Saturday 30 May 2015

கல்வி என்ற காலன்..


( 30-5-15 தினமலர்- பெண்கள் மலரில்..)

தோழி ஒருவரின் மகள் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெறவே வாழ்த்து சொல்ல போன் செய்த போது, அவரோ “ என்ன சொல்வது வெறும் எழுநூறு மார்க்தான் வாங்கியிருக்கா.. பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் வாங்கியிருந்தாங்கன்னு இதுல நம்பிக்கையா இருந்தேன்.. இப்படி  நான் ஏமாறுவேன்னு நினைக்கலை..  நல்லா ஹார்டு வொர்க் பண்ணியிருந்தாத்தானே?  நாந்தான் படிக்கலை இவங்களாவது நல்லாயிருக்கனும்னுதானே இவ்வளவு சொன்னேன் என்று கோபமாக திட்டிக்கொண்டே இருந்தார்.  மதிப்பெண் வந்த பிறகு இனி இதைப்பற்றி பேசி பெண்ணின் மனதை நோகடிக்க வேண்டாம், அழப்போகிறார்கள் என்று சொன்னேன். தோழியோ, “ அழட்டும்.. இதுதான் நேரம்னு வெளுத்து வாங்கிட்டேன்.. அழுதுட்டு சாப்பிடாமதான் இருக்கா.. இருக்கட்டும் எத்தனை நாளைக்கு இருப்பா?” என்றார் சர்வசாதாரணமாக. எல்லோருக்கும் ஏற்ற கல்வியும், வாழ்க்கைக்கான வழியும் இருக்கிறது அவர்களுக்கு எந்த பாடத்தில் ஆர்வம் உள்ளதோ அதை கொடுத்து தொடர்புடைய பணிக்கு அனுப்பலாமே என்று அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வியை எப்பாடு பட்டாவது கொடுத்து விட வேண்டும். அது முடித்து அதற்கு சம்மந்தமில்லாத எந்த வேலைக்கேனும் சென்று அதிக ஊதியத்தில் பணியில் அமர வேண்டும் என்ற கட்டாயத்தில்தான் இருக்கின்றனர்.
பொறியியல் படித்து ஸாப்ட்வேர் துறையில் ஆர்வமில்லை என்று தொழிற்சார்ந்த வேலைகளுக்காக அல்லாடி காத்திருக்கும் பிள்ளைகளை, “கிடைத்த வேலைக்கு போகவில்லை என்றும் தண்டச்சோறு தின்று ஊரை சுற்றி வருகிறது..!” என்று சாடும் பெற்றோர்களையும்... “ சரி வேலைக்குதான் போகலை அந்த டப்பா இஞ்சினியரிங் காலேஜ் ல டீச்சிங் பண்ண கூப்பிடாறாங்க ஆறாயிரம் ஏழாயிரம் சம்பளம் என்றாலும் போய் தொலையமாட்டேங்குது..!” என்று வசைபாடும் பெற்றோர்களையும்தான் அதிகமாக பார்க்க முடிகிறது. அந்த பிள்ளைகளின் மன நிலையை நினைத்து பாருங்கள், எல்லோருமே பொறியியல் என்றால் வேலைக்கு எங்கே போவது? லட்சக்கணக்கில் செலவழித்து படித்துவிட்டு இன்று ஆறாயிரம், ஏழாயிரம் ஊதியத்திற்கே செல்ல வேண்டிய நிலையாக இருக்கிறது. இதை யோசிக்கும் ஒரு சில பெற்றோர்கள் மீண்டும் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் யுஜி கோர்ஸ் சேர்த்து ஆசிரியர் பயிற்சி கொடுத்துவிட்டால் பிற்காலத்தில் ஆசிரியப்பணியாவது கிடைக்கும் என்று மீண்டும் இளங்கலை வகுப்புகளில் சேர்ப்பிக்க திரும்புகிறார்கள்.
மாணவர் கற்றல் திறனுக்கேற்ற கல்வி, அதன் அறிவை சார்ந்த பணி என்ற காலம் எல்லாம் போய் பணம், கல்வி, பெருமை என்ற நிலையே நிலவி வருகிறது. உறவினர் ஒருவர் அவருடைய மகள் மதிப்பெண் குறைவாக இருப்பதால் அறுபது லட்சம் கொடுத்து மருத்துவ கல்வி சேர்த்திருப்பதாக சொன்னார்கள். மருத்துவம் என்பது மனித உயிர் சம்மந்தப்பட்ட கல்வி.. இதை விலை கொடுத்து வாங்கி கற்றல் திறன் குறைவாக உள்ளவர்களால் அந்த கல்வியை புரிந்து அவர்கள் எப்படி திறமையாக மருத்துவப் பணியை செய்ய முடியும்? அத்தனை செல்வாக்கு உடையவர்கள் அந்த பணத்தை வங்கியில் முதலீடு செய்து அதை வைத்து அவர்கள் எதிர்காலத்தை பார்த்துக்கொள்ள வழி செய்ய முடியும்தானே? அந்த இடத்தை திறமையாக உள்ள யாரோ ஒரு ஏழை மாணாக்கருக்கு  வாய்ப்பு கொடுக்கலாம் இல்லையா? இப்போதுள்ள நிலையில மருத்துவப்படிப்பு வசதிப்படைத்தவர்களுக்கானதாக மட்டும் மாறிவிட்டதால் அங்கு அதிக மதிப்பெண் பெற்று உள்ளே நுழையும்  ஏழை மாணாக்கர்கள் அவர்கள் வாழ்க்கை முறையில் அன்னியப்பட்டு போகும் மன அழுத்த சூழலான நிலையும் நிலவுகிறது. விலை உயர்ந்த கார்களில் ஆயிரக்கணக்கில் அன்றாட கைச்செலவு செய்யும் மாணாக்கரிடையே விலை நிலம் விற்றோ கடன் வாங்கியோ படிக்க வைக்கும் குழந்தைகள் மன நிலையில் தாழ்வு மனப்பான்மையும், அவர்கள் போன்று இருக்க முடியவில்லை என்று குற்றவுணர்ச்சியும் நெருக்கி  தவறான முடிவுகளை எடுக்கும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.
  நன்கொடை கொடுத்து பொறியியல் படித்துவிட்டு நல்ல வேலைக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பணியில் அமரும் பிள்ளைகள் யோசிப்பது முதலில் போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்றுதான்..! அலுவலகங்களில் ஊழியர்களிடையேயும் அதிகாரிகளிடையேயும் லஞ்சம் தலைகாட்ட துவங்குவதே சமூகமும், பெற்றோர்களும் உருவாக்கிவிட்ட இந்த சூழ் நிலையும் ஒரு காரணம் என்பதை யோசித்துதான் பார்க்கவேண்டும்.
நல்ல மனிதராக வாழ்வதைவிட பேராசையுடன் வாழ்வதையே கற்றுத்தந்து கொண்டிருக்கும் இந்த கொலைகார கல்விமுறையை மாற்றியமைக்காவிட்டால் வாழ்க்கை என்பது வெறும் பணமாக மட்டும் மாறி சமூக குற்றங்களும், ஒழுங்கற்ற வாழ்க்கையும்தான் உருவாகும் என்பதில் சந்தேகமேயில்லை.
 எல்லா பெற்றோர்களும் சிந்திப்பது நாம்தான் நன்றாக இல்லை நம்பிள்ளைகளாவது நன்றாக இருக்க வேண்டும். அப்படி நினைக்கும் எந்த பெற்றோர்களும் அவர்கள் எந்தவிதத்தில் வாழாமல் போய்விட்டார்கள் என்று யோசித்துப்பார்ப்பதில்லை.  உண்ண உணவும் உறைவிடமும் , மனித நேயமும் தாண்டி பேராசையை நோக்கி ஓடுவதில்தான் நல்ல வாழ்க்கை இருக்கிறது என்ற மன நிலைக்கு வந்துவிட்ட பின் கல்வி என்பது வழிகாட்டி இல்லை காலனாகவே மாறித்தான் போய்கொண்டிருக்கிறது. அதனால்தான் வருடந்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது மாணவ தற்கொலைகள்..!

