Sunday 29 April 2012


கவிதை

வேண்டுதல்
இல்லாமலே..
தீ மிதி -
கொளுத்தும் வெளியில் ..
பாதணி காணாத
ஏழையின் பாதம்...!

(ஏப்ரல் 27 - மே 03  -2012    பாக்யாவில் வெளிவந்தது)

Saturday 28 April 2012


சிறு கதை : தண்டனை

"செந்தில்... நான் ஒண்ணு கேட்கட்டுமா...? கையிலுள்ள புத்தகத்தை பிடுங்கி அவன் கண்களை ஊடுருவினாள் தேன்மொழி.
" தேன்மொழி என்ன விளையாட்டு இது..? கணக்கு பாடத்தில சந்தேகம்னுதானே கூப்பிட்டுஅனுப்பினே..? "
" போ.. செந்திலு... எப்பவும் உர்ருணுதான் இருப்பியா.. ? நான் சொன்னதை எல்லாம் விளையாட்டா எடுத்துக்கிறியா...? என் மனசுல உன்னை தவிர யாருக்கும் இடம் கிடையாது... என்னை புரிஞ்சிக்கமாட்டியா...?
" இதப்பாரு தேனு... பாட சம்மந்தமா பேசறதா இருந்தா.. நான் இருக்கேன்.. இல்லே ..இப்பவே எந்திரிச்சு கிளம்பறேன்...என் மனசுல வாழ்க்கையில முன்னேறனும்னு ஒரேஎண்ணம்தான் இருக்கு.. உங்க நிலத்தில கூலி வேலை செய்யற எங்கப்பா என்னை இந்தளவுக்கு படிக்க வைக்கிறார்னா... நான் நல்ல நிலைமைக்கு வந்து அவங்களை சுகமாவச்சிருக்கணும்... அது மட்டும்தான் என் கனவு...ஆசை எல்லாம்... உங்க அந்தஸ்துக்குதேவையில்லாம என்னை நினைக்காதே...."
" ஆமா.. என்ன பெரிய அந்தஸ்து...உங்களை மாதிரி நல்லவர் முன்னாடி அதெல்லாம்பெரிசில்ல...அடுத்த மாதம் உங்க படிப்பு முடிஞ்சிட்டா.. இரண்டே வருஷத்தில நல்லநிலமைக்கு வந்துடுவிங்க...அதுவரை காத்திருக்கேன்.. அப்ப என்னை ஏத்துக்குவிங்க இல்லே...?"
"தேன் நீ பேசறதை எல்லாம் உங்க அப்பா கேட்டார்னா.. அவ்வளவுதான்....."
சந்தேகப்பட்டு வந்த பண்ணையார் பெரியசாமிக்கு , செந்திலின் அந்த ஒற்றை வார்த்தை மட்டும் காதில் விழ.. கதவோரம் நின்று கொண்டார்.
" நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.. நம்ம காதலை... யாராலும் பிரிக்க முடியாது....!
சொன்ன தேன்மொழியை முறைத்துவிட்டு.. விறு விறு என்று வெளியேறினான்.
பெரியசாமிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன.
பண்ணையார் பெரியசாமி முன்னாடி நின்று பேசவே அந்த ஊரில் யாருக்கும் தைரியமில்லை...அவரை எதிர்த்தால் அவ்வளவுதான்.. பண்ணையாரிடம் நெருக்கமாக பழகுவது கணக்கு பிள்ளை மட்டும்தான்.. பண்ணையாரின் ரகசிய வேலைகளுக்கும் இதே கணக்கு பிள்ளைதான்.
" ஐயா.. சொன்னா கோவிச்சுக்க கூடாது... நம்ம சின்னம்மா... செந்திலுகிட்ட அடிக்கடி பேசறது சரியாப் படலை... பார்த்து சரி பண்ணுங்கய்யா..."
" யோவ் கணக்கு .. பெரியவ வள்ளி மாதிரி இல்ல தேனு... படிப்புல ரொம்ப பிரியம் அதான்     காலேசு வரை அனுப்பிட்டேன்.. நம்ம ஊர்லயே செந்திலு ஒருத்தந்தான் பெரிய படிப்பு படிக்கற பய.. ஏதோ பாடத்தில சந்தேகம் கேட்டுக்கறேன்னா.. அதான் வீட்டுக்கு வரசொல்றேன்... நீ உன் வேலையை பாரு...."
கோபத்தில் பொரிந்து தள்ளி விட்டாலும்.. ராத்திரி பண்ணையாருக்கு தூக்கம்
வரவில்லை.மூத்த மகள் வள்ளியும் இதே மாதிரி வெளியூர்க்காரன் சந்திரனின் காதலில்விழுந்தாள்.அவனுக்கே அவளை கல்யாணம் செய்துவைப்பதாக நாடகமாடி காதலனை எமலோகம் அனுப்பியதை நினைத்தார்.இப்போது அதே காதல் ரூட்டில் இளையவள்தேன்மொழியும் வந்து நிற்கிறாள்.மூத்தவள் வள்ளி இன்று அவர் பார்த்த மாப்பிள்ளையுடன் பக்கத்து கிராமத்தில் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்...." வள்ளி உன்னை விரும்பினவனுக்கே நிச்சயம் பண்சம்மதிச்சேன்ல.. அவனுக்கு உன்னோட வாழ குடுத்து வைக்கலை.. போய்ட்டான்...அதுக்காக காலம்பூரா நீ இப்படியே இருந்தா என் மனசு தாங்குமா...? கேவிக்கேவி அழுது..என்னமாய் நடித்து.. மகளை நம்ப வைத்தார்... அவளும் மனசை கல்லாக்கி கொண்டு அப்பாபார்த்த வரனுக்கு சம்மதித்தாள்.
தேன்மொழிக்கு தூக்கம் வரவில்லை.. கொஞ்ச நேரம் காற்றாட மாடியில் நடந்தால் தூக்கம்
கண்களை தழுவும் என எண்ணினாள். ரூம் லைட்டை ஆப் செய்து வெளியில் வந்துபால்கனியில் எட்டி பார்த்தாள்... மங்கிய வெளிச்சத்தில்..அப்பா கணக்கு பிள்ளையிடம் தனியாகபேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.. சத்தம் போடாமல் இறங்கி வந்து கவனித்தாள். "
யோவ் கணக்கு நீ சொன்னது சரியா போச்சு... அந்த செந்திலு உண்ட வீட்டுக்கே துரோகம் பண்றான்.. நாளைக்கு அவனெல்லாம் உத்தியோகம் போய்ட்டா...அவன் அப்பன் இடுப்பில் இருக்கிற துண்டை தோள்ல போட்டுகிட்டு பொண்ணு கேட்க வந்துடுவான்.வள்ளியை விரும்பின அந்த பயலை முடிச்ச மாதிரி இவனையும் எதாவது பண்ணி தொலை..."
" ஐயா.. அவனை ஆக்சிடெண்ட் மாதிரி சந்தேகம் வராம லாரி ஏத்தி முடிச்சதே பெரிய பாடாயிடுச்சி... மறுபடியுமா..?"
"ஏய்.. அவன் அசலூர்காரண்டா... இவன் நம்மாளு.. நம்ம மேல சந்தேகம் வராது. ரெண்டு நாள்ல தீபாவளி ... ராவோடு.. ராவா. அவனுங்க அசந்து தூங்கறப்ப அவன் வீட்டு குடிசை கதவை வெளிபக்கமா பூட்டி பத்த வைச்சிடு... பட்டாசு விபத்துன்னு ஊர்க்காரன்ங்க நம்பிடுவானுங்க... "
செந்தில் குடிசை பற்றியது... விடிந்ததும் தகவல் பரவியது.
" ஐயா... ஐயா.. என பதறிய படி ஓடிவந்த சுப்பையாவும்... பார்த்து பண்ணையார் அதிர்ந்து  விட்டார். '
" என்னாச்சு... உங்களுக்கு ஒண்ணும் ஆகலே இல்ல...?
" எவனோ குடிசை பக்கத்திலே பட்டாசு கொளுத்தி போட்டிருக்கான்யா.. நல்ல
வேளை உங்களால தப்பிச்சோம்.. நேத்து தேன்மோழியம்மா வந்து தோப்பு வீட்டு காவக்காரன் லீவு.. அதனால உங்க மூணுபேரையும் ஐயா அங்க இன்னிக்கு ஒரு நாள்போகச்சொன்னாருன்னு சாவி குடுத்திட்டு போனாங்க ஐயா...."சுப்பையா சொல்லி கொண்டிருந்தபோதே கோபத்தை மறைத்தபடி பெரியசாமி நேரே
தேன்மொழியின் அறைக்கு போனார். ரூமில் ஆளில்லாமல் டேபிளில் இருந்த அந்த காகிதம் மட்டும் படபடத்தது..
" பெத்த பொண்ணுகிட்டயே நாடகமாடி சந்திரன் மாதிரி நல்லவரை
கொன்னுட்டிங்களேப்பா.. நீங்க கணக்கு பிள்ளை கிட்ட பேசிகிட்டு இருந்ததை
கேட்டுட்டேன்... செந்தில் ஒரு அப்பாவி.. அவனை நானாத்தான் விரும்பினேன்.. அவன் பலியாக கூடாது.. நீங்க பண்ண தப்புக்கு காலம்பூரா வருந்தனும்..எரிஞ்சு போன செந்திலு வீட்டில நீங்க பார்க்க போறது கரிக்கட்டையாயிட்ட என்னைதான்....மேற்கொண்டு படிக்க முடியாமல் நடுங்கிய பெரியசாமி .. குடிசையை நோக்கிஅலறியடித்து ஓடிய போது.. செந்திலும், சுப்பையாவும் காரணம் தெரியாமல் பின்தொடந்தனர்.
( இச் சிறுகதை 23-10-2011 தினத்தந்தி - குடும்ப மலரில் வெளியானது.)

