"சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம
இருந்தா எப்படி...?" - கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார்.
இருவரும் ஒன்றாகவே பணி புரிந்தவர்கள்.ஓய்வு பெற்ற பிறகும் நல்ல
நண்பர்களாக இருப்பவர்கள்.ஒருவர்க்கு தெரியாமல் இன்னொருவர்
குடும்பத்தில் எதுவும் நடந்ததில்லை.தினமும் யாராவது ஒருவர்
வீட்டில் சந்திப்பு இருக்கும்.சில சமயம் இப்படி காந்தி பூங்காவிற்கும்
வருவதுண்டு.
பூங்காவில் செடிகளை கத்தரித்து கொண்டிருந்த முனிசாமி " வணக்கம் சாமி" என்றார் கேசவனை பார்த்து.பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார். கும்பிடு போட்டுவிட்டு அவர் நகர்ந்தார்.
"பார்த்தியாப்பா....முனிசாமிக்கு படிப்புமில்லை..ஆசையுமில்லை..போர்த்திக்க ஏதோ ஒரு துணி... கிடைச்சா சாப்பாடு...அதோடு சரி... நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் தான்..கவலை..சந்தோஷம்னு மாறி .. மாறி அலைக்கழிஞ்சிட்டுருக்கோம்..கேசவா..." -சண்முகத்தின் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது
.........வீட்டை வாங்கினவ வர்ற வெள்ளிக்கிழமை ரெஜிஸிட்ரேஷன் பண்ணிக்கறாங்களாம்...காலிபண்ண அஞ்சு மாசம் டைம் தந்திருக்காங்க..சாரதா முகத்தை என்னால் பார்க்கவமுடியலைப்பா...பிள்ளைங்க....பிள்ளைங்க....அவளுக்கு ஒண்ணுமே செய்யலே......"- சொல்லும் போதே அழுதுவிட்டார்.
"என்னப்பா இது..சின்ன குழந்தையாட்டம்...ப்ச்...அழாதேப்பா...என்னத்தை
சொல்ல...பெத்தகடன்...ம்..விட்டு தள்ளு..தைரியமாஇருக்கணும்பா...கடனெல்லாம்
அடைச்சுட்டு நிம்மதியா இரு..நாந்தான் என் வீட்டுமாடி போர்ஷனில்
இருந்துக்கலாம்னு சொல்றேன்ல...."
" இப்படி ஆறுதலா பேச..உதவ நீ இருக்கிறது சந்தோஷம்தாம்பா...
ஆனாலும்........
"என்ன ஆனா... ஓனான்னுட்டு...போனது போகட்டும் விடுப்பா..."
" அது இல்லப்பா ...எம் புள்ள மாதிரி இல்லாம உன் பையன் நல்ல
பாசமானவன்..பையன், மருமக.. பேரக்குழந்தைகள்னு சந்தோஷமா
ஒண்ணா இருந்த்துகிட்டிருக்கிற உங்க குடும்பத்திலே எங்களாலே எந்த பிரச்சினை வந்துடக்கூடாதேன்னுதான் என் கவலை...அதான்... உன் வீட்டு பக்கமா குறைஞ்ச வாடகைக்கு சின்னதா ஒரு வீட்டை பார்த்து வைப்பான்னு சொல்றேன்..."
" ரேவதிக்கு சொல்லிட்டியா...?"
" ம்... பொண்ணு இல்லையா , நான் சொன்னதுமே 'ஓ'.. ன்ணு
அழுவுது..." அப்பா எங்க வீட்டுக்கு வந்திடுங்கப்பா ன்னு
கெஞ்சுறா...அவ நல்லா பார்த்துப்பா ... ஆனா அவ சூழ்நிலை
நமக்கு தெரியுமில்லையா...? படிப்பு ஏறாததாலே அவளாலே
வேலைக்கும் போக முடியலே...இதை குத்தி காட்டியே அவ
மாமியார் பாடாத பாடு படுத்திட்டிருக்கா...சண்டை போட்டு வந்தா
எங்களுக்கு பாரமாயிடுமேன்னுதான் சகிச்சிகிட்டு அவ அங்கேயே
இருந்துகிட்டிருக்கா......ம்...நான் இந்த வீட்டைக் கட்ட எவ்வளவு
சிரமப்பட்டிருப்பேன்...? அதைல்லாம் எம் பையன் ரமேஷால
எப்படிப்பா
எப்படிப்பா
மறக்க முடிஞ்சது...? என்னோட சம்பாத்தியம் மட்டுமா..சாரதாவோட
கஷ்டமும் சேர்ந்து தானே இந்த வீடா மாறிச்சு...? அவ எப்படில்லாம்
கஷ்டப்பட்டா..? ஊறுகா..அப்பளம் போடறது, துணி தைக்கிறதுன்னு
கை வலிக்க உடம்பு நோக வேலை செஞ்சு அவளும் உழைச்சி,
வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சேர்த்த பணத்தில்தானே ...இந்த வீடு
வந்துச்சு..ம்...?
