Showing posts with label மகன். Show all posts
Showing posts with label மகன். Show all posts

Saturday, 18 August 2012

அது ஒரு கனா காலம்

3 Aug





                                                                                                                             
" அம்மா... இந்த ஜாதகம் நம்ம ராஜேஷுக்கு பொருத்தமா இருக்கு.. என் நாத்தனாருக்கு தெரிஞ்ச
இடம்... ஏம்.பி.ஏ படிச்சிருக்கா.. போட்டோவை பாரு பிடிச்சிருக்கா..." சௌம்யா அம்மாவிடம் தர,

" ம்.. பொண்ணு நல்லா லட்சணமாதான் இருக்கா...! போட்டோ அனுப்பி வைப்போம்.. அவன்
என்ன சொல்றான்னு பார்க்கலாம். பகவான்தான் அவனுக்கு புத்தியை கொடுத்து சம்மதிக்க
வைக்கனும்.எதாவது ஒரு குறை சொல்லிகிட்டு வேணாம்னு சொல்லிகிட்டே இருக்கான்..."

" என்னோமோப்பா.. இவனுக்கு ஒரு நல்லதை பண்ணிட்டா நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ்
ஆயிடுவோம்.. சொந்தக்காரா எல்லாம் பையன் வெளி நாட்டுல நல்லா சம்பாதிக்கிறான்..

இன்னும் என்ன கொறைச்சல்.. காலா காலத்துல கல்யாணம் பண்ணிட வேண்டியதுதானேன்னு ....கேட்டுக்கிட்டே இருக்கா..." மாப்பிள்ளை கிரிதரிடம் அப்பா சொல்லி கொண்டிருந்த போதே .. போன் ஒலித்தது. ...' ராஜேஷ் தான் பண்ணுவான் ' என்று சொல்லிக்கொண்டே எடுத்தார்.

" ஹாய் டாடி ஹவ் ஆர் யு அண்ட் மம்மி.. பை தி பை... இந்த முறை கொஞ்சம் அதிகமா பணம்
போட்டிருக்கேன்.. மொத்த கடனையும் கிளியர் பண்ணிடுங்க.. நான் மம்மி கிட்ட அப்புறமா  பேசறேன்... வைச்சிடட்டா...

" இரு ராஜேஷ்.. நம்ம சௌமியும் இங்கதான் வந்திருக்கா.. ஏதோ பேசனும்னா..." சௌம்யாவிடம்
தந்தார்.

" ராஜி.. எப்படிடா இருக்கே... இத்தனை நாளா ரிஜக்ட் பண்ண மாதிரி இந்த முறை உன்னால நோ சொல்ல முடியாது.. பி காஸ் மை செலக்க்ஷன் டா.. பொண்ணு ரஞ்சனி ஏம்.பி.ஏ படிச்சிருக்கா.. அசல் நம்ம ஊர் சினேகா மாதிரியே இருக்கா....."

" ஏய் சௌமி .. உன்ன என்ன பொண்ணு பார்க்க சொன்னேனா...? எப்ப பாரு கல்யாணம்..கல்யாணம்னு..."

" வயசான காலத்துல அப்பா, அம்மாவோட விருப்பம் வேற என்னவாயிருக்கும்... உனக்கு ஒரு நல்லவாழ்க்கை அமைச்சு தர்றதுதானே இருக்கும்...?

" சௌம்யா... எப்ப இருந்தாலும் தெரிய போற மேட்டர்தான்.. நானே எப்படி சொல்றதுன்னு இருந்தேன்.. அப்பாகிட்ட நீயே ஒபன் பண்ணி கன்வினியன்ஸ் பண்ணிடு.. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசமாயிடுச்சி.. என் கூட புராஜக்ட் பண்றா.. பேரு ப்ரூலீ. ."

சௌம்யா பதட்டத்தை காட்டி... " ஏய்.. ராஜி.. என்னோமோ ப்ரூ காபி குடிச்சேன்ற மாதிரி.. சாதாரணமா இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றே...? காமெடி தானே பண்றே..."