Wednesday 25 April 2012

கவிதை
உழைப்பு ...!
கோடையும்
குளிந்தது..
பானை மோரை
விற்று தீர்த்த
கிழவியின் நெஞ்சம்.. !

Tuesday 24 April 2012

                                                             

                                                                               நிம்மதி

சுருதியை கைபிடித்து இறக்கியவள், ராஜுவை தோளில் சாய்த்து
பையுடன் பேருந்திலிருந்து , அப்பா வந்திருக்கிறாரா என்று சுற்றும்
முற்றும் பார்த்தாள் சுகந்தி.

அப்பா கணேசன் ஓடி வந்தார். " வாம்மா... ஒரு மணி நேரம் முன்னாடி
வந்து காத்துக்கிட்டிருந்தேன்....மாப்பிள்ளை வரலையா..?
கேட்டுக்கொண்டே பேரனையும், பேத்தியையும் தூக்கி கொஞ்சினார்.

" அப்பா .. அவருக்கு திடீர்னு சேலத்துக்கு போகவேண்டியதாயிட்டு..
திருப்பி அழைச்சிட்டு போக வர்றேன்னிருக்கார்.அப்புறம்
வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க..? "
" எல்லாரும் சௌக்கியம்தான்... நீ வர்ற செய்தி கேட்டதிலிருந்து பம்பரமா
மாறிட்டாங்க உங்கம்மாவும், உங்க அண்ணி நந்தினியும்."

" ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா.."
"
 சரி..வா ஆட்டோ வருது.. என்றவர், ஆட்டோவை நிறுத்தி ஏறினார்.
சுகந்தியும் , குழந்தைகளும் உற்சாகமாக ஏறினார்கள்.
" தணிகாசலம் தெருவுக்கு போப்பா..." என்றார்.ஆட்டோ வேகம் எடுத்தது.
பிறந்து வளர்ந்த மண்ணை மீண்டும் மிதிக்க போகிறோம் என்ற
பூரிப்பில் ஆனந்த கூவலில் சுகந்திக்கு மனம் துள்ளியது.நிமிடங்கள்
நகர்ந்து .. கரைந்தது கூட தெரியவில்லை.
தெரு முனையில் இறங்கினார்கள்." அம்மா நான்தான் முதல்ல.. " என்று
ஆர்வமாய் ஓடிய சுருதி, எதையோ பார்த்து பயந்தபடி பின்வாங்கினாள்.

" அம்மா அங்கே பாரேன்...பேய்...."
சுருதி சொன்ன இடத்தை நெருங்கிய சுகந்தி திடுக்கிட்டாள்.
தலைவிரி கோலம். கந்தை துணிகளோடு வெயிலில் சுருண்டு
கொண்டிருந்த அந்த உருவத்தை எங்கோ பார்த்த மாதிரி
இருந்தது...யோசித்தாள்." அப்பா அது மனோகரி பாட்டிதானே.. ?"

" ஆமாம்மா..."

"ஏன் இப்படி..? சேகர் மாமா வீட்டில்தானே இருந்தாங்க...?"

"அதை ஏன் கேட்கிற.. தெம்பு இருக்கறவரை சொந்தக்காரங்களுக்கு
மனோகரி பாட்டி மாடாட்டம் உழைச்சா.. இப்ப அவ கீழ விழுந்ததும்
கவனிக்க யாருமில்லை. ... பெத்தவங்களை பார்த்துக்கறதே கஷ்டம்னு
நினைக்கிற இந்த காலத்துல... சேகர் யாரு..? மனோகரிக்கு ஒன்று
விட்ட அக்கா புள்ள.. அவன் இரக்கப்பட்டாலும் அவன் பொண்டாட்டி
இவளை சேர்த்துக்கலை தெருவில் யாராவது சாப்பாடு போட்டால்
சாப்பிட்டுட்டு அந்த திண்ணயிலதான் முடங்கிக்கும். என்ன இருந்தாலும்
வயசான காலத்துல நம்மை கவனிக்கறதுக்கு சொந்தமா நல்ல
உறவுகள் இருக்கணும் சுகந்தி..." என்று பேசிக்கொண்டே வர, வீடு
வந்துவிட்டது.

" சுக்ந்தி எப்படி இருக்கே...? சுருதி குட்டி... வாடா... ராஜு... என்றவாறு
வரவேற்றனர் அம்மாவும்.. அண்ணியும்.

" நந்தினி ... நேரம் ஆயுடுச்சு 
ஆகுதும்மா...எல்லாருக்கும்
சாப்பாடு பண்ணிட்டியா..?"

தயாரா இருக்கு மாமா..

வாம்மா சுகந்தி .. குழந்தைகளை கூப்பிடு சாப்பிடலாம்..."
கல கலப்புடன் சாப்பாடு முடிந்தது.
சுருதி , தாய்மாமன் மகன் யுவனுடன் விளையாட போய்விட்டாள். ராஜு
தூங்கி விட்டான்.

