Friday 23 November 2012

வேலூருக்கு பெருமை சேர்த்த வெளி நாட்டு பெண்மணி!




ஐடா ஸ்கடர் என்ற பெண்ணின் பெற்றோர் மிஷனரிகளாக திண்டி வனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஐடா மட்டும் அமெரிக்காவில் படித்து கொண்டிருந்தார்.  ஐடாவிற்கு  20 வயது ஆகும்போது அவர் தாயார் சுகவீனம் அடைந்தார். அதை கேள்விப்பட்டு தன் தாயாரை காண 1890ம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி திண்டிவனத்திற்கு வந்தார். அமெரிக்காவின் சொகுசு வாழ்கை இந்தியாவில் ஐடா ஸ்கடருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் 1892ம் ஆண்டு வேலூருக்கு மாறுதலானார்கள்.

             அங்கு ஒரு இரவில், ஓர் இளம் மனிதன் இவர்களது வீட்டு கதவருகில் நின்று, பிரவசத்திற்காக துடித்து கொண்டிருக்கும் தனது 14 வயது மனைவிக்கு உதவுமாறு ஐடாவை கேட்டுகொண்டார். ஐடா, தன் தகப்பனாரான டாக்டர் ஜான் அவர்களை அழைத்து செல்லுமாறு தெரிவித்தாள். அவனோ ஒரு ஆண் டாக்டர் தன் மனைவிக்கு உதவி செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போய்விட்டான்.

           இதேபோல் வேறு இருவர் தம் மனைவியர் பிரசவத்துக்கு உதவுமாறு கேட்க, ஐடா தன் தந்தையை சிபாரிசு செய்ய அவர்கள் மறுத்து, மனகசப்புடன் போனார்கள். அக்காலங்களில் பெண்களுக்கு ஆண் மருத்துவர் பிரசவம் பார்க்க அனுமதிப்பதில்லையாம். அவர்கள் மூவரும் ஐடாவின் மனதைப் பெரிதும் பாதித்தனர். மறுநாள் வீட்டின் ஜன்னல் வழியே ஒரு இறுதி ஊர்வலம் போவதைப் பார்த்தாள். தன்னிடம் உதவி கேட்டவர்களின் மனைவியர் இறந்ததை கேள்விப்பட்டார். இந்த சம்பவம் ஐடாவின் மனதை பெருமளவு பாதித்தது.இந்தியாவில் ஒரு பெண் மருத்துவர் கூட இல்லையே  என  வேதனையுற்று , முகம் குப்புற கட்டிலில் விழுந்து அழுதார். பின்பு தன் பெற்றோரின் அனுமதியோடு அமெரிக்கா சென்று பிலடெல்பியாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்று ஒரு மருத்துவராக வேலூர் வந்தார்.

ஐடாவின் வாஞ்சையை அறி்ந்த மிஷன் இயக்கம் வேலூரில் அவளது தந்தை வேலை செய்த இடத்தில் ஒரு வைத்தியசாலையை அமைக்கும்படி ஆலோசனை சொன்னார்கள். 1884 இல் ஐடா உரிய பணத்தைத் திரட்டிக் கொண்டு வேலூர் நோக்கிப் புறப்பட்டாள். ஆரம்பத்தில் மக்கள் ஐடா மேல் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் நிலைமை மாறியது.

தனது வீட்டின் கிழ் தளத்தில் 10க்கு 12 அடி அறையை திறந்து கிளினிக் ஆரம்பித்தார். ஆரம்ப நாட்களில் பல பாடுகளை ஐடா ஏற்றுகொள்ள வேண்டிருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவளது சேவை வளர்ந்து பெருகியது. 1902 இல் வேலூர் மருத்துவமனையை ஆரம்பித்தார்.

முதல் வருடத்திலேயே 21 பெரிய அறுவை சிகிச்சைகளையும், 420 சிறிய அறுவை சிகிச்சைகளையும் செய்து, 12,359 நோயாளர்களுக்கு வைத்தியம் செய்தார்.

1924 இல் 200 ஏக்கர் நிலத்தில் தனது வைத்தியசாலையை பெரிது படுத்தியதுடன், மருத்துவதுறையில் மக்களுக்குப் பயிற்சியும் கொடுத்தார். இன்று வேலூர் மருத்துவமனை ஒரு பிரதான மருத்துவமனையாக திகழ்கின்றது.
 1968 மே மாதம் தன்  90ம் வயதில் ஐடா ஸ்கடர் அம்மையார் மக்களுக்கு சேவை செய்த திருப்தியில்  இறைவனிடம் சேர்ந்தார்.


இப்போது  வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கிறது. இங்கு பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற வருகிறார்கள்.

வெளி நாட்டிலிருந்து வந்து தன்னலமற்று இந்தியாவிற்காக  ஐடா செய்த தொண்டு மனதை நெகிழ செய்கிறது.