Thursday 13 November 2014

பாதைகள்..........!


சீனு பரபரப்பாய் அலுவலக வேலையில் மூழ்கியிருந்த போது செல்போன் சிணுங்கியது.. டிஸ்ப்ளேயில் பிரதாப்..

“ ஹலோ  சீனு ... என்ன பிஸியா? நம்ம சூரி செத்துப்போயிட்டான்பா.. வினோத் இப்பத்தான் போன் பண்ணான்.. ஒரே ஊர்ல இருக்கோம்.. கேள்விப்பட்டுட்டு எப்படி.. போகலாமா?

ஒரு நிமிடம் அதிர்வை சுமந்து, “ என்ன ஆச்சி திடிர்னு.. சரி நான்  ஜீவாவுக்கும் போன் பண்ணிடறேன்  ஒன் அவர் கழிச்சி கிளம்பலாம்..”

“ அதான் அவனைப்பத்தி தெரியுமே குடிச்சி குடிச்சி உடம்பு மொத்தம் ஸ்பாயில் ஆயிடுச்சு….. பாவம் அவன் பொண்டாட்டி இரண்டு பசங்க வேற…”

இந்த முப்பத்தெட்டு வயதில் என்ன மரணம் வந்து விட்டது.. சூரியை நினைக்கும் போது அவன் ஏன் இப்படியே வாழ்ந்துட்டு போய்விட்டானென்று வருத்தமாகவும் கோபமாகவும் வந்தது... சிலர் திருந்தும் போது வாழ்க்கை ஓடிவிட்டிருக்கும்... ஆனா சூரி திருந்தாமலே வாழ்க்கையை முடித்துவிட்டான்  என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

ப்ளஸ் டூ முடித்த பிறகு இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்த போதுதான் ஹாஸ்டலில் நான், சூரி, வினோ, ஜீவா  நாலு பேரும் ரூம் மேட்ஸாக இருந்தோம். சூரியைத்தவிர நாங்க மூணு பேரும் வீட்டு கஷ்டம் தெரிந்து  படிப்பே கதி என்று இருப்போம்..  சூரியும் அப்படி ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை... அவன் பிறந்த போதே அப்பா இறந்து விட்டாராம்.. அவனுக்கு முன்னாடி ஒரு அண்ணன், அக்கா.. எல்லோரையும் அவன் அம்மாதான் கஷ்டப்பட்டு வேலைக்கு போய் படிக்க வைத்தாள்..  ஹாஸ்டலுக்கு வரும்போதெல்லாம் எங்களிடம் 
சொல்லிவிட்டு போவாள்,

“ தம்பி...  நீங்களும் என் புள்ளைங்க மாதிரிதான்... எப்படியோ அவங்க இரண்டு பேரும் ஒழுங்கா ஆளாயிட்டாங்க...இவன் சின்னப்புள்ளைலர்ந்து சகவாசம் சரியில்லை... எவ்வளவோ புத்திமதி சொல்லியும் ஒழுங்கா படிக்கலை... இந்த சீட் வாங்கவே யார் யாரோ காலிலோ விழுந்து சேர்த்திருக்கேன்... கிட்டருந்து கொஞ்சம் பார்த்துக்கங்கப்பா.. படிச்சி பாசாயி ஒரு வேலைக்கு போயி அவன் வாழ்க்கைய பார்த்துக்கிட்டான்னா அதுக்கப்பறம் என் உசிரைப்பத்தி கவலை இல்ல...”

அந்த தாயின் கண்களில் இருந்த சோகம் சாப்பிடும் போது தொண்டைக்குள் சிக்கும். ஆனால் சூரி உணர்வதாக இல்லை...அடிக்கடி வகுப்பை கட் அடித்து விட்டு சினிமா சுற்றுவதும் 

 நண்பர்களுடன் தண்ணியடிப்பதுமாக இருந்தான்.

“ மச்சி... நீ ரொம்ப தப்பு பண்றே.. ஒழுங்கா க்ளாசுக்கு வா.. உங்கம்மா எவ்வளவு கஷ்டபடறாங்க ஏண்டா நீ இப்படி இருக்கே..?” நாங்கள் திட்டுவது அவன் காதில் விழாது...

