Showing posts with label பிள்ளைகள். Show all posts
Showing posts with label பிள்ளைகள். Show all posts

Friday, 18 October 2013

பணம் காய்ச்சி மரம்...

அப்பா போய் பத்து நாட்களாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு அப்பா என்பதை விட நண்பனாகத்தான் நிறைய தெரியும். சரவணனுக்கு அப்படி இல்லை....

 அப்பா வாத்தியாராய் இருந்த பள்ளியிலே நாங்கள் இருவரும் படித்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அப்பாவிடம் சொல்வார்கள்” சார் உங்க சின்ன பிள்ளை சிவா பரவாயில்லை... படிப்பில கெட்டி ஆனா பெரியவன் சரவணன் ஏன் இப்படி இருக்கான்? “  கேட்கும் போது அப்பா பதில் சொல்ல முடியாமல் உடைந்து போய் விடுவார்.

சரவணனுக்கு எத்தனையோ நல்லவிதமாய் சொல்லி தந்தும் அவனுக்கு படிப்பின் மேல் ஆர்வம் வரவேயில்லை. அப்பா அவசரமாய் நூறு ரூபாய் கேட்டதாக சொல்லி பக்கத்து தெரு வாத்தியாரிடம் கடன் வாங்கி அடுத்த ஊர் சினிமாவிற்கு போய்விட்டதிலிருந்து அவனுக்கு ஒழுக்கமும் வரவில்லை என்பது வெளிச்சமாகியது. சரவணனுக்கு அத்தனை சரளமாய் பொய் வந்தது.

அம்மாவின் அழுகை, அப்பாவின் அறிவுரை எதுவுமே அவனை அசைக்கவில்லை. பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பதால் அதுவரை வந்து விட்டிருந்தான்.  பொது தேர்வில் எப்படியாவது சராசரி மதிப்பெண்ணிலாவது அவன் தேறிவிட வேண்டும் என்று அம்மா சரஸ்வதி பூஜை பண்ணி கொண்டிருந்தாள்,

“ அடி அசடு அவன் பேப்பரில் ஒண்ணுமே இல்லாமல் மார்க் மட்டும் எப்படி வந்துடும்..? அவனுக்கு படிப்பு வரல்ல... ஒண்ணும் பண்ண முடியாது வேற வழிதான் செய்யனும்...”
படிப்பு வரவில்லை என்றால் அடுத்தது கைத்தொழிலைத்தான் தெரியும்.. அப்பா அவருக்கு தெரிந்த தையல் கடையில் தையல் கற்று கொள்ள சேர்த்து விட்டார். அங்கும் அவன் ஒழுங்காய் இருக்கவில்லை... மதியம் சாப்பிட போகிறேன் என்று சொல்லிவிட்டு சினிமா  சென்று விடுவான்.  நண்பர்களோடு சிகரெட் பிடித்து கொண்டிருப்பதாக யாரோ வந்து சொன்ன போது அம்மா ஆக்ரோஷமாய் வயிற்றில் அடித்து கொண்டாள்,

“ டேய்.. இவனை பெத்த வயித்தலதாண்டா உன்னையும் சுமந்தேன்.. நீ மட்டும் ஏன் இப்படி இருக்க...? “

ம்ஹூம். அம்மாவின் அழுகைக்கெல்லாம் அசைந்து கொடுப்பவனில்லை... அடுப்பங்கறையில் நுழைந்து இருப்பதை தட்டில் போட்டு கொண்டு டி.வி பார்த்து கொண்டு உட்கார்ந்து விடுவான்.

“டேய்...  நீ என்னதாண்டா மனசுல நினைச்சிருக்க... தினம் நல்லா ட்ரஸ் பண்ணிக்கிறது, சாப்பிடறது டி.வி பார்த்துக்கிட்டு பொழுது போக்க வேண்டியது.... உங்கப்பாவிற்கு உன்ன நினைச்சி நினைச்சி டென்ஷனாகுதுடா.. அந்த மனுஷனுக்கு எதாவது ஆகிட்டா நம்ம கதி என்ன...”

