Thursday 17 May 2012

துணையாய் வருவாயா...?

சிறுகதை

துணையாய் வருவாயா...?


செல்வி அப்படி செய்வாள் என்று அவள் அப்பாவும் , அம்மாவும்
எதிர்பார்க்கவில்லை.. ஆஸ்பத்திரியில் ட்ரிப்ஸ் ஏறிகொண்டிருக்க... அவர்களோடு கதிரும் கவலையோடு உட்கார்ந்திருந்ததை பார்த்து செல்வியின் அம்மா ருக்மணிக்கு கோபம் வந்தது,
" கதிரு.. இப்ப திருப்தியா...?
கதிர் எங்கோ வெறித்தான்.
செல்வியின் அப்பா சங்கரலிங்கம் மனைவியை அதட்டினார். " ருக்கு அவனை நொந்துக்காதே.. நம்ம நேரத்துக்கு யாரையும் குறை சொல்ல கூடாது..."

ருக்மணியின் கைகளை பிடித்து கொண்டு அவள் தங்கை மகள் கவிதா பேசினாள், "பெரியம்மா நேத்து ஸ்கூல் விட்டு வரும்போதே செல்வி கஷ்டமாத்தான் பேசினா.. "இனிமே அலங்காரம் பண்ணிகிட்டு எவன் முன்னாடியும் நிற்க முடியாதுடி...அம்மா , அப்பா படற வேதனையை தாங்க முடியலை.. கல்யாணம்னு ஒண்னு நடந்தாகனும்.. என் மாமா கதிரு கால்ல விழுந்தாவது என்னைய கட்டிக்க சொல்றேன்னு சொன்னா.. அந்த சென்னை மாப்பிள்ளை சம்பந்தம் நின்னு போனதிலஅவ ரொம்ப வெறுத்து போயிட்டா..."
' கவிதா இந்த இருபது நாளா எனக்காக கூட வேண்டலைடி...அவர் நல்லாருக்கனும் என்னை நல்லா பார்த்துக்கனும்னு மாஞ்சி மாஞ்சி சொல்லிட்டிருந்தா..."
பதிலுக்கு நான் அவகிட்ட ' அவன் நல்லவனா இருந்தா அவன் அம்மா போடற கண்டிஷனுக்கு வாயை மூடிட்டு இருப்பானா..? பேராசை பிடிச்சவங்க கிட்ட போய் மாட்டிகிட்டு காலமெல்லாம் கஷ்டபடறதை விட , கவலை படாம இரு நல்லதை நடக்கும்னு.. எவ்வளவோ சொல்லி அனுப்பினேன்..."
செல்விக்கு என்னவோ கதிர் மேல்தான் விருப்பம். சங்கரலிங்கமும் பெண்
ஆசைபடுகிறாளே என்று கதிரிடம் சென்று பேசினார்.
அவனோ, " மாமா .. எனக்கு எந்த யோசனையும் இல்ல.. செல்வியை வெளியில கட்டி கொடுத்திடுங்க..." என்றான்.
ஜாதக தோஷம் ... அது... இதுவென்று ... தள்ளிக்கொண்டு போனதில் செல்விக்கு இருபத்தியெட்டு வயதாகி விட்டது. ருக்மணி போகாத கோயில் இல்லை...
போனமாதம் வந்த அந்த சென்னை வரன் ஜாதகம் பொருந்தியிருந்ததோடு ,மாப்பிள்ளையும் நன்றாக இருந்தான்.பரஸ்பரம் பேசி முடித்துவிட்டு... 'ஆடி போகட்டும்.. நல்ல நாளாய் பார்த்து வருகிறோம் என்று போனார்கள். ஆடி முடிந்து பதினைந்து நாளாகியும் எந்த தகவலும் வரவில்லை...சங்கரலிங்கமே போன் செய்தார். " ஏதோ ஜாதகம் பொருந்தி இருக்குதேன்னு பார்த்தோம்.. பொண்ணுக்கு படிப்பும் கம்மி.. நர்சரி ஸ்கூல்ல வேலை பார்க்கிறது இதெல்லாம் எங்க சொந்தக்காரங்க குறைச்சலா நினைப்பாங்க... அதனால எழுபது பவுன் போட்டு, கார் வாங்கி தருவதாக இருந்தால் மேற்கொண்டு யோசிக்கலாம்..."
மாப்பிள்ளையின் அம்மா கறாராய் சொன்னாள்.
பைக் தந்து கல்யாணம் பண்ணவே கடன்பட்டு செய்ய இருக்கும் சங்கரலிங்கத்திற்கு அந்த அம்மாவின் பேச்சு தட்டி கழிப்பதாகவே பட்டது.
" அப்பா இந்த இடமே தேவையில்லை .. அக்கா போற இடத்துல சந்தோஷமா இருக்கணும்.. விலைவாசி ஏர்ற மாதிரி .. திடீர்னு நகையை ஏத்தறவங்களாசெல்வியை நல்லா வைச்சிப்பாங்க...?" மகேஷ் கோபமாய் கத்தினான்.
ருக்மணிக்கு அழுகையாய் வந்தது,..." கடவுளே என் பொண்ணுக்கு நல்ல வழி காமிக்க மாட்டியா...? என்னங்க.. நீங்களும்தான் உங்க பிடிவாதத்தை விட்டுட்டு கதிரு கிட்ட பேசி பார்க்க வேண்டியதுதானே...?"
" என்னால முடியாது.. ஒரு முறை கேட்டதுக்கே யோசனையில்லைன்னு
சொல்லிட்டான். செல்வியை கட்டி குடுக்க கதியில்லாமதான் மாமா நம்ம தலையில கட்ட பார்க்கறாருன்னு அவன் நினைக்கனுமா...? தலையெழுத்து பிரகாரம் நடக்கட்டும்.
செல்விக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை.. ஸ்கூலில் சிலர் ' ஏ செல்வி நீயே எவனையாவது பார்த்து கட்டிகிடு... இப்படியே ஒண்ணு ஒண்ணா பார்த்திட்டிருந்தா நீ அவ்வையாராகி விட வேண்டியதுதான். கிண்டல் வார்த்தைகள் நெருஞ்சிமுள்ளாய் குத்த தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டாள். செல்வியின் மொபைல் ரொம்ப நேரம் அடித்து கொண்டிருக்கவேதான் ருக்மணி எட்டி பார்த்து கூச்சல்போட்டு ஆஸ்பிட்டலில் சேர்த்தார்கள்.
துவண்டு போன கொடியாய் இருந்த செல்வி கண் விழித்ததும், கதிர் கலங்கின குரலில் பேசினான்," செல்வி ஏன் இப்படி செஞ்சே..? உன்னை பிடிக்கலைன்னாசொன்னேன்..? உன் அத்தை என் தலையில் குடும்ப சுமையை தூக்கி வச்சிட்டுபோனபிறகு என்னை பத்தி யோசிக்கவே இல்லை. ஜானகி, மலர் இரண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணனும். முரளியையாவது படிக்க வைக்கனும்.இதெல்லாம் முடியறதுக்குள்ள எனக்கு வயசாயிடும்.. நீயாவது நல்லா இருக்கணும்னுதான் மனசை தள்ளி வச்சிட்டு , வெளியில பார்க்க சொல்லி மாமா கிட்ட சொன்னேன். இவ்வளவு தூரம் ஆகிட்ட பிறகு வெளிப்படையாவே கேட்கிறேன், " செல்வி நீயும் என் கஷ்டத்தில பங்கெடுத்துக்குவியா...?"
செல்வி மெல்ல தனது கைகளை நீட்டி கதிரின் கைகளை பற்றிக்கொண்டாள்.கண்ணீரையே மாலையாக்கி கோர்த்துக்கொண்டு அன்பை பரிமாறிக்கொண்டார்கள்.
கதிர் இப்போது புன்னகை மாறாமல்.. " அப்புறம் என்ன மாமா.. அடுத்த முகூர்த்ததேதி எப்பன்னு பார்க்க வேண்டியதுதானே..? என்றான்.

