Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, 10 December 2013

நேற்று...இன்று... நாளை...! - கல்லூரி வாசல்..................

சென்ற வாரம் பெண்கள் மலர் நிகழ்ச்சி ஒன்றிர்க்காக அந்த கல்லூரிக்கு சென்றிருந்தேன்... நிகழ்ச்சி முடியும் வரை அதில் கவனம் செலுத்திவிட்டு எல்லோரும் கிளம்பிய பின்.... என்னுடன் வந்த  சகோதரியுடன் அந்த கல்லூரி அசெம்பிளி ஹாலில் இருந்த படிகட்டில் உட்கார்ந்து சில நிமிடங்கள் மௌனமாய் இருந்தேன்... கொஞ்சம் கண் கலங்கவும் செய்தது... ! ஆமாங்க.. ஆமாம்.. நான் அந்த காலேஜ்லதான் படிச்சேன்....  கவலையில்லாமல் சுற்றி திரிந்த அந்த நாட்களும் கல்யாணத்துக்கு பிறகு பொறுப்பா போய்கிட்டிருக்க  இந்த நாட்களும்....எது பெஸ்ட்டுன்னு ரெண்டும் பேசிக்கிடுச்சுங்க.... !  அது பாட்டுக்கு பேசிக்கிட்டு போகட்டும்..!

உங்கள்ல எத்தனை பேரு  கல்லூரி முடித்தும் நட்பை தொடர்ந்துகிட்டு இருக்கிங்கன்னு தெரியலை... ! திருமணத்திற்கு பிறகு குறிப்பா பெண்கள் மட்டும் அவரவர் குடும்பம்னு தனி உலகத்துக்கு போக வேண்டிய சூழல்லதான் இருக்காங்க.. இதில் நட்புகளோடு தொடர்பு கொள்ளவும்... நினைத்து பார்க்கவும் கூட நேரமில்லாமல் போய்விடுகிறது. என்னோடு குழந்தை பருவத்துலர்ந்து நெருக்கமா பழகின தோழியும் இருக்காங்க... “ கல்யாணம் கூட நம்மை பிரிச்சிடக்கூடாது நாம ரெண்டு பேரும் ஒரே ஆளை கல்யாணம் பண்ணிக்கலாமாப்பா?” என்று விவரம் தெரியாத வயதில் பேசி வைத்திருக்கிறோம். அந்தளவு நெருக்கமான தோழி இப்ப இருபது நிமிட பயண தூரத்தில்தான் இருக்கிறாங்க.. ஆனா சந்திச்சுகறதுமில்ல... போனில் கூட அவ்வளவா பேசிக்கறதில்ல...! ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு நட்புகள் வலுவாக இருக்கிறது.  ஆனாலும் மனதில் எங்கோ ஒரு இடத்தில் பசுமையை சுமந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்வின் ஒவ்வொரு நட்புகளும்!

காலேஜ்ல உட்கார்ந்திட்டிருந்த அந்த  நேரத்துல எனக்கு தோன்றிய கவிதைதான் இது- ( அதுக்குன்னு ப்ளாக்- ஒயிட் காலத்துக்கு நான் போயிட்டதா நினைச்சீங்க... அவ்வளவுதான் தீர்ந்தீங்க... !)
அன்று ..அந்த மரத்திடம்
பேசிக்கொண்டிருந்தோம்....
மறந்திடாதே மரமே...
எங்கள் இளைப்பாறலை....
இவள் சுகா
அது வசந்தி...
அங்கே நிற்பவள் மாலதி...
எங்கள் குறும்பு.. கேலி..
ரகசியம்
மறந்து விடாதே...!
என்றாவது வருவோம்...
அப்போது இளைப்பாறவிடு
அந்த நினைவுகளை சொல்லி...!

அந்த மைதானத்தின் மணல்வெளிக்கும்
சொல்லிவைத்தோம்...
காலச்சுவடுகளில்
கலைத்து விடாதே-
எங்கள் பாதச் சுவடுகளை!