" சண்முகம் போனது பத்தியே சும்மா பேசிட்டிருக்காதே... வீடு
போனா என்ன வாழவே முடியாதா என்ன..? உனக்கு வற்ற பென்ஷனை
வச்சி காலத்தை தள்ளிடலாமே..? ம்.. வீட்டுல தங்கச்சி தனியா இருந்து
நொந்துகிட்டிருக்கும்...நேரத்தோடு வீட்டுக்கு போ...நீயும் புலம்பி
அவ மனசை நோகடிக்காதே...சமாளிச்சுக்கலாம்னு நீதான்..அவளுக்கு
தைரியம் சொல்லனும்...பார்த்துக்க..."
வழக்கமாக ஒரு டி.வி நிகழ்ச்சி பார்த்து கொண்டிருக்கும் சாரதா..லேசான
விளக்கொளியில்.. சோர்ந்து போய் படுத்திருந்தாள்.
கண்ணீர் முட்டியது சண்முகத்திற்கு. கேசவன் சொன்னது
ஞாபகத்திற்கு வர..சட்டென.. தன்னை அடக்கி கொண்டார்." சாரதா..ஏன்
படுத்திருக்கே..? எழுந்திரும்மா..கவலைப் பட்டு என்ன ஆக
போகுது...? நேரமாச்சுல்லே... சாப்பிடலாமா...?" ஆறுதலாக கேட்டார்.
எழுந்த சாரதா , கிச்சனுக்கு போய் தட்டில் இட்டிலிகளுடன்
வந்தாள்.அவர் முன் வைத்தவள் அமைதியாய் அமர்ந்தாள்.
" நீயும் சாப்பிடும்மா..."
வேண்டாம் என்பது போல அவள் தலை அசைக்க, "சாப்பிடாம
இருந்து உடம்பை கெடுத்துக்காதே..உனக்குன்னு நான் எதுவும்
செய்யலைதான்...உனக்கு தர்றதுக்கு உயிரை தவிர எதுவும்
இல்லேம்மா..." என்று தழு தழுத்தார் சண்முகம்.
சட்டென அவர் வாயை மூடியவள்..., " எனக்கு உங்களைவிட பெரிய
சொத்து எதுவும் இல்லீங்க..." கண்ணீர் விட்டாள்.
நமது கஷ்டம் பிள்ளைங்களுக்கு தொடர்ந்து விடகூடாது என்றுதான்
சாரதா நினைத்தாள்.
வீட்டு லோன் அடைந்து வந்த வேளையில்.. ரமேஷின் படிப்பு செலவு
கண்ணை கட்டியது. " கடன் வாங்கியாவது நல்லா படிக்க வைச்சி
நல்ல வேலையில ஏற்றிவிட்டுடணும்ங்க...." என்று சண்முகத்திடம்
சொன்னாள். அவனும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தான்.தங்கை
ரேவதியின் திருமணத்திற்கு ஆபிசில் லோன் போட்டு உதவுவான்
என்று அவர்கள் எதிர்பார்த்த போது ,'லோன்லாம் கிடைக்காது.."
என்று கையை விரித்து ஒதுங்கி விட்டான். ஆற்றமை நெஞ்சை
அடைத்தாலும்..எப்படியோ திருமண செலவை சமாளித்தனர்.