“ விட்றா.. நான் பொறந்தப்பவே எங்கப்பனை முழுங்கிட்டேன்.. படிச்சி என்னத்தை பண்ணப்போறேன்...”  அலட்சியம் கலந்து வெறுப்போடு சொல்லிவிட்டு வெளியில் போய்விடுவான்... தண்ணியடித்துவிட்டு வாசனை தெரியாமல் இருக்க பாக்கை போட்டுக்கொண்டு ஒன்றும் தெரியாதவனாக வருவான். அவன் பேச்சில் மட்டும் பெரிய யோக்கியத்தனம் காட்டிக்கொள்வான்..

“ மச்சி... இத முடிச்சிட்டு.... அந்த கோர்ஸை முடிச்சோம்னு வச்சிக்க டக்குன்னு பாரின் போயிடலாம் அப்புறம் ஆறே மாசத்துல பெரிய பணக்காரனாயிடலாம்டா...”

“ பெரிய இவனாட்டாம்... வாயில வண்டி ஓட்டிட்டிருக்காத.. ஒழுங்கா அரியர் இல்லாம் பாஸ் பண்ற வழியை பாருடான்னா...பாரின் போறதை பத்தி சொல்லிட்டிருக்கான்...” வினோ கத்துவான்.

மூன்று  வருடங்களில் பத்து அரியர்ஸ் வைத்திருந்தான்... நாங்களும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் திருந்துவதாக இல்லை.. இதில் யாரோ ஒரு பெண்ணை காதலித்து சுற்றிக்கொண்டிருந்தான்.. இவனைப்பற்றி தெரிந்ததும் அவள் காதலை முறித்துக்கொண்டாள் என்று வெறித்தனமாய் கத்தினான்..

“ சீனு நான் அவளை சும்மா விடப்போறதில்லைடா... பிடிக்கலைன்னா முதல்லயே சொல்ல வேண்டியதுதானேடா... பிடிச்சிருக்குன்னு இத்தனை நாளா பேசிட்டு இப்ப போனைகூட எடுக்க மாட்டேன்றா... அவ இருக்க ஹாஸ்டல் பூரா போஸ்டர் அடிச்சு அவ மானத்தை வாங்கினாத்தான் அவ இன்னொருத்தன் கூட சுத்தமாட்டா...”

எங்களுக்கு அந்தப்பெண்ணை நினைக்கும்போது பாவமாகத்தான் இருந்தது... ஆரம்பத்தில் இவன் ஆளையும் பேச்சையும் பார்த்துதான் அவன் வசப்பட்டுவிட்டிருக்கிறாள்... போக போக அவன் போக்கை தெரிந்து கொள்ளவும்தான் மனசொடிந்து போய் விலகியிருக்கிறாள்... நாங்கள் எப்படியோ அவனை சமாதானப்படுத்தி அந்தப்பெண்ணை காப்பாற்றினோம்.

கல்லூரி முடிந்து கேம்பஸில் நாங்க மூணுபேருமே செலக்ட் ஆகி நல்ல வேலைக்கு போய்விட்டோம்.. சூரி மட்டும் அரியர் முடிக்காமல் காலேஜை விட்டுப் போனான்.

அதற்கு பிறகு எப்போதாவது அவன் வீட்டுக்கு போன் பண்ணி பேசும் போதெல்லாம் அவன் அம்மாதான் பேசுவாள்... சூரி முன்னைக்கு இப்ப இன்னமும் கெட்டு போயிருக்கானென்று... எப்போதும் நாலைந்து பேரோடு ஊர் சுத்திக்கொண்டும் குடியுமாக இருக்கிறானென்றும் கொஞ்சம் அறிவுரை சொல்லி அரியரை முடிக்க சொல்லி சொல்வாள்.

“ சூரி உங்க அக்காவையும் அண்ணனையும் பாருடா லைப்ல செட்டிலாயிட்டாங்க... நீதான் வேஸ்ட் இன்னமும் இப்படி இருந்தா எதிர்காலம் என்னாகறது எப்படியாவது அரியரை முடிச்சி வேலைக்கு போயிடுடா...”

அப்போதைக்கு கேட்பவன் போல் தலையாட்டி அரியரை எழுதாமலே விட்டான். அவனுக்கு கடை வைத்து கொடுத்து கல்யாணத்துக்கு பிறகாவது திருந்துவானா என்று அவன் அம்மா பெண் பார்த்தாள்... அவன் திருமணத்துக்கு போயிருந்ததோடு சரி. அடுத்து  நாங்க மூணு பேருமே வேலை, கல்யாணம் என்று முடிந்து சென்னையில் செட்டில் ஆகி காலம் ஓடிட்டிருந்தப்ப, சூரியும் இங்கதான் இருப்பதாய் போன மாதம் வினோ போன் செய்திருந்தான்,

“ மாம்ஸ்.. சூரி இங்கதாண்டா இருக்கான்... ஒரு நாள் வண்டலூர் போறப்ப பார்த்தேன்.... அடையாளமே தெரியலை... பக்கத்துலதான் வீடுன்னு கூட்டிட்டு போனான்.. அவன் அம்மா செத்து போயிட்ட பிறகு இவனுக்கு வருமானமே இல்லை... ஒழுங்கா வேலைக்கும் போறதில்ல போலிருக்கு... எதோ ஒரு ஒண்டு குடித்தனத்துல அவன் பொண்டாட்டி கார்மெண்ட் கம்பெனிக்கு வேலை போறாங்க.. பெரிய பையனுக்கு பதினொரு வயசாவுது...  நாலு வயசு பொண்ணு வேற இருக்கு..”

அதற்கு பிறகு வினோவை அடிக்கடி சந்தித்து பெண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை, பிள்ளைக்கு அடி பட்டிருக்கு என்று ஆயிரம் ஐனூறு என்று கடன் கேட்டிருக்கிறான்.

“சீனு தப்பித்தவறி அவனை பார்த்தாக்கூட உன் நெம்பரையும் அட்ரசையும் சொல்லிடாத... பொய் சொல்லி எங்க எல்லார்ட்டயும் கடன் வாங்கி குடிச்சிட்டிருக்கான்.. “ என்று ஜீவா சொன்ன போது  நான் சூரியை சந்தித்து விடக்கூடாதென்றே நினைத்துக்கொண்டேன்.