இன்று...
இதோ வந்திருக்கிறேன்...
மணல் வெளியெங்கும்-
திரிந்து பார்க்கிறேன்...
இங்கும் அங்குமாய்... ...!
மறந்திருக்க மாட்டாய் மரமே..
 நான்... வந்திருக்கிறேன்..
கண்களை மூடி காதை திறக்கிறேன்..
கதை சொல்...
ஒன்று விடாமல் சொல்...!

....................
...................
நன்றி மரமே-
உன் இளைப்பாறல் சுகமாய்த்தான்
இருக்கிறது...
எல்லாம் சொல்லிவிட்டாய்..
இப்படியே இருந்துவிடலாமா?
அப்படியே இருந்திருக்க கூடாதா..?
மனம் சண்டையிட்டு கிடக்கிறது...!
அது கிடக்கட்டும்!
 நீ சுகமாயிரு....
 என்னை போல் எத்தனை
பேருக்கு சொல்ல வேண்டும்
கதைகளை..!

நீ சுகமாயிரு...
இப்போது தண்ணீரோடு
என் கண்ணீரையும் விட்டு செல்கிறேன்...

விடை பெறுகிறேன்
சுகாவோ, மாலுவோ
வந்தால் சொல்லி வை...
நான் கேட்டதாய்...!
-------------------

Friday, 20 September 2013

விலை நிலங்கள்..........

என் சொந்த கிராமம்
போகும் போதும்..
வரும் போதும்..
கண்ணில் படும்...
அந்த வணிக வளாகம்...
அதன் எதாவது ஒரு
காங்கீரிட் தரையில்
சொல்லயழ வேண்டும்...
இது என் தாத்தா
வெள்ளாமை கண்ட மண்ணுன்னும்...!
விளை நிலத்தை 'விலை' நிலமாக்கி
என் அப்பா தொலைத்த பொன்னுன்னும்..!


Wednesday, 4 September 2013

அவன் யார்..?

கொஞ்சம் சண்டை
கொஞ்சம் சமாதானம்...

கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் மிஞ்சல்..

கொஞ்சம் குறை கூறல்
கொஞ்சம் குழைதல்...

இன்னும் பிற.. அடித்து போகிறது
ஆழ் கடலென ததும்பும் அவன்-
நிறைய அன்பில்...!

நாள் தோறும் நமக்குள்
காதலை சொல்லும்...
ஒப்பனை வார்த்தைகள் இல்லை..

நிச்சயமாய் அது தேவைப்படவில்லை..
நாமறிந்திருக்கிறோம்-
நமக்கான புரிதல்களை..!

இன்று-
நீ என் வாழ்வில் வந்த நாளென்று
வாழ்த்துக்கள் வருகிறது...

தேதிக்குள் தேக்கி வைத்து
கொண்டாட  நமக்கு அவகாசமில்லை..

நேசத்திற்கு அளவீடாய்-
ஆடையும், அணியும் பதிலுக்கு
ஒரு முத்தமும் தேவைப்படாமல்...

நாளும் நாளும் நதியாய் சுரந்து
நகர்ந்து கொண்டிருக்கிறது நமக்கான காதலும், நட்பும்..!

வழக்கம் போல் பயணித்து கொண்டிருக்கிறோம்..!
அவன் என் கணவன்- தோழன்..!


Wednesday, 7 August 2013

அவர்கள் யாரெனில்....

 
 நீண்ட கால இடைவெளிகளில்

இப்படி ஒரு சந்திப்பு

கல்யாணம் , காட்சியென....
அவர்களுக்காய் அமைந்து விடுகிறது...


அவனிடம் பேச நினைப்பதை எல்லாம்

ஒத்திகை பார்க்கிறாள்... அவள்.


காணும்போது  ஏனோ அரங்கேற மறுக்கிறது.

காயபட்டு விடுமோ என்ற அச்சத்தில்..!


பொய்யாய் சிரித்து சுகம் சொன்ன

அவளுக்கு-

தானும் சுகமே சொல்லி சிரித்த

அவன் மனதின் நெருடல்-

பேருந்து இருக்கையில்...
பலமாய் சிரித்தது..
நலமாய் நடித்ததில்...!  