தையல் கடைக்கு போவதையும் நிறுத்திவிட்டான். அப்புறம்  அப்பா தீக்குச்சி கம்பெனி, பால் பண்ணை என்று எங்கெங்கோ வேலைக்கு சேர்த்து விட்டார்... ஒவ்வொரு காரணம் சொல்லி இரண்டு மாசம் போய்விட்டு நின்று விடுவான்.  நான்  நிறைய மார்க் எடுத்து இஞ்சினியரிங் சேர்ந்தேன். சரவணன் இப்படியே இருப்பது அப்பாவிற்கு கவலையாக இருந்தது.. அவனுக்கே ஒரு பொறுப்பை கொடுத்தால் என்ன என்று யோசித்தார்.

 அப்பா ஆசையாய் பைக் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடாய் போட்டு ஒரு சின்ன மளிகை கடையை ஆரம்பித்தார். இப்போது கிடைப்பது போல் அப்போதெல்லாம் அப்பாவிற்கு அவ்வளவு சம்பளம் கிடையாது.  

“ சரவணா எவ்வளவோ தூரம் சொன்னேன்... நீ உன் எதிர்காலத்தை பத்தி யோசிக்கவே இல்ல.. கஷ்டப்பட்டு இவ்வளவு நாளா சேமிச்ச பணம்... உழைச்சாவது பிழைக்க கத்துக்க.. இந்த ஊர்ல அவசரத்துக்கு பொருள் வாங்கனும்னா கூட டவுனுக்குதான் போறாங்க... இங்க கடை நல்லா வியாபாரம் ஆகும் .. இதிலயாவது சாமர்த்தியமா இருந்து உன் வாழ்க்கையை பார்த்துக்க...”

அவர் எதிர்பார்த்த மாதிரி அவன் பொறுப்பாய் இருப்பான் என்ற நம்பிக்கையிலும் மண் விழுந்தது. பெரும்பாலான நேரங்களில் கடையை பூட்டி விட்டு வழக்கம் போலவே சிகரெட், சினிமா என்று சுற்றி கொண்டும், நண்பர்களுக்கு கடன் கொடுத்தும்  கடையையும் நட்டமாக்கிவிட்டு உட்கார்ந்து விட்டான்.

அப்போதுதான் பெரிய மாமா வந்திருந்தார், “ மல்லிகா இவனை இப்படியே விட்டா வழிக்கு கொண்டு வர முடியாது. இவன் இங்கிருக்கவே வேணாம்... என்னோட மில் வந்து பார்த்துக்கிடட்டும்... “ என்று சொல்லி திருப்பூருக்கு அழைத்து சென்று விட்டார்.

அவன் மாமாவிடம் இருந்து மாறிவிடுவான் என்ற  நம்பிக்கையில் அம்மா கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். எனக்கு படிப்பு முடிந்து  நல்ல வேலை கிடைத்த சமயம்...அப்பாவிற்கும் சம்பள உயர்வு கிடைத்திருந்தது.

அப்பா ஆசைப்படி இருக்கும் ஓட்டு வீட்டை இடித்து பெரிய மாடி வீடு கட்ட அடித்தளம் போட்டோம்.  நான் அப்போது வேலை விஷயமாய் அஸ்ஸாமிலிருந்தேன்... இரண்டு மூன்று நாட்களாவது ட்ரெயினில் பிரயாணம் செய்து மாதத்திற்கொரு முறை வீட்டு வேலை பார்க்க வந்துவிடுவேன். வேலைக்கு சென்ற கொஞ்ச காலத்திலேயே அப்பாவிடம் ஒன்றறை லட்ச ரூபாய் தந்ததும்,  அப்பா தழு தழுத்து போனார், 

“ சிவா எனக்கு தெரியும்டா ஒரு டீ, காபின்னு கூட செலவு பண்ணாமத்தான் இதை சேர்த்திருப்ப... இதை நல்ல விதமா செலவு பண்ணிடலாம்... இந்த காசை வச்சி மேல ஒரு  போர்ஷனும் கட்டிடலாம் நமக்கு வாடகையும் வரும்..”