" இதுல காமெடி பண்ண என்ன இருக்கு.. அவளுக்கும் நிறைய சம்பளம்.. என் லைப் நல்லாருக்கும்.. அவ சைனாக்காரி...அப்பா கிட்ட சொன்னா சம்மதிக்கமாட்டார்.. நாங்க ரெண்டு பேரும் காதலிச்சி
ரெஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம்...." ...நானே நாளைக்கு போன் பண்றேன்..." பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.
சௌம்யா விவரம் சொன்னதும் அம்மா தளர்ந்து கீழே விழ போனவளை...கிரி தாங்கி பிடித்து தண்ணீர் கொடுத்தான். அப்பா அதிர்ச்சியாய் உட்கார்ந்திருந்தார்.

மௌனத்தை கிரிதான் கலைத்தான்..." மாமா.. நாளைக்கு என்னன்னு விசாரிச்சு பார்க்கலாம்...

எதுக்கும் கவலை படாதீங்க.. எப்படியாவது ஸால்வ் பண்ணிடலாம்..."

அம்மா இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்... " ஈ கடிக்காம...எறும்பு கடிக்காம பார்த்து பார்த்து வளர்த்தேனே ... இதுக்கா படிக்க வைச்சி அனுப்புனேன்... உன் கல்யாணத்தை எப்படி எல்லாம் பண்ணனும்னு கனவு கண்டுட்டு இருந்தேன்..? விசேஷ நாள்லமருமக வாசல்ல கலர் கோலம் போடற அழகும் ... பட்சணம் செய்து பேரப்பசங்களோடு சந்தோஷமா
சாப்பிடற குடுப்பினையும் இதெல்லாம் கனவா போச்சே...."

" ஆமாம்மா இப்ப புலம்பி என்ன...? என்னை மட்டும் பொண்ணுன்னா இப்படி இருக்க கூடாதுன்னுஎல்லாத்துக்கும் ரூல்ஸ் போட்டே.. அவனை இஷ்டத்துக்கும் விட்டுட்டே...."

"ஏய்.. சௌமி ... எந்த நேரத்தில் எப்படி பேசனும்னு உனக்கு விவஸ்தை இல்ல... " கிரி திட்டியதும் அமைதியானாள்.

பெண்கள் கவலையோ.. கோபமோ கொட்டி விடுவார்கள். அப்பா அமைதியாய் ஈஸிசேரில்படுத்திருந்தார்... அவர் மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது ராஜேஷ் பற்றி... தனியார் கம்பெனியில் கிளார்க்காக சொற்ப வருமானத்தில்.. பிள்ளைகளை வளர்த்து.. சௌம்யாவிற்கு கல்யாணம் செய்தது.. ராஜேஷை இன்ஜினியரிங் படிக்க வைத்தது எல்லாமே கடன் பட்டுதான்.
படிப்பை முடித்தவன் வெளி நாட்டு வேலைக்கு செல்வதாக ராஜேஷ் சொன்னதும் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை.

"ராஜி.. அம்மாவால உன்னை பார்க்காம வருஷக்கணக்குல இருக்க முடியாது.. உன் திறமையை இங்கியே காட்டு.. உன் அறிவை எங்கோ விற்க நான் சம்மதிக்க மாட்டேன்..."

" டாடி நீங்க ஏன் அப்படி நினைக்கிறிங்க... நம்ம அறிவை எல்லா தேசத்திலும் நிரூபிச்சு காட்டறது நமக்கு பெருமைதானே.. சரி .. நான் என்ன அங்கேயேவா செட்டில் ஆயிட போறேன்... ஜஸ்ட்.. ஒரு
அஞ்சு வருஷம் சம்பாதிச்சிட்டு வந்துடறேன்.. நம்ம கடனை எல்லாம் அடைச்சிட்டு லைப்பை கொஞ்சம்
வசதி படுத்திக்கலாமே...." அம்மாவை கெஞ்சி சம்மதிக்க வைத்தான். அம்மா