சுகந்திக்கு அம்மா..அண்ணியுடன் அரட்டை கச்சேரி
தொடங்கியது.உறவினர்களை விசாரித்த சுகந்தி, " அம்மா மாலதி எப்படி
இருக்கா..? பிறந்த வீட்டுக்கு வந்து போறாளா...?"அவ வந்து ஆறு மாசமாயிடுச்சும்மா..."
"என்னது...?"
"
ஆமாம்மா... இப்ப அவ இங்கதான் இருக்கா..."
"
விசேஷமா என்ன..."
" ம்...விசேஷம்தான்... கல்யாணமான மறுமாசமே...கணவனின் ஒட்டும்
வேணாம்... உறவும் வேணாம்னு... இங்கே வந்துட்டா.. அவ அம்மா
நொந்து போயிருக்கா..."
சுகந்திசாது.. மாலதி துணிச்சலும்...தன்னம்பிக்கையும்
நிறைந்தவள்..நேர்மாறான குணங்கள் என்றாலும்.. சிறு வயதிலிருந்து
இருவரும் தோழிகள். பக்கத்து வீட்டுக்காரர்கள்.
' திருமணம் என்பது அடிமை பந்தம் " என்பாள் மாலதி. அவளுக்கு வயது
ஏற.. ஏற.. அவள் அம்மா புலம்பினாள்.

தீடீரென ஒரு நாள் மாலதி திருமண அழைப்பிதழுடன் வந்தாள்... சுகந்தி
ஆச்சரியத்துடன் .. ஆனந்த்தத்துடன் பார்த்தாள்..
வாழ்த்தினாள்.
சொன்னபடி திருமணத்திற்கு போனாள்.
"வாம்மா... சுகந்தி உன் தோழிக்கு நீயாவது புத்தி சொல்லேன்...என்று
அழைத்து சென்றாள் அவள் அம்மா.
திருமண மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய மாலதி கசங்கிய சேலையும்..
வாடிய ரோஜா சகிதமாய் உட்கார்ந்திருந்தாள். முகத்தில் துளியும்
மகிழ்ச்சி இல்லை.

" வந்தவுடனே பஞ்சாயத்து வச்சிட்டியா...?"
" பாரேன் சுகந்தி இந்த கல்யாண்த்திற்கு.. நான் சம்மதிச்சதே பெரிய
விஷயம்...இதுல கோணி மாதிரி கனமான பட்டுசேலையை
துணிக்கடை பொம்மை மாதிரி சுத்தி கட்டி அடிக்கிற மாதிரி.. நகை...
இப்படியெல்லாம்....."
" உஷ்... அவசரப்படாதே மாலதி... தினமுமா... இப்படி செய்ய
போறே...? இன்னிக்கு ஒரு நாள்தானே... நானே.. அழகா அலங்காரம்
செய்துவிடுகிறேன்... " கெஞ்சலாய் சொன்னாள்.
" இதுதான் கடைசி என் விருப்பத்திற்கு மாறா எது செய்தாலும்...
அவ்வளவுதான்..." - எச்சரித்தாள்.
" பார்த்தியா... சுகந்தி இந்த திமிர் பிடிச்சவளை எவன் கட்டிக்குவான்?
வெளியில கொடுத்தா சரிவராதுன்னு..எங்கண்ணன்தான் தன்
மகனுக்கே கட்டிக்கறதா சொன்னார்.மாப்பிள்ளை சாரதியும் நல்லவன்...
பொறுமைசாலி... இனி , இவ... அவனை என்ன பண்ண போறாளோ..?
தெரியலை.." பயம் கலந்த பதற்றத்துடன் புலம்பினாள்.
ஒரு வழியாக கல்யாணம் முடிந்தது. சுகந்தி விடைபெற்றாள்.
அதன் பிறகு இப்போதுதான் இங்கு வர முடிந்தது.
பழைய நினைவுகளில் மூழ்கியவளை.. ராஜுவின் அழுகை சத்தம்
கலைத்தது. குழந்தையை எடுத்தாள்.
" அம்மா நான் மாலதியை
பார்த்துட்டு வர்றேன்".. என்று பக்கத்து வீட்டிற்கு கிளம்பினாள்.
மகள் வாழாவெட்டியாய் வந்து விட்டதாலோ என்னவோ.. கண்களில்
கருவளையம் சூழ்ந்து உருமாறிப்போயிருந்தாள் பார்வதி.
கண்களை இடுக்கி " யாரு சுகந்தியா...? வாம்மா..என்றாள்.
பாசம் குறையாமல் நலம் விசாரித்தாள். சுகந்தி பிறந்த வீட்டையே
மறந்துட்டியா...?"
" என்ன மாமி பண்றது பக்கத்துலயா இருக்கு அடிக்கடி வந்து போக ..
அடிக்கடி வரமுடியலைன்னாலும்.. பாசம் குறைஞ்சிடும்மா என்ன..?
தினம் எல்லாரையும் நினைச்சிகிட்டேதானிருப்பேன்.... மாலதி எங்க
மாமி...?
"மாடியிலதான் இருக்கா..."
" அவ இன்னமும் அப்படியேதான் இருக்காளா...?"
" ஆமாம்மா... நாய் வாலை நிமிர்த்த முடியுமா..? இவ புத்தி
தெரிஞ்சிருந்தும் என் அண்ணன் மகன் வாழ்க்கையை கெடுத்துட்டேன் ச
...கண்களில் நீர் தளும்பியது.
"என்ன பிரச்சினை மாமி..?
"
இவளேதான் பிரச்சினை கட்டிபுருஷனுக்குதுணிதுவைக்கிறதிலிருந்து,
சமைச்சாலும் சாப்பாடு எடுத்து வைக்கிறதில்லே..அதெல்லாம் அடிமைத்தனம் என்கிறாள். அது கூட பரவாயில்லை.. அவனுக்கு
மனைவியாக    கூட நடந்துக்கலை..
கல்யாணமாகியும் பிரம்மச்சாரி போல இருந்திருக்கான். வெளியே
சொன்னா வெட்கக் கேடு சுகந்தி...."
இவளுக்குதான் வாழ குடுத்து வைக்கலை...என் சொந்த கால்ல
நிற்பேன்.. எதுக்கு தேவையில்லாம இந்த அடிமைத்தனம்னு வந்து
நிக்கிறா... புத்திமதி சொல்லி பார்த்தாச்சு... திட்டியும் பார்த்தேன்... இந்த
வீட்டில் எனக்கு உரிமை இருக்குன்னு சட்டம் பேசுறா..."
" என்ன மாமி பண்றது...?"
நாளைக்கு இவ தம்பிக்கு கல்யாணமாகி அவன் பொண்டாட்டி வந்தா,
இவளை மதிப்பாளா...? இவ கதி என்ன ஆகுமோன்னு நினைச்சு
நினைச்சு தளர்ந்து போறேன்மா..."
பெருகி நின்ற கண்ணீரை துடைத்தவள்.. " சரி அவளை போய் பாரு...
நீயாவது பேசிப்பார்... நான் காபி கொண்டு வர்றேன்..."
பார்வதி சொன்னதும் ,