(30-1-2011 தினதந்தி- குடும்ப மலரில் வந்தது)





சிறுகதை

மாற்றம்


 
" ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி ஏழாகுது.. எருமை மாடு மாதிரி
தூங்கிகிட்டிருக்கா...." கத்திவிட்டு கிச்சனுக்குள் வருவதற்குள் பால் பொங்கி வழிந்தது.
" என்னங்க வண்டியை துடைக்க ஆரம்பிச்சிட்டா அதிலேயே
உட்காந்துவிடுவிங்களே...?" அந்த பிசாசை எழுப்பி குளிக்க வைங்க.

ஹாட் பேக்கை பைக்கில் மாட்டி கொண்ட தினேஷ், " ரேவதி எட்டாயிடுச்சி.. நான் கிளம்பறேன்.. ஈவ்னிங் அம்மா வருவாங்க ஏதாவது வீட்டுக்கு வேணும்னா போன் பண்ணு.."
பூஜாவிற்கும் , தனக்கும் லஞ்ச் பேக்கை ரெடி பண்ணி, கிச்சனை துடைத்து டைம் பார்க்க மணி எட்டறை ஆகியிருந்தது." கடவுளே இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பனுமே.. பதறியவள், இன்னமும் மெதுவாக குளித்து கொண்டிருந்த பூஜாவை சத்தம் போட்டாள்.
" கழுத எவ்வளவு நேரம் குளிப்ப.. சீக்கிரம் ரெடியாகி டேபிள்ல இருக்கறதை சாப்பிட்டு கிளம்பு..."
அரக்க பரக்க குளித்து வருவதற்குள் பூஜா கேட்டை பூட்டி சாவியை வீசி
சென்றிருந்தாள். இவளும் எதையோ மென்று அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

'குழந்தையை கூட ஒழுங்கா கவனிக்க முடியலையே....' சாயந்திரம் அலுப்போடு வீட்டை அடைந்தாள்.
பூஜா பாட்டியோடு பேசிக்கொண்டிருந்தாள்.
"பாட்டி.. டாடியோடு உனக்கு நாலு பசங்க.. நீ அப்பாவை எப்படி கூப்பிடுவே...?
" உங்கப்பாவை நானும் , தாத்தாவும் ஆசையா ' ராசான்னு' கூப்பிடுவோம்.
" சித்தப்பாவை...?"
" சின்ன துரைன்னு.. ஏன் கண்ணு இதெல்லாம் கேட்கற...?"
" நான் ஒரே பொண்ணுதானே.. பூஜான்னு அழகா பேர் வச்சிட்டு
என் பேரே எனக்கு மறந்துடுச்சி ...எப்ப பார்த்தாலும் கழுதை, எருமை மாடு இப்படிதான் கூப்பிடறாங்க..../"
பெரிய மனுஷியாட்டம் பீல் பண்ணி பேசிய பேத்தியை பார்த்து சிரித்த விசாலாட்சி," குட்டிம்மா பாட்டி வீட்டில இருந்தேன் டென்ஷன் இல்லாம பசங்களை வளர்க்க முடிஞ்சது. அதுக்காக உங்க அம்மாவுக்கு பாசம் இல்லன்னு நினைச்சுக்க கூடாது. உங்க அப்பாவோட செருப்பு
அறுந்து போனாக்கூட தைச்சிதான் போட்டுக்க சொல்வேன். ஆனா, இப்ப உனக்கு எவ்வளவு செருப்பு, டிரஸ் கேட்டதெல்லாம் கிடைக்குது. இதுக்கெல்லாம் காரணம் உங்கம்மாவும் வேலைக்கு
போறதாலதானே..? அதுக்கு உங்கம்மா எவ்வளவு கஷ்டபடறா
தெரியுமா..? நீ சீக்கிரம் எழுந்து சின்ன சின்ன உதவி எல்லாம் செய்யலாம் இல்லையா...?"
" ஆமாம் பாட்டி !" என்றவள் ரேவதியை பார்த்ததும் " தண்ணி குடி மம்மி..." ஓடி
 வந்து டம்ளரை நீட்டினாள்.
நன்றியோடு மாமியாரை பார்த்தாள் ரேவதி.

