Tuesday 30 October 2012

எறும்பு கற்று தந்த பாடம்

எறும்பு கற்று தந்த பாடம்












வீட்டை சுற்றி வெளியில் தூய்மை செய்து கொண்டிருந்தேன்..  சுவர் ஓரமாக எறும்புகள் வரிசையாக போய் கொண்டிருந்தது. கண்ணுக்கு புலப்படாத அளவு அதற்கு தேவையான தீனியை யானையை சுமப்பது போல பிரயத்தனப்பட்டு சென்று கொண்டிருந்தது. பார்ப்பதற்கு ஒரு தொழிற்சாலையில் பொருட்களை லோடு ஏற்ற பணியாளர்கள் வரிசையாக தலையில் சுமந்து செல்லுவதை போல இருந்தது. சுமையை கூட சுறு சுறுப்பாய் சுமந்து கொண்டிருந்த அந்த கூட்டத்தை கலைக்க மனமில்லாமல் பார்த்து கொண்டிருந்தேன்.. ஓரறிவு உள்ள  உயிர்க்கு கூட எத்தனை விழிப்புணர்வு மழைக்கு முன் தன் உணவை சேகரித்து பாதுக்காப்பான வழி தேடுகிறதே..?  ஆறறிவு உள்ள   நாம் மழையை சேகரிக்க விழிப்பாய் இருக்கிறோமா  என்று கேள்வி எழுந்தது.
அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஒவ்வொருவரும் கட்டாயமாக மழைநீர் சேமிப்புக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும். புது வீடுகள் கட்ட முனைவோர் அவர் செய்யப் போகும் மழை நீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை வரைபடத்தில் காட்டினால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 
அந்த உத்தரவுகள் வந்த உடன் அவசர அவசரமாக பொது மக்கள் மண்ணில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதற்குள் நான்கு கற்களைப் போட்டு வீட்டுக் கூரைகளிலிருந்து வரும் மழை நீர்க் குழாய்களை அதற்குள் விட்டு மூடிவிட்டார்கள். ஒரு நல்ல மழை பெய்த உடன் மூடியிருந்த பள்ளத்தைத் திறந்து கொண்டு மீண்டும் மழை நீர் சாக்கடைகளைத்தான் சென்றடைந்தது.
 இப்போது மழை நீர் சேகரிப்பை எத்தனை சதவிகித மக்கள் ஒழுங்காகக் கடைபிடிக்கிறார்கள்?   சட்டம் வரும்போது பரபரப்பாக சில நாட்கள் கடைபிடிக்கப் படுகிறது.   நாளாக.. நாளாக மக்களும், அதிகாரிகளும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.   ‘நீரின்றி அமையாது உலகு ‘ என்று தெரிந்து கொண்டும் தவறு செய்கிறோம். இல்லாத போது தண்ணீருக்காக போராட்டம் நடத்தும் மக்கள் மழை வரும்போது நீரை சேகரிக்க விழிப்பாக இருப்பதில்லையே..? ஏற்கனவே இருளில் மூழ்கி கொண்டிருக்கிறோம்.  நீரும் இல்லாமல்  போனால்   நாம் வசிக்கும் இடங்கள் பாலைவனமாக மாறிவிடும்.  இயற்கை அன்னை இன்னமும் கருணை காட்டுவதால்தான் பருவ மழை எட்டிப் பார்க்கிறது.  நீரின் அவசியத்தை புரிந்து இனியாவது மழை நீர் சேகரிப்பை அவசியமாய் கடைபிடிப்போம்..!


Monday 29 October 2012

கண்ணதாசன் நம்பிக்கை:

படித்தது :
கண்ணதாசன்  நம்பிக்கை:

ஆண்டவன் மீதும், சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூட நம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு.
அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை எதுவும் கிடையாது.
மகன் கல்லூரிக்கு கட்டப் போகிறான் என்று நம்பித்தான் தகப்பன் பணம் அனுப்புகிறான். அவன் அதை எப்படியும் செலவழிக்கலாம்.
அழகான ஹோட்டல்..  அருமையான சாப்பாடு ஆரோக்கியமான முறையில் சமைக்கப் பட்டிருக்கும் என்று நம்பித்தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமையற் கட்டில் என்ன நடந்திருக்குமோ யார் கண்டது?
‘ இவர்   நமது ஒழுங்கான பிரதி நிதியாக இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் ஒருவருக்கு ஓட்டளிக்கிறார்கள். அவர் எப்படியெப்படியோ மாறிவிடுகிறார்.
நம்பிக்கை வெற்றி பெறும் போது மட்டுமே கெட்டிக்காரத்தனம் போல் காட்சியளிக்கிறது. மற்ற நேரங்களில் அனைத்திலும் அது முட்டாள்தனம்தான்.
ஆண்டவனை நம்புவதிலும் அதே நிலைதான்.
அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத் தனம்.
தெய்வ நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று சொல்வதை பற்றி வருத்தமில்லை. மூடன் என்று சொல்லப்படுபவர்களும், அறிவாளி என்று சொல்லப் படுபவர்களும்  நம்மிடம்தான் வரப் போகிறார்கள் என்ற நம்பிக்கை  தெய்வத்துக்கு இருக்கிறதே..!  யார் என்ன செய்ய..?

Sunday 28 October 2012

போர்க்களமாயினும் போராடு..!


போர்க்களமாயினும் போராடு..!
துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.

  

 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.


 விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.
  

தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.


 கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.

  பிரிட்டனில்  21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு  பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான  ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.



சாக்ரடீசையும், அபிரகாம் லிங்கனையும்விடக் குடும்பவாழ்வில் துன்பப்பட்டவர்கள் யாரிருக்க முடியும்? 
 ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...!

சிறந்த அன்னை…

சிறுகதை
                                      சிறந்த அன்னை
















என்னை நீரஜின் பள்ளியில் அழைத்திருந்தார்கள். நீரஜ் பள்ளியில் எல்லாவற்றிலும் சூப்பர் ஸ்டார். அதனால் சிறந்த அன்னையாக பள்ளியில் என்னை சிறப்பிக்க போகிறார்களாம்அன்னையர் தினத்தை பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டும். என்ன பேசலாம்…  அன்னையர் தினத்தை பற்றி  யோசித்துக் கொண்டிருந்தேன்.
வேலைக்காரி கமலா வந்தாள்..”  அம்மா துணி எல்லாம் எடுத்து வச்சாச்சா…? “ கேட்டுக் கொண்டே பக்கெட்டில் உள்ள துணிகளை பரக்க பரக்க துவைத்தாள். துணிகளை மொட்டை மாடியில் காய வைத்து விட்டு கிச்சனுக்குள் சென்று எல்லா பாத்திரங்களையும் கழுவி வைத்தாள்.
அம்மா நான் கிளம்பட்டுமா..?
என்ன கமலா .. வழக்கமா லீவு நாள்னா லேட்டா வருவே நிதானமா செஞ்சுட்டு போவே…? இன்னிக்கு என்ன அரக்க.. பரக்க முடிச்சிட்டேஎங்கேயாவது வெளியில போறீயா..?
இல்லம்மா.. லீவு நாள்ல மட்டும் வந்து வேலை செய்யேன்னு இரண்டு வீட்ல கேட்டுருக்காங்கஅதான் சீக்கிரமா முடிச்சிட்டு போறேன்..”
ஏற்கனவே நாலு வீட்ல செய்றே.. இன்னும் வேறயா..…?”
என்னமா பண்றது எப்படியோ வாயை கட்டி வயித்த கட்டி படிக்க வைக்கிறேன். பொண்ணை அடுத்த வருஷம் காலேஜ் ல் சேர்த்து படிக்க வைக்கனும்… நாளைக்கு அதாவது கஷ்டபடாம இருக்கனும்... அதுக்குதான் நான் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது இன்னும் ரெண்டு வீடு பாக்கலாம்னு ஒத்துக்கிட்டேன்.   நாளைக்கு அதுங்க நல்லா இருந்தா போதும்.
சரி.. சரி.. நேத்து வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருந்தாங்க.. நிறைய ஸ்வீட், மிக்ஸர்னு இருக்கு நீயும் கொஞ்சம் சாப்பிடு…”  தட்டில் போட்டு தந்தாள்.
அம்மா.. இத்த கொஞ்சம் காயித்தல மடிச்சி குடேன். சின்ன பையன் ஏதனா தின்றதுக்கு வேணூம்னு ரெண்டு நாளே கேட்டுகிட்டே இருந்துச்சிஅதுக்கு குடுத்தா ஆசையா திங்கும்..”
பொட்டலத்துடன் சென்றவளை பார்த்து கொண்டிருந்தவளை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. அன்னையர் தினம் பற்றி யோசித்து கொண்டிருந்த எனக்கு  அவள் உணர்வு பூர்வமாக சொல்லி சென்று விட்டு போனதை நினைத்து. உண்மையில் இவளைத்தான் பாராட்ட வேண்டும் என்று மனசு சொல்லி கொண்டிருந்தது.
                                                                        *******