தன் வளையலை விற்று வெளி நாடு போகும் செலவிற்கு தந்தாள்.
"அப்பா நாம செட்டில் ஆகிட்ட பிறகு நீங்க வேலைக்கு போக வேண்டாம்.. அம்மா உனக்கு வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் வச்சிடுவேன்.. நீ ராணி மாதிரி உட்கார்ந்துகிட்டு அதிகாரம் பண்ணனும் என்ன..." கிளம்புவதற்கு முன் ஒரு பௌர்ணமி வெளிச்சத்தில் அம்மாவின் கையில் உருண்டை சாதம் வாங்கி சாப்பிட்டு கொண்டே சொன்னான். "

அம்மா உன் கையால வெறுமனே மிளகா கிள்ளி தாளிச்சா கூட நல்லா இருக்கு.. அப்படி ஒரு ராசி ..."சின்ன வயதிலேயே ராஜேஷ் சுட்டியா இருப்பான். அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு கேரியரை
பையில் போட்டதும்.. ஓடிப்போய் செருப்பை எடுத்து தந்து டாட்டா காண்பிப்பான்.அப்பாவின்சுண்டு விரலை பிடித்து கொண்டுதான் எங்கும்.

பக்கத்து வீட்டு மாமா கேட்பார்.." அடேய் தம்பி ...
ஒரு சாக்லேட் தாரேன்.. உங்கப்பாவை எனக்கு குடுத்திடறியா..."

" ம்.. ஆசை.. தோசை... எது குடுத்தாலும் எங்கப்பாவை தரமாட்டேன்..."
இப்படி பட்டவனா என்னை விட்டு வெகு தூரம் போய்விட்டான்..? லட்சங்கள் லட்சியங்களை புதைப்பதில் என்ன ஆச்சரியம். வளரும் வரை பிள்ளைகளோடு இருப்பது எல்லாம் வளர்ந்த பின் கனா காலங்கள் ஆகிவிடுகிறது .

மறு நாள் அவனே போன் செய்தான், அம்மாதான் முதலில் பேசினாள்..." ராஜி.. நடந்தது எல்லாம் கெட்ட கனவா நினைச்சிகிட்டு அவளை அங்கேயே விட்டுட்டு இங்கேயே வந்துடுடா..பேசிக்கொண்டிருந்தவளை.. " ஸ்ரீமதி நீ என்ன பேச்சு பேசறே..? எந்த நாடா இருந்தா என்ன ஒரு

பொண்ணு வாழ்க்கையை கெடுக்கிறது நம்ம பண்பாடு இல்ல..". குடு நான் பேசிக்கறேன்... அப்பா
பிடுங்கியதும்,

"அப்பா.. சௌமி சொல்லியிருப்பா.. ஸாரிப்பா நீங்க சொன்னா ஒத்துக்க போறதில்லைனுதான் நானே பண்ணிகிட்டேன்.. " எனக்கு இந்த ஹைடெக் லைப் பழகிப்போச்சுப்பா.. ப்ரூலியோடு
இங்கயே செட்டில் ஆயிடலாம்தான்னு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்... மறுபடியும் அங்க வந்து முட்டு சந்து.. கும்பல் வாழ்க்கை இதெல்லாம் .. நினைச்சு பார்க்கவே முடியலை.. நான் மாசா மாசம் பணம்
அனுப்பிடறேன்.. நல்ல வீடா கட்டிட்டு சௌகர்யமா இருங்க.. என் வொய்ப்பை நீங்க பார்க்கனும் இல்லையா... அடுத்த மாசம் அவளை கூட்டிகிட்டு இண்டியா வர்றன்பா..."

ராஜேஷ் வந்ததும் உறவுகளுக்கு சொல்லி ஒரு ரிசப்ஷன் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் ராமனுஜம்.

" இந்த அசிங்கத்தை ஊரை கூட்டி வேற சொல்லனுமாக்கும்.. " அம்மா கேட்டதும்,

" நம்ம பையனுக்கு கல்யாணம் ஆனதை எல்லாருக்கும் தெரிவிக்கனும் இல்லையா,,,?

ராஜேஷ் வருவதற்காக வீட்டை ஓடி ஓடி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.. ஸ்ரீமதி. ' என்ன இருந்தாலும் வெளி நாட்டுல இருந்து வர்றான் இல்ல... என்றாள். ராஜேஷ் வரும் அன்றே ரிசப்ஷன் ஏற்பாடு ஆயிருந்தது. நீள முகத்துடன் கூந்தலை விரித்து கொண்டு முக்கால் பேண்ட்டுடன் அவன்
கையை கோர்த்து கொண்டு வந்த அவளை பார்க்கவே பிடிக்கவில்லை சௌம்யாவிற்கு.