அடுத்த ஆண்டிலேயே ரமேஷுக்கு திருமணம் செய்து
வைத்தனர்.மருமகள் மது படித்தவள்.. வேலைக்கு செல்பவள்.தனி
குடித்தனம் சென்ற ரமேஷிடமிருந்து நாளடைவில் போன் பேச்சுக் கூட
குறைந்து விட்டது.எப்போதாவது பேசுபவன் , ஒரிரு வார்த்தைகளிலே
பேச்சை முடித்து விடுவான். அப்போது கூட , " வாங்களேன்
வீட்டுக்கு ..." என்று ஒப்புக்கு கூட ஒரு வார்த்தை வராது. சண்முகம்
ஓய்வு பெற்ற பின் அவனுடன் சேர்ந்து வசிக்கலாம் என்ற ஆசையை
மனதுக்குள்ளேயே புதைத்தாள்.
ரமேஷிற்கு சொந்த வீடு வாங்கும் ஆசை வர, வீடு தேடி வந்து
சாரதாவிடம் குழைந்தான்." அம்மா நல்ல இடத்திலே சூப்பரான வீடு
ஒண்ணு விலைக்கு வருது. நானும் மதுவும் லோன்
போட்டிருக்கோம். அது பத்தாது...மீதி பணத்துக்கு என்ன
பண்றதுன்னே புரியலை... அப்பா கிட்ட சொல்லி இந்த வீட்டு
பத்திரத்தை அடமானம் வச்சி பணத்தை புரட்டி தந்திங்கன்னா..அந்த
வீட்டை வாங்கிடுவேன்மா..."
நெகிழ்ந்த சாரதா , சண்முகத்திடம் சொல்லி வீட்டு பத்திரத்தை
அடமானம் வைத்து பணம் வாங்கி கொடுத்தாள்.சந்தோஷமாக வாங்கி
சென்றவன்...சென்னையில் வீடு வாங்கி செட்டிலானான்.பிறகு கண்டு
கொள்ளவேயில்லை...வீட்டு அடமானத்தை அப்பாவின் சொற்ப
பென்ஷனில் எப்படி திருப்புவார் என்ற எண்ணமே இல்லாத கல்
நெஞ்சக்காரனாகிவிட்டான்.
லோன் அடைக்க சிரமப்பட்ட சண்முகம் போன் போட்டு அவனிடம்
கேட்ட போது குண்டை தூக்கி போட்டான்..." அப்பா நாங்க நம்ம
ஊருக்கு வரப்போறதில்லே..எதுக்கு அந்த வீடு லோனுக்கு
வட்டி கட்டி திருப்பறதெல்லான் வேஸ்ட்...வீட்டை வித்து கடனை
அடைச்சுடுங்க...." என்றான் சர்வ சாதரணமாக.
இதை சண்முகமும் சாரதாவும் எதிர்பார்க்கவேயில்லை.ரமேஷை நம்பி
பிரயோஜனமில்லை..என்று தீர்மானித்தவர்கள்..வீட்டை விற்கும்
முடிவுக்கு வந்தனர்.
பலத்த இடியுடன் மழை தொடங்கியது.
" ஏங்க ... ஞாபகமிருக்கா உங்களுக்கு...நம்ம வீட்டுக்கு அஸ்திவாரம்
போடறப்ப..இதை போல பயங்கர இடியோட மழை கொட்டோ
கொட்டுனு கொட்டிச்சே...?அஸ்திவாரத்திலே தேங்கின தண்ணியை
நீங்களும் .. நானும்.. மாங்குமாங்குன்னு..மொண்டு மொண்டு
வெளியே கொட்டினோமே...? அப்ப நம்ம ரமேஷிற்கு ... ஆறு
வயசு.." அப்பா கட்டற வீடு மழையில் கரைஞ்சுடக்கூடாது
சாமின்னு ...பிள்ளையார்கிட்ட அழுதானே...மனசுக்குள்ள கஷ்டம்
நிறைஞ்சிருந்தாலும், அவனோட குழந்தைதனத்தை பார்த்து நாம
சிரிச்சோமே... ?? ம் ... எப்படி எல்லாம் கஷ்டபட்டோம் இந்த வீட்டை
கட்ட...ப்ச்...- பழைய நினைவுகளை கொட்டினாள் சாரதா.
" பழசையே பேசிட்டுருக்காதே...வீட்டை பற்றியே
பேசிட்டிருந்தா...கவலைதான் ஜாஸ்தியாகும்..அதான் முடிஞ்சி
போச்சே..விட்டு தள்ளும்மா... நடக்கிறதுதான் நடக்கும்...படுத்து
தூங்குமா..."- சாரதாவிடம் இப்படி சொல்லிவிட்டாரே தவிர,
சண்முகத்திற்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை.
