Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Wednesday, 6 March 2013

சக உயிர்க்கு அடையாளம் வேண்டுமா?


மார்ச் 8 -ம் தேதி மகளிர் தினத்திற்காக  பத்திரிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள் சிறப்பிதழ்கள் வெளி வருகிறது. பல்வேறு அமைப்புகளின் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடக்கின்றது. அன்றைய தினம் சாதனை பெண்மணிகளை  பெருமை பொங்க  பேசுகிறோம். 
 மற்றொரு பக்கம் பெண்கள் மீதான வன்முறை, பாதுகாப்பற்ற சூழலில் சுதந்திரமாய் செயல் பட முடியாமல் மகளிர் தின கொண்டாம் தேவை இல்லை என்ற ஆதங்கங்கள். உழைக்கும் மகளிரின் போராட்டத்தை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும்  மகளிர் தினம் அன்றிலிருந்து இன்று வரை எதோ ஒன்றை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கும்படியாகத்தான் இருக்கிறது. பெண்கள் சக உயிர்கள் என்று மதிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பெண்கள் தினம் என்ற அடையாள தினம் எதற்கு என்று கேட்டு ஆங்கில ஆசிரியை ஆக இருக்கும் என் தோழி  எனக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அவரின் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்...?

கடிதம்.....