(16-07-2011 தினமலர்- பெண்கள் மலரில்)

சிறுகதை

பொல்லாதவள்


லட்சுமியம்மாள் தன் வீட்டை சுற்றி நாலு போர்ஷன்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாள். கீழ் போர்ஷனில் இருக்கும் அகிலாவுடன் தான் எந்நேரமும் கதை பேசிக்கொண்டிருப்பாள்.
அகிலா வாசலுக்கு நேராக தையல் மிஷினை போட்டுக்கொண்டு போகிற
வருகிறவர்களை புறணி பேசி கொண்டு பொழுதை போக்குவாள். ஆனால்
பேச்சு மட்டும் தேனாய் எல்லாரையும் அம்மா, அண்ணி என்று அழைத்து
கொண்டிருப்பாள்.
" ஏம்மா டல்லா இருக்கிங்க... சாப்பிடலையா..? விஷயத்தை வரவைப்பதற்காக தங்கமாய் பேசினாள் அகிலா.
" ஆனாலும் கீதாவுக்கு ரொம்பதான் திமிரு. கத்தரிக்காய் குழம்பு வைக்க
சொன்னா, வேணும்னே வெண்டைக்காய் குழம்பு வைச்சிருக்கா.. " மருமகளை வழக்கம் போல் குறை சொன்னாள் லட்சுமியம்மாள்.
" ஆமாம்மா அது கொழுப்பு அதிகம்தான்... சம்பாதிக்கிற திமிரு.. உங்க பிள்ளை அடக்கி வைச்சா தானை அடங்கும்.
" லட்சுமி அங்க என்ன பண்றே..?' கணவனின் குரல் கேட்டு தன் வீட்டிற்கு வந்தாள் லட்சுமியம்மாள்,
" மனசுக்கு ஆறுதலா நாலு வார்த்தை பேசிட்டு வரலாம்னா பொறுக்காதே
உங்களுக்கு.. உங்க மருமக என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கறா..
இன்னிக்கு நான் சமைச்சதுக்கு மாறா சமைச்சு வெச்சிட்டு போயிருக்கா...."

"வெண்டைக்காய் முத்தி போயிடும்னு அதை போட்டு குழம்பு வைச்சிருப்பா.. உனக்கு அவளை குறை சொல்லலைன்னா பொழுதே போகாதே...? நம்ம மருமக வேலைக்கு போனாலும் பொறுமையா இருக்கா. நீ சண்டை போடும் போது பதில் சொன்னா மரியாதையா இருக்காதுன்னு பேசாம அமைதியா போறா.. அது உனக்கு மதிக்காத மாதிரி தெரியுது.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கீதா மொத்த துணியையும் மிஷினில்
போட்டு எடுத்தவள் மாடியில் காய வைக்க பக்கெட்டை எடுத்து சென்றாள். அங்கு தன் துணியை காய போட வந்த அகிலா, " என்ன கீதா எப்படி இருக்க.. ஒரு நாள்தான் உனக்கு லீவு.. அன்னிக்கு கூட உன்னால ரெஸ்ட் எடுக்க முடியலை. எல்லா வேலையும் நீயே செய்ய வேண்டியிருக்கு.. உங்க மாமியார் சரியான ராட்சசி.. எப்படிதான் நீ அவங்ககிட்ட இருக்கியோ..? மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் அகிலா.
" இங்க பாரு அகிலா .. என் மாமியாரை பத்தி பேச நீ யாரு..? நீ இந்த
வீட்டில குடியிருக்க.. அந்த எல்லையோடு இருந்துக்க.. என் மாமியார்தான்
கஷ்டபட்டு உழைச்சு முன்னுக்கு கொண்டு வேணும்னாலும் பேசிட்டு போகட்டும் நீ உன் வேலையை பாரு ..." என்று
தன் குடும்பம் என்று மாமியாரை விட்டு தராமல் ' நறுக்' என்று தெறித்த
கீதாவின் வார்த்தைகள். நைசாக மாடிப்படியில் ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த லட்சுமியம்மாளுக்கு ' சுருக் ' கென்று தைத்தது.

(22-1-2011 தினமலர்- பெண்கள் மலரில்)

தலைக்குனிவு





" அப்பா நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிகங்க? என் வீட்டுக்கு வந்துடுங்கப்பா " சதீஷ் சொன்னான்.பதில் சொல்லாமல் பார்க்கலாம் என்பது போல் தலையசைத்தார் சுந்தரேசன்.
கொஞ்ச நேரத்தில் அப்பாவிடம் வந்த நரேன், " அப்பா நீங்க தனியா இருக்க வேண்டாம் என் கூட வந்திடுங்க " என்றான்.
தாய் இறந்த துக்கத்திற்கு வந்த மகன்கள்தான் இவ்வாறு அழைத்தனர். இரண்டுபிள்ளைகளுக்கும் மூன்று மாதம் கழித்து பதில் சொல்வதாக கூறி அனுப்பினார்.
மூன்று மாதம் கழித்து அப்பா போனில் சொன்ன தகவலை கேட்டு இரண்டு பிள்ளைகளும் உடனடியாக புறப்பட்டு வந்து கூச்சல் போட்டார்கள்.
" அப்பா இந்த வயசுல நீங்க பண்ணின காரியம் கொஞ்சங்கூட நல்லால்லே... அம்மா போய் மூணு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு வந்து நிக்கறிங்களே...உங்களுக்கு அசிங்கமா இல்லை...?"
சிறிது நேரம் மௌனமாய் இருந்த சுந்தரேசன் தொண்டையை கணைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
" உங்கம்மா உங்களை எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தா? கடைசி காலத்தில உங்க கூட வந்து இருக்கணும்னு ஆசைப்பட்டா.. ஆனா, அவ படுத்த படுக்கையா இருக்கறதை காரணம் காட்டி , அவளை நீங்க கூட்டிட்டு போய் வைச்சிக்கலை.
கடைசி வரை அவளுக்கு நான் எல்லாம் மனசு கோணாம செஞ்சும் ' பிள்ளைங்க பார்த்துக்கலேன்னு மனக்குறையோடதான் போய் சேர்ந்தா..."
அப்ப எங்க மேல இல்லாத பாசம் இப்ப என் மேல ஏன் வந்திருக்கு...?
காரணம் நான் நல்லா திடகாத்திரமா இருக்கேன். உங்க வீட்டுக்கு சம்பளம் இல்லாத காவல்காரனா இருப்பேன்..என் பென்ஷன் 20 ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கலாம்ங்கிற நப்பாசைதானே...?"
உங்க ரெண்டு பேரையும் நான் அப்படியே விடலை.. நல்லா படிக்க
வைச்சிருக்கேன்.. நல்ல வேலையில் இருக்கிங்க.. வீடும் வாங்கி கொடுத்திட்டேன், கல்யாணத்துக்கு செய்ய வேண்டியதையும் செஞ்சிட்டேன். இனி யாருக்காவது நல்லது செய்யனும்னு நினைச்சேன்...
இதோ இந்த வளர்மதியோட அப்பாவும் அம்மாவும் வயசானவங்க.. வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ற அளவுக்கு வசதி இல்ல.. அதனால 40 வயசாகியும் இன்னும் கல்யாணமாகலை. அப்பா , அம்மா காலத்துக்கு பிறகு இவ நிலமை கேள்விக்குறியா இருந்தது. இவளை கல்யாணம் பண்ணிகிட்டதால என் பென்ஷன் பணம் எனக்கு பிறகு இவளுக்கு வரும். இதுக்கு சட்டபடி ஏற்பாடு செய்யத்தான்  இந்த கல்யாணம்.மற்றபடி, இவ என்னை பார்த்துக்க வந்த தாய்... என் மனசுல
எந்த களங்கமும் இல்ல.. இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கலேன்னா யாரும் இங்க வர வேண்டாம்...." சுந்தரேசனின் வார்த்தைகள் சம்மட்டியாய் தாக்க.. பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தனர் இரு பிள்ளைகளும்.