மட மடவென்று இரண்டு மாடிகள் உயர்ந்து தெருவே வியந்து பார்க்கும் அளவு கட்டிடம் எழும்பி கொண்டிருந்த போதுதான் இடியாய் அந்த செய்தி வந்தது...

“ மல்லிகா உன் பெரிய புள்ள... மில்லில வேலை செய்ற ஒரு பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடிட்டான்.. அதுவும் அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை ஏமாத்தினவ...”

ஒவ்வொரு செங்கல்லும் பார்த்து பார்த்து கட்டி கொண்டிருந்த அப்பாவிற்கு சரவணனை மட்டும் பார்த்து வளர்க்கவில்லையோ அழுத்திய கவலையில், “ டேய் சிவா இனிமே அவனை நம்பி பிரயோஜமில்லைடா  நான் இல்லாட்டியும் அம்மாவை நீ பார்த்துப்பேன்னு நான் தைரியமா இருக்கேண்டா...” விம்மினார்.

அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் என் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று  நல்ல குடும்பமாய் பார்த்து கீதாவை எனக்கு கல்யாணம் செய்து வைத்தார். பேர குழந்தையும் பிறந்ததில் அப்பா கொஞ்சம் கவலை மறந்து போய் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அப்பா இருண்ட முகத்துடன் யோசனையுடன் உட்கார்ந்திருந்தார், நான் பக்கத்தில் உட்கார்ந்ததும், “ டேய் சிவா... அவனை பார்த்தேண்டா ரொம்ப இளைச்சி எலும்பும் தோலுமாய் அப்பா பசிக்குதுப்பா சாப்பிட்டு ரெண்டு நாளுச்சின்னு அழுதான்.. எனக்கு மனசு கேட்கலைடா மெல்ல ஹோட்டலுக்கு அழைச்சிகிட்டு போய் சாப்பாடு வாங்கி குடுத்து விசாரிச்சேன்...

அவன் கட்டிக்கிட்டவ ரொம்ப மோசமானவடா பணம் பணம்னு இவனை உலுக்கியிருக்கா... கட்டிட வேலை.. மெக்கானிக் வேலைன்னு எவ்வளவோ பார்த்திருக்கான்... இப்ப  செங்கல் லாரி லோடு ஓட்டறானாம்... அங்க ஸ்கூல் பக்கத்து கட்டிடத்தில் லாரி நின்னப்பத்தான் என்னை வந்து பார்த்தான்.

அதற்கு பிறகு அவன் அப்பாவை அடிக்கடி ஸ்கூலில் சென்று பார்ப்பதும்.. கண்ணீர் வடித்து ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கி கொண்டு போவதாய் அம்மா சொன்னாள். பெத்த மனம் பித்து... உடன் பிறந்தவன் தானே.. நானும் அப்பாவிடம் எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

என்னையும் வழியில் பார்த்து அவன் கதையெல்லாம் சொன்னான்.. அவன் மகளுக்கு பிறந்த  நாளுக்கு புது துணி வாங்க கூட காசில்லை... மனைவிக்கு உடம்பு சரியில்லை.. என்று அடிக்கடி ஏதாவது சொல்லி வாங்கி கொண்டு போனான். அவன் சொல்வது பொய்தான் என்று தெரிந்தாலும் பெரியவனாக பிறந்து விட்டான் என்று மன்னித்து கொண்டிருந்தேன்.