சுகந்தி மாடி படியேறினாள்.மாலதியை பார்த்ததும்
பரவசப்பட்டாள்.அவள் ஆங்கில நாவலில்
மூழ்கியிருந்தாள்.அதே இளமை மிடுக்கு... முகத்தில் குறும்பு.
சுகந்தியின் கொலுசு சத்தம் அவளின் பார்வையை திருப்பியது.
"வாவ்... சுகந்தியா... வா...வா.. என்னடி ரெண்டு பெத்ததும் பாட்டி மாதிரி
ஆயிட்டே...? இடுப்பில் இருந்த ராஜுவை அன்பாய் கிள்ளினாள்.
முதலிலேயே எப்படி கேட்பது என்று வேறு விஷயங்களை பேசிவிட்டு. ..
" மாலதி நீ பண்ணது சரியில்ல.. சாரதி எவ்வளவு நல்லவர்.. உன்
வாழ்க்கையும் கெடுத்துகிட்டு... அவர் வாழ்க்கையும் கெடுத்துகிட்டு..
நீ கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்..."
" நானா கேட்டேன்...? அம்மாதான் கிணத்தில விழுந்திடுவேன்னு...
அது ...இதுன்னு சொல்லி.. பயமுறுத்தி.. கல்யாணம் பண்ணி வச்சாங்க..
சாரதி நல்லவர்தான்... இல்லேன்னு சொல்லலை... அதுக்காக பின் தூங்கி
முன் எழுந்து, துடைப்ப கட்டை.. அடுப்புன்னு என்னால இருக்க
முடியாது...."
" அப்ப உன் வாழ்க்கை...?
" பிக்கல்... பிடுங்கல்... இல்லாத நிம்மதியான ... சுதந்திரமான வாழ்க்கை,
கை நிறைய சம்பாதிக்க்றேன்... பிறகு என்ன கவலை?..
" இதெல்லாம் குடும்பத்திலிருந்தா கிடைக்காதா...?"
" ஆமா.. புருஷன்.. மாமனார்... மாமியாருக்கு வேலை செய்யவே நேரம்
சரியா இருக்கும். அதெல்லாம் என்னால் முடியாது.
அவள் பேச்சு குழந்தைக்கே பிடிக்கவில்லையோ என்னவோ.. அழ
ஆரம்பித்தான்.
"பார்த்தியா... பத்து நிமிஷம் உன்னால மனம் விட்டு பேசமுடியலை..
அதற்குள் குழந்தை அழுவுது..."
"குடும்பம்னா இதெல்லாம் சகஜம்..."என்று
அவள் சொல்லி கொண்டிருக்கும்போது தெருவில் கூட்டம் கூடி ஏதோ வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. இருவரும் விசாரித்தனர்.
மனோகரி பாட்டி போய்விட்டாள்.அழக்கூட ஆளில்லை.
அவன் உடல் கேட்பார்ற்று கிடந்தது.
" பார்த்தியா மாலதி ...இதுவே புருஷன், பிள்ளைகள் என்று பாட்டிக்கு
குடும்பம் இருந்திருந்தால் இப்படி ஆனாதையாக கிடப்பாங்களா?
யோசிச்சி பாரு நாளைக்கு உனக்கும் இதே கதி வராதுன்னு என்ன
நிச்சயம்...? இப்ப இளமை முறுக்கு பரவாயில்லை.. வயசானா
அரவணைக்க சொந்தம் வேணும்.
" போடி பைத்தியக்காரி .. இந்த உலகத்தில பணமிருந்தா போதும்
எதையும் சாதிக்கலாம். எந்த கவலையும் வேணாம்.."

' இவளை திருத்தவே முடியாது... என்ற முடிவுடன் கிளம்பினாள்.
அண்ணியுடன் தாய விளையாட்டு.. அண்ணனுடன் கேரம் ...
பிள்ளைகளோடு
கண்ணா
மூச்சி...
அம்மாவுடன்
கோவில்...
அப்பாவுடன் தோட்டம்... வயல்வெளி... என்று நாட்கள் போனதே
தெரியவில்லை.
இதோ கோவைக்கு அழைத்து செல்ல கணவர் வந்துவிட்டார்.
புறப்படும் முன் மாலதிக்கு சொல்லி விட்டு போக வந்தாள்.

" உம்.. ஜெயிலுக்கு கிளம்பிட்டியா..?
வாழ்த்துக்கள்..." கிண்டல்அடித்தாள்.
சுகந்தி புறப்பட, அம்மா கண் கலங்கினாள். அண்ணன்... அண்ணி
பாசத்துடன் கையசைத்தனர். உறவுகள் தந்த மகிழ்ச்சி மனமெங்கும்
நிறைந்து இருந்தது. தாய் வீடு சென்றால் பெண்களுக்கு தனி
உற்சாகம் பிறக்கிறதே...! இந்த உற்சாகம் ... மகிழ்ச்சி .. பூரிப்பு..
எத்தனை அற்புதமானது... இந்த பிரிவு கூட ஒரு வகையில் சுகமான
சுமைதானே.. பெருமிதத்துடன் நினைத்து மகிழ்ந்தவள் தாய் வீட்டின்
நினைவுகளை அசை போட்டபடி அடுத்த மகிழ்ச்சியான நிமிடங்களை
தேடி கணவன் வீட்டுக்கு பயணப்பட்டாள். இதையெல்லாம் மாலதி
உணர்வாளா...? மனம் மாறி கணவன் வீட்டுக்கு செல்வாளா..?
நினைத்தவாறு சென்றாள்.

அவள் மறு முறை வந்த போது.. மாலதி.... . தாய் வீட்டில் இல்லை...
கணவன் வீட்டிற்கு சென்றுவிட்டாள் என்று செய்தி கிடைத்தது. அதன்
பிறகுதான் சுகந்திக்குள் நிறைந்தது நிம்மதி ...!
( இச் சிறுகதை 26-01-2003 ராணி வார இதழில் வெளிவந்தது)

Monday 23 April 2012

வீடு

                                   


"சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம
இருந்தா எப்படி...?" - கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார்.
இருவரும் ஒன்றாகவே பணி புரிந்தவர்கள்.ஓய்வு பெற்ற பிறகும் நல்ல
நண்பர்களாக இருப்பவர்கள்.ஒருவர்க்கு தெரியாமல் இன்னொருவர்
குடும்பத்தில் எதுவும் நடந்ததில்லை.தினமும் யாராவது ஒருவர்
வீட்டில் சந்திப்பு இருக்கும்.சில சமயம் இப்படி காந்தி பூங்காவிற்கும்
வருவதுண்டு.
பூங்காவில் செடிகளை கத்தரித்து கொண்டிருந்த முனிசாமி " வணக்கம் சாமி" என்றார் கேசவனை பார்த்து.பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார். கும்பிடு போட்டுவிட்டு அவர் நகர்ந்தார்.
"பார்த்தியாப்பா....முனிசாமிக்கு  படிப்புமில்லை..ஆசையுமில்லை..போர்த்திக்க ஏதோ ஒரு துணி... கிடைச்சா சாப்பாடு...அதோடு சரி... நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் தான்..கவலை..சந்தோஷம்னு மாறி .. மாறி அலைக்கழிஞ்சிட்டுருக்கோம்..கேசவா..."  -சண்முகத்தின் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது
.........வீட்டை வாங்கினவ வர்ற வெள்ளிக்கிழமை  ரெஜிஸிட்ரேஷன் பண்ணிக்கறாங்களாம்...காலிபண்ண அஞ்சு மாசம் டைம் தந்திருக்காங்க..சாரதா முகத்தை என்னால் பார்க்கவமுடியலைப்பா...பிள்ளைங்க....பிள்ளைங்க....அவளுக்கு ஒண்ணுமே  செய்யலே......"- சொல்லும் போதே அழுதுவிட்டார்.