(28-8-2010 தின மலர் - பெண்கள் மலரில் வந்தது)

சிறு கதை

திலகாவும்.....மாலாவும்...!



 
" மாலா வேலை எல்லாம் முடிச்சிட்டியா..?திலகா பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் எட்டி கேட்க ,
" இதோ வந்துட்டேங்கா.. 12 மணி சீரியலுக்குள்ள சாதம் வச்சுடாலாம்னு உலை வச்சேன்.. அதுக்குள்ள நீங்க கூப்பிடவே சிம்ல வைச்சிட்டு வந்துட்டேன்..."
" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..? நேத்து நான் மார்க்கெட் பக்கம்
போயிட்டிருந்தப்ப எதிர்த்த வீட்டு கமலாவோட பொண்ணு எவனோ ஒருத்தன் கூட பைக்ல போயிட்டுருந்தா...என்னை பார்த்ததும் பார்க்காத மாதிரி திரும்பிகிட்டா..காலேஜ் போறன்னு இப்படிதான் சுத்தறா போலிருக்கு...."
" அப்படியாக்கா.. என்னவோ எப்பவும் நாம வம்பு பேசிகிட்டிருக்கறதா அந்த கமலா சிலுத்துக்கறாளே.. அவ பொண்ணு இப்படி லவ்வு
கிவ்வு ன்னு ஓடி போனா தான் திமிர் அடங்கும்."
" போனவாரம் வாத்தியார் வீட்டு பொண்ணு எவனோடயோ ஓடிபோச்சே.. வாத்தியார் சம்சாரம் எங்க அடங்கினா..? மினுக்கி கிட்டுதானே திரியறா...?"
" நம்ம அலமு மாமி எங்க ரெண்டு நாளா பேசவே வரலை...?"
" அதையேன் கேட்குற.. நல்ல பொண்ணுன்னு விசாரிச்சிதான் அவங்க பிள்ளைக்கு கட்டி வைச்சாங்க.. அந்த சுதா பண்ற அட்டகாசம் இருக்குதே.. மாமியாரை மதிக்கறதே இல்லையாம். அதான் மாமி பொண்ணு வீட்டிலயாவது இரண்டு நாள் இருந்துட்டு வரலாம்னு போயிருக்காங்க.. "
திலகாவின் கணவன் வரதனை பார்த்ததும், " நான் வர்றேங்கா.. என் வீட்டுக்காரரும் வந்துடுவார்.. நான் போய் சமைக்கனும்..." என்று கழன்று கொண்டாள் மாலா.
" ஏய்.. திலகா எத்தனை வாட்டி சொல்றது வீண்கதை எல்லாம் பேசி நேரத்தை வீணாக்காதேன்னு.. நமக்கும் வயசு பொண்ணு இருக்கு ... கொஞ்சம் வாயை அடக்கு..."
வரதன் சாப்பிட்டு கிளம்பியதும் டிவி சீரியல்களில் மூழ்கினாள் திலகா.
மாலை ஏழு மணிக்கு திலகா பதட்டமாய் பேசினாள்,
" என்ங்க நாம மோசம் போயிட்டோங்க.. நம்ம கீதா ஆறு மணியாகியும்
வரலையேன்னு அவ பிரெண்டுக்கு போன் போட்டா , கீதா இன்னிக்கு காலேஜுக்கே வரலையாம். அவ ரூம்ல போய் பார்த்தா..பக்கத்து தெருவில இருக்கிற பாலுவை காதலிக்கறதா லெட்டர் எழுதி வச்சிட்டு போயிருக்காங்க.. அந்த கழுதை எங்க இருந்தாலும் உதைச்சி வெளியில தெரியறதுக்குள்ளே கூட்டிட்டு வாங்க..." என்று அழுதாள்.'
மறு நாள் வாசலில் கோலம் போட  திலகா கதவை திறக்க , எதிர்த்த வீட்டு
கமலாவிடம், " ம்.. ஊர்ல இருக்கறவங்களை பத்தி எல்லாம் கதை பேசிகிட்டுருக்கா.. அவ பொண்ணு என்ன பண்றான்னு பார்த்து கண்டிக்கலை...அந்த திலகாவிற்கு இப்பவாவது புத்தி வரட்டும்கா..." மாலா சொல்லி கொண்டிருந்தது தெளிவாக கேட்டது.
( 8-10-2011 தின மலர் - பெண்கள் மலரில் வந்தது)
கவிதை

தீயாய் எழுந்த கேள்விகள்



 
பஞ்ச பூதங்களில்
ஒன்றாய் வைத்து
போற்றினோமே...
போற்றிய நெஞ்சை
பதைபதைக்க வைத்தது
நியாயம்தானா..?
இரைக்கு உன்னை
பயன்படுத்தினால்..
பதிலுக்கு உன் இரைக்கு
விழுங்க கிடைத்தது-
பச்சிளம் குழந்தைகள்தானா..??
உன் தீ நாக்கு சுவைக்க
அப்பாவி குழந்தைகளா கிடைத்தனர்..?
ஆக்கவும், அழிக்கவும்
பயன் படுகிறாய் என்றால்..
அழித்துக்கொள்-
இப்படி செய்யும் உன் பாதக செயலை..
அழித்துக்கொள்.
நீ பலி கொண்டாயோ
மெத்தன செயலால்
பழி கொண்டாயோ
தெரியவில்லை.