 யாரும் எதுவும் விமர்சனம் செய்ய கூடாது என்று அப்பா அடக்கி வைத்திருந்தார்.

அம்மாவின் ஆசைக்காக காஞ்சி பட்டு சேலையை அவளுக்கு சுற்றி மேக்கப் செய்து ரிசப்ஷனில் நிற்கவைத்தார்கள். ராஜேஷ் மட்டும் அவளுக்கு தஸ்.. புஸ் என்று இங்கிலிஷ் பேசி அறிமுகபடுத்திகொண்டிருந்தான்.

ஆண்கள் பட்டாளம் அவளையே அதிசயமாய் பார்த்து கொண்டு.. வெளி நாட்டுக்காரிக்கு கை கொடுத்தால் கூச்சபட மாட்டாள் என்று சாக்காக க்யூவில் நின்று கை தந்து கொண்டிருந்தார்கள்.

" மாமி.. இவ இட்லி, தோசை எல்லாம் திம்பாளா.. வீட்டுக்கு போனா ஸ்ரீமதி என்னத்தை ஆக்கி போடுவா...? சிலர் வம்பு பேசிக்கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தவர்கள் பேருக்கு ஒரு ஜூசை குடித்துவிட்டு,..." டாடி இந்த அட்மாஸ்பியர் இவளுக்கு சரிபடாது.. பைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டிருக்கேன். "கிளம்பினார்கள்.

லீவு முடிந்து கிளம்பும் போது சொல்லி விட்டு போக வந்தார்கள். இது வரை மௌனம் காத்தஅப்பா," ராஜி.. இதுல நீ இது வரை அனுப்பின பணம் அப்படியே இருக்கு... ரிசப்ஷன் செலவு என் கடைசி கடனாயிருக்கட்டும்.. நீ எவளையோ இழுத்துண்டு வந்தது கூட பரவாயில்லைடா... ஆனா.. முட்டு
சந்து.. கும்பல் வாழ்க்கைன்னு.. கேலியா பேசி உன்னை வளர்த்து விட்ட தாயையும் தாய் நாட்டையும் பழிச்ச பாரு.. இங்க வலிக்குதுடா.. " நெஞ்சை தொட்டவர்,
"ராஜி .. அன்பும் பாசமும் தாண்டா நம்ம வாழ்க்கை .. பகட்டுதான் வாழ்க்கைன்னு வாழற உன் பணம் எனக்கு வேணாம். நான் உன்னை
வளர்த்ததுக்கு கூலி மாதிரி கொடுக்கிற எதுவும் வேண்டாம். சந்தோஷமா போ ஆனா.. உன் கடமைன்னு சொல்லிகிட்டு கடைசியா கூட வரவேணாம்.

" டாடி .. டோண்ட் செண்டிமேட்.. டைம் வில் சேஞ்சஸ் யு ....ஓ.கே ப்ரூ ஸே பை தெம்..."

அவள் சிரித்த படி கை அசைத்தாள். ஸ்ரீமதி கண்ணீர் விட அங்கே சிரிப்புக்கும் அழுகைக்கும் மொழி தேவைப்படவில்லை.




********************

(பாக்யாவில் வெளி வந்த கதை )

Monday, 23 April 2012

வீடு

                                   


"சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம
இருந்தா எப்படி...?" - கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார்.
இருவரும் ஒன்றாகவே பணி புரிந்தவர்கள்.ஓய்வு பெற்ற பிறகும் நல்ல
நண்பர்களாக இருப்பவர்கள்.ஒருவர்க்கு தெரியாமல் இன்னொருவர்
குடும்பத்தில் எதுவும் நடந்ததில்லை.தினமும் யாராவது ஒருவர்
வீட்டில் சந்திப்பு இருக்கும்.சில சமயம் இப்படி காந்தி பூங்காவிற்கும்
வருவதுண்டு.
பூங்காவில் செடிகளை கத்தரித்து கொண்டிருந்த முனிசாமி " வணக்கம் சாமி" என்றார் கேசவனை பார்த்து.பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார். கும்பிடு போட்டுவிட்டு அவர் நகர்ந்தார்.
"பார்த்தியாப்பா....முனிசாமிக்கு  படிப்புமில்லை..ஆசையுமில்லை..போர்த்திக்க ஏதோ ஒரு துணி... கிடைச்சா சாப்பாடு...அதோடு சரி... நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் தான்..கவலை..சந்தோஷம்னு மாறி .. மாறி அலைக்கழிஞ்சிட்டுருக்கோம்..கேசவா..."  -சண்முகத்தின் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது
.........வீட்டை வாங்கினவ வர்ற வெள்ளிக்கிழமை  ரெஜிஸிட்ரேஷன் பண்ணிக்கறாங்களாம்...காலிபண்ண அஞ்சு மாசம் டைம் தந்திருக்காங்க..சாரதா முகத்தை என்னால் பார்க்கவமுடியலைப்பா...பிள்ளைங்க....பிள்ளைங்க....அவளுக்கு ஒண்ணுமே  செய்யலே......"- சொல்லும் போதே அழுதுவிட்டார்.

"என்னப்பா இது..சின்ன குழந்தையாட்டம்...ப்ச்...அழாதேப்பா...என்னத்தை
சொல்ல...பெத்தகடன்...ம்..விட்டு தள்ளு..தைரியமாஇருக்கணும்பா...கடனெல்லாம்
அடைச்சுட்டு நிம்மதியா இரு..நாந்தான் என் வீட்டுமாடி போர்ஷனில்
இருந்துக்கலாம்னு சொல்றேன்ல...."

" இப்படி ஆறுதலா பேச..உதவ நீ இருக்கிறது சந்தோஷம்தாம்பா...
ஆனாலும்........

"என்ன ஆனா... ஓனான்னுட்டு...போனது போகட்டும் விடுப்பா..."

" அது இல்லப்பா ...எம் புள்ள மாதிரி இல்லாம உன் பையன் நல்ல
பாசமானவன்..பையன், மருமக.. பேரக்குழந்தைகள்னு சந்தோஷமா
ஒண்ணா இருந்த்துகிட்டிருக்கிற உங்க குடும்பத்திலே எங்களாலே எந்த பிரச்சினை வந்துடக்கூடாதேன்னுதான் என் கவலை...அதான்... உன் வீட்டு பக்கமா குறைஞ்ச வாடகைக்கு சின்னதா ஒரு வீட்டை பார்த்து வைப்பான்னு சொல்றேன்..."

" ரேவதிக்கு சொல்லிட்டியா...?"

" ம்... பொண்ணு இல்லையா , நான் சொன்னதுமே 'ஓ'.. ன்ணு
அழுவுது..." அப்பா எங்க வீட்டுக்கு வந்திடுங்கப்பா ன்னு
கெஞ்சுறா...அவ நல்லா பார்த்துப்பா ... ஆனா அவ சூழ்நிலை
நமக்கு தெரியுமில்லையா...? படிப்பு ஏறாததாலே அவளாலே
வேலைக்கும் போக முடியலே...இதை குத்தி காட்டியே அவ
மாமியார் பாடாத பாடு படுத்திட்டிருக்கா...சண்டை போட்டு வந்தா
எங்களுக்கு பாரமாயிடுமேன்னுதான் சகிச்சிகிட்டு அவ அங்கேயே
இருந்துகிட்டிருக்கா......ம்...நான் இந்த வீட்டைக் கட்ட எவ்வளவு
சிரமப்பட்டிருப்பேன்...? அதைல்லாம் எம் பையன் ரமேஷால