இப்போது கடைசியாக அவனை பார்க்கும் படி போய்விட்டது. “ ஜீவா ..சூரி செத்து போயிட்டானாம் நாம எல்லாம் அவங்க வீட்டுக்கு போய் வொய்ப்புக்கு ஆறுதல் சொல்லிட்டு வருவோமாப்பா...?”

 மூணு பேரும் கிளம்பினோம்...

“இவனுக்கெல்லாம் கல்யாணம் பண்ணியே இருக்க கூடாதுடா.. பாவம் அந்த பொண்ணு இரண்டு பசங்களை வச்சிக்கிட்டு காலம் பூரா கஷ்டப்படனும்...” ஜீவா புலம்பிக்கொண்டே வந்தான்.

****
சூரி மனைவியின் ஒன்றிரண்டு சொந்தங்களை தவிர அங்கே உதவிக்கு கூட ஆள் இல்லை... குடித்து அக்கம் பக்கமெல்லாம் தகறாறு செய்கிறானென்று யாரும் அவன் குடும்பத்தை அண்டி பழகக்காணோம்.

வைதேகி எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்... பாவம் இத்தனை நாள் இவனுடன் எவ்வளவு பட்டிருப்பாளோ?

அந்த சின்னப்பெண் நடந்தது தெரியாமல் சொப்பு வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். பையன் மட்டும் வந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“ அங்கிள் எங்கப்பா எங்களை எப்ப பாரு காசு கேட்டு அடிச்சிட்டிருப்பாரு...  நான் பேப்பர் போட்டு வாங்கிட்டு வர்ற காசைக்கூட பிடுங்கி குடிக்க போயிடுவாரு... ஒவ்வொரு நாளைக்கு என்னையே வாங்கிட்டு வர சொல்லி அனுப்புவாரு...  நான் போகலைன்னா வீட்ல இருக்க சாப்பாடை எடுத்துட்டு போய் சாக்கடையில் கொட்டிடுவாரு.. ஸ்கூல்ல எல்லாரும் குடிகாரன் பையன்னு என்னைய கேலி பண்ணும் போது அழுகையா வரும்.. அப்பா வேணாம் அங்கிள்.. நானே நல்லா படிச்சி எங்கம்மாவையும் தங்கச்சியையும் காப்பாத்துவேன்...”

ஆயிற்று... சூரி மண்ணுக்குள் புதைந்து போனான்... எல்லாம் முடிந்து திரும்பும் போது அவன் பையன் கேட்டான்..

“ அங்கிள்.. அப்பா எந்திரிச்சி வந்துரமாட்டாரே..? 
                           

                                         ***


( இந்த சிறுகதைக்கு கரு எழில் அவர்களிடம் பேசும் போது கிடைத்தது...  எழில் அவர்களுக்கு நன்றி!)


Wednesday 15 October 2014

அன்புள்ள நதியா....






தங்க மங்கை மாத இதழுக்காக நடிகை நதியாவுடன் பேசிய போது அவர் ஒரு நல்ல நடிகையாக மட்டுமில்லாமல் பண்புடன் பழகும் இனிய குடும்ப தலைவியாக தெரிந்தார்............ 

http://www.thangamangai.com/e-book/2014/oct/index.php

Wednesday 18 June 2014

ஒத்த ரூபா....!

மணி ஒன்பது அடித்ததும் ராதாவிற்கு படபடப்பு கூடியது,’ ம் என்னதான் ஓடி ஓடி செஞ்சாலும் நேரம் போறதே தெரியலை...  அவசரமாக கிச்சனுக்குள் நுழைந்து காஸ் ஆப் பண்ணியிருக்கோமா என்று செக் செய்து கதவை பூட்டி பஸ்ஸை பிடிக்க ஓடினாள்.

இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தது பரவாயில்லை வேகமாக நடந்தால் சீட்டில் உட்கார்ந்து விடலாம்..  நேற்றே அந்த சிடுமூஞ்சி மானேஜர், “ மேடம் உங்களை பார்த்து மத்தவங்களும் லேட்டா வர்றாங்க..  நாளையிலர்ந்து டைமுக்கு வரலைன்னா அட்டெண்ட்டஸ்ல ஸைன் பண்ணாதீங்க...”

“ என்ன சார் நான் வேணும்னா லேட்டா வர்றேன்... குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அவருக்கும் லஞ்ச் ரெடி அனுப்பி வர்றதுக்குள்ள எப்படி பார்த்தாலும் ஒரு அஞ்சு பத்து நிமிஷம் லேட்டாயிடுது... “

“ அது எனக்கு புரியுதுமா ஆனா ஆம்பிளைங்க லேடி ஸ்டாப்னா மட்டும் ஒண்ணும் கேட்கறதில்லைன்னு சண்டைக்கு வர்றாங்க...”

ம் என்னதான் படிச்சாலும் இரட்டைச் சுமையை இல்ல சுமக்க வேண்டியதாயிருக்கு..  இவங்களுக்கு எங்க புரியுது.. ? யோசித்துக்கொண்டே வந்தவளை எதோ ஒரு குரல் தடுத்த்து...

“ ஏ குழந்தை ஒரு ரூபா கொடேன்..?”

திரும்பி பார்த்தாள்.. கிழிசல் துணியுடன் தலை கலைந்த அந்த கிழவி இவளைத்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்...

ராதா யோசிப்பதற்குள், வழியில் சென்ற ஒருத்தி, “ நீங்க போங்க மேடம் அது பைத்தியம்...இப்படிதான் போற வர்றவங்ககிட்ட  காசு கேட்டுட்டிருக்கும்...”

அதோடு நேரமாகிவிடவே அந்த கிழவியை கடந்து போய்விட்டாள்.

மறு நாளும் வழக்கம் போல் அடித்து பிடித்து நடந்து கொண்டிருக்கையில் அதே கிழவியின் குரல், “ ஏ குழந்தே ஒரு ரூபா கொடேன்?”  கைகளால் மண்ணை அலைந்து அதில் கீழே விழுந்திருந்த வடையை பிய்த்து வாயில் போட்டு கொண்டிருந்தது... ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும் நேரமாகிவிட்டதால் கிழவியை கடந்து போய்க்கொண்டிருந்தாள்..