இப்படி ஒரு
கொடூரம் உண்டோ
கண்ணீரே சுடுகிறது.
நீ கும்பகோணத்தில் பற்றினாலும்..
இமயம் வரை மக்கள்
இதயங்களை உலுக்கிவிட்டாய்.
தீ நாக்கே
இனியாவது
‘நா காக்க’
என்ற அறத்தை போற்று..!

( கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் கண்ணீர் வார்த்தைகள்)
சிறுகதை:

மீண்டும் மருமகள்


மாடியில் பாட்டு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. என்ன இவர்கள் இன்னும் கீழே வரவில்லை என யோசித்த சுமதி காபியை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள். சுமதியின் ஒரே மகன் விஜய்க்கு திருமணமாகி இருபது நாட்கள்தான் ஆகிறது.
சுமதி மருமகள் தீபாவை பாசத்துடன் கவனித்துக்கொண்டாள்.
கதவை தட்ட நினைத்த சுமதி , தன்னை பற்றி பேச்சு அடிபடவே, நின்று காது கொடுத்து கேட்டாள்.
" இத பாருங்க.. ஆபிசுக்கும் போயிட்டு சமைச்சி வைச்சிட்டு போனா .. உங்கம்மா இருக்காளே கிழவி நேத்து சாம்பார்ல உப்பு இல்ல.. உறைப்பு இல்லன்னுது. எனக்கு கோவமா வருது. என்னை குறை சொல்லாம அனுசரிச்சி போனா இங்க இருப்பேன் இல்லைன்னா தனிக்குடித்தனம்தான்."
" செல்லம்.. பெரியவங்கன்னா அப்படிதான் இருப்பாங்க.. கோவிச்சுக்காத,
என்னை இவ்வளவு தூரம் படிக்க வைச்சவங்களை விட்டுட்டு எங்க போறது..? உனக்குதான் நான் இருக்கேனே டியர்..." கொஞ்சினான் விஜய்.
" ஆமா.. கொஞ்சல் எல்லாம் வேணாம் .. உங்கப்பா உங்க பாட்டியை கிராமத்திலேயே விட்டுடலை? நாம மட்டும் என்ன ப்ரீயா இருக்க கூடாதா?

மேற்கொண்டு கேட்க பிடிக்காமல் சுமதி கீழே இறங்கி விட்டாள்.
அன்று இரவு சுமதிக்கு தூக்கமே வரவில்லை. நாம் செல்லமாய் வளர்த்த
ஓரே பையன் நம்முடன் இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து மருமகளை தேர்ந்தெடுத்தாள். .. வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை கிழவி என்று ஓரம் கட்ட நினைக்கிறாளே அவள்?
" என்ன சுமதி தூக்கம் வரலையா? பரிதாபமாய் கேட்டார், அவளது கணவர் சீனிவாசன். பதில் பேசாமல் திரும்பி படுத்துக்கொண்டாள்.
காலையில் சீனிவாசனுக்கு டிபன் எடுத்து வைத்த சுமதி, " என்னங்க நீங்க
குளிச்சிட்டிருந்தப்ப அத்தை போன் பண்ணியிருந்தாங்க.. நாலு நாளா ஆஸ்துமா அதிகமாயிடுச்சாம். வேலைக்காரி வேற வரலையாம். பாவம் நாம போய் அத்தையை கூட்டிட்டு வந்திடலாமா??" என்றவளை ஆச்சரியமாய் பார்த்தார் சீனிவாசன்.
சுமதியா இது..? இரண்டு மாதங்களுக்கு முன் வரை அம்மாவிடமிருந்து போன் வந்தால் கத்துவாள். " சும்மா உங்க புள்ளைய சென்னைக்கும் , கிராமத்துக்கும் அலைய விடாதீங்க.. அதான் மாசமானா சம்பளம் தந்து வேலைக்காரி வைச்சிருக்கோம்ல, அவளை கூட்டிகிட்டு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வாங்க எல்லாம் சரியாயிடும்." என்பாளே இந்த வெறுப்பை தாங்க முடியாமல்தானே அம்மா கிராமத்திற்கே போய்விட்டாள். இப்பவாவது அவளை அழைக்க புத்தி வந்ததே.. என்று நினைத்த சீனிவாசன் மனதிற்குள் தீபாவிற்கு நன்றி கூறினார்.
பின்னே.. " மாமா அத்தை எனக்கு நல்ல மாமியாரா பாசத்தை பொழியறாங்க, அவ்ங்களை போய் நான் எப்படி திட்டுவது ? என்னால் முடியாது என்று மறுத்தவளை, சுமதி உனக்கு நல்ல மாமியாரா நடந்துக்கிறா.. ஆனா எங்கம்மாவிற்கு நல்ல மருமகளா நடந்துக்கலையே..? அம்மாவோட இந்த தள்ளாத வயசுல கூட நான் அவங்களை நான் கவனிச்சுக்கலைன்னா வேறு பாவமே வேண்டாம்மா என கெஞ்சியதால் அல்லவா தீபா அப்படி நடித்தாள்.

(24-07-2010 தினமலர்- பெண்கள் மலரில்)
என் பக்கம்

அன்புத் தொல்லை வேண்டாமே..