அப்பா ரிடையர்டு ஆனவுடன், “ சிவா என்ன இருந்தாலும் அவனும் எனக்கு மகன் தாண்டா.. இந்த பணத்தை வச்சி சின்னதா ஒரு வீட்டை கட்டி அவனை தனியா வச்சிடலாம்.. இங்கேயே ஒரு வேலை பார்க்கட்டும். அவன் எங்கோ கஷ்டப்படறதை பார்க்க சகிக்கலைடா...”

மட மடவென்று வீடு தயாராகி மனைவி, மகளுடன் வந்து விட்டான். அப்பா சேர்த்து கொண்ட தைரியத்தில் அடிக்கடி வேலைக்கு போகாமல் அப்பாவிடமே காசு கேட்டுக்கொண்டிருந்தான்.

“ மல்லிகா எனக்கு சிவாவை பத்தி கவலை இல்ல... படிச்சி அவன் கால்ல நின்னுட்டான்..  என் காலத்துக்கு அப்புறம் இந்த சரவணன் என்ன பண்ண போறான்.. நாளைக்கு சாப்பாட்டுக்கே திண்டாடுவானே?..”

சரவணனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் இரவு, பகல் பார்க்காமல் உழைக்க ஆரம்பித்தார்.  காலை , மாலை என்று ஓயாமல் ட்யூஷன் எடுத்தார். அதோடு பென்ஷன் பணம் என்று சேமித்து சரவணனுக்கு இன்னும் இரண்டு வீடுகளை கட்டி அவனுக்கு வாடகை வரும் படி செய்ததும்தான் கொஞ்சம் நிம்மதியானார்.

“ மல்லிகா இந்த பய நாளைக்கு வேலைக்கு போகாட்டி கூட எதோ பசியை ஆத்திக்கற மாதிரி ஒரு வழி பண்ணிட்டேன்... இன்னும் ஒரே வேலை பாக்கி இருக்கு... என்ன பாவமோ அவன் ஒரு பெண்ணை வேற பெத்து வச்சிருக்கான்... அது கல்யாணத்துக்கு கொஞ்சம் சேமிச்சி வச்சிட்டா நான் வீட்லயே உட்கார்ந்துடுவேன்...”

அப்பா ஓய்வு பெற்றும் ஓயாமல் ஓடி கொண்டிருந்தது எனக்கு வருத்தமாயிருந்தது. அவர் உடல் நிலையில் அக்கறை காட்டி கொள்ளாமல் போய் கொண்டிருந்ததால் வர வர ஓடாய் தேய்ந்து மூச்சிறைத்து கொண்டிருந்தார்.

“ அப்பா...  நீங்க இப்படி உடம்ப கவனிக்காம ஓடிட்டிருக்கிறது கவலையா இருக்கு... எனக்கு நீங்க வேணும்பா... இப்பல்லாம் அதிகமா மூச்சிறைக்குது உங்களுக்கு... ஆஸ்பிட்டலுக்கு போய் பார்த்துக்கலாம்பா...”

“ சிவா.. அதெல்லாம் கவலைப்படாத.. வயசானா அப்படித்தான்... இன்னும் என்னால அஞ்சு வருஷத்துக்கு உழைக்க முடியும்... அதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் என்னால என்னன்ன பண்ணமுடியுமோ அத பண்ணிடறேன்... 

அப்பாவின் இரத்தமும், வியர்வையும்... செங்கல்லும், சிமெண்ட்டுமாய் கட்டிடமாகியது. காலம் என்ன நினைத்ததோ அவருக்கு நிரந்தர ஒய்வை கொடுத்து எங்களை கண்ணீரில் ஆழ்த்தியது.  நெஞ்சு வலி என்றவர் ஆஸ்பிட்டலுக்கு சென்றும் பலனில்லாமல் போய்விட்டார்.

