Friday, 14 September 2012

“ வசந்த விழா…!”



விநாயகர்  சதுர்த்தி விழா.. வசந்தம் நகரில் இளைஞர் குழு சுறு சுறுப்பாக செயல் பட்டு கொண்டிருந்தது. ஏரியா முழுக்கும் வசூல் வேட்டை நடத்தியவர்கள்  இனியவன் வீடு வந்ததும் தயங்கி    நின்றார்கள். இனியவன் தீவிர நாத்திகவாதி.. கோயில் குளம் என்று வந்தால் விரட்டாத குறையாக பேசி அனுப்புவார். அவர் மனைவி அப்படி இல்லை, ஆன்மிக ஈடுபாடு அதிகம். அதனால் இனியவன்  இல்லாத   நேரமாக டொனேஷன் கேட்டு போவார்கள். அவர் இல்லை என்று நினைத்துதான் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்கள்,
இனியவன்  தான் திறந்தார். “வாங்க ஸார்வாங்கஎன்ன விஷயம் எல்லாரும் கும்பலா வந்திருக்கிங்க..?”
ஸார் விநாயகர் சதுர்த்தி வருதில்ல அதான்.. வந்தோம்…” தயங்கினார்கள்.
அதுக்கு நான் என்ன பண்ணனும்..?”
வருஷா வருஷம் விழா  நடத்துகிறோம்…   நம்ம ஏரியா ஒவ்வொரு வீட்லயும் ஆயிரம் ரூபா போடறோம்..   நீங்களும் மறுக்காம தரனும்..!”
அது சரி .. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் கரெக்டா பதில் சொல்லிட்டீங்கன்னா.. இரண்டாயிரம் ரூபாயே தர்றேன்..  இது எத்தனையாவது பிறந்த  நாள்…? சொல்லிட்டு வாங்கிட்டு போங்க…”
வந்தவர்கள் நெளிந்தார்கள்..இனியவன் மனைவி நளினி அவர்களிடம் கண்களாலேயே ஸாரி சொன்னாள். “ சரிங்க ஸார் நீங்க கொடுக்காட்டியும் பரவாயில்ல.. இப்படி நக்கல் பண்ணி மத்தவங்க மனசை புண்படுத்தாதிங்க…” கிளம்பினார்கள்.
வெளியில் போனவர்கள் , “ ஏம்ப்பா இதுக்குதான் இந்த ஆள் வீட்டுக்கு போக வேண்டாம்னு முன்னேயே சொன்னேன்இவரு இப்படி பேசிகிட்டிருக்கிறதாலதான்  அந்தம்மா வயித்துல புழு பூச்சி இல்லாம  ஊரான் குழந்தையை எல்லாம் ஏக்கமா பார்த்துகிட்டிருக்கு… “
நளினியின் காதில் லேசாக விழுந்தது.. கண் கலங்கியது, “ என்னங்க உங்களுக்கு புடிக்கலைன்னா விட்டுடங்க.. எதுக்கு வர்றவங்க கிட்ட எல்லாம் உங்க புத்திசாலித்தனத்தை எல்லாம் காட்டறிங்க…”
“  ஆமா பாரு நானா போய் அவங்ககிட்ட என் பிரசங்கத்தை வச்சிகிட்டேன்.. எங்கிட்ட கேட்டா இப்படிதான் சொல்வேன்..   நீ வேணா போய் கொடுத்துக்கோ நான் என்ன உன்ன தடுக்கறேனா…?
நீங்க இப்படி பேசறதாலதான் நமக்கு குழந்தையே இல்ல…”
“  நான் பேசறதுக்கு  நீ எப்படி பொறுப்பாவே…?  நீ நல்லாத்தானே பக்தியா இருக்கே.. உன் மேல ஏன் கருணை வரலை..?
போங்க.. எவ்வளவோ சம்பாதிக்கிறோம் நாலு பேரோடு நீங்களும் கொடுத்துட்டு போக வேண்டியதுதானே.. பேர்லதான் இனிமை.. பேசறதெல்லாம் கசப்பா…”