Friday 26 October 2012

(செவ்வாய் பற்றி படிச்சதுல புரிஞ்சது)



(செவ்வாய் பற்றி படிச்சதுல புரிஞ்சது)

அப்படியா சங்கதி…?


செவ்வாய்க்கு ஃபோபோஸ், டெய்மாஸ் இரண்டு நிலாக்கள் உண்டு. 
( அப்படியா .... இது “செவ்வாயின் இரண்டு நிலா இதிகாசம்..!” னு வைரமுத்து சார் எத்தனை வால்யூம் எழுத போறிங்க…?)



செவ்வாயின்  ஈர்ப்பு விசை, புவி ஈர்ப்பு விசையில் 38 சதவீதமே உள்ளது.அதாவது பூமியில் ஒருவர் 100 கிலோ எடை இருந்தால் செவ்வாய்க் கோளில்  38 கிலோ மட்டுமே இருப்பார்.
( அப்படின்னா… மானாட மயிலாட ஷூட்டிங்கை அங்கேயே வச்சிக்கலாமே..? அப்புறம் நம் ஜட்ஜூங்க யாரும் குண்டுன்னு சொல்ல முடியாது இல்ல…? )




செவ்வாயில் ஒரு நாள் பூமியின் ஒரு நாளை விடசற்று அதிகமாக இருக்கிறது. ( அப்படியா..? சீக்கிரம் ஆபிஸை அங்க மாத்துங்கப்பா எக்ஸ்ட்ரா டூட்டி (தூங்கறதுதான்) பார்க்கலாம்  ..!)



செவ்வாய்க்கும்  பூமிக்கும் சிலஒற்றுமைகள் காணப்படுகின்றன (  அப்படின்னா நாம குடியேறிப்பிடலாம்… ரியல் எஸ்டேட் காரங்க எப்ப போக போறீங்க பிளாட் போட…?)





செவ்வாயில் அடிக்கடி புழுதிப் புயல் வீசுமாம்.
( அப்படியா..?  புயல் நிவாரணம் தூள் கிளப்பும்..!)




பூமியைப் போலவே செவ்வாய்க்கும் பருவ காலங்கள் உண்டு  ( அப்படின்னா.. டீன் ஏஜ்.. பருவம் எப்ப…?)
-       ( ஒழுங்கா சயின்ஸ் புக் படிங்கன்னு சொன்னா… கேட்பிங்களா…? அதான் இப்படி…ஹி..ஹி…!)

துன்பங்களும் பழகிப் போனால்….!

துன்பங்களும் பழகிப் போனால்….!







துன்பங்களும் பழகிப் போனால்….!
அரசன் ஒருவன் தவறிழைத்துவிட்டதால் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை  விரும்பாத அந்த அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான்.
எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.
பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என்  மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.
மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான  வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது.
இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படிய வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும்  '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.

Wednesday 24 October 2012

 



ஆயுத பூஜை, விஜயதசமி இந்த நாட்கள் விசேஷமாக இருக்கும். வீடு, அலுவலகம், தொழிற்சாலை எங்கும் தூய்மை செய்யப்பட்டு விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜொலிக்கும். வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப் படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம்,  படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இ‌டவு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூ ‌க்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். அன்னையின் பார்வையில் புத்தக ங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை  வைக்க வேண்டும்.  சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவ‌ற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில்  பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி,  ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து  அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். எதற்கும் விநாயகரே  முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும். பூஜையின்போது  வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். நவராத்திரி  நாட்களில்  அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க  இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள்  பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆயுத பூஜை: ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப்  பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும். ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூ ர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயபடுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் மேன்மை தரும்.