ஒரு சமயம் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது, “ சிவா வயசாயிட்டா.. என்னால் நடமாடமுடியாத பட்சம் இருந்து என்ன பிரயோசனம்? ஒரு சமயம் என் நினைவு தப்பி எதாவது ஆகிடுச்சுன்னா கூட ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போய் லட்சக்கணக்குல செலவு பண்ணி வீண் பண்ணிடாதே... “

இறப்பிலும் கூட தன் பிள்ளைகளுக்கு சேமிக்க வேண்டும் என்று நினைக்கும் இப்படி ஒரு அப்பாவா...?

ஆயிற்று அம்மாவை கண் கொண்டு பார்க்க முடியவில்லை...” டேய்... அப்பா உங்களுக்காகவே வாழ்ந்தார்டா... எனக்கு துணையா இருக்கனும்னு நினைச்சு பார்க்கலையே...?”

அப்பா வளைய வளைய வந்த வீடு வெறிச்சோடி இருந்தது. ஆயிற்று பதினொராம் நாள் காரியங்கள் முடிந்ததும் காத்திருந்தவன் போல் சரவணன் பேச ஆரம்பித்தது நெருப்பை அள்ளி கொட்டியது போலிருந்தது..

“ மாமா... இந்த வீட்டுக்கு இப்ப நீங்கதான் பெரியவங்க.. அப்பா போயாச்சி.. இருக்கிற சொத்தை எனக்கு பிரிச்சி கொடுத்திட்டா நான் போயிட்டே இருப்பேன்...”

“டேய்... என்னடாது இது... அப்பா போய் பத்து நாளாச்சு அதுக்குள்ள சொத்து பத்தி பேசறே... பாவி பயலே.. உன்னை பத்தி கவலைப்பட்டே அவர் செத்து போனார்... என்னிக்காச்சும் அப்பான்னு அவருக்கு எந்த கடமையாவது செஞ்சிருக்கியா...?” மல்லிகா அரற்றி அழுது கொண்டிருந்தாள்.

“ மாமா அவன் கேட்கறதை கொடுத்திருங்க.. இனி யார்கிட்ட கையேந்த போறான்... அவனை பொறுத்த வரை அப்பா பணம் காய்ச்சி மரமாத்தான் இருக்கார்.. சரவணா... அந்த மரம் மண்ணுக்குள்ள போய்ட்ட பிறகும்  திருந்தலைன்னா... நீ மனுஷனே இல்லடா...”

சரவணன் சொத்து மதிப்பை கணக்கு போட்டு போட்டுக்கொண்டிருந்தான்... எனக்கு அப்பா கைபிடித்து முதலில் சிலேட்டில் ஒன்று... இரண்டு எழுத சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.. அப்பா... அப்பா... நீ சுகமா இருந்ததையே நான் பார்க்கலையேப்பா... ?

அப்பா புகைப்படத்தில் பணம் காய்க்கும் மரமாய் சிரித்து கொண்டே பார்த்து கொண்டிருந்தார்.
*****************


(   இது வெறும் கதை மட்டுமல்ல... பல குடும்பங்களில் காண நேரிடுகின்ற நிகழ்வுகள்... !  )
நான் அலுவலகம் செல்லும் போது தினமும் பள்ளிக்கு போகும் அந்த இரண்டு சிறுவர்களை பார்க்கிறேன்...  பெரியவன் எட்டாவது படிக்கலாம்... அவன் தம்பி ஐந்தாம் வகுப்பு இருக்கலாம்...! பெரியவன் முதுகில் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு  ஊனமுற்ற அவன் தம்பியை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து தள்ளிக்கொண்டு தினமும் பள்ளிக்கு அழைத்து போகிறான்.  இந்த காட்சி என்னை மனம் நெகிழ வைக்கும்... வளரும் வரை சகோதர பாசங்களில் பணம் குறுக்கீடு செய்வதில்லை. வளர்ந்த பிறகுதான்  எனக்கு, உனக்கு என்று பணம் அவர்களை பிரித்து பார்க்கிறது.