“  நளினிஉண்மையை சொன்னா யாருக்கும் கசப்பாதான் தெரியும்.. நாலு பேரோடு நானும் ஒண்ணா கொடுத்துட்டு போகிறேன்ஆனா   நான் சொல்ற விஷயத்துக்கு அந்த நாலு பேரும் முன்ன வருவாங்களா..?  இங்க பக்கத்துல இருக்கிற ஸ்கூலை பாரு வெளிச்சம் கூட இல்லாம குழந்தைங்க அவஸ்தை படுதுலைட்டே இல்ல.. அதுல ஃபேன் வேற எங்க  இருக்கும்.. பக்கத்துலயே கழிவு நீர் கால்வாய் .. பகல்லயும் கொசுத்தொல்லை அதிகமா இருக்கும். இந்த ஸ்கூலுக்கு வெள்ளை அடிச்சி, ட்யூப் லைட், ஃபேன் போட இருபதாயிரம் வேணும்.. யாராவது கேட்டா தருவாங்களா… “
ம். அது கவர்மெண்ட் ஸ்கூலுதானே.. நாம ஏன் போடனும்..?”
அரசாங்கம் வசதி பண்ணமுடியலைன்னாவருமானம் வராத எடத்துல செலவு பண்ணலை ..நாம ஏன் அரசியல் வாதியை நம்பனும்..?  அதுல படிக்கிறது வசதி கொறஞ்ச பசங்கதான்..  நாமளே ஓண்ணாயிருந்து இந்த மாதிரி   நல்ல விஷயங்களை பண்ணா என்ன..?”
என்ன வேணா பண்ணுங்க..  கடவுளை மட்டும் பழிக்காதிங்க.. “
காலையில் நான்கு மணிக்கே ஸ்பீக்கரில் பாட்டு ஒலித்தது தெருவெங்கும் மாவிலை தோரணங்கள்.. வெளியில் வந்த நளினி தெருக் கோடியில்  பெரிய சிலை வைத்து கோலகலாமாயிருந்த விழாவை கண் குளிர பார்த்தவள், ‘ பகவானே அவர் எது சொன்னாலும் எனக்காக மன்னிச்சிடுப்பா.. அவர் மனசை நீதான் மாத்தனும்..” கன்னத்தில் போட்டுக் கொண்டாள்
நளினி அந்த பக்கமே பார்த்துகிட்டிருக்கியேகொஞ்சம் திரும்பி அந்த ஸ்கூலை பாரேன்.. “
திரும்பியவள்  ஆச்சரியப்பட்டு போனாள், ஸ்கூல் முழுதும் பளிச்சென வெள்ளை அடித்து ட்யுப் லைட் அங்கங்கே பிரகாசித்து கொண்டிருந்ததுமெரூன் கலரில் ஃபேன் கள்  ஒவ்வொரு வகுப்பறையிலும்  தொங்கி கொண்டிருந்தது ஜன்னல் வழியாக தெரிந்தது.
நீ எனக்கு தெரியாம கோவிலுக்கு பண்றே.. நானும் உனக்கு  சொல்லாம இந்த விஷயத்தை பண்ணிட்டேன்  நம்ம  காசுல.. என்ன செலவு கொஞ்சம்  ஜாஸ்திதான்.. இருந்தாலும்  நமக்கு குழந்தை பொறந்திருந்தா அத படிக்க வைக்க வருஷத்துக்கு லட்ச கணக்கா செலவு பண்ணியிருப்போம்லமத்த குழந்தைகளுக்காக இருபதினாயிரம் தர்மமா பண்ணதில ஒண்ணும் தப்பில்ல…”
அய்யா ..  உங்களுக்கு பெரிய மனசுங்கநீங்க  நல்லாயிருக்கனும்..! என் புள்ளைங்க நாலும் அங்கதான் படிக்குது…”  தெருவில் காய் விற்று கொண்டு போகும் குப்பம்மா கை கூப்பி சொல்லிவிட்டு போனாள்.
 நளினி, தன்  கணவனையே பார்த்து கொண்டிருந்தாள்.. “ ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்…”  வீட்டில் முகப்பில் அவர் ஒட்டி வைத்திருந்த வாசகத்தை  கண்களால் காட்டினார். அதன் அர்த்தம்  இப்போது புரிந்தவளாய் அவளும் மெல்ல தலையசைத்தாள்

இரும்பு, பிளாஸ்டிக்…. எது வேணும்..?
 