தினமும் அந்த குரல் பழகி விட்டது ஆனால் இன்று அந்த கிழவி இரண்டு மூன்று முறை சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தாள்.. சாலை திரும்பும் வரை அந்த குரலின் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருந்தது.. “ சே பாவம் ஒரு சில்லறைய கொடுக்க கூட முடியாதளவுக்கு நாம சுய நலமா போய்ட்டோமா? அன்றிரவு முழுக்க அவளை தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது.. நாளைக்கு ரெடியா கையில் சில்லறை வச்சிக்கிடனும்... கிழவி கிட்ட கொடுத்தடனும்.. பாவம் பைத்தியமா இருந்தாலும் எதுக்கு கேட்டாளோ?”

பஸ்ஸை விட்டு இறங்கியதும்... கையில் சில்லறைகளை வைத்துக்கொண்டு வேகமாக  நடந்து கொண்டிருந்தாள்.. இன்று ‘ ஏ குழந்தை ஒரு ரூபா கொடேன்...? கேட்கவில்லை... சுற்று முற்றும் தேடியவள் கொஞ்ச தூரத்தில் இருந்த கூட்டத்தில்தான் பார்த்தாள்...

  பாவம் கிழவி.. தெனம் போற வர்றவங்களை எல்லாம் கூச்சல் போட்டுட்டிருக்கும்.. நேத்து பேஞ்ச மழையில் காவாய் இருக்கறது தெரியாம விழுந்து செத்து போயுடுச்சு....”  கூடையில் காய் கறி சுமந்திருந்த ஒருத்தி சொல்லிக்கொண்டிருந்தாள்...

ராதாவின் கையில் இருந்த சில்லறைகள் நழுவிக்கொண்டிருந்தது.. ஒத்தை காசு ஒன்று கிழவியின் கை அருகில் போய் சுருண்டு நின்றது.

Tuesday 15 April 2014

“ நினைவில் சில கனவுகள்....! “



                                         
                                              

சம்பங்கி பூவின் வாசம் கும்மென்று வீட்டை ரம்மியமாக்கியது.. கொஞ்சம் தொடுத்து பூஜைக்கு வைக்கலாம் என்று பால்கனியிலிருந்து பறிக்க போன போதுதான் அந்த காட்சியை பார்த்தேன். நெடு  நெடுவென்று மரம் போல் அடர்ந்து வளர்ந்த கொடிகளுக்கிடையில் அந்த இரண்டு சிட்டுக்குருவிகள் கூடு கட்டிக்கொண்டிருந்ததை... மெல்ல சத்தம் போடாமல் ஒதுங்கி கவனிக்கலானேன்... அந்த குருவிகள் கணவன், மனைவியாக இருக்க கூடும்... ஆண் குருவி ஒரு குச்சியை வைக்க.. பெண் குருவி தேங்காய் நார் போன்றதை வைக்க இரண்டும் மாறி மாறி எதை எதையோ நிரப்பி ஒரு கூட்டை உருவாக்கி கொண்டிருந்தது... இலட்ச கணக்கில் செலவு செய்து  நாங்கள் இருக்கும் வீட்டை கட்டும் போது இருந்த சந்தோஷத்தை விட  இந்த இயற்கையின் படைப்பை பார்க்கும் போது இரண்டு மடங்கு அதிகமாகவே உணர்ந்தேன்...
      
அப்போதிலிருந்து அந்த கூட்டை கண்ணும் கருத்துமாய் கவனிப்பதே எனக்கு வேலையாயிருந்தது.. என் வீட்டு வாலு ‘ சஞ்சய்’ க்கு தெரிந்தால் அவ்வளவுதான்... பிரித்து மேய்ந்து விடுவான்.. ஹனிஷாவை மட்டும் கூப்பிட்டு காண்பித்தேன்..” ஹனும்மா.. இங்க பாரேன் குருவி வீடு கட்டியிருக்கு...தம்பிகிட்ட சொல்லாம நீ மட்டும் பத்திரமா பார்க்கனும்..”

“ எதுக்கு மம்மி... இப்படி கட்டியிருக்கு?”
“ அந்த கூட்டுக்குள்ளதான் குட்டிக்குருவி வளரும்..”
“குட்டி  குருவி எப்படிம்மா இருக்கும்?”
மெல்ல கூட்டை எட்டிப்பார்த்தேன்... அம்மா அப்பா குருவிகள் இரைக்கு போயிருந்தது.. உள்ளே இரண்டு முட்டைகள் பத்திரமாய் தாயின் வயிற்றில் இருப்பதை போல.. மெல்ல மொபைலில் படம் எடுத்து,

“ ஹனும்மா... இந்த முட்டைக்குள்ளதான் குட்டிக்குருவிங்க இருக்கும்டா... அது கொஞ்சம் பெரிசானா இந்த ஓட்டை ஒடைச்சி வெளிய வந்துடும் அப்புறம் உன்ன மாதிரியே அதுவும் வளரும்...”

“ மம்மி நான்  உன் வயித்திலதானே வளர்ந்தேன்னு சொன்னே...  நான் கூட இப்படிதான் உன் வயித்தை கிழிச்சி வெளில வந்தேனா...ஒனக்கு வலிச்சதா?” ஹனி அப்பாவியாய் கேட்கவும் குழந்தைகளுக்கும் சிறகை விரிக்கும் அந்த பறவைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை...

“ சரிடா செல்லம்... குட்டிகுருவி வெளியில் வர்ற வரை நாம அப்பப்ப வந்து பார்த்தா அதோட அப்பா அம்மா வேறு இடத்துக்கு வீட்டை எடுத்துட்டு போய்டும். தெரியாமத்தான் பார்க்கணும்..”

“ சுஜி வர வர என்னை கவனிக்கிறதே இல்லே.. இந்த கூடு வந்ததிலிருந்து  அதுங்களோடவே உனக்கு சினேகமா போச்சு...” சரவணன் செல்லமாய் சிணுங்கினாலும் அவனும் அந்த கூட்டின் ரசிகனாய் மாறிப்போனான். அலுவலகம் விட்டு வந்ததும் அவனும் அவற்றை கொஞ்ச நேரம் பார்த்து விட்டுதான்  காபி குடிக்க உட்காருவான்.