ஈஸிசேரை வராண்டாவில் போட்டு சாய்ந்த சண்முகம், வீட்டின் முன்
நிழல் பரப்பி கொண்டு காற்றை தந்து கொண்டிருந்த வேப்ப மரத்தை
பார்த்தார்....வேப்பம்பூ சீசனில் பூவை எடுத்து குழம்பு வைப்பாள்
சாரதா... சாப்பிட்ட கை மணக்கும்.
வீட்டை வாங்கிய பாட்டியின் மகன், " ஏம்மா இந்த மரம் வீட்டை
மறைச்சிகிட்டு வீட்டோட அழகையே கெடுக்குதப்பா...முதல்ல
இதை வெட்டி சாய்ச்சிடணும்..." என்றான். ... சண்முகத்திற்கு மார்பில்
சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.' அவங்க வீடு அவங்க
வாங்கியாச்சு....அவங்க இஷ்டம்....மரமானாலும்...மனுசன் ஆனாலும்
ஒரு கட்டத்திலே சாய்ஞ்சிடவேண்டியதுதானே..."
என்று தன்னை தேற்றிக்கொண்டார்.
வீட்டு ரெஜிஸ்ட்டிரேஷன் முடிந்தது.கிடைத்த பணத்தில் கடன் களை
அடைத்தது போக கையில் ஒரு லட்சத்து சொச்சம் இருந்தது.
கேசவமூர்த்தி நல்ல வசதியுடன் குறைந்த வாடகையில் வீடு பார்த்து
வைத்திருந்தார்.
ஒவ்வொன்றாக வீட்டில் உள்ள பொருட்களை மூட்டை
கட்டினார்கள்.காலி செய்வதற்கான நாள் நாளைதான்.." இதுதான் இந்த்
வீட்டில் கடைசி தூக்கம்.. நாளை முதல் இது வேறு வீடு.. என்ற எண்ணம்
மனதை பிசைந்தது.கனத்த மனதுடன் படுத்தனர். தூக்கம் வரவில்லை.
காலை பூஜை அறைக்கு சென்றாள் சாரதா..சாமி வைக்கும்
அலமாரியில்
அலமாரியில்
மணி வைத்த கதவுகள்.. அவள் ஆசையாய் சொல்லி டிசைன்
செய்தது.அதை மெல்ல வருடினாள்.பிள்ளையாரை தொட்டு கண்
கலங்கினாள்.
பித்து பிடித்தவள் போல ஏதோ அரற்றியபடி , சிறு வயதில் ரமேஷ்
அமர்ந்து படிக்கும் அறைக்கு நுழைந்தாள்.கதவின் பின் பக்கம் அவன்
ஒட்டி வைத்திருந்த மிக்கி மவுஸ் ஸ்டிக்கர்கள் அவளை பார்த்து
சிரிக்க..கண்களில் நீர் முட்டியது.முந்தானையால் துடைத்தவள்
ஒவ்வொரு அறையாக சுற்றி வந்தாள்.
' இருபது வருடங்களாக வாழ்ந்த இந்த சந்தோஷக்கூடு இனி நமக்கு
இல்லை..- மனதுக்குள் உரத்த குரல். அவளுக்கு தலையை சுற்றுவது
போல் இருந்தது. தரையில் சாய்ந்து படுத்தாள்...
குளியல் முடித்து வந்த சண்முகம் " சாரதா எங்கேம்மா இருக்க...?"
கேட்டபடியே வந்தார்.
" வெறும் தரையில் ஏன்மா படுத்திருக்க...?' அவள் தோள் தொட்டு
எழுப்ப...அவளிடம் அசைவு இல்லை.. சரிந்தது உடல்..
" சாரதா...ஆ..." சண்முகத்தின் அலறலில் வேப்ப மரத்து பட்சிகள்
பறந்தன..காற்று சீறியது...வேப்ப மர கிளை ஒன்று பொத்தென்று
ஒடிந்து விழுந்தது.
( இச் சிறுகதை தினமலர் டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டியில்
ஆறுதல் பரிசு பெற்று அக்டோபர் 31, 2010 இல் வெளிவந்தது.)