பள்ளிக்கூடம் படிக்கிற காலத்துல புக்சை பூஜையில இரண்டு நாளைக்கு அப்படியே வைச்சுடுவோம். விஜய தசமி முடிந்து மறு நாள்தான் புத்தகத்தை எடுக்கனும்னு அம்மா சொல்வாங்க. அப்ப செம ஜாலியா இருக்கும். ரெண்டு நாளைக்கு புக் எடுத்து படிக்காம விளையாடிகிட்டு இருக்கலாமில்ல..! 
சில கடைகள்ல பூஜை போட்டுட்டு அன்னிக்கு வியாபாரம் பண்ணாம இருப்பாங்க. இந்த E.B காரங்க வருஷத்துக்கும் சேர்த்து பூஜை போட்டுட்டு கரண்ட்டை கட் பண்ணி வைக்கிறாங்களோ..? 


Wednesday 17 October 2012

கவிதை



 










அரை மணி நேரமாய் பேசுகிறாய்..
பேலன்ஸ் குறைந்து விட போகிறது
அலை பேசியை அவசரமாய் துண்டிக்கிறாய்..
மீண்டும் அழைக்கிறேன்..
என்னிடம் காதல் நிறைய இருப்பதால்..!

கவிதை



எனக்கு
ஞாபக மறதி அதிகம்
 என்கிறார்கள்..
எப்படி சொல்வேன்.
உன் நினைப்பில்
என்னை மறப்பதை..?
கவிதை



தோற்று போவது பிடிக்கிறது
சிறை படுவது-
உன்னிடம் என்பதால்..!
கவிதை



தினம் தாக்குகிறாய்
வலிக்கவில்லை..
உன் அழகான விழிகள்..!

Tuesday 16 October 2012


கவிஞர் சுரதாவின் காதல் விளக்கம்:

இந்து, புராண இதிகாசங்களை மட்டும் புரிந்து கொள்வான். கிறித்தவன் பைபிளை மட்டும் புரிந்து கொள்வான். முகம்மதியன் குரானை மட்டும் புரிந்து கொள்வான். ஆண்டவனை புரிந்து கொள்வதிலும் இப்படி பாகுபாடு உண்டு. ஆனால் இவர்கள் எல்லாருமே காதலை புரிந்து கொள்கிறார்கள் இல்லையா? எனவே காதலுக்கு ஆண்டவனை விட பரப்பு அதிகம். பக்தியை கூட நாயக் நாயகி பாவத்தில் பாடினால்தான்  நம் பக்தர்களுக்கு புரிகிறது. காதல் ஆண்டவனுக்கும் அறிமுகமாக அமைகிறது. காதல் நிலை பேறு பெற்ற சப்ஜெக்ட் . பாமரன் முதல் படித்தவன் வரை எளிதில் புரிந்து கொள்ள கூடிய பொருள். என் பாடல்களில் காதல் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும்.

( பாக்யாவில் வெளிவந்தது)

Sunday 7 October 2012

“ அவள் பணக்காரி...! "