"என்னப்பா இது..சின்ன குழந்தையாட்டம்...ப்ச்...அழாதேப்பா...என்னத்தை
சொல்ல...பெத்தகடன்...ம்..விட்டு தள்ளு..தைரியமாஇருக்கணும்பா...கடனெல்லாம்
அடைச்சுட்டு நிம்மதியா இரு..நாந்தான் என் வீட்டுமாடி போர்ஷனில்
இருந்துக்கலாம்னு சொல்றேன்ல...."

" இப்படி ஆறுதலா பேச..உதவ நீ இருக்கிறது சந்தோஷம்தாம்பா...
ஆனாலும்........

"என்ன ஆனா... ஓனான்னுட்டு...போனது போகட்டும் விடுப்பா..."

" அது இல்லப்பா ...எம் புள்ள மாதிரி இல்லாம உன் பையன் நல்ல
பாசமானவன்..பையன், மருமக.. பேரக்குழந்தைகள்னு சந்தோஷமா
ஒண்ணா இருந்த்துகிட்டிருக்கிற உங்க குடும்பத்திலே எங்களாலே எந்த பிரச்சினை வந்துடக்கூடாதேன்னுதான் என் கவலை...அதான்... உன் வீட்டு பக்கமா குறைஞ்ச வாடகைக்கு சின்னதா ஒரு வீட்டை பார்த்து வைப்பான்னு சொல்றேன்..."

" ரேவதிக்கு சொல்லிட்டியா...?"

" ம்... பொண்ணு இல்லையா , நான் சொன்னதுமே 'ஓ'.. ன்ணு
அழுவுது..." அப்பா எங்க வீட்டுக்கு வந்திடுங்கப்பா ன்னு
கெஞ்சுறா...அவ நல்லா பார்த்துப்பா ... ஆனா அவ சூழ்நிலை
நமக்கு தெரியுமில்லையா...? படிப்பு ஏறாததாலே அவளாலே
வேலைக்கும் போக முடியலே...இதை குத்தி காட்டியே அவ
மாமியார் பாடாத பாடு படுத்திட்டிருக்கா...சண்டை போட்டு வந்தா
எங்களுக்கு பாரமாயிடுமேன்னுதான் சகிச்சிகிட்டு அவ அங்கேயே
இருந்துகிட்டிருக்கா......ம்...நான் இந்த வீட்டைக் கட்ட எவ்வளவு
சிரமப்பட்டிருப்பேன்...? அதைல்லாம் எம் பையன் ரமேஷால

எப்படிப்பா
மறக்க முடிஞ்சது...? என்னோட சம்பாத்தியம் மட்டுமா..சாரதாவோட
கஷ்டமும் சேர்ந்து தானே இந்த வீடா மாறிச்சு...? அவ எப்படில்லாம்
கஷ்டப்பட்டா..? ஊறுகா..அப்பளம் போடறது, துணி தைக்கிறதுன்னு
கை வலிக்க உடம்பு நோக வேலை செஞ்சு அவளும் உழைச்சி,
வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சேர்த்த பணத்தில்தானே ...இந்த வீடு
வந்துச்சு..ம்...?
" சண்முகம் போனது பத்தியே சும்மா பேசிட்டிருக்காதே... வீடு
போனா என்ன வாழவே முடியாதா என்ன..? உனக்கு வற்ற பென்ஷனை
வச்சி காலத்தை தள்ளிடலாமே..? ம்.. வீட்டுல தங்கச்சி தனியா இருந்து
நொந்துகிட்டிருக்கும்...நேரத்தோடு வீட்டுக்கு போ...நீயும் புலம்பி
அவ மனசை நோகடிக்காதே...சமாளிச்சுக்கலாம்னு நீதான்..அவளுக்கு
தைரியம் சொல்லனும்...பார்த்துக்க..."

வழக்கமாக ஒரு டி.வி நிகழ்ச்சி பார்த்து கொண்டிருக்கும் சாரதா..லேசான
விளக்கொளியில்.. சோர்ந்து போய் படுத்திருந்தாள்.

கண்ணீர் முட்டியது சண்முகத்திற்கு. கேசவன் சொன்னது
ஞாபகத்திற்கு வர..சட்டென.. தன்னை அடக்கி கொண்டார்." சாரதா..ஏன்
படுத்திருக்கே..? எழுந்திரும்மா..கவலைப் பட்டு என்ன ஆக
போகுது...? நேரமாச்சுல்லே... சாப்பிடலாமா...?" ஆறுதலாக கேட்டார்.

எழுந்த சாரதா , கிச்சனுக்கு போய் தட்டில் இட்டிலிகளுடன்
வந்தாள்.அவர் முன் வைத்தவள் அமைதியாய் அமர்ந்தாள்.

" நீயும் சாப்பிடும்மா..."

வேண்டாம் என்பது போல அவள்  தலை அசைக்க, "சாப்பிடாம
இருந்து உடம்பை கெடுத்துக்காதே..உனக்குன்னு நான் எதுவும்
செய்யலைதான்...உனக்கு தர்றதுக்கு உயிரை தவிர எதுவும்
இல்லேம்மா..." என்று தழு தழுத்தார் சண்முகம்.

சட்டென அவர் வாயை மூடியவள்..., " எனக்கு உங்களைவிட பெரிய
சொத்து எதுவும் இல்லீங்க..." கண்ணீர் விட்டாள்.
நமது கஷ்டம் பிள்ளைங்களுக்கு தொடர்ந்து விடகூடாது என்றுதான்
சாரதா நினைத்தாள்.
வீட்டு லோன் அடைந்து வந்த வேளையில்.. ரமேஷின் படிப்பு செலவு
கண்ணை கட்டியது. " கடன் வாங்கியாவது நல்லா படிக்க வைச்சி
நல்ல வேலையில ஏற்றிவிட்டுடணும்ங்க...." என்று சண்முகத்திடம்
சொன்னாள். அவனும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தான்.தங்கை
ரேவதியின் திருமணத்திற்கு ஆபிசில் லோன் போட்டு உதவுவான்
என்று அவர்கள் எதிர்பார்த்த போது ,'லோன்லாம் கிடைக்காது.."
என்று கையை விரித்து ஒதுங்கி விட்டான். ஆற்றமை நெஞ்சை
அடைத்தாலும்..எப்படியோ திருமண செலவை சமாளித்தனர்.
அடுத்த ஆண்டிலேயே ரமேஷுக்கு திருமணம் செய்து
வைத்தனர்.மருமகள் மது படித்தவள்.. வேலைக்கு செல்பவள்.தனி
குடித்தனம் சென்ற ரமேஷிடமிருந்து நாளடைவில் போன் பேச்சுக் கூட
குறைந்து விட்டது.எப்போதாவது பேசுபவன் , ஒரிரு வார்த்தைகளிலே
பேச்சை முடித்து விடுவான். அப்போது கூட , " வாங்களேன்
வீட்டுக்கு ..." என்று ஒப்புக்கு கூட ஒரு வார்த்தை வராது. சண்முகம்
ஓய்வு பெற்ற பின் அவனுடன் சேர்ந்து வசிக்கலாம் என்ற ஆசையை
மனதுக்குள்ளேயே புதைத்தாள்.