அசையா சொத்து பிரித்த போது..
அசையும் ‘சொத்தை’யாக
அவன் பெரிய மகனுக்கும்,
அவள் சின்ன மகனுக்கும்

பங்கு போனவர்கள் ... அவர்கள்..!

Thursday, 25 July 2013

யாருய்யா.. பணக்காரன்?




அவன் பெயர் கோவிந்த சாமி..
அலுவலகத்தில் துப்புறவு செய்பவன்........
அவன் ஒரு சுற்றுப்புற போராளியாகத்தான்
தெரிகிறான்..
கூட்டவும், அப்புறப்படுத்தவும்..
என்றைக்கும் சலித்ததில்லை...
அவனை சுற்றி  நடக்கும்
சச்சரவுகளோ , சந்தோஷங்களோ
எதுவுமே அவனை பாதிக்கவில்லை...
எப்போதும் லேசாய்  இருக்கிறான்....
நாம் ஆசைகளை கூட்டிக்கொண்டே இருக்கிறோம்..
அவன் குப்பையோடு எறிந்து விடுகிறான் போலும்...!
இலட்சியத்திற்கும் ஆசைக்கும் அர்த்தம் புரிகிறது...
தேவையின் ஆசையில் பிறக்கிறது நம் லட்சியம்..
அவன் வேலையை அழகாய் செய்வது மட்டுமே
அவனுக்கு லட்சியம்...!
பொய்யோ.. வஞ்சகமோ தேவைப்படாதவன்..
ஒரு உணவு பொட்டலத்திலும், தேனீரிலும்
நிறைவாக போய்விடுகிறான்...
இருக்கும் நிலையில் இருந்துவிட சொல்லவில்லை...
எட்டி பிடிக்கும் பயணங்களில்  சந்தோஷம் தொலைக்கும்...
நம்மிடையே-
அவன் அழகான செல்வந்தன்.. என்றேதான் உரைக்கிறேன்..!
******************************
“ இருக்கறதை வச்சி சந்தோஷமா இருக்கறவந்தாய்யா பணக்காரன். என் வீட்டு வேலைக்கார பெண்மணியின் ஒத்தை அறை கொண்ட ஓட்டு வீடு, செம்மண் பூசி... பச்சரிசி கோல மாவில் ஜொலிக்கிறதய்யா எந்த ஆடம்பர பொருளுமில்லாம...! புருஷன், பொண்ணு, புள்ளன்னு உழைக்கிறாங்க... சந்தோஷமா சாப்பிடறாங்க...! நாளைய பத்தி கவல... இல்ல.. கஷ்டம் வந்தாலும் ஒண்ணா மண்ணா சேர்ந்தே பகிர்ந்துக்கிறாங்க... இன்னும் வேணும்..வேணும்னு தேவைகளின் பின்னால் ஓடிகிட்டிருக்க நாமதான்யா ஏழை...!  “
“ என்ன பேசிட்டே இருக்கும் போது திடீர்னு மழை பெய்யுது...நடுவர் அவர்களே?”
அன்பு :  “ம்...  நாந்தான் உன் முகத்துல தண்ணிய தெளிச்சேன்... தூக்கத்தில உளறிக்கிட்டே இருந்தேன்னு...”
 நான்: “ அப்ப நான் லியோனி பட்டிமன்றதுல பேசலையா...?”
அன்பு :“ இது வேறயா..? கஷ்டம்... ஸண்டேன்னு எழுப்பாம விட்டா மணி பாரு 10 ஆகுது..”
நான் : அச்சச்சோ நேத்து கவிதை எழுதிட்டு அப்படியே தூங்க போய்ட்டேன்னா அதான் அதே கான்செப்ட்டில கனவு வந்திருச்சி .. சரி சரி.. நான் குளிச்சிட்டு ரெடியாகிடறேன்... ஆடி சேல்ஸ் ஆரம்பிச்சிருச்சி ஷாப்பிங் போலாம்..
அன்பு: ஏற்கனவே பீரோவில் இருக்கிற துணியை  வச்சி சந்தோஷமா இரும்மா.... டா.. டா.. பை.. பை..!

ஊருக்கு உபதேசம் சொன்னா இப்படித்தான் மாட்டிக்க வேண்டியதாயிருக்கு... !