      நமக்கு முன்னோர்கள் உரல்ல மாவரைச்சி , கிணத்தில தண்ணி இறைச்சி துணி துவைச்சி..  விறகடுப்புல சமைச்சி மாங்கு மாங்குன்னு வீட்டு வேலை செஞ்சு இருக்காங்க…  இப்ப நம்மால எல்லாத்துக்கும் மிஷின் என்றாலும் வேலை செய்ய முடியாம சலிச்சுக்கிறோம். இதற்கு நாம ஒரு சாக்கு வேற சொல்லிக்கிறோம்அந்த காலத்து உடம்பு நல்லா ஸ்டார்ங்..ப்பா .. அவங்க சாப்பிட்டா மாதிரியா நாம சாப்பிடறோம்… ? அவங்களுக்கு வேற வேலை இல்லஇப்ப மிஷின் லைப் பில் நாம எவ்வளவு விஷயம் கவனிக்க வேண்டியிருக்கு..? சரிதான்.. விஞ்ஞான வளர்ச்சியில்   நமது நேரத்தை மிச்சப்படுத்த கூடிய விஷங்களை பயன் படுத்தி கொள்வது புத்திசாலித்தனம் தான். அவங்க மாட்டு வண்டியில போனாங்கஇப்ப மாட்டு வண்டியில போனா ஆபிசில் இன்னிக்கு போட வேண்டிய அட்டெணன்ட்ஸை மறு  நாள்தான் போடமுடியும். ஆனா ஆரோக்கியம்…? அறுபது வயசுக்கு மேல கடைபிடிக்க வேண்டிய டயட்டை இப்ப இருபது வயசுக்கு மேலயே கடைபிடிக்க வேண்டியதாயிருக்கே..? அந்த காலத்து மனிதனோ, இந்த காலத்து மனிதனோ உடம்பு எல்லாருக்கும் ஒரே விதமாதானே இயற்கை படைச்சிருக்கு…?  அந்த காலத்தில மெட்டல் உடம்பும், இந்த காலத்தில் பிளாஸ்டிக் உடம்புமா இயற்கை மாத்திடுச்சி. நாம கடை பிடிக்கிற வாழ்க்கை முறைகள் தான் நம்ம உடம்பை வலிமை இல்லாததாக மாற்றி கொண்டு வருக்கிறது. உணவு, உழைப்பு.. ஓய்வு இப்படி பல விஷயங்கள்ல நாம முன்னோர்களிடமிருந்து மாறுபட்டிருக்கோம்.
90 வயது கடந்த ஒரு பெரியவரைஎப்படி  இந்த வயது வரை இவ்வளவு நலமுடன் இருக்கிற ரகசியம் என்ன ?’என்று கேட்ட போது, அதற்கு அவர்

ஓரடி நடவேன்
ஈரடி கிட வேன்
இருந்துண்ணேன்
கிடந் துறங்கேன்
என்றார்இதன் அர்த்தம் நடந்து சென்றாலும், தன் அடியில் தன் நிழல் இருக்கும் உச்சி பொழுதில்  ஒரு வழியும் நடக்க கூடாது. ஈரமுள்ள இடத்தில் படுக்க கூடாது , முன்பு உண்ட உணவு செரிப்பதற்கு முன் உண்ணக்கூடாது, அயர்ந்த நேரம் தவிர மற்ற வேளைகளில் உறங்கி கிடக்க கூடாது.
உச்சி பொழுது மட்டுமில்ல.. எந்த பொழுதுமே நமக்கு வீட்டை விட்டு இறங்கிட்டா அடுத்த   நடை ஒரு டூ வீலரையோ..   த்ரீ வீலரையோ.. போர் வீலரையோ     நோக்கிதானே…!  அயர்ந்த நேரம்          என்ன…  லீவு   நாள் பூரா படுக்கையில் கிடந்து கிட்டே ஸ்நாக்ஸ் வித் டி.வி  தானேஇப்படி எல்லாம் சோம்பேறியா இருக்கிறவரை பிளாஸ்டிக் உடம்புதான்…!