       ஒரு நாள் மெல்லிய கீச்.. கீச்..கிறீச் என்று சத்தம் கேட்கவே... சஞ்சய்க்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது.. “ மம்மி என்னை தூக்கி காண்பியேன்...” அடம்பிடிக்க தொடங்கிவிட்டான்.
      
 “சஞ்சய்.. இதுக ஒன் தம்பி, தங்க மாதிரி... கல் எடுத்து அடிக்க கூடாது... குச்சி எல்லாம் எடுத்து நோண்டக்கூடாது.. பெரிசா வளர்ந்தாத்தான் உங்கூட வெளையாடும்... ஓகேவா?

“ ஓகே மம்மி... தொடாம பார்த்துக்கேன்...”

தினம் அந்த அப்பா அம்மா குருவிகள் இரண்டும் இரை தேடி வந்து குட்டிகளுக்கு  மூக்கால்  கொத்தி எடுத்து ஊட்டி விடும் ....அவைகளும் சின்னதாய் வாய் திறந்து தின்னும்.. இந்த உன்னதமான அன்பின் பிணைப்பை பார்க்கும் போது எனக்கு பசி கூட மறந்து போய்விடும்.

பக்கத்து காம்பவுண்டில் எட்டிப்பார்த்து, “ மாலாக்கா... இங்க பாருங்களேன் இந்த இரண்டு குருவிங்க என்ன அழகா ஊட்டி விடறதை... சீக்கிரம் வாங்க...” கையை ஆட்டி உற்சாகமாய் கூப்பிட,

மாலாக்கா எந்த சொரணையுமில்லாமல், “ சுஜி இது போய் என்ன அதிசயம் இப்படி பாத்துட்டிருக்க... இப்பதான் பருப்பு வேக போட்டிருக்கேன்.. நிறைய வேலையிலிருக்கு..” கூட்டை எட்டி கூட பார்க்க அவகாசமில்லாமல் உள்ளே போனாள்.

சே... என்ன மனுஷி இவள்... பார்க்கலைன்னாலும் அப்புறம் வர்றேன்னாவது சொல்ல தெரியுதா... இப்படி எல்லா ரசனைகளையும் மூட்டை கட்டி சம்பாதிக்கிறதும், சாப்புடறதுமாத்தான் நிறைய பேர் வாழ்க்கை போய்ட்டிருக்கு...

ஒரு நாள் என்ன ஆச்சோ தெரியலை ரொம்ப நேரமா அப்பா அம்மா குருவிகளை காணோம்.. குட்டிக  ரெண்டும் கீச்.. கீச் ன்னு கத்தி பசிக்கு ரகளை பண்ணிக்கிட்டிருந்தது... குட்டிக்கு சாதப்பருக்கை போட்டுத்தான் பார்ப்போமேன்னு... கொஞ்சம் கிண்ணத்தில் வைத்து கொண்டு ஒன்றிரண்டு பருக்கைகளாக அதுக்கு ஊட்டி விட கொத்தி தின்றது....” ஐய்யா... குட்டி குருவி பூவா திங்குது...” சஞ்சய் க்ளாப்ஸ் பண்ணிக்கொண்டு எதிர்த்த வீட்டு சோனுவிடம் சொல்ல ஓடினான்.

       எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ பொழுது போய் வந்து சேர்ந்த அப்பா, அம்மா அதன் மொழியில் குழந்தைகளை கொஞ்சி கொண்டிருந்தது. அதிலிருந்து கொஞ்சம் தானியங்களை பால்கணியில் பரத்தி வைக்க தொடங்கினேன்... பெரிய குருவிகள் அதை கொத்தி குட்டிகளுக்கு போடுவதை தினசரி வழக்கமாக்கி கொண்டது.

        நாங்க நாலுபேரும் இந்த கூட்டோட சொந்தம் கொண்டாடி வந்தோம். சரவணன் குட்டிங்க ரெண்டுத்துக்கும் மனிஷா, சீயான்னு பேர் வச்சி  கொஞ்ச ஆரம்பிச்சிட்டான்.  “ நான் வர்றதுக்குள்ள என்ன தூக்கம் ஒங்களுக்கு? கீச்... கீச்... பறவைகள் மொழியிலேயே ஹாய் சொல்லுவான்.. சத்தம் கேட்டதும் அதுகளும் கீச்...கீச்... கிறீச்... பதில் கொடுக்கும்.

கொஞ்ச நாளில் குட்டிக்குருவிகள் தத்தி தத்தி கூட்டுக்கள் அடி எடுத்து வைக்க தொடங்கியது.. பெரிய குருவிங்க ரெண்டும் அதுக்கு ரெக்கை விரிச்சி பறக்க சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தது. ஒரு நாள் பெரிய குருவிகள் வெளியில் போயிருந்த போது குட்டிங்க பறக்க முயற்சி செஞ்சி கீழே விழுந்து விட்டது... பதட்டத்தில் எனக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை.. சரவணன் தான் ஒரு டர்க்கி டவலில் கையை சுற்றிக்கொண்டு ஒரு பூவை சுமப்பது போல் மெல்ல அந்த குட்டிகளை தாங்கி அதன் கூட்டில் வைத்தான். “ தேங்க் யூ சரா.. யூ ஆர் வெரி க்ரேட்...!”  அவன் கன்னத்தில் இதமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

       இப்போது குட்டிகள் கொஞ்சம் பறக்க தெரிந்து கொண்டது..  கொஞ்சம் மேலே சிறகடித்து உட்காருவதும் மீண்டும் கூட்டுக்குள் போவதுமாய் இருந்தது.  தினசரி சஞ்சய் சோனுவை அழைத்து வந்து குட்டி குருவிகளோடு விளையாடிக்கொண்டிருந்தான்.

        நாங்கள் அன்றும் வழக்கம் போல் காலையில் குட்மார்னிங் சொல்ல  கூட்டருகே வந்து “ மனிஷா, சீயான் .. கீச்... கீச்...”