என் அக்கா , மாமா அவர்களுடைய மகன் திருமணத்திற்காக உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று அழைப்பிதழ் தந்து விட்டு வந்தார்கள். என் அக்கா வந்ததும் டயர்டாக இருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் காபி , டீ என்று வலுக்கட்டாயமாய் தந்துவிடுகிறார்கள். மறுத்தால் கோபித்து கொண்டு விடுகிறார்கள்.ஓரே நாளில் முப்பது வீட்டில் காபி, டீ , எண்ணைய் பலகாரம் என்று சொல்லி வாந்தி எடுத்தார். உண்மைதான். அழைப்பிதழ் தர வருபவர்களிடம் அவர்கள் விரும்பினால் தவிர கட்டாயப்படுத்தி எதுவும் தராதீர்கள். அவர்கள் பல இடங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் அன்புத்தொல்லை அவர்கள் உடலுக்கு தொல்லையாகி அவஸ்தைக்குள்ளாக்க வேண்டாம்.
( 31-12-2011 தினமலர்- பெண்கள் மலர் எங்கள் பக்கத்தில்)

Wednesday 16 May 2012

பேனா முனையில் பேசியது

நம் தோழியும் ஆசிரியையும் ஆன கண்ணமங்கலம் விஜயலட்சுமி படிக்காத மாணவிகளை திருத்த கையாண்ட உத்தி புதிய சிந்தனை: படிக்காத மாணவிகளை கண்டறிந்து , ஏன் படிக்கவில்லை, அதனால் அவர்கள் இப்போது எந்த நிலமையில் இருக்கிறார்கள் என்று வீடு வீடாக சென்று சர்வே எடுத்து அவர்கள் படும் துன்பத்தை புராஜக்ட் போல தந்திருக்கிறார். ' கல்லாமையினால் வரும் இல்லாமையை பற்றி மாணவர்களுக்கு புரிய வைத்துள்ளார். நம் தோழி விஜயலட்சுமிக்கு நல்லாசிரியர் விருது கிடைக்க வேண்டும்.
(17-09-2011 தினமலர்- பெண்கள் மலரில் )
சிறுகதை

ஐ லவ் யூ டாடி...!


" டாடி .." முதுகை தட்டி சஞ்சய் எழுப்பியதும் , அரைக்கண்ணால் கடிகாரத்தை பார்த்தான் சரவணன், மணி ஆறாகியிருந்தது.
" என்னடா இன்னைக்கு சண்டேதானே... இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க கூடாதா..?போர்வையை இழுத்து விட்டான்.
கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் சரவணனை எழுப்பினான் சஞ்சய்,
"டாடி பசிக்குது... பால் கலக்கி குடு..."
அஞ்சு வயசு குழந்தை... பசிக்காதா என்ன.. சோம்பலை தூக்கி போட்டு விட்டு எழுந்த சரவணன் அவனை பிரஷ் செய்ய வைத்து பாலை காய்ச்சி கப்பில் ஊற்றி தந்துவிட்டு ... தனக்கும் காபி எடுத்துக்கொண்டு தினசரியை பிரித்தான்.
' விலைவாசி உயர்வை கண்டித்து இன்று மாலை ஆறு மணி வரை முழு
கடையடைப்பு..' - தலைப்பு செய்தி பளிச்சிட்டது. இதை ஏன் நேற்று மறந்து போனோம்..? நொந்து கொண்டான்.
"என்னங்க அம்மாவுக்கு நாலு நாளா காய்ச்சலாம்.. ட்ரிப்ஸ் எல்லாம்
ஏத்தியிருக்காங்க.. நாளைக்கு லீவுதானே.. சஞ்சயை பார்த்துக்கோங்க..நான் அம்மாவை பார்த்துட்டு வந்துடறேன் என்றவளை
நேற்று மாலை பஸ் ஸ்டாப்பில் டிராப் செய்தான். சஞ்சய்க்கு என்ன தர வேண்டும், தரக்கூடாது என்று சொல்லிக்கொண்டே வந்தாள்
"ஆமா பெரிய சிஎம் வேலை.. எல்லாம் நான் பார்த்துக்கறேன் போ.." அவளிடம் ஜம்பமாய் சொன்னான்.
இன்று எந்த ஓட்டலும் இருக்காது என்று தெரிந்துதான் அர்ச்சனா போயிருப்பாளோ?
மனதிற்குள் கோபம் கொப்பளித்தது.' பூனை கண்ணை மூடினா பூலோகமே இருண்டிடுமா என்ன.. நானே சமைக்கிறேன் பார் என்று ... ' தனக்குள் முணகினான்.
குளித்து முடித்து ப்ரிட்ஜை ஆராய்ந்தான். தோசை மாவு இருந்தது. ஸ்டவ்
பற்றவைத்து கல் வைத்து ஊற்றினான். தோசை பிய்ந்து.. பிய்ந்து வந்தது.
" எனக்கு ரவுண்டா வேணும்... " என்று அடம் பிடித்த சஞ்சயை விளையாட்டு காட்டி சாப்பிட வைத்தான். சஞ்சயை ஹோம் வொர்க் செய்ய வைத்து, நூடுல்ஸ் செய்து, துணி துவைத்து... வீட்டு வேலைகளை முடிப்பதற்குள் மணி நான்கு ஆகிவிட்டது. இனி எங்கே தூங்குவது என்று தன் வண்டியை துடைத்துக் கொண்டிருந்தான். அந்த பக்கம் சஞ்சய் கல்லால் வண்டியில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தான்.
இன்று முழுவதும் வேலை செய்த ஆத்திரம் சரவணனை டென்ஷனாக்க .. ' "குட்டி பிசாசு.. நான் சுத்தமா வண்டி துடைச்சிட்டிருக்கேன்.. கிறுக்கி நாசமா பண்றே...? " பக்கத்தில் இருந்த ஷட்டில் பேட்டால் அவன் கை மீது அடித்தான்.
கையை உதறிய சஞ்சய்.. " மம்மி .." என்று அழ ஆரம்பித்தான். பதறிப்போய் சிவந்திருந்த கைகளை பற்றி தூக்கும் போது தான் பார்த்தான்... ' ஐ லவ் யூ டாடி... ' என்று அவன் தூசியில் கிறுக்கியிருந்ததை.
ஒரு நாளைக்கு நமக்கு பொறுமையில்லையே .. அர்ச்சனா தினமும் எவ்வளவு அன்பாக குடும்பத்தை நடத்துகிறாள்...
" சாரிடா.. செல்லம்.. தெரியாம அடிச்சுட்டேன்.. பதிலுக்கு நானே என்னை அடிச்சிக்குறேன்.." என்று பேட்டை தூக்க ,
"வேணாம் டாடி.. அப்புறம் உனக்கும் வலிக்கும்..." என்ற சஞ்சயை தூக்கி
அணைத்து கையில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்துக்கொண்டே ... "மம்மியைஅழைச்சிகிட்டு ஜாலியா ஓட்டலுக்கு போலாம் என்ன என்றான்.