எப்படிப்பா
மறக்க முடிஞ்சது...? என்னோட சம்பாத்தியம் மட்டுமா..சாரதாவோட
கஷ்டமும் சேர்ந்து தானே இந்த வீடா மாறிச்சு...? அவ எப்படில்லாம்
கஷ்டப்பட்டா..? ஊறுகா..அப்பளம் போடறது, துணி தைக்கிறதுன்னு
கை வலிக்க உடம்பு நோக வேலை செஞ்சு அவளும் உழைச்சி,
வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சேர்த்த பணத்தில்தானே ...இந்த வீடு
வந்துச்சு..ம்...?
" சண்முகம் போனது பத்தியே சும்மா பேசிட்டிருக்காதே... வீடு
போனா என்ன வாழவே முடியாதா என்ன..? உனக்கு வற்ற பென்ஷனை
வச்சி காலத்தை தள்ளிடலாமே..? ம்.. வீட்டுல தங்கச்சி தனியா இருந்து
நொந்துகிட்டிருக்கும்...நேரத்தோடு வீட்டுக்கு போ...நீயும் புலம்பி
அவ மனசை நோகடிக்காதே...சமாளிச்சுக்கலாம்னு நீதான்..அவளுக்கு
தைரியம் சொல்லனும்...பார்த்துக்க..."

வழக்கமாக ஒரு டி.வி நிகழ்ச்சி பார்த்து கொண்டிருக்கும் சாரதா..லேசான
விளக்கொளியில்.. சோர்ந்து போய் படுத்திருந்தாள்.

கண்ணீர் முட்டியது சண்முகத்திற்கு. கேசவன் சொன்னது
ஞாபகத்திற்கு வர..சட்டென.. தன்னை அடக்கி கொண்டார்." சாரதா..ஏன்
படுத்திருக்கே..? எழுந்திரும்மா..கவலைப் பட்டு என்ன ஆக
போகுது...? நேரமாச்சுல்லே... சாப்பிடலாமா...?" ஆறுதலாக கேட்டார்.

எழுந்த சாரதா , கிச்சனுக்கு போய் தட்டில் இட்டிலிகளுடன்
வந்தாள்.அவர் முன் வைத்தவள் அமைதியாய் அமர்ந்தாள்.

" நீயும் சாப்பிடும்மா..."

வேண்டாம் என்பது போல அவள்  தலை அசைக்க, "சாப்பிடாம
இருந்து உடம்பை கெடுத்துக்காதே..உனக்குன்னு நான் எதுவும்
செய்யலைதான்...உனக்கு தர்றதுக்கு உயிரை தவிர எதுவும்
இல்லேம்மா..." என்று தழு தழுத்தார் சண்முகம்.

சட்டென அவர் வாயை மூடியவள்..., " எனக்கு உங்களைவிட பெரிய
சொத்து எதுவும் இல்லீங்க..." கண்ணீர் விட்டாள்.
நமது கஷ்டம் பிள்ளைங்களுக்கு தொடர்ந்து விடகூடாது என்றுதான்
சாரதா நினைத்தாள்.
வீட்டு லோன் அடைந்து வந்த வேளையில்.. ரமேஷின் படிப்பு செலவு
கண்ணை கட்டியது. " கடன் வாங்கியாவது நல்லா படிக்க வைச்சி
நல்ல வேலையில ஏற்றிவிட்டுடணும்ங்க...." என்று சண்முகத்திடம்
சொன்னாள். அவனும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தான்.தங்கை
ரேவதியின் திருமணத்திற்கு ஆபிசில் லோன் போட்டு உதவுவான்
என்று அவர்கள் எதிர்பார்த்த போது ,'லோன்லாம் கிடைக்காது.."
என்று கையை விரித்து ஒதுங்கி விட்டான். ஆற்றமை நெஞ்சை
அடைத்தாலும்..எப்படியோ திருமண செலவை சமாளித்தனர்.
அடுத்த ஆண்டிலேயே ரமேஷுக்கு திருமணம் செய்து
வைத்தனர்.மருமகள் மது படித்தவள்.. வேலைக்கு செல்பவள்.தனி
குடித்தனம் சென்ற ரமேஷிடமிருந்து நாளடைவில் போன் பேச்சுக் கூட
குறைந்து விட்டது.எப்போதாவது பேசுபவன் , ஒரிரு வார்த்தைகளிலே
பேச்சை முடித்து விடுவான். அப்போது கூட , " வாங்களேன்
வீட்டுக்கு ..." என்று ஒப்புக்கு கூட ஒரு வார்த்தை வராது. சண்முகம்
ஓய்வு பெற்ற பின் அவனுடன் சேர்ந்து வசிக்கலாம் என்ற ஆசையை
மனதுக்குள்ளேயே புதைத்தாள்.