சிறுகதை:
                                    அவள் பணக்காரி...!
              “ ஷைலு.. இன்னிக்கு எல்லாமே உன் மெனுதான்..  எதையாவது ஆர்டர் பண்ணு..” தருண் மெனு கார்டை நீட்டினான்.
ஷைலு புன்னகையை உதிர்த்து ஆராய்ந்து கொண்டிருந்தாள். டிஸைனர் சாரியில் தேவதையாய் தெரிந்தாள்.
ம்.. ரொட்டி பனீர், அப்புறம் ரவா மசாலா..”
சொல்லிவிட்டு காத்திருந்த வேளையில் அவர்கள் மேசையில்  காலியாக இருந்த இரண்டு நாற்காலிகளில் அந்த தம்பதிகள் உட்கார்ந்தனர்அந்த ஆள் மக்கலாக பழுப்பேறிய சட்டையுடன், அந்த பெண் ஒரளவு பவுடர் பூசி தலையில் மல்லிகை வைத்து கொண்டு புது புடவையோடு.. மிஞ்சி போனால் இரு  நூறை தாண்டாது.
புள்ள.. பொறந்த நாள் அதுவுமாஉனக்கு புடிச்சதா சாப்பிடு.. என்ன வோணூம்னாலும் வாங்கிக்கதுட்ட பத்தி கவலைப் படாத..”
போ மாமா.. அதுக்குன்னு இந்தா பெரிய ஓட்டலுக்கு கூட்டிட்டு வருவே…? வீணா எதுக்கு செலவு பண்றே…?  செல்லமாய் கடிந்தாள்.
பிறகு அவனை பூரி, மசால் தோசை என்று ஏகத்துக்கும் வரவழைத்தான். இருவரும் தட்டை வழித்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்ட விதம் ஷைலுவிற்கு எரிச்சலை தந்தது.
மெல்ல தருணின் காதில் கிசு கிசுத்தாள், “ நாம வேறு டேபிளுக்கு போகலாமா..?”
அதெல்லாம் நல்லாருக்காது. சர்வர் கொண்டு வந்து வச்சாச்சிபேசாம சாப்பிடு..”
என்னால முடியாது.. ஓண்ணு வேற டேபிளுக்கு வாங்க இல்ல நான் சாப்பிடலை..”
சரி சாப்பிடாட்டி போதருணேஇரண்டையும் சாப்பிட்டான். அவள் கோபமாக அந்த பக்கம் திரும்பி கொண்டாள்.
எதிரில் உட்கார்ந்திருந்த அந்த பெண் வெகுளியாய், “ என்ன சார்.. அவங்களை விட்டுட்டு நீங்க மட்டும் சாப்பிடறீங்க…”
இல்லங்க அவங்களுக்கு வயிறு சரியில்லையாம்…” சமாளித்தான்.
சாப்பிட்டு கை கழுவும் போது அந்த பெண், “  என்ன மாமா.. தினந்தான் நான் உன்னைய நினைச்சி சந்தோஷமா இருக்கேன்…? பத்து நாள் உழைப்பை ஒரே நாள்ல செலவு பண்ணனுமா..?
ஏய் சும்மா செலவை பத்தியே யோசிச்சிட்டிருக்காத ..  எனக்கு மட்டும் உன்னை மகாராணி மாதிரி பார்த்துக்கனும்னு எண்ணம் இருக்காதா..?   சிரித்துக் கொண்டே கை கோர்த்துக் கொண்டு கிளம்பினார்கள்.
காரின் கதவை கோபமாக சார்த்திவிட்டு சீட்டில் உட்கார்ந்த ஷைலு, என் பர்த்-டே அதுவும் எங்கூட சேர்ந்து சாப்பிடாம... என்னை விட்டுட்டே சாப்பிட்டங்க இல்ல..? அந்த பிச்சைக்காரங்களுக்கு வேற ஹோட்டலா கிடைக்கல... நம்ம எதிரே உட்கார்ந்து என் சந்தோஷத்தையே கெடுத்துச்சுடுங்க..  அந்தாளு குளிச்சானோ இல்லையோ ஒரே வியர்வை ஸ்மெல்..
அதுவரை பொறுமையா இருந்த தருண், ஏய்.. மனுஷனை மனுஷனா பார்க்காம , புடவை,  நகை வச்சி எடை போட்டு  தரம் பிரிக்கிறே...யாரு பிச்சைக்காரங்க... நீதான் பிச்சைக்காரி  எல்லாம் இருந்தும் இன்னிக்கு உன்னால சாப்பிட முடியலை. அவங்க எதுவுமே இல்லைன்னாலும் சந்தோஷமா வாழனும்னு மனசு இருக்கு பாரு பார்க்க போனா அவங்கதான் நம்மை விட பணக்காரங்க...!
ஷைலு முகத்தை திருப்பி கொண்டு விண்டோ வழியாக பார்த்தாள்,  அந்த பெண் இதழில் புன்னகை  நிரம்பி பெருமையோடு அவன் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து அவன் தோளை அணைத்து கொண்டு போய் கொண்டிருந்தாள்.

(அக்டோபர் 12-18 பாக்யா)