( 21-05-2011 தினமலர்- பெண்கள் மலரில் வெளியானது)

Tuesday 15 May 2012

கவிதை

விழுவதும் எழுவதும்தான் வாழ்க்கை
ஏன் வீழ்ந்தோம், எப்படி எழுந்தோம்
என உணர்ந்தால் அதை அறிந்தால்
ஏற்றமோ இறக்கமோ என்றும் வாழ்வின்
மகிழ்ச்சி படிகளில் நாம் இருப்போம்....

Monday 14 May 2012

தவறு யாருடையது..?






நானும் என் தோழியும் ஒரு விசேஷத்திற்கு சென்றிருந்தோம். எங்கள் முன் வரிசையில் ஒரு கணவன்,
மனைவி இரண்டு குழந்தைகளோடு உட்கார்ந்திருந்தனர். குழந்தைகள் இருவரும் செல்போனில்
எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதேச்சையாக அவர்கள் வைத்திருந்த செல்போனை பார்த்து
அதிர்ந்தோம்.காரணம், செல்போனில் ப்ளூபிலிம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த குழந்தையின் தாயை
கூப்பிட்டு பார்க்க சொன்னோம். அவர் உடனே குழந்தைகளின் கையில் இருந்த செல்போனை
பிடுங்கி ஆப் செய்தார். குழந்தைகளையும் அடித்தார். செல்போனில் ப்ளூபிலிமை வைத்தது இவர்கள்
தவறு. தெரிந்தும் அந்த செல்லை குழந்தைகளிடம் கொடுத்தது அதைவிட தவறு. தவறுகள் எல்லாம்
இவர்களிடம் இருக்க குழந்தைகளை அடித்து என்ன பயன்..?

( 13-08-2011 தினமலர்- பெண்கள் மலரில் எங்கள் பக்கத்தில்)
சிறுகதை

கண் திறந்தது

" ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு... இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்....."
அவள் கையிலிருந்து சம்மட்டியை வேண்டுமென்றே உரசியபடி பிடுங்கி சலித்த மணலை அள்ளி கொட்டிவிட்டு பின்னால் நின்று அவள் இடுப்பை வெறித்து பார்த்து கொண்டிருந்த மேஸ்திரி
நல்லக்கண்ணுவின் மீது ஆத்திரமாய் வந்தது பொன்னிக்கு.
" பேருதான் நல்லக்கண்ணு... பார்வை எல்லாம் நொள்ளை' என மனதுக்குள் முனகிக்கொண்டாள்.
ச்சே.. கட்டினவன் ஒழுங்கா இல்லாம குடிச்சிட்டு திரியறதால வேலைக்குன்னு வந்து கண்டவன் கண்ணடி பட வேண்டியிருக்கு..."
இருக்கிற சித்தாள் பெண்களில் பொன்னி கொஞ்சம் போஷாக்காய் அழகாய் இருக்கவே, மேஸ்திரி அவள் இருக்கும் இடத்திலேயே வந்து சீண்டிக்கொண்டிருந்தான்.
"தாயே... மகமாயி. இந்த கேடு கெட்டவனுக்கு நீதான் நல்ல புத்தியை தரணும்... என் புள்ள குட்டிங்க பசி தீர்க்க , இந்த வேலையை விட்டா வேற வழி தெரியலை..." கண்களில் நீர் கொப்பளித்தது.
"ஏம்ப்பா மூர்த்தி.. அங்க பூச்சு சரியா இல்லப் பாரு..."
சாரத்தின் மேல் ஏறிய நல்லக்கண்ணு, மட்ட கோலால் தேய்த்துக்கொண்டே நகர.. கண்ணிமைக்கும்
நேரத்தில் கால் இடறி கட்டடத்திலிருந்து விழுந்துவிட்டான்.
பதற்றத்தோடு ஆஸ்பத்திரியில் சேர்க்க, பலத்த காயத்தில் நிறைய ரத்தம் வீணாகியிருந்தது. கட்டட ஆட்கள் நான், நீ என்று ரத்தம் தர முன் வர. பொன்னியின் ரத்தம் பொருந்தியிருந்து ஏற்றப்பட்டது.
கண் விழித்த நல்ல கண்ணு பொன்னியைப் பார்த்து,
" பொன்னி என்னை மன்னிச்சிடும்மா... நான் உங்கிட்ட தவறா நடந்ததை பொருட்படுத்தாம எனக்கு
ரத்தம் தந்து காப்பாத்தியிருக்கே ரொம்ப நன்றிமா..." என்றான்.
"பரவாயில்லைண்ணே... நீ உயிருக்கு போராடிகிட்டு இருக்கிறப்ப உன்னை நம்பி இருக்கிற உன் புள்ள குட்டிங்கதான் கண்ணுல தெரிஞ்சுச்சு... குடும்பத்தை காப்பாத்ததானே இம்புட்டு
கஷ்டபடுறேன்..." என்றாள்.
"தங்கச்சி, கொஞ்சம் மணலை வேகமா சலிச்சி போடு.. சாப்பிடலைன்னா.. ஏதாச்சும் வயித்துக்கு போட்டுட்டு வா.. இன்னும் இருபது நாள்ல இதை முடிச்சாதான் வாத்தியார் வீட்டு வேலையை

ஆரம்பிக்க முடியும்...." உடம்பு தேறி வந்த நல்லக்கண்ணுவின் பேச்சில் கண்ணியம் கூடியிருந்தது.
( க.எ.வா என்ற ஓவியத்திற்கான கதை தினமலர்- பெண்கள் மலரில் பிப்ரவரி-11, 2012 ல் வெளிவந்தது)

என் பக்கம்
மூட நம்பிக்கையால் முட்டுக்கட்டை


என் தோழியின் கணவர் வாஸ்து நம்பிக்கை அதிகம் உள்ளவர். அவர் வீட்டில் அடிக்கடி
மாற்றங்கள் பண்ணிக்கொண்டே இருப்பார். எந்த வீட்டிற்கு சென்றாலும் வாஸ்துபட் அது இப்படி
இருக்கவேண்டும் இது இப்படி இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். தோழியும்
அவர் கணவரும் ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். உங்க வீட்டு கிச்சன் சரியில்லை.. இங்கு
கிச்சன் இருந்தால் இந்த பிரச்சினை வரும் என்று அட்வைஸ் செய்தார். அதற்கு தோழி அவங்க
நல்லாத்தானே இருக்காங்க என்றாள்.
எனக்கு அவர்கள் பேச்சு அதிர்ச்சியாய் இருந்தது. என்னிடம் தெய்வ நம்பிக்கை உண்டு. மூட
நம்பிக்கைகள் கிடையாது.மூட நம்பிக்கைகள் வாழ்க்கையின் முட்டுக்கட்டைகள் . வீட்டை மாற்றி
கட்டுவதால் மட்டும் மாற்றம் வராது. நல்ல எண்ணம், கடவுள் நம்பிக்கை, நல்ல செயல்கள் இவைதான்
முன்னேற்றத்திற்கான மாற்றங்களை கொண்டு வரும்.
( அக்டோபர்-15 , 2011 தினமலர் - பெண்கள் மலர் எங்கள் பக்கத்தில் வெளியானது)