பெண்கள் தினம், அன்னையர் தினம் என்று எதற்கு இவைகள்? ஒரு அடையாளத்திற்காகவா அல்லது பெண்கள் என்ற சில ஜீவன்களின் இருப்பை நினைவுப்படுத்திக்கொள்ளவா? பள்ளி விட்டு அடுத்த நொடி பரபரப்புடன் வேகமாக தோழியருடன் ஓடி வருகிறாள் அந்த சிறுமி. ஏதோ பாடத்தில் சந்தேகம் என்ற என் நினைப்பை அப்படியல்ல என்றது பேயறைந்தாற் போல் இருந்த அவள் முகம். ஆம் பேயேதான் அறைந்திருந்தது. தம்பி என்கிற பேய். பள்ளி மதிய உணவு இடைவேளையில் வங்கிக்கு சென்று வந்ததை அறியாமல் எங்கோ ஊர் சுற்றினாள்  என்று எண்ணி வகுப்பறையில் சக மாணவிகளின் முன்னிலையிலேயே கன்னத்தில் பளார் என்று அறிந்திருக்கிறான் பத்தாம் வகுப்பு படிக்கும் தன தமக்கையை எட்டாம் வகுப்பு படிக்கும் தம்பி. தன் தமக்கை தவறு செய்ததாக எண்ணினால் அதை அவன் ஒரு செய்தியாக தன் பெற்றோருக்கு தெரிவிக்கலாமே அன்றி அதை ஒரு குற்றச்சாட்டாக கூட வைக்க உரிமை இல்லை. ஆனால் அங்கே அவன் ஒரு நீதிபதியாகவே மாறி தீர்ப்பு வழங்கியிருக்கிறான். எது அவனுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது?
எது அவனுக்கு அந்த உரிமையை கொடுத்தது? சகோதரன் என்ற உரிமையா? இல்லை, ஆண் என்கின்ற நினைவு கொடுத்ததே அந்த அதிகாரம்.
விளையாட்டாக வீட்டில் சண்டைப் போட்டுக்கொள்ள வேண்டிய வயதில் ஒரு சிறுவன் சந்தேகப்பட்டு தன தமக்கையை பலர் முன்னிலையில் கன்னத்தில் அறையத் துணிகிறான். அதை சொல்லும் போது அந்தச் சிறுமியின் முகத்தில் தெறித்ததே அந்த உணர்வு! அப்பப்பா! ஒட்டு மொத்த பெண்களின் சிதைக்கப்பட்ட மரியாதை உணர்வை(wounded pride) நம் முன் பரிமாறும் ஒரு துடிப்பு.
பெண்கள் ஆகாய விமானங்கள் ஓட்டுவதாலோ ஆட்டோ ஓட்டுவதாலோ ஐடி துறையில் பரிமளிப்பதாலோ மட்டும் முன்னேற்றம் கண்டு விட்டதாக எண்ணிக் கொள்ளலாகுமா? எங்கோ கிராமத்தில் மாமியாரிடமோ அல்லது கணவனிடமோ "தண்டச்சோறு" என்று இதயத்தில் அறை வாங்கும் பெண்களும், ஏய் நான் ஆம்பளைடி என்ற அதிகாரக்குரலுக்கு அடி பணியும் பெண்களும் விடியல் முதல் இரவு வரை அயராது உழைத்தாலும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்படும் பெண்களும் இன்னும் இருக்கின்றனர் என்பதை யாரும் மறுக்கவியலுமா?
அம்மா பெண் என்ற காரணத்தாலேயே அவளை மதிக்காமல் அன்னையையே அடிக்க கரம் உயர்த்தும் பிள்ளைகளும் உண்டு இச்சமூகத்தில். அதுமட்டுமா? பெண் ஆசிரியைகள் வளர்ந்த மாணவர்களிடம் படும் அவஸ்தைகளை வெளியில் சொல்வதில்லை. அவர்களின் தாய்மையுணர்வே பல மாணவர்களின் வக்கிர உணர்வுகளை வெளிக்கொணராது காப்பாற்றுகிறது என்பதை யாரும் மறுக்க வியலாது.
வகுப்பறையில் ஒன்றாகவே பயிலும் மாணவமாணவியரிடமும் ஒருவருக்கொருவர் இயல்பாக இருக்க வேண்டிய அன்பு துளியும் இல்லை. மாணவிகளுக்கு  அவர்கள் ஆண்கள் என்ற எண்ணமும் மாணவர்களுக்கு இவர்கள் பெண்கள் என்ற எண்ணமும் தலைத்தூக்கி இருபாலருக்கும் இடையே இருக்க வேண்டிய இயல்பான நட்பை சிதைக்கிறது. இது இவர்களின் தவறா? இல்லை, இச்சமூகம் இப்படித்தான் இவர்களை வடிவமைக்கிறது. இங்கே ஆண்கள் ஆண்களாகவும் பெண்கள் பெண்களாகவும் உருவாக்கப்படுகின்றனர். ஆண் சக்திவாய்ந்த பிம்பம் போலவும், பெண் ஏதோ பூட்டி பாதுகாப்பதற்கு உரிய பொக்கிஷம் போலவும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அந்த மாய  உலகில்  இருவருமே  தங்கள்  இயல்புகளை  தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நாம் அனைவரும் ஒன்றை இதயப்பூர்வமாக எண்ணிப்பார்க்க முயல வேண்டும். தங்கையரை தோளில்  சுமந்து தாலாட்டும் அண்ணன்களை விட தன்  தம்பிகளை அன்போடு இடுப்பில் வைத்து விளையாட்டுக் காண்பிக்கும் தமக்கையர்  அதிகம். அவர்களின் அன்பு எனும் ஊற்றில்தான் இச்சமூக கட்டமைப்பு செழிக்கிறது; அவர்களின் பாச வெள்ளத்தில்தான் ஆண்களின் பாவங்கள் அடித்துச்செல்லப்படுகின்றன. பெண்களின் கடமை உணர்வும்அரவணைக்கும் பண்புமே இப்பூவுலகை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி. மெல்லியலாரின் மலரினும் மெல்லிய காதலே ஆணின் வல்லிய உருவத்தை தாங்கி நிற்கும் தூண். ஆகவே மானிட இனம் ஒன்றை நினைவில் வைத்துக்கொளல் நலம். பெண்கள் இல்லாத பூமியின் அடுத்த ஒரு கணத்தை சற்றே  நினைத்துப்பார்ப்போம். பெண்களை ஒரு இரண்டாம் பட்ச உயிரி என்ற நினைப்பை மாற்றுவோம். 
                                                                                                                                                                    -விஜயலட்சுமி 
                                                                                                                                                                   
                                                                                                                                                         



**********************

Friday, 1 February 2013

காற்று வாங்க போய் கவிதை வாங்கி வரலாம்.. ஆனால்..?





காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன். இது இன்பம்தான். ஆனால் தலைவலின்னு போய் வயிறு வலியை வாங்கிட்டு வந்தா...?!