ரமேஷிற்கு சொந்த வீடு வாங்கும் ஆசை வர, வீடு தேடி வந்து
சாரதாவிடம் குழைந்தான்." அம்மா நல்ல இடத்திலே சூப்பரான வீடு
ஒண்ணு விலைக்கு வருது. நானும் மதுவும் லோன்
போட்டிருக்கோம். அது பத்தாது...மீதி பணத்துக்கு என்ன
பண்றதுன்னே புரியலை... அப்பா கிட்ட சொல்லி இந்த வீட்டு
பத்திரத்தை அடமானம் வச்சி பணத்தை புரட்டி தந்திங்கன்னா..அந்த

வீட்டை வாங்கிடுவேன்மா..."
நெகிழ்ந்த சாரதா , சண்முகத்திடம் சொல்லி வீட்டு பத்திரத்தை
அடமானம் வைத்து பணம் வாங்கி கொடுத்தாள்.சந்தோஷமாக வாங்கி
சென்றவன்...சென்னையில் வீடு வாங்கி செட்டிலானான்.பிறகு கண்டு
கொள்ளவேயில்லை...வீட்டு அடமானத்தை அப்பாவின் சொற்ப
பென்ஷனில் எப்படி திருப்புவார் என்ற எண்ணமே இல்லாத கல்
நெஞ்சக்காரனாகிவிட்டான்.

லோன் அடைக்க சிரமப்பட்ட சண்முகம் போன் போட்டு அவனிடம்
கேட்ட போது குண்டை தூக்கி போட்டான்..." அப்பா நாங்க நம்ம
ஊருக்கு வரப்போறதில்லே..எதுக்கு அந்த வீடு லோனுக்கு
வட்டி கட்டி திருப்பறதெல்லான் வேஸ்ட்...வீட்டை வித்து கடனை
அடைச்சுடுங்க...." என்றான் சர்வ சாதரணமாக.
இதை சண்முகமும் சாரதாவும் எதிர்பார்க்கவேயில்லை.ரமேஷை நம்பி
பிரயோஜனமில்லை..என்று தீர்மானித்தவர்கள்..வீட்டை விற்கும்
முடிவுக்கு வந்தனர்.

பலத்த இடியுடன் மழை தொடங்கியது.
" ஏங்க ... ஞாபகமிருக்கா உங்களுக்கு...நம்ம வீட்டுக்கு அஸ்திவாரம்
போடறப்ப..இதை போல பயங்கர இடியோட மழை கொட்டோ
கொட்டுனு கொட்டிச்சே...?அஸ்திவாரத்திலே தேங்கின தண்ணியை
நீங்களும் .. நானும்.. மாங்குமாங்குன்னு..மொண்டு மொண்டு
வெளியே கொட்டினோமே...? அப்ப நம்ம ரமேஷிற்கு ... ஆறு
வயசு.." அப்பா கட்டற வீடு மழையில் கரைஞ்சுடக்கூடாது
சாமின்னு ...பிள்ளையார்கிட்ட அழுதானே...மனசுக்குள்ள கஷ்டம்
நிறைஞ்சிருந்தாலும், அவனோட குழந்தைதனத்தை பார்த்து நாம
சிரிச்சோமே... ?? ம் ... எப்படி எல்லாம் கஷ்டபட்டோம் இந்த வீட்டை
கட்ட...ப்ச்...- பழைய நினைவுகளை கொட்டினாள் சாரதா.
" பழசையே பேசிட்டுருக்காதே...வீட்டை பற்றியே
பேசிட்டிருந்தா...கவலைதான் ஜாஸ்தியாகும்..அதான் முடிஞ்சி
போச்சே..விட்டு தள்ளும்மா... நடக்கிறதுதான் நடக்கும்...படுத்து
தூங்குமா..."- சாரதாவிடம் இப்படி சொல்லிவிட்டாரே தவிர,
சண்முகத்திற்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை.
ஈஸிசேரை வராண்டாவில் போட்டு சாய்ந்த சண்முகம், வீட்டின் முன்