 கவிதை
பேச்சுலர் அரண்மனை


கலைந்த பொருட்களில்
இறைந்து கிடக்கும் கலை நயம்
தினசரிகளில் ஜன்னலாய்
தெரியும்..
வேலைவாய்ப்பு செய்தி
கிழித்த பக்கங்கள்..!

நேர்முக  தேர்வின் கதவடைப்பு
‘ப்ச்’ ஒற்றை சொல்லோடு புகையும்..!

வாரமொரு முறை
ஊரிலிருந்து தவறாத அழைப்புக்கள்
என்னப்பா என்ற அம்மாவின் விசாரிப்பில்
வேலை கிடைத்து விட்டதா கேள்வியும்
எப்பண்ணா வருவே தங்கையின் பாசத்தில்
பிடித்ததை கேட்க முடியாத தவிப்பும்…
மறைந்து கிடக்கும்..!

எதோ ஒரு நண்பனுக்கு
வேலை கிடைக்கும்..
உங்களுக்கும் நல்ல வழி கிடைக்கும்
ஆறுதல் சொல்லி கிளம்புவான்..!

அறையின் வருகை பதிவேடு
அடுத்த நாளே
இன்னொருவனை சேர்க்கும்..!.

அவர்களுக்கான உலகம்
இருந்து கொண்டேயிருக்கும்,
புதுப் பட பாட்டு,
விலை வாசி உயர்வு
குடும்ப சுமை
சைட் அடித்த பெண்..
சுமைகளோடு கழிந்தாலும்
சுகங்கள் இருக்கத்தான்
செய்யும்…
சூரியனும்.. சந்திரனும்
அவர்களை துரத்துவதில்லை..
அவர்கள் ராஜாக்கள்…!



கவிதை:
“ கண்ணீர்ப் புகை….! “
ஒவ்வொரு தீபாவளியும்
 நினைவு படுத்துகிறது…

மத்தாப்பு  மழலைகளின்
மரண ஓலங்களையும்
காகித சிதறல்களாய்
கருகிய உடல்களையும்...

அவர் வாழ்க்கையின் வாடிக்கை
கண்ணில் கனத்து போனதால்
வானத்தின் வேடிக்கை வெறுத்து போனது..

தேர்தல்… கிரிக்கெட்…
கல்யாண ஊர்வலம்…
வெற்றியின் வெடிச் சத்தத்தில்..
ஒளிந்து கொண்டிருக்கும்
ஒரு சாண் வயிறுக்காய்
தோற்றுப்போன வறுமையின்
விம்மல்…!

இறுதி யாத்திரைக்கும்..
இங்கே வெடிக்கும்-
அதுவே இறுதியாய் போன
அவர் யாத்திரைக்கு
அழுகையல்லவா வெடிக்கும்..

கந்தக புகை கண்ணீர் புகையாகி
மேகத்தில் கலந்து
கண்களில் அல்லவா கொட்டுகிறது

உழைத்து பிழைக்க
வழி எத்தனையோ..
பிழைத்து சாவதுதான்
சிவகாசி  உயிரின் சாபமோ..?

ஒவ்வொரு தீபாவளியும்
நினைவு படுத்துகிறது..

அசுரன் அழிந்ததை அல்ல….