என் தோழி ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருந்தார்.. அவர் குழந்தைக்கு சளி, இருமல் என்று உள்ளூரில் உள்ள குழந்தைகள் மருத்துவரிடம் சென்று மருந்துகள் வாங்கி வந்து உபயோகித்திருக்கிறார்.   ஊர் திரும்பியதும் அவர் அந்த மாத்திரைகள் பற்றி இணையத்தில் தேடியுள்ளார். அவை தடை செய்யப்பட்ட மாத்திரை என்று தெரிந்தது. அதனால் உண்டாகும் பக்க விளைவுகளை பற்றியும் அறிந்திருக்கிறார். அவர் வேதியியல் படித்தவர் என்பதால் மருந்து பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவதில் எச்சரிக்கை ஆகிவிட்டார்.  
ஆனால் எத்தனை பேர் மருந்து கம்பெனிகள் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்? ஒரு வாஷிங் மெஷின் வாங்கவோ.. ஏ.ஸி வாங்கவோ அதன் தரத்தை, விலையை கடை கடையாய் ஏறி விசாரிக்கிறோம். எந்த கம்பெனி தயாரிப்புகள் சிறந்தது என்று பல பேரை விசாரித்து நம்மால் வாங்க முடிகிறது. ஆனால் மருந்து பொருட்களின் தரம் பற்றி நம்மால் தீர்மானிக்க முடிகிறதா? மருத்துவர் தீர்மானிப்பதைதான் நான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதாயிருக்கிறது.
ஒவ்வொரு மருந்து கம்பெனியிலிருந்தும் தன் விற்பனை பிரதிநிதி மூலம் மாதாத்தில் இரு முறை மருத்துவரை சந்தித்து மருந்துகளை அறிமுகப்படுத்தி, இலவசமாக சில மருந்து பொருட்களையும், பரிசுகளையும் தந்து விட்டு செல்கின்றனர். விற்பனை யுத்தியிலும் லாப நோக்கத்துடனும் மருந்து கம்பெனிகள் மருத்துவரை கவர்ந்து அதன் தயாரிப்புகளை பயன் படுத்த வைத்து விடுகிறது. இலாப நோக்கில்  தடை செய்யப்பட்ட மருந்துகளும், பக்க விளைவுகள் ஏற்படுத்தும் வீரியமிக்க மாத்திரைகளும் மருந்து சந்தையில் நுழைந்து விடுகிறது.
மருத்துவ மனைகள் அதிகமாக பெருகிவிட்டதால் கடும் போட்டி வேறு. இந்த மருத்துவமனைக்கு சென்றால் நிவாரணம் கிடைத்து விடும் என்று நம்பிக்கையை மக்களிடம் விதைக்க வேண்டும். உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த மருத்துவமனைக்கு சென்று விடுவார்கள் என்று வீரியமிக்க மருந்து, ஊசிகளை பயன்படுத்துகின்றனர். இப்போதெல்லாம் தலைவலிக்கு மாத்திரை வாங்கினால் கூடவே வயிற்று வலிக்கும் மாத்திரை எழுதி கொடுப்பதை அறிந்திருப்பீர்கள். எந்த உபாதைக்காக சென்றாலும் கூடவே ‘ ரானிட்டின் ‘ என்ற வயிறு எரிச்சலை தணிக்கும் மாத்திரையை மருத்துவர்கள் கட்டாயம் தருகின்றனர்.
உடல் பிரச்சினைகளுக்கு இந்த இந்த மருந்துகளை
உபயோகிக்கலாமா, அதனால் எதேனும் பக்கவிளைவுகள்
உண்டா  என்பதை மருந்து கம்பெனிகள் வெளியிடும்
விளம்பரத்தைதான் நாம் நம்ப முடிகிறது.  அதில் வியாபார
நோக்கம் இல்லாமல் உண்மை தன்மை இருக்கிறதா என்ற
விழிப்புணர்வு நம் மருத்துவர்கள் அறிய முடிவதில்லை.
உணவு பொருட்களில் சாம்பார் பொடி என்று எடுத்து கொண்டால் பல கம்பெனி தயாரிப்புகள் இருக்கும் . ஆனால் மூலப்பொருட்கள் எல்லாம் ஒன்றுதான். ஒரே வேதிப் பொருட்களை கொண்டு ஒவ்வொரு மருந்து கம்பெனியும் தன் பொருட்களுக்கு வெவ்வேறு வர்த்தக பெயரை சூட்டி கொள்கிறது. அதில்  மூலப்பொருட்கள் கண்ணுக்கே தெரியாத வகையில் பொடி எழுத்துகளில்தான் குறிப்பிட்டிருப்பார்கள் என்பதால் நமக்கு என்ன மருந்து என்பதை விட மருந்தின் வர்த்தக பெயர்தான் தெரியும்.
நம் நாட்டை பொறுத்த வரை மருந்து கம்பெனிகள் பற்றி
தேசிய விழிப்புணர்வு வரவேண்டும். இதற்கு அரசாங்கமே
மருந்து கம்பெனிகள் பயன் படுத்தும் முறைகள்,
பக்கவிளைவுகள் ஏற்படுத்துமா என்ற விவரத்தையும் புதிதாக
சந்தைக்கு வரும் மருந்து தன்மைகள் பற்றியும் ஆராய்ந்து 
 மருத்துவ மனைகளுக்கு தகவல் புத்தகம் மாதாமாதம் அனுப்ப
வேண்டும். இதில் எந்த மருந்து கம்பெனிகளின் விளம்பரமும்
அனுமதிக்க கூடாது.