பதிலுக்கு எந்த சப்தமுமில்லை... மறுபடியும் க்கீச்..கீச் என்று சொல்லிக்கொண்டு  அதன் வீட்டை எட்டிப்பார்த்தோம்.. குட்டிகள் இல்லை... பறக்க தெரிந்ததும் அதன் அப்பா அம்மா அழைத்து சென்று விட்டிருக்கிறது. இனி அவைகளோடு விளையாட முடியாது கண்களில் நீர் கோர்த்தது... கொஞ்ச நாட்களாய் எங்களுடன் வசித்த ஜீவன் கள் எங்களை விட்டு பிரிந்துவிட்டது.

“ டாடி எனக்கு சீயான் வேணும்... போய் அதுங்களை கூட்டிட்டு வாங்க...”  சஞ்சய் மண்ணில் புரண்டு அடம் பிடித்து கொண்டிருந்தான்.
“ மம்மி இனி வராதா?” மனிஷா ஏக்கமாய் என்னை பார்த்தாள்.

  மனுஷங்ககிட்ட இருந்தா வாழவிடமாட்டாங்கன்னு வேறு உலகம் தேடி போயிடுச்சு போலிருக்கு... வெய்ய காலம் தொடங்கிடுச்சு... வழக்கமா அந்த கொடியோட கிளைகளை வெட்டி சீர் பண்ணி தண்ணி ஊற்றுவோம்... அப்பதான் புதுசா கிளைக்கும்... இந்த முறை கொடியை வெட்ட மனசு வரலை.. அந்த குருவிங்க கூடு அப்படியே இருக்கனும். அதுங்க கஷ்டப்பட்ட கட்டிய வீட்டை இடிக்க முடியாது. என்னிக்காச்சும் ஒரு நா அது வீட்டை பார்க்க வருமான்னு யோசனை பண்ணிக்கிட்டே தூரத்துல அண்ணாந்து பார்க்கிறேன்... கண்ணுக்கெட்டின தூரம் வரை செல் போன் டவர்தான்..!

Saturday 22 March 2014

படையல்....

காலையில் ஆறுமணிக்கெல்லாம் போன் மணி அடித்தது.. இது போன்ற நேரங்களில் போன் வந்தாலே எதோ ஒரு கலக்கம்  வந்து ஒட்டிக்கொள்ளும்...  போனை எடுக்க பயந்து ‘ நீங்களே பேசுங்க “... கணவரிடம் தந்தேன்.

காதில் வைத்த அவர், “ ஓ.. சாரி.. அப்படிங்களா எப்ப என்ன ஆச்சு எத்தனை மணிக்குண்ணா..?” என்று கேட்கும் போதே எதோ ஒரு துக்க செய்திதான் என்று புரிந்து பதட்டமாகிவிட்டது.

“ சுஜி  உங்க சித்தப்பா போய்ட்டாராம்டி.... ஈவ்னிங் அஞ்சு மணிக்கு எடுப்பாங்களாம்.. நீ சீக்கிரம் கிளம்பிடு... நான் ஆபிஸ் போய்ட்டு கொஞ்சம் வொர்க் இருக்கு அது முடிச்சிட்டு ஒன் அவர்ல கிளம்பி வர்றேன்...”

சித்தப்பாவிற்கு ஏற்கனவே ஒரு முறை ஹார்ட்-அட்டாக் வந்திருக்கிறது.. இந்த முறை காப்பாற்ற முடியவில்லை... சித்தப்பா எப்படி போய்ட்டாருன்னு நம்ப முடியலை... சித்தப்பாவை மாதிரி சுறு சுறுப்பான ஆளை பார்க்கவே முடியாது... எல்லா விசேஷத்துக்கும் அவர்தான் முன்ன நிப்பார்... ஒரு குரல் கொடுத்தாரானால் எட்டூருக்கு கேக்கும்... கல்யாண விசேஷத்துல பொண்ணு ரூம்ல மேக்கப் பண்ணிக்கிட்டு லேசுல மேடைக்கு கிளம்பமாட்டாங்க... சித்தப்பா வந்தாருன்னா ஒரே கூச்சல்...” ஏம்மா எவ்வளவு நேரம் தான் மேக்கப் பண்ணுவீங்க... எல்லாம் நல்லாத்தான் இருக்கீங்க... சட்டு புட்டுன்னு புடவைய மாத்தி மேடைக்கு அழைச்சிட்டு வாங்க... முகூர்த்த நேரம் போய்க்கிட்டே இருக்கு... இப்ப வர்றீங்களா இல்லையா..?”  இரண்டு மூணு தரம் சத்தம் போடுவார்... அவ்வளவுதான் கல்யாண பொண்ணை சிங்காரிக்கிற கூட்டம் மாட்டை ஹோய்.. ஹோய்...னு ஓட்டினா வேகமா ஓடுமே அதுமாதிரி வேக வேகமா டிரஸ் பண்ணி விடுவாங்க...

        “ இப்படி ஒரு சித்தப்பா இல்லைன்னால இவளுங்க லேசுல நகர மாட்டாளுங்க...”  அத்தை முணுகுவாங்க.

தாலிகட்டி சாப்பாடு முடிந்து பொண்ணை பேக் பண்ற வரை சித்தப்பா பம்பரமா சாட்டை எடுத்து ஓட்டாத குறையா வேலை வாங்குவார்.. எல்லா விசேஷமும் அதது நேரத்துக்கு சரியா முடிஞ்சிடும். எல்லாரும் பெருமையா பேசுவாங்க சித்தப்பா இல்லைன்னா இவ்வளவு சரியா வேலை முடிஞ்சிருக்காது...

விசேஷம் மட்டுமில்லை இறப்பு வீடுகளுக்கு சென்றாலும் அங்கு சித்தப்பாதான் ‘ இதை செய்.. அதை செய்..’ என்று வழிமுறைகள் சொல்லிட்டிருபாரு.... “ தேவாரம் படிக்கிறச்சே யாரும் அழக்கூடாது... சித்த நேரம் அமைதியா இருங்கோ...” கூட்டம் அமைதியாகிவிடும்.