அப்பாவி உயிர்களை இழந்ததை...!
 (பட்டாசு ஆலையில் பலியான அப்பாவி உயிர்களை நேற்று செய்தி தாளில் படித்து என் பேனா வடித்த  கண்ணீர் மை..)
உணவு பொருள் வீணாக்குவது பற்றி ஸ்ரீ சொல்லியிருந்தார் .    உணவு பொருள் வீணாக்கும் போது பணம் வீணாவதோடு,  எத்தனை பேரின்   உழைப்பும்  சேர்ந்து வீணாகிறது..? திருமண விருந்தில் ஆட்கள் அமருமுன்னே இலையில் அத்தனை வகையறாக்களையும்  வைத்து விட்டு போய் விடுகிறார்கள்.. இதனால் நிறைய வீணாகிறது. இந்த மாதிரி பந்தா எதற்கு? உடம்பு வேண்டுமானால் சுமக்க முடியாமல் 100 பவுன் நகையை மாட்டிக்கொண்டு அந்தஸ்தை காண்பிக்கலாம்… ஆனா வயிறு 100 அயிட்டத்தை ஏற்றுக்கொள்ளாது . அதற்கு தேவையான அளவுதான் அது ஏற்றுக்கொள்ளும் .  தேவைக்கு மீறி திணிச்சா வாமிட் தான். யோசிச்சு பார்த்தா   நம்ம உடம்புல இருக்கிற  உறுப்புகள்லே வயிறு  நல்ல குணமான புள்ள… தேவைக்கு மீறி ஆசைப்படறதில்லை.. கைவிரல்ல  பத்து மோதிரம் போட்டுகிட்டாலும் போட்டுக்குது… கழுத்து வலிச்சாலும்   நாம் எவ்வளவு மாட்டிக்கிட்டாலும் போட்டுக்குது.. கண் இருக்குதே அது இன்னும். .. பார்க்கிற எல்லாத்துக்கும் ஆசைப்படும்.  ஸோ வயிறோட மனசறிந்து உபசரிப்பு இருந்தா போதாதா…? ஒரு சில கல்யாணங்கள்ல  கொஞ்சமா தேவையான அயிட்டம் போடுவாங்க… ஆனா எதுவுமே வீணாகாமே கடைசி வரை யாருக்கும் இல்லை என்று குறை வராமல் கிடைக்கும்.  அந்த மாதிரி விருந்துதாங்க ஒஹோ..!  ஆனா நம்ம சனங்க என்ன தெரியுமா பேசிகிட்டு போவாங்க.. “ க்கும்.. அப்படி ஒண்ணும் பிரமாதமில்ல.. சிம்பிளாதான் போட்டான்… ன்னு ..! ( அதுக்காக கிராண்டா  இட்லி, பொங்கலை தங்கத்துலயா செய்ய முடியும்…? என்ன சிம்பிளோ…? என்ன கிராண்டோ…? போங்க…   உலகம் ஜிகினா வாழ்க்கையில தான் போயிட்டிருக்கு…!    தேவையான அளவு இருந்தால் கூட மேலும் மேலும் ஆடம்பரத்துக்குதான் ஆசைப்படறாங்க.. ஆசைப்படறதை ஏன் வேற மாதிரி ஆசைப்படக் கூடாது..?  அறிஞர்கள் மாதிரி வாழ்ந்து  நாளைய தலைமுறைக்கு உதாரணமா வாழ  ஆசைப்படலாம்ல . வரலாற்றில இடம் புடிக்கலாம்ல..  அத எல்லாம் விட்டுட்டு  பணம் பணம்… னு ஏன் ஆசை படனும்..? ஒரு கதராடைதான்  வாழ்நாளுக்கு பிறகும் வரலாற்றில மகாத்மான்னு வாழ்ந்திட்டிருக்கு…!  உலகி  அழகி ஐஸ்வர்யவோ…  அம்பானியோ  எப்பவும் பேச பட போறதில்லை…  அவரை விட அழகியும்…  அவரை விட பணக்காரரும் வரும்போது பட்டியல்ல முத வரிசையிலிருந்து அடுத்த வரிசைக்கு போயிடுவாங்க.  வாழ்கிற வாழ்க்கையில் கொள்கை, இலட்சியம் … சமுதாய  தொண்டு நிரம்பி இருக்கும் போது அவங்க வரலாற்றிலே நிலைச்சி    இருப்பாங்க.  அவங்களோட தனித்தன்மை அப்படியே இருக்கும். !