நிழல் பரப்பி கொண்டு காற்றை தந்து கொண்டிருந்த வேப்ப மரத்தை
பார்த்தார்....வேப்பம்பூ சீசனில் பூவை எடுத்து குழம்பு வைப்பாள்
சாரதா... சாப்பிட்ட கை மணக்கும்.
வீட்டை வாங்கிய பாட்டியின் மகன், " ஏம்மா இந்த மரம் வீட்டை
மறைச்சிகிட்டு வீட்டோட அழகையே கெடுக்குதப்பா...முதல்ல
இதை வெட்டி சாய்ச்சிடணும்..." என்றான். ... சண்முகத்திற்கு மார்பில்
சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.' அவங்க வீடு அவங்க
வாங்கியாச்சு....அவங்க இஷ்டம்....மரமானாலும்...மனுசன் ஆனாலும்
ஒரு கட்டத்திலே சாய்ஞ்சிடவேண்டியதுதானே..."
என்று தன்னை தேற்றிக்கொண்டார்.
வீட்டு ரெஜிஸ்ட்டிரேஷன் முடிந்தது.கிடைத்த பணத்தில் கடன் களை
அடைத்தது போக கையில் ஒரு லட்சத்து சொச்சம் இருந்தது.
கேசவமூர்த்தி நல்ல வசதியுடன் குறைந்த வாடகையில் வீடு பார்த்து
வைத்திருந்தார்.

ஒவ்வொன்றாக வீட்டில் உள்ள பொருட்களை மூட்டை
கட்டினார்கள்.காலி செய்வதற்கான நாள் நாளைதான்.." இதுதான் இந்த்
வீட்டில் கடைசி தூக்கம்.. நாளை முதல் இது வேறு வீடு.. என்ற எண்ணம்
மனதை பிசைந்தது.கனத்த மனதுடன் படுத்தனர். தூக்கம் வரவில்லை.
காலை பூஜை அறைக்கு சென்றாள் சாரதா..சாமி வைக்கும்
அலமாரியில்
மணி வைத்த கதவுகள்.. அவள் ஆசையாய் சொல்லி டிசைன்
செய்தது.அதை மெல்ல வருடினாள்.பிள்ளையாரை தொட்டு கண்
கலங்கினாள்.
பித்து பிடித்தவள் போல ஏதோ அரற்றியபடி , சிறு வயதில் ரமேஷ்
அமர்ந்து படிக்கும் அறைக்கு நுழைந்தாள்.கதவின் பின் பக்கம் அவன்
ஒட்டி வைத்திருந்த மிக்கி மவுஸ் ஸ்டிக்கர்கள் அவளை பார்த்து
சிரிக்க..கண்களில் நீர் முட்டியது.முந்தானையால் துடைத்தவள்
ஒவ்வொரு அறையாக சுற்றி வந்தாள்.
' இருபது வருடங்களாக வாழ்ந்த இந்த சந்தோஷக்கூடு இனி நமக்கு
இல்லை..- மனதுக்குள் உரத்த குரல். அவளுக்கு தலையை சுற்றுவது
போல் இருந்தது. தரையில் சாய்ந்து படுத்தாள்...
குளியல் முடித்து வந்த சண்முகம் " சாரதா எங்கேம்மா இருக்க...?"
கேட்டபடியே வந்தார்.
" வெறும் தரையில் ஏன்மா படுத்திருக்க...?' அவள் தோள் தொட்டு
எழுப்ப...அவளிடம் அசைவு இல்லை.. சரிந்தது உடல்..
" சாரதா...ஆ..." சண்முகத்தின் அலறலில் வேப்ப மரத்து பட்சிகள்
பறந்தன..காற்று சீறியது...வேப்ப மர கிளை ஒன்று பொத்தென்று
ஒடிந்து விழுந்தது.

( இச் சிறுகதை தினமலர் டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டியில்
ஆறுதல் பரிசு பெற்று அக்டோபர் 31, 2010 இல் வெளிவந்தது.)