இப்போது சித்தப்பா அவசரமில்லாமல் கண்ணாடிபெட்டிக்குள் உறங்கி கொண்டிருந்தார்.  “ வாடிக்கண்ணு.... சித்தப்பா போய்ட்டாரும்மா... “ சித்தி கையை பிடித்து கொண்டு அழுதாள்.
 நான் சிறிது நேரம் சித்தப்பாவையே பார்த்து கொண்டிருந்தேன்.. “ யாருப்பா எங்களையெல்லாம் இனி வழி நடத்துறது?”  எனக்கு  அழுகையை வெளிப்படுத்த தெரியாது... மனதுக்குள் உணர்வுகளை தேக்கி கொண்டு அமைதியாக உட்கார்ந்து விட்டேன்.. யார் யாரோ வந்து திடீர் திடீரென்று பாட்டு பாடி சித்தியை கட்டிக்கொண்டு அவரின் அழுகையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.. அப்படி அழ வைத்து விட்டு புடவை தலைப்பால் கண்ணையும், மூக்கையும் துடைத்து கொண்டு பின் பக்கம் உட்கார்ந்து , “ ஏண்டி மல்லிகா அவங்க பேத்தி, பொண்ணுங்கன்னு ஒண்ணாவது வாயை திறந்து அழுவுதா பாருடி... எல்லாம் அப்படியே குதிர் கணக்கா உட்கார்ந்து இருக்காளுங்க...” என்று வம்பளந்து கொண்டிருந்தார்கள்... எதற்கோ பின் பக்கம் வந்த என்னை பார்த்த அவர்கள், “ ஏண்டி சித்தப்பான்னு வாய் வரலையே ஒனக்கு?”
 துக்கத்தை அழுகையாய் வெளிப்படுத்தினால் மட்டும்தான் உலகம் நம்பும் போலும்.
ஆயிற்று சித்தப்பாவை வழியனுப்ப குளிப்பாட்டி கொண்டிருந்தார்கள், யாரோ தேவாரம் பாடிகொண்டிருந்தார்கள்.
“ தேவாரம் பாடும் போது யாரும் அழக்கூடாது..” சித்தப்பா சொல்வது போல் இருந்தது..
“ நல்ல மனுஷன்யா... எல்லாருக்கும் முன்ன நிப்பார்..” யார் யாரோ சித்தப்பாவை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இருக்கும் போது யாரும் பெருமை பேசுவதில்லை...சித்தப்பா இந்த முறை அமைதியா போய்க்கிட்டிருந்தார்..
ஆயிற்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பமாய் சித்தப்பாவிற்கு படையலாம்...

நேத்து சென்னையில் இருக்கிற அக்கா புளிசாதம், எலுமிச்சை மாங்கா சாதம்னும்... முறுக்கு , எல்லடை பழம் என்று வகை வகையாய் பரப்பி வைத்திருந்தார்கள்...  சித்தப்பா புகைப்படத்தில் அமைதியாய் பார்த்து கொண்டிருந்தார்..

“ சுஜி எல்லா வீட்டு பங்காளிகளும் படைச்சாயிடுச்சுடி இனி நம்ம வீடுதான் பாக்கி... இன்னிக்கு காலையில் பெரியம்மா ஒத்தாசைக்கு வர்றேன்னிருக்காங்க... கொஞ்சம் வடைக்கு உளுந்தும், கடலையும் ஊற போட்டுடறேன்...” உள்ளூரில் இருக்கும் அக்கா சொன்னாள்.

மறுபடியும் இலை நிறைய பண்டங்கள்... சித்தப்பா அமைதியாய் புகைப்படத்தில்... ஊதுவத்தி புகை...  “ பரவாயில்லை தேனு சித்தப்பாவுக்காக காலையிலையே இத்தனையும் செஞ்சிருக்கா...”   நாலாவது வீட்டு பாலாம்மா அக்காவை பெருமையா சொல்லிக்கிட்டிருந்தாங்க..

“ சித்தப்பா நம்ம எல்லாருக்கும் எவ்வளவு செஞ்சிருக்காரு?” அக்கா மூக்கை உறிஞ்சினாள்.. ஊது வத்தி புகைந்தது... எனக்குள்ளும் எதோ... அக்கா இதே ஊர்ல இருக்கா... சித்தப்பான்னு இத்தனை நாளா எதாவது இப்படி வீட்ல சுட்டா கொடுத்திருப்பாளா?  ஊருக்கு போகும்போது சித்தப்பாவுக்கு எதாவது பிஸ்கெட் வாங்கிட்டு போனா அம்மா சொல்வா,” ஏண்டி உன் அக்காவை பாரு பக்கத்திலயே இருந்தாலும் எங்களுக்கே எதுவும் தர்றதில்ல... நீ ஊருக்குன்னு வந்தியனா நோட்டை இழுத்துட்டு போயிடற.. பிழைக்க தெரியாதவ...”
       
எல்லாம் வேடிக்கையாக இருந்தது...
ஒன்பது நாளும் அமர்க்களப்பட்ட சித்தப்பா வீடு இன்று காரியம் முடிந்து அவரவர் கிளம்பிவிட்டார்கள்.. சித்தியின் தனிமை என்னவோ செய்தது... பி.பி சுகர் என்று ஏற்கனவே ஓடிந்து போயிருக்கும் சித்தியை இனி யார் கவனிப்பார்கள்...

மறு முறை ஊருக்கு சென்றிருந்தேன்... இந்த முறை சித்திக்கு தேவையான பழம், பல்லுக்கு இதமான பிஸ்கெட் என்று வாங்கி வைத்திருந்தேன்... கையிலிருந்த பையை பார்த்து தேனு, “ ஏண்டி அவங்க மருமகளுகளே ஒண்ணும் கவனிக்கிறதில்ல... நீ எதுக்குடி இதெல்லாம் செலவு பண்ணிக்கிட்டு வாங்கிட்டு போய் கொடுக்கிற?”

“ க்கா... செத்தப்பறம் போட்டோவுக்கு படைக்கிறதை விட இருக்குறப்ப கொடுக்கிறது எனக்கு புடிச்சிருக்குக்கா... மிஞ்சி போனா நூறு ரூபாய் ஆகுமா... அன்புக்கு விலை போடமுடியுமாக்கா ?”

சித்தி பையை வாங்கி கொண்டு பாசத்தோடு பார்த்தாள்.. திரும்பும் போது பக்கத்திலிருந்த அண்ணி, பெரியம்மா... அத்தை அக்கா என.. எல்லோரும் சித்தியின் போட்டோவிற்கு படைக்க இருக்கும் அன்ன பூரணியாய் தெரிந்தார்கள்.