே..? அந்த காலத்து மனிதனோ, இந்த காலத்து மனிதனோ உடம்பு எல்லாருக்கும் ஒரே விதமாதானே இயற்கை படைச்சிருக்கு…?  அந்த காலத்தில மெட்டல் உடம்பும், இந்த காலத்தில் பிளாஸ்டிக் உடம்புமா இயற்கை மாத்திடுச்சி. நாம கடை பிடிக்கிற வாழ்க்கை முறைகள் தான் நம்ம உடம்பை வலிமை இல்லாததாக மாற்றி கொண்டு வருக்கிறது. உணவு, உழைப்பு.. ஓய்வு இப்படி பல விஷயங்கள்ல நாம முன்னோர்களிடமிருந்து மாறுபட்டிருக்கோம்.
90 வயது கடந்த ஒரு பெரியவரைஎப்படி  இந்த வயது வரை இவ்வளவு நலமுடன் இருக்கிற ரகசியம் என்ன ?’என்று கேட்ட போது, அதற்கு அவர்

ஓரடி நடவேன்
ஈரடி கிட வேன்
இருந்துண்ணேன்
கிடந் துறங்கேன்
என்றார்இதன் அர்த்தம் நடந்து சென்றாலும், தன் அடியில் தன் நிழல் இருக்கும் உச்சி பொழுதில்  ஒரு வழியும் நடக்க கூடாது. ஈரமுள்ள இடத்தில் படுக்க கூடாது , முன்பு உண்ட உணவு செரிப்பதற்கு முன் உண்ணக்கூடாது, அயர்ந்த நேரம் தவிர மற்ற வேளைகளில் உறங்கி கிடக்க கூடாது.
உச்சி பொழுது மட்டுமில்ல.. எந்த பொழுதுமே நமக்கு வீட்டை விட்டு இறங்கிட்டா அடுத்த   நடை ஒரு டூ வீலரையோ..   த்ரீ வீலரையோ.. போர் வீலரையோ     நோக்கிதானே…!  அயர்ந்த நேரம்          என்ன…  லீவு   நாள் பூரா படுக்கையில் கிடந்து கிட்டே ஸ்நாக்ஸ் வித் டி.வி  தானேஇப்படி எல்லாம் சோம்பேறியா இருக்கிறவரை பிளாஸ்டிக் உடம்புதான்…!