தடை செய்யப்பட்ட மருந்துகளை ஏன் அரசாங்கம்
அனுமதிக்கிறது? மருந்தின் பின் விளைவுகளில் இருந்து
பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது பற்றி
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்….











Friday, 14 December 2012

“ ராசி…!”


                                                                                        
இரவு மணி மூன்றிருக்கும்..  திடீரென விழிப்பு வந்தது  தினகருக்கு..  பக்கத்து ரூமில் அம்மாவின் விசும்பல் கேட்டுக் கொண்டிருந்தது.  மகன் எதிரில் சோகமாய் இருந்தால் அவனுக்கு வருத்தம் அதிகமாகிவிடும் என்று இரவு நேரத்தில் தனிமையில்  அழுது கொண்டிருப்பாள் என நினைத்தான். 

எதிர்பாராதது எல்லாம் கண நேரத்தில் நடந்து விடுகிறது.
“வைதேகி.. நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாதுடி .. எனக்கு உழைக்க தெம்பிருக்கு.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ..”


“ வாரத்துல ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்காம இப்படி லீவு நாள்ல கூட எதுக்கு வெளி வேலைக்கு போறிங்க.. உடம்பை பார்த்துக்கனும்ல..” அம்மா திட்டும் போதுதான்  அப்பா அடிக்கடி அப்படி சமாதானம் சொல்வார்.

அந்த ஓயாத உழைப்பில்தான் இந்த வீடு, அக்கா கல்யாணம், அவன்  படிப்பு எல்லாமே சாதிக்க முடிந்தது. அதிகமா உழைத்து விட்டார் என்றுதான் கடவுள் ஓய்வெடுக்க சொல்லிவிட்டாரோ என்று நினைத்தான்.

  “ தினகர் வேலைக்கு போயிட்டாண்டி இனி அவன் வாழ்க்கைய அவன் நகர்த்த முடியும்னு எனக்கு நிம்மதியா இருக்கு.. ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுத்திட்டா இனி என்ன இருக்கு  நாம ப்ரீயா இருக்கலாம்…” சந்தோஷமாய் சொன்னார்.

அம்மாவும், அப்பாவும் ஜாதக பொருத்தம் பார்த்து  யமுனாவை பார்த்தார்கள். “ எங்களுக்கு பிடிச்சிருக்குடா..  நல்ல குடும்பம்..  இருந்தாலும் உன் இஷ்டம்தான்..”

எனக்கும் பிடித்துதான் நிச்சயித்தோம்.   இரண்டு மாதமிருந்தது  திருமணத்திற்கு, அதற்குள்தான் இப்படி நடந்து விட்டது. காலையில் எழுந்தவர் உடம்பு என்னமோ செய்கிறது என்று சொன்னவர்தான் அடுத்த நிமிடமே சாய்ந்து விட்டார். பதறி போய் ஹாஸ்பிட்டல் அழைத்து சென்றும் காப்பாற்ற முடியவில்லை.