ரமேஷிற்கு சொந்த வீடு வாங்கும் ஆசை வர, வீடு தேடி வந்து
சாரதாவிடம் குழைந்தான்." அம்மா நல்ல இடத்திலே சூப்பரான வீடு
ஒண்ணு விலைக்கு வருது. நானும் மதுவும் லோன்
போட்டிருக்கோம். அது பத்தாது...மீதி பணத்துக்கு என்ன
பண்றதுன்னே புரியலை... அப்பா கிட்ட சொல்லி இந்த வீட்டு
பத்திரத்தை அடமானம் வச்சி பணத்தை புரட்டி தந்திங்கன்னா..அந்த

வீட்டை வாங்கிடுவேன்மா..."
நெகிழ்ந்த சாரதா , சண்முகத்திடம் சொல்லி வீட்டு பத்திரத்தை
அடமானம் வைத்து பணம் வாங்கி கொடுத்தாள்.சந்தோஷமாக வாங்கி
சென்றவன்...சென்னையில் வீடு வாங்கி செட்டிலானான்.பிறகு கண்டு
கொள்ளவேயில்லை...வீட்டு அடமானத்தை அப்பாவின் சொற்ப
பென்ஷனில் எப்படி திருப்புவார் என்ற எண்ணமே இல்லாத கல்
நெஞ்சக்காரனாகிவிட்டான்.

லோன் அடைக்க சிரமப்பட்ட சண்முகம் போன் போட்டு அவனிடம்
கேட்ட போது குண்டை தூக்கி போட்டான்..." அப்பா நாங்க நம்ம
ஊருக்கு வரப்போறதில்லே..எதுக்கு அந்த வீடு லோனுக்கு
வட்டி கட்டி திருப்பறதெல்லான் வேஸ்ட்...வீட்டை வித்து கடனை
அடைச்சுடுங்க...." என்றான் சர்வ சாதரணமாக.
இதை சண்முகமும் சாரதாவும் எதிர்பார்க்கவேயில்லை.ரமேஷை நம்பி
பிரயோஜனமில்லை..என்று தீர்மானித்தவர்கள்..வீட்டை விற்கும்
முடிவுக்கு வந்தனர்.

பலத்த இடியுடன் மழை தொடங்கியது.
" ஏங்க ... ஞாபகமிருக்கா உங்களுக்கு...நம்ம வீட்டுக்கு அஸ்திவாரம்
போடறப்ப..இதை போல பயங்கர இடியோட மழை கொட்டோ
கொட்டுனு கொட்டிச்சே...?அஸ்திவாரத்திலே தேங்கின தண்ணியை
நீங்களும் .. நானும்.. மாங்குமாங்குன்னு..மொண்டு மொண்டு
வெளியே கொட்டினோமே...? அப்ப நம்ம ரமேஷிற்கு ... ஆறு
வயசு.." அப்பா கட்டற வீடு மழையில் கரைஞ்சுடக்கூடாது
சாமின்னு ...பிள்ளையார்கிட்ட அழுதானே...மனசுக்குள்ள கஷ்டம்
நிறைஞ்சிருந்தாலும், அவனோட குழந்தைதனத்தை பார்த்து நாம
சிரிச்சோமே... ?? ம் ... எப்படி எல்லாம் கஷ்டபட்டோம் இந்த வீட்டை
கட்ட...ப்ச்...- பழைய நினைவுகளை கொட்டினாள் சாரதா.
" பழசையே பேசிட்டுருக்காதே...வீட்டை பற்றியே
பேசிட்டிருந்தா...கவலைதான் ஜாஸ்தியாகும்..அதான் முடிஞ்சி
போச்சே..விட்டு தள்ளும்மா... நடக்கிறதுதான் நடக்கும்...படுத்து
தூங்குமா..."- சாரதாவிடம் இப்படி சொல்லிவிட்டாரே தவிர,
சண்முகத்திற்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை.
ஈஸிசேரை வராண்டாவில் போட்டு சாய்ந்த சண்முகம், வீட்டின் முன்

நிழல் பரப்பி கொண்டு காற்றை தந்து கொண்டிருந்த வேப்ப மரத்தை
பார்த்தார்....வேப்பம்பூ சீசனில் பூவை எடுத்து குழம்பு வைப்பாள்
சாரதா... சாப்பிட்ட கை மணக்கும்.
வீட்டை வாங்கிய பாட்டியின் மகன், " ஏம்மா இந்த மரம் வீட்டை
மறைச்சிகிட்டு வீட்டோட அழகையே கெடுக்குதப்பா...முதல்ல
இதை வெட்டி சாய்ச்சிடணும்..." என்றான். ... சண்முகத்திற்கு மார்பில்
சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.' அவங்க வீடு அவங்க
வாங்கியாச்சு....அவங்க இஷ்டம்....மரமானாலும்...மனுசன் ஆனாலும்
ஒரு கட்டத்திலே சாய்ஞ்சிடவேண்டியதுதானே..."
என்று தன்னை தேற்றிக்கொண்டார்.
வீட்டு ரெஜிஸ்ட்டிரேஷன் முடிந்தது.கிடைத்த பணத்தில் கடன் களை
அடைத்தது போக கையில் ஒரு லட்சத்து சொச்சம் இருந்தது.
கேசவமூர்த்தி நல்ல வசதியுடன் குறைந்த வாடகையில் வீடு பார்த்து
வைத்திருந்தார்.

ஒவ்வொன்றாக வீட்டில் உள்ள பொருட்களை மூட்டை
கட்டினார்கள்.காலி செய்வதற்கான நாள் நாளைதான்.." இதுதான் இந்த்
வீட்டில் கடைசி தூக்கம்.. நாளை முதல் இது வேறு வீடு.. என்ற எண்ணம்
மனதை பிசைந்தது.கனத்த மனதுடன் படுத்தனர். தூக்கம் வரவில்லை.
காலை பூஜை அறைக்கு சென்றாள் சாரதா..சாமி வைக்கும்
அலமாரியில்
மணி வைத்த கதவுகள்.. அவள் ஆசையாய் சொல்லி டிசைன்
செய்தது.அதை மெல்ல வருடினாள்.பிள்ளையாரை தொட்டு கண்
கலங்கினாள்.
பித்து பிடித்தவள் போல ஏதோ அரற்றியபடி , சிறு வயதில் ரமேஷ்
அமர்ந்து படிக்கும் அறைக்கு நுழைந்தாள்.கதவின் பின் பக்கம் அவன்
ஒட்டி வைத்திருந்த மிக்கி மவுஸ் ஸ்டிக்கர்கள் அவளை பார்த்து
சிரிக்க..கண்களில் நீர் முட்டியது.முந்தானையால் துடைத்தவள்
ஒவ்வொரு அறையாக சுற்றி வந்தாள்.
' இருபது வருடங்களாக வாழ்ந்த இந்த சந்தோஷக்கூடு இனி நமக்கு
இல்லை..- மனதுக்குள் உரத்த குரல். அவளுக்கு தலையை சுற்றுவது
போல் இருந்தது. தரையில் சாய்ந்து படுத்தாள்...
குளியல் முடித்து வந்த சண்முகம் " சாரதா எங்கேம்மா இருக்க...?"
கேட்டபடியே வந்தார்.
" வெறும் தரையில் ஏன்மா படுத்திருக்க...?' அவள் தோள் தொட்டு
எழுப்ப...அவளிடம் அசைவு இல்லை.. சரிந்தது உடல்..
" சாரதா...ஆ..." சண்முகத்தின் அலறலில் வேப்ப மரத்து பட்சிகள்
பறந்தன..காற்று சீறியது...வேப்ப மர கிளை ஒன்று பொத்தென்று
ஒடிந்து விழுந்தது.