Wednesday 9 May 2012

வேலை





கடற்கரையில் உட்கார்ந்து அலைகளையே வெறித்துக்
கொண்டிருந்தான் வினோத். பாக்கெட்டில் வைபரேஷன் மோடில்
இருந்த மொபைல் கிர்...கிர்ர்.. என்றது.
அம்மாதான் ஆறாவது முறையாக போன் செய்கிறாள். 'ப்ச் ' என்று
சலித்துக்கொண்டே செல்லை ஆப் செய்துவிட்டு வேடிக்கை
பார்த்தான்.
நாய் பொம்மையை கையில் இடுக்கிக் கொண்டு அலையை நோக்கி
பயமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த அந்த வாண்டுவை அதட்ட
முதுகை காட்டி பேசிக்கொண்டிருந்த அந்த ஜோடி.. வேகமாக வந்து
குழந்தையை பிடித்தார்கள்.
" ஏய்.. சுமதி சுண்டல் திங்கறதுலயே இரு.. குழந்தையை ஒரு பார்வை
பார்த்திட்டிருக்ககூடாது..? திட்டிக்கொண்டே திரும்பிய அவன்

வினோத்தை பார்த்ததும் ஆச்சரியத்துடன்,
" ஏய் மச்சான் நீ வினோத் இல்ல...? " கேட்டவனை எங்கோ பார்த்த
மாதிரி இருந்தது.
தொடர்ந்து அவனே, " நான் ' பாலு ' ப்பா... எட்டாம் கிளாஸ் வரை
தாம்பரம் கவெர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சோமே.. ஞாபகமில்லையா...?"
கணக்கு வாத்தியாரிடம் தினம் பிரம்படி வாங்கி கொண்டிருந்த
பாலுவா இவன்..? முகம் மட்டும்தான் சாயல் தெரிந்தது.
ஒல்லிப்பிச்சானாட்டம் இருந்தவன் வாட்ட சாட்டமாய் மாறி
இருக்கிறான்... கையில் பிரெஸ்லெட்டும்.. கழுத்தில் மைனர் செயினும்
அவனை கிராமத்தானாய் காட்டியது.
"ஹேய் ... இது கனவா... நினைவா.. பத்து வருஷத்துக்கு அப்புறம்
உன்னை பார்க்கிறேன்.. சட்டுனு புரியலை..."
" அது சரி.. நான் கடைசி பென்ச். நல்லா படிக்கிற உனக்கு என்
ஞாபகமெல்லாம் இருக்குமா ?..."

"ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீ ஸ்கூலை விட்டு நின்ன பிறகு
உன்ன பத்தி தெரியாமயே போயிடுச்சி எங்க இருக்க...? என்ன வேலை
செய்றே...?"
"க்கும்... நானென்ன உன்னாட்டம் நல்லா படிச்சேனா...? ஆபிசரு
உத்தியோகம் பார்க்க...? நம்ம ராமசாமி வாத்தி என்னை அடிச்சி
அடிச்சி பார்த்துட்டு.. ' டேய் உனக்கு படிப்பே வராதுடா.. மாடு
மேய்க்கதான் லாயக்குன்னு திட்டிட்டே இருப்பாரு இல்ல..
எங்கப்பாவும் வெறுப்பாயி ஒரு நாள் கிராமத்துல இருக்கிற என்
அத்தை வீட்டுக்கு துரத்தி விட்டுட்டாருடா.. அங்க நிஜமாவே
ரெண்டு மாடு மேய்ச்சேன்... தெரு தெருவா சைக்கிள்ல பால்
வியாபாரத்தை தொடங்கி இப்போ திருச்சியில பெரிய ' டெய்ரி
பண்ணை வச்சிட்டிருக்கேன்.அத்தை பொண்ணோட கல்யாணம்..
நல்ல வருமானம். வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு.. நாம படிச்ச
ஸ்கூலுக்கு ஏதாவது செய்யனும்னு தோணுச்சி. அதான் இங்க
வந்தேன். அது சரி.. என்னை பத்தியே பேசிட்டிருக்கேன்.நீ என்ன
பண்றே.. கல்யாணம் ஆயிடுச்சா..?
" உங்கப்பா நல்லவருடா.. அப்பவே நல்ல வேலை செஞ்சார்..
எங்கப்பா என் லைப்பையே கெடுத்திட்டாருடா... படி...படின்னு
இன்ஜினியருக்கு படிக்க வைச்சிட்டு.. இப்ப நாய் மாதிரி கம்பெனி
கம்பெனியா ... ஏறி இறங்கிட்டிருக்கேன். ' மொக்க பிகர் ' கூட என்னை
திரும்பி பார்க்க மாட்டேங்குது.. கல்யாணம் ஆயிடுச்சான்னு கேள்வி
வேற கேட்கிற..."

புலம்பியனை பார்த்து என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ...."
சரிப்பா.. திருச்சி வந்தா என் வீட்டுக்கு வா.. இதான் என் விசிட்டிங்
கார்டு.. " கொடுத்து விட்டு சாலையோரம் நிறுத்தியிருந்த காரில்
ஏறிக்கொண்டார்கள்.
" .. இது வேறயா...? டேய் அப்பா பேசாம எனக்கு ரெண்டு மாடு
வாங்கி தந்திருக்கலாம்லே...' கோபமாக தானாக பேசிக்கொண்டு
மணலை காலால் தள்ளிவிட.
" பாவம் டி.. லூஸூ போல இருக்கு...'!" அவனை கடந்து சென்ற
இரண்டு சுடிதார்கள் பேசிக்கொண்டது.

(மே 4 - 10 , 2012 பாக்யா இதழில் வெளியானது)