Thursday, 17 May 2012

தலைக்குனிவு





" அப்பா நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிகங்க? என் வீட்டுக்கு வந்துடுங்கப்பா " சதீஷ் சொன்னான்.பதில் சொல்லாமல் பார்க்கலாம் என்பது போல் தலையசைத்தார் சுந்தரேசன்.
கொஞ்ச நேரத்தில் அப்பாவிடம் வந்த நரேன், " அப்பா நீங்க தனியா இருக்க வேண்டாம் என் கூட வந்திடுங்க " என்றான்.
தாய் இறந்த துக்கத்திற்கு வந்த மகன்கள்தான் இவ்வாறு அழைத்தனர். இரண்டுபிள்ளைகளுக்கும் மூன்று மாதம் கழித்து பதில் சொல்வதாக கூறி அனுப்பினார்.
மூன்று மாதம் கழித்து அப்பா போனில் சொன்ன தகவலை கேட்டு இரண்டு பிள்ளைகளும் உடனடியாக புறப்பட்டு வந்து கூச்சல் போட்டார்கள்.
" அப்பா இந்த வயசுல நீங்க பண்ணின காரியம் கொஞ்சங்கூட நல்லால்லே... அம்மா போய் மூணு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு வந்து நிக்கறிங்களே...உங்களுக்கு அசிங்கமா இல்லை...?"
சிறிது நேரம் மௌனமாய் இருந்த சுந்தரேசன் தொண்டையை கணைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
" உங்கம்மா உங்களை எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தா? கடைசி காலத்தில உங்க கூட வந்து இருக்கணும்னு ஆசைப்பட்டா.. ஆனா, அவ படுத்த படுக்கையா இருக்கறதை காரணம் காட்டி , அவளை நீங்க கூட்டிட்டு போய் வைச்சிக்கலை.
கடைசி வரை அவளுக்கு நான் எல்லாம் மனசு கோணாம செஞ்சும் ' பிள்ளைங்க பார்த்துக்கலேன்னு மனக்குறையோடதான் போய் சேர்ந்தா..."
அப்ப எங்க மேல இல்லாத பாசம் இப்ப என் மேல ஏன் வந்திருக்கு...?
காரணம் நான் நல்லா திடகாத்திரமா இருக்கேன். உங்க வீட்டுக்கு சம்பளம் இல்லாத காவல்காரனா இருப்பேன்..என் பென்ஷன் 20 ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கலாம்ங்கிற நப்பாசைதானே...?"
உங்க ரெண்டு பேரையும் நான் அப்படியே விடலை.. நல்லா படிக்க
வைச்சிருக்கேன்.. நல்ல வேலையில் இருக்கிங்க.. வீடும் வாங்கி கொடுத்திட்டேன், கல்யாணத்துக்கு செய்ய வேண்டியதையும் செஞ்சிட்டேன். இனி யாருக்காவது நல்லது செய்யனும்னு நினைச்சேன்...
இதோ இந்த வளர்மதியோட அப்பாவும் அம்மாவும் வயசானவங்க.. வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ற அளவுக்கு வசதி இல்ல.. அதனால 40 வயசாகியும் இன்னும் கல்யாணமாகலை. அப்பா , அம்மா காலத்துக்கு பிறகு இவ நிலமை கேள்விக்குறியா இருந்தது. இவளை கல்யாணம் பண்ணிகிட்டதால என் பென்ஷன் பணம் எனக்கு பிறகு இவளுக்கு வரும். இதுக்கு சட்டபடி ஏற்பாடு செய்யத்தான்  இந்த கல்யாணம்.மற்றபடி, இவ என்னை பார்த்துக்க வந்த தாய்... என் மனசுல
எந்த களங்கமும் இல்ல.. இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கலேன்னா யாரும் இங்க வர வேண்டாம்...." சுந்தரேசனின் வார்த்தைகள் சம்மட்டியாய் தாக்க.. பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தனர் இரு பிள்ளைகளும்.

(28-8-2010 தின மலர் - பெண்கள் மலரில் வந்தது)