( இச் சிறுகதை தினமலர் டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டியில்
ஆறுதல் பரிசு பெற்று அக்டோபர் 31, 2010 இல் வெளிவந்தது.)
என்னோடு...

கோபத்தில்..
உன் உதடுகள்
மூடிக்கொண்டாலும்..
கண்கள் என்னவோ..
சமாதானம் பேசிவிட்டுதான்
போகிறது...!
(விஷுவல் கவிதை)
பனித்துளியாய்
அவள் பாதம்
பட்டதில்..
சிலிர்த்தெழுந்த
புற்களும்..
சித்திரம் வரைந்ததோ...?
(இக் கவிதை தேவதை இதழில் வெளியானது)




(விஷுவல் கவிதை)

சோம்பல் முறித்த
சூரியன்..
ஒற்றை கண் மட்டும் திறக்க..
பாதி உலகம் இருளில்..
மீதி உலகம் ஒளியில்...!
இக் கவிதை தேவதை இதழில் வெளியானது)

*****

சொந்தம்...!

கவிதை:
சொந்தம்...!
அண்ணன் தம்பி ..ரெண்டு
அக்கா தங்கை... ஒன்று..
பார்பி பொம்மைகளை..
சொந்தம் கொண்டாடியது..
குடும்ப கட்டுபாட்டில்
ஒத்தையான குழந்தை.....!


உழைப்பு.!
கோடையும்
குளிர்ந்தது...
பானை மோரை
உழைப்பு.!
கோடையும்
குளிர்ந்தது...
பானை மோரை
விற்று தீர்த்த
கிழவியின்..நெஞ்சம்..!
விற்று தீர்த்த
கிழவியின்..நெஞ்சம்..!

**********


Saturday 21 April 2012


கவிதை
நானும் ... நீயும் ...!
வா.. வா.. மெல்லடா செல்லம் ..
கால் முளைத்த உனக்கு
கை பிடித்து .. நடை பழக்கினேன் ..
சளைக்காமல்..!
காலங்கள் ஓடியதில் ..
கால் தடுமாறும் எனக்கு
உன் தோள் தர அவகாசமில்லை ..
மூன்றாவது காலாய் .. கைத்தடியை
தந்துவிட்டு
பார்த்து போய் தொலை ..
வயசானா.. ஒரு எடமா ..
முடங்க கிடக்கனும் - நீ
சலித்து கொண்டதில் தடியும் கூட தடுக்குது ..! 
மொழி பேசாத -
உன் ஒற்றை வார்த்தைக்காக
காது கொடுத்து
நாளெல்லாம் பேசி பார்த்தேன்..
இந்த கிழத்தோடு கத்த முடியலை ..
செவிட்டு காதும் கூட
உன் நொடிப்பில் வலித்தது..
இது நிலா..அது நட்சத்ரம் ..
திரும்ப திரும்ப சொல்லி தந்தேன் ..
உனக்கு -
இதெல்லாம் தெரியாது
ஆவலோடு எட்டி பார்த்ததும்
அவசரமாய் லேப்- டாப்பை
மூடி கொண்ட பரிகாசத்தில்
முட்டாளாய் தவிக்கிறேன்..!
என் தேவை எதுவுமில்லை
எல்லாமாய்
உனக்கு இருந்தேன்..
உனக்கு
தேவையில்லா மொத்தத்திற்கும்
நானாய் இருக்கிறேன்.. !
 
*********

Thursday 19 April 2012

சிறகடிக்கும் சிட்டுகள்
சில்லறை சிதறடிக்கும் .. சிரிப்புகளாய
சின்ன சிட்டுகளின்
கும்மாளத்தை கண்டு -
பழைய நினைவு பந்தலடியில்
என் மழலை நாட்களை
பாய் விரிப்பேனா ..?
இல்லை ...
புதிதாய் பூத்து குலுங்கும்
தோட்டத்தின் ரசிகையாய் மாறி
கவிதை வடிப்பேனா ..?
இல்லாத அடுப்பை ஏற்றி
சமைத்ததாய் சொல்லி ..
சொப்புகளை சுற்றி..
அவர்கள் பொய்யாய் உண்ணும்
கூட்டாஞ்சோறு
என் கண்களுக்கு மெய்யான விருந்து ..!
பாயை சுருட்டி..
மூலையில் ஒளிந்து ..
கண்ணாமூச்சி ஆட்டமாம்..!
மேகத்தில் ஒளியும் நட்சத்திரங்களா..?
பூச்சி
சொல்லி தலையை நீட்டும் போது..
அழகு நிலா ..!
ரைட்டா .. தப்பா...
பாண்டி ஆட்டத்தில்
வந்தா சின்ன சண்டைக்கு
நான்..
மனுநீதி சோழனாய் மாறி
தீர்ப்பு   சொல்லணுமாம் ..!
கையை பிடித்திழுக்கும்
கன்றுகளுக்கு...
என்ன சட்டத்தை
சொல்ல  ..?
சமர்த்தாய் ஆட சொல்லி
காற்றுக்கு வேலி போடாமல் ..
கட்டியணைத்து மகிழ்கிறேன் ..
மழலையோடு மழலையாய் ..!
( குழந்தைகள் விளையாட்டு பற்றி 25 -12 -10 தின மலர் பெண்கள் மலரில் எழுதியது )
நீதி

ஜாதி பார்த்து
மணம் வீசுவதில்லை
பிறகேன் ..
பேர் வைத்து
முழம் போடுகிறாய்..?
கூச்சலிட்டது -
கூடையில் இருந்த
ஜாதி மல்லி ...!
(2 -8 -9 தினத்தந்தி இணைப்பு குடும்ப மலரில் பிரசுரமானது )

Tuesday 17 April 2012

வலி ..!


கவலை படும் போதெல்லாம் ..
தன் தோளில்
சாய்ந்து கொள்ள
சொன்னவள் ..
மாலையிட மட்டும்
யாருக்கோ கழுத்தை
நீட்டி விட்டாள்..!
வலிக்கிறது..
 என்னை விட்டு
அவள் போனதால் அல்ல ..
என் மனதில் -
இருந்து கொண்டிருப்பதால் ...!
( இக் கவிதை 3 -10 -10 தின தந்தி இணைப்பு குடும்ப மலரில் வெளிவந்தது )

சொல்லாம போச்சு


ஒளித்து  வைத்திருக்கும்
பழைய டைரி
யாருக்கும் தெரியாமல்
கைகளில் படபடக்கும்
அந்த முதல் காதலை வாசித்து.. !
பேருந்து இருக்கை ஓரம்
விழிகளை விரித்து
என்னுடனான உன் கனவையும்
போர்வை விலக்கி
பட்டு கன்னத்தில் முத்தமிட்ட
உன்னுடனான என் கனவையும்
பக்கங்களாய் நிரம்பி..!
காதலில் தானே கற்றுகொண்டோம்
கண்கள் பேசும் வித்தையை...!
பார்வை பரிமாற்றங்களில்
தொண்டையிலிருந்து
விழும்-மௌன பாஷைகளுக்கு
உனக்கும் எனக்கும் மட்டுமே
தனி அகராதி!
கற்பனைகளில் பயணித்து
கவிதையாய் வாழ்ந்து பார்த்த
நம் காதலுக்கு
ஏதோ ஓர் நாளில் முற்று புள்ளி ..!
சூழ்நிலை கைதிகளாய்
சுய விலங்கிட்டு , விசாரிக்கபடாமலே ..
விதித்தோம் மரண தண்டனை ..!
ஆனாலும்..
எங்கோ ஓர் மூலையில்
என் போல் நீயும் ..
மறக்க நினைத்து தோற்று போயிருப்பாய் ..
கனத்த மனது.. கண்ணீராகி
சொல்லாமல் சொல்லும்
காதல் வயப்பட்டதையும் அது
கழுவில் ஏற்றபட்டதையும் ...!
உயிரின் முடிவு வரை
சாகாமல் நினைவுகளை
இழுத்து பிடிக்கும் .. அந்த முதல் காதல் ...!
(இந்த கவிதை 18 - 3 - 12 கல்கியில் வெளி வந்தது )

Sunday 15 April 2012

சிறுகதை:
"பொக்கிஷம்"
" டாடி..  அணா.. செப்பு தகடு இதெல்லாம் எப்படி இருக்கும்?  ஸ்கூல்ல பழங்கால பொக்கிஷம்- னு அசைன்மென்ட் பண்ணனுமாம் .."