“ இந்த பொண்ணை நிச்சயம் பண்ண நேரம்தான் நல்லாருந்த மனுஷன் திடுக்குன்னு போய்ட்டார்.  இனி எங்கிருந்து இந்த பொண்ண கட்றது..? “

" காலடி எடுத்து வைக்கறதுக்கு முன்னயே மாமனாரை முழுங்கிட்டா.. இந்த கல்யாணம் அவ்வளவுதான்.."

ஊரின் பலவித பேச்சுக்கள் யமுனாவின் குடும்பத்தை நிலை குலைய வைத்தது. வைதேகி ஒரு சொல்லும் சொல்லவில்லை. பதினைந்து நாள் துக்கம் முடிந்ததும் வைதேகியே சம்பந்தி வீட்டாரை அழைத்து சொன்னாள்,

“ யார் எது சொன்னாலும் கவலைப்படாதீங்க..  அவரோட காலம் அவ்வளவுதான். அதுக்கு  இந்த பொண்ணு என்ன பண்ணுங்க.. இதே மாப்பிள்ளை பார்த்த பெண் வீட்டில் இப்படி நடந்தால் மருமகன் வந்த நேரம்தான் மாமனாருக்கோ, மாமியாருக்கோ இப்படி ஆயிடுச்சின்னு சொல்றதில்லை. ஆனா பெண்ணை மட்டும் ஏன் அப்படி சொல்லனும்? ஒரு பெண்ணா நான் அந்த தப்பை செய்யமாட்டேன். ஜாதக பொருத்தம் பார்த்தப்ப கூட ஜோதிடர் இப்படி ஒரு ஆபத்து வரும்னு சொல்லலையே.. இது இயற்கையா நடந்து போன விஷயம். அவர் விருப்பபட்டு பார்த்த பொண்ணு யமுனா அதனால உங்க பெண்ணே எனக்கு மருமகளா வரனும். குறிச்ச தேதியில் கல்யாணம் நிச்சயமா நடக்கும்… நீங்க ஆக வேண்டியதை பாருங்க..”

“ அம்மா என் பொண்ணு வாழ்க்கை எப்படி ஆயிடுமோன்னு தவிச்சிட்டிருந்தோம்.. இப்படி ஒரு குணவதிக்கு என் பெண்ணை மருமகளா அனுப்பறோம்னு இப்பத்தான் எங்க மனசுக்குள்ள ஒரு அமைதி.. இனிமே யமுனா உங்க பொண்ணும்மா..”
சம்பந்தி கை கூப்பி கண்ணீர் விட்டு கொண்டிருந்தார்.
*********

Tuesday, 4 December 2012

உயர்ந்த உள்ளம்







ஏழ்மையால் துவண்ட உள்ளங்களுக்கு
தேடிப்போய் உதவிகள் செய்தவர்.!
தன் வருவாயையும் தனக்கென கொண்டதில்லை
தன்னை தேடி வந்த கோடிகளையும்-
 நற் பணிக்கே ஈன்றவர்..!
எளிமை கொண்ட மனிதன்
வலிமையான  சமுதாய  தொண்டன்..!
திரு.பாலம் கல்யாண சுந்தரம் பற்றி  தெரிந்தவர்களுக்கு  அவர்கள் சமுதாய தொண்டினை நினைவுப் படுத்தவும், தெரியாதவர்களுக்கு அறிந்து கொள்ளவுமே இப்பதிவு.
"பாலம் ஐயா" அவர்கள் நெல்லை மாவட்டத்துக்காரர். 
இவர் மாணவராக இருந்த போதே இந்தியாவிலே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளித்த முதல் மாணவன் என்று கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
 ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர்.
தனக்கு வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை அப்படியே குழந்தைகள் நல நலநிதிக்காக தந்தவர்.
அமெரிக்கா வழங்கிய 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்தவர்.
ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து அதன் வருமானத்தை மற்ற நற்பணிகளுக்காக கொடுத்தவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார். தன்னை சந்திக்க வரும் அறிஞர் பெருமக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை என்று ஒரு சிறிய அறையில் தங்கி உள்ளார். 
இவரின் தொண்டுகள்:
ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்.  மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

  10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

  பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

அறிவு பரப்பும் ஆக்க பணியில் அயராது உழைக்கும் திரு கல்யாண சுந்தரனாரின் கடமை உணர்வு பாராட்டுதற்குரியது.