சித்தப்பா பெண்ணின் திருமணத்திற்காக துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்த சூர்யா,  பிரவீனை கட்டிக்கொண்டு.."  ம்ம் ..  சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்பவே  எத்தனை அசைன்மென்ட்..?   யோசித்தவன் .. அப்பா ஊருக்கு போறேன் ல .. அங்க தாத்தா வீட்டுல நான்  படிக்கிறப்ப  நிறைய   கலெக்ட் பண்ணி   வைச்சிருக்கேன் .  அதெல்லாம் பாட்டி அப்படியே பத்திரமா எடுத்து வைச்சிருகாங்க.. நான் வரும்போது எடுத்துட்டு வர்ரேன்.. சரியா..?  கிளம்பினான்.

 " சூர்யா .. நீ மட்டும்தான் வந்தியாப்பா .? பிரவீனை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு ..? கல்யாணம் .. காட்சி.. இந்த சாக்கிலாவது அவனை அழைச்சுட்டு வரலாம் இல்லே...?"

" அம்மா உனக்கு ரேவதி யை பத்தி தெரியாதா.. அவனை கூட விடமாட்டா .. விடு !.. நானா
தேடிகிட்டது.. அதான் நான் அப்பப்ப...வந்து பார்க்கிறேன் இல்லே ...நீ வீணா கவலைபடாதே .."
அப்பா அதை கூட கேட்கவில்லை.. அமைதியாக " வாப்பா " என்றார்.

"எப்ப வந்திங்க ..?  நல்லா இருக்கீங்களா ...? காபி ட்ரே யை... நீட்டியவளை பார்த்து சூர்யா ஒரு நிமிஷம் திகைத்து பதில் சொல்லிவிட்டு காபி எடுத்துகொண்டான். மலரா இது ..? என்னமாய் மாறி விட்டிருக்கிறாள் ..? முகத்தில் பள பளப்பு .. கூடியிருந்தது .. தலை முடியை லூசாக விட்டுஇருந்தது.. அவளை அழகு தேவதையாய் காட்டியது. அவளை பார்த்து ஆறு.. வருடமிருக்கும் .."  வருபவர்களை ஓடி ஓடி உபசரித்து கொண்டிருந்தாள்.

அப்பாவிற்கு என்னமோ சொந்தம் விட்டு விடக்கூடாது என்று மலரை அவனுக்கு கட்டி வைக்கத்தான் விருப்பம் .... மலர் இவன் வீட்டிலேயே அத்தை.. அத்தை என்று சுத்தி வருவாள் . இவனுக்குத்தான் அவளை கண்டாலே பிடிக்காது ..மாநிறமாய்  எண்ணெய் அப்பி கொண்டு தலை வாரி நாகரிகம் தெரியாத அவளை மனதுக்குள் கூட நினைக்க முடியவில்லை .. .. அவனுடன் வேலை பார்க்கும் ரேவதியை காதலித்து .. அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து .. சம்மதம் வாங்கி திருமணம் நடந்தது.. அப்பா   அந்த கோபத்திலேயே மலருக்கு இவனை விட அதிகம் சம்பாதிக்கும் வரனை பார்த்து அடுத்த மாதத்திலேயே ஜாம் ஜாம் என்று அவளுக்கு  திருமணம் செய்தார். நகரத்து வாழ்க்கை அவள் தோற்றமே மாறி இருந்தது..

அண்ணிகள் .. அக்கா.. தங்கைகள் என கும்பலை அரட்டை கச்சேரி நடந்து கொண்டு இருந்தது ..இதில் ரேவதி மட்டும் தான் மிஸ்ஸிங் ..   எல்லா விசேஷதிர்க்கும் .. இவன் மட்டும் தனியாய் எதோ இழந்தது போல் இருக்கும் .. காதலிக்கும் போது கண்ணை மறைக்கும் விஷயங்கள் ... திருமணதிற்கு பிறகுதான் விஸ்வரூபம் எடுக்கிறது.. ரேவதியிடம் அழகு உள்ளத்தில் இல்லை.. யாரையும் மதிப்பதில்லை..  ஈகோ பிடித்தவள் .. இவன் வீட்டு சொந்தங்களை ஓரம் கட்டி விட்டாள். ப்ரவீனுக்காக விட்டு கொடுத்து போகிறான் .

" தம்பி படிப்பு முடிச்சுட்டு நல்ல வேலைக்கு போய்ட்டான் .. இந்த வருஷம் கல்யாணம் முடிச்சிடலாம் பெரியப்பா.. நல்ல பொண்ணா பாருங்க.. "

பொண்ணு எப்படி இருக்கணும்..? என்ன எதிர்பாற்கிரிங்க..?

" என்ன பெரிசா எதிர்பார்ப்பு... வேணும்கிறது நம்ம கிட்டேயே இருக்கிறது. பொண்ணு இப்படி இருக்கணும்னு பெரிசா ஒண்ணும் கண்டிஷன் கிடையாது .. இப்பதான் பியுட்டி பார்லர் போய் காசை கொட்டினா ஆளையே மாத்திடறாங்க.. ஆனா தங்கமாட்டம் மனசு தானாதான் வரும் .. பிறவி குணம் இயல்பா அழகா இருக்கணும் .. பொண்ணு நல்ல குணமா இருந்தா போதும்...!"

பந்தியில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது .. யாரோ யாரிடமோ பேசி கொண்டிருந்தது சூர்யாவின் காதில் விழுந்து மனதை என்னமோ செய்தது.

அம்மா கல்யாண பலகாரங்களை ப்ரவீனுக்கு தரும்படி எடுத்து வைத்தாள். " அப்போ நான் கிளம்பரேன்மா .."  என்றவன் சட்டென்று ஞாபகம் வந்தவனாய் உள்ளே சென்று அலமாரியை திறந்து பிரவீன் கேட்ட நாணயங்கள் .. செப்பு தகடுகளை எடுத்து சூட்கேசில் வைத்து கொண்டான் . ஏனோ ஒரு நிமிடம் மலர் மனதுக்குள் வந்து போனாள்.. வாழ்க்கையின் பொக்கிஷமாய் தன்னுடன் பயணிக்க வேண்டியவளை புறக்கணித்ததை நினைத்து வருத்தமாய் இருந்தது.. இப்போது சூர்யாவின் மனசில் அருக்காணியாய் இருந்த மலர் அமராவதியாய் மாறி வலிக்க செய்தாள